மேசன்களின் உலகம்

திரு ஜெயமோகன்

நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா ? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை பார்த்தது நினைவிருக்கலாம்.

உங்கள் ” சேலம் பகடால நரசிம்மலு நாயுடு” கட்டுரை படித்தேன். நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். நரசிம்மலு நாயுடுவின் ஆளுமை சிறப்பே. உங்கள் மொத்தக் கட்டுரையில் அவர் பற்றிய அனைத்து வருணனைகளிலும் ஒரு ஊடு கம்பி இருந்து கொண்டே இருக்கிறது. அதை நீங்கள் ஊகிக்கவில்லை எனத் தெரிகிறது.

அவர் ஒரு பிரம்ம சமாஜி என்ற உடனே நான் சுதாரித்து மொத்தக் கட்டுரையை ஊன்றிப் படிக்க ஆரம்பித்து விட்டேன். மேலும் அவர் காங்கிரசின் துவக்க உறுப்பினர். இந்த இரண்டு தகுதிகளை உடையவர்கள் அக்காலத்தின் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரே. அவர்கள் தான் free masons என்றழைக்கப் படும் குழுவினர்.

இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தவர்களில் தேவேந்திரநாத் தாகூர் மற்றும் அவரது சகோதரர் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் மேசன்கள். காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபன உறுப்பினர் அனைவரும் மேசன்கள். கிழக்கிந்தியக் கம்பனியே ஒரு மேசானிய அமைப்பு. இந்தியாவின் முந்நூறு வருடத்திய கடந்த காலம் இந்த அமைப்பினராலேயே நிர்ணயம் செய்யப் பட்டது. பாரதத்தை ஒற்றை நூல், ஒற்றைக் கடவுள் ஒற்றை மதம் கொண்ட எளிமை கலாச்சாரத்தை நிறுவ அவர்கள் முயன்றதன் ஒரு பகுதியே நாயுடுவின் ஹிந்து பைபிள். அன்னி பெசண்ட் , மேடம் ப்ளவாட்ஸ்கி , லெட் பீட்டர் போன்ற மேசானிய தத்துவ தலைவர்கள் தயானந்தரிடம் (ஆர்ய சமாஜம்) விவாதம் செய்து தங்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” தத்துவத்துக்கு அங்கீகாரம் கேட்ட போது வேதங்களுக்கு முதன்மை இல்லாத இடத்தில் சமரசத்துக்கே இடமில்லை என்று தயானந்தர் நிராகரித்தது ஆவணப்படுத்தப் பட்ட நிகழ்வு . (பின்னர் அவர்கள் ஜே கிருஷ்ணமூர்த்தியை குழந்தையாகவே தேடிப் பிடித்தனர்.).

நீங்கள் சில வருடம் முன்பு எழுதிய “உலகின் நீளமான வேலி” என்ற கண்ணீர்க் கதை என்னையும் என் நண்பர்களையும் உலுக்கியது. அதன் காரணகர்த்தாவான ஹ்யூம் ஒரு மேசன்.

உலகில் சமீப நூற்றாண்டு நிகழ்வுகள் அனைத்தும் இவர்கள் செய்தவையே என நான் நம்புகிறேன். ஜன நாயகம் என்னும் கோட்பாடு அதில் பிரதானமானது. கம்யூனிசம் அடுத்தது. (மார்க்ஸ் ஒரு மேசன். அய்ன் ராண்ட் தீவிர மேசன்). ரிசர்வ் வங்கி என்னும் கோட்பாடு இவர்களுடையது. உலகெங்கும் மன்னராட்சி ஒழிக்கப் பட வேண்டும் என்பது இவர்களின் உறுதியான கொள்கைகளில் ஒன்று என நான் ஊகிக்கிறேன்.

மேசன்கள் தங்கள் கருத்துகளை ஊன்ற மிகவும் விரிவாக வேலை செய்திருக்கிறார்கள். காந்தியின் மனத்தைக் கலக்கிய சரளா தேவி தாகூரின் தங்கை மகள். அவரது குடும்பமே மேசன்கள். அவர் விவேகானந்தர் உட்பட பலரிடமும் தன கருத்துகளுக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார். அவரது கணவரும் ஒரு காங்கிரஸ் ஸ்தாபன உறுப்பினர். அவர் காந்தியிடம் அணுகியது தற்செயல் அல்ல என எனக்குத் தோன்றுகிறது.

இந்தியப் பிரிவினை, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் என்றும் நட்பாடாமல் பார்த்துக் கொள்வது, இந்தியாவின் மையமான ஆன்மீகத்தில் கறை படிய வைக்கும் விதமாக இடது சாரி இயக்கத்தை இன்று வரை நடத்தி வருதல், செக்யூலரிசம் என்னும் ஒரு செயற்கைக் கோட்பாட்டால் நம் மக்களை மூச்சுத் திணறச் செய்து வருவது, இந்துக்களின் நெற்றிப் பொட்டில் வைத்த துப்பாக்கியாய் வஹாபியத்தை ஏவி விட்டது போன்ற அனைத்து விஷயங்களின் மூளை மேசன்களே. போர்டு பவுண்டேஷன் மேசானிய அமைப்பு.

இவர்களின் வரலாறு மிக பழையது . புத்தன் தான் முதல் மேசன் என்கின்றார்கள். இவர்களின் நெடும் கால வரலாற்றில் தொடர்ச்சியாய் நாம் காணும் ஒரே விதமான சங்கேதம் அவர்களுடைய “ரகசியம் காத்தல்” என்பது தான். ஆப்ரஹாமிய மூன்று மதங்களின் மூளையாக இவர்களே இருந்திருக்க வேண்டும். மதம் என்ற ஒரு கோட்பாடே பௌத்தத்தின் தீக்கொடை. அதன் நீட்சி இங்கே இந்தப் பாலைவன மதங்கள்.

இவர்கள் உலகளாவிய மாற்றத்துக்காக உழைப்பவர்கள். மனிதனை அனைத்து அடையாளங்களான ஜாதி, மதம் , தத்துவம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் ஒரு முயற்சியில் இருக்கக் கூடும் என ஊகிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆரம்ப கால வித்து நரசிம்மலு நாயுடு. பின்பு ஈ வே ரா, ராஜாஜி போன்றோரும் இதில் இணைந்தனர். நேரு, ராஜேந்திர பிரசாத் போன்றோர் மேசன்கள். தமிழ் நாட்டில் வைதிகத்தின் ஆணிவேரை அழிக்க மேசன்கள் அனுப்பியது ஈ வே ரா வை. அன்று நடுச் சாதிகளை வைத்து பிராம்மணர்களை நிலை குலையச் செய்தது போல பின்பு , தலித்துகளை ஏவி அதே நடுத்தர சாதிகளை துவம்சம் செய்வது அவர்களின் இன்றைய திட்டமாக இருக்கலாம். நடுநிலை பத்திரிக்கைகளான இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை கூட சாதாரணமான உள்ளூர்ச் சண்டைகளுக்கு கூட சாதீய முலாம் போடுவது எனக்கு சமீப காலமாக இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. தலித்துகளை நம் சமூகத்தின் ஆறாத புண்ணாக வைப்பது அவர்களின் நோக்கம். இதற்கு அவர்களின் ஊடக பலம் உதவிக் கொண்டே இருக்கிறது. சினிமாவை விரும்பாத ஜாதி கட்சியின் ஊடகம் கூட அவர்கள் உதவியில் தான் செயல்படுகிறது என்கின்றனர் என் நண்பர்கள்.

அன்றிலிருந்து இன்று வரை காங்கிரஸ் இந்தியத் தன்மை அற்ற ஒன்றே. அதன் சாவி மேசன்கள் கையில். சோனியாவின் பெற்றோர் மேசன்கள். மேசானியர்ர்களின் பிடியில் தான் வாட்டிகனே இருக்கிறது என்பது இணையத்தில் நாம் சர்வ சாதாரணமாகக் காணும் செய்தி.

மேசன்களின் தலைமைப் பீடங்கள் யூதர்களால் நிரப்பப் பட்டது. ஆனாலும் அவர்கள் பிற அனைத்து மதங்களையும் ஆக்கிரமித்தே இருக்கின்றனர். மிதவாத இஸ்லாமிய நாடுகளான ஆப்கானிஸ்தானையும், இரானையும் வெறும் பத்து வருடங்கள் இடைவெளியில் உலகின் அருவெறுக்கத் தக்க தீவிரவாத நாடுகளாக மாற்றியது அவர்கள் சாதனை. இது நடந்து கொண்டிருக்கையிலேயே, உலகத்தை திசை திருப்ப ” இஸ்லாம் ஒரு அமைதிப் பாதை ” என்ற வசனத்தை புஷ் மற்றும் டோனி ப்ளேர் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். இருவரும் மேசன்களின் உயர் பீட உறுப்பினர்கள்.

1

2

3

நான் கூறிய புள்ளி விவரங்கள் எதுவும் நான் நிரூபிக்கத் தேவையில்லை. அவை தன்னைத் தானே நிரூபித்துக் கொள்ளும். மே சானிய அமைப்புக்கள் 2000 ஆண்டுக்குப் பின்னர் ரகசியங்களை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. டேன் ப்ரவ்ன் எழுதிய டா வின்சி கோட், ஏஞ்சல்ஸ் ஆண்டு டெமான்ஸ் , தி லாஸ்ட் சிம்பல் போன்றவை அவர்களின் நீண்ட சரித்திரத்தை பதிவு செய்து எழுதியவை.

அன்றாடம் நம் வாழ்வில் உரசும் பல அமைப்புகள் மேசானிய வேர் கொண்டவை.

Inline image 1

மேலே உள்ள ரோட்டரி கிளப் சின்னம் மேசன்களின் சின்னத்தை ஒத்தது. கீழே உள்ளது மேசன்களின் சின்னம்.

Inline image 2

கோயம்புத்தூரில் மேசானிக் டோட்டரி சங்கம் வட கோயம்புத்தூரில் உள்ளது. பெரிய போர்டு வைத்து நடத்துகிறார்கள். உங்கள் ஊரில் உள்ள விவேகானந்த கேந்திரம் சுத்தமான மேசானிய அமைப்பு. முகப்பில் விவேகானந்தர் சிலைக்கு மேலே மேசானிய சின்னம் பிரதானமாய் பொறிக்கப் பட்டுள்ளது. கல்கத்தா காலத்தில் நரேந்திரநாத் தத்தா ஒரு மேசன் . அந்த நினைவாக இப்படி ஒரு சிலை அவரை மேசொனிய உடுப்பிலேயே சித்தரிக்கிறது.

Inline image 3

இவர்களுக்கு மேன்மையான பக்கம் உண்டு. ராயல் சொசைட்டி இவர்கள் இயக்கம். அதுவே இன்றைய C E R N அமைப்பாக உருமாறி இருப்பதாக டேன் பரவன் கூறுகிறார்.

இதன் மேற்போக்கான் அடையாளங்களை கூறி விட்டேன். பிறவற்றை உங்களால் எளிதில் அறிந்து கொண்டு விட முடியும்.

வேங்கடசுப்பிரமணியன்

அன்புள்ள வேங்கடசுப்ரமணியன்

உங்களுடனான கடைசிக் கடிதம் நினைவில் உள்ளது

உங்கள் கடிதம் உத்வேகம் அளித்தது. எப்படியாவது அந்த மேசன் குழுவில்சேர்ந்துவிடவேண்டும் என முயலவிருக்கிறேன். அதற்கான ஆராய்ச்சிகளை ஆரம்பித்துவிட்டேன். நன்றி

உலகத்தையே பல நூற்றாண்டுகளாக கையில் வைத்திருக்கும் சிலரில் ஒருவனாக ஆவது எவ்வளவு பெரிய விஷயம். அத்துடன் நான் மதிப்பு கொண்டுள்ள மாமனிதர்கள் அனைவரும் அதில்தான் இருந்திருக்கிறார்கள். ஜனநாயகம் , மனித உரிமை, மதச்சார்பின்மை உட்பட உயரிய விழுமியங்களை படைத்து அளித்திருக்கிறார்கள்

வழிகாட்டியமைக்கு நன்றி

ஜெ

வெறுப்பின் ஊற்றுமுகம் கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19
அடுத்த கட்டுரைகிறிஸ்துவின் இருப்பு