அன்புள்ள ஜெ..
சைவப் பாடல்கள் படித்தேன்.. அதுவும் கோத்தும்பி பாடல்.. இளையராஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. என்ன ஒரு அழகான ட்யூன்?? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், உங்கள் வார்த்தைகள் உருவாக்கிய எண்ணங்களை விட அவரது இசை மனதில் உருவாக்கிய சித்திரம் மிக அழகு.. எலும்புக் குருத்தில் உறைந்த போன ஒன்று அது..
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.. வரிகளும்..
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்.. கள்ளப் படாத களி வந்த வான்கருணை.. வரிகளோடு ஒலிக்கும் வயலின் இசை.. கோத்தும்பி என்னும் வார்த்தை ஒலிக்கும் கணம் தும்பியை நினைவுறுத்தும் ஒலி.. எழுதும் இந்த அதிகாலை நேரத்திலும் சிலிர்க்கிறது.. இவரும் வான் கருணை நமக்களித்த வரமே..
சிவபுராணம் எனக்குத் இஅவரது ஓரடரியோ மூலம்தான் மனதில் பதிந்தது.. அதுவும் இறுதியில் மீண்டும் நமச்சிவாய வாழ்க வரிகள் பாடப் படும் போது உருவான மனவெழுச்சியை என்னால் வார்த்தைகளில் கொண்டு வர முடியவில்லை.. divine
இவ்விடத்தில் சிக்கெனப் பிடித்தேன் பாடலைக் கேட்ட எங்கள் வீட்டு ஜென் குரு அருண் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்து மகிழ்வூட்டுகிறது.. “எதுக்குப்பா அவரு சிக்கனைப் புடிக்கச் சொல்றாரு?”
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
நீங்கள் சொல்வது உண்மை. திருவாசகம் அடிபப்டையில் இசைப்பாடல் , அதன்பின்னரே கவிதை. ஆகவே அது இசையுடன் கொள்ளும் உறவு அபாரமானது. இசை தவிர்த்துப் பார்த்தால் ஒரு பகுதியே பிடிபடும்
ஆனால் அந்த பகுதி எப்போதுமே விடுபடுகிறது. ஆகவேதான் இந்த கவித்துவ விவாதம்.
ஜெ
இனிய நண்பர் ஜெயமோகன்,
உங்கள் திருமந்திர உரை படித்து தெளிந்தேன். முக்கியமான முப்பது திருமந்திர பாடல்களை விளக்கி ஒரு தொகுப்பாக தந்தால் பெரும் உதவியாக இருக்கும். செய்விர்களா?
அன்புடன்
குமார் பாபு. (சென்னை)
அன்புள்ள குமார் பாபு
திருமந்திரம் போன்ற நூல்கள் நெடுங்காலமாக சைவ பெருமத மரபுக்குள் நின்று மட்டுமே வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த தளத்தில் மிக ஆழமான பல பொருள்கொள்ளல்கள் விவாதங்கள் நிகழ்ந்தும் உள்ளன. ஆனால் அவற்றை சைவமதத்தின் கட்டுமானத்துக்கு வெளியே பொது தத்துவ – கவிதை வெளியில் வைத்தும் வாசிக்க முடியும். எப்படி கிரேக்க மதம் சார்ந்த் நூல்கள் தத்துவமாகவும் இலக்கியமாகவும் மேல்நாட்டில் வாசிக்கப்பட்டனவோ அப்படி. அந்த வாசிப்புக்கான ஒரு தொடக்கமாகவே அக்குறிப்புகளை அரங்கில் வைத்தேன். அந்த வாசிப்பு என்பது பல தளங்களில் விரிவாக நிகழவேண்டிய ஒன்று. திருமந்திரம் என்றும் என் உள்ளம் கவர்ந்த நூல். எழுதலாம், காலமும் உதவ வேண்டும்
ஜெ
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
ஏதோ உந்துதலில் தாங்கள் பின்னூட்டத்தை நிறுத்திவிட்டதை மறந்து பின்னூட்டம் இட்டுவிட்டேன்.
மன்னிக்கவும்.
இனி மின்னஞ்சலிலே எனது கருத்தை பகிர்கிறேன்.
உற்றானுக்கே கண்ணகத்தே நின்று காதலித்தேனே என்று கூறும்போது உற்றானுக்கே = உற்றானுக்கு+ஏ (அசை)
கண்ணகத்தே = கண் + அகத்தே என்று விரித்தால்
கண் என்பது வேற்றுமை உருபு என்கிற விதத்தில் பொருள்படுத்தினால் உற்றானின் அகத்தே என்று கூற முடியும். ஏனெனில் இசை அகத்தில்தான் முதலில் எழும். இசைக்கு ஒலி வடிவம் ஏற்படும் முன் உணர்வில் உண்டாகும் சலனமே இறைவனை நமக்கு காட்டும். அதுவே சிவம். அதுவே அன்பு. அதுவே அமைதி.
c.s.veeraragavan
அன்புள்ள வீர ராகவன்
அந்த வாசிப்பு ஒரு கோணம்தான். ஆனால் இரு உருபுகள் தொடர இலக்கண அனுமதி இல்லை. உற்றான்கண் என்று இருக்கலாம் உற்றானுக்கே கண் என இருக்க இயலாது என்பதே என் அறிதல்
ஜெ