சஹ்யமலை மலர்களைத் தேடி – 3

சதாரா அருகே காஸ் என்னும் இடத்தில் உள்ள இந்த மலர்வெளி தென்னகத்தின் மிகப்பெரிய மலர்ச்சமவெளி.காஸ் பத்தர் என்று இது அழைக்கப்படுகிறது. 1200 அடி உயரமுள்ள மலைமேல் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு இந்த செடிவெளி விரிந்து கிடக்கிறது.

சேற்றுப்பாறையாலான மலை இது. பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் பூமி சூடாக இருந்தபோது இங்கே உருவான நீர் ஆவியாகி மேலெழுந்து விசும்பின் குளிரில் மழையென்றாகி மீண்டும் பொழிந்தது. பல்லாயிரமாண்டுக்காலம் பெய்த அந்த மழையால்தான் பூமி குளிர்ந்தது. உயிர்க்குலம் உருவாகியது.

Kaas_Pathar_Flowers-4578
அப்போது உருவான சேறு இறுகி உருவான இப்பாறையில் அன்று வாழ்ந்த நுண்ணுயிர்கள் வாழ்ந்த நுண்துளைகள் இதை ஒரு கடற்பஞ்சு போல ஆக்கிவிட்டிருக்கின்றன. வெட்டி வைக்கப்பட்ட தசை போன்ற பாறை இது. பாறைக்குரிய இறுக்கம் இல்லாதது

காலையில் அங்கே அருகே எங்கோ உள்ள வீரசைவ மடாலயத்திலிருந்து மாணவர்களும் சாமியரகளும் வந்திருந்தனர். சிறிய பறக்கும் வாகனம் [ ட்ரோன்] வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க ஒருவர் சிலை ஒன்றை நிறுவி சடங்குபோல ஏதோ செய்துகொண்டிருந்தார்.

செந்நிறமான இந்தப்பாறைக்குமேல் முளைத்துள்ள உயரமில்லாத செடிகள் பருவமழைக்குப்பின் பூக்க்கின்றன. செப்டெம்பர் இறுதிவரைதான் மலர்ப்பருவம். நாங்கள் செல்லும்போது உண்மையில் மலர்ப்பருவம் முடிந்துவிட்டது.ஆகவே மலர்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் வானம் முகில்களற்று பளிச்சென்று இருந்தது

காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டோம். டீ கொண்டுவரச்சொன்னால் தாமதமாகியது. ஆகவே டீகுடிக்காமலேயே கிளம்பினோம். காரில் சென்று மலர்வெளியின் அருகே நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். குளிர்ந்த காற்றில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை முழங்காலளவு உயரமான சிறிய இலைகள்கொண்ட செடிகள். பலவகையான புற்கள்.

மலர்வெளி என்னும்போது ஊட்டியின் மிகப்பெரிய பூக்கள் கொண்ட பளிச்சிடும் வண்ணம் கொண்ட பூக்களை நினைத்துக்கொள்ளவேண்டியதில்லை. பொதுவாக மங்கலான ஒளி கொண்ட குளிர்ப்பகுதிகளில் தான் பளிச்சிடும் வண்ணங்களும் பெரிய இதழ்களும் கொண்ட மலர்கள் வளர்கின்றன. நாம் இங்கே இன்று வளர்க்கும் அழகுமலர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலிருந்து வந்தவை.

நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் வெண்ணிற மலர்களே அதிகம்.சிறிய இதழ்கள் கொண்ட சின்னஞ்சிறிய மலர்களே பெரும்பான்மை. ஆனால் மலர்களின் வகைமைக்கு முடிவேயில்லை. இது மலையுச்சி என்பதனால் பெரியமலர்கள் இல்லை. மிகமிகச்சிறிய வெண்ணிறமலர்கள் செடிகளின் மேல் பனி படர்ந்திருப்பதுபோலத் தெரிந்தன. ஊதா, நீலம்.நீலச்செம்மை, இளஞ்செம்மை நிறத்தில் சிறிய மலர்கள்.


காலை ஆறுமணிமுதல் அந்த மலர்வெளியில் நடந்துகொண்டிருந்தோம்.கண்ணெதிரே மலர்கள் இளவெயில்பட்டு மெல்ல மலர்ந்துகொண்டிருந்தன. நடுவே ஒரு பெரிய குளம். அதில் வெண்ணிறமான நீர்மலர்கள். குளோட் மோனேயின் வாட்டர்லிலீஸ் ஓவியவரிசையை நினைவுறுத்தும் அழகு. வெண்மலர்கள் ஒளியில் நீர்த்துளிகள் மின்னுவது போலத்தெரிந்தன. வெயில் எழ மெல்ல அவையனைத்தும் விரிந்து சூரியனை நோக்கி நின்றன.

அங்கேயே வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கும் மோரும் கேழ்வரகு சப்பாத்தியும் கொண்டுவந்து விற்றனர் கிராமத்துப்பெண்கள். அந்தக்காலையில் நெடுந்தூரம் நடந்தமையின் களைப்புக்கு அவ்வுணவு இனியதாக இருந்தது.

திரும்பி விடுதிக்கு வந்து காலையுணவாக போகோ என்னும் தாளித்த அவலும் டீயும் சாப்பிட்டோம். குளித்துவிட்டுக்கிளம்பினோம். நேராக மகாபலேஸ்வர் வந்தோம். புனே அருகே இருந்த மகாபலேஸ்வர் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். மும்பை பூனே அருகே இருப்பதனால் பயணிகள் நிறைய வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் விடுதிகள்.

பழைய மகாபலேஸ்வரில்தான் கிருஷ்ணா நதி உற்பத்தியாகிறது என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஐந்துநதிகளின் ஆலயம் முக்கியமானது. கல்லால் ஆன ஆலய வளைப்புக்கு நடுவே ஒருகுளம். அதில் ஐந்து ஊற்றுகளில் இருந்து ஐந்து நதிகள் ஊறி ஒரு கற்பசுவின் வாய் வழியாகக் கொட்டுகின்றன. கிருஷ்ணா தவிர காயத்ரி, வெண்ணா,சாவித்ரி,கொய்னா ஆகிய நதிகளும் இங்கே ஊறுகின்றன என்று சொல்லப்படுகிறது


இறுதிப்பகுதியில் பல கிலோமீட்டர் அகலத்திற்கு நீர் பெருகிப்பிரவாகமாகும் கிருஷ்ணையை ஒரு சிறு ஊற்றாகப் பார்ப்பது உத்வேகமளிக்கும் அனுபவமாக இருந்தது. காந்தியின் சிறுவயது புகைப்படத்தை பார்ப்பதுபோல என்று தோன்றியது. மகாபலேஸ்வரில் சேற்றுக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கொண்ட சிவன் கோயில்கள் இரண்டு உள்ளன. ஒரு கோயிலில் உள்ளது சுயம்பு லிங்கம். கல்லில் எழுந்த குவை வடிவம்.

பஞ்சகன் என்னும் பீடபூமியின் மேல் ஏறிச்சென்று சுற்றிலும் உள்ள மகாபலேஸ்வர் நகரத்தை பார்த்தோம். அந்தி இருட்டிக்கொண்டிருந்தது. நகரம் விளக்குகளாக மாறியது. அங்கே ஏராளமான குதிரைகள். அவற்றை விரைவாக ஓட்டி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். நம்மூர் வண்டிக்குதிரைகள் அல்ல, ஆறடிக்குமேல் முதுகு உயர்ந்த பெரிய மராத்தா குதிரைகள். குளம்படி ஓசை மண்ணை அதிரச்செய்தது. பயணிகள் ஏறி சவாரி செய்தனர்.

ஏனோ பூஞ்ச் வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தபோது ஒரு மாலைநேரத்தை மலையடிவார விடுதி ஒன்றில் செலவிட்ட நினைவு எழுந்தது. அன்று அப்புல்வெளி முழுக்க குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஊர்மக்கள் கூடி விளையாடிக்கூச்சலிட்டனர். குளிருடன் அந்தி சிவந்து கனத்துக்கொண்டிருந்தது. பயணங்கள் அதிகரிக்கும்போது ஓர் அனுபவம் இன்னொன்றுடன் இணைந்துகொள்கிறது. அது ஓர் மனஎழுச்சியை உருவாக்குகிறது. இத்தனை பயணங்களின் பெறுபயன் இதுதான். அற்புதமான கடந்தகால ஏக்கம்.

=================================================================================


மேலும் படங்கள்


Day 02 Flower Valley – Walk

 

Day 03 Flower Valley – Walk

 

Day 03 Flower Valley – Flowers


Day 03 Old Mahabaleshwar – Panchagni Temple

Day 03 Panchagni – Table Top View Point

https://plus.google.com/+ManikandanAV/posts/QVA7Db892yF

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34
அடுத்த கட்டுரைஜெயமோகன் மின்னூல்கள்