விஷ்ணுபுரம்-ஒரு மகத்தான கனவு

.1

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோஹன் அவர்களுக்கு,

எனது கடிதத்தில் கொஞ்சம் தர்க்கரீதியான ஒழுங்கு தப்பியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். மனதில் ஓடும் பிரவாகமான எண்ணங்களை வடிக்கத் தெரியாததே காரணம். (விஷ்ணுபுரத்துக்கு நேர்கோட்டு ஒழுங்கு தேவை இல்லை என்பது ஒரு ஆறுதல்.)

பதினெட்டு வருடங்களாகக் காத்திருந்த விஷ்ணுபுர அனுபவம் கிடைத்துவிட்டது. முதலில் நான் சொல்ல விரும்புவது தங்களுடைய உழைப்புபற்றி. அதைப் பார்த்து வியப்பு, பிரமிப்பு ஏதாவது ஏற்படுகிறது என்று சொன்னால் மிகக் குறைவு. தங்கள் உழைப்பு அச்சமூட்டுகிறது. நினைத்தாலே களைப்பூட்டுகிறது. எண்ணூற்று சொச்சம் பக்கங்கள் வெறும் வணிக நாவல் எழுதுவதே என்போன்ற பாமரர்களுக்குக் கற்பனை செய்ய இயலாத கடினம். அளவு, கருத்து, கனம், கதை சொல்லும் முறை எல்லாவற்றிலும் சிறந்த இம்மாதிரி ஒரு மகத்தான படைப்பை உருவாக்குவதென்பது…… வார்த்தைகள் வரவில்லை.

பாரதத்தின் பாரம்பரியமான காவிய முறை, தத்துவ தரிசனங்கள், யானை, குதிரை சாஸ்திரங்கள், யோகம், சங்கீதம் என்று இந்த நூல் தொடாதது எதுவுமே இல்லை.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் வாசிப்பு அனுபவத்தை வர்ணிக்க முயன்றால் நினைவுக்கு வருவது காட்டின் இருண்மை, படமெடுத்தாடும் நாகப்பாம்பு, எரிதழல், குழி பறிக்கும் வெள்ளம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன் பயங்கரமான விஷயங்களே உவமையாக வருகின்றனவென்று யோசித்தேன். மனித மனத்தை அதிகம் கவர்வது சாத்வீகத்தைவிட பயங்கரமே. யோசித்துப் பார்த்தால் மிருகநயனி என்ற தாவரம் வேறு எதுவுமல்ல, விஷ்ணுபுரம் நாவலேதான். இதன் அழகில் தொலைந்து காலப்புரட்டலால் உறிஞ்சப்பட்டு இதற்குள் கரைந்துபோய்விடுவேனோ என்று பல முறை பயந்தேன்.

தங்கள் கதை சொல்லும் பாங்கில் என்னை மிகவும் கவர்ந்த இடம்: சித்தனும் சிறுவனும் கிருஷ்ணபட்சிப் பரீட்சையின் முடிவைக் காண்பது. வாதங்களின் போக்கை விரிவாக விளக்கியுள்ள நீங்கள் அதன் முடிவை நேரடியாகக் கூறாமல் விட்டு சித்தனும் சிறுவனும் கோவிலுக்கு அடியிலுள்ள இருண்ட குளக்கரையில் அவை நிகழ்வுகளைத் தலைகீழ் பிம்பங்களாகக் காணும் இடம் வெகு அழகும் கவித்துவக் கவர்ச்சியும் நிரம்பியது.

நாவல் முழுக்க நீங்கள் நிரம்பியிருந்து பல்வேறு மத தரிசனங்கள் பற்றி எழுதியிருந்தாலும் எது பற்றியும் தீர்ப்பு சொல்லாமல் விலகியிருக்கும் உங்களது சாமர்த்தியம் அடுத்த வியப்பு. எப்படி உங்களைப்போய் இந்துத்துவர் பொந்துத்துவர் என்று விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை.

தமிழுக்கு நீங்கள் செய்துள்ள பணி, நாவல் உலகுக்குத் தங்களின் பங்களிப்பு மகத்தானது என்று சொல்வதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தைகளே. 16 வருஷங்களுக்கு முன்னால் கல்கியில் வாரம் தவறாமல் இந்த நூல் பற்றிய சர்ச்சைகள் விவாதங்கள் வெளிவந்த வண்ணமிருந்தன. என்ன இவ்வளவு கவரேஜ் என்று வியந்ததுண்டு. நாவலைப் படித்தபின் பார்த்தால் இதற்குக் கிடைத்த அங்கீகாரம் வெகு சொற்பம் என்று புரிகிறது. தமிழ்ச் சூழலை நினைத்தால் பதற்றமே மேலிடுகிறது. இப்படி ஒரு படைப்பையும் படைத்தவரையும் படித்துவிட்டோ / படிக்காமலோ விமர்சிப்பவர்களும் இருக்கிறார்களே என்ற அதிர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை.

கல்கியில் வாராவாரம் வந்த விமர்சனங்கள், செய்திகள் படித்துவிட்டு மிகுந்த ஆர்வம் இருந்தபோதும் 18 வருடங்களாக படிக்காமல் கடத்தி வந்ததன் காரணம் தயக்கம். தயக்கத்தின் காரணம் இது பின் நவீனத்துவ நூல் என்பதே. பின் நவீனத்துவம் என்றால் அவ்வளவு ஒவ்வாமை எனக்கு. மிக சமீப காலமாகத்தான் பின் நவீனத்துவத்தை அறிந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இறங்கினேன். பிரபலமாகப் பரிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள் சிலவற்றைப் படித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

பெரும்பாலும் எல்லா பின் நவீனத்துவப் படைப்புகளிலும் படைப்பாளியின் புத்திசாலித்தனம், அகங்காரமே வெளிப்படுகிறது. அதன் சிறப்பம்சமாகக் கூறப்படும் வாசகனின் பங்கேற்பு நிகழாமல், உணர்வு ரீதியாகப் படைப்பை அணுக முடியாமல் அது தடுத்துவிடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரே விதிவிலக்கு உங்கள் படைப்புகள் மட்டுமே. ‘ரப்பர்’ மற்றும் உங்கள் குறுநாவல் தொகுப்புகள் படித்தேன். (இப்போது அவற்றை மீண்டும் படிக்கத் தோன்றுகிறது, விஷ்ணுபுர கர்த்தாவின் ஆக்கங்கள் என்ற முறையில்) உங்கள் படைப்புகளில் நீங்கள் துருத்திக்கொண்டு நிற்பதில்லை. வாசகருடன் சேர்ந்து பங்கேற்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.

ரப்பரும் குறுநாவல்களும் படைப்புகள். ஆனால் விஷ்ணுபுரம் வெறும் இலக்கியப் படைப்பல்ல. இதைப் படித்தபின்புதான் பின் நவீனத்துவம் மற்றும் மாய யதார்த்தவாதம் பற்றி வழுக்கிச் செல்வது போல் மனத்திறப்புகள் உண்டாயின. பின் நவீனத்துவம் பற்றி இது வரை இருந்த ஒவ்வாமைக்கு முந்தைய தவறான அறிமுகங்களே காரணம் என்று புரிந்தது. என் போல் பின் நவீனத்துவம் என்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் பார்வையற்றவர்கள் யானையைப் பார்த்ததுபோல் தடவிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை ஒரு விளக்கக் கையேடாகத் தரலாம். மாய யதார்த்தவாதத்தின் அத்தனை சாத்தியங்களையும் குதிரைப் பாய்ச்சல்போல் – மின்னல் போல் மினுக்கிக்கொண்டு திறந்து காட்டுகிறது இந்தப் படைப்பு. அந்தத் திறப்புகள் தரும் சாகசமான பரவசத்தை வர்ணிக்க வேண்டுமானால் முதல்முதலாகக் காதல்வயப்படும் அனுபவத்துடன்தான் ஒப்பிட முடியும்.

எனது பதினாலாவது வயதில் சிவகாமியின் சபதம் படித்தேன். ஒரு மாதிரி போதை உணர்வு ஏற்பட்டது. பல வருடங்கள் கழித்து அதை நினைக்கும்போது சிரிப்பாக வரும். அந்த வயதுதான் அதற்குக்காரணம் என்று நினைத்துக்கொள்வேன். இனிமேல் நாவலோ இசையோ எந்தப் படைப்புமோ அதுபோல் உணர்வெழுச்சியை ஒரு போதும் தர இயாலாதென்றே சென்ற வாரம் வரை நம்பியிருந்தேன். விஷ்ணுபுரம் எனது 39வது வயதில் அதே கிளர்ச்சியை உருவாக்கியது எனக்கு வியப்பாக இருக்கிறது. ரசனையும் இளமையும் இன்னும் எனக்குள் இருக்கிறது என்று உணர்கையில் ஆறுதலாகவும் உள்ளது.

மற்றொரு எண்ணமும் தோன்றுகிறது. வேறு எந்த நாட்டையும் விட பாரதத்தின் மரபு நூல்கள் உண்மையில் பின் நவீனத்துவ அனுபவத்துக்கு வெகு இசைந்தவையாக உள்ளன. இதைப் புரிந்துகொண்டு இவ்வளவு வெற்றிகரமாகப் படைத்தவர்கள் எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருக்க முடியாது. இந்த நாவலில் மரபின் அழகுகளை எடுத்துக்காட்டியபடியே அதை உடைத்துப்போடும் சாகசத்தை வெகு அழகாக நீங்கள் செய்துள்ளதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. (உதா: விஷ்ணுபுர ஐதீகங்கள் உருவாகும் முறை. அதிலிருக்கும் எள்ளல், அங்கதம் எதுவும் மரபைப் புண்படுத்தவில்லை. மரபின் பாவனைகளை மேலும் வியக்கவே வைக்கிறது.) தங்களது வலைத்தளத்தில் இந்து மதம் சிறு தெய்வ வழிபாட்டை எப்படி உள்வாங்கிக்கொள்கிறது என்று பல முறை கூறியிருக்கிறீர்கள். ‘மாடன் மோட்ச’த்தில் துளியாகக் காட்டியதை இதில் விரிவாகப் பதிந்துள்ளீர்கள். அந்த நோக்கில் இது இந்து மதம் குறித்த ஒரு கலாச்சார ஆவணம் என்றே கூறலாம்.

கூடவே இன்னொன்றும் தோன்றுகிறது. விஷ்ணுபுரம் இந்தியாவின் உருவகமே. மூன்று காண்டங்களிலுமே வெளியிலிருந்து வருபவர்கள் அதை எவ்வாறு காண்கிறார்கள், எப்படி அனுபவிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடிப் பித்தாக அலைந்ததையும் கடைசியில் கண்டபோது அதனால் ஏற்பட்ட சரித்திரத் தாக்கத்தையும் நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. விஷ்ணுபுரம் கோவிலின் இருண்ட மூலைகள் நமது கலாசாரத்தின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கின்றன என்று எண்ணுகிறேன். மகத்தான கலாசாரத்தின் மறுமுகம் அழுகல்கள், அவலங்களை உள்ளடக்கியதாகவே இருப்பது தவிர்க்க முடியாததோ? (பாரதம் மட்டுமின்றி மொத்த மானுட வரலறுமே அப்படித்தான் எனினும் பாரதத்துக்கு இது இன்னும் கச்சிதமாகப் பொருந்துகிறது.) மானுடத்தின் உச்சம் எங்கிருந்தாலும் கூடவே அவலமும் இருப்பது ஒளி நிழலை உருவாக்குவது போலத் தவிர்க்க முடியாத இயற்கை நியதியோ?

விஷ்ணுபுரம் பாரத தரிசனம். விஷ்ணுபுரம் உணர்வுகளின் சங்கீதம். விஷ்ணுபுரம் மானுடத்தின் உள்ளே நிரந்தரமாக ஒலிக்கும் ஓங்காரம்.. விஷ்ணுபுரம் ஒரு முடிவற்ற தேடல். விஷ்ணுபுரம் எல்லையற்ற சுரங்கம். விஷ்ணுபுரம் ஒரு மகத்தான கனவு. இதற்கு மேல் சொற்களைக் கொட்டினால் அது புத்தியின் விளையாட்டாகவே இருக்கும். நாவலைப் படித்து முடிந்ததும் எனக்குள் எழும்பிய உணர்வுகளை- மனிதனின் ஆதி தனிமை உணர்வு, வாழ்வின் போதாமை பற்றிய பிரக்ஞை, காரணம் தெரியாத ஏதோ ஒரு சோகம் – என்று கலப்படமாக எழுந்த உணர்வுகளை சொற்களில் வடிப்பது கடினம். மகத்தான இந்தப் படைப்புக்காக பல கோடி வணக்கங்கள். நன்றி.

அன்புடன்,

வித்யா ஆனந்த்.

(பி.கு) இணைப்பாக சில கேள்விகள்.

1) பொதுவாகப் பின் நவீனத்துவப் படைப்புகளில் புத்திசாலித்தனம் மற்றும் அகங்காரமே தெரிகிறது, ஒரே விதிவிலக்கு நீங்கள் மட்டுமே என்று கூறியிருந்தேன். சமத்காரமான புனைவில் தவிர்க்க முடியாமல் வெளிப்படும் படைப்பாளியின் புத்திசாலித்தனத்தை மீறி வாசகனின் மெல்லுணர்வுகளைத் தட்டியெழுப்ப உங்களால் மட்டும் முடிவதன் ரகசியம் என்ன?

2) விஷ்ணுபுரத்தைப் படைத்து முடித்ததும் எப்படி உணர்ந்தீர்கள்? (நான் மட்டும் இந்த மாதிரி ஒரு நாவலை எழுதியிருந்தால் கர்வம் தாங்காமல் பித்தாகியிருப்பேன். அல்லது என் படைப்பை மீண்டும் மீண்டும் படித்துப் படித்துப் பார்த்துக்கொண்டு அதிலேயே தோய்ந்திருப்பேன். எதுவுமே நடவாததுபோல் இதிலிருந்து வெளியே வந்து அடுத்தடுத்த படைப்புகளில் கவனம் செலுத்த உங்களால் இயல்வது எப்படி?

3) ஒரு எளிய வாசகராக விஷ்ணுபுரத்தை ஒரு முறையாவது வாசித்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

1

அன்புள்ள வித்யா,

பொதுவாக இலக்கியத்தில் அதன் அறிவார்ந்த தளமும் வெளிப்பாட்டின் அமைப்பும் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும். ஆனால் கலையை நிலைநிறுத்தும் சாராம்சங்களான உணர்வுநிலைகளும், தரிசனங்களும் மாறுவதில்லை. எலியட் ‘கலை வளர்வதில்லை, மூலப்பொருட்களே காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன’ என்று இதைத்தான் சொல்கிறார். மகாபாரதத்தின் உணர்வும் கவித்துவமும் தரிசனமும் இன்றும் நீடிக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓர் அரசியல்நாவல் பழையதாகத்தெரிகிறது. அதற்குக் காரணம் இதுவே

எழுத்தாளர்களில் மேலோட்டமான விஷயங்கள் மேல் மட்டும் ஆர்வம் கொண்டவர்களே அதிகம். அவர்கள் கருத்துக்களையும் வடிவங்களையும் மட்டுமே கருத்தில்கொள்கிறார்கள். அவை புதுமையானவையாகவும் தெரிகின்றன. உடனடிக் கவனத்தையும் பெறுகின்றன. ஆகவே அவற்றை உருவாக்கி முன்வைக்கிறார்கள். கூர்ந்த வாசகனை, தன் வாழ்க்கையை அறிய இலக்கியத்தை வாசிப்பவனை, அவை உள்ளூர ஏமாற்றம் கொள்ளச்செய்கின்றன. மேலோட்டமான வாசகர்கள் அப்புதுமையால் கவரப்ப்பட்டு மகிழும்போது அவன் விலகி நிற்கிறான்

தன் சொந்த வாழ்வனுபவங்கள், தன் அகஎழுச்சிகள் சார்ந்து எழுதத் தொடங்குபவனுக்குச் சொல்வதற்கென ஒரு வாழ்க்கை இருக்கும். உணர்வுகளும் தரிசனங்களும் இருக்கும். அவன் இந்த மேலோட்டமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கமாட்டான். அவை அவனுக்கு வெளிப்படுவதற்கான வழிமுறைகள் மட்டுமே

விஷ்ணுபுரம் கூறுமுறையிலும் தர்க்கமுறையிலும் கட்டமைப்பிலும்தான் பின்நவீனத்துவக் கூறுகள் கொண்டது. அதன் சாராம்சமான உணர்வுநிலைகளும் ஆன்மீகத்தேடலும் தரிசனங்களும் என்றென்னும் மானுடத்தை ஆட்டிவைப்பவை மட்டுமே. அவற்றுடன் வாசகர்கள் தங்களைக் கண்டுகொள்ளமுடியும். ஒருவகையில் விஷ்ணுபுரம் என்னுடைய சுயசரிதையேதான். நூறுமுறை திரும்பத்திரும்ப சுழற்றப்பட்டு அது உள்ளே மறைந்திருக்கும்படிச் செய்யப்பட்டுள்ளது, அவ்வளவுதான்

விஷ்ணுபுரம் எழுதி முடித்ததும் ஆழமான வெறுமையே என்னுள் எஞ்சியது. அன்றுவரை நான் வாழ்ந்த ஓர் உலகில்இருந்து வெளியே வந்துவிட்டேன், ஒரு கனவை எப்போதைக்குமாக இழந்துவிட்டேன் என்னும் ஏக்கம். கூடவே அந்நாவல் அத்தனை ஞானதரிசனங்களையும், அத்தனை அமைப்புகளையும் கரைத்தழித்து வெட்டவெளியில் கொண்டுசென்று நிறுத்தக்கூடிய ஒன்று. வாசகர் அனைவரும் உணர்ந்த அவ்வெறுமையிலேயே நானும் இருந்தேன்.

சிலமாதங்களுக்குப்பின் அதிலிருந்து என்னை விலக்கிக்கொண்டாகவேண்டும் என உணர்ந்தேன். அரசியல் நூல்களை, கட்டுரைகளை வாசித்தேன். பல ஆங்கிலத் துப்பறியும் நாவல்களை வாசித்தேன். அந்த மொழி, அந்தக்கனவு என்னிலிருந்து விலகும் வரை. அதன்பின் பின் தொடரும் நிழலின்குரலை எழுதத் தொடங்கினேன்.

பின்னர் பலமுறை விஷ்ணுபுரத்தின் சில பக்கங்களை அவ்வப்போதாக வாசித்திருக்கிறேன். முழுக்க வாசித்ததில்லை. வேறுஎவரோ ஏதோ மனநிலையில் நின்று எழுதியது என்றே தோன்றுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி…
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு விவாதங்கள்