‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9

பகுதி இரண்டு : அலையுலகு – 1

கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான் பார்த்தன் அறிவிழி கொண்டவனானான். மானுடவிழிகள் புற ஒளியால் மட்டுமே பார்ப்பவை. அவன் விழிகள் அகஒளியாலும் பார்க்கும் வல்லமை கொண்டவை.”

சுஜயன் தலையை தூக்கி அவள் கன்னங்களை தன் கையால்பற்றி திருப்பி “நான்… நான்… எனக்கு?” என்றான். “உனக்கு என்னடா செல்லம்?” என்றாள் மாலினி. “எனக்கு கண்?” என்றான் சுஜயன். “உனக்கும் அறிவிழி கிடைக்கும். நீ பெரியவனாகி போரில் வென்று தேவர்களிடமிருந்து அதை பெறுவாய்.” சுஜயன் “பெரிய கண்!” என்றான். கைகளை விரித்து “ஏழு கண்!” என்று சொன்னபின் “நான் ஏழுகண்களை வைத்து… ஏழு அரக்கர்களை கொல்வேன்” என்று சொல்லி கைகளை தன் தொடைகள் நடுவே செருகி உடலைக்குறுக்கி தோள்களை ஒடுக்கிக்கொண்டான்.

மாலினிக்குப் பின்னால் அமர்ந்திருந்த சுபகை “இந்தக் கதையையே பலவாறாக சொல்கிறார்கள். சித்ரரதனை இளவரசர் தூக்கிக்கொண்டுவந்து தருமரின் காலடியில் போட்டதாகவும் கும்பீநசி வந்து தருமரின் கால்களில் விழுந்து அழுததனால் அவர் கந்தர்வனை கொல்லாமல் விட்டதாகவும் கேட்டிருக்கிறேன்” என்றாள். “தருமருக்கும் சூதர்கள் இருப்பார்களல்லவா? என்ன இருந்தாலும் அவர் இந்திரப்பிரஸ்தத்தை ஆளப்போகும் இளவரசர்” என்று மாலினி சிரித்தாள்.

சுபகை தனக்குத்தானே ஏதோ எண்ணிக்கொண்டு புன்னகைத்தாள். “என்னடி சிரிப்பு?” என்றாள் மாலினி. “இல்லை” என அவள் தலையசைத்தாள். “சொல்லடி… ஏன் சிரித்தாய்?” என்றாள். “இல்லை, மூவுலகையும் பார்ப்பதற்குரிய விழிகொண்டவர் காணும் கனவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?” என்றாள் சுபகை. “ஆம், நாம் காணும் இருளுலகங்களையும் நிழலுலகங்களையும் அவன் காண்பானா? அவனிடமே கேட்டிருக்கிறேன். இதெல்லாம் வெறும் சூதர்கதை அன்னையே. நான் அஸ்தினபுரியில் இல்லாத காலங்களில் என் நினைவை நிலைநிறுத்த சூதர்கள் கதைகளை புனைந்துகொண்டே இருக்கிறார்கள். நான் திரும்பி வந்தபின்னர்தான் அவற்றை அறிகிறேன். பல கதைகளைக் கேட்டு எனக்கே மயிர்கூச்சம் ஏற்படுகிறது என்றான்.”

சுபகை “உண்மை. இக்கதைகள் எல்லாமே இவரைப்போல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்காக சொல்லப்பட்டவை போலிருக்கின்றன” என்றாள். சுஜயன் “நான் வாளால் வெட்டியபோது என் மேல் வாள் பட்டு குருதி… ஏழு குருதி என் கால் வழியாக…” என்று சொல்லி தன் காலைத்தூக்கி காட்டினான். சுபகை மீண்டும் தனக்குள் சிரித்தாள். “சொல்லடி… நீ ஏன் சிரித்தாய்? நீ நினைத்தது இப்போது சொன்னதை அல்ல” என்றாள் மாலினி.

சுபகை “அய்யோ இல்லை, நான்…” என்றாள். “நீ இளைய பாண்டவனைப்பற்றி நினைத்தாய். அவனுடைய பெண்களைப்பற்றி…” என்றாள் மாலினி. “ஆம்” என்று சுபகை தலைகுனிந்தாள். “சொல், என்ன நினைத்தாய்?” சுபகை அகலேற்றி வைக்கப்பட்ட பொற்தாலம் போல முகம் ஒளிகொள்ள “இல்லை… அந்த சாக்ஷுஷி மந்திரத்தை இளையவர் பெண்களிடம் போட்டுப்பார்ப்பதில்லை போலிருக்கிறது என நினைத்தேன்” என்றாள். மாலினி சிரித்துவிட்டாள். “ஏன்?” என்றாள். “அகவிழியால் பெண்களை நோக்கினால் அவர்கள் எப்படி தெரிவார்கள்?” உரக்கச்சிரித்தபடி “அகவிழியில் தெரியும் பெண்ணை ஆணால் கூட முடியுமா?” என்றாள்.

மாலினியும் சிரித்துக்கொண்டு “உனக்கு குறும்பு சற்று மிகுதி” என்றாள். “அதெல்லாம் எதிரிகளிடம் அவன் கையாளும் மந்திரம். பெண்களைப் பொறுத்தவரை அவர்களை தன்னிடமிருந்து மறைக்கும் மந்திரம் எதையாவது வைத்திருப்பான். கேட்டுப்பார்க்கவேண்டும்” என்றாள். “பெண்களை மூடி வைப்பதற்குரியவை சொற்களே. கவிஞர்களை கூப்பிட்டு கேட்டால் அழகிய சொற்களை ஆயிரக்கணக்கில் சொல்வார்கள். சிவக்குறிக்கு மலர்மூடல் வழிபாடு செய்வதுபோல அள்ளி அள்ளிக்கொட்டி மூடிவிடலாம். இறுதிவரை அவளைப் பார்க்காமலேயே ஆண்டு அறிந்து கடந்துசென்றுவிடலாம்.”

அவள் மடியிலிருந்த சுஜயன் கால்களை உதைத்து “கதை சொல்லு” என்றான். “இரு” என்றாள் மாலினி. “கதை சொல்லு… அர்ஜுனன் கதை” என்று சுஜயன் குரலெழுப்பினான். “சொல்கிறேன்…” என்றாள் மாலினி. “சாக்ஷுஷி மந்திரத்தை கந்தர்வன் அர்ஜுனனுக்கு சொன்னான் அல்லவா? கந்தர்வன் வானிலேறிய பின்னர் அர்ஜுனன் அந்த மந்திரத்தை ஆய்வுசெய்து நோக்க விழைந்தான். கண்மூடி அதை மும்முறை சொன்னான். விழிதிறந்தபோது அவன் அக்காடு முழுக்க பல்லாயிரம் மேலுலகத்தவரும் கீழுலகத்தவரும் செறிந்திருப்பதைக் கண்டு திகைத்தான்.”

“அவன் காலடியில் அதுவரை நெளிந்துகொண்டிருந்த நிழல்களெல்லாம் விழிமின்னும் கரிய பாதாள நாகங்கள். இலைநிழல்களென படபடத்தவை மென்சிறகுகள் கொண்ட தேவர்கள். சிறிய பூச்சிகளாக சிறகு மின்ன சுற்றிவந்தவர்கள் கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் என கண்டான். நூறு கைகளை விரித்து வானளாவ எழுந்து நின்றிருந்த பாதாளமூர்த்தியாகிய பகநீலை என்னும் தெய்வத்தின் சிறகுகளைத்தான் சற்று முன்புவரை இரு முகில்கீற்றுகளென கண்டிருந்தோம் என அவன் அறிந்தான். ஆயிரம் கால்களை விரித்து மண்ணில் ஊன்றி ஆயிரம் கைகளை விரித்து நின்ற சகஸ்ரபாகு என்னும் சுதலத்தின் தெய்வமே அங்கே நின்றிருந்த ஆலமரம்.”

மாலினி சொன்னாள் “மண்ணில் ஒளிவிட்ட ஒவ்வொரு கூழாங்கல்லும் ஒரு ஆழுலகத்து விழி. படபடத்த ஒவ்வொரு தளிரும் ஒரு தேவனின் இமை. இவ்வுலகென்பது மேலுலகங்களும் கீழுலகங்களும் ஒன்றுடன் ஒன்று வெட்டிக்கொள்ளும் ஒரு வெளி. இங்கே இடைவெளியே இல்லாமல் அந்த மாற்றிருப்புகள் அடர்ந்து அலையடிக்கின்றன.” சுஜயன் “அவர்கள் ஒருவரோடொருவர் போரிடுவார்களா?” என்றான். “மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தேவையின்றி பார்க்கவே முடியாது. ஓர் உலகத்தவரை இன்னொரு உலகத்தவர் அறியமாட்டார்கள்.”

“எப்படி?” என்று சுஜயன் தலைசரித்து கேட்டான். “இதோ காற்று அடிக்கிறது. அதன்மேல் ஒளிபடுகிறதா என்ன? அவையிரண்டும் ஒரே இடத்தில்தானே உள்ளன?” என்று மாலினி சொன்னாள். சுஜயன் ஒருகணம் திகைத்து தன்முன் தெரிந்த காட்சியை நோக்கினான். அது அவனுக்குப் புரிந்ததும் எழுச்சி தாளாமல் எழுந்து விட்டான். “ஒளி… ஒளி … ஒளி” என்று கைதூக்கினான். அவன் வாய் வலிப்பு வந்ததுபோல கோணலாகியது. “ஒளி” என்று சொல்லி கையை தூக்கியபின் அஞ்சுபவனைப்போல வந்து அவள்மேல் ஒண்டிக்கொண்டான். அவன் உடல் அதிர்ந்துகொண்டே இருப்பதை மாலினி அறிந்தாள்.

“ஒரு புது உலகை கண்டுவிட்டார்” என்று குனிந்து நோக்கி சிரித்தபடி சுபகை சொன்னாள். “அவன் இதுவரை அறிந்த அனைத்துமே மாறிவிட்டன” என்றாள் மாலினி. சுஜயன் மெல்ல உடல் தளரத்தொடங்கினான். அவன் கை மலர்ந்து விரல்கள் விரிந்தன. உதடுகள் வளைந்து மூச்சு சிறிய வாய்நீர் குமிழியுடன் எழுந்து வெடித்தது. அவன் சப்புகொட்டிக்கொண்டு புரண்டுபடுத்து மாலினியின் ஆடையைப்பற்றி வாயில் வைத்து சப்பிக்கொண்டான்.

சுபகை “கதை கதை என்று கேட்டு படுத்துகிறார். என்னதான் சொல்வது? எங்கிருந்து தொடங்குவது?” என்றாள். மாலினி “அர்ஜுனனின் வீரப்பயணங்களைப் பற்றிய விஜயப்பிரதாபம் என்னும் காவியம்தான் கதைக்களஞ்சியம். சூதர்பாடல்களிலிருந்து சதபதர் என்னும் கவிஞர் இயற்றியது. நீ வாசித்ததில்லையா?” என்றாள். “நான் அரண்மனையில் காவியம் வாசிக்குமிடத்தில் இருக்கவில்லை” என்றாள் சுபகை.

“நல்ல காவியம். சிறுவர்களுக்கும் கதைகளாக சொல்லலாம். சிருங்காரப்பகுதிகளை மட்டும் தவிர்த்துவிடவேண்டும். சொல்லப்போனால் அவற்றை எழுபது எண்பது வயதான கிழவர்களும் முனிவர்களும் மட்டும் வாசிப்பது நல்லது. அர்ஜுனனே அதையெல்லாம் வாசித்தால் கெட்டுப்போய்விடுவான்” என்றாள் மாலினி. சுபகை சிரித்துவிட்டாள். “பத்து சர்க்கங்கள் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஓர் உலகம், ஒரு நாயகி. வெவ்வேறு கதைகளைக் கலந்து எழுதியிருக்கிறார்கள்.” சுபகை “அர்ஜுனர் வாரணவதத்தில் இருந்து சென்றபோது நிகழ்ந்தவையா?” என்றாள். “இல்லை, இவை அவன் திரௌபதியை மணந்தபின் நிகழ்பவை என எழுதப்பட்டிருக்கின்றன” என்றாள் மாலினி.

சுபகை தலையசைத்தாள். அவள் முகத்தில் கதை கேட்பதற்கான விழைவைக் கண்ட மாலினி “காவியத்தின் தொடக்கம் இளையவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கதையாக உள்ளது” என்றாள். “மணத்தன்னேற்பில் வில்லை வளைத்து திரௌபதியை மணந்தபின் பாண்டவர் ஐவரும் அஸ்தினபுரிக்கு அருகில் மயனால் கட்டப்பட்ட இந்திரப்பிரஸ்தம் என்னும் பெருநகரியில் குடிபுகுந்த பின்னர்தான் காவியம் தொடங்குகிறது…” சுபகை “அந்நகரம் இன்னும் கட்டப்படவே இல்லையே” என்றாள்.

“சொல்லிலும் கனவிலும் அது எழுந்து நெடுநாட்களாகின்றன” என்றாள் மாலினி. “காவியத்தில் அந்நகரத்தின் மிகப்பெரிய வர்ணனையை அளிக்கிறார் சதபதர். அது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட பெருநகர். நடுவே தருமரின் மாளிகையை மையமாகக் கொண்ட யமபுரி. வலப்பக்கம் பீமனுக்குரிய வாயுபுரி. இடப்பக்கம் அர்ஜுனனின் இந்திரபுரி. பின்பக்கம் நகுலசகதேவர்களின் அஸ்வபுரியும் சக்ரவாளபுரியும். தருமனின் மாளிகை நீல நிறம். பீமனின் மாளிகை மஞ்சள். அர்ஜுனனுக்கு இளஞ்சிவப்பு. நகுலனுக்கு பச்சை. சகதேவனுக்கு வெண்மை.”

“ஐந்து உள்நகரங்களின் தெருக்களின் அமைப்பு, கட்டடங்களின் தோற்றம் எல்லாமே விவரிக்கப்பட்டிருக்கின்றன. மைய மாளிகையைச்சுற்றி பெரிய கோட்டை. அதற்குள் அரசியர் மாளிகைகள்…” சுபகை “பாவம் பாஞ்சால அரசி. கவிஞரின் சொல்லுக்கிணையாக நகரை அமைப்பதற்காகவே அவர் அல்லும்பகலும் உழைக்கிறார். அதை எட்டவே முடியவில்லை” என்றாள். மாலினி “ஆமாம், அதை கட்டி முடிக்கவே முடியாது என்று இப்போதே சூதர்கள் கதைகளை கட்டிவிட்டார்கள். ஊழிக்காலம் முடிவதுவரை அங்கே ஏதோ ஒரு மூலையில் சிற்பிகளின் உளிகள் ஒலித்துக் கொண்டேதான் இருக்குமாம்” என்றாள்.

“இந்திரப்பிரஸ்த நகரியில் கதை தொடங்குகிறது” என்றாள் மாலினி. “ஐவரும் தங்கள் துணைவியுடன் இந்திரபுரியில் குடியேறி இல்லம் புகுதலுக்கான பூதவேள்விகளை இயற்றியபோது அதில் பங்கு கொள்வதற்காக விண்முனிவராகிய நாரதர் வந்தார். ஐவருக்கும் துணைவியாக ஒரு பெண் இருப்பது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல என்றார்.” சுபகை “எவருடைய தெய்வங்களுக்கு?” என்றாள். “ஷத்ரிய ஆண்களின் தெய்வங்களுக்கு… வேறு எவருக்கு?” என்றாள் மாலினி. ”அவர்களுக்கு பெண்கள் கருப்பைகள் மட்டுமே. எவருடைய மைந்தன் என்பதே அவர்களை முழுமுற்றாக வகுக்கிறது. அதில் மயக்கம் வருவதை அவர்களால் ஏற்கமுடியாது.”

“எப்படியோ மணவினை நிகழ்ந்துவிட்டது. ஆகவே அதை மாற்றமுடியாது. ஒருபெண் இருவருடன் இருந்தால் அவளை பரத்தை என்றே நெறிநூல்கள் சொல்லும் என்றார் நாரதர். அர்ஜுனன் அவரை வணங்கி அதற்கு நெறிநூல்களுக்கிணங்க நாங்கள் செய்யவேண்டியதென்ன முனிவரே என்றான். நாரதர் சிந்தனைசெய்துவிட்டு ஆண்டுக்கொரு முறை தன் பிறந்தநாளில் ஒவ்வொருவரும் மறுபிறப்பு கொள்வதாக நெறிநூல்கள் சொல்கின்றன என்றார். அதன் அடிப்படையில் அவர் ஒரு முறைமையை வகுத்தளித்தார்” என்றாள் மாலினி.

மாலினி தொடர்ந்தாள் “திரௌபதியின் பிறந்தநாளில் அவள் அன்று புதியதாகப்பிறந்ததாகக் கருதி முறைப்படி இனிப்பளித்தல், பெயரிடுதல் முதலிய ஜாதகர்மங்களை செய்தபின் அவளை இளவரசர்களில் ஒருவர் மங்கலநாண் அணிவித்து மலர்கொடுத்து மணம்புரியவேண்டும். அவருடன் தனிமாளிகையில் இளவரசி மணவாழ்வில் ஈடுபடலாம். அப்போது பிற நால்வரும் அவளை பார்க்கவோ பேசவோ கூடாது. தங்கள் மனைவியென எண்ணவும் கூடாது.”

“அவ்வுறவு ஓராண்டு நீடிக்கும். அவ்வாண்டு இறுதியில் அடுத்த பிறந்தநாளுக்கு முந்தையநாள் அவள் இறந்துவிட்டாளென்று கருதி இறுதிச்சடங்குகள் செய்து கங்கைநீராடி எழுந்தால் அவ்வுறவு முடிவடையும். மறுநாள் மீண்டும் பிறந்து அடுத்த இளவரசனை மணந்து அவனுடன் வாழலாம் என்றார்.” சுபகை இதழ்கள் கோண “நல்ல திட்டம்… சமையல் பாத்திரங்களைப்போல உடலைக் கழுவலாம் என்கிறார்கள். உள்ளத்தை எப்படி கழுவுவது?” என்றாள். “உள்ளத்தை எண்ணத்தால் கழுவலாமடி. பிறப்பும் இறப்பும் உறவும் எல்லாம் மானுடனின் வெறும் பாவனைகள் மட்டுமே” என்றாள் மாலினி. சுபகை பெருமூச்சுவிட்டாள்.

“அதை தருமன் ஏற்றுக்கொண்டான். முதல்பிறப்பில் அவளுக்கு பாஞ்சாலி என்று பெயரிட்டனர். திரௌபதி, கிருஷ்ணை, யக்ஞசைனி, பார்ஷதி என பிற நான்கு பெயர்களும் அடுத்தடுத்த பிறப்புகளுக்கு. பாஞ்சாலி தருமனின் மனைவியாக யமபுரியில் அமைந்த அவனுடைய நீலநிறமான அரண்மனைக்கு சென்றாள். அங்கே பிறநால்வரையும் அறியாத பத்தினியாக அவனுடன் வாழ்ந்தாள்” என்றாள் மாலினி.

அக்காலகட்டத்தில் ஒருநாள் கடம்பபதத்தைச் சேர்ந்த அந்தணர்கள் குழு ஒன்று அரசரைப் பார்ப்பதற்காக இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தது. பதறியழுதபடி வந்த அவர்கள் அரண்மனைப்பெருமுற்றத்தில் நின்று கூச்சலிட்டனர். ஆராய்ச்சி மணியை அவர்களில் ஒருவன் வெறியுடன் அடித்தான். இந்திரப்பிரஸ்தம் அமைந்த நாள்முதல் ஒருமுறையேனும் ஒலித்திராத மணி அது. ஆகவே அதன் ஓசைகேட்டு அரண்மனை அதிர்ந்தது. அமைச்சுநிலைகளிலிருந்தும் காவல் மாளிகைகளிலிருந்தும் அமைச்சரும் படைத்தலைவர்களும் வந்து அந்தணர்களை சூழ்ந்துகொண்டனர்.

அதற்குள் அங்கே இளைய பாண்டவரே வந்தார். “என்ன நிகழ்ந்தது?” என்றார். “அரசரை அழையுங்கள்… நாங்கள் அவரிடம்தான் பேசவேண்டும். இது அந்தணர் வாழ்வதற்குரிய நாடா என இன்றே அறிந்துகொள்ளவேண்டும்” என்று முதிய அந்தணர் கூச்சலிட்டார். “நான் இளையவன். இவ்வரசை காப்பவன். என்ன என்று சொல்லுங்கள், இக்கணமே ஆவன செய்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நாங்கள் உம்மிடம் பேசவரவில்லை. வீரர்களை அனுப்பி தீர்வுகாண்பதென்றால் எங்கள் ஊரிலேயே பெருவீரர் பலர் உண்டு. அரசரே வந்து வில்லேந்தி எங்களுக்கு நீதியளித்தாகவேண்டும். அதுவே எங்கள் குலத்துக்கு உகந்த முறை… அழையுங்கள் அரசை” என்றனர் அந்தணர்.

அர்ஜுனன் ஏவலனிடம் யமபுரிக்குச் சென்று தருமனிடம் செய்தியைச்சொல்லி அவைகூட ஆணையிடும்படி கோருவதாக சொல்லி அனுப்பினான். ஏவலன் திரும்பிவந்து “அரசர் அரசியுடன் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருக்கிறார். இத்தனை சிறிய செய்திகளுக்கெல்லாம் அவரை அழைக்கலாகாது என்று சினம் கொண்டார். தாங்களே இதை நிகழ்த்தும்படி ஆணையிட்டார்” என்றான். முதிய அந்தணர் “அரசர் வரவில்லை என்றால் விடுங்கள். வில்லுடன் எழுந்து வந்து எங்களைக் காக்கும் அரசர் எங்குள்ளாரோ அங்கு செல்கிறோம். குருகுலத்து அரசர் துரியோதனர் அவையில் பிராமணர்கள் தேவர்களுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்கிறார்கள்” என்றார்.

“அந்தணர்களே, சினம் வேண்டியதில்லை. புதியநகரின் நெறிகளை வகுக்கும் பணியில் இருக்கிறார் அரசர். அவருக்கு மேலும் விளக்கமாக செய்தியை அனுப்புகிறேன்… பொறுங்கள்” என்றான் அர்ஜுனன். “இளையவரே, அவரைப்பற்றி நகரில் நுழைந்ததுமே அறிந்தோம். அந்திமலருக்குள் சிக்கிக்கொண்ட தேன்வண்டு என அவர் பாஞ்சால அரசியில் மூழ்கி இருக்கிறார் என்கிறார்கள் சூதர்கள். அங்கே அவர் ஆராய்வது நெறியை அல்ல, காமத்தை. நெறியாய்ந்தவர் என்றால் அந்தணரைக் காக்க வில்லுடன் இதற்குள் எழுந்து வந்திருப்பார்” என்றார் அந்தணர்தலைவர்.

“பொறுங்கள் அந்தணர்களே, பொறுங்கள்…” என்றான் அர்ஜுனன் “நான் ஆவனசெய்கிறேன். தங்கள் உறுதியை சற்றே தளர்த்திக்கொள்ளுங்கள். பரதகுலத்தில் நானே நிகரற்ற வீரன் என்கிறார்கள். நான் வந்து உங்கள் குறைகளை தீர்க்கிறேன். என்னிடம் உரையுங்கள்.” அந்தணர்தலைவர் “இளையவரே, எவன் ஒருவன் தனக்கென எந்தப்படைக்கலமும் இல்லாமலிருக்கிறானோ அவனே அந்தணன் என வகுக்கின்றன நெறிநூல்கள். ஷத்ரியனுக்கு வாளும் வைசியனுக்கு செல்வமும் சூத்திரனுக்கு உழைப்புக்கருவிகளும் படைக்கலங்கள். சொல் அன்றி பிறிதேதும் அற்றவனே அந்தணன். அச்சொல் அரசால் நேரடியாக காக்கப்படவேண்டும். இல்லையேல் இறுகமூடப்பட்ட கலத்தில் அகல்சுடர் அணைவதுபோல அந்தணர் அழிந்துவிடுவார்கள்.”

“சூத்திரனின் செல்வம் ஒவ்வொரு பருவத்துடன் பிணைந்தது. வைசியனின் செல்வம் பாதைகளுடன் பிணைந்தது. ஷத்ரியனின் செல்வமோ நாடுகளுடன் பிணைந்தது. மண்ணில் எதனுடனும் பிணையாதது பிராமணனின் செல்வம். மண்ணில் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன. மாறாததென நின்றிருக்கும் சொற்களை நம்பியே இங்கு மானுடர் வாழ்கிறார்கள். அச்சொல்லைப் பேணும் கடமைகொண்டவன் பிராமணன். அவர்களை நிலைநாட்டும் பொறுப்புள்ளவன் மன்னன். ஆகவே அந்தணரைக் காக்க அவனே எழுந்தாகவேண்டும்” முதிய அந்தணர் சொன்னார்.

“கேளுங்கள் இளையவரே, அரண்மனையின் முத்திரை இருப்பதனால்தான் செம்புத்துண்டு நாணயமாக ஆகிறது. எங்கள் சொற்களில் எல்லாம் அரசனின் முத்திரை இருந்தாகவேண்டும். அவற்றை எவர் மீறினாலும் அரசனின் வாள் எழும் என்பது கண்கூடாக நிறுவப்பட்டாகவேண்டும். ஆகவேதான் அரசரே நேரில் வரவேண்டும் என்கிறோம்” என்றார் முதியவர். அர்ஜுனன் சினத்துடன் படைத்தலைவர் சிம்ஹபாகுவை நோக்கி “உடனே சென்று அரசரை கூட்டிவாருங்கள். நான் சொன்னதாக சொல்லுங்கள்” என்றான். சிம்ஹபாகு குறடுகள் ஒலிக்க ஓடினார்.

சற்றுநேரத்தில் அவர் சோர்ந்து திரும்பி வந்து “அரசர் படுக்கையறைக்கு சென்றுவிட்டார். அரசியும் உடனிருக்கிறார். இப்போது அவர்களை அழைக்கமுடியாதென்றாள் சேடி” என்றார். அர்ஜுனன் அக்கணத்தில் அனைத்தையும் மறந்தான். “இதோ வருகிறேன் அந்தணர்களே” என்று சொல்லி திரும்பி இடைநாழியில் விரைந்து ஓடி முற்றங்களில் இறங்கி யமபுரியின் குறுமதில்சூழ்கையை கடந்து நீலமாளிகைக்குள் சென்றான். எதிரே வந்த சேடியிடம் “விலகு” என்று உறுமினான். மஞ்சத்தறையின் பித்தளைப்பூணிட்ட தாழை விசையுடன் இழுத்து ஓசை எழுப்பினான்.

தாழொலிக்கக் கதவைத் திறந்தவள் பாஞ்சாலி. அவள் மேலாடை நழுவியிருந்தது. கன்னமும் கழுத்தும் தோள்களும் காமத்தின் குளிர்வியர்வையால் பனித்திருக்க மூச்சில் முலைகள் எழுந்து அமைந்தன. ஆழ்ந்த குரலில் “என்ன?” என்று கேட்டாள். “இல்லை” என்று சொல்லி அர்ஜுனன் திரும்ப போனான். “ஏன் அழைத்தீர்கள்?” என்றாள் திரௌபதி. “அலுவல்…” என்று சொல்லி அவன் விழிகளை திருப்பிக்கொண்டான். விரைவாக அள்ளிப்போட்ட அவள் ஆடை தோளில் சரிந்தது. அதை வலக்கை இயல்பாகச் சென்று அள்ளிச்சேர்க்க அவ்வசைவை அவன் விழிகள் உடனே அறிந்தன. கால்களை சற்றே விலக்கி இடையை ஒசிய வைத்து அவள் நிற்பது ஏன் என அவன் அறிந்தான்.

அவளிடமிருந்த மணத்தை சித்தத்திலிருந்து விலக்கும்பொருட்டு அவன் சொல்லெடுத்தான். “நான் சென்று… பிறகு வருகிறேன்” என்றான். மஞ்சத்தில் எழுந்து அமரும் உடல் அப்போதும் தருமனுக்கு அமையவில்லை. ஆடையை அள்ளி தன்மேல் குவித்தபடி அமர்ந்து ”பார்த்தா, என்ன செய்கிறாய் என உணர்ந்திருக்கிறாயா?” என்றான். “பொறுத்தருள வேண்டும்… அந்தணர்கள் வந்தமையால்…” என்றான் அர்ஜுனன். “எவர் வந்தாலென்ன? எப்படி நீ என் அரண்மனைக்குள் நெறிமீறி நுழையலாகும்?” என்றான் தருமன்.

“பொறுத்தருள்க மூத்தவரே. தாங்களே நேரில் சென்று தீர்க்கவேண்டிய இடர் ஒன்று வந்துள்ளது. அந்தணர்களின் தீச்சொல் எழுந்துவிடலாகாது என்பதற்காகவே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “அந்தணர் தீச்சொல் பின்னால் வரும். அதற்கு முன் மூதாதையர் பழிச்சொல் சூழ்ந்துவிட்டிருக்கிறது மூடா. இதோ இவள் மறுபிறப்பெடுத்த என் மணமகள். இவளை நீ எப்படி உன் விழிகளால் நோக்கினாய்? இவளை நீ இப்போது இழிமகளாக ஆக்கினாய்…” அர்ஜுனன் மறுமொழி சொல்லாமல் தலைகுனிந்தான்.

தருமன் அச்சினத்தாலேயே உடல் மீண்டான். எழுந்து தன் சால்வையை போட்டபடி நடந்தான். “அந்தணர் கோருவதை நான் இப்போதே முடிக்கிறேன். ஆனால் நீ செய்த பிழைக்கு என்ன மாற்று என நிமித்திகர் சொல்லட்டும்” என்றபடி சென்றான். அர்ஜுனன் அவன் பின்னால் செல்ல காலெடுத்தபோது மிகமெல்லிய உடைநலுங்கும் ஓசை அவனை அழைத்தது. திரும்பி அவள் விழிகளை நோக்கியபின் பதறி மூத்தவன் பின்னால் ஓடினான்.

அவைக்களம் வந்த தருமன் “அந்தணரே, என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள்” என்றான். “மலைவேடர் சிலர் எங்கள் பசுக்களை கவர்ந்து சென்றுவிட்டனர். அவற்றை மீட்டளிக்கவேண்டும்” என்றார் முதியபிராமணர். “நிகரான பசுக்களை இப்போதே அளிக்கிறேன். பசுக்களைக் கவர்ந்தவர்களை எங்கள் படைவீரர்கள் கொன்று அப்பசுக்களை மீட்டு வருகையில் நானே வந்து அவற்றை உங்களுக்கு அளிப்பேன்” என்று தருமன் ஆணையிட்டான். “அவ்வண்ணமே ஆகுக! மூதாதையர் அருளும் மூத்தார் அருளும் உங்களிடம் தங்குக!” என்றார் முதிய அந்தணர்.

அன்று மாலையே அவையில் பன்னிரு நிமித்திகர்கள் கூடினர். அர்ஜுனன் தன் செய்கை பிழை என தலைகுனிந்து ஏற்றுக்கொண்டான். முதுநிமித்திகர் பார்வதர் “அரசே, காமம், உணவு, ஊழ்கம் மூன்றும் ஒன்றே என்கின்றன நூல்கள். ஆகவே ஊழ்கத்தைக் கலைப்பதற்கு என்ன தண்டனையோ அதையே இதற்கும் அளிக்கலாமென எண்ணுகிறோம். இளையவர் இன்றே வெறும் கையுடன் தவக்கோலம் பூண்டு காடேகவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் எல்லைக்குள் அவர் இருக்கலாகாது. அவருடன் இருக்கவேண்டிய ஓராண்டையும் அரசி தங்களுடன் கழிக்கவேண்டும்” என்றார்.

முகம் மலர்ந்த தருமன் “தங்கள் நூலறிவு அவ்வண்ணம் கூறுமென்றால் அதுவே ஆகட்டும்” என்றான். அர்ஜுனன் தலைவணங்கி “ஆணையை ஏற்கிறேன்” என்றான். தலைதிருப்பி அப்படியே சென்றுவிடவேண்டுமென்றே விழைந்தான். ஆனால் தூணிலிருந்த வெண்கலக் கவசத்தின் ஒளியில் திரௌபதியின் முகத்தில் கூர்கொண்டு நின்ற விழிகளை கண்டான். நெஞ்சு அதிர தன்னை விலக்கிக்கொண்டு “நான் இன்றே கிளம்புகிறேன் மூத்தவரே” என்றான்.

”அன்றே இளைய பாண்டவன் கிளம்பி காடேகியதாக சதபதரின் நூல் சொல்கிறது” என்றாள் மாலினி. “அதன்பின் பதினான்கு ஆண்டுகாலம் அவன் இந்திரபுரிக்கு திரும்பவில்லை. அவன் அந்தப்பயணத்தில் சென்ற ஊர்களையும் வென்ற வீரர்களையும் அடைந்த கன்னியரையும்தான் காவியம் விவரிக்கிறது.” சுபகை “ஆண்டுகள் என்றாலே பதினான்குதான் இவர்களுக்கு” என்றாள். “ரகுகுல ராமனும் பதினான்கு ஆண்டுகாலம் அல்லவா காடேகினான்?”

“அவன் தன் தேவியை தேடிச்சென்றான். இவன் தேவியரை அணுகும்பொருட்டு சென்றான்” என்றாள் மாலினி. “இந்தக் காவியத்தை ஒருநாள் இளையபாண்டவனையே அருகே அமரச்செய்து வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.” சுபகை சிரித்து “அய்யோ, நாணம்கொண்டு சிவந்துவிடுவார்” என்றாள். மாலினியும் சிரித்தாள். சுஜயனை மெல்லத்தூக்கி “செல்வோம். வெயில் ஏறிவருகிறது” என்றாள். “முதலில் எங்கு சென்றார்?” என்றாள் சுபகை. “முதல் பயணம் நாகருலகுக்கு. அங்கே உலூபியை மணந்தான்.”

சுபகை சுஜயனை வாங்கி தன் தோளில் பதமாக போட்டுக்கொண்டாள். அவள் தோள்வளைவில் வாயைச் சேர்த்து வெம்மையுடன் மூச்சுவிட்டு அவன் துயின்றான். வாய்நீர் வழிந்து முதுகில் ஓடியது. “நாகர்கள் மலைமக்கள் அல்லவா?” என்றாள் சுபகை. “ஆம், அவர்களைப்பற்றி நாமறிந்தவை சிலவே. நமக்குக் கிடைப்பவை எல்லாம் வெறும் சூதர்கதைகள்.” அவர்கள் சிறிய பாதையில் நாணல்களின் நடுவே நடந்தனர். அப்பால் குன்றின்மேல் அவர்களின் தவக்குடில் வெயிலில் ஒளிவிட்டுத்தெரிந்தது.

முகில்கள் எரிந்துகொண்டிருந்த வானத்தை நோக்கியபடி சுபகை சொன்னாள் “நான் எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் ஒன்றே.” மாலினி “என்ன?” என்றாள். “இடைநாழிவரை சினத்துடன்தான் இளையபாண்டவர் சென்றிருப்பார். ஆனால் நீலமாளிகைக்குள் செல்லும்போது அவர் நெஞ்சில் பாஞ்சாலியை சந்திக்கும் விழைவு இல்லாமலா இருந்திருக்கும்?” மாலினி “இதையெல்லாம் எப்படி நாம் எண்ணித்தீர்க்கமுடியும்?” என்றாள். தயக்கத்துடன் “இல்லை…” என்றாள் சுபகை.

“அடி, கதவு தட்டப்பட்டபோது அவள் ஏன் எழுந்து வந்து திறந்தாள்?” என்றாள். “அவர் காலடியோசை அரசிக்குத் தெரிந்திருக்குமோ?” என்றாள் சுபகை. “அந்தக் காலடியோசையே அவளுக்கு சொல்லியிருக்கும்” என்றாள் மாலினி. “அகஆழம் காத்திருப்பவற்றை செவிகள் தவறவிடுவதில்லை.” சற்றுநேரம் கழித்து சுபகை “ஆம்” என்றாள்.

முந்தைய கட்டுரைநமது கோட்டையின் கொடி
அடுத்த கட்டுரைராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்