அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய “விளையாடல் ” என்ற பதிவைப் படித்தேன். அஜய்குமாரின் அந்தப் பால்வடியும் முகமும், உங்கள் விவரணையும் கண்ணில் நீர் வரவழைத்து விட்டன. அந்தக் கோயிலும், வயல்வெளிகளுக்குள் புதைந்து கிடக்கும் நம் வ்ரலாற்றுச் சின்னமும், அதைப் பராமரிக்கும் பதினான்கு வயது சிறுவனும் கண்ணிலேயே நிற்கிறார்கள். நம் சமூகத்தில் ஒரு பிரிவினர், மற்ற பிரிவினரை ஜீவனத்துக்காகச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோருடைய ஜீவனுமுமே இப்படித்தான் என்றாலும், சிலர் வாழ்க்கை இப்படி அப்பட்டமாகத் தெரிந்துவிடுவதாலேயே பல சமயங்களில் அவர்கள் மேல் நமக்குக் கீழான எண்ணமும் ஏற்பட்டு விடுகிறது.
கிட்டத்தட்ட இதே உணர்வை, இந்திய இசைக்கருவிகளை வடிவமைக்கும் கலைஞர்களைக் குறித்த கட்டுரையொன்றில் சேதுபதி அருணாசலம் எழுதிப் படித்தேன்.
http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_2332.html
இணையத்தின் மிகப்பெரிய ஆறுதல் பல குப்பைகளுக்கு நடுவில் அரிதாக இப்படி சில நல்ல கட்டுரைகளையும், விஷயங்களையும் காட்டித் தருவதுதான்.
அன்புடன்,
ஸ்வேதா
அன்புள்ள ஸ்வேதா,
நன்றி. பயணம் முழுக்க வசந்தகுமார் ஆட்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்– அவர் அசைட் இதழில் புகைபப்ட நிபுணராகவும் நிருபராகவும் இருந்தவர். அப்போது ஏன் அது என்று புரியவில்லை. ஊருக்கு வந்தபின் அந்த முகங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்கின்றன. அவற்றின் பிராந்தியத்தன்மை, உணர்ச்சி வெளிப்பாடு… நாங்கள் சென்ற நிலமே கண்கள் கொன்டு எங்களை பார்ப்பதுபோல தோன்றியது. அதில் ஒரு கதைதான் அஜய்குமார்
ஜெ
****
அன்புள்ள திரு.ஜெயமோகன்,
உங்களுடைய “விளையாடல்” என்ற கட்டுரையைப் படித்தேன். மிக நல்ல கட்டுரை.
“எல்லாரும் வயல் வெளியையே சொன்னார்கள். வழிதவறி விட்டது என்று பட்டது. சாரல் மழையில் நனைந்த கரும்புவயல்கள். சில இடங்களில் பசுமை அலையடித்த சோளவயல்கள். பல கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கண்ணில் படவில்லை. பின்னர் பசுமையின் அலைகளுக்கு அப்பால் கடலில் கப்பலின் முகடு அலைபாய்ந்து தெரிவது போல ஒரு புராதன ஆலயத்தின் கோபுரம் தெரிந்தது.”அதோ”என்றார் செந்தில்.”
படித்துவிட்டு எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இந்த வரிகளுக்கு உகந்த கோயில் ஒன்று நம் கும்பகோணம் மாவட்டத்திலும் இருக்கிறது. திருவிசைநல்லூர் என்ற கிராமத்தின் பின் பகுதியில் ஒரு பரந்த வயல்வெளியினூடாக இரண்டு கி.மீ பயணம் செய்தால் அந்த வழியின் கடைசிப்புள்ளியாக ‘கற்கடகேஸ்வரர் கோயில்’ இருக்கிறது. இந்த கிராமத்துக்கு திருந்துதேவன்குடி என்று பெயர். ஒவ்வொருமுறை கும்பகோணம் செல்லும்போதும் இப்பகுதிக்குப் போக நான் தவறுவதேயில்லை.
சென்ற மார்ச் மாதம் கோடை காலத்திலும் தமிழ்நாட்டில் நல்ல மழை. என் நண்பனை அழைத்துக்கொண்டு சோழர் கோயில்களைப் புகைப்படமெடுக்கலாமென்று பெங்களூரிலிருந்து கிளம்பி கும்பகோணம் வந்திருந்தேன். ஒரு மதிய வேளை கும்பகோணத்திலிருந்து இந்த கிராமத்துக்கு வந்தோம். நன்றாக இருட்டிய பின்பே கும்பகோணம் திரும்பினோம்.
இலேசான தூறலுடன், அந்தப் பச்சை வயல்வெளியில், பறவைகளையும், சிறு, சிறு பூச்சிகளையும், நெளிந்து மறையும் பாம்புகளையும் கண்டு ரசிக்க முடிந்தது மிக அலாதியான அனுபவம். புகைப்பட மும்முரத்தில் நான் கேமராவுடன் வெகுதூரம் தனியே சென்றுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்துதான் நண்பனைத் தனியே விட்டுவிட்டு வந்துவிட்டோமே, அவனுக்குத் தமிழ் வேறு தெரியாதே என்று திரும்பி அவனைத் தேடிப் போனேன்.
அவன் தனியாக ஒரு சிறு பாலத்தின் கைப்பிடிச்சுவரில் அமர்ந்து ஓடையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்னடா, போரடிக்கிறதா?” என்றேன்.
“இல்லை. ஒவ்வொரு முறை நான் பைக்கில் வெகுதூரப் பயணம் மேற்கொள்ளும் போதும் எனக்கு மக்களைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது, ஏதோ வெறுப்பு. அவர்களும் என்னை ஏதோ வேற்று கிரக வாசிகள் போல் பார்ப்பார்கள். ஆனால் இந்த இடம் வெகு அமைதியாக, இன்னவென்று புரியாத சந்தோஷத்தை மனதில் ஏற்படுத்துகிறது. இப்போது கூட என்னைக் கடந்து இரண்டு பேர் போனார்கள். ஆனால் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கையில் நான் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். என்னை இங்கே அழைத்து வந்ததற்கு நன்றி” என்றான்.
அதன்பின் இன்னுமொருமுறை நாங்கள் வயல்வெளிக்குள் சுற்றப்போனோம். இறுதியில் அந்தக்கோயில் அர்ச்சகச் சிறுவனே எங்களைத் தேடிக்கொண்டு “கோயிலைப் பூட்டணும். நீங்க சீக்கிரம் வந்து சாமிய சேவிச்சுக்குங்கோ” என்று கூப்பிடவேண்டியதாகிவிட்டது. மிகவும் இருட்டி விட்டால் வயல்வெளிகளுக்குள் நடந்து செல்வது அவ்வளவு பாதுகாப்பான விஷயம் இல்லையாம்.
அந்த வயல்வெளிப் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்:
http://www.flickr.com/photos/sethuarun/sets/72157604403646480/
அப்பயணத்தில் எடுத்த பிற புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்:
http://www.flickr.com/photos/sethuarun/sets/72157604270389574/
திருந்துதேவன்குடி கோயிலிலும் ஒரு சிறுவன்தான் பூசாரியாக இருந்தான். அவன் அப்பாவும் அந்தக்கோயிலில் பணியாற்றினாலும், அன்று அவன் மட்டும்தான் கோயிலில் இருந்தான்.
உங்கள் பயணத்துக்கும் என் பயணத்துக்கும் ஒற்றுமை இத்தோடு நின்றுவிடவில்லை. நான் அன்றிரவு கும்பகோணத்தில் ஒரு இசைக்கருவிகள் பழுது பார்க்கும் கலைஞரைக் கண்டு பேசியிருந்தேன். இக்கட்டுரையைப் படித்தால் அந்த ஒற்றுமை என்னவென்று புரியும்.(இக்கட்டுரையை சிறந்த கட்டுரையாகத் தேர்ந்தெடுத்த இட்லிவடைக்கு என் நன்றிகளை இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்).
http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_2332.html
நீங்கள் காசு தரவில்லை. ஃபோட்டோ எடுத்திருக்கிறீர்கள். நான் காசு தந்தேன். ஃபோட்டோ எடுக்கவில்லை.
அன்புடன்,
சேதுபதி
அன்புள்ள சேதுபதி
இந்தியா சென்றகாலம் விழுந்து உடைந்து சிதறிய துணுக்குகளின் பெரும் மூட்டை என்று நித்யா சிலசமயம் சொல்வதுண்டு.எங்கெங்கோ இந்தியாவின் பண்பாட்டுக்கூறுகள் பரவிக்கிடக்கின்றன. நம் ஊரின் நமது பண்பாட்டின் மறு நுனியை நாம் அஸ்ஸாமின், அருருணாசலப்பிரதேசத்தின் ஏதோ ஒரு குக்குராமத்தில் காண முடியும். ஆகவேதான் இந்திய தரிசனம் எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் இன்றியமையாதது என்று எனக்குப் படுகிறது. அந்த தரிசனம் கிடைத்த ஒருவன் இந்நாட்டை ஒன்றாகவே காண முடியும். இதை உடைக்க நினைக்கும் சுயநல- லாப- ஐந்தாமப்டை அரசியல் அவனுக்கு ஒரு போதும் ஏற்கக் கூடியதாக இருக்காது. வைக்கம் முகமது பஷீரானாலும் சரி சிவராம காரந்த் ஆனாலும் சரி. துரதிருஷ்டவசமாக நமக்கு தமிழில் அலைந்து திரிந்த எழுத்தாளர்கள் இல்லை. குடும்ப எழுத்தாளர்கள்தான் உள்ளனர்
ஜெ
ஐயா தெய்வமே,
கொஞ்சம் காலைக் காட்டுங்கள். என் மனதிலிருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். இந்தியாவில் – இந்தியா முழுதும் இணைக்கும் பயண எழுத்தும், பயண எழுத்து வாயிலான புனைகதை இலக்கியமும் வெளிவரவேண்டும். ராமாயணத்தை அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைப்படைப்பாகத்தான் நான் பார்க்கிறேன். சீனாவில் இப்படியொரு புத்தகத்தை, பாகன் வழிபாடுகளின் கூறுகளை வெளிக்கொணரும் புத்தகத்தை எழுதப்போய் Gao Xingjian என்ற எழுத்தாளரை நாட்டை விட்டே தூக்கியெறிந்தது மாவோவின் புரட்சியரசு.
ஆனால் ஐ.டி தொழிற்புரட்சி மக்களை இங்கும், அங்குமாக இடம்பெயர்த்திருக்கிறது. பொதுவாக இடம்பெயரும் மக்கள் புதிய இடத்தை சபித்தபடியே இருப்பார்கள். போகப்போக அமைதியாக நிலைபெற்றும் விடுகிறார்கள். முன்புபோலில்லாமல் பயணம் எளிதான ஒன்றாகவுமாகி விட்டது. கொஞ்ச கொஞ்சமாக நிலைமை மாறுமென்று நினைக்கிறேன்.
**
அன்புடன்,
சேதுபதி
சாயா ஸோமெஸ்வர் —
நீங்கள் குறிப்பிட்டது போல், தத்துவ எண்ணங்களை எழுப்பும் சொற்கள். பொருளும் கூட.
கோவில்களை பற்றியும் ஒரு சிந்தனை எழுந்தது. புகைப்படம் (கருப்பு வெள்ளையோ / கலரோ ) நிஜத்தின் பிரதிபலிப்பை பிடிக்க ஒரு உபகரணம். முப்பரிணாம தொழில் நுட்பங்களும் மிக அருகே உள்ளன.
எனினும், மன பிம்பங்களை, சமூக தொடர்பியத்தினுள் இணைத்து, மிக எளிய தொழில் நுட்பத்துடன், மிக அரிய கலை வெளிப்பாட்டுடன் (நிகழ்கால எதிர்கால) சமூகங்கள் பயனுற நம் கோவில்கள் அமைந்திருப்பது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
பரன் என்கிற ஒற்றை புள்ளி நோக்கில் (singularity point) மற்றவை எல்லாம் நிழலே.
மற்றவை எல்லாம் நிஜம் எனில், ஒற்றைப் புள்ளி நிழலோ?
எளிமைபடுத்தப் பட்ட லாஜிக்குக்கு மன்னிக்கவும்.
நிஜத்தையும் நிழலையும் அருகருகே வைத்தால், தத்துவங்கள் புரிவது போன்ற நிழல்
(என்றால் நிஜமும் அருகே தான் இருக்க வேண்டுமோ?)
உங்களது கட்டுரைகள், என் எண்ணங்களிநூடாக தோன்றிய கவிதை (?)
ஒளி ஒற்றை பரிமாணமாக
நிழல் இரட்டை – பொருள் முப்பரிமாணம்
ஒளியில் பொருளும், நிழலும்
தத்துவம் வியாபிக்கும்.
மண்ணில் கால் புதைத்து
ஒளியில் உயிரும் உணவும்
வளியில் ஸ்வதந்திரமும் விஸ்தரிக்கும்
தாவரங்களின் நிழல்
என்பிலதனை காக்கும்
காலையிலும், மாலையிலும்
காலத்தே சுழலும்
நிழல் தேடும் இலக்கு எது?
அன்புடன் முரளி
M.Murali
Technology Consultant
***
அன்பு ஜெ
விஷ்ணுபுரத்தில் ஒரு கதாபாத்திரம் உண்டு. ஒரு பௌத்த ஸ்தூபியில் அது வாழும். பறவைகள் கொன்டுவந்துபோடும் தானியங்களைச் சாப்பிட்டு மழைநீரை குடித்து அங்கேயே இருக்கும். ‘எந்த மனிதனின் வாழ்க்கையும் என்னைவிட மேலும் பொருள் கொன்டதுமல்ல, என்னைவிட பொருள் குறைந்ததும் அல்ல ‘என்று அவர் சொல்வார். அந்த வரிகளை நான் நிறையவே ச்சிந்தனை செய்திருக்கிறேன். அஜய்குமாரைப்பற்றி படித்தபோது அதுதான் நினைவுக்கு வந்கது. அருமையான கட்டுரை
சிவம்
**
அன்புள்ள ஜெ,
விளையாடல் ஒரு நல்ல கட்டுரை. அனுபவக்குறிப்புக்கே ஒரு அற்புதமான மனம் தொடும் உருக்கம் உண்டு இல்லையா? அஜய்குமாருக்கு ஒரு சிறுதொகை அனுப்பி சாயாசோமேஸ்வருக்கு விளக்கு போடச் சொலப்போகிறேன்
எம்.கெ.சுகுமார்
சென்னை
அன்புள்ள சுகுமார்
நல்ல விஷயம், வாழ்த்துக்கள். சாயா சோமேஸ்வர் தோன்றுவதற்கு விளக்கு தேவைதானே
ஜெ