உயிர் எழுத்து நூறாவது இதழ்

1

சுதீர் செந்தில் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் உயிர் எழுத்து மாத இதழின் நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. வழக்கம்போல நேர்த்தியான வடிவமைப்புடன் அமைந்துள்ளது. இவ்விதழின் மையக்கரு எஸ்.வி.ராஜதுரைக்கும் உயிர் எழுத்துக்குமான உறவு. எஸ்.வி.ஆரின் அழகிய புகைப்படம் இதழின் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. எஸ்.வி.ஆரும் உயிர் எழுத்தும் என்ற தலைப்பில் சுதீர் செந்தில் எழுதிய உணர்ச்சிமிகுந்த கட்டுரை அவருக்கும் இதழுக்குமான உறவை விவரிக்கிறது.

எஸ்.வி.ஆர் இவ்விதழில் மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மாய யதார்த்தவாதத்தின் அரசியல்முகத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட மாயமும் மாந்த்ரீகமும், டிம்பக்டூ என்ற ஆப்ரிக்க திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை, பாஷா சிங் எழுதி தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தவிர்க்கப்பட்டவர்கள்- இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்’ [தமிழாக்கம்விஜய்சாய்] நூலைப்பற்றிய விரிவான மதிப்புரை ஆகியவை.

எஸ்.வி.ஆரின் சரளமான நடையில் அவரது அரசியல்நோக்குடன் எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். முப்பதாண்டுக்காலமாக எஸ்.வி.ராஜதுரை தொடர்ச்சியாக மேலைநாட்டு இடதுசாரி எழுத்துக்களை தமிழில் அறிமுகம் செய்துவருகிறார். அவ்வரிசையில் வரக்கூடியவை இக்கட்டுரைகள். டிம்பக்டூ விமர்சனஹ்தில் வரும் ஜான் ஹோவார்ட் கிரிஃபின் பற்றிய அறிமுகம் அதில் ஒன்று.

மாயயதார்த்தம் பற்றிய கட்டுரையில் எஸ்.வி.ஆர் அவரது அரசியலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். அவரது இடம் அது, எல்லையும் அதுவே. மாய யதார்த்தத்தின் முக்கியமான தேவையே அகவெளிப்பாடுதான். இலக்கியத்திற்கு புறவுலகம் எந்நிலையிலும் ஒரு குறியீட்டுத்தொகையே. புறவுலகை தர்க்கபுத்தி அல்லது நடைமுறைநோக்கு சந்திக்கும் தருணங்களைக் கொண்டு மட்டுமே எழுதும் கட்டாயம் உள்ள யதார்த்தவாத எழுத்துமுறை அக்குறியீட்டுவெளியின் பெரும்பகுதியை விட்டுவிடுகிறது.

மாறாக கனவுகளையும் இணைத்துக்கொண்டு புறவயமான பொருள்வெளியின் அனைத்துக் குறியீடுகளையும் தொட்டு எடுப்பதற்கான முயற்சியே மாயயதார்த்த எழுத்துமுறையை உருவாக்கியது. அதன் அரசியல் சூழலும் உள்ளடக்கமும் என்னவாக இருந்தாலும் அரைநூற்றாண்டுக்குப்பின் அவை முக்கியமிழந்துபோய் இன்று அவை முன்வைக்கும் மானுட அகச்சித்தரிப்பின் வல்லமையால்தான் நிலைகொள்கின்றன. இன்று அவற்றிலிருந்து அவை எழுதப்பட்ட காலத்தின் அரசியலைத் தோண்டி எடுப்பது மார்க்வஸின் நாவலில் ஒருவர் காந்தத்தைக் கொண்டு பொன் தேடி இரும்புக்கூடுகளை கண்டுபிடிப்பதுபோன்றதே.

எஸ்.வி.ஆர் அவரது அரசியல் அணுகுமுறையின் எல்லைக்குள் நின்றபடி எப்போதும் இலக்கியத்தின் சிறிய பகுதி ஒன்றையே தொடுகிறார். நாய்க்குட்டியை வாலைப்பிடித்துத் தூக்கும் குழந்தையை நோக்கும் பதற்றம் எனக்கு அவரது கட்டுரைகளிலிருந்து எப்போதும் எழுகிறது. அந்த அரசியல்வாசிப்புகள் கூட அவரது சொந்த வாசிப்பு என்பதைக்காட்டிலும் முன்னரே வாசிக்கப்பட்ட வழிகளில் சென்று மேலும் வாசிப்பது என்றே உள்ளன.

ஆயினும் அவரது இலக்கியக் கட்டுரைகள் எப்போதும் எனக்கு புதியதகவல்களை, புதியநோக்குகளை அளிப்பவையாகவே இருந்துள்ளன. உயிர் எழுத்து வெளியிட்ட அவரது பெரும்பாலான கட்டுரைகள் முக்கியமானவை. அவை இன்றைய போராடும் உலகத்தின் முன் வைக்கப்பட்ட ஆடிகள். ஆகவே ஆழ்ந்து பயிலத்தக்கவை.இவ்விதழின் கட்டுரைகள், குறிப்பாக மாயமும் மாந்த்ரீகமும் மிக முக்கியமான ஒன்று.

உயிர் எழுத்தில் வண்ணதாசன் எழுதிய சில முக்கியமான கதைகளைப்பற்றி தனியாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன்.இவ்விதழில் உள்ள ‘எது தெரிகிறதோ அது’ அவரது சிறந்த கதைகளில் ஒன்று.மானுட வாழ்க்கையின் வேட்கையை, அது தன்னை வெளிப்படுத்திக்கொள்வதிலுள்ள நுட்பமான பாவனைகளைத்தான் அவர் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். ஒவ்வொருமுறையும் சொல்லப்படாத ஒன்று புதிதாக நிகழ்ந்துவிடுவதைத்தான் அவரது கலையின் வெற்றி என்று சொல்லவேண்டும்

மற்றபடி தமிழ்ச்சிற்றிதழ்களின் வழக்கமான மேலோட்டமான அரசியல் கட்டுரைகள். கோபக்கொப்பளிப்புகள். முற்போக்குத் ,தமிழ்த்தேசிய, பெரியாரியக் குழம்பல்கள்.

இன்றைய சூழலில் ஓர் அச்சிதழ் பெரும்பாலும் தன் தரத்தையும் தரப்பையும் பேணியபடி நூறு இதழ்களைக் கடந்து வந்திருப்பதை ஒரு சாதனையென்றே கொள்ளவேண்டும். சுதீர் செந்தில் ஒரு தனிமனிதராக இதைச் செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

உயிர் எழுத்து மாத இதழ் தொடக்கம்

உயிர் எழுத்து விழா

உயிர் எழுத்து ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23
அடுத்த கட்டுரைமாட்டிறைச்சி, கள், காந்தி-முடிவாக…