சஹ்யமலை மலர்களைத்தேடி – 1

சென்ற ஆண்டு ஜூன்மாதம் கே.ஜே. அசோக் குமார் பூனாவுக்கு அழைத்திருந்தார். பூனா அருகிலிருக்கும் மலர்ச்சமவெளி பற்றி கிருஷ்ணன் இணையத்தில் தேடி சஹ்யாத்ரியில் உள்ள மலர்ச்சமவெளியை கண்டுபிடித்தார்.ஒரு பயணம் ஏற்பாடுசெய்யலாம் என்று எண்ணி பலவகையிலும் திட்டமிட்டோம். அதற்குள் நாட்கள் நகர வேறு பயணங்கள். இம்முறை கோடை முடிந்து பருவமழை தொடங்கியதுமே மீண்டும் மலர்ச்சமவெளிப்பயணம் பற்றிய திட்டம் மேலெழுந்தது. சட்டென்று முடிவுசெய்து கிளம்பிவிட்டோம்

நான் 13 ஆம் தேதியே கிளம்பி பெங்களூர் வந்துவிட்டேன். நண்பர் ஷிமோகா ரவி வீட்டில் தங்கியிருந்தேன். குழுமத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். திருமூலநாதனும் கிருஷ்ணனும் கிருஷ்ணபிரபாவும் ஏ.வி .மணிகண்டனும் வந்திருந்தனர். பேசிக்கொண்டிருந்தோம். மாலையில் ஈரோடு கிருஷ்ணனும், திருப்பூர் ராஜமாணிக்கமும் திருப்பூர் கதிரும் கோவை ராதாகிருஷ்ணனும் ரயிலில் வந்தனர். சென்னை நண்பர் காந்திராமன் சற்று பிந்தி வந்தார். இரவு 11 மணிவரை பேசிக்கொண்டிருந்தோம்.

காலை ஐந்தரை மணிக்கு காரில் பூனா நோக்கி கிளம்பினோம். எங்கள் திட்டமென்பது காரில் செல்லும் வழியில் உள்ள முக்கியமான சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு சதாரா சென்று அங்கிருந்து மலர்ச்சமவெளி. முதலில் சித்ரதுர்க்கா கோட்டையை அடைந்தோம். அசோகவனம் நாவலில் சித்ரதுர்க்கா ஒரு முக்கியமான இடம். ஆகவே இருமுறை முன்னரே வந்து பார்த்திருக்கிறேன்.


தென்னிந்தியாவில் வெல்லப்படவே முடியாத கோட்டை என்று சித்ரதுர்க்கா சொல்லப்படுகிறது.அசோகர்காலத்திலிருந்தே இந்த பெரும்பாறைகள் அடர்ந்த குன்று முக்கியமான ஓர் இடமாக இருந்துள்ளது. ஒரு பாறைமேல் புடைப்புச்சிற்பமாக வர்த்தமான மகாவீரரின் சிலை உள்ளது. சமணக் கல்வித்தலமாக இருந்துள்ளது என்பதற்கு அருகே கிடைத்துள்ள சில கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. பின்னர் ராஷ்டிரகூடர்களும் கீழைச்சாளுக்கியர்களும் இக்குன்றின்மேல் காவலரண்களை நாட்டியிருந்தனர். இது ஒரு ராணுவமையமாகவே இருந்திருக்கிறது. மண்ணாலான கோட்டை ஒன்று இதன் மேல் இருந்துள்ளது.

விஜயநகரம் தென்னகத்தை முழுதும் ஆளத்தொடங்கியபோது அவர்களின் பாளையக்காரரான வால்மீகி குலத்தைச் சேர்ந்த திம்மண்ண நாயக்கர் என்ற சிற்றரசரால் சித்ரதுர்க்கா கோட்டை கட்டப்பட்டது. 1565 ல் தலைக்கோட்டை போரில் விஜயநகரம் வீழ்ச்சி அடைந்தபோது சித்ரதுர்க்கா நாயக்கர்கள் சுதந்திர அரசாக பிரகடனம் செய்துகொண்டனர். பின்னர் ஹைதர் அலியால் 1779ல் மதகரிநாயக்கர் தோற்கடிக்கப்பட்டு கோட்டை கைப்பற்றப்படும்வரை நாயக்கர் ஆட்சி இங்கே நீடித்தது. கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்த நாயக்கர் ஆட்சியின் அடிப்படைக் காரணம் வெல்லமுடியாத இந்தக்கோட்டைதான்.

பல அடுக்குப் பாதுகாப்பு அமைப்பு கொண்டது சித்ரதுர்க்கா. இரு வெளிக்கோட்டைகள் மொத்த சித்ரதுர்க்கா நகரையும் சூழ்ந்து இருந்திருக்கின்றன. இன்று வாயில்கள் மட்டுமே உள்ளன. உள்ளே நான்கு சுற்றுகளாக வலுவான கற்கோட்டைச்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு வாசலுக்கு முன்னாலும் ப வடிவில் கோட்டை மடிந்துசெல்கிறது. எந்தக்கோட்டைக்கதவையும் பத்தடி தூரத்திலிருந்தே அணுகமுடியும். எனவே யானைகளையோ தண்டுகளையோ கொண்டுவந்து மோதமுடியாது.

உள்ளே செல்லும் பாதை மடிந்து மடிந்து செல்கிறது. இருபக்கமும் உள்ள கோட்டைச்சுவர்களின் இடுக்குகள் வழியாக அம்புகளும் குண்டுகளும் கொண்டு உள்ளே வரும் எதிரியைத் தாக்கமுடியும். கணிசமான இடங்களில் ஒருவர் ஒருவராகவே உள்ளே போகுமளவுக்கு சிறிய வழிகள் அமைந்துள்ளன. ஹைதர் அலி கோட்டையைத்தாக்கியபோது ஒபாவா என்ற தீரப்பெண்மணி உணவருந்தச் சென்ற தன் கணவனுக்காக அங்கே காவலிருந்தாள். அப்போது சிறிய பாறை இடைவெளி வழியாக ஹைதர் அலியின் படைகள் உள்ளே வருவதைக் கண்டு தன் கையில் இருந்த வேல்கம்பு போன்ற குச்சியால் தன்னந்தனியாக ஏராளமானவர்களைக் கொன்றாள். அவளுக்கு சித்ரதுர்க்கா நகர் நடுவே சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சித்ரதுர்க்கா ஒரு வரலாற்று மையம் என்றவகையில் கற்பனையைத் தூண்டக்கூடிய இடம். அத்துடன் அந்த நிலப்பகுதி நம்முள் கனவை எழுப்புவது. ஒருவகையான பிரமிப்பு நிலையிலேயே சித்ரதுர்க்கா கோட்டையை சுற்றிப்பார்க்க முடியும். கண்ணெட்டிய தொலைவு வரை எழுந்து எழுந்து நிற்கும் மாபெரும் பாறைகள். அவற்றைச் சுற்றி வளைத்துச்செல்லும் கற்கோட்டைகள். அவற்றுக்குமேல் மணிமுடி போல மண்டபங்கள்.

உள்ளே பல கோயில்கள் உள்ளன. வனசங்கரி ஆலயம் அவர்களின் போர்த்தெய்வம். குகைக்குள் உள்ள கருவறைக்குள் முகம் மட்டுமே ஆக நிறுவப்பட்டுள்ள ஏகவீர அன்னை நாயக்கர்களின் குடித்தெய்வம். படிகள் ஏறிச்சென்று ஒற்றைப்பாறைமேல் அமைந்த சிவன்கோயிலைப் பார்க்கமுடியும். லிங்காயத்துக்களின் புகழ்பெற்ற மடமான முருகராஜேந்திர மடாலயம் அங்கே இருந்துள்ளது. ஹைதர் அலி கோட்டையை கைப்பற்றும் வரை முக்கியமான கல்விநிலையமாகச் செயல்பட்டிருக்கிறது.

எந்தப்பக்கம் விழி திருப்பினாலும் கற்பாறைகளும் கோயில்களும் கோட்டைகளுமகாத் தெரியும் சித்ரதுர்க்கா ஒரு காலகட்டத்தின் பெருநகரம். மலையுச்சியில் உள்ள பறக்கும் நகரம் என்று சொல்லலாம். மண்ணால் ஆன அரண்மனைகளும் வீடுகளும் ஏராளமாக இருந்துள்ளன. பிரிட்டிஷார் இதைக்கைப்பற்றிய பிறகு கைவிடப்பட்டு மெல்ல இடிந்து அழிந்துவிட்டது. கற்கட்டுமானங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

ஹவேரி என்னும் ஊரைக்கடந்து செல்லும்போது நகருக்குள்ளேயே இருந்த சித்தேஸ்வரா கோயிலைப் பார்த்தோம். அழகாகப் பராமரிக்கப்படும் இக்கோயில் சேதமில்லாமல் எஞ்சியிருக்கிறது. சிறிய அழகிய கட்டுமானம். சாளுக்கிய – ஹொய்ச்சாள கோயில்களுக்குரிய நகைபோன்ற வடிவம். கணுதோறும் நுணுக்கமான செதுக்குவேலைகள். 12 ஆம் நூற்றாண்டில் மேலைச்சாளுக்கியர்களால் கட்டப்பட்டது இது. சாளுக்கியர் கட்டிடக்கலைக்குரிய வட்டமான தட்டுகளை அடுக்கியதுபோன்ற தூண்கள் கொண்ட மண்டபகும் சித்திரச்செதுக்குகள் கொண்ட விதானமும் கொண்டது


இது வைணவக்கோயிலாக இருந்துள்ளது. பின்னர் சமணர்கள் இதை விரிவாக்கிக் கட்டியிருக்கிறார்கல். சமணர்களிடமிருந்து வீரசைவர்களால் எடுக்கப்பட்டு சிவன் கோயிலாக ஆக்கப்பட்டது. ஆனால் மூன்றுதெய்வங்களுமே ஒரே சமயம் வழிபாட்டில் இருந்திருக்கின்றன. இப்போது நரசிம்மரும் சிவனும் கருவறைகளில் இருக்கிறார்கள்.

மாக்கல்லால் ஆனது என்றாலும் இது ஹளபீடு கோயில்களில் உள்ளது போன்ற சிற்ப அற்புதங்கள் கொண்டது அல்ல. கோயிலின் கட்டமைப்பின் அழகே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. சித்தேஸ்வர ஆலயத்தின் விதானத்தில் உள்ள ஒன்பது அன்னையரின் சிலைத்தொகுதி அபூர்வமானது. அன்னையர் நடனமிட்டுக்கொண்டிருக்கின்றனர். நடனமிடும் பிராமியும் கௌமாரியும் வராஹியும் ஆச்சரியமூட்டினர்

சிர்ஸி செல்லும் வழியில் சகஸ்ரலிங்கம் என்னும் இடத்தை பார்த்தோம். 1678-1718 காலகட்டத்தில் சிர்ஸியை ஆண்ட சதாசிவராயர் என்னும் அரசரால் அமைக்கப்பட்டவை இவை. ஷால்மாலா ஆற்றின் நீர்ப்பெருக்கின் உள்ளே நூற்றுக்கணக்கான சில்வலிங்கங்களும் நந்திகளும் யானைகளும் நதிப்பாறைகளிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கன்னங்கரிய பாறைகள். முந்நூறாண்டுக்கால வெள்ளபெருக்கால் அவை பலவகையாக உடைந்தும் இடம்மாறியும் சிதறிப்பரந்து கிடக்கின்றன.

நீரில் இறங்கி குளித்தபடி சென்று அக்கற்சிலைத் தொகுதியை பார்த்தோம். மர்மமான ஓர் இடம் என்னும் உணர்வு ஏற்பட்டது. ஆற்றில் சிலவகையான சடங்குகள் செய்யப்பட்டிருக்கலாம். வீரசைவ மரபுக்குரிய ரகசியச்சடங்குகள். கம்போடியாவில் ஆங்கோர்வாட் அருகிலேயே சஹஸ்ரலிங்கா என்ற பேருள்ள ஓர் இடம் உள்ளது. அதுவும் இதேபோன்ற சிவலிங்கங்கள் நீருக்குள் செதுக்கப்பட்ட இடம்தான். வேறெங்கும் இந்த அமைப்பு இல்லை. இவற்றுக்கிடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய்கிறார்கள்

இரவு ஒன்பது மணிக்கு ஹுப்ளி வந்து ஒரு விடுதியறையில் தங்கினோம். இன்று மிக நீண்ட பயணம். களைப்பூட்டுவதும்கூட. இதை எழுதும்போது கைகள் சோர்கின்றன.

மேலும் படங்கள் பார்க்க

Chitradurga Fort


Sirsi Sahasralinga

Haveri_Siddhesvara_Temple

முந்தைய கட்டுரைவிருதுமறுப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு