நான் பள்ளிநாட்களில் வாசித்த தொடர்களில் ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கத்தில் குமுதத்தில் வெளிவந்த ‘பட்டாம் பூச்சி’ முக்கியமானது. அதற்கு ஜெ வரைந்த நிழல்வடிவ ஓவியங்களும் கணிப்பொறிவரைகலை இல்லாத அக்காலத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கின. ஒருசாகச நாவலாகவே நான் பட்டாம்பூச்சியை வாசித்தேன். அந்த சுயவரலாறு அடைந்த வெற்றிக்கும் அதுவே காரணம்
பின்னர் ஆங்கிலத்தில் அதன் மூலத்தை ஒரு ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன். அந்த சுயசரிதை பற்றிய மனச்சித்திரங்கள் மாறின. முத்ல் எண்ணம் அது ஒரு புனைவு என்பதே. அதில் உண்மையான வாழ்க்கைதான் பேசப்படுகிறது, ஆனால் தேர்ந்த புனைவெழுத்தாளனால் அது மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாழ்க்கைவரலாறு அந்த அளவுக்கு நுட்பமான தகவல்களும் உத்வேகமான கணங்களும் கொண்டதாக இருக்க முடியாது.
அது புனைவு கலந்தது என்று சொல்லும்போது நான் அதை கீழே இறக்கவில்லை, மாறாக மேலே கொண்டு செல்கிறேன். அதன் அனுபவத்தளம் புனைவின்மூலம் மேலும் செறிவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மானுடவாழ்க்கையின் சாராம்சத்தை நோக்கிச் செல்லும் ஒரு தீவிரம் அதில் கைகூடுகிறது. அது ஒரு வரலாறாக அல்லாமல் இலக்கியமாக, ஏன் பேரிலக்கியமாக, ஆவதன் பரிணாமம் அதுவே
ஹென்றி ஷாரியர் [ Henri Charrière] என்ற வெனுசுவேலா குடிமகன் 1969ல் எழுதி பிரான்ஸில் வெளியிட்ட சுயசரிதைதான் பட்டாம்பூச்சி. [Papillon]. இரவுவிடுதிகளில் மாலைகளை கழிக்கும் ஒரு இளைஞனாக இருந்த ஹென்றி ஷாரியர் தற்செயலாக ஒரு கொலைக்குற்றச்சாட்டில் சிக்குகிறான். ஜூரி முறை காரணமாக அவனை எளிதில் குற்றவாளி என தீர்ப்பளிக்க வைக்கிறார் அரசு வழக்கறிஞர். ஜூரிகளான குடும்பத்தலைவர்களுக்கு ஷாரியர் ஒரு சுகவாசி என்பதே கசப்பைக் கொடுக்கிறது, அதை சொல்லிச் சொல்லி அவனை அவர்கள் கண்ணில் கொலையாளியாக காட்டி விடுகிறார் வழக்கறிஞர்
அன்றைய வழக்கப்படி ஷாரியர் 1931ல் பிற கைதிகளுடன் கப்பலில் ஏற்றப்பட்டு தீவாந்தர சிறைத்தண்டனைக்காக லத்தீன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறான். பிரெஞ்சு கயானாவில் உள்ள ஆளற்ற தீவுகளில் உருவாக்கப்பட்ட சிறைகளில் முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆன ஒரு சமூகம் இருக்கிறது. அவர்களில் ஒருசாரார் கைதிகள் பிறர் காவலர்கள். வன்முறையும் வதையும் அன்றாட வாழ்க்கையாக ஆன ஒரு சூழல். அந்த சிறைத்தீவுக்கு பெயரே டெவில்ஸ் ஐலண்ட் என்பதுதான்.
தன்னை சிக்கவைத்தவர்களை பழிவாங்குவதற்காக சிறையில் இருந்து தப்பி திரும்பி பாரீஸ் வரவேண்டும் என்று உறுதி கொள்கிறான் ஷாரியர். கப்பலிலேயே அந்த உறுதியுடன்தான் ஏறுகிறான். ஆனால் தீவாந்தர சிறைத்தண்டனைக்குச் சென்ற எவரும் திரும்பி வருவதில்லை என்பதே உண்மை. அவர்களை கொண்டுசெல்லும்போது அதிகாரியும் அதைச் சொல்கிறார் ‘உங்களை பிரான்ஸுக்கு இனிமேல் தேவையில்லை. போய்த்தொலையுங்கள்’ என்று
கப்பலிலேயே தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான் ஷாரியர். அதன்பின்னர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒவ்வொரு கணமும் அவன் தப்பமுயன்றுகொண்டே இருக்கிறான். சென்றதுமே ஆஸ்பத்திரிக்குச் செல்ல ஏற்பாடுசெய்து, அங்கிருந்து பணம்கொடுத்து படகுகளை ஏற்பாடு செய்துகொண்டபின், காவலனைதாக்கிவிட்டு தப்பிச்செல்கிறான். படகை விற்றவன் ஒரு பாடாவதி படகை கொடுத்து ஏமாற்றிவிடுகிறான். முயற்சி தோற்கிறது. இன்னொருவன் உதவியுடன் புதிய படகை வாங்கி தப்பிச்செல்ல முயல்கிறான். பிடிபடுகிறான். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகிறான்.
ஆனால் மீண்டும் மீண்டும் பலமுறை புது தோழர்களைச் சந்தித்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான். இருமுறை தனிமைச்சிறை. தனிமைச்சிறை என்பது மரணத்தை முகத்தோடுமுகம் கண்டு கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு உக்கிரமான சித்திரவதை. மனம் ஒரு புற்றுநோய்க்கட்டியாக மாறும் நிலை. அதை அஞ்சாத கைதியே இல்லை. அதில் இருந்து அவனுடன் பிடிபட்ட கைதிகள் தப்புவதும் இல்லை. அவனோ அதில் இருந்து மீண்டதும் மீண்டும் தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான். தப்புவதற்கான எண்ணம் ஒருநாளும் அவனில் இருந்து விடுபடுவதில்லை
ஒரு சந்தர்ப்பம் நூலில் உண்டு.உண்மையாகவே தப்பும் முயற்சியில் இருக்கும் ஒரு கைதியை இன்னொரு முரட்டுக்கைதி கத்தியுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு இழுக்கிறான். அதை சிறையில் எவரும் மறுக்க முடியாது. யாரும் உதவிக்கும் செல்லக்கூடாது. இது ஒரு நடைமுறை விதி. அந்தக்கைதிக்கு ஆதரவாக ஷாரியர் கத்தியுடன் களமிறங்குகிறான். ‘ஒவ்வொரு கைதிக்கும் புனிதமான கடமையாக ஒன்றுதான் இருக்க முடியும். தப்பிச்செல்வது. நம்மில் சிலர் மெதுவாக இங்கேயே இருக்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அதுகூட மன்னிக்கப்படலாம். ஆனால் உண்மையிலேயே தப்பிச்செல்லும் முயற்சியில் இருக்கும் ஒருவனை ஆதரிக்காமல் அவனை அழிக்க நினைக்கிறோம். இதைவிட கேவலம் வேறு இல்லை. அந்த கைதிக்காக நான் சண்டைக்கு வருகிறேன்’ என்கிறான்
சண்டைக்கு அழைத்த முரட்டுக்கைதி கத்தியை வீசி விடுகிறான். அவன் தான் அஞ்சவில்லை என்று காட்டுவதற்காக வெறும் கையுடன் ஒரு சண்டையை நடத்துகிறான். அதன் பின் ‘நீ சொன்னதுதான் உண்மை. எப்படியோ நமது மனங்கள் இந்த அழுக்குக்குழியில் சுகம் கண்டுகொள்கின்றன’ என்கிறான். அன்று மதியத்துக்குள் முகாமில் வாழும் அத்தனை கைதிகளும் அதையே ஷாரியரிடம் வந்து சொல்கிறார்கள். அதுதான் ஷாரியரின் பிரகடனம். கைதிகளின் ஆன்மாவின் குரலும்கூட.
கடைசியில், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் கழித்து 1945ல் பிரெஞ்சு நாட்டுடன் சட்ட உறவு இல்லாத வெனுசுவேலா நாட்டுக்கு தப்பிச்செல்லும் ஷாரியர் அங்கே ஒரு சுதந்திரக் குடிமகனாக ஆகிறான். தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்கிறான்.உழைத்து செல்வந்தனாகிறான். அதன்பின் தன் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சில் எழுதி உலகப்புகழ்பெற்றான்.
நூலில் வாசக மனதை எழுச்சி கொள்ளச்செய்யும் பலபகுதிகள் உள்ளன. தூயநட்பும் அபாரமான மனிதாபிமானமும் வெளிப்படும் பல தருணங்கள் கொண்டது பாப்பில்யான். கடுமையான துயரங்கள் மானுடனுக்கு அமிலச்சோதனைபோல. அவனுடைய சாராம்சத்தில் உள்ள நல்லியல்புகளும் கெட்ட இயல்புகளும் ஒரேசமயம் உக்கிரமாக வெளிப்படுகின்றன. சர்வ சாதாரணமாக வார்டரை தாக்கும் ஷாரியரே ஒரு வார்டரின் குழந்தையைக் காப்பாற்ற சுறாமீன்கள் நீந்தும் கடலில் குதிக்கவும் தயாராகிறான். பலவேறு துணைக்கதைகள் வழியாக கைதிகளின் முகங்கள் நூலெங்கும் வந்துகொண்டே இருக்கின்றன
நூலில் வெளிப்படும் ஷாரியரின் பரிணாமம் மிக முக்கியமானது. அவன் தப்ப விரும்புவது பழிவாங்குவதற்காக மட்டுமே. மெல்லமெல்ல தப்பிச்செல்லுதல் என்பதே நோக்கமாக ஆகிறது. தப்பிச்சென்று செய்யவேண்டியது ஏதும் இல்லையென்றாலும். சுதந்திரத்தின் உபாசகனாக அவன் ஆகிறான். பழி வாங்கும் உணர்வு மறைகிறது. ’நான் மனிதன், ஆகவே சுதந்திரமானவன், ஒருபோதும் சிறையில் இருக்கமாட்டேன்’ – இந்த ஒரே வரிதான் ஷாரியரின் மந்திரம் எனலாம். ஆகவேதான் ஒரு மானுட சாசனம் என்று இந்நூல் கருதப்படுகிறது.
நூலின் இறுதியில் ஷாரியர் சென்று சேரும் இரு இடங்கள் முக்கியமானவை. ஒன்று அவனுக்கும் ஒரு எருமைக்குமான உறவு. அந்த எருமைகளை தன்னைப்போலவே சுதந்திரமான கௌரவமான உயிர்கள் என அவன் உணர்கிறான். அந்த எருமையை தன் தோழனாகவே அவன் ஏற்கிறான். இரண்டு, பிரெஞ்சு அரசால் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு தீவாந்தரச் சிறைக்கு அனுப்பப்பட்டு சலிக்காமல் நீதிக்காக போராடி மீண்ட ஜெனரல் டிரைஃபஸ் என்ற வீரருடன் அவன் தன்னை அடையாளம் காண்கிறான். அவர் அமர்ந்திருந்த அதே கடலோர பெஞ்சில் அவனும் அமர்ந்து கனவு காண்கிறான். ஒரு சுகவாசியான கைதி மானுடத்துக்கான புரட்சியாளனாக ஆகும் பரிணாமம் அது.
நாவலில் ஷாரியருடன் தப்பும் அனைவருமே எங்கோ ஒரு இடத்தில் தங்கள் விதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவன் ஏற்பதே இல்லை. நேரடி தண்டனை முடிந்து தீவுக்குள் சுற்றும் உரிமையும் வேளாண்மை செய்யும் வசதியும் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுள்ள சுதந்திரம் அளிக்கப்படும்போது பலர் அதற்குள் நிறைவடைகிறார்கள். ஷாரியர் அதிலிருந்தும் தப்பிச்செல்கிறான்.
நூலில் இந்த அம்சம் மிகவும் சிந்தனைக்குரியதாக எனக்கு தென்பட்டிருக்கிறது. ஷாரியர் ஒருமுறை தப்பி கோவாஜிரா என்ற சிவப்பிந்தியர் கிராமத்துக்குச் சென்றுவிடுகிறான். அங்கே அவனுக்கு இரு மனைவிகள் கிடைக்கிறார்கள். எளிய இனிய வாழ்க்கை. கடல், வெயில். நட்புகள்.சமூக உறவுகள். ஆனால் அங்கிருந்தும் அவன் தப்புகிறான். காரணம் அதுவும் ஒரு சிறைதான் என்பதே. அவனுக்கு உலகம் எத்தனை பெரியது என தெரியும், அதன்பின் அவன் ஒரு சிறு பழங்குடிக் கிராமத்தில் வசிக்கமுடியாது.
சமீபத்தில் இந்நூலின் திரைவடிவமான பாப்பிலான் என்ற திரைப்படத்தை பார்த்தேன். 1973 ல் வெளிவந்த இந்தப்படம் ஷாரியர் உயிருடன் இருக்கும்போதே அவரது பங்களிப்புடன் எடுக்கப்பட்டது. பிராங்க் சாஃப்னர் . [Franklin Schaffner] இயக்கியிருந்தார் ஸ்டீவ் மக்வீன் [Steve McQueen] ஷாரியராக நடித்திருந்தார் டால்டன் டிரம்போ [Dalton Trumbo] மற்றும் லாரன்ஸோ செம்பிள் Lorenzo Semple Jr.][ ஆகியோர் திரைக்கதை..

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது. படத்தின் தொடக்கக் காட்சியில் கைதிகள் வரிசையாக பாரீஸை விட்டு கப்பலுக்குக் கொண்டுசெல்லப்படும்போது அவர்களின் பூட்ஸ்களின் ஒலி அதிர அதிர அக்காட்சி நீண்டுகொண்டே செல்கிறது. அந்த விடைபெறலில் உள்ள கொடூரத்தை அற்புதமாக நிறுவியது அது.திரைக்கலையின் சாத்தியங்களைக் காட்டிய காட்சி என்று தோன்றியது.
மொழிக்கலைக்கும் காட்சிக்கலைக்கும் இடையேயான தூரத்தையும் இரண்டுக்கும் உள்ள சாத்தியங்களையும் இந்தப் படம் நினைவுறுத்தியது. நூலில் ஷாரியர் அந்த சிறைவாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் உணர நேர்ந்த அவமதிப்பையும் சிறுமையையும் பற்பல நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்வார். மீண்டும் மீண்டும் கைதிகளை நிர்வாணமாக ஆக்கி மந்தை மந்தையாக சுவரை நோக்கி நிற்கச்செய்தும், அமர்ந்து முக்கச்செய்தும் செய்யும் சோதனைகள் வழியாக எப்படி அவர்கள் தன்னை ஒரு கீழ்த்தர மிருகமாக உணரச்செய்தார்கள் என்பதைக் காட்டுகிறார். அதை உணர்ந்து ஆரம்பத்தில் அவர் அடையும் மனக்கொந்தளிப்பும் விடும் கண்ணீரும் மெல்லமெல்ல அது ஒரு வன்மமாக மாறுவதும் அந்நூலில் தெரியும். ஒருசந்தர்ப்பத்தில் நண்பனை அவமதிக்கும் ஒரு வார்டர் மீது கொதிக்கும் நீரை அள்ளி ஊற்றுகிறான். அதற்கான கடுமையான தண்டனையை அனுபவிக்கிறான்.
திரைப்படம் அந்த மன ஓட்டங்களைச் சொல்ல முடியாது. ஆனால் இதில் அங்கே சேற்றில் ஒரு முதலையை பிடிப்பதற்காக ஷாரியரும் நண்பனும் செய்யும் முயற்சி மிக விரிவாக காட்டப்படுகிறது, நூலில் இல்லாத காட்சி அது. அச்சித்தரிப்பின் வழியாக அந்த வாழ்க்கை, மனித மாண்பை இழந்து சேற்றுப்பன்றியென ஆகும் நிலை, மிக தீவிரமாக உணரச்செய்யபப்டுகிறது. அந்த உழல்தலுக்கு காவலாக துப்பாக்கி ஏந்திய காவலர்.
அதேபோல ஷாரியரின் தனிமைச்சிறைக்காட்சிகள். நூலில் அவர் அந்த தனிமையை எதிர்கொள்ளும் முறை மிக முக்கியமான உளச்சித்தரிப்பு. அறையை தன் உலகமாக உருவகித்துக்கொள்கிறான். அதை பெண்டுலம் போல குறுக்கும் மறுக்கும் நடந்து நடந்து, அந்த காலடிகளை எண்ணி, தன் காலத்தை உருவாக்கிக் கொள்கிறான். வெளியும் காலமும் உருவாகும்போது வாழ்க்கை அங்கும் உருவாகி விடுகிறது. அதன்மூலம் தனிமையை வெல்கிறான். ஒரு தனிமனிதனே சமூகமாக ஆவதுதான் அது. அவ்வாறுசெய்யாதவர்கள் மனப்பிறழ்வடைந்து சாகும்போது அவன் மீள்கிறான்.
சினிமாவில் அந்தச் சிறைக்காட்சி நம் கற்பனை உருவாக்கிய அதிர்ச்சியை அளிப்பதில்லை. ஆனால் மேலிருந்து காவலன் ‘கருணைகூர்ந்து’ கீழே உதிர்க்கும் சிகரெட்டை காலால் மிதித்து தேய்க்கும் கைதியின் சுயமரியாதையும், பூரானக்கூட பிடித்துத் தின்னும் அளவுக்கு அவன் கொள்ளும் கடும் பசியின் மனப்பிறழ்வும் காட்சி வடிவில் மேலும் உலுக்குகின்றன.
ஷாரியரின் தன்வரலாற்றை வேகமான காட்சிப்படுத்திய படத்தின் மூன்று தருணங்கள் முக்கியமானவை. தப்பி ஓடி தொழுநோயாளிகள் மட்டும் வாழும் தீவொன்றை அடையும் ஷாரியர் அவர்களிடம் உதவிகேட்கிறான். தொழுநோயாளி தன் வாயில் வைத்த சிகரெட் ஒன்றை எடுத்து நீட்டுகிறான். சற்றும் தயங்காமல் அதை தன்வாயில் வைத்து ஷாரியர் இழுக்கிறான். தொழுநோயாளி புன்னகை செய்கிறான். ‘என் நோய் தொற்றாது’ என்கிறான். அவன் எதிர்பார்த்தது சகோதரத்துவத்தை மட்டுமே. அனைத்து உதவிகளையும் செய்கிறான் அவன். அந்த நோயாளி ஒரு தொப்பியை நீட்ட அதில் அந்த தீவின் தொழுநோயாளிக் கைதிகள் தங்களிடமிருந்த பணத்தை போடுகிறார்கள். ஷாரியர் மானுட சகோதரத்துவத்தை உணரும் கணம் அது.
இது நூலில் உள்ள இடம். ஆனால் இந்த திரைப்படத்தின் உச்சம் என நான் நினைக்கும் காட்சி நூலில் இல்லாதது, நூலின் சாரமாக திரைக்கதையாளரால் எழுதப்பட்டது. தனிமைச்சிறையில்; ஒரு மனப்பேதலிப்பின் தருணத்தில் ஷாரியர் சுதந்திரம் மீதான நம்பிக்கையை சில கணங்களுக்கு இழக்கிறான். அப்போது ஒரு கனவுக்காட்சி, அல்லது உருவெளிக்காட்சி தெரிகிறது. ஒரு உயர்ந்த இடத்தில் பிரெஞ்சு நீதிபதியும் அரசு வழக்கறிஞர்களும் ஜூரிகளும் தோன்றுகிறார்கள். அவர்கள் கைநீட்டி குற்றம் சாட்டுகிறார்கள். ‘ ஹென்றி ஷாரியர், நீ குற்றவாளி’ திக்பிரமையுடன் அதை கேட்டு நிற்கிறான் ஷாரியர். அவர்கள் சொல்கிறர்கள் ‘நீ சுதந்திரத்துக்கான விழைவை இழந்து விட்டாய். அதில் சமரசம் செய்துகொண்டாய். ஆகவே நீ குற்றவாளி’ ஷாரியர் மனம் சோர்ந்து மெல்ல பின்னடைகிறான். ‘’ஆம் குற்றவாளி…நான் குற்றவாளி’’ என்று பின்னகர்ந்து இருளுக்குள் செல்கிறான். ஒரு ’ஷேக்ஸ்பீரியன்’ கற்பனை இந்தக் காட்சி. இந்த ஒரு காட்சியை எழுதியதன் வழியாக திரைக்கதையாசிரியர்கள் மூலத்தை எழுதிய ஹென்றி ஷாரியரை தாண்டிச்செல்கிறார்கள்.
திரைப்படத்தின் கடைசிக் காட்சியும் நூலின் சாரத்தில் இருந்து முளைத்த அபாரமான காட்சியாக எனக்குப் பட்டது. நூலிலேயே அந்தக் காட்சி மிகவிரிவாக உள்ளது. தான் தங்கியிருக்கும் செங்குத்தான கரைக்குக் கீழே உக்கிரமாக அலையடிக்கும் கடலில் பல அலைகளுக்கு ஒருமுறை ஒரு பேரலை வருகிறது என்றும் அதில் குதித்தால் அலையே ஆழ்கடலுக்குள் கொண்டு சென்றுவிடும் என்றும் ஷாரியர் கண்டுபிடிக்கிறான். கொப்பரைகளைச் சேர்த்துக் கட்டி தெப்பம்செய்து அதில் ஏறி தப்பி சென்று விடலாம் என்று திட்டமிடுகிறான். முதல் சிலமுறை அவன் போட்டுபபர்த்த கொப்பரைத்தெப்பங்களை அலை சிதறடிக்கிறது. அவனுடன் வருவதாகச் சொன்ன நண்பன் பின்வாங்கிவிடுகிறான். ஆனால் ஷாரியர் கடைசியில் அந்த பெரிய அலைமேல் ஏறி தப்பி விடுகிறான், அதுவே கடைசி விடுதலை.
சினிமாவில் ஆச்சரியமாக இக்காட்சி அற்புதமான குறியீடாக மாறியிருக்கிறது. விடுதலையின் முடிவிலாப் பெருவெளியாகிய கடல் ஷாரியரை சோதிக்கிறது. மீண்டும் மீண்டும் அவனை தோற்கடிக்கிறது. ஆனால் அவன் முயன்றுகொண்டே இருக்கிறான். கடைசியில் சுதந்திரதேவியின் வல்லமை மிக்க அந்தக் கரம் ஒன்று வந்து அவனை ஏந்திக்கொண்டு தனக்குள் எடுத்துச் செல்கிறது. கடலின் நீல விரிவில் தெப்பம் மீது படுத்துக்கொண்டு வான்வெளி நோக்கி அறைகூவிச்சிரிக்கும் ஷாரியரில் படம் முடிவடைகிறது.
இன்னும் கவித்துவமான விஷயம் ஷாரியரின் தப்புதல் முயற்சியின் தவிப்பும், திகைப்பும், வெற்றியின் களிப்பும், இறுதி நெகிழ்வும் எல்லாம் அவனுடன் தப்பாது கரையிலேயே நின்றுவிட்ட தோழனின் முகம் வழியாகச் சொல்லப்படுகிறது என்பது. அவனுடைய உடல் ஷாரியருடன் தப்ப முயலவில்லைதான். ஆனால் ஆத்மா சேர்ந்து தப்பத்தான் செய்தது. அது கைதிக்குள் எப்போதும் துடிக்கும் விடுதலைக்கான விழைவின் சாட்சியம். அந்த கடைசிக்காட்சியில் கண்ணிருடன் கரையில் நிற்பவர் மகத்தான நடிகர் . அந்த துளிக்கண்ணீர் ஒட்டுமொத்த படத்தையே விடுதலைபற்றிய ஒரு காட்சிக்காவியமாக ஆக்கிவிடுகிறது. சிறகற்று பறக்கமுடியாமலானாலும் பட்டாம்பூச்சியின் ஆன்மா சிறகடித்துக்கொண்டேதான் இருக்கும்.
[மறுபிரசுரம். முதற்பிரசுரம் 2010 ]