ஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம்.
ஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. அதன்பின் மகாராஷ்டிர எல்லைக்குள் நுழைய உரிய ’கப்பங்களை’ கட்டி மேலே செல்ல ஒருமணிநேரம் ஆகியது. ஆகவே ஒருவழியாக நாங்கள் சதாராவை அடையவே நான்கு மணி ஆகியது.
இந்தமுறை மழை இருக்கும் என்று எண்ணி மழைச்சட்டையும் குடையும் எல்லாம் கொண்டுவந்திருந்தோம். ஆனால் மழை இல்லை. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை மிகமிககுறைவு என்றார்கள். ஆகவே பருப்பு தானிய உற்பத்தி மிகக்குறையும் பொருளியல் சரிவு நிகழும் என்றார்கள். மலர்வெளியிலேயே மலர்கள் அதிகமிருக்காது என்று இணையத்தில் வாசித்தோம். ஆனால் பருவமழைக்குப் பிந்தைய காலம் என்பதனால் எங்கும் பசுமை நிறைந்திருந்தது.
ஐந்து மணிக்கு சதாராவுக்கு முன்னரே திரும்பி கிராமச்சாலைகளில் பயணம் செய்து மலர்வெளிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியில் பைகளை வைத்துவிட்டு மலர்வெளிக்குச் சென்றோம். மேகங்கள் அதிகம் இல்லாததனால் நல்ல வெளிச்சம் இருந்தது. மலர்வெளி சஹ்யாத்ரி மலையின் உச்சி. கடினமான சேற்றுப்பாறை அடியில் இருப்பதனால் மரங்கள் முளைக்கமுடியாது. ஆகவே புல்லும் மலர்ச்செடிகளும் மண்டிய பெரிய சமவெளியாக உள்ளது இது. பலவகையிலும் வாகமண் புல்வெளியை நினைவூட்டியது.
நான்குபக்கமும் வானம் சரிந்திருக்க மண் முழுக்கமுழுக்க பூத்த புல்லாலும் சிறிய செடிகளாலும் மூடப்பட்டிருந்தது. வெண்ணிறமான சிறிய பூக்கள். புல்வெளிக்குள் மக்கள் நடமாடாமல் இருப்பதற்காக யுனெஸ்கோ உதவியுடன் சிமிட்டி தூண்களை நாட்டி வேலியிட்டிருக்கிறார்கள். உள்ளே நடக்க பாதை உள்ளது. உள்ளே சென்றபின் புல்வெளிக்குள் நுழையமுடியும். புல்வெளிக்குள் செல்வது அளிக்கும் விடுதலை உணர்வு தனித்துவம் மிக்கது. அது காட்டில் அமைவதில்லை. நம்மை அறியாமலேயே பறக்க விழைவது போல கைகளை விரித்துக்கொண்டிருப்போம்.
சிறிய பறவைகள் புல்லுக்குள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. வானில் சிறகசையாமல் நிற்கும் பருந்துகள் கட்டித்தொங்கவிடப்பட்டவை போல மிதந்தன. புல் பச்சை வண்ணம். ஆனால் பச்சை என ஒரு வண்ணம் இல்லை. அது வண்ணங்களின் தொகை. பலவகையான பச்சைகளால் ஆன ஓவியம் அந்தக்காட்சி. இத்தகைய இயற்கைகாட்சிகளில் மனம் கொள்ளும் உணர்வு என்ன என்பது நோக்க நோக்க ஆச்சரியமானது. மனம் குவிவதில்லை. சிதறிப்பரக்கிறது. ஒரு முனை ஆன்மீகமான ஓர் இன்பத்தில் திளைக்கிறது. அது சொல்லற்றது. மறுமுனை அன்றாட எண்ணங்களை அளைகிறது. சொற்களைப் பெருக்கிக்கொள்கிறது
‘வால் கண்ணெழுதிய மகர நிலாவில் மாம்பூ மணம் ஒழுகீ’ என்ற பாட்டு எனக்குள் நிறைந்திருந்தது. மீண்டும் மீண்டும் அந்த பாடல். ஆனந்த பைரவி ராகம். மறுபக்கம் மனம் பிசினில் சிக்கியதுபோல அசைவற்றிருந்தது. சோம்பல். தூக்கம். தனிமை. அல்லது இன்மையின் ஒரு விளிம்பு நிலை. வானில் செக்கச்சிவந்த பெரிய சூரியன் முகில்குவையில் இருந்து உருகிச் சொட்டி கீழே அமிழ்ந்தது. நிறம் மாறிக்கொண்டே இருந்தது புல்வெளி. அதன்மேல் ஒரு நீலவண்ணத்திரை விழுந்து மூடுவது போல. மிக அப்பால் பச்சைக்காடு இருண்டு அமிழத்தொடங்கியது
இரவில் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் ஆன்மிகம் பற்றி. இரண்டிலும் தனித்தன்மையும் அர்ப்பணிப்பும் எவ்வகையில் பங்களிப்பாற்றுகின்றன என்பதைப்பற்றி. அர்ப்பணிப்பு இன்றி கல்வி இல்லை. தனித்தன்மை இல்லாமல் சிந்தனை இல்லை. இரண்டும் ஒரு சரியான கலவையில் அமையவேண்டியிருக்கிறது. இத்தகைய சிந்தனைகளுக்கும் இந்த இடத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது தனியாகச் சிந்திக்கவேண்டிய விஷயம்.