அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு கேரளத்தில் வெளியாவதில் பல சிக்கல்கள். என் நண்பர் கோவை கேசவேட்டன் அவர்கள்தான் வினியோகஸ்தர். ஏற்கனவே சிலர் தமிழ்ப்படங்களை இருவாரம் கழித்தே வெளியிடவேண்டும் என்ற கேரள தயாரிப்பாளர் அமைப்பின் தடையை மீறியதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்ப்படங்களை தடைசெய்தார்கள். அதை மீறி ராவணன் வெளியாக திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் மோதிக்கொண்டார்கள். அதன் சிக்கல் காரணமாக வடகேரளத்தில் வெளியாகி சின்னாள் கழித்தே அங்காடித்தெரு தென்கேரளத்தில் வெளியாகியது. கேரளத்திலும் அது ஒரு பெரிய வணிக வெற்றி. இப்போதும் அரங்குகளில் உள்ளது.

ஆனால் சமீபத்தில் எந்தப் தமிழ்ப்படமும் கேரள விமர்சகர்களின் பாராட்டை இந்த அளவுக்குப் பெற்றதில்லை என்றே சொல்ல வேண்டும். அனேகமாக அனைத்து இதழ்களிலும் மதிப்புரைகள் வெளிவந்தன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களும் மதிப்புரைகள் எழுதியிருந்தன. வசந்தபாலனின் சமூக நோக்கும் படத்தின் அமைப்பில் உள்ள நேர்த்தியும் பரவலாக பாராட்டைப் பெற்றது. பல கோணங்களில் படம் ஆராயப்பட்டிருந்த்து. முக்கியமான ஒரு விஷயம் படத்தை ஒட்டிய விவாதங்கள் வழியாக கோழிக்கோடு நகரத்தில் சிறு கடைகள் அங்கே வேலைசெய்பவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவில்லை என்றa விஷயம் கிளம்பிவந் தது. நகராட்சி அதைச் செய்துகொடுப்பதாக பொறுப்பேற்றது.

’சமகாலீன மலையாளம்’ என்ற மதிப்புமிக்க இலக்கிய இதழ் வசந்ந்தபாலனின் பேட்டியுடன் விரிவான கட்டுரை வெளீயிட்டிருக்கிறது. அங்காடித்தெரு மூலம் தமிழ் சினிமாவுக்கு கேரளத்தில் ஓர் தனி அடையாளம் உருவாகியிருக்கிறது என்பதே உண்மை.

முந்தைய கட்டுரைபாரதியை பற்றி செல்லம்மாள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று-இருகடிதங்கள்