பகுதி ஐந்து : தேரோட்டி – 2
மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள். இருளுக்குள் மிதப்பவள்போல் வந்து சுபகை அவளை நோக்கி ஒரு கணம் நின்று பின்பு மெல்ல முழங்கால் மடக்கி அவள் அருகே அமர்ந்தாள். தடித்த உடல் கொண்டிருந்தபோதும் மெல்லிய ஓசையுடன் அவள் நடப்பதை மாலினி விந்தையுடன் எண்ணிக்கொண்டாள்.
சுபகையின் கையில் மூங்கில் குவளையில் சூடு தெரியும் இன்நீர் இருந்தது. “அருந்துங்கள்” என்று அதை நீட்டினாள். அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதன் நறுமணத்தை உணர்ந்தபோதுதான் நெடுநேரமாக அதற்காகவே தன்னுள் நா தவித்துக்கொண்டிருப்பதை மாலினி உணர்ந்தாள். புன்னகையுடன் “துயிலவில்லையா?” என்றாள். “இல்லை.” “ஏன்?” என்றாள் மாலினி. “என்ன விந்தையான கதை அது!” என்றாள் சுபகை.
அவள் சொல்வதை புரிந்துகொண்டு மாலினி இருளுக்குள் தலை அசைத்தாள். “ஐந்து முகங்கள்” என்றாள் சுபகை. “ஒவ்வொன்றையும் திருப்பிப் திருப்பிப் போட்டு உளம்மீட்டிக்கொண்டிருக்கையில் ஐந்து பெண்ணுருவங்களும் ஐந்து முகங்களை அணிந்த ஒரு முகம் என்றும் ஐந்துபெண்களின் ஒரே முகம் என்றும் தோன்றியது.” மாலினி “செல்லுமிடமெல்லாம் முகம் தேடி அலைபவன் என்கிறாயா?” என்றாள்.
சுபகை “நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த ஓர் இரவில் என்னில் அவர் எதையோ தேடுகிறார் என்று நான் எண்ணியது பிழை. அன்றிரவு அவர் என்வழியாக எங்கும் கடந்து செல்லவில்லை. எதற்கும் என்னை நிகர் வைக்கவும் இல்லை. அன்று உடல் உள்ளம் ஆன்மா மூன்றையும் எனக்களித்திருந்தார். முற்றிலும் என்னுடனேயே இருந்தார். ஐயமேயிலை, அன்றொருநாள் அவர் உள்ளத்தில் அரசியாக இருந்தேன் என்று உறுதியாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை நிறைவுறச் செய்து, இன்றென இருக்கவைத்தது அந்நிறைவே.”
“நீரென ஒளியென எங்கும் சூழலுக்கேற்ப முற்றிலும் உருமாறிக் கொள்ள அவனால் முடியும். எதுவும் எஞ்சாது விட்டுச் செல்லவும் முடியும்” என்றாள் மாலினி. “ஆம்” என்றாள் சுபகை. “இந்த நூல்கள் அனைத்தும் அவரை புனைந்து காட்டுகின்றன. இப்புனைவுகளில் எவை விடப்பட்டிருக்கிறதோ அவற்றைக் கொண்டு நாம் புனைவதே அவருக்கு இன்னும் அணுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.” மாலினி “அவ்வண்ணம் ஆயிரம்பேர் இயற்றும் ஆயிரம் புனைவுகளுக்கு அப்பாலும் ஒன்று மிஞ்சியிருக்கும்” என்றாள். “அதை அறிந்தவள் தான் மட்டுமே என நம்பும் ஆயிரம் பெண்கள் இருப்பார்கள்.”
“இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்” என்றாள் மாலினி. “சூதர்களின் தன்முனைப்புக்கு அளவேயில்லை” என்று சொல்லி சுபகை சிரித்தாள்.
உள்ளே சுஜயன் “குதிரை” என்றான். “இளவரசர் போரில் இருக்கிறார்” என்றாள் சுபகை. “போர்நிறுத்தத்தில்தான் அவன் புரவிகளை எண்ணுகிறான்” என்றாள் மாலினி. “நேற்று முழுக்க கேட்டுக்கொண்டிருந்தார்” என்றாள் சுபகை. “சித்ராங்கதையும் அர்ஜுனரும் ஏன் வாள் போர் புரியவில்லை என்று. நான் அவர்கள் மணம் கொண்டதும் போர் தொடங்கிவிட்டிருக்கும் என்றேன்” என்றாள். “ஏனடி இளவரசரிடம் இதையெல்லாம் சொல்கிறாய்?” என்றாள் மாலினி. “அவர் வாயை மூட வேறு வழி இல்லை. சிறுசித்தம் சென்று சிக்கும் ஒன்றை சொல்லிவிட்டால் விழிகள் பொருளற்றதாகி தலை சரியும். பின் நெடுநேரம் வினா எதும் எழாது.”
“இன்று என்னிடம் கேட்டான், விண் மீண்ட ஐந்து தேவதைகளும் அங்கிருந்து எங்கு செல்வார்கள் என்று. ஒரே வினாவில் என் உள்ளத்தை கலங்கச் செய்துவிட்டான்” என்றாள் மாலினி. சுபகை சற்று நேரம் கழித்து “ஆம், அது முதன்மையான வினா. காத்திருப்பதற்கு ஏதும் இன்றி பெண்ணால் வாழ முடியுமா என்ன?” என்றாள். “விண்கன்னியர் என்ன செய்வார்கள் என்று அறியமுடியவில்லை. மீண்டும் ஒரு தீச்சொல் பெற்று எழுவாள். மீண்டும் ஒரு புவியில் சென்று பிறப்பாள். கடலை அடைந்த நீர் அங்கிருப்பதில்லை. ஆவியாகி முகிலாகி மழையாகி நதியென ஓடி சலித்தால் மட்டுமே அதற்கு நிறைவு” என்று மாலினி சொன்னாள்.
மாலினி கை நீட்டி சுபகையின் கைகளை பற்றிக்கொண்டு “மீண்டும் இளைய பாண்டவனை அடைவதை நீ கனவு காண்கிறாயா?” என்று கேட்டாள். “நான் அங்கு விட்டுவந்த இளைய பாண்டவர் சென்ற காலத்தில் எங்கோ இருக்கிறார். அங்கு மீண்டு அவரை அடைவது இயல்வதல்ல. எதிர்காலத்திற்குச் சென்று அவரை அடையும்போது நான் உருமாறியிருப்பேன்” என்றாள் சுபகை. “இளைய பாண்டவரை நான் அறிவேன். அவர் மீண்டும் புதியவளாக என்னை அடையக்கூடும். என்னிடம் மீண்டுவர அவரால் இயலாது.”
மாலினி அவள் கையை பற்றி “எண்ணி இருக்கவும் காத்திருக்கவும் ஓர் உருவகம். அதற்கப்பால் என்ன?” என்றாள். “அவ்வண்ணமே இருக்கட்டுமே. இவ்வாழ்க்கையை அப்படி ஓட்டிச்சென்று அந்தியணைவதன்றி வேறென்ன செய்வதற்குள்ளது?” என்றாள் சுபகை. “அவன் மீளமீளச் சென்றடைந்தபடியே இருப்பவள் ஒருத்திதான்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி, சுபத்திரை. அலை கரையை தழுவுவதுபோல அவள் மேல் அவன் அணைந்தபடி இருக்கிறான் என்கின்றனர் சூதர்.” சுபகை “ஏன்?” என்றாள். “ஏனென்றால் அவள் அவனுக்காக ஒரு கணமும் காத்திருப்பதில்லை. அவள் நெஞ்சின் ஆண்மகன் அவன் அல்ல.”
சுபகை “அவள் இளைய யாதவரின் தங்கை” என்றாள். “நிகரற்ற தமையனைக் கொண்டவள், நினைவறிந்த நாள் முதல் அவன் தங்கை என்றே தன்னை உணர்ந்தவள். இப்புவியில் பிற ஆண்கள் அவளுக்கொரு பொருட்டே அல்ல” என்று சொன்ன மாலினி “ஊழ் சமைக்கும் தெய்வங்கள் எண்ணி எண்ணி நகைக்கும் ஒரு இடம் இது” என்று சிரித்தாள். “கிள்ளி எடுப்பதற்கிருந்தால் அதை மலையென மாற்றி நிறுத்திவிடுவார்கள் சூதர்கள்” என்றாள் சுபகை. “ஆணும் பெண்ணும் கொள்ளும் ஆடலை பிறர் அறிய முடியாது என்பார்கள். ஆனால் அதை இம்மண்ணிலுள்ள அத்தனை ஆண்களும் பெண்களும் அறியமுடியும்” என்று மாலினி சொன்னாள். “இளைய யாதவ அரசி என்று அவளை முதலில் சொன்னவர் எவராயினும் அத்தெய்வங்கள் அவர் நாவில் அத்தருணம் அமர்ந்திருந்தன.”
“யாதவகுலத்திலிருந்து அஸ்தினபுரியின் அரசகுடிக்கு வந்த இரண்டாவது யாதவ இளவரசி சுபத்திரை. இளவயது குந்திதேவியைப்போலவே வில்சூடி போரிடவும் வாள்ஏந்தி எதிர்நிற்கவும் கற்றவள். கதாயுதம் கொண்டு போரிடும் பெண்கள் அரசகுலத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்கிறார்கள் சூதர்கள்” என்றாள் மாலினி. “ஆம், நானும் அறிவேன்” என்றாள் சுபகை. மாலினி “கால்களை பின் எட்டு எடுத்து வைத்து முற்பிறவிகளில் விட்டுச் சென்றவற்றை தொட்டு எடுக்க இளைய பாண்டவருக்கு நல்லூழ் அமைந்துள்ளது.”
“சதபதத்தின் ஐந்தாவது காண்டம் சுபத்ரா அபஹரணம்” என்று சுபகை சொன்னாள். “காண்டங்களில் அதுவே பெரியது. ஏழாயிரம் செய்யுட்கள். ஏழு சர்க்கங்கள்” என்றாள் மாலினி. “அதில் யாதவர்களின் குலவரிசையும் உறவுமுறைமைகளும்தான் முதல் மூன்று சர்க்கங்கள். பழைய யாதவபுராணங்களில் இருந்து எடுத்துத் தொகுத்திருக்கிறார் புலவர். ஆனால் மொத்த வரலாறும் முழுமையாக திருப்பி எழுதப்பட்டுள்ளது. இது விருஷ்ணிகுலத்தை யாதவர் எனும் பேராலமரத்தின் அடிமரமும் வேருமாக காட்டுகிறது. கார்த்தவீரியரின் கதையிலிருந்து நேராக சூரசேனருக்கு வந்துவிடுகிறது, கம்சர் மறைந்துவிட்டார்.”
“வென்றவர்களுடையதே வரலாறு” என்றாள் சுபகை. “என் கண்ணெதிரிலேயே அஸ்தினபுரியின் வரலாற்றிலிருந்து சித்ராங்கதர் உதிர்ந்து மறைவதை கண்டேன்” என்றாள் மாலினி. “அதற்கு முன்னர் தேவாபியும் பால்ஹிகரும் மறைவதை கண்டிருக்கிறேன். அவ்வண்ணம் மறைந்தவர்கள் சென்றுசேரும் ஓர் இருண்ட வெளி உள்ளது” என்றபின் சிரித்து “எனக்கு காவியம் கற்றுத்தந்த மூதன்னை பிருஹதை சொல்வதுண்டு, காவியங்கள் எழுதப்பட்ட ஏட்டை வெளிச்சத்தில் சரித்துப்பிடித்து இருண்ட மூலைகளில் ஒளி செலுத்திப்பார்த்தால் அங்கே மறைந்த காவியங்களின் தலைவர்கள் கண்ணீருடன் நின்றிருப்பதை காணமுடியும் என்று.”
“மறைந்த காவியங்கள் உதிரும் இலைகள். அவை மட்கி சூதர்களின் வேருக்கு உரமாகின்றன. புதிய தளிர்கள் எழுகின்றன” என்று சுபகை சொன்னாள். மாலினி “இனி பாரதவர்ஷத்தின் வரலாறே யாதவர்களால்தான் எழுதப்படும். வரலாறு ஒரு எளிய பசு. அதை ஓட்டிச்செல்லும் கலையறிந்த ஆயன் இளைய யாதவன்.” சுபகை “சுபத்திரை கவர்தலை மீண்டும் வாசிக்க விழைகிறேன்” என்றாள். “எடுத்து வா” என்றாள் மாலினி.
ஏட்டுச்சுவடியையும் நெய்ச்சுடர் எரிந்த அகல்விளக்கையும் கொண்டு சுபகை அருகே வந்து அமர்ந்தாள். “இளைய பாண்டவன் பிரபாச தீர்த்தம் நோக்கிச் செல்லும் விவரணையிலிருந்து தொடங்கு” என்றாள் மாலினி. “பிரபாச தீர்த்தத்திற்கு அவர் ஏன் சென்றார்?” என்றாள் சுபகை ஏட்டை புரட்டிக்கொண்டே. “சித்ராங்கதையின் மைந்தன் பப்ருவாகனன் எட்டுவசுக்களில் ஒருவனாகிய பிரபாசனின் மானுடவடிவம் என்று நிமித்திகர் கூறினர்.. தருமதேவனுக்கும் பாதாளதேவதையாகிய பிரபாதைக்கும் பிறந்த மைந்தனாகிய பிரபாசன் இளமையில் பாதாளத்தின் இருளை உடலில் கொண்டிருந்தான். அவன் கொண்ட மறுவை அகற்ற மண்ணில் ஒளியே நீரெனத் தேங்கிய சுனை ஒன்றை தருமதேவன் கண்டுகொண்டான். அது பிரபாச தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது” என்றாள் மாலினி.
“ஏழு தண்டகாரண்யத்திற்கும் சூரியநிலத்திற்கும் நடுவே இருக்கும் பிரபாச தீர்த்தத்திற்குச் சென்று தன் மைந்தனுக்காக வேண்டுதல் செய்ய அர்ஜுனன் விழைந்தான்” என்று சுபகை வாசித்தாள். “தேவாரண்யத்தில் இருந்து கிளம்பி தண்டகாரண்யத்திற்குள் சென்று அங்கே முனிவர்களையும் சூதர்களையும் சந்தித்தான். மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிரநாட்டுக்குள் இருக்கும் பிரபாச தீர்த்தம் பற்றி அவர்களிடமிருந்து கேட்டறிந்துகொண்டு அத்திசை நோக்கி சென்றான்.”
பிரபாச தீர்த்தம் மேற்குமலைத்தொடர் எனும் நாகத்தின் படமாகிய அஷ்டசிரஸ் என்னும் மலையின் உச்சியில் நூற்றெட்டு மலைவளைவுப் பாதைகள் சென்றடையும் இறுதியில் இருந்தது. வசந்தகாலத்தில் மட்டுமே அங்கு பயணிகள் செல்வது வழக்கம். நாற்பத்தியோரு நாட்கள் நோன்பு எடுத்து உடல் வருத்தி கால்பயின்று அம்மலை வளைவுகளில் ஏறி அங்கு சென்று தூநீர் ஆடி மீள்வது வேசரத்தில் புகழ்பெற்ற வழக்கம். முன்பு ஷத்ரியர்களைக் கொன்ற பழி தீர்ப்பதற்காக அனல் குலத்து அந்தணனாகிய பரசுராமன் வந்து நீராடிச் சென்ற நூற்றெட்டு நறுஞ்சுனைகளில் ஒன்று அது என்று புராணங்கள் கூறின. கொலைப்பழி வஞ்சப்பழி பெண்பழி பிள்ளைப்பழி தீர அங்கு சென்று நீராடுவது உகந்தது என்றன மூதாதையர் சொற்கள்.
இளவேனில் தொடக்கத்தில் சிறுசிறு குழுக்களாக வழியில் உண்ணவேண்டிய உணவு ஒரு முடியும் அங்கே சுனைக்கரையில் அமர்ந்த பிரபாசனுக்கு அளிக்கவேண்டிய பூசனைப்பொருட்கள் மறுமுடியும் என இருமுடிகட்டி தலையில் ஏற்றி நடந்து சென்றார்கள் நீராடுநர். அவர்கள் தங்குவதற்காக ஏழு வளைவுகளுக்கு ஒருமுறை கல்மண்டபங்களை கட்டியிருந்தனர் அருகநெறியினராகிய வணிகர். விழாக்காலம் ஆகையால் அவற்றைச் சுற்றி மூங்கில்தூண்களின் மேல் ஈச்சமர ஓலைகளை வேய்ந்து கொட்டகைகள் போட்டிருந்தனர். அங்கே பயணிகளுக்கு உணவும் இந்நீரும் அளிக்க முறை செய்திருந்தனர்.
பிரபாச தீர்த்தத்திற்கான வழியில் வசந்தகாலத்திலும் பின்மாலைதோறும் மூடுபனி இறங்கி காடு முற்றிலும் மூடி குளிர் எழுந்து தோல் நடுங்கும். முதல் கதிர் மண்ணில் பட்டதுமே கிளம்பி கதிர் மறையும் நேரம்வரை நடந்தபின்பு அருகே இருக்கும் சத்திரத்தை அடைந்து அங்கு ஓய்வெடுத்து மீண்டும் பயணம் தொடருவதே நீராடுநரின் வழக்கம். இரவில் மலையிறங்கி வரும் கொலைவிலங்குகளாலும் கந்தர்வர்களாலும் பாதாளதெய்வங்களாலும் மானுடருக்கு அரியதென ஆகும் அக்காடு.
நீண்ட தாடியும், தோளில் புரண்ட குழலுமாக வேடர்களுக்குரிய மூங்கில் வில்லும், நாணல் அம்புகளும் ஏந்தி இடையே புலித்தோல் ஆடை சுற்றி முதல் விடுதியாகிய ஸ்ரீதுர்க்கத்திற்கு அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது மூடுபனி நன்கு சரிந்துவிட்டிருந்தது. தொலைவில் விடுதியின் பந்த ஒளி எழுந்து பனித்திரைக்கு அப்பால் செந்நிற மை ஊறி நீரில் கலங்கியது போல் தெரிந்தது. பல நூறு துணிகளால் மூடப்பட்டு ஒலிப்பதுபோல் பேச்சுக்குரல்கள் கேட்டன. விழியும் செவியும் கூர்ந்து பாம்புகளுக்கு எச்சரிக்கையாக நீள் கால் எடுத்து வைத்து நடந்து அவ்விடுதியை அடைந்தபோது பனி பட்டு அவன் உடல் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது.
குளிரில் துடித்த தோள்தசைகளுடன் கிட்டித்த பற்களுடன் “ஐயன்மீர், வடதிசையில் இருந்து வரும் ஷத்ரியன் நான். பிரபாச தீர்த்தம் செல்லும் பயணி. இங்கு நான் தங்க இடம் உண்டா?” என்று மூடுபனி திரை நோக்கி வினவினான். அப்பால் கலைந்து ஒலித்துக் கொண்டிருந்த பேச்சுக்குரல்கள் அமைந்தன. ஒரு குரல் “யாரோ கூவுகிறார்கள்” என்றது. “இந்நேரத்திலா? அவன் மானுடன் அல்ல, கந்தர்வனின் சூழ்ச்சி அது” என்றது பிறிதொரு குரல். “யார் அது?” என்ற குரல் அணுகி வந்தது. “நான் வடதிசை ஷத்ரியன். பிரபாச தீர்த்தப் பயணி. இங்கு தங்க விரும்புகிறேன்” என மீண்டும் சொன்னான் அர்ஜுனன்.
ஒர் அகல் விளக்குச் சுடர் ஒளிகொண்ட முகில் ஒன்றை தன்னைச் சுற்றி சூடியபடி எழுந்து மூடுபனியில் அசைந்து நாற்புறமும் விரிந்தபடி அவனை நோக்கி வந்தது. அதற்கு அப்பால் எழுந்த முதிய முகத்தில் கீழிருந்து ஒளி விழுந்தமையால் கண்கள் நிழல்கொண்டிருந்தன. “உங்கள் பெயர் என்ன வீரரே?” என்று அவர் கேட்டார். “பாரதன் என்று என்னை அழைக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “தனியாக எவரும் பிரபாச தீர்த்தம் வரை செல்வதில்லை” என்றார் முதியவர். “எவ்வழியிலும் தனியே செல்வதே என் வழக்கம்” என்று அர்ஜுனன் சொன்னான். புன்னகைத்து “தலைமை ஏற்பவரே தனியாக செல்கிறார்கள். நீர் வீரர் அல்ல, அரசர் என்று உணர்கிறேன். எவரென்று நான் வினவப்போவதில்லை, வருக!” என்றார் முதியவர்.
நடந்தபடி “என் பெயர் ஸ்ரீமுதன். பெரு வணிகர் சந்திரப்பிரபரின் செல்வம் பெற்று இங்கு இந்த விடுதியை நடத்துகிறேன். இப்போது பிரபாச தீர்த்தம் நோக்கி செல்லும் பயணம் தொடங்கி இருப்பதால் பன்னிரு ஏவலர்களுடன் இங்கிருக்கிறேன்” என்றார். “பிறநாட்களில் நானும் என் மனைவியும் மட்டிலுமே இருப்போம். வாரத்திற்கு ஒருநாள்கூட பயணி என எவரும் வருவதில்லை.” அர்ஜுனன் “நான் உணவுண்டு ஒரு நாள் ஆகிறது” என்றான். “நல்லுணவு இங்கு உண்டு. ஆனால் ஷத்ரியருக்குள்ள ஊனுணவு அளிக்கும் முறை இல்லை. இங்கு உணவளிப்பவர்கள் அருக நெறி நிற்கும் வணிகர்கள். இங்குள்ளது அவர்களின் உணவே” என்றார்.
“ஆம். அதை முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். கிழவரைத் தொடர்ந்து கல்மண்டபத்துக் கூடத்திற்குள் நுழைந்த அர்ஜுனனை நோக்கி அங்கிருந்தோர் விழிகள் திரும்பின. கரிய கம்பளிகளைப் போர்த்தி மரவுரி விரிப்பு விரித்து அதன் மேல் உடல் குவித்து அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். “இவர் இங்கு தங்க வந்த ஷத்ரியர்” என்றார் ஸ்ரீமுதர். “பிரபாச நோன்பு நோற்காமல் மேலே செல்வது வழக்கமில்லை” என்று ஒருவர் சொன்னார். “நானும் அந்நோன்பிலே இருப்பவன்தான்” என்று சொன்னான் அர்ஜுனன்.
“ஒருவேளை உணவு. அணிகலன் அணியலாகாது, வண்ண ஆடைகள் துறத்தல் வேண்டும். நாற்பத்தொரு நாள் மகளிருடன் கூடுவதும் மறுக்கப்பட்டுள்ளது” என்றார் இன்னொருவர். புன்னகைத்து “ஆறு மாதங்களாக அந்நோன்பிலே இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பிரபாச தீர்த்தத்தை எங்ஙனம் அறிந்தீர்?” என்றான் ஒருவன். “இங்கு கீழே உள்ள சகரபதம் என்னும் ஆயர் சிற்றூரை அடைந்தேன். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். அவ்வழியாக செல்லும் பயணிகளின் பாடலைக் கேட்டேன். பிரபாச தீர்த்தத்திற்கு செல்கிறோம் என்றார்கள். நானும் அங்கு செல்லலாம் என்று எண்ணினேன்.”
“அது பழி தீர்க்கும் சுனை என்று அறிவீரா?” என்றான் ஒருவன். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “பெரும்பழி செய்தவரோ?” என்றான் அவன். அவன் விழிகளை நேர் நோக்கி “இல்லை பிழையென எதையும் ஆற்றவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் இனி பிழையாற்றக்கூடும் அல்லவா?” ஸ்ரீமுதர் “ஆம், செய்த பிழை மட்டுமல்ல, செய்யா பிழையும் பழிகொள்வதே” என்றார். “அவை எண்ணப்பிழை எனப்படுகின்றன. ஆயிரம் பிழைகளின் தலைவாயிலில் நின்று ஏங்கி தயங்கி மீள்வதே மானுட இயல்பு. அப்பழிகளும் அவனைச் சூழ்ந்து உயிர் இருக்கும் கணம் வரை வருகின்றன.”
“இச்சுனை அனைத்தையும் களைந்து கருவறை விட்டு எழும் புதுமகவுபோல் நீராடுபவரை மாற்றுகிறது” என்றார் ஒரு கிழவர். அர்ஜுனன் புன்னகைத்து “இங்கிருந்து தவழ்ந்து திரும்பிச் செல்ல விழைகிறேன்” என்றான். அங்கிருந்த பலர் நகைத்தனர். முதியவர்கள் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் அதட்டி அமையச்செய்தார்கள்.
“வீரரே, வந்து உணவு உண்ணுங்கள்” என்றார் ஸ்ரீமுதர். அவர் கையின் அகல் ஒளியைத் தொடர்ந்து பின்கட்டுக்குச் சென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த நாணல் பாயில் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “நீராடிய பின்னரே மலை ஏறத் தொடங்கியிருப்பீர். குளிரில் பிறிதொரு நீராட்டு தேவையில்லை” என்றார். பெரிய கொப்பரையில் இளவெந்நீர் கொண்டு வந்து வைத்தார். அவரது ஏவலன் ஒருவன் “அப்பங்கள் கொண்டுவரலாமா?” என்றான். ஸ்ரீமுதர் “கீரை அப்பங்கள். அருகரின் உணவென்பதில் நறுமணப்பொருட்களும், மண்ணுக்கு அடியில் விளையும் பொருட்களும், விலங்கோ நுண்ணுயிரோ பேணும் பொருட்களும் இருப்பதில்லை” என்றார்.
கீரைகளை வஜ்ரதானியத்துடன் அரைத்து வாழைப்பழம் கலந்து வாழை இலையில் பொதிந்து ஆவியில் வேகவைத்த அப்பங்கள் இனிதாகவே இருந்தன. அர்ஜுனன் உண்ணுவதை நோக்கி முகம் மலர்ந்த ஸ்ரீமுதர் “இங்கு வரும் அனைவருமே பெரும் பசியுடன்தான் அணுகுகின்றனர். ஆனால் இப்படி உண்ணும் எவரையும் கண்டதில்லை” என்றார்.
அர்ஜுனன் விழி தூக்கி “என்ன?” என்றான். “உண்ணுகையில் தங்கள் சித்தம் முற்றிலும் அதில் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். “ஐம்பதாண்டுகளாக உணவு உண்பவர்களை நோக்கி வருகிறேன். உண்ணும்போது மட்டுமே மானுடன் பலவாக பிரிகிறான். எண்ணங்கள் சிதறி அலைய கையால் அள்ளி வாயால் உண்டு நாவால் அறிகிறான். நெஞ்சம் நினைவுகளுடன் சேர்த்து சுவைக்கிறது. உளங்குவிந்து உண்ணும் கலை சிறு மைந்தருக்கே வாய்க்கிறது.”
அர்ஜுனன் கைகளை கழுவியபடி “எச்செயலிலும் அத்தருணத்தில் முழுமையுடன் இருப்பதென்று நான் வெறிகொண்டுள்ளேன்” என்றான். “நன்று, அதுவே யோகம் என்பது” என்றார் ஸ்ரீமுதர். “தாங்கள் எளிய வீரர் அல்ல என்று உங்கள் நோக்கிலேயே அறிந்தேன். இங்கு வரும் மானுடரை அறிந்தே இப்புடவியை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.”
“நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம். தற்போது துயிலுங்கள். முதல் பறவை குரல் எழுப்புகையில் எழுந்து நீராட வேண்டும். முதற்கதிர் எழுகையில் மலையேறத் தொடங்குங்கள். மிகவும் செங்குத்தான மலை. கொடிகளைப் பற்றி பாறைகளில் குதித்து மலை ஏற வேண்டும். மரங்களில் கட்டப்பட்ட வடங்களைப் பற்றி ஏற வேண்டிய இடங்களும் பல உள்ளன. வெயிலின் ஒளி மறைவதற்குள் இந்நாளில் நீங்கள் செல்லவேண்டிய தொலைவில் முக்கால் பங்கை கடந்துவிட்டீர்கள் என்றால்தான் கணக்கு சரியாக வரும். வெயில் எழுந்த பின் குறைவாகவே முன் செல்ல முடியும். வெயில் அணையும்போது உடல் களைத்துவிடும்.”
“அவ்வாறே” என்றான் அர்ஜுனன். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “இங்கு படுக்க இடம் உள்ளதல்லவா?” என்றான். “மரவுரிச் சுருள்கள் போதிய அளவில் உள்ளன. இங்கு முன்னிரவிலேயே குளிர் மிகுதியாக இருக்கும். பின்னிரவில் மரங்களின் நீராவி எழுந்து இளவெம்மை கூடும். வருக!” என்று அழைத்துச் சென்றார் ஸ்ரீமுதர்.
கல்மண்டபத்தின் உள் அறைகள் நிறைந்து விட்டிருந்தன. வெளியே போடப்பட்ட கொட்டகைக்குள் இருளுக்குள் பயணிகள் துயின்று கொண்டிருந்தனர். “அதோ, அவ்வெல்லையில் தாங்கள் மரவுரியை விரிக்க இடம் உள்ளது” என்றார் ஸ்ரீமுதர். அவரைத் தொடர்ந்து வந்த ஏவலர் அளித்த எடைமிக்க மரவுரியை கையில் வாங்கிக்கொண்ட அர்ஜுனனிடம் “தங்களிடம் பொதி என ஏதும் இல்லையோ?” என்றார் ஸ்ரீமுதர். “இல்லை” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அதுவும் நன்றே” என்றபின் தலைவணங்கி அவர் விடைபெற்றார்.
கொட்டகையின் எல்லையில் எஞ்சியிருந்த இடத்தில் தன் மரவுரியை விரித்து, தலையணையாக அளிக்கப்பட்ட மென்மரக்கட்டையை வைத்து உடல் விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டான் அர்ஜுனன். மூடுபனி குளிர்ந்து கூரைகளில் ஊறி விளிம்பிலிருந்து மழைபோல சொட்டிக்கொண்டிருந்தது. அலை அலையாக உள்ளே வந்த காற்று வாடிய தழைமணமும், காட்டெருமைச் சாணியின் மணமும் கொண்டிருந்தது. நீர்த்தாளம் சித்தத்தை ஒழுங்கமைத்தது.
துயில் அவன் கால்கள் மேல் பரவுவதை உணர முடிந்தது. உடலின் ஒவ்வொரு தசையையும் அது அவிழ்த்து விட்டது. புல்வெளிக்குள் நுழைந்த மந்தை மெல்ல கன்றுகளாக கலைவதுபோல அவன் விரிந்து கொண்டிருந்தான். எவரோ எங்கோ “நல்ல தருணம் இது” என்றார்கள். “நீர் பெருகிச் செல்கிறது” என்றார் இன்னொருவர். துயிலணையும்போது வரும் இக்குரல்கள் எங்குள்ளன? “பட்டத்துயானை” என்றது யாரோ உரைத்த ஒலி. “சூரியனின் மைந்தன்… அவன் விற்கள் கதிர்களே” என்றது மிக ஆழத்தில் ஒரு குரல் இறுதியாக. பெண்குரல், மிக அணுக்கமாக அறிந்த குரல். இருமுகங்கள் பேசும் ஒரு குரல்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்