பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 2
அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து எழுவிண்மீன் நோக்கி குடிமுறைப்படி அவளுக்கு கணவனானான். மூதன்னையர் நூற்றெண்மர் நிரைவகுத்து வந்து சித்ராங்கதையை மஞ்சளரிசியும் மலரும் நீரும் சொரிந்து வாழ்த்தி “மாமங்கலையாகுக!” என்று அருளினர். காட்டில் வளைத்து வளர்க்கப்பட்ட பொன்மூங்கில்களை வெட்டிவந்து புதியதோர் கொடித்தீவில் அவர்களுக்கு மாளிகை அமைத்தனர்.
அங்கே அவர்கள் வாழும் காதல்வாழ்க்கையைப் பற்றி மணிபுரியின் பாணர் பல பாடல்களை பாடினர். நள்ளிரவில் அர்ஜுனன் பெண்ணாவான் என்றும் அவள் ஆணாகி அவனை அணைத்துக்கொள்வாள் என்றும் கதைகள் சொல்லின. ஆணும் பெண்ணும் காதலில் ஆடைமாற்றிக்கொண்டு மகிழ்வது அதன்பின்னரே மணிபுரியில் பரவலாயிற்று. அன்னை மணிபத்மையின் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப்போல முகத்தில் செஞ்சாயம் பூசி பட்டாடை அணிந்து அணியும் மலரும் சூடி ஆடிச்செல்லுதல் சடங்கென ஆயிற்று. பெண்ணுருவில் அழகியென தோன்றுபவனே தகுதியான இளைஞன் என பெண்கள் எண்ணத்தலைப்பட்டனர். வில்லில் நாண் நிலைக்க பெண்ணென ஆகி மீள்க என்று பாணன் பாடிய வரி பழமொழியென்றே ஆகியது.
கார்காலம் வந்தபோது சித்ராங்கதை கருவுற்றாள். மைந்தன் பிறப்பான் என்று நிமித்திகர் வகுத்துரைத்தனர். தந்தைக்கு நிகரான வில்லவன், பாரதவர்ஷம் உள்ளளவும் வரலாறு சொல்லும் மாவீரன் என்று அவனை பாணர் பாடத்தொடங்கினர். மைந்தன் பிறக்க மணிபத்மையின் ஆலயத்தில் நாள்பூசைகளும் பலிக்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன. இளவரசி வலப்பக்கம் கை ஊன்றி ஒசிகிறாள் என்றாள் ஒரு செவிலி. அவள் தொப்புள் விரிந்து வலப்பக்கமாக இழுபட்டுள்ளது என்றாள் மருத்துவச்சி. கண்களுக்குக் கீழே கருமை படர்ந்துள்ளது. கனவுகளில் சிம்மங்களைக் காண்கிறாள். மைந்தனே வரப்போகிறான் என்றனர் நிமித்திகர்.
மணிபுரியே நோக்கியிருந்த மைந்தன் முதுகோடைகாலத்தில் பிறந்தான். சைத்ரமாதம் ஏழாம் நிலவுநாளில் பிறந்த அவன் அறத்தின் தேவனாகிய தருமனுக்கு பிரபாதை என்னும் மனைவியில் பிறந்த மைந்தனும் எட்டு வசுக்களில் ஒருவனுமாகிய பிரபாசனின் மண் நிகழ்வு என்றனர் நிமித்திகர். தன் தமையனின் தோற்றம் அவன் என்று அர்ஜுனன் மகிழ்ந்தான். இருபத்தெட்டாம் நாள் அவனுக்கு இடைநூல் அணிவிழா அன்று எட்டுமங்கலங்கள் நிரைத்து ஏழுதிரி விளக்கின் முன்வைத்து பப்ருவாகனன் என்று பெயரிட்டனர்.
மைந்தனின் பிறப்பு ஒருமாதகாலம் மணிபுரியின் விழவாக இருந்தது. ஒவ்வொருநாளும் இல்லங்களில் அணிமங்கலங்கள் பொலியவேண்டும் என்றும் அடுமனைகளில் இன்னுணவு சமைக்கப்படவேண்டும் என்றும் அரசாணை இருந்தது. அனைத்து தண்டனைகளும் தவிர்க்கப்பட்டன. அந்நாட்களில் பிறந்த அனைத்து மைந்தர்களுக்கும் அரசரின் அணியும் பட்டும் அளிக்கப்பட்டது. எல்லைப்புற ஊர்களிலிருந்தெல்லாம் ஒவ்வொருநாளும் மைந்தனைக் காண மணிபுரிக்குடியினர் வந்துகொண்டிருந்தனர். காலையிளவெயில் எழுகையில் அரண்மனையில் உப்பரிகை முகப்பில் மைந்தனுடன் செவிலி வந்து அமர்ந்து மும்முறை அவனைத்தூக்கி அவர்களுக்கு காட்டினாள். அவர்கள் ஒற்றைப்பெருங்குரலாக வாழ்த்தொலி எழுப்பினர்.
மைந்தனுக்கு பெயர் அமைவதுவரை அர்ஜுனன் அங்கே இயல்பாக இருந்தான். பெயரற்ற சிற்றுடல் அவன் உடலின் ஓர் உறுப்பென எப்போதும் இருந்தது. மைந்தன் தந்தையை உடலால் அறிந்தான். துயிலில்கூட அவன் தொடுகை நீங்குகையில் சினந்து முகம் சுளித்து அழுதான். பெயரிடப்பட்ட அன்று காலை மங்கலப்பொருட்கள் பரப்பிய மணித்தாலத்தில் படுக்க வைக்கப்பட்ட மைந்தனை சித்ரபாணனும் அவர் அரசியும் கைகளில் ஏந்தி அன்னை மணிபத்மையின் ஆலயத்தை மும்முறை சுற்றிவந்து அதன் படிகளில் வைத்து வணங்கி எடுத்துக்கொண்டனர். தாலத்தை கொண்டுவந்து அர்ஜுனனிடம் நீட்ட அவன் மைந்தனை கையில் எடுத்தான். முத்தமிட்டுவிட்டு சித்ராங்கதையிடம் அளித்தான்.
அன்றுமாலை வழக்கம் போல் மைந்தனை தன் தோளிலேற்றி சிறுதோணியேறிச்செல்லும்போது அர்ஜுனன் ஒரு வேறுபாட்டை உணர்ந்தான். அன்று காலையிலேயே அதை உணர்ந்திருப்பதை அப்போது தெளிவுற அறிந்தான். அது என்ன என்று சொற்களால் நெஞ்சைத் துழாவி பின்பு கண்டடைந்தான். அம்மகவு பிறிதொன்றாக இருந்தது. அவன் மைந்தனாக, அன்புக்குரியவனாக, ஆனால் பிறிதொரு ஆண்மகனாக. அதை திரும்பி வந்து சித்ராங்கதையிடம் சொன்னான். அவள் விழிகளில் இன்னதென்றறியாத சிறிய ஒளியுடன் அவனை நோக்கிவிட்டு “இங்கே கொடுங்கள்” என்று மைந்தனை வாங்கிக்கொண்டாள்.
அதன்பின் அவள் மைந்தனை அர்ஜுனன் முன்னால் கொஞ்சவோ முலையூட்டவோ செய்யவில்லை. எப்போதும் செவிலியே அவனை தந்தைக்குமுன் கொண்டுவந்தாள். மைந்தனை வாங்கி மடியிலிருத்தி விளையாடி நகையாடி முத்தாடி மகிழ்ந்தபின் திருப்பியளித்துவிட்டு அவன் தனியனாகும்போதே அவள் அவன் முன் வந்தாள். மைந்தனைப்பற்றி அவனிடம் பேசும்போது ஒருபோதும் அவள் குரலில் நெகிழ்ச்சி இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் ‘நம் மைந்தன்’ என்ற சொல்லில் அவனை குறிப்பிட்டாள். அவனோ மேலும் மேலும் கனிவும் நெகிழ்வும் கொண்டே மைந்தனைப்பற்றி பேசினான்.
ஆனால் அவன் அங்கிருந்து கிளம்பவிருக்கிறான் என அவள் அறிந்திருந்தாள். அவனே அதை சொல்லும் நாளுக்காக காத்திருந்தாள். சித்ரபாணனின் அமைச்சர்கள் அவரிடம் தன் பெயரனை அவர் மைந்தனென்றும் ஏற்புகொள்ளவேண்டும் என்றனர். அதற்கு ஒரு முறைச்சடங்கை செய்யவேண்டும். அன்றே பப்ருவாகனன் மணிபுரிக்கு பட்டத்து இளவரசன் ஆகிவிடுவான். அவனே தன் தாதனுக்கு நீத்தார்கொடையையும் செய்ய உரிமைகொண்டவனாவான். “தொல்புகழ் மணிபுரியின் கோலுக்கு காவல் அவனே என்றாகும். இனி ஒரு தலைமுறைக்காலம் இங்கு ஒளிரும் வாள் ஒன்று நின்றிருக்கும் என உலகறியும்” என்றனர் அமைச்சர்.
மைந்து ஏற்புச் சடங்குக்கு நாள் பார்க்க முதுவைதிகர் ஒருவரை தேடிவரச்சொல்லி தூதர்களை அனுப்பினார் சித்ரபாணன். காமரூபத்திலிருந்து சாக்தவைதிகரான மணிகர்ணரை கண்டடைந்து ஐந்து மங்கலங்களுடன் பட்டும் பொன்னும் மணியும் வைத்து அழைத்தனர். முதல்மழை விழத்தொடங்கிய பருவத்தில் முதிர்ந்து தசைகனிந்து தொங்கிய உடலும் பழுத்த விழிகளும் கொண்ட மணிகர்ணர் பட்டுமஞ்சலில் மணிபுரிக்கு வந்தார். படகிலேறி அரண்மனைக்கு வந்த அவரை சித்ரபாணரும் அமைச்சர்களும் அரண்மனை முகப்புக்கு வந்து வரவேற்றனர். அவையமர்த்தி முறைமைசெய்தனர்.
மைந்தனுடன் சித்ராங்கதையும் உடன் அர்ஜுனனும் வந்து அவரை பணிந்தனர். நடுங்கும் கைகளால் குழந்தையைத் தொட்டு “புகழ் பெறுக!” என்று வாழ்த்திய மணிகர்ணர் அருகே பட்டுப்பாய் விரித்து மைந்தனை கிடத்தும்படி சொன்னார். பாயில் கிடத்தப்பட்டதும் இடக்காலைத் தூக்கிவைத்து கவிழ்ந்து கைகளால் தரையை அறைந்து செவ்விதழ்களிலிருந்து வாய்நீர் குழாய் இழிய மேல்வாயின் சிறுவெண்பல் காட்டிச் சிரித்த பப்ருவாகனன் தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை ஒளிமிக்க விழிகளால் மாறி மாறி நோக்கினான். பின்னர் வலக்கையை தரையில் மீண்டும் அறைந்து “ஆ” என்று கூவினான்.
சித்ரபாணன் அசைய விழியால் வேண்டாம் என்றார் மணிகர்ணர். மைந்தன் மும்முறை தரையை அறைந்த பின் கூர்ந்து பட்டுப்பாயை நோக்கினான். அதில் ஊர்ந்த ஓர் எறும்பைக் கண்டு கையை அறைந்து அதைப்பிடிக்க இருமுறை எம்பி மீண்டும் நினைவு கூர்ந்து தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி “ஆ?” என்றான். அக்கணம் அவன் அர்ஜுனனை கண்டுகொண்டான். இருகைகளாலும் நிலத்தை அறைந்து முழங்காலை ஊன்றி உந்தி தந்தையை நோக்கிச் சென்று கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்து சிரித்தபடி “ஆ” என்றான். அவன் வாய்நீர் நெஞ்சில் சொட்டியது.
மணிகர்ணர் கைகாட்ட அர்ஜுனன் குழந்தையை தூக்கிக்கொண்டான். அவர் களைத்துச்சரிந்த வலதுகண்ணின் இமை மெல்ல அதிர பெருமூச்சுடன் “சரி” என்றார். “இவனை என் மைந்தனாகவும் மகவேற்பு செய்யவிழைகிறேன் வைதிகரே. நன்னாளும் நலம்தரும் கோளும் உய்த்து சொல்லவேண்டும்” என்றார் சித்ரபாணன். மணிகர்ணர் தலையசைத்துவிட்டு “செய்யலாம்” என்றார். “இவனது பிறவிநூலை எங்கள் நிமித்திகர் கணித்துள்ளார்கள். நற்குறிகள் அனைத்தும் உள்ளன என்கிறார்கள். உடல்குறி கணித்துச் சொல்லும் நிமித்திகர்களும் சிறந்ததையே சொன்னார்கள்” என்றார் சித்ரபாணன்.
“சிறந்தவற்றை மட்டுமே நானும் காண்கிறேன்” என்றார் மணிகர்ணர். “இவர் மணிபுரியின் அரசர்நிரையின் முதல்வர். காமரூபமும் கிழக்குநாடுகள் அனைத்தும் ஒருநாள் இவர் குடைக்கீழ் அமையும். பாரதவர்ஷத்தின் நிகரற்ற வில்வீரர் என்று இவர் புகழ்பெறுவார். தன் தந்தையும் வில்லுக்கு இறைவனுமாகிய இளைய பாண்டவரை ஒருபோரில் வென்று புகழ்பெறுவார்.” அச்சொல் கேட்டதும் அவையினர் ஒருசேர குரலெழுப்பினர். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனை நோக்கியபின் “தம்மின் தம் புதல்வர் மேன்மையுறக்காணும் நல்லூழ் இளைய பாண்டவருக்கு அமையட்டும்” என்றார்.
“தன் தந்தையின் தீப்பழி ஒன்றை போக்கவும் மண்ணிலிருந்து அவர் எளிதாக விண்ணேக வழிகோலவும் நல்லூழ்கொண்ட மைந்தன் இவர். இவரை ஈன்றதனால் மட்டுமே இவரது தந்தை பிறவாழிச்சுழல் நீந்தி கரைகாண்பார்” என்றார் மணிகர்ணர். அர்ஜுனன் கைகூப்பினான். சித்ராங்கதை ஓரவிழியால் அர்ஜுனனையே நோக்கி நின்றிருந்தாள். அவள் ஏன் அவ்வாறு தன் கணவனை நோக்குகிறாள் என்று வியந்த சித்ரபாணன் ஓரவிழியால் தன் மனைவியை நோக்கினார். அவள் மகளை நோக்கியபின் அவரை நோக்கி விழிகளை மெல்ல அசைத்தாள். ஒன்றுமில்லை என்பதுபோல. பின்னர் சொல்கிறேன் என அவள் கூறுவதை அடுத்த கணம் அவர் புரிந்துகொண்டார்.
“வரும் முழுநிலவுநாளில் காலை பிரம்மதருணத்தில் மகவேற்பு நிகழலாம். நல்ல நேரம்” என்றார் மணிகர்ணர். “தந்தைக்கும் மைந்தனுக்கும் மட்டுமல்லாது இந்நாட்டுக்கும் குலத்திற்கும் அழியாப்புகழ் சூழும்.” சித்ரபாணன் கைகூப்பி “என் நல்லூழ்” என்றார். ஏவலன் தாலத்தில் கொண்டு வந்து அளித்த மரப்பட்டை ஏட்டில் மை தொட்டு நாளையும் கோளையும் குறித்தார் மணிகர்ணர். அவரது தூரிகையின் அசைவை கேட்டபடி அனைவரும் விழி விரித்து நின்றனர். மணிகர்ணர் எழுந்து ஓலையை நீட்டியதும் சித்ரபாணன் இரு கைகளையும் நீட்டி அதை பெற்றுக்கொண்டார். சேடியர் குரவையிட்டனர். மங்கலப்பேரிசை எழுந்தது. அவ்வொலி கேட்டு நகரெங்கும் செவிகூந்ந்து நின்றிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.
முதுவைதிகர் மணிகர்ணருக்கு எண்மங்கலம் வைத்த பொற்தாலத்தில் ஏழு அருமணிகளும் நூற்றெட்டு பொன்நாணயங்களும் பன்னிரு பட்டாடையும் வைத்து பரிசில் அளித்தார் சித்ரபாணன். அவர் நீரும் மலருமிட்டு அரசனையும் அரசியையும் மைந்தனையும் அவன் பெற்றோரையும் வாழ்த்தினார். திரும்பி அவையை வாழ்த்தி கைகூப்பினார். அவை எழுந்து முதுவைதிகரை வாழ்த்தி வணங்கி நின்றது. “இக்குடி நலம்பெறுக! இந்நிலம் செழிக்கட்டும். இங்கு அறம் வாழட்டும். தெய்வங்கள் மண்ணிறங்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார் மணிகர்ணர்.
ஏவலர் கைபற்றி எழுந்து கூனிய உடலை மெல்ல அசைத்து நடந்த மணிகர்ணர் எண்ணிக்கொண்டு நின்று அர்ஜுனனை நோக்கி “என்னுடன் வருக!” என்றார். “அவ்வாறே” என்று அவன் அவரை தொடர்ந்தான். அரண்மனைக்கூடத்தின் நீண்ட இடைநாழிக்கு வந்த மணிகர்ணர் நின்று திரும்பி நோக்க ஏவலர்கள் அவரை விட்டுவிட்டு விலகினர். அவர் அங்கே நின்ற பெரிய மூங்கில்தூணை பற்றிக்கொண்டு தன் கூன்முதுகை நிமிர்த்தினார். “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும் இளவரசே” என்றார். “காத்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.
“உன் மைந்தனே இப்புவி அறியும் மாவீரன், நீயல்ல. உன்னை வென்றவன் என்றே அவன் இங்கு எக்காலமும் அறியப்படுவான்” என்றார் மணிகர்ணர். “அதை நீ மாற்ற முடியாது. ஏனென்றால் அது நல்லூழ். ஆனால் தீயூழ் ஒன்றும் உள்ளது.” அர்ஜுனன் “தங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறேன்” என்றான். “இம்மைந்தன் உன்னை களத்தில் கொல்வான்” என்றார் மணிகர்ணர். “அதை நான் அருகே என காண்கிறேன். இன்று இடக்கையை மண்ணில் அறைந்து அவன் உன்னை அறைகூவினான்.” அர்ஜுனன் “அது ஊழெனில் அவ்வாறே ஆகுக!” என்றான்.
”ஊழெனினும் வெல்ல வழியுள்ளது” என்றார் மணிகர்ணர். “விற்கலையை அவன் உன்னிடமிருந்தே கற்றாகவேண்டும். அவனுக்கு நீ அனைத்து அம்புகளையும் அளிக்காமலிருக்கலாம். இறுதிவெற்றிக்காக ஒற்றை அம்பை உன்னிடம் தக்கவைத்துக்கொள்ளலாம்.” அர்ஜுனன் வாயெடுப்பதற்குள் “அது போருக்கு உகந்த அறம் என்றே நூல்கள் சொல்கின்றன. வீரன் தான் உயிர்வாழ்தலையே அறங்களில் முதலாவதாக கொள்ளவேண்டும். ஏனென்றால் பிற அறங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை அவனுக்களிப்பது அதுவே.”
“உத்தமரே, அவ்வண்ணம் ஓர் அம்பை நான் எனக்கென வைத்துக்கொண்டேன் என்றால் அவ்விறுதிக் களத்தில் என்ன நிகழும்?” என்று அர்ஜுனன் கேட்டான். அவர் “அப்படி கேட்கப்போனால்…” என்றார். “நான் அவனை வெல்வேன், அவன் உயிர்கொள்வேன், அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அது நிகழலாம்” என்றார் மணிகர்ணர். “அவன் குருதிபடிந்த கைகளுடன் விண்ணுக்குச்சென்றால் நான் என் மூதாதையருக்கு என்ன மறுமொழி சொல்வேன்?” என்றான் அர்ஜுனன். மணிகர்ணர் “ஆம், ஆனால் தந்தையைக் கொன்றபழியை அவன் சுமப்பதும் உகந்தது அல்ல” என்றார்.
“நான் விண்ணிலிருந்து அவன் பழியை பொறுப்பேன். அவனை என் நுண்கரங்களால் அள்ளி எடுத்து நெஞ்சோடு சேர்த்து நன்றுசெய்தாய் மைந்தா என்பேன். மண்ணில் அவன் பழிகொள்ள நேரலாம். விண்ணில் என்னருகே எனக்கு இனியவனாக வந்தமர்வான்” என்றான் அர்ஜுனன். “ஆகவே, அவன் என்னைக் கொல்வான் என்றால் அதை நான் ஏற்பதே சிறந்ததாகும்.” மணிகர்ணர் “என் எண்ணத்தை சொன்னேன். இந்திரப்பிரஸ்தத்தின் அச்சு நீங்கள். அறம் திகழ உங்கள் அம்புகள் தேவை” என்றார். அர்ஜுனன் “அறம் என்பது தன்னிலிருந்து தொடங்குவதல்லவா?” என்றான்.
“நன்று. நலம் திகழ்க!” என்றார் மணிகர்ணர். “நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நான் முன்னரே அறிந்திருந்தேன், இளையவரே. பிறிதொரு சொல்லை நீங்கள் என்றல்ல எளிய தந்தைகூட சொல்லிவிடமுடியாது. இவ்வண்ணம் கண்காணா வலையால் மானுடரை இணைத்து ஆடச்செய்தபடி நடுவே அமர்ந்திருக்கிறது அந்தப் பெருஞ்சிலந்தி” என்றபின் அவன் தலைமேல் கைவைத்து “அறம் துணைக்கட்டும். புகழ் தொடரட்டும்” என்று வாழ்த்திவிட்டு திரும்பி அப்பால் நின்ற ஏவலரை அருகணையச்சொல்லி கைகாட்டினார்.
மகவேற்பு நிகழ்வு முடிந்து ஒருமாதம் கடந்துதான் தான் விடை பெறவிருப்பதை அர்ஜுனன் சித்ராங்கதையிடம் சொன்னான். அவளுடன் கொடித்தீவில் அமர்ந்திருந்தான். அவன் மடியில் மைந்தன் துயின்று கொண்டிருந்தான். அவள் அதை எதிர்பார்த்திருந்தாள். அத்தடாகத்தைப் போன்றது அவன் உள்ளம் என்று அறிந்திருந்தாள். அதில் பெருநதிகள் இணைகின்றன. அதேயளவு நீர் பெருகி வெளியே வழிந்தோடுகிறது. தடாகமோ என்றும் மாறாமல் அவ்வண்ணமே வானை நோக்கி ஊழ்கத்தில் இருக்கிறது.
மைந்தனின் மென்கால்களை தன் சென்னியில் சூடி முத்தமிட்டு “இந்த ஒரு மாதத்தில் மூன்றுநாட்களுக்கு ஒருமுறை என நானறிந்த அனைத்து அம்புகளையும் நுண்சொல்வடிவில் உனக்களிப்பேன். என் மைந்தனின் கைகள் எழுந்ததும் அவற்றை அவனுக்கு நீயே கற்பித்தளிக்கவேண்டும்” என்றான். அவள் தலையசைத்தாள். “என் பெயர் அவனுடனிருக்கட்டும்” என்றபின் எழுந்து அவள் கன்னங்களை வருடி குழல் கோதி நீவி கூந்தல்கட்டில் ஒதுக்கிவைத்தான். அவள் கண்களை நோக்கி புன்னகைத்து “பிரிவை நீ அரசியென எதிர்கொள்வாய் என எண்ணுகிறேன்” என்றான்.
“ஆம்” என்றாள். “பிரிந்தபின் நீ மீண்டும் சித்ராங்கதனாக ஆகவேண்டும். என் மைந்தனுக்கு நல்லாசிரியனாக நீயே அமர்க!” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் நோக்கை விலக்கிக் கொண்டாள். ஏரிப்பரப்பிலிருந்து நாரைகள் எழுந்து காற்றிலேறிக்கொண்டன. அவள் கழுத்தின் மெல்லிய நீல நரம்பை அவன் நோக்கிக்கொண்டிருந்தவன் “என்ன?” என்றான். “பாரதவர்ஷம் பெரியது” என்று அவள் சொன்னாள். “அல்ல, மிகச்சிறியது. பெரியது நம் ஊழ். நான் எங்கிருப்பேன் என அறியேன். ஆனால் எங்கிருந்தாலும் இங்கிருந்த நான் என்னுள் இருப்பேன்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.
அர்ஜுனன் விடை பெற்றபோது மழைக்காலம் தொடங்கிவிட்டிருந்தது. வானம் கருமைகொண்டு மூடியிருக்க இளஞ்சாரல் காற்றை எடைகொள்ளச்செய்திருந்தது. கூரைவிளிம்புகள் சொட்டிக்கொண்டிருதன. ஏரிப்பரப்பு சாரல் மழை பட்டு சிலிர்த்து பரந்திருந்தது. அவன் சிறுபடகில் தன் தோல்மூட்டையுடனும் மூங்கில் வில்லுடனும் ஏறிக்கொண்டான். கழை எழுந்து தாழ்ந்து படகை உந்த நீர்த்தடமிட்டபடி அது சென்றது. காலத்தை விரித்து அம்பொன்றை அணுக்கமாக நோக்குவது போல தோன்றியது. அலைகளென மாறிய படகுத்தடம் தீவுகளை உலையச் செய்து கரையை வருடியது.
மணிபுரியின் மாந்தர் அனைவரும் தங்கள் இல்லங்களின் முற்றங்களில் வந்துநின்று அவன் செல்வதை நோக்கினர். சிறுவர் கண்ணீர் வழிய அன்னை உடைகளில் முகம் மறைத்தனர். பெண்கள் முகம் மறைத்து விம்மினர். அவன் ஒருமுறைகூட திரும்பிப்பார்க்கவில்லை. கரை அணைந்து அங்கு காத்து நின்ற குதிரையில் ஏறி சேற்றுப்பரப்பை மிதித்துச்சென்று நீர் சொட்டிய மரக்கிளைகளுக்கு அப்பால் மறைந்தான்.
சுஜயன் “போய்விட்டாரா?” என்றான். “ஆம்” என்றாள் மாலினி. “எங்கு?” என்றான். “அடுத்த ஊருக்கு… .அங்கிருந்து இன்னொரு ஊருக்கு. அர்ஜுனன் இதோ மேலே செல்லும் பறவைகளைப்போல. அவை பறந்துகொண்டேதானே இருக்கின்றன?” சுஜயன் “ஏன்?” என்றான். “ஏனென்றால் அவை சிறகுள்ளவை” என்றாள் மாலினி. அந்த மறுமொழியில் சுஜயன் முழுநிறைவை அடைந்து “ஆம், சிறகிருந்தால் பறந்து போகலாம்” என்றான்.
வானத்தில் பறந்த இரு பறவைகளைப் பார்த்து “அர்ஜுனர், சித்ராங்கதை!” என்றான். சுபகை புன்னகைத்து “அதற்குப் பின்னால் பாருங்கள் இளவரசே, ஆயிரம் அர்ஜுனர்களும் சித்ராங்கதைகளும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுஜயன் திரும்பிப் பார்த்து விழி விரித்து வியப்பில் சிறு செவ்வுதடுகள் சற்றே பிரிய அசைவிழந்து நின்றான். அவன் உடல் அதிர்ந்தது. கண்களை மூடித்திறந்து கூடு கட்டிய சிறு மார்பு எழுந்தமைய நீள்மூச்சு விட்டு “ஆயிரம் அர்ஜுனர்! ஆயிரம் சித்ராங்கதை” என்றான்.
“அல்லது ஆயிரம் சித்ராங்கதைகள் ஒரு அர்ஜுனர்” என்றாள் சுபகை சிரித்து. மாலினி “போதுமடி, ஏற்கெனவே நன்கு குழம்பியிருக்கிறார் இளவரசர்” என்றாள். “சிற்றுடல் எனினும் உள்ளே இருப்பது இவ்வுலகை காமத்தால் வெல்ல எழும் ஆண்மகன் அல்லவா? அவன் அறிவான் அனைத்தையும்” என்றாள் சுபகை. “இப்போது நாம் சொற்களென உள்ளே விதைப்போம். மழை விழுகையில் அவை முளைக்கட்டும்.”
“எப்போது மழை வரும் ?” என்றான் சுஜயன். “வானம் கறுக்கும்போது” என்றாள் மாலினி. “எப்போது வானம் கறுக்கும்?” என்று சுஜயன் மீண்டும் கேட்டான். “கடல் நினைக்கும் போது” என்றாள் மாலினி. சுபகை “எந்த அளவுக்கு விஞ்சிய கற்பனையாக உள்ளதோ அந்த அளவுக்கு அவர் அதை புரிந்துகொள்கிறார்” என்றாள். “கடலா?” என்றான் சுஜயன். “இளவரசே, மழை என்பது கடல் தன் கை நீட்டி அதன் குழந்தையாகிய மண்ணை வருடுவதல்லவா?” என்று மாலினி சொன்னாள்.
அவள் வியப்புறும்படி அதை அவன் சரியாக புரிந்து கொண்டான். அருகே வந்து “பசு நக்குவது போல” என்று நாவால் நக்கிக் காட்டினான் “இப்படி கன்றை பசு நக்குவது போல மழை நக்குகிறது” என்றான். “அய்யோ, இது என்ன? இத்தனை அழகாக சொல்கிறாரே!” என்று சுபகை வியந்தாள். மாலினி “குழந்தைகள் பிறிதொரு பாதையில் நமக்கு முன்னே வந்து கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் நமக்கு வெகு தொலைவில் முன்னால் அவர்களை பார்க்கிறோம்” என்றாள்.
சுஜயன் திரும்பி கையை நீட்டி “அங்கே முதலை” என்றான். மாலினி “ஆம் முதலை… இங்கே வந்துவிடு’’ என்று திரும்பி பார்க்காமலே சொன்னாள். “அந்த முதலையை நான் சாப்பிடமாட்டேன். அது பெரிய பற்களுடன் இருக்கிறது” என்றான் அவன். ”ஆமாம், வேறு முதலையை நான் சமைத்து அளிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அது கெட்ட முதலை” என்று அவன் மேலும் முன்னகர்ந்து சொன்னான். ”கிளம்புவோம். இன்று மாலையில் மழை வரும் போலிருக்கிறது” என்றாள் மாலினி.
சுஜயனை பிடிக்கச் சென்ற சுபகை “ஆ! உண்மையிலேயே முதலை!” என்றாள். “முதலையா? இங்கா?” என்றபடி மாலினி எழுந்து வந்தாள். கங்கையை நோக்கி இறங்கிய நாணல் சரிவில் அத்தனை நேரம் அவர்கள் விழுந்து கிடந்த பட்ட மரமென்று நினைத்தது இரண்டாள் நீளமுள்ள பெருமுதலை என்று அறிந்தனர். சுஜயனை அள்ளி தோளில் தூக்கிக் கொண்ட சுபகை “அம்மாடி! எத்தனை அருகே சென்றுவிட்டார்! நல்லூழ்தான்” என்றாள். “இங்கு முதலைகள் இல்லையென்று நினைத்தேன்” என்றாள். “கங்கையில் எவ்விடத்திலும் முதலைகள் உண்டு. மானுடர் நடமாடும் இடங்களில் அவை பொதுவாக வருவதில்லை” என்றாள் மாலினி.
மாலினி அதை நோக்கி “பெரிய முதலை” என்றபின் ”பெண்முதலை” என்றாள். “எப்படி தெரியும்?” என்று மாலினியை நோக்கி சுஜயன் கேட்டான். “அது அங்கே முட்டையிட்டிருக்கிறது” என்று சொன்ன மாலினி மணல்குழிகளில் சுட்டிக் காட்டி “அந்த சிறு பள்ளங்களில் கொப்புளங்கள் எழுந்திருக்கின்றன. அச்சிறு குழிகள் தெரிகின்றன. முட்டையிட்டு மணலில் புதைத்து வைத்து அருகே காவலுக்கு படுத்திருக்கிறது. முட்டையிடும் பொருட்டே நீரிலிருந்து இத்தனை தூரம் கடந்து வந்துள்ளது.”
சுபகை சில கணங்கள் திகைத்து திரும்பி புன்னகைத்து “அது அன்னை என்று அறிந்தவுடனே அதன் மேல் இருக்கும் அச்சம் விலகி அணுக்கம் தோன்றுவதையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். மாலினி “விளையாடாதே. முட்டையிட்ட முதலை பெரும் சினம் கொண்டது. இவ்வுலகின் மேல் தீரா ஐயம் நிறைந்தது. மும்மடங்கு உண்ணும் பெரும் பசியும் உண்டு” என்றாள். “ஆம், அவை அனைத்துமே பெருங்கருணையின் வடிவங்களல்லவா?” என்றாள் சுபகை.
“அது ஏன் அழுகிறது?” என்றான் சுஜயன். “முதலைக் கண்ணீர்” என்றாள் சுபகை. “முதலைகள் அப்படித்தான் அழுது கொண்டிருக்கும்.” சுஜயன் அவள் தாடையைப்பற்றி “ஏன்?” என்று கேட்டான். “தெய்வங்கள் அவற்றுக்கு அவ்வாறு ஆணையிட்டுள்ளன. கரையில் பல்லியும் நீரில் மீனும் என அவை வாழும் இரட்டைவாழ்க்கையை எண்ணி கண்ணீர் வடிக்கின்றன.” சுஜயன் “ஏன்?” என்று கேட்ட பின்பு “அந்த முதலை நல்லது. அதை நான் வளர்ப்பேன்” என்றான். சுபகை “என் செல்லமே, துணிவு வந்துவிட்டதே” என்று அவனை முத்தமிட்டாள்.
மாலினி “செல்வோம்” என்று சொல்லி கிளம்ப சுபகை சுஜயனைத் தூக்கிச் சுழற்றி தன் தோளில் வைத்துக் கொண்டாள். அவன் அங்கிருந்து முதலையைப் பார்த்து கை சுட்டி “பெரிய முதலை. ஆனால் மிக நல்லது” என்றான். “இளவரசே, அர்ஜுனன் சந்தித்த ஐந்து முதலைகளைப் பற்றி தெரியுமா?” என்றாள் மாலினி. “முதலையா? ஐந்து முதலையா?” என்றான். “ஆம், ஐந்து முதலைகள்” என்றாள் மாலினி. கால்களை உதைத்து “என்னைத் தூக்கு… என்னைத் தூக்கு” என்று மாலினியிடம் சொன்னான் சுஜயன். “முதலையின் கதை சொல்! முதலையின் கதை” என்றான். “குடிலுக்குச் செல்வோம். நீ அமைதியாக பாலமுதை உண்டால் இக்கதையை சொல்வேன்” என்றாள் மாலினி.