ஜெ,
இன்று அபு அவர்கள் ‘என்னதான் சாதனை செய்திருந்தாலும் அவருக்கு ஏன் சிலை?’ என்று கேட்கிறார். அதை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று ‘கலை அறிவியல் சாதனையாளர்களுக்கு எதற்கு விருது வழங்க வேண்டும் விழா எடுக்க வேண்டும். அதன் மூலம் கலையும் அறிவியலும் முழுமையாக மக்களுக்கு சேர்ந்து விட்டதா என்ன? அல்லது விருதுக்கும் விழாவுக்குமா அவர்கள் சாதனை செய்தார்கள்?’ என்று கேட்கலாம். அடுத்த நிலையில் ‘சடங்குகள் எதற்கு? அதன் மூலம் மக்கள் மதத்தை முழுமையாக புரிந்து கொண்டார்களா என்ன?’ என்று கேட்கலாம். உச்சமாக ‘தேசிய கொடியும் தேசிய கீதமும் எதற்கு? மக்களுக்கு தேசப்பற்று வந்து விட்டதா என்ன?’ என்று கேட்கலாம்.
முதலில் சிலை, விருது, விழா போன்றவைகள் ஒரு அங்கீகாரம். ‘இதோ பார்!! இவர்கள் தான் நமது முன்னோடிகள்’ என்று பொது மக்களுக்கு அறியப்படுத்துவது. ஆனால் கண்டிப்பாக இது முதல் படி நிலையே. இத்தகைய தருணங்களில் அவர்களுடைய சாதனைகளை மக்களிடையே எடுத்துச் சென்றாலும் காலப்போக்கில் எஞ்சுவது அவர்கள் பெயர் மட்டுமே. இலக்கியம், வரலாறு, மதம், அறிவியல் என்று எல்லா துறைகளிலும் இந்த முதல் புள்ளி மக்களிடையே இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது அத்துறைகளின் உச்சத்தில் இருப்பவர்களின் கடமை.
இந்த முதல் புள்ளியையும் அழிப்பது பேராபத்து.
-ரமேஷ் தியாகராஜன்
**
ஜெ சார்,
மனித மனம் எந்த ஒரு விஷயத்தை இறுதியில் ஒரு உணர்வாகவே (உணர்வுபூர்வமாக அல்ல ) உள்வாங்குகிறது . எவ்வளவு அறிவுப்பூர்வமாக சிந்தித்தாலும் அந்த சிந்தனைகள் அறிதல்களெல்லாம் அதன் இறுதி நிகழ்வாக நம் மனதில் ஒரு உணர்வான சலனத்தையே நிகழ்த்துகின்றன.
உணர்வுகளை தீண்டுவதின் மூலமாக மனித மனதை அனுகுவதே/அடைவதே மிகவும் லகுவானது, நேரடியானது .நம் விளம்பரங்களை எடுத்துக்கொள்ளலாம் எந்த சோப்பாவது அதன் ரசாயனத்தன்மை பற்றியோ , அந்த சோப்பை சோதனைச்சாலையில் ஆய்வு செய்த முடிவுகளையோ உள்ளபடி சொல்லி மட்டும் விளம்பரப்படுத்தப்படுகிறதா ? அப்படிச்சொன்னாலும் நாம் என்ன அதை மிக கவனமாக பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு அதன் படியா அதை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோமா ? ஒரு சோப்பு மிகச்சிறந்த சோப்பாகவே இருந்தாலும் அதை சந்தையில் முன்னிறுத்தும் போது அதன் தரத்தை நல்ல /சாதகமான ஒரு உணர்வாகவே மனதில் நிறுத்த முனைவர்.அப்படி அப்பொருளை மனதுக்கு சாதகமான ஒரு நிலையில் இடம்பெறச்செயவதே அப்பொருள் பெரும் மக்கள்திரளை சென்றடைவதற்கான வழி.
வார்த்தைகள் / கருத்துக்கள் நம் மேல்மனத்தாலும் அறிவாலும் முதலில் உள்வாங்கப்பட்டு ,பொருள் கொள்ளப்பட்டு , ஆராயப்பட்டு ,நம் சொந்த மனச்சாய்வுகள் அபிப்பராயங்கள், நம்பிக்கைகளால் வடிகட்டப்பட்டு அதன் பின் தான் மனதின் உள் நிலைக்கே கொண்டு செல்லப்படுகின்றன , தகவலாக.மேலும் இது அனைத்தும் நம் அப்பட்டமான கவனத்தையும் ,நேரத்தையும் , சிந்தனை உழைப்பையும் கோருபவை.
Symbols & Signs என்பவை அப்படியானவை அல்ல அவை மொழிக்கும் சிந்தனைக்கும் முந்தியவை நேரடியாக நம் அகத்தில் இறங்கும் தன்மை கொண்டவை , பெரும்பாலும் நாம் அறியாமலேயே சடுதியில் நம்முள் சென்று விடுபவை.நிறுவன இலச்சினைகளை ( Logos) எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு நல்ல இலச்சினையின் குறிக்கோள் அந்த பிராண்டின் தன்மையை தனித்துவத்தை சடாரென்று பார்ப்பவர் மனதில் இறக்கிவிடுவதுதான்.அது போக அந்த நிறுவனம் அல்லது சேவை குறித்து ஒரு familiarity & affinity உண்டுபண்னுவது.இதெல்லாம் நாம் நின்று அதை சிரத்தையாக நோக்க வேண்டும் என்பது கூட இல்லை ஒரு நொடிப்பொழுது அவை நம் புலன்களை தொட்டுச்சென்றாலே போதும்.
காந்திக்கு சிலை வைப்பது காந்தியத்தை அந்த சிலை மூலம் கற்றுக்கொள்ள அல்ல காந்தி என்னும் விழுமியத்தை நம் ஆழ்மனதுள் ஒரு உணர்வுக் கீற்றாய் உள்ளிறக்கவே.மேலும் அந்த கருத்துருவாக்கத்தை விழுமியத்தை ஒரு சமூகமாக நாம் ஏற்கிறோம் அதை மதிக்கிறோம் என்று சொல்ல அவ்விழுமியத்தை நமக்கு பழக்கமான ஒன்றாக அனுக்கமாக ஒன்றாக உணரச்செய்ய.நாம் ஒரு சமூகமாக யார் , நம் எவ்வகை விழுமியங்களை தூக்கிப்பிடிக்கிறோம் , அதன் மூலம் நாம் நமக்கும் மற்றோருக்கும் என்ன சொல்ல வருகிறோம் , நம் அடையாளம் என்ன என்று நிறுவிக்கொள்ள .It’s an act of a society making a statement to itself and others.சிலை ஏன் வேண்டும் என்பதற்கான பதிலிலேயே சிலை யாருக்காக வைக்க வேண்டும் என்பதற்கும் பதில் அடங்கிவிடுகிறது.
உள்ளுணரும் ஒன்றின் மேல் ஏற்றப்படும், பருத்தன்மை, நிலைத்ததன்மை, காலம் தாண்டிய தன்மையின் விழைவே சிலையாகிறது , சிலையின் அளவிலும் அதை நான் அவ்வாறே காண்கிறேன் அவை ஒன்றை மனித அளவுகோல்களிலிருந்து மேலெடுத்து மிகப்பெரியதாக்கி அதை கிட்டத்தட்ட obsolute ஆக்கும் முயற்சிகளே.
மனிதர்களுக்கு சிலை வைப்பது , பிரம்மாண்டமான சித்திரங்கள் வைப்பது என்பதை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்றவர்கள் பெரும்பாலும் சர்வாதிகாரிகளே என்பதை நாம் உணரலாம் . வட கொரியா ஒரு நல்ல உதாரணம்.எங்கும் எதிலும் ஆளுபவரின் சிலையை/ உருவப்படத்தை மட்டுமே வைத்து அந்த reverence ஜ் மக்கள் மனதுள் கட்டாயமாக திணிக்கும் முயற்சி அது.எனவே தான் சிலை வைப்பதும் , யாருக்காக சிலை வைக்கிறோம் என்ற இரண்டுமே ஒரே வரியில் கேட்டுக்கொள்ளப்பட வேண்டிய கேள்விகள்.
ஆனால் சிலை வைப்பது மட்டுமே ஒரு கருத்தை , விழுமியத்தை மக்களிடையே முழுமையாக எடுத்துச்சென்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது .அவை அவ்விழுமியங்களுக்கு ஒரு பருவடிவை , conducive களனை, ஒரு சாதகமான முன்ணென்னத்தை,நினைவூட்டலை அவை ஏற்படுத்தும் அவ்வளவே அவ்விழுமியங்கள் பொதுவெளியில் தொடர்ந்து பல கோணங்களில் விவாதிக்கப்பட்டும் ,பயன்கொள்ளப்பட்டும் , பல தளங்களில் முன்னெடுக்கப்படும்போது மட்டுமே அது உயிருடன் வாழும் விழுமியமாகவோ / கருத்தாகவோ இருக்கும்.
பாடதிட்டங்களில் முக்கியமாக நம் உதாரண புருஷர்களை பற்றி முறையான , விரிவான கற்பித்தல் நிகழ வேண்டும்.பொது வெளியில் ஊடகங்கள் அவர்களைப் பற்றி தொடர்ந்து கட்டுரைகளை வெளியிடவேண்டும் ( சம்பிரதாயம் தவிர்த்து சாதக பாதக அம்சங்கள் ).சமூக சிந்தனைத்தளத்தில் இயங்கும் எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் , விமர்சகர்க்ள் , களப்பணியாளர்கள் என்று பலரும் முக்கிய ஆளுமைகளின் சிந்தனைகளை செயல்களை படைப்பில் பேச்சில் மேற்கோள் காட்ட வேண்டும்.சுட்டிக்காட்ட தகுதியானவர்களை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.ஜெ காந்தியை மீளுருவாக்கி முழுமைப்பார்வையாய் நமக்களித்ததை நான் மிக நல்ல உதாரணமாகச் சொல்வேன்.மேலும் தற்காலத்தில் எல்லா விதத்திலேயும் நம்மிடையே ஊடுருவிவிட்ட பல்வேறு காட்சி ஊடகங்கள் images மூலமே நம்முடன் உரையாடுகின்றன.நம் கவனம் வேறெப்போதையும் விட இவ்வித காட்சி ஊடகங்களால் நிறைக்கப்படும் இந்த சூழ்நிலையில் “சிலை” என்னும் கருத்துருவாக்கத்தை இந்த காட்சிவழி ஊடகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் ஆவணப்படங்கள் , உரைகள் , பேட்டிகள் , கலந்துரையாடல்கள் , விமர்சனங்கள் என்று ஒரு virtual presence ஆக.
கார்த்திக்
இன்றைய பதிவில் அபு அவர்கள் நினைவுகூரலை “ஆஃப்டர் ஆல் நினைவுகூரலுக்கா கோடானுகோடி செலவுசெய்யவேண்டும்?” என்று கேட்கிறார். நினைவுகூரல் அத்தனை எளிய பணியோ தேவையற்ற ஒன்றோ அல்லவே! சமூகவிழுமியங்கள் அனைத்துமே சின்னங்கள் வழியாகவும் குறியீடுகள் வழியாகவும் கதைகள் வழியாகவும் மீண்டும் மீண்டும் மக்களின் மனதில் பதியப்பட்டு நிலைநிறுத்தப்படுபவைதானே? எல்லாக்காலங்களிலும் இதுதானே நடைமுறையாக இருந்துவந்துள்ளது?
அரசர்க்கும் அரசியர்க்கும் மங்கலத்தாலம் ஏந்திய அணிப்பரத்தையரும் கொம்பூதிகளும் நிமித்திகர்களும் இருந்தார்களல்லவா? அரசரின் அரண்மனையும் அவர் அமரும் சிம்மாசனமும் குறியீடுகள்தானே? அரசரை ஆண்டவனாகவே காணச்செய்யும் விழுமியம் அவ்வாறுதானே உருவாகிவந்தது?
ஒவ்வொரு சமூகமும் அத்தகைய நினைவுகூரல் சின்னங்கள் வழியாகவே தாங்கள் நம்பும் விழுமியங்களைக் காப்பாற்றிவந்துள்ளன. தன் கழுத்தைத் தானே அரிந்துகொள்ளும் ஒருவனின் சிலை (நவகண்டம்) வழியாக சங்ககாலச் சமூகங்கள் வீரத்தை நிலைநிறுத்தின. போர்த்தெய்வங்கள் வழியாக ஷத்ரிய குணமும் முலையூட்டும் தாய்தெய்வங்கள் வழியாகக் கருணையும் சமூகவிழுமியங்களாக ஆகின்றன. இன்றைய காலகட்டத்தில் தேசியத்தை நிலைநிறுத்த தேசியக்கொடியும் தேசத்தலைவர்களின் சிலையும் பயன்படுத்தப் படுகின்றன.
நினைவுகூரலுக்கா இவ்வளவும் என்று கேட்டால் ஆம் அது அத்துணை கடினமான பணி என்பதே அதற்கான பதில். எந்தவொரு சிந்தனையும் நினைவிலிருந்து மெல்ல அழியக்கூடியது. பருப்பொருளாகக் கண்முன் நிற்பவற்றையே மனம் மறக்காமல் நினைவுகூர்கிறது. எனவேதான் விழுமியம் ஒவ்வொன்றும் பருப்பொருள் வடிவம் தரப்பட்டுக் கல்லில் வடிக்கப்படுகிறது. மலரும் தூபமும் காட்டிச் சிலையாக மாற்றப்படுகிறது. சிலைகள் தேவையா என்பதைவிட இத்தகைய ஒரு நடைமுறையை மூர்க்கமாக நிராகரிக்கவேண்டியது தேவையா என்ற கேள்வியில் இன்னும் பொருளிருப்பதாகத் தோன்றுகிறது.
திருமூலநாதன்
*
அன்பு ஜெயமோகன்,
சிலைகள் மற்றும் சிலை வைப்பது குறித்து குகைவாசிகள் அபு எழுதிய கடிதம் படித்தேன். நேர்த்தியும் நேர்மையும் கொண்ட தருக்கங்களால் அவர் தன் கருத்தை வலுப்படுத்தவும் செய்திருந்தார். அவரின் ஆதங்கத்தின் அடிப்படை நியாயமானதுதான். எனினும், சிலைகள் எவ்விதத்திலும் நமக்குப் பயனளிப்பதில்லை என்பதான அவர் குற்றச்சாட்டில் எனக்கு ஒப்புதல் இல்லை. மேலும், பயன்கருதித்தான் சிலைகள் வைக்க வேண்டும் என்பதான பார்வையிலும் எனக்கு உடன்பாடில்லை.
சிலைகள் கொண்டாட்டத்துக்கானவை. சமயத்தளத்தில் என்றில்லை.. சமூகத்தின் அனைத்துத்தளங்களிலும் சிலைகள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தனக்கு சிலை வைக்கக்கூடாது என்று வலியுறுத்திய புத்தருக்கு சிலை வைத்தது சரிதானா என நம்மால் அறிவுப்பூர்வமாக விவாதிக்க முடியும்; கொஞ்சங்கூடப் பொருத்தமற்ற முட்டாள்தனம் என அதை நிறுவவும் முடியும். எனினும், இன்று பல்கிப் பெருகி இருக்கும் புத்தர் சிலைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுவிடவே முடியாது. அறிவார்ந்த சமூகமாக நாம் மேம்பட்டு விட்டாலும் நம் ஆழ்மனதில் இன்னும் நம் முன்னோர்களான பழங்குடியினரின் வாழ்வு மீதா தீராக் காமம் இருக்கிறது. அதனால்தான் சிலைகளைக் கொண்டாட நாம் தயங்குவதில்லை. நம் அறிவையும் மீறி சிலைகளைக் கொண்டாடி விடுகிறோம். வள்ளலார், தந்தை பெரியார் போன்றவர்களிடம் இருந்தவர்கள் பழுத்த அறிவாளிகள்தானே. பிறகேன் அவர்கள் இன்றளவும் சிலைவழிபாட்டை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? ”நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே” என உருவவழிபாட்டைக் கண்டித்த சித்தர் சிவவாக்கியருக்கும் சிவன்மலையில்(காங்கேயம்) சிலை இருக்கிறது. அவருக்கு என்றில்லை.. அத்தனை சித்தர்களும் இன்றைக்கு சிலைகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றனர். தந்தைக்கு, தாய்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு என குடும்ப அளவில் சிலைகள் வைத்திருப்பதையும் பல இடங்களில் நாம் பார்க்க முடியும்.
நம் ஆதிச்சமூகமான இனக்குழுக்களின் செய்நன்றிப் பண்பை இன்றளவும் ஞாபமூட்டும் குறியீடாகவே சிலைகளை நான் பார்க்கிறேன். அவ்வகையில் அவை எப்போதும் தேவைப்படுபவையாகவும் உள்ளன. அக்குறியீடு வேட்டைச் சமூகக் காலகட்டத்திலிருந்தே நம்முடன் பயணப்பட்டு வருகிறது. அப்போது நடுகல் எனும் பெயரால் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நடுகற்களைப் பற்றி விரிவாகவே தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றன. நம் இனத்தின் நிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிய வீரர்களின் நினைவாக நடப்பட்ட நடுகல் மரபின் நவீன நீட்சியே சிலைகள்.
தொல்காப்பியம் ஒரு வீரனின் நினைவாக நடப்படும் நடுகல்லுக்குப் பின்னிருக்கும் சடங்குகளை காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை மற்றும் வாழ்த்தல் என ஆறாக வகைப்படுத்துகிறது. காட்சி என்பது போரில் அல்லது இனத்துக்கான நற்செயல் ஒன்றுக்காக உயிர்துறந்த வீரனின் அடையாளமாக ஒரு கல்லைக் கண்டெடுப்பது. போரில் உயிர் துறந்த வீரன் என்றால் அவனுக்கான கல்லை அவன் மடிந்த போர்க்களத்திலேயே தேர்ந்தெடுப்பர். கால்கோள் என்பது அக்கல்லைக் குழுவாக் ஊருக்குள் சுமந்து வருவது. நீர்ப்படை என்பது அக்கல்லை ஊரே சேர்ந்து நீரால் குளிப்பாட்டுவது. நடுகல் என்பது ஊரின் முக்கியமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு அக்கல்லை நடுவது. இப்போது அக்கல் வெறுங்கல் அன்று; அதில் அவ்வீரன் குடிகொண்டிருக்கும் நடுகல். பெரும்படை என்பது அவ்வீரனின் அடையாளமாக அவர்கள் நம்பும் நடுகல்லின் முன் அவனுக்கு விருப்பமான உணவு வகைகளைப் படையலிடுதல். படையலிடுதல் எனும் சொல்லுக்கு காட்சிக்கு வைத்தல் எனும் பொருளே இங்கு பொருத்தமானது. வாழ்த்தல் என்பது அந்நடுகல் வீரனைப் பெருங்குரலெடுத்து வாழ்த்தி வணங்குதலைக் குறிக்கும். ஆக, சிலை மரபென்பது நம்மைப் போன்ற எதையும் அறிவால் விளக்கிவிட / விளங்கிக்கொள்ள முயலும் தருக்கவாதிகளுக்கு ஒரு சடங்கு நிகழ்வுதான். ஆனால், முழுக்க முழுக்க உணர்வுவயத்திலான பெரும்பான்மை மக்களுக்கு அது ஒரு செய்நன்றி நிகழ்வு. அவ்வீரனின் அடியொற்றி அவர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ.. அக்கல்வடிவில் காட்சி தரும் அவ்வீரனிடமிருந்து அவர்களுக்கு புதுநம்பிக்கை கிடைக்கிறது. அந்நம்பிக்கை அவர்களின் வாழ்வை எளிதில் எதிர்கொள்ள வைக்கிறது. கூடுதலாக, அவ்வீரனைப்போன்ற வெகுசிலரையேனும் அந்நடுகல் தந்துவிடும் என்று நம்பவும் செய்கிறார்கள்; அந்நம்பிக்கை இன்றளவும் நம்மிடமும் தொடர்கிறது என்பதுதான் என் தரப்பு.
உங்களுக்கும் அபு போன்றவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். தயைகூர்ந்து சிலைகளை அறிவின் அடையாளமாகக் பார்க்க முயலாதீர்கள்; உச்சபட்ச செய்நன்றியின் வெளிப்பாடாக மட்டுமே காண முயலுங்கள். சமீபமாய் அப்துல்கலாம் அவர்களுக்குத் தன்னெழுச்சியாய் நிகழ்ந்த உருவ வழிபாட்டு நிகழ்வுகள் ஆதிமரபின் முக்கியக்குணமான செய்நன்றியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. எவ்விதத்திலும் அவை அறிவுப்பூர்வமாகப் பயன்படப்போவதில்லை. எனினும், அப்படியான வழிபாட்டு நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆதிப்பொதுமரபை அவனையறியாமல் வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன. திரும்பவும் குறிப்பிடுகிறேன். சிலைகளை ஒருபோதும் அறிவின் வடிவாக, நினைவுகூரலின் வடிவாக மட்டுமே நாம் பார்க்கக் கூடாது. அவை இரண்டாம்பட்சம்தான். செய்நன்றியெனும் உணர்ச்சிதான் முதன்மையானது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.