அன்புள்ள திரு.ஜெயமோகன்
ஹொய்சாளப்பயணக்கட்டுரைகள் படித்தேன். பெலவாடிக்கு சென்றிருந்தீர்களா என ஒரு கள்ள எதிர்பார்ப்பு இருந்தது.
சமீபத்தில் சிக்மகளூருக்கு அருகில் ஒரு தோட்ட வீட்டில் விடுமுறைக்காக சென்றிருந்தோம். திரும்பி பெங்களூருக்கு வரும் வழியில் அப்படியே
சிக்மகளூர் டவுனில் காப்பிபொடி, மிளகு, ஏலம், முந்திரி எல்லாம் வாங்கிகொண்டோம். கடைக்காரார் எங்கிருந்து வருகீறீர்கள்
என்ன திட்டம் எல்லாம் கேட்டார். பெங்களூருக்கு செல்லும் வழியில் அப்படியே பேலூர் ஹளேபீடு பார்த்து விட்டு செல்லபோகிறோம் என்றேன். அவர் என்ன நினைத்தாரோ என்னவோ…என் முகத்தில் ஒரு ’கனாய்சியர்’ சாயல் இருந்தது
என வைத்துக்கொள்வோமே….நீங்கள் ஒன்று செய்யுங்கள் என பெலவாடிக்கு மிகத்தெளிவாக ஒரு வரைபடம் வரைந்து இங்கு கண்டிப்பாக செல்லுங்கள். இங்கு இருக்கும் கிருஷ்ணர் சிலை மிக அழகானது. நீங்கள் பார்த்துவிட்டு என்னை நினைத்து நன்றி சொல்வீர்கள் என சொன்னார். இப்படி ஒரு முன்பின் தெரியாதவர் சொன்னால் அதை அப்படியே கேட்டுவிடுவது என் வழக்கம்.
பெலவாடிக்கு செல்லும் வழியில் மொத்த்மே 10 பேர் தான் தென்பட்டனர். இந்தியா எப்படி காலியாக இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். வழியில் பெரும்பாலும் வறண்ட பூமி. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு நிலங்களில் காளைகளை வைத்து உழவு நடந்து கொண்டு இருந்தது. 2-3 முன்று பஸ் ஸ்டாப்களில் நின்று கேட்டுகொண்டே சென்றோம். ஒரு வழியாக கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு பெண்ணரசிகளுக்கும் சரி பசி. முக்கு கடையில் இளநீர் வாழைப்பழம் வாங்கி கொடுத்து கார் செல்ல இயலாத சந்தில் காரை பிரதான வீதியில் நிறுத்தி விட்டு சந்தில் நடந்து சென்றோம். கோயில் வெளியில் இருந்து பார்ர்கும் போது ஒன்றும் விஷேமாக தெரியவில்லை.
வெளியே செருப்பை கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தால் கருங்கல் சூடு உள்ளங்காலை பொசுக்கிவிட்டது. அழ ஆரம்பித்து இருந்த எனது இரண்டாவது
மகளை அப்படியே தூக்கி கொண்டு சென்றேன்.
உள்ளே சென்றால் மயக்கிவிட்டது. வட்ட வட்டமான கருங்கல் தூண்கள் பளபளவென மின்னின. பிரகாரத்தின் உள்ளே அடுக்கு அடுக்காக பிரகாரங்கள்.
பட்ட பகலில் கும்மிருட்டில் சிருங்கார ரசம் ததும்பி வழியும் கோபால கிருஷ்ணர் விக்ரஹம். ஒரு கணத்தில் 5 நூற்றாண்டுகள் பின்னாலேயும் மறு கணத்தில்
அலகிலா காலவெளியிலும்.
அப்புறம் எனது சொன்னபேச்சு கேட்காமலும் சாக்லேட்டில் பாதி தராமலும் எனது மகள் ரவுசு பண்ணினால் அப்பா அந்த கோவிலில் உன்னை கால் சுடும் கருங்கல்
தரையில் அன்று தூக்கினேனே என நினைவு படுத்தி வழிக்கு வர செய்தேன். என்ன அதுவும் 4 /5 முறைக்கு பலித்தது.
ஆனால் அவளுக்கு இந்நினனவுகள் ஒரு ஓரத்தில் தங்கினாலே போதும். வேறென்ன் வேண்டும்?
ஸ்ரீநிவாஸன்