பகுதி மூன்று : முதல்நடம் – 9
துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன் குழலை சற்றே தலை சரித்து முன்னால் கொண்டு வந்து தோளில் போட்டுக்கொண்டு, கால்களை ஒடுக்கி உடல் ஒசித்து அமர்ந்து அவையை நோக்கி புன்னகைத்தாள். அந்த அவையில் அவள் மட்டுமே இருப்பதுபோல் விழிகள் அனைத்தும் அவளை நோக்கி நிலைத்திருந்தன.
சித்ராங்கதன் மட்டும் அவளை நோக்காதவன்போல, அவை நோக்கி விழி திருப்பி இருந்தான். ஃபால்குனை அந்த அவைக்கூடத்தை கூர்ந்து நோக்கினாள். மூங்கில் தூண்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து உருவாக்கிய சுவர் மூங்கில் பிளந்து பின்னியமைத்த தட்டியால் இணைக்கப்பட்டிருந்தது. வெளியே சுண்ணம் கலந்த களிமண்ணும் உள்ளே தேன் மெழுகும் பூசப்பட்டு மெருகேறியிருந்தது. வட்டச்சுவரில் இருபத்துநான்கு சிறு சாளரங்கள் இருந்தன. அவற்றினூடாக உள்ளே வந்த நீர்த்தழை மணம் கொண்ட ஏரிக்காற்று, சுழன்று மேலெழுந்து மூங்கில் குவைமுகட்டில் ஒலிகளைக் குவித்து ரீங்காரமாக்கி வழிந்து கடந்து சென்றது. சாளரங்கள் அனைத்திலும் சுருட்டி மேலே எழுப்பப்படத்தக்க வண்ண மூங்கில் தட்டிகளே திரைகளாக இருந்தன.
சித்ரபாணன் ஃபால்குனையை நோக்கி “இளையோளே, உன் குடி என்ன என்று அறிய விழைகிறேன்” என்றார். ஃபால்குனை தலைவணங்கி “நான் மலைமகள். காட்டில் கண்டெடுத்த என்னை சூதர்கள் வளர்த்தனர். பாட்டும் நடனமும் பயின்றவள் என்பதால் மலை வணிகர் குழு ஒன்று என்னை வாங்கியது. அவர்களிடமிருந்து என் விடுதலையை ஈட்டியது என் கலை. மலைகள் தோறும் அலைந்தேன். பனிமலைகளை கண்டேன். மலைப்பீதருடன் வாழ்ந்தேன். அவர்களுடன் நாக நாட்டிற்கும் அங்கிருந்து இம் மணிபூரகத்திற்கும் வந்தேன். மலைக்காற்றுக்கு வானமே வீடு என்பார்கள். வானாளும் காசியப பிரஜாபதியே அதன் குலத்தந்தை. எனவே நானும் காசியப குலத்தவள்” என்றாள்.
சித்ரபாணன் புன்னகையுடன் “நன்று பெண்ணே, நயம்பட உரைக்கக் கற்றிருக்கிறாய். உன்னை இங்கு வரவழைத்தது எங்கள் பட்டத்து இளவரசரின் விழைவுப்படி என்று அறிக! எங்கள் அரசையும் இந்நாட்டையும் பற்றி நீ என்ன அறிந்திருக்கிறாய் என்று அறிய விழைகிறேன். ஏனென்றால் எங்கள் எல்லைக்கு அப்பால் செல்லும் சூதர்கள் எவரும் இங்கு இல்லை. வெளியே இருந்து எவரையும் நாங்கள் உள்ளே விடுவதுமில்லை” என்றார். “ஆம். இறுகமூடப்பட்ட மாய மணிச்செப்பு இந்நாடு என்று அறிந்துள்ளேன்” என்றாள் ஃபால்குனை.
“நூற்றெட்டு தலைமுறைகளாக நாங்கள் காத்து வரும் இந்த எல்லை பேணலே எங்களை இன்னும் அழியாது இங்கு வாழவைப்பது. அத்துடன் இம்மாபெரும் நீர்அரணும் எல்லையென்றாகிக் காக்கும் அடர்காடும் என எங்கள் நெஞ்சிலும் கனவிலும் வாழும் மூதாதையர்கள் அருள்புரிந்துள்ளனர்” என்றார் சித்ரபாணன். “ஆம், அறிவேன்” என்றாள் ஃபால்குனை. “மலைநாடுகளிலும் பின்பு காமரூபத்திலும் இப்பால் நாகர்நாடுகளிலும் மணிபூரகத்தைப் பற்றி நிலவும் அச்சம் ஒன்றையே நான் அறிந்துள்ளேன். அணுகும் முன் எவரையும் கொல்லும் நிகரற்ற வஞ்சம் கொண்ட மக்கள் அன்றி பிற சொல் எதுவும் என் காதில் விழவில்லை” என்றாள்.
“அவ்வச்சமே எங்கள் படைக்கலன்” என்றார் சித்ரபாணன். “பாரதவர்ஷத்தின் நீள் அலைக் கூந்தல் என்று காமரூபத்திற்குக் கிழக்கே விரிந்து கிடக்கும் இப்பெரும் காட்டுவெளியை சொல்கின்றனர். இங்கு மானுடர் வாழும் செய்தியையே பாரதவர்ஷத்தின் தொல் முனிவர்கூட அறிந்திருக்கவில்லை. கின்னரரும் கிம்புருடரும் உலவும் காடு இது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு பறக்கும் குதிரைகளும் அனலுமிழும் நாகங்களும் தழல்பிடரி கொண்ட சிம்மங்களும் வாழ்கின்றன என்றும் பாரதவர்ஷத்தின் நிலப்பகுதியை விவரிக்கும் தொன்மையான நூலாகிய ஜம்புத்வீப மாகாத்மியம் சொல்கிறது.”
“இளையோளே, உண்மையில் விலங்குகள் தோன்றிய காலம் முதலே இங்கு மானுடர் வாழ்கிறார்கள். அவர்கள் ஆயிரத்தெட்டு பழங்குடிகள் என்பது எங்கள் கணக்கு. அவர்களை ஏழு பெருங்குலங்களாக பிரிப்பதுண்டு. மலைக்குகைகளில் வாழ்பவர்கள், மரங்களுக்குமேல் வாழ்பவர்கள், மிதக்கும் தீவுகளில் வாழ்பவர்கள், மண்ணில் குழிதோண்டி உள்ளே வாழ்பவர்கள், படகுகளிலேயே வாழ்பவர்கள், உச்சிமலைகளில் மட்டும் இருப்பவர்கள், சேற்றுவெளிமீது மூங்கில்கால்கள் நாட்டி இல்லமெழுப்பி வாழ்பவர்கள். அவர்கள் இன்றும்கூட அவ்வாழ்க்கையிலேயே நீடிக்கின்றனர்.”
“அன்று அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாது மட்கிய மரத்தின் பட்டைக்கு உள்ளேயே தங்கள் நகரங்களை அமைத்துக் கொள்ளும் சிதல்கள் போல வாழ்ந்தனர். பின்னர் பெற்று பெருகி நிலம் நிறைத்து எல்லைகளை எட்டியபோது ஒருவரையொருவர் எதிரிகள் என்று கண்டனர். ஒருவரை ஒருவர் தேடித்தேடி வேட்டையாடுவதே பன்நெடுங்காலமாக இங்கு மரபாக இருந்து வந்தது. ஒவ்வொரு குடிக்கும் பிற குடிகளனைவரும் அயலவரே. அயலவரோ விழி தொட்ட அக்கணமே கொன்று கடக்க வேண்டியவர்கள்.”
“குடிச்சமர் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த இப்பெருங்காட்டில் செடிகள் எங்கள் குருதியைக் கொண்டே செழித்தன என்பர். பிற குடியினரின் தலை கொய்தலே விளையாட்டானது. அவர்களின் குடிகளை எரித்து, ஊர்களை அழிப்பதே களியாட்டானது. கொன்றவர்களின் மண்டையோடுகளை சேர்த்து வைப்பதே குடில்மங்கலம். அவர்களின் எலும்புகளும் பற்களுமே எங்கள் குடிப்பெண்களின் அணிகலன்கள். கொன்ற அயலவர்களின் எண்ணிக்கையை குலப்பெருமையெனக் கொள்ளும் மக்கள் நாங்கள்” என்றார் சித்ரபாணன்.
“ஆயிரத்தெட்டு தொல்குடியும் தங்களுக்கென்று தனி மொழி கொண்டிருந்தனர். இரவுலாவிகளான மலைமக்கள் கோட்டான்களிடமிருந்தும் கூகைகளிடமிருந்தும் தங்கள் மொழியை பெற்றனர். மலையுச்சி மாந்தர் வரையாடுகளின் சொற்களை கற்று மொழியாக்கினர். சேற்றுமாந்தரோ தவளைகள்போல் பேசினர். நீர்மக்களின் மொழி காற்றில் அலையடிப்பது. குழிமக்களின் மொழி மந்தணம் மட்டுமே கொண்டது. மரங்களின் மேல் வாழ்ந்தவர்கள் குரங்குகளுடன் உரையாடுபவர்கள்.”
“ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலம் நாங்கள் ஒருவரோடொருவர் உரையாடியதே இல்லை. ஒவ்வொரு குலமும் பிறிதை மொழியற்றது என்றே எண்ணியது. இன்றும் அயலவர் என்பதற்கு எங்களிடமுள்ள சொல் அபாஷா என்பதே” என்றார் சித்ரபாணன். “நூற்றி எட்டு தலைமுறைக்கு முன் எனது முதுமூதாதை சித்ரகேசர் மூன்றுவயது சிறுவனாக இருந்தபோது காடுகளிலிருந்து எரிதழல்கள் போல எழுந்துவந்த சிவந்த நிறம் கொண்ட மொழியற்றவர்கள் கூக்குரலிட்டபடி வந்து அவர்களின் சிற்றூரை சூழ்ந்துகொண்டனர். சதுப்பு நிலத்தில் மூங்கில்கால்நட்டு கட்டப்பட்ட அவர்களின் குடில்களின் மீது எரியம்புகள் வந்து விழுந்தன. தீமழை போல அவை இறங்குவதை சித்ரகேசர் தன் குடில்முற்றத்தில் நின்று கண்டார்.
ஊர் எரியால் சூழப்பட்டது. கைகளில் நீளமான மூங்கில்களுடன் வந்த மொழியற்றவர்கள் அவற்றை ஊன்றி காற்றில் எழுந்து பறந்து அரணாக அமைந்திருந்த உளைச்சதுப்பு வெளியை கடந்து வந்திறங்கினர். அவ்விரைவிலேயே எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும் ஆண் பெண் முதியோர் குழவியர் என வேறுபாடில்லாமல் வெட்டிக்குவித்தனர். எங்கள் குலம் கன்று பேணி வளர்க்கவும் விதைநட்டு கதிர்கொள்ளவும் கற்றிருந்தது. இளையவளே, எதையேனும் ஆக்கத்தெரிந்தவர்களின் உள்ளம் அழிக்கும் கலையை வெறுக்கத் தொடங்குகிறது. எங்களுக்குள் மிகச்சிலரே போர்வீரர்கள். அவர்களைவிட பத்துமடங்கு எண்ணிக்கை கொண்டிருந்தனர் மொழியற்றவர்கள்.
“மரங்களின்மேல் வாழ்ந்த அந்த மொழியற்றவர்களை நாங்கள் பச்சோந்திகள் என்று அழைத்தோம். அவர்கள் தங்கள் உடலெங்கும் பச்சையும் மஞ்சள்வரிகளுமாக வண்ணம்பூசியிருப்பார்கள். முகங்களில் செந்நிறம். இலைகளுக்குள் அவர்கள் இருந்தால் தொட்டுவிடும் தொலைவை அடைந்தாலும் அவர்கள் நம் விழிகளுக்குப் படுவதில்லை. கிளைவிட்டு கிளைக்கு கால்களையும் கைகளையும் விரித்து அவர்கள் தாவும்போது வாலற்ற பச்சோந்திகளென்றே தெரிவர்” சித்ரபாணன் சொன்னார். “பச்சோந்திக்குலத்தால் எங்கள் குலம் முழுமையாக அழிக்கப்பட்டது. ஐந்து சிறுமியரும் எங்கள் மூதாதை சித்ரகேசரும் மட்டுமே உயிருடன் எஞ்சினர். சதுப்பில் பாய்ந்து மூழ்கி அங்கே நின்றிருந்த துளைநாணல்களை வாய்க்குள் வைத்து மூச்சுவிட்டபடி நாள் முழுக்க உள்ளே இருந்து அவர்கள் உயிர்தப்பினர்.”
எழுந்து நோக்கியபோது அவர்களின் ஊர் சாம்பல்குவையாக இருந்தது. குருதி உறைந்த சடலங்கள் கைவிரித்து மல்லாந்தும் மண்ணை அணைத்துக் கவிழ்ந்தும் கிடந்தன. அனைத்து ஆண்களின் தலைகளையும் வெட்டிக்கொண்டு சென்றிருந்தனர். குருதி விழுந்த மண் கருமைகொண்டிருந்தது. அந்தி எழுந்த வேளையில் அவ்வூரை இறுதியாக நோக்கியபின் அச்சிறுமியரில் மூத்தவளான சபரி சித்ரகேசரையும் பிறரையும் அழைத்துக்கொண்டு உள்காட்டுக்குள் விலகிச்சென்றாள். அங்கே நாணல்கள் மூடிய சதுப்புக்குள் தாழ்வான குடில் ஒன்றை அமைத்துக்கொண்டு அவர்கள் தங்கினார்கள். அந்த ஐந்து அன்னையரிலிருந்து எங்கள் குடி மீண்டும் முளைத்தெழுந்தது.
இளைஞராக ஆனபோது சித்ரகேசர் நிகரற்ற உடல்திறன் கொண்டவராக இருந்தார். தவளைகளிடமிருந்து தாவும் கலையை கற்றார். மீன்களைப் பிடித்துத் தின்று நாட்கணக்கில் நீருக்குள்ளும் சேற்றுக்குள்ளும் இருக்கும் கலையை அவர்கள் கற்றுத்தேர்ந்தபின் பிறர் விழிகளுக்கு முற்றிலும் தெரியாமலானார்கள். அவர்களின் குலம் பெருகியது. இரண்டு மோட்டெருமைகளை கைகளுக்கொன்றாக பற்றி அசையாது நிறுத்தும் தோள்வல்லமை கொண்டிருந்தார் சித்ரகேசர்.
சேற்றுக்கரைகளில் தவளை பிடிக்கவரும் நாகங்களை நாணல்களால் பொறிவைத்துப்பிடித்து அவற்றின் நச்சைப் பிழிந்தெடுத்து பதப்படுத்தும் கலையை அவரே உருவாக்கினார். நாணல்முனைகளில் அந்நச்சைத் தோய்த்து அவர் செலுத்திய அம்புகள் தொட்டகணமே மான்களை கொன்று சரித்தன. ஒலி கேட்ட இலக்கை நோக்கி ஒலி எழுந்த மறுகணமே இருகைகளாலும் கூர்நாணல்களை ஏவும் திறன் கொண்டிருந்த அவரை மண்ணில் எழுந்த தெய்வமென்றே அவரது குடி எண்ணியது.
அவர் அகவிழியில் எரிந்த தன் சிற்றூரும் அங்கே குருதியில் உறைந்துகிடந்த உடல்களும் எப்போதுமிருந்தன. தன் இருபத்தெட்டாவது வயதில் முதன்முறையாக சேற்றுநிலத்தில் எல்லையைக் கடந்து அப்பால் அடர்காட்டுக்குள் இருந்த பச்சோந்திகளின் சிற்றூருக்குள் நுழைந்தார். அவரை எதிர்த்து வந்த ஏழு வீரர்களை அவர் அறைந்தே கொன்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கைகளை முறுக்கி செயலிழக்கச்செய்து தூக்கிச்சரித்துவிட்டு அவர்களின் ஊர்மன்று நடுவே சென்று நின்றார்.
“அவர்களில் ஒருவனை முன்னரே குறிவைத்து சிறை பிடித்து தன் குடிலுக்குள் கட்டிப்போட்டு பச்சோந்தி மொழியை கற்றிருந்தார். தானும் அவர்களைப் போன்றவனே என்றார். அவர்களை கொல்ல விழையவில்லை என்றும் இணையவே விரும்புகிறேன் என்றும் சொன்னார்.” சித்ரபாணன் சொன்னார் “இளையவளே, பல்லாயிரம் ஆண்டு மலைவரலாற்றில் என் மூதாதை நாவில் அச்சொல் எழுந்தது ஒரு தெய்வ கணம். புரியாத ஒன்று விண்ணில் இருந்து வந்து நின்றதுபோல் அவர்கள் திகைத்தனர். அஞ்சி கூக்குரல் இட்டு ஓடி ஒளிந்துகொண்டனர்.”
தன் கையில் வில்லுடனும் தோளில் நாணலம்புகளுடனும் சீராக அடிவைத்து நடந்து சென்று அவர்கள் வழிபட்ட பன்னிரு அன்னையரின் மரச்சிலைகளுக்கு முன்னால் நின்றார். அத்தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் தலைவணங்கி, சொற்கடன் செலுத்தினார். இல்லங்களிலிருந்தும் புதர்களிலிருந்தும் மெல்ல தலை நீட்டி அவர் செய்வதென்ன என்று பச்சோந்தியினர் நோக்கினர். படைகொண்டு சென்று பிறிதொரு ஊருக்குள் நுழைகையில் அங்குள்ள தெய்வங்கள் அனைத்தையும் உடைத்து வீசுவதையே பழங்குடிகள் செய்வது வழக்கம். தங்கள் தெய்வத்தை வணங்கும் ஒரு அயலவனைக் கண்டு அவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டனர்.
அங்கே மூத்தவர் ஒருவர் விட்டுச்சென்ற குலச்சின்னம் பொறித்த கைக்கோலைத் தூக்கி “நான் உங்களவன். நாம் ஒன்றாவோம்” என்றார் சித்ரகேசர். மும்முறை அச்சொற்களை சொல்லிவிட்டு திரும்புகையில் “உங்கள் தெய்வங்களிடம் கேளுங்கள். அவை ஆணையிடட்டும்”என்றார். “உங்கள் தூதர் எங்கள் குடிக்கு வருக! அங்கு நாங்கள் உங்களை விரித்த கரத்துடன் வரவேற்போம். நாம் ஒன்றாவோம்” என்றபின் திரும்பி நடந்தார். அயலவன் ஒருவன் நம்பிக்கையுடன் தங்களுக்கு புறம் காட்டுவதை அவர்கள் நோக்கி நின்றார்கள்.
நடந்து காட்டுக்குள் நுழைந்து அவர் மறையும் வரை அக்குடியில் ஒருவரும் வெளிவரவில்லை. அவர் மறைந்தபின் அவருக்குப் பின்னால் பெருங்குரலில் அவர்கள் ஒரே சமயம் பேசத் தொடங்குவதை கேட்டார். அன்று முழுக்க தன் குடிலில் கண் துஞ்சாது அவர் காத்திருந்தார். இரவு சென்று மறைந்தது. மறுநாள் காலை ஒளி எழுந்தது. அவரைச் சூழ்ந்து நின்ற பெண்கள் “மூத்தவரே, நீங்கள் விழைவது ஒருபோதும் நிகழாது. நாம் தனித்தனியாக வாழ வேண்டும் என்பதே தெய்வங்களின் முடிவு. ஓர் உயிர் பிறிதொரு உயிரை அறியும். ஆனால் ஒரு உயிர்க்குலம் பிறிதொன்றுடன் இணையாது” என்றார்கள்.
“புழுக்கள் இணைவதில்லை இளையவளே. ஆனால் விண் வாழும் பறவைகளோ குலங்கள் கலந்து இணைந்தே வாழ்கின்றன” என்றார் எந்தை. அவர்கள் பெருமூச்சுவிட்டனர். “தெய்வங்களே, நாங்கள் வாழவேண்டுமா என முடிவெடுங்கள்” என்றாள் குலமூத்தவளாகிய கார்க்கி. “எங்கள் மைந்தர் இங்கு குருதிசிந்தாமல் வாழவேண்டும் அன்னையரே” என்றாள் மகவை மார்பில் அணைத்த ஓர் அன்னை.
காட்டில் ஒலிக்குழல்கள் சுடர் கொண்டபோது இலைகளை விலக்கி மூவர் வருவதை அவர்கள் கண்டனர். அச்சக்குரல் எழுப்பி அனைவரும் எழுந்து ஊர் மன்றில் கூடி நின்றனர். அஞ்சி உடல் விதிர்க்க ஒவ்வொரு ஓசைக்கும் பின்னால் பதுங்கி, பின்பு துணிந்து முன்னால் கால் எடுத்து வைத்து வந்த அம்மூவரும் மன்று முகப்பில் நின்று தங்கள் கைக்கோலைத் தூக்கி தங்கள் மொழியில் “நாங்கள் வந்துள்ளோம்” என்றனர். அச்சொற்களை எந்தை எங்கள் மொழியில் சொன்னதும் அவர்கள் உவகைக்கூச்சல் எழுப்பினர்.
எந்தை முன்னால் சென்று அம்மூவரில் முதியவனை தலை வணங்கி அவர்கள் மொழியில் வரவேற்று அழைத்து வந்து குடில்முகப்பில் போடப்பட்ட மரப்பீடத்தில் அமர்த்தி “இன்று இணைந்தோம். இனி ஒன்றாவதே நமது வழி” என்றார். அவர்கள் கொண்டுவந்திருந்த மலையுப்புத் துண்டு ஒன்றை அவருக்கு அளித்தனர். அவர் தன் இல்லத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை கொண்டுவந்து அவர்களுக்கு அளித்தார். பச்சோந்தியினர் தங்கள் கைகளை கற்கத்தியால் குருதியெழக் கிழித்து அக்குருதியை சித்ரகேசர் கைமேல் சொட்டினர். தன் கையைக் கிழித்த புண்ணில் அக்குருதியை கலக்கச்செய்தார்.
“அன்று தொடங்கியது மணிபுரியின் வரலாறு. பச்சோந்திகுலமும் நாங்களும் மண உறவு கொண்டோம். இருகுலங்களும் இணைந்ததும் வெல்லமுடியாதவை ஆயின. வென்றும் அளித்தும் ஒன்பது வருடங்களில் இங்கு வாழ்ந்த ஏழு குடிகளை எந்தை ஒருங்கிணைத்தார். ஏழு குடிகளுக்கும் பொதுவாக மைத்ரி என்னும் பெயரை சூட்டிக்கொண்டார்கள். இன்று எங்கள் குடி மைத்தி என்றும், நாங்கள் மைத்தியர் என்றும் அழைக்கப்படுகிறோம்” என்றார் சித்ரபாணன்.
“எங்கள் குடிகள் இணைந்து இவ்வரசை அமைத்தன. காடு திருத்தி கழனி சமைத்து அமுது விளைவிக்கத் தொடங்கினர். எங்கள் குடித்தெய்வங்களாக ஐந்து அன்னையரும் ஒற்றை மூதாதையும் அமைந்தனர். அத்தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்தனர். எங்கள் மண்ணில் கயிலை மலையாளும் அன்னை துர்க்கை மகளாகப் பிறந்தாள். எங்கள் அரண்மனை முகப்பில் அவள் கோயில் கொண்டாள்.”
“இளையோளே, அன்னை மணிபத்மையின் மண் இது. எனவே புராணங்கள் இதை மணிபுரி என்று அழைத்தன. பாரதவர்ஷத்தின நீள் குழலில் சூடிய அருமணி என்றனர் கவிஞர்கள். இத்திசையில் மணிபுரிக்கு நிகரான செல்வமும், பெருமையும் கொண்ட பிறிதொரு நாடு இல்லை. இது குன்றாப் பெருங்களஞ்சியம் என்று சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். எனவே ஒவ்வொரு நாளும் எங்கள் மேல் அவர்கள் படைகொண்டு இறங்குகிறார்கள். ஒரு கையில் வாள் இன்றி மறுகையில் செல்வம் நிலைக்காது. இரு கைகளிலும் செல்வமும் வாளும் இன்றேல் நெஞ்சில் அறம் நிறைப்பது அரிது என்று அறிந்தோம்.”
“ஆகவே இங்குள்ள ஒவ்வொருவரும் போர்க்கலை வல்லவர்களானோம். நூற்றெட்டு தலைமுறைகளாக கோல் கொண்டு இந்நகராண்ட மரபில் வந்தவர்கள் அங்கமர்களாகிய நாங்கள். என் பன்னிரு மனைவியரில் மைந்தர் என ஒருவரும் பிறக்கவில்லை. எனக்குப் பின் இந்த மண் முடியின்றி அழியும் என்ற ஐயம் எழுந்தபோது, அன்னை மணிபத்மையின் ஆலயத்தில் அருந்தவம் இயற்றி என் மைந்தனைப் பெற்றேன். நிகரற்ற வில் திறன் கொண்ட அவனால் மணிபுரி வெல்வதற்கரியதாயிற்று” என்றார் சித்ரபாணன்.
அரியணையிலிருந்து எழுந்து கைகூப்பி “இளையோளே, போரில் அவன் உயிர் உன்னால் காப்பாற்றப்பட்டது. நீ கற்ற வில்தொழில் அஸ்தினபுரியில் துரோணரால் மட்டுமே கற்பிக்கற்பாலது என என் மைந்தன் சொன்னான். உன் முன் இதோ மணிபுரி பணிந்து நிற்கிறது. இங்கு அமைந்து சில காலம் என் மைந்தனுக்கு ஆசிரியனாகி வில்தொழில் பயிற்றுவித்து வாழ்த்தி நீ விலக வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார் சித்ரபாணன்.
ஃபால்குனை “அரசாணையை வணங்குகிறேன். நான் அரசவைகள் எதிலும் அமைவதில்லை என நெறிகொண்டவள். ஆனால் இம்மண்ணில் அறம் திகழும் பொருட்டு தங்கள் ஆணையை ஏற்க சித்தமாக இருக்கிறேன்” என்றாள். சித்ராங்கதனை நோக்கி திரும்பிய சித்ரபாணன் “மைந்தா, உனது விழைவுப்படியே இதோ ஆசிரியை” என்றார்.
சித்ராங்கதன் எழுந்து தலைவணங்கினான். ஆனால் அவன் முகத்தில் உவகை இருக்கவில்லை. இறுகிய தாடையுடன் விழிகளை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “உங்கள் மாணவனாக அமைய நற்றவம் செய்துள்ளேன். என் கல்வி நிறைவுற வாழ்த்துக!” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றாள் ஃபால்குனை.
சித்ரபாணன் கைகாட்ட அவரது பேரமைச்சர் ஓடிச்சென்று ஏவலரை கைகாட்டி அழைத்தார். பெரிய தாலத்தில் செம்பட்டில் வைக்கப்பட்ட உடைவாளும் கங்கணமும் வந்தன. அவற்றை எடுத்து ஃபால்குனையிடம் அளித்தார். அவள் அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டாள். அவை எழுந்து வாழ்த்தொலி பெருக்கியது. மங்கலமுழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இசைத்து அமைந்தன.
அவை நிறைவுற்றபோது ஃபால்குனை புன்னகையுடன் எழுந்து தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு இடைநாழி நோக்கி நடந்தாள். மறுபக்கம் அரசர்களுக்குரிய வாயிலினூடாக சித்ராங்கதன் செல்வதைக் கண்டு அவள் புன்னகை மேலும் விரிந்தது. கைநீட்டி அவனை அவள் அருகழைத்தாள். அவன் சற்று திகைத்தபின் அருகே வந்தான்.
ஃபால்குனை “புண் எந்நிலையிலுள்ளது?” என்றாள். “நலம்கொண்டு வருகிறது” என்றான் சித்ராங்கதன். அவள் அவன் இடையில் கைவைத்து சுற்றியிருந்த மெய்ப்பையை விலக்கி அந்தக்கட்டை நோக்கினாள். அவன் உதடுகளை இறுக்கியபடி மறுபக்கம் நோக்கினான். “புண் குருதியுமிழ்வது முற்றாக நின்றிருக்கிறது” என்றாள். “ஆனால் ஆழமான புண். இதன் வடு என்றும் உடலில் இருக்கும்.”
“ஆம்” என்று சித்ராங்கதன் சொன்னான். பெருமூச்சுடன் “நான் தந்தையிடம் சற்று உரையாடவேண்டும்” என்றான். “நாளை படைக்கலச்சாலையில் பார்ப்போம்” என்றாள் ஃபால்குனை. அவன் “ஆணை” என்று தலைவணங்கியபின் திரும்பிச்சென்றான். அவன் கால்கள் தளர்வதும் வாயிலைக்கடக்கையில் நிலையை கையால் பற்றிக்கொண்டு காலெடுத்து வைப்பதும் தெரிந்தது.
ஃபால்குனை புன்னகையுடன் காவலர் தலைவனை நோக்கி “செல்வோம்” என்றாள். அவன் விழிபதறி விலகி “ஆம், ஆணை” என்றான். “என் படைக்கலப் பயிற்சியால் இளவரசர் முழு ஆண்மகனாவார் என்று எண்ணுகிறேன்” என்றாள் ஃபால்குனை. அமைச்சர் பதறும் குரலில் “ஆம், உண்மை” என்றார்.