மறைந்தபின் நம் நெஞ்சில் மேலும் வளரும் முகங்கள் சில உண்டு. லோகி அத்தகையவர் அவர் மறைந்த பின் இந்நாள்வரை ஒருமுறையேனும் அவர் பெயரைச் சொல்லாமல், நினைக்காமல் நாள் ஒன்று கடந்துசென்றதில்லை. ஏ.கே.லோஹிததாஸ் என்னும் பெயரை எந்த தொலைக்காட்சியில் கண்டாலும் நெஞ்சு அதிர்கிறது.
இத்தனைதூரம் அவர் என்னை ஆழமாக அணைத்திருக்கிறார் என லோகி அறிந்திருந்தாரா , நான் அதை அவரிடம் சொல்லியிருந்தேனா என்றே ஐயமாக இருக்கிறது. மலையாளிகளுக்கு அன்பை வெளிப்படுத்துவதில் ஒரு கூச்சம் உண்டு. லோகி அவ்வகையில் என் அண்ணனைப்போல. அண்ணனின் பார்வையும் ஆழ்ந்த குரலும்கூட அப்படியே அவருக்கிருந்தது.
என் சினிமா வாழ்க்கை தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. 2004 நவம்பரில் லோகி எனக்குத் தந்த 20000 ரூபாய்தான் சினிமாவில் நான் பெற்ற முதல் பணம். இன்றுவரை என் வங்கி கணக்கு குறைந்ததில்லை. அன்புடனும் கனிவுடனும் அவர் தந்தது ஒரு விஷு கைநீட்டம், ஓர் ஆசி என்று தோன்றுகிறது.
அன்று எனக்கு அலுவலகப் பணிச்சுமை கூடிக்கொண்டே இருந்தது. ஆனாலும் சினிமாவா எனத் தயங்கினேன். லோகி என் தோளில் தட்டி ‘சினிமாவில் நீ அடையும் சுதந்திரத்தை, செல்வத்தை, மரியாதையை வேறெங்கும் அடையமுடியாது. சினிமா உன்னை மேலும் பலமடங்கு எழுதவைக்கும். உன் அலுவலகம், உன் உறவினர் எவருமே நீ கலைஞன் என்று புரிந்துகொள்ளமாட்டார்கள். சினிமாவில் டீ கொண்டுவந்து தரும் பையனுக்குக்கூட அது தெரிந்திருப்பதை உணர்வாய். அவன் புன்னகையில் நீ எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் இருக்கும்” என்றார்
“ஏனென்றால் கலைமேல் கொண்ட தாகத்தால் மட்டுமே வந்துகூடிய ஒரு நாடோடிக்கூட்டம் இது. எழுத்தாளன் இருக்கவேண்டிய இடம் இது” என்றார் லோகி “வெற்று அரசியல்கூட்டம் இலக்கியம் இலக்கியம் என்று கூச்சலிடும். ஆனால் அவர்கள் இலக்கியவாதியை அடக்கிஆள நினைப்பவர்கள். மிகச்சாதாரண வணிகசினிமா எடுப்பவர்கள்கூட அவர்களை விட பலமடங்கு இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள். எழுத்தாளனை அறிந்தவர்கள்” .
இன்று அதன் ஒவ்வொரு எழுத்தும் உண்மை என உணர்கிறேன். என்னை இன்று ஓர் எழுத்தாளனாக வாழவைப்பது, இத்தனை எழுதச்செய்வது சினிமா. அது அளித்த பொருளியல்விடுதலை. அது அளிக்கும் நேரம். இது இல்லாவிட்டால் இன்று அலுவலகத்தில் நாளில் பத்துமணிநேரத்தை வெறும் எண்களுடன் செலவிட்டுச் சோர்ந்திருப்பேன். பணத்தை கணக்கிட்டுக் கணக்கிட்டு உள்ளம் வெளிறிப்போயிருப்பேன். லோகி என் வாழ்வின் மிகமுக்கியமான கட்டத்தில் என்னை ஆற்றுப்படுத்திய தேவன்.
ஒவ்வொரு தருணத்தையும் முன்னரே கண்டிருந்தார் லோகி. நான் மேலும் பயணம் செய்யமுடியும் என்றார். நான் என்னை மறந்து எழுத முடியும் என்றார். ‘உனக்கு மனத்தூண்டுதல் வந்தால் எதையும் யோசிக்காமல் எழுத அமர முடியும்” என்றார். அவரது ஆழ்ந்த குரலை இன்று நினைவுறும்போது இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் நெஞ்சு நெகிழ்கிறது
என் தமையனுக்கு, நீத்தார் உலகில் தெய்வமென அமர்ந்த என் தேவனுக்கு, இவ்வெளிய நூல். இதை முதலில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு என் அன்பு. மீண்டும் வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி
ஜெ