அன்பின் ஜெ,
நலம் தானே?
நான் உங்களுக்கு அலைபேசியில் தெரிவித்தபடி, என் வசம் இருக்கும் மலையாளப் புத்தகங்களின் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்.
ஒரு நாயர் நண்பர் இந்த வார இறுதியில் பெயர் விவரங்களைப் படித்து சொல்ல வருகிறார்.
உங்களுக்கு வேண்டியதை அனுப்பி வைக்கிறேன்.
அண்மையில் நாகர்கோவிலைக் கடந்து திருவட்டார் செல்லும் போது உங்களை சந்திக்காமல் வந்தது நான் தவற விட்ட வாய்ப்பு.
உள்மனசில் நீங்கள் தான் விஸ்வரூபமாய் இருந்தீர்கள். உள்ளே ஆதிகேசவன் புரண்டுவிடுவாரோ என்று தான் எதிர்பார்த்தேன்!
தக்கலை டெலிபோன் ஆபீசைக் கடந்த போது உங்கள் டீக்கடையைத் தேடினேன்.
என்றோ ஒரு நாள் சந்திப்போம்.
ஒரு பழைய மின்னஞ்சலைத் தேடிக் கொண்டிருந்தபோது, ஏப்ரல் 2011ல் உங்களுக்கு நாவல் கோட்பாடு பற்றி நான் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சல் கண்ணில் பட்டது.
கீழே அதை மீண்டும் அனுப்பியிருக்கிறேன்.
என் அன்பை சகோதரி அருண்மொழி நங்கைக்கு சொல்லவும்.
முதுகுவலி இப்போது தேவலையா?
மோகன்ஜி
ஹைதராபாத்
ப்ரிய ஜெ,
நலமா? நீங்கள் சொன்னது போல் நான் மொழிபெயர்த்து அனுப்பிய ‘நம் வாயிற்படியிலே நாம்’ கன்னட சிறுகதையை நீங்கள் பாராட்டியிருந்தீர்கள். நன்றி.
உங்கள் ‘நாவல் கோட்பாடு’ இப்போதே படித்து முடித்தேன்.. மிக ஆச்சர்யமாய் இருக்கிறது ஜே… எவ்வளவு கச்சிதமான திறனாய்வு?
‘வாசக இடைவெளி ‘ எனும் உங்கள் கொள்கை இன்று ஒரு கோட்பாடாக அனிச்சையாய் நாவல் உலகில் மாறிவருவதாய்த் தான் தோன்றுகிறது..
ஜெ, இந்த திறனாய்வு வெகுவாய் விவாதிக்கப் பட்டதோ அறியேன். உங்கள் மேதைமையின் முக்கிய வெளிப்பாடு இது.
தலைமுறைகள் கடந்து நாவல் இலக்கியத்துக்கு ஒரு வழிகாட்டுதலாய் நிற்கப்போகும் ஒரு இன்றியமையாத பதிப்பு உங்கள் நாவல் கோட்பாடு.
1992 வாகில் அல்லவா இந்த திறனாய்வை செய்தீர்கள்? இந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வந்த சில படைப்புகளையும் கருத்தில் கொண்டு ‘நாவல் கோட்பாட்டை’
மீள்நோக்கவும், இன்னமும் விரிவாக்கவும் தேவை இருக்கிறது எனத் தோன்றுகிறது.
இந்த இருபதாண்டு கால படைப்புகளை மீள்நோக்கி அலசுவது நேரம்பிடிக்கும் செயல்.
உங்களின் பல பணிகளுக்கிடையில் இதற்கு நேரம் ஒதுக்க இயலுமோ எனும் ஐயப்பாடு நியாயமான ஒன்று.
ஒன்று செய்யலாம்.. இந்த அலசலுக்கு தகுதியுடைய நாவல்களை நீங்களே தெரிவு செய்து, அதை உங்களின் தவறாத (unfailing)
தீவிர படைப்பூக்கமிக்க வாசகர்வட்ட நண்பர்கள்களுக்கு அந்த நாவல்களை பங்கிட்டு ஆய்வு செய்விக்கலாம்.
அந்த ஆய்வுக்கான விதிமுறைகளை நீங்களே விதித்து வழிகாட்டலாம்.
அந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்ட ஆய்வுகளை நீங்கள் நேர்செய்து தொகுப்பது எளிதானது தானே?
ஜெ, நான் சொன்னது நடைமுறையில் சாத்தியம் என்று நம்புகிறேன். உங்கள் எழுத்து உங்களைப் போல யோசிக்கவல்ல நிறைய ஜெயமோகன்களை அல்லவா உருவாக்கியிருக்கிறது ?
ஜெ, ஜெயமோகன் எனும் தனிப்பட்ட படைப்பாளி ஒரு இலக்கிய இயக்கமாய் மாறி நாள்பல ஆகிறது. சந்தோஷமாய் இருக்கிறது ஜே!
8888888888
வணக்கம் ஜெ..
ஜி நாகராஜன் குறித்த கட்டுரை படித்தேன்.. அது “ஒரு கும்பல்” ஜி நாகராஜனை ஃபேக் என சொல்கிறது என்ற வார்த்தை வருத்தம் அளித்தது… காமராஜர் அணியை கிண்டல் செய்ய காந்தி பயன்படுத்திய தொனியில் இந்த வார்த்தை அமைந்திருந்தது..
ஜி நாகராஜனை இப்போது புதிதாக யாரும் ஃபேக் என சொல்லவில்லை… அந்த காலத்தில் இருந்தே அப்படி சொல்பவர்கள் இருக்கிறார்கள்..
ஜி நாகராஜன் எழுத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது என சிலர் கொன்டாடியதால்தான் , அப்படி இல்லை.. அவர் எழுத்துக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற அடிப்படையில் அவரை ஃபேக் என்றார்கள்… கிட்டத்தட்ட உங்க்கள் கருத்தும் அதுவாகவே இருக்கும் என கருதுகிறேன்..
பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது என்பதெல்லாம் மனதில் பதியும்படி எழுதப்படவே இல்லை..
வெண் முரசு நாவலில் பாலியல் தொழிலாளியுடன் நேரம் செல்விட்ட அர்ச்சுனன் அவளை கொல்ல நினைப்பதை படிக்கும்போது அந்த மன நிலை புரிகிறது,… ஆனால் ஜி நாகராஜன் எழுத்தில் அதெல்லாம் வெகு பலவீனமாகவே இருக்கிறது..
அதுபோல தஞ்ச்சை பிரகாஷ் எழுத்தை ஒரேயடியாக சரோஜா தேவி எழுத்தாளர் என சுருக்குவது கண்டிப்பாக ஏற்க முடியாத ஒன்று.. உங்க்கள் அளவுகோலின்படி பார்த்தாலுமேகூட அவரது பல சிறுகதைகளை உங்களால்கூட புறக்கணிக்க முடியாது…
ஒரு சராசரி வாசகன் உங்கள் கட்டுரையை படித்து அவரை தவற விட்டு விடக்கூடாதே என அஞ்சுகிறேன்…
என்றெப்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
அது நீங்கள்தானா? சரி கும்பல் இல்லை. தனியாள்தான். மன்னித்துவிடுங்கள்.
ஜி.நாகராஜன் போலி எழுத்தாளர் என எவரும் சொன்னதில்லை. அவர் எழுத்து உண்மையானதல்ல என்ற பேச்சே எழுந்ததில்லை. ஏனென்றால் அது உண்மை என அன்றைய சிறிய சிற்றிதழ் வட்டத்தில் அனைவருக்குமே தெரியும். தங்கத்தை தனிப்பட்டமுறையில் தெரிந்தவர்களே உண்டு. [முதல் பதிப்பின் பின்னுரையில் அதை குறிப்பு எழுதியவர் கோடி காட்டியிருப்பார். நெல்லையில் தங்கியிருந்தபோது ஜி.என் ஒரு விபச்சாரியை திருமணம் செய்ய முயன்றார் என. குறத்தி முடுக்கு நெல்லை தேரடியிலிருந்த ஒரு தெருதான்]
ஆனால் அவரது பார்வைக்கோணத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் இருவகை. ஒன்று ஜி.என் விபச்சாரிகளின் வாழ்விலுள்ள சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றைப்பற்றி பொருட்படுத்தாமல் பாட்டாளிவர்க்கப்பார்வையை முன்வைக்காமல் எழுதியிருக்கிறார் என்பது. இதை முன்வைத்தவர்கள் கட்சி சார்ந்த இடதுசாரிகள். இன்னொரு விமர்சனம் அவரது கோணம் ஆண்மைய நோக்கு கொண்டது என்பது.
நான் அவரை விமர்சனம் செய்தது அவர் ‘தூய’ நவீனத்துவ எழுத்தாளர் என்பதனால்தான். அவ்வெழுத்துமுறையின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி உடைக்கவேண்டிய அவசியம் எனக்கிருந்தது. அது வாழ்க்கையின் சில பக்கங்களை மட்டுமே தொடுகிறது. அடிப்படையில் தனிமனிதநோக்கும் எதிர்மறை அணுகுமுறையும் கொண்டது. ஆகவே கசந்த அங்கதம் நோக்கி மட்டுமே செல்கிறது. பரவசம், பித்து, முழுமைநோக்கு ஆகியவற்றைத் தவறவிட்டுவிடுகிறது, மொழி கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது, ஆகவே அறிவார்த்தம் மேலோங்கியிருக்கிறது, கவித்துவம் குறைந்துள்ளது- இதெல்லாம் என் குற்றச்சாட்டுகள்
ஆனால் இவையெல்லாமே ஒரு இலக்கிய முன்னோடியை, ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையை தொடங்கிவைத்த மேதையை அணுகும் முறைகள். இவையெல்லாமே சரிதான். இவையெல்லாமே ஒரு சில கோணங்கள்தான். ஜி.என். போலி என்று சொல்லும் குரல் அப்படி அல்ல. அது அவரை அறிவதை தடுத்துவிடுகிறது. சுந்தர ராமசாமி போன்றவர்களின் நவீனத்துவத்தை நிராகரித்து நான் எழுதவந்தேன். ஆனால் அவர்களை நான் நிராகரிக்கிறேன் என பொருளில்லை.
தஞ்சை பிரகாஷை நான் நிராகரித்ததில்லை.அறிமுக வாசகனுக்கான என் இலக்கியப்பட்டியல்களில் அவர் உண்டு. ஆரம்பத்தில் ஒரு கரிசனத்துடன் அவரது எழுத்துமுறையை நான் வாசித்திருக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஆரம்பத்தில் அந்தக்கரிசனப்பார்வையை அளிக்கவேண்டும் என்பதே என் எண்ணம், அவரது எழுத்து சம்பிரதாய மற்றும் முற்போக்கு ஒழுக்கவியல்களால் நிராகரிக்கப்பட்டபோது அதை முன்வைத்தேன்.
ஆனால் அது அதன் மீறலுக்காக மட்டுமே இலக்கியம் என எண்ணப்படும் சூழலில் இலக்கியம் என்றால் என்ன என்பதைச் சொல்ல அது வெறும் எல்லைமீறல் மட்டுமே, அத்தகைய மீறல்கள் அவை எழுதப்பட்ட அந்த ஐந்து ஆறு வருடங்களுக்கு மட்டுமே பொருட்படுத்தத் தக்கவை என சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. அவரது சிறுகதைகளை நானே குறிப்பிட்டிருக்கிறேன்.
மற்றபடி இலக்கியத்தில் எப்போதும் மாற்றுப்பார்வைகளுக்கு இடமுண்டு. உங்க்ள் குரல் உங்களுடைய நோக்கை காட்டுகிறது.
ஜெ
அன்புள்ள ஜெ
இன்று தளத்தில் வந்த தஞ்சைபிரகாஷ் பற்றிய கேள்வியும் உங்கள் பதிலும் படித்தேன்.வியப்படைந்தேன்.இது குறித்து ஒரு விவாதம் நிகழ (த்த) வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு இது பற்றி உங்களிடம் ஒரு விளக்கம் கேட்கலாமென்று தோன்றியது.உங்களின் தமிழின் சிறந்த நாவல்கள்-விமரிசகனின் பரிந்துரை என்ற ஒரு பட்டியலில் மார்ச் 2001 நீங்கள் எழுதியது.கீழே.
கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.
// கலைத்துப் போடப் பட்ட வாழ்க்கைச் சித்திரங்களும் சம்பவக் குதறல்களும் நிரம்பிய இந்த ‘முதிராத ‘ நாவல் ஒரு அம்சத்தால் முக்கியமாகிறது தமிழ் மனதின் அகக் கோணலை, (பெர்வர்ஷன்) கூற முயன்றமையால்.//
ஆனால் இன்று வந்த அந்த பதிலில் இவ்வாறு இருக்கிறது //தஞ்சை பிரகாஷ் அவ்வகையில் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே//
இந்த மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடு அல்லது.நகர்வு எதனால்?. ஒரு மறு மதிப்பீடு என்று கொள்ளலாமா?.
அன்புடன்
சுரேஷ் கோவை.
அன்புள்ள சுரேஷ்,
ஆம் கண்டிப்பாக மாற்றுப்பார்வைதான். என் இலக்கிய அளவுகோல்கள் இன்னும் சற்று கறாராக ஆகியிருக்கின்றன.
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலின் பட்டியலைப்பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். அது தமிழிலக்கியத்தை வாசிக்கவரும் ஒரு வாசகனுக்கான பொது அறிமுகம். எவ்வகையிலேனும் தமிழிலக்கியத்தில் பொருட்படுத்தத்தக்க அனைத்து எழுத்துக்களையும், அனைத்துத் தரப்புகளையும் அறிமுகம் செய்து வாசித்துப்பார் என்று சொல்வதே அதன் இலக்கு.
ஆகவே அது கறாரான இலக்கிய விமர்சன நிலைபாடு அல்ல. ‘இவர் இன்ன காரணத்தால் முக்கியமானவர், இன்னின்ன குறைபாடுகளை பொதுவாகச் சொல்லலாம், வாசித்துப்பாருங்கள்’ என்பதே அதன் குரல். அந்த விமர்சனக்கருத்துக்கள் கூட பொதுவாகத் தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் எழுந்தவையே. ஏனென்றால் அந்த ஏற்பையும் மறுப்பையும் அந்நூலுக்குள் விவாதித்து நிறுவ இடமில்லை.
அந்நூலில் அளித்த பட்டியலை வைத்து அந்த அத்தனை படைப்பாளிகளையும் விமர்சகனாக நான் ஏற்றுக்கொள்கிறேன், கொண்டாடுகிறேன் என்று பொருள் இல்லை. ஏனென்றால் அதில் கிட்டத்தட்ட அத்தனை பேரும் சொல்லப்பட்டிருப்பார்கள். அந்தச் சிபாரிசிலேயே மாற்றுக்கருத்தும் சொல்லப்பட்டிருக்கும் என்பதைக் காணலாம்.
தமிழ்ச்சிற்றிதழ் இலக்கியம் பொதுவாசகனுக்கு அறிமுகம் செய்யப்பட்ட காலகட்டத்தில் ஓர் ஒட்டுமொத்த இயக்கமாக அதை அவனுக்குக் காட்டவேண்டியதிருந்தது. வணிக எழுத்தில் இருந்து வேறுபடுத்தி அதன் சிறப்புகளைச் சுட்டிக்காட்டவேண்டியிருந்தது. அதை வாசிக்கவேண்டிய மனநிலைகளை உருவாக்கவேண்டியிருந்தது. ஆகவே எவரையும் விடவில்லை.
ஆனால் விமர்சன அணுகுமுறை அப்படி பரந்துபட்டதாக இருக்கமுடியாது. விமர்சனக்கருத்து அந்த அறிமுகம் வழியாக வாசித்து உள்ளே வந்துவிட்ட வாசகனிடம் பேசுகிறது. அவனிடம் விமர்சிக்கிறது.
என் மதிப்பீட்டில் வெறுமே வணிக இலக்கியத்துடனான வேறுபாடு காரணமாக மட்டுமே முன்வைக்கப்பட்ட ஹெப்ஸிபா ஜேசுதாசன் போன்றவர்கள் வெகுவாகப் பின்தங்கிவிட்டார்கள். அக்காலகட்டத்தில் அதிர்வுகளை உருவாக்கியவர்கள் தஞ்சை பிரகாஷ், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்களும் பொருளிழந்துவிட்டார்கள்.
அதேசமயம் வணிக எழுத்தில் பிரபலமாக இருந்தமையாலேயே இன்று இலக்கியச்சூழலால் கவனிக்கப்படாது போன சில எழுத்துக்கள் ஓர் எல்லைவரை முக்கியமானவை என்று தோன்றத்தொடங்கியிருக்கின்றன. உதாரணம் பி.வி.ஆர் எழுதிய ‘மிலாட்’ ‘கூந்தலிலே ஒருமலர்’போன்ற நாவல்கள். மகரிஷியின் ‘பனிமலை’ போன்ற நாவல்கள்
ஜெ