ஜெ
தலித் ஒருவர் அராஜகமாக தன் குடும்பத்துப்பெண்களை தானே நிர்வாணமாக ஆக்கி தெருவில் அழிச்சாட்டியம் பண்ணும் வீடியோவின் ஒரு சிறுபகுதியை மட்டும் வெட்டிஎடுத்து அது போலீஸ் தலித் பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச்செல்லும் காட்சி என்று ‘சிலர்’ இணையத்தில் உலவவிட்டார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அந்தச் சிலர் ஆனந்தவிகடன் குழுமம் என்பதை ஏன் மழுப்பவேண்டும்? அவர்களின் இணையதளத்தில் கொட்டை எழுத்தில் தலித் பெண்களை போலீஸ் நிர்வாணமாக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சி’ என்று தலைப்பு அளிக்கப்பட்டு இந்த வீடியோத்துண்டும் அதன் செய்தியும் அப்படியேதானே உள்ளது?
ஆனந்த விகடன் குழுமம் சென்ற ஐந்தாறாண்டுக்களில் சென்றிருக்கும் அதலபாதாளம் மனம் நோகச்செய்வது. அனைத்து இந்தியவிரோத சக்திகளும் அங்கே முகாமடித்திருக்கின்றனர். இந்த காணொளியை ஒரு பத்திரிக்கையாளர் பத்துநிமிடத்தில் உண்மை என்ன என்று கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே தெரிந்தேதான் இதை சுழலவிட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வருத்தம்கூட தெரிவிக்கப்போவதில்லை. அவர்கள் இதேபோல எத்தனை பொய்யான, சமூகத்தைப்பிளவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். இலங்கைப்போரின்போது அவர்கள் வெளியிட்ட செய்திகளை போய் எடுத்துப்பாருங்கள். நம்பவே முடியாது, அந்த அளவுக்கு அப்பட்டமான பொய்கள். அருகிலே இருந்து பார்த்ததுபோல ஜம்பக்கற்பனைகள்.
விகடன் குழுமம் சாதியவாதத்திலும் இனவெறுப்பிலும் மூழ்கிக்கிடக்கிறது. கூடவே ஆபாசத்திலும் .அவர்கள் நடத்தும் டைம் பாஸ் என்ற பத்திரிக்கைதான் இதுவரை தமிழிலே அச்சானதிலேயே தரமற்ற பத்திரிக்கை. இதையெல்லாம் நீங்கள் இன்றுவரை ஒரு வார்த்தையும் எழுதியதில்லை.
அருண் ஞானசம்பந்தம்
அன்புள்ள அருண்,
நான் விகடனையோ அதன் இணையத்தையோ வாசிப்பதில்லை. அவர்களும் தங்களை ஒரு வணிகக் கேளிக்கை இதழ் என்று மட்டுமே நினைக்கிறார்கள். உங்களைப்போன்றவர்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டால் அது உங்கள் தவறு மட்டுமே
ஜெ