அன்புள்ள ஜெ,
நமக்குரிய சிலைகள் வாசித்தேன்.யாருக்குச் சிலைகள் வைக்கலாம், கூடாது என்கிற உரையாடலை இன்னும் முன்னேறிய தளத்திற்குக் கொண்டு போனால் என்ன? அதாவது, எதற்குச் சிலைகள்? அதன் மரபுக்கு ஏதேனும் அறிவார்ந்த இடம் உண்டா? பொதுப்புத்தியில் நிலைகொண்டுவிட்ட மதிப்பீட்டை அறிவுஜீவிகளும் கேள்விக்குட்படுத்தாமல் வாய்மூடி அங்கீகரிப்பது ஏன்? சிவாஜிக்குச் சிலை தேவையா என்பதை விவாதிப்பது போல் சர் சி.வி.ராமனுக்கும் கணிதமேதை ராமானுஜத்திற்கும் சிலைகள் தேவையா, நினைவு மண்டபங்கள் அவசியமா என்று ஏன் நாம் விவாதிப்பதில்லை? இவ்விடயத்தில் அறிவுஜீவிகளும் மரபின் அடிப்படைவாதிகளாகவோ, மூதாதையர் மீதான பற்றில் சிந்திக்க மறுக்கும் கண்மூடி நம்பிக்கைவாதிகளாகவோ இருக்கின்றனர். இது சரியா?
ஏற்பும் நிராகரிப்பும் மதிப்பீட்டின் இரு பக்கங்கள் எனும் உங்கள் வரி என்னில் இந்தப் படிநிலைக் கேள்விகளைத் தொடங்கி வைக்கிறது. சிலை வைப்பது எதற்காக? உங்கள் பதில்: “சமூகத்திற்கு முன்னுதாரணங்களாக அவர்களைக் காட்ட. இளையதலைமுறைக்கு வழிகாட்ட. அவர்களின் நினைவைப் போற்ற. அவர்களைப் பற்றிய செய்திகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல.” நான் கேட்பது, இந்த அனைத்தையும் சிலை வைக்காமல் சாதிக்க முடியாதா? அல்லது, நீங்கள் யாருக்குச் சிலை வைக்கலாம் என்பீர்களோ அந்த நல்லோர்களின் விடயத்தில் இந்த நோக்கம் நிறைவேறுகிறதா? அவுட்புட் என்ன?
புத்தர், இயேசு, காந்திக்கு இல்லாத சிலைகளா? ஆனால் அவர்களை முன்னுதாரணப்படுத்தி சமூகத்தை மாற்றவும் தேற்றவும் சிலைகள் என்ன பங்களிப்பைச் செய்துவிட்டன? சமூகத்திற்கு ஓர் ஆளுமையை முன்னுதாரணமாக்க நினைத்தால், அவர்கள் குறித்த உரையாடலைத் தோற்றுவிப்பதே ஆக்கப்பூர்வமான வழிமுறை என்று நம்புகிறேன். கடல்மட்டத்தில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்குச் சிலை வைக்கப்பட்டது. அவரை நிற்க வைத்ததின் தாக்கம் ஏதேனும் திருக்குறள் நிற்பதற்கு உதவுகிறதா? கடந்த 2000 சனவரி 1இல் வள்ளுவரை நிறுத்தினார்கள். அவரோ 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தன் குறட்பாக்களால் நின்றுவருகிறார். ஆப்கானிஸ்தான் பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த புத்தர் சிலைகள் இதை விட அதிக உயரம் கொண்டவை. 115 அடிகள். 174 அடிகள் என இரண்டு சிலைகள். இவற்றால் புத்தர் நிலைக்கிறாரா?
மனித குலத்தை உய்விக்கும் கருத்தை விட்டுச் சென்ற யாரும் அவர்களின் கருத்தாலும் சிந்தனையாலும் நற்சான்று பெற்ற கொள்கையாலும்தான் முன்னுதாரணம் ஆகிறார்கள் என்பதைப் பார்க்கிறேன். காந்திஜி இன்று நமது பாக்கெட்டுகளில் இருக்கிறார். தினசரி சிரிக்கிறார். அவரின் நினைவு இந்திய ரூபாய் நோட்டைத் தீண்டும் அயல்நாட்டவருக்கும் வரத்தான் செய்யும். அதனால் காந்தியத்திற்கு என்ன நன்மை? அப்துல் கலாமுக்கு உருவான கட்அவுட் பிம்பங்களும் இனி உருவாகி வரும் கற்சிலைகளும் அவரின் எளிமை, நேர்மையைப் பரப்பிவிடுமா? அவரின் செய்திகளை அடுத்த தலைமுறைக்குச் சேர்ப்பித்துவிடுமா?
நினைவுகூர்தலில் சிலைகள், உருவப்படங்களின் பங்களிப்பு இவ்வளவே என்றால் இதற்காக கோடானு கோடிகளைச் செலவழிக்க அவசியம் என்ன? நாம் இப்படி மெனக்கெடுவது பேதைத்தனமாகப்படுகிறது. இந்தக் கற்பிதம் மேதைமையா? நினைவுகூர்தலின் அடிப்படை அவர்களைப்போல் ஆகுவதே எனில், அதன் வழிமுறைகளைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். மருந்தை எப்படி உட்கொண்டால் பலன் தரும் என்பதை முடிவுசெய்வது போன்றது இது. உண்மையான சாதனையாளர்கள் பெரும்பான்மையினரால் அறியப்படாமலே இருப்பதைச் சரிசெய்ய அவர்களின் சிலைகள் உதவவில்லை என்பதை ஒவ்வொரு காந்தி சிலையும் இந்நாட்டில் சான்றுகளாக நிற்கின்றன. எனக்குத் தெரிந்து காந்தி சிலையைக் கண்டுகொண்டிருப்பதால் யாரும் ‘சத்தியச் சோதனை’ வாசித்திருக்கமாட்டார்கள். பள்ளிக்கூட பாடத்தில் அவரைப் பற்றி நான் படித்த கொசுறு தகவல்கள்தான், அவருடைய சத்தியச் சோதனையை நான் தேடிப் படிக்க காரணமாக இருந்தது.
சரித்திரத்தைச் சற்று நிதானித்து நோக்கினால் ஓர் உண்மை தெளிவாகிறது. இன்று நினைவுகூரப்படுவோர் யாருக்கும் அவர்களின் சிலைகள் உதவவில்லை. சங்க காலத்திற்கும் முந்திய காலத்திலிருந்து இதைக் காண்கிறோம். யாரின் சரித்திரம் அவரது ஆளுமையுடன் பதிவானதோ அவர்களே நிலைத்திருக்கிறார்கள். அது அவர்களின் சிலைகளால் அல்ல. சர் சி.வி.ராமனுக்கும் ராமானுஜருக்கும் நீங்கள் சிலை வேண்டுமென கோரிக்கை வைக்காவிட்டாலும் அவர்கள் நிலைப்பார்கள்; நினைவுகூரப்படுவார்கள். நீங்கள் நினைவுகூரவில்லையா? அதுபோல.
இப்படியும் பாருங்கள், எத்தனை சிலைகளை நாம் தோண்டித் தோண்டிக் காத்து வருகிறோம். ஆனால் அவற்றுக்கு வரலாறே இல்லை. சிலைகள் யாருக்கும் அடையாள அந்தஸ்து அளித்துவிடவில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். உங்கள் பயணக்கட்டுரைகளில் எத்தனையோ சிலைகள் பதிவாகின்றன. ஆனால் அவற்றின் சிற்பிகள் அடையாளம் தெரியவில்லைதானே? தெரிந்தாலும் சிவாஜிகணேசனின் இடமே அச்சிற்பிகளுக்கு.
அறிவாளிகளை அறிவாளிகள் எப்போதும் நினைவுகூர்வார்கள். ஆனால் பாரதி விலாசுகிற வேடிக்கை மனிதர்களுக்கு எத்தனை எத்தனை சிலைகளை நிறுத்தினாலும் அவர்கள் வேடிக்கைதான் பார்ப்பார்கள். தேடிச் சோறுநிதம் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, மாய்கின்ற பல வேடிக்கை மனிதர்களுக்கு எவ்வளவு பிரமாண்டமான சிலை நட்டாலும் எந்தத் தாக்கமும் இருக்கப்போவதில்லை. அரசுக்கு வருமானம் இருக்கும். ட்ராவல்ஸ் உரிமையாளர்கள் ரிட்டர்ன் டிக்கெட்டுக்கு நம்மைத் தவறாமல் நினைவுகூர்வார்கள். நிதர்சனம்.
இம்மரபைக் கேள்விக்குட்படுத்துவது சமூகப் பிரச்சினைகளை ஊடுருவித் தீர்வு தேடவும் நம்மை ஊக்குவிக்கிறது. ‘இவர் செய்த சாதனை என்ன?’ எனும் கேள்வியை விட, ‘என்னதான் சாதனை செய்திருந்தாலும் அவருக்கு ஏன் சிலை?’ என்றே நான் கேட்க விரும்புகிறேன். அம்பேத்கரின் சிலைகள் ஒரு சமூகத்தை இழிவுபடுத்த இன்னொரு சமூகத்திற்கு வழியாக உள்ளன. அவரின் கரத்தைத் துண்டிப்பதும், முண்டமாக்கிவிடுவதும் அவரை மதித்து நினைவுகூர்வோருக்கு என்ன செய்தியை அளிக்கின்றன? உங்களை முண்டமாக்குவோம், உங்கள் கரத்தைத் துண்டிப்போம் என்பதுதானே? சிலைகள் பயங்கரமானவை என்பதே இங்கு எனக்குக் கிடைக்கும் செய்தி.
எம்.எஃப்.உசைன் இந்து தெய்வங்களை நிர்வாணப்படுத்தி ஓவியங்கள் வரைந்தார். இதைப் படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பர் கலை ரசனைக்காரர்கள். எம்.எஃப்.உசைன் தன் வீட்டு படுக்கையறைக்கா அப்படி வரைந்தார்? சமூகத்தில் முன்வைக்கிறார். சரஸ்வதியை வணங்கும் சமூகம் எப்படி அதை ரசிக்கும் என்று நினைத்துப் பார்த்தாரா? காமசூத்ரத்தை சிலைகளிலும் ஓவியங்களிலும் ரசித்துப் பழகிய சமூகம் என்று அவரும் அவருடைய சகாக்களும் நியாயப்படுத்தினாலும் பிரச்சினை வெளிப்படையானதே. அவர் நாட்டை விட்டு வெளியேறினார். உயிருள்ளவற்றின் ஓவியங்களும் உயிரைக் குடிக்கும் வல்லமை மிக்கவை என்பது செய்தி.
எல்லாம் கலைப் பித்து, அல்லது அரசியல் சித்து. பகுத்தறிவு பேசும் தி.க.வினருக்கும் அவர்களின் தலைவர் சிலைகள் வேண்டும். இதெல்லாம் மரபுக் கோளாறில் அடங்காதா? இக்கோளாறைத் தங்கள் வியாபாரத்திற்கு அதிதீவிரத்துடன் பயன்படுத்தி வருகின்றனர் சிலை விற்பன்னர்களும் சிலை திருடும் மாஃபியாவும்.
கலைநயம் சொல்லி சிலைகளை முக்கியத்துவப்படுத்துவதும் எனக்குச் சரியாகப் படவில்லை. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துவிட்ட இக்காலத்திலும் சிற்ப வேலைப்பாடுகளை கலைநுட்பத்தின் உச்சமாகப் பார்த்து வருவது என்னை வியப்பில் தள்ளுகிறது. காலச் சமுத்திரத்தில் நாம் தோண்டி எடுத்த, காலப்போக்கில் அழிந்துவிடக்கூடிய எந்தச் சிற்பத்தின் அழகியலை விட உச்சமான நுட்ப அழகை இன்றைய கணிணி யுகம் சாத்தியப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மெழுகு சிலைகளை உருவாக்குகின்றனர். அருகில் நெருங்கித் தீண்டிப் பார்த்தால்தான் அவை சிலைகள் என்றே தெரியும். எனக்கென்னமோ நமது குழந்தைப் பருவத்தின் பொம்மை ரசனைகள் பரிணாமம் பெற்று மரபின் பிடியில் நம்மைச் சிக்க வைத்து சிக்கலாக்கி வருகிறதோ என்றே நினைக்கிறேன். அப்படியென்றால் நமது சிலை ரசனைகள் குழந்தைத்தனமோ?
வெறும் பரபரப்பின் காரணமாகவோ, சினிமா, அரசியல், ஊடகம் மூலமாகவோ வெட்டி அரட்டை மனிதர்கள் சமகாலச் சாதனையாளராக முன்னிறுத்தப்படுவதற்கு இந்தச் சிலை இச்சித்தல் மரபே ஊக்கியாக உள்ளது. இவ்விடயத்தில் கறாரான மதிப்பீடு தேவை. அறிவுத்தளத்தில் இந்த மரபுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிவுஜீவிகளாவது ஏற்றுக்கொண்டால்தான் பொதுப்புத்தியில் அதன் சாயல் கொஞ்சமாவது படும். சிலை மரபின் உள்ளீடற்ற தன்மை அறிவுக்களத்தில் விவாதிக்கப்படும். நான் எழுப்பியுள்ள கேள்விகள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டியவை. நம்மிடம் விடை இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த மரபுக்கு விடைகொடுக்க வேண்டும்.
அபு
குகைவாசிகள்
அன்புள்ள அபு அவர்களுக்கு,
நலம்தானே?
உங்கள் கடிதத்திற்கான என் எண்ணங்களை பிறகு எழுதுகிறேன்
நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
ஜெ