ஜெமோ
நீங்கள் உங்களை காந்தியவாதி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். நான் உங்கள் நாகர்கோயிலில் வசிக்கிறேன். ஜீன்ஸும் சட்டையும் போட்டிருக்கிறீர்கள். ஆடம்பர ஓட்டல்களில் தங்குகிறீர்கள். சொகுசுக்கார் வைத்திருக்கிறீர்கள். எந்தமாதிரியான காந்தியவாதி நீங்கள்? இல்லை இனிமே காந்தியம் இப்படித்தானா?
ஆர்.எட்வர்ட்
அன்புள்ள எட்வர்ட்,
நான் காந்தியவாதி இல்லை. அப்படிச் சொல்லிக்கொள்வதில்லை. அதற்குரிய வாழ்க்கையை நான் வாழவும் இல்லை. ஆடம்பரங்களை விடுங்கள். அடிப்படையான ஒன்று உண்டு, காந்தியத்தின் முதல் அடிப்படையே தற்சார்பு என்பதுதான். நாடுகள், கிராமங்கள் மட்டும் அல்ல, தனிநபர்கள்கூட. தன் வேலையை தானே செய்யத்தெரிந்தவனே காந்தியவாதி.
இன்றுகாலைதான் பயணம் முடிந்து வீட்டுக்குவந்தேன். மின்னஞ்சல்களைப் பார்த்தேன். முதுகுவலியுடன் எழுத அமர்ந்தேன்.என் மனைவி ஊரில் இல்லை.மாலை களைப்பாக இருக்கிறதே என சிந்தித்தபின்புதான் மதியம் சாப்பிடவில்லை என உணர்ந்தேன். மறந்துவிட்டேன். வீட்டில் தோசைமாவு இருந்தது. ஒரே ஒரு தோசை போட்டேன். ஏதோ நினைப்பில் மேலே சென்று எழுத அமர்ந்தேன். கருகல் நாற்றம் அறிந்து ஓடிவந்தேன். கரியை சாப்பிட்டேன். இதுதான் என் அன்றாட வாழ்க்கை.
என்னிடம் எவராவது சாப்பிடும்படி நினைவூட்டாவிட்டால் சாப்பிடுவது மறந்துவிடும். இளமையில் மனைவி விடாமல் நினைவூட்டிக்கொண்டிருந்தாள். இப்போது அவளும் சலித்துவிட்டாள். பெரும்பாலான நாட்களில் மாலையில் சமையலறைக்குப்போய் ஆறிப்போன உணவைப்பார்க்கையில்தான் அது மதிய உணவு என்பதே நினைவுக்கு வருகிறது. என் சொந்த விஷயங்களை திறம்படச்செய்துகொள்ள முடியவில்லை. எந்தக்காந்தியவாதியும் இப்படி இருக்கமாட்டார்
உண்மையில் பெரும்பாலான வேலைகளை என்னால் செய்யமுடியும். விவசாயவேலைகள் தெரியும். சமையல்தெரியும். பல்வேறு கைவினைப்பொருட்கள் செய்வேன். மின்சாரவேலைகள் செய்வேன். ஆனால் இன்று என் கற்பனை எதையும் செய்யவிடாமல் இன்னொரு உலகில் அழுத்தி வைக்கிறது. இன்னொருவரைச் சார்ந்திருப்பதில் இருந்துதான் சுரண்டல் தொடங்குகிறது. ஆகவே காந்தியவாதியாக இருக்கும் தகுதி எனக்கில்லை.
ஆடம்பரத்தைப் பொறுத்தும் இதைத்தான் நான் சொல்வேன். எளிமை என்பது காந்தியத்தின் அடிப்படை. நுகர்வியத்திற்கு எதிரானதாக காந்தி எளிமையை முன்வைக்கிறார். தற்சார்பின் அடிப்படையும் எளிமையே. ஆனால் எளிமை என்பது சாராம்சத்தில் கலைக்கு எதிரானது. ஓர் எல்லையில் அழகுக்கேகூட எதிரானதுதான். காந்தி தன்னளவில் கலைக்கும் அழகுக்கும் பெரிய முக்கியத்துவம் அளிக்காதவர்.
ஆனால் என் இயல்பு அப்படி அல்ல. அழகிலிருந்து, கலையிலிருந்து என்னால் தப்ப முடியாது. ஆகவே மெல்ல ஆடம்பரத்திலிருந்தும் தப்பமுடியாமலாகி விட்டது. ஆடம்பரமே இருவகை என நினைக்கிறேன். வெறும் ஆணவநிறைவுக்கான ஆடம்பரமே நாம் அறிந்தது. சமூக அந்தஸ்துக்கான புறஅடையாளங்களை விரும்புவது அது. அவ்வகை மனநிலை என்னிடம் இல்லை. ஆனால் கலையழகு என்னை எப்போதும் தொடர்கிறது. நன்கு பராமரிக்கப்பட்ட் ஒரு உயர்தர விடுதி அறை என்னைப்பொறுத்தவரை ஒரு கலையனுபவம். ஒரு கார் வாங்குவதென்றால் அழகிய காரையே என்னால் ஏற்கமுடியும்.
நான் மட்டுமல்ல கலைஞர்கள் எவருமே முழுமையாக காந்தியவாதியாக இருக்கமுடியாதென்றே நான் நினைக்கிறேன். அதில் குற்றவுணர்வுகொள்ள ஏதுமில்லை. காந்தியவாதியான லாரி பேக்கர் ’உயர்தர ஒயினை காந்தி மறுத்தால் காந்தியை நான் மறுப்பேன்’ என்று சொல்லிச் சிரித்ததை நினைவுறுகிறேன். நான் எளிமையை அல்லது தற்சார்பை எவருக்கும் உபதேசமும் செய்வதில்லை.
அப்படியென்றால் காந்தியில் எதை நான் ஏற்கிறேன்? எதை முன்வைக்கிறேன்? காந்தியத்தில் நவீன ஜனநாயக யுகத்திற்கு இன்றியமையாத சில கொள்கைகள், வழிகள், தரிசனங்கள் உள்ளன. அவற்றைமட்டுமே நான் முன்வைக்கிறேன். அதை வேண்டுமென்றால் எடுத்தாளப்பட்ட காந்தியம்,நடைமுறை காந்தியம் [Applied Gandhism] என்று சொல்லலாம்.
ஜெ