சிலைகள்: கடிதங்கள்

ஜெவின் தளத்தில் இன்றுவந்துள்ள சிலைகள் பற்றிய பதிவு ஆர்வமூட்டுவது. அவரது பட்டியலில் இடம் பெற்றவர்கள் குறித்து எனக்குப் பூரண திருப்தி .தொடர்ந்து நாம் சில ஆளுமைகளைச் சொல்லாம். இதில் விடுபட்டதாக நான் நினைப்பது.

முதலில் ராஜாஜி (பொது வாழ்க்கையில்)

.ஏனெனெற்றால் அவர் ஒரு அரசியல் வாதியாக இருந்தாலும்,இலக்கியவாதியும் கூட.இருந்தார். அவரது சக்கரவர்த்தித் திருமகன், மற்றும் வியாசர் விருந்து இல்லாமல் 20ம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு இராமாயண மகாபாரத அறிமுகம் பரவலாகியிருக்க வாய்ப்பில்லை. மேலும், குடிக்கு எதிராகவும் தீண்டாமைக்கு எதிராகவும், ஹரிஜன ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாகவும் போராடிய சமூகப் போராளியுமவார்..அவரை வெறும் அரசியல் வாதியாக சுருக்க வேண்டியதில்லை. மேலும் கல்வி குறித்தும், பொருளியில் குறித்தும் தேர்தல் முறை குறித்தும் ஆழ்ந்த தனித்த பார்வை கொண்டவர்.

2. வ.உ. சி.

இவரையும் வெறும் அரசியல்வாதியாக சுருக்க முடியாது.பன்முகம் கொண்டவர்.

3..மபொசி

ஏனென்றால் மபொசி இல்லாமல் தற்போதைய தமிழக எல்லைகள் இல்லை. அவரது சிலப்பதிகார உரைகள்,விடுதலைப் போரில் தமிழகம், தமிழகத்தில் மொழிச் சிறுபான்மையினர், புதிய தமிழகம் படைத்த வரலாறு ஆகியவை முக்கியமான நூல்கள்..

இவர்களுக்கு ஏற்கெனவே சிலைகள் உண்டுதான்.ஜெ வின் பட்டியலில் உழவர்களுக்கும் இருக்கின்றதுதானே.

சுரேஷ் கோவை.

அன்புள்ள சுரேஷ்

இம்மூவரையும் அரசியல்வாதிகள் என்றே பார்க்கிறேன். அவர்களின் பங்களிப்பு என்பது அரசியலில்தான் முதன்மையாக. அரசியலை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் அவர்களின் பணி என்பது சாதாரணமானதே. தியாகிகள் போன்றவர்களை நான் பட்டியலிடவில்லை. அவர்கள் அனைவருமே இங்கே சிலைவைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒருவருக்குச் சிலை வைத்தால் அதற்கிணையான பலநூறுபேரைச் சுட்டிக்காட்டவும் வேண்டியிருக்கும்.

ஜெ

ஜெ

சிலைகள் பட்டியலில் என் கணிப்பில் உள்ள முக்கியமான விடுபடல்கள்

1. பாண்டித்துரை தேவர்

சேவை, பொதுப்பணி ஆகிய துறைகளில் பாண்டித்துரைத்தேவர் ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. அவர் இல்லாவிட்டால் தமிழின் பதிப்பியக்கமே இல்லை.

2 மூவலூர் ராமாமிருதத்தம்மையார்

3 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

சிவராமன்

அன்புள்ள சிவராமன்

இவர்களின் பங்களிப்பை நான் மறக்கவில்லை. ஆனால் அவை முதன்மையான வாழ்நாள் சாதனைகள் அல்ல. இலக்கியத்தளத்தில் புரவலராக இருப்பதும் அரசியல் தளத்தில் முற்போக்கான சிலவற்றை முன்வைப்பதும் நல்ல பணிகள் அவ்வளவுதான்.

இப்பட்டியலை இப்படி விரிக்க நோக்கினால் அழகப்பச்செட்டியார், பச்சையப்ப முதலியார் , அவினாசிலிங்கம் , தி.சே.சௌ.ராஜன், சி.சுப்ரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போன்ற பலரை உள்ளிடவேண்டியிருக்கும்

ஜெ

ஜெ,

இசைத்துறையில்

1. டைகர் வரதாச்சாரி

ஏனென்றால் இன்றைய கச்சேரி முறையை இவர்தான் வடிவமைத்தார்

2 ஜி.என்.பி

ஏனென்றால் கர்நாடக இசையின் முக்கியமான பாடகர்

3 எம்.டி.ராமநாதன்

ஏனென்றால் கர்நாடக இசையின் முக்கியமான பாடகர்

4 மதுரை சோமு

ஏனென்றால் தமிழிசை மரபின் முக்கியமான பாடகர்

5 திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

இசையில் இவர் ஒரு முக்கியமான முன்னோடி

6 புல்லாங்குழல் மாலி

ஏனென்றால் முக்கியமான இசைமேதை

சாரங்கன்

அன்புள்ள ஜெ மோ,
எனது கேள்விக்கும் மதிப்பளித்து பதிலளித்ததில் மகிழ்சி
அதில் சிஸ்டர் சுப்புலக்ஷ்மியைப் பற்றி கேள்விப்படவில்லை என்றீர்கள்.

சிஸ்டர் சுப்புலக்ஷ்மி என்பவர் தென்இந்தியாவின் முதல் இந்து பட்டதாரிப் பெண் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு பால்ய விதவையும் கூட. தன்னைப் போல் கஷ்டப்படும் பலரையும் படிக்கவைக்க முயற்சி எடுத்தவர். இவர்கள் தங்கி படிப்பதற்காக, முதலில் தன் வீட்டிலேயேயும் பிறகு ஐஸ் ஹவுசிலும் சாரதா ஹாஸ்டலை நிறுவியவர். லேடி வெலிங்டன் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை நிறுவி அதன் முதல்வராகவும் பணியாற்றியவர். பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றியவர். இந்த கல்லூரி தான் பிறகு சைதாப்பேடையில் உள்ள மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக மாறியது. இவர் நோபல் பரிசுப் பெற்ற ப்ரொபஸர் சந்திரசேகருக்கு அவர் மனைவியின் வழியில் நெருங்கிய உறவினர்.

ப்ரொபஸர் சந்திரசேகருடைய வாழ்க்கை சரிதம் படிக்கும் போது தான் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

மேலதிக விவரங்களுக்கு விக்கி சுட்டி

https://en.wikipedia.org/wiki/R._S._Subbalakshmi.

அன்புடன்

பிரசாத்
ஹாங்காங்

நமக்குரிய சிலைகள்

முந்தைய கட்டுரைபாலக்காட்டில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைபஷீரும் ராமாயணமும்