சிலைகள் பற்றி எழுதியிருந்தேன். நண்பர்கள் அப்படியென்றால் எவரெவருக்குச் சிலை வைக்கப்படவேண்டும், எதற்காக என்று கேட்டிருந்தனர். ஒரு பட்டியலை அளிக்கலாமே என்று சொல்லியிருந்தனர். ஒரு பட்டியலை இட்டாலென்ன என்ற எண்ணம் வந்தது. அது தமிழ்நாட்டில் நாம் கவனிக்கவேண்டியவர்கள், கவனிக்க மறந்தவர்கள் எவரெவர் என்று இளையதலைமுறையினர் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும்.
நான் மிகவிரிவான ஒரு பட்டியலை போடவிரும்பவில்லை. கட்டக்கடைசியில் உள்ளூர் சாமியை பிள்ளைத்தமிழ் பாடிய கவிராயர் வரை பட்டியல் வந்து நிற்கும். போர்ஹெயின் கதையில் நாடளவுக்கே பெரிய அளவுள்ள வரைபடம் ஒன்றை தயாரிப்பதைப்போல ஆகும். ஆகவே மிகமுக்கியமானவர்கள் மட்டும் கொண்ட பட்டியல் இது. விடுபட்டவர்களை நண்பர்கள் காரண காரியத்துடன் சுட்டிக்காட்டலாம்.
இப்பட்டியலில் என்னென்ன அளவுகோல்களைக் கொண்டு ஆளுமைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறேன்.
1. அவர்கள் தமிழர்கள்.
தமிழ்ப்பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் அரும்பணியாற்றிய வெளிநாட்டினர் பலர் உண்டு. ஆனால் அது வேறு ஒரு பட்டியல்.இது நம்மவர் செய்தது என்ன என்பது பற்றியது
2. நவீன காலகட்டத்தை, அதாவது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டைச்சேர்ந்தவர்கள்
முந்தைய காலகட்டம் ஒருவகையில் ஊகிக்கப்பட்ட வரலாறே. அது பெருமளவு சமகால பார்வையை ஒட்டி , சமகாலத்தில் கிடைக்கும் தகவல்களை ஒட்டி உருவாக்கப்பட்டது
3. ஒருதுறையில் முன்னோடிகள் , உச்சகட்ட சாதனை செய்தவர்கள்,ஒரு மரபைத் தோற்றுவித்தவர்கள் கருத்தில்கொள்ளப்படுகிறார்கள்.
4 ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்தவர்கள் கருத்தில்கொள்ளப்படவில்லை. அது பொதுவான புறவய விவாதத்திற்குரிய தளம் அல்ல
5 அரசியல், சினிமா இரண்டையும் தவிர்த்துவிடுகிறேன். ஏனென்றால் அத்துறைகளில் ஏறத்தாழ அத்தனைபேருக்குமே சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.
6. மறைந்தவர்கள் மட்டுமே கருத்தில்கொள்ளப்படுகிறார்கள்
*
நவீன இலக்கியம்
1. பாரதி
ஏனென்றால் பாரதி ஒரு மகத்தான திருப்புமுனை. தமிழ் இலக்கியம், இதழியல், அரசியல்சிந்தனை ஆகிய மூன்றிலுமே இன்றைய போக்குகள் பலவற்றைத் தொடங்கி வைத்த மேதை. தமிழின் நவீன காலகட்டம் அவரிலிருந்தே தொடங்குகிறது.
2. மாயூரம் வேதநாயகம்பிள்ளை
ஏனென்றால் மாயூரம் வேதநாயகம்பிள்ளை தமிழ்நாவலின் முதல்வடிவை எழுதியவர். நவீன இலக்கியத்திற்கான மன அமைப்போ மொழித்திறனோ அவரிடமிருக்கவில்லை. ஆனாலும் தொடக்கம் என்பது எப்போதும் மகத்தானது.
3. அ.மாதவையா
ஏனென்றால் இலக்கியம் என்பது சமூகசீர்திருத்ததிற்கான கருவி என எண்ணியதிலும் சரி, இலக்கியத்தின் நவீனப்போக்குகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டுவந்ததிலும் சரி அ.மாதவையா ஒரு முன்னோடி. அத்துடன் சளைக்காத சமூகசீர்த்திருத்தவாதியும்கூட
4. வ.வெ.சுப்ரமணிய அய்யர்
ஏனென்றால் வ.வெ.சு.அய்யர் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பால் முதன்மையான இலக்கியவாதி. தமிழ் நவீன இலக்கியத்திறனாய்வு மரபின் முதல் ஆளுமை அவரே. ஏ.வி.சுப்ரமணிய அய்யர், ரா.ஸ்ரீ.தேசிகன் என அம்மரபு தொடர்ந்தது. கம்பனைப்பற்றிய கட்டுரை உட்பட அய்யரின் முக்கியமான கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன என்றாலும் அவை தமிழ் இலக்கியமரபை நவீன இலக்கியத்திறனாய்வின் கருவிகளுடன் ஆராய்வதற்கான தொடக்கங்கள்.
5. புதுமைப்பித்தன்
ஏனென்றால் நவீனத்தமிழிலக்கியத்தின் ஐயத்திற்கு அப்பாற்பட்ட சிலமேதைகளில் ஒருவர். இன்றைய நவீனத்தமிழ் எழுத்தின் எல்லா வகையான எழுத்துமுறைகளுக்கும் அவரே முதல்புள்ளி.
6. க.நா.சுப்ரமணியம்
ஏனென்றால் நவீன இலக்கியம் அதன் செறிவு காரணமாகவே குறைவான கல்வியறிவுகொண்டிருந்த தமிழ்ச்சூழலுக்கு ஒவ்வாததாக அன்னியப்பட்டபோது ஓரு தனிநபர் இயக்கமாகச் செயல்பட்டு இலக்கியத்தை நிலைநிறுத்த முயன்று வென்றவர். அவரது இலக்கியத்திறனாய்வு மரபே நவீனத்தமிழிலக்கியத்தை தர அடிப்படையில் வரையறைசெய்தது.
7. சி.சு.செல்லப்பா
ஏனென்றால் இன்றுவரை தொடரும் சிற்றிதழ் இயக்கத்தின் பிதா சி.சு.செல்லப்பாதான். தமிழ்ச்சூழலில் இலக்கியம் சிந்தனை இரண்டையும் தொடர்ச்சியாக தீவிரத்துடன் நிலைநிறுத்தியது இவ்வியக்கமே.
8. தி.ஜானகிராமன்
ஏனெறால் ஜானகிராமன் தமிழிலக்கியத்தின் சாதனையாளர்களில் ஒருவர். நுட்பம் என்பதை நவீன உரைநடையில் சாத்தியமாக்கிய முன்னோடி
9 சுந்தர ராமசாமி
ஏனென்றால் ஓர் இலக்கியப்படைப்பாளி என்பதுடன் அவர் ஓர் இலக்கிய இயக்கமும் கூட. முப்பதாண்டுக்காலம் தமிழிலக்கியத்தின் அடிப்படை மதிப்பீடுகளை சமரசமில்லாமல் முன்வைக்க அவரால் முடிந்தது
10 ஜெயகாந்தன்
ஏனென்றால் நவீனத்தமிழிலக்கியம் ஜெயகாந்தன் வழியாகவே ஒரு மக்களியக்கமாக மாறியது.
பண்பாட்டு ஆய்வு
1.அயோத்திதாச பண்டிதர்
ஏனென்றால் அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்ப்பண்பாட்டின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை மரபுக்குள் இருந்த ஒடுக்கப்பட்ட குரலைக்கொண்டு தாக்கி உடைக்கமுயன்ற முதற்சிந்தனையாளர். அதன்மூலம் இம்மரபு தன்னை மறுபரிசீலனைசெய்துகொள்ளவைத்தார்
2 ஆ.சிங்காரவேலு முதலியார்
ஏனென்றால் தமிழின் முதல் பண்பாட்டுக் கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அபிதானசிந்தாமணியின் ஆசிரியர்
3.ந.மு.வெங்கடசாமி நாட்டார்
ஏனென்றால் தமிழ்ப்பண்பாட்டின் தவிர்க்கமுடியாத கூறுகளான பௌத்தம் சமணம் ஆகியவற்றின் பங்களிப்பை ஐயம்திரிபற நிறுவியவர் நாட்டார்
4 .நா.வானமாமலை
ஏனென்றால் தமிழ்ப்பண்பாட்டின் அடித்தளமான நாட்டாரியலை நோக்கி சிந்தனைத்தளத்தைத் திருப்பிய முன்னோடி. பின்னாளில் வந்த நாட்டாரியல் ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டி
5 க.கைலாசபதி
ஏனென்றால் மார்க்ஸிய நோக்கில் தமிழ்ப்பண்பாட்டை ஆராய்வதற்கான அடித்தளத்தை அமைத்தவர். இன்றுவரை நாம் கையாளும் மார்க்ஸிய ஆய்வுமுறைமைகள் பலவற்றை அறிமுகம்செய்தவர். சிவத்தம்பி முதல் அவரது மரபு தொடர்கிறது.
6. மு.தளையசிங்கம்
ஏனென்றால் தமிழ்ப் பண்பாட்டாய்வினூடாக ஒரு முழுமைநோக்கை உருவாக்கமுயன்ற முன்னோடிச் சிந்தனையாளர்
பழந்தமிழ் ஆய்வு
1.ஆறுமுகநாவலர்
ஏனென்றால் நல்லூர் ஆறுமுகநாவலரின் முதன்மைநோக்கு சைவ மீட்பாக இருப்பினும் அதனூடாக தமிழின் பக்திமரபு சார்ந்த நூல்களை ஆய்வுசெய்வதற்கான புறவயமான வழிமுறைகளை அவரால் உருவாக்கமுடிந்தது
2.உ.வே சாமிநாதய்யர்
ஏனென்றால் சாமிநாதய்யர் பழந்தமிழ்நூல்களை அச்சில்கொண்டுவருவதில் பெரும்பணி ஆற்றியவர். தமிழ் பதிப்பியக்கத்தின் தலைமகன்
3.தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
ஏனென்றால் தமிழிசையின் வேர்களை தமிழ்நூல்களிலிருந்து உருவாக்கியவர். பிற்காலத்தில் உருவான தமிழிசை இயக்கத்தின் மூலவர்.
4.கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை
ஏனென்றால் தமிழ்க் கல்வெட்டுகளை ஆராய்ந்து அவற்றினூடாக பண்பாட்டுவினாக்களுக்கான விடைகளைத் தேடுவதற்கான வழிகளை உருவாக்கிய முன்னோடி ஆய்வாளர்
5.மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
ஏனென்றால், தமிழ்ப்பண்பாட்டை காலவரையறை செய்வதில் முதன்மையான பங்களிப்பை ஆற்றியவர். அவரது மாணிக்கவாசகர் காலம் அவ்வகையில் ஒரு செவ்வியல்நூல்.
6.எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஏனென்றால் தமிழ்பதிப்பாசிரியர் ,கல்வெட்டு ஆய்வாளர் என்னும் தளங்களில் செய்த சாதனைகளுக்கு சிகரமாக தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர்.
7. தேவநேயப்பாவாணர்
ஏனென்றால் தமிழை வேர்ச்சொல் ஆய்வு மூலம் அறிவதற்கான முதல்முயற்சிகளை மேற்கொண்டவர். மிகைத்தாவல்கள் பல உண்டு என்றாலும் தமிழின் சொல்வளத்தை நோக்கி ஆய்வாளர்களை திருப்பவும் ஒரு மரபை தோற்றுவிக்கவும் அவரால் முடிந்தது.
8.மறைமலை அடிகள்
ஏனென்றால் தமிழின் மொழிக்கலப்புக்கு எதிரான பெருங்குரல். தனித்தமிழியக்கத்தின் தொடக்கப்புள்ளி. இன்றைய தமிழை உருவாக்க பெரும்பங்கு வகித்தார்
9.பெரியசாமித்தூரன்
ஏனென்றால் இசைப்பாடலாசிரியர், குழந்தைக்கவிஞர் என்னும் அடையாளங்களுக்கும் மேலாக தமிழின் முதல் பொதுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய முன்னோடி
10.தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
ஏனென்றால் பழந்தமிழ்ப்பண்பாட்டு ஆய்வை மேலைநாட்டு ஆய்வுமுறைகளைக்கொண்டு வகுத்துரைத்த கல்வியாளர்
11 அவ்வை துரைசாமிப்பிள்ளை
ஏனென்றால் பழந்தமிழ் பண்பாட்டை தொகுத்துநோக்குவதிலும் பண்பட்டுத்தளத்தில் மட்டுமே முக்கியத்துவம்கொண்ட சிறிய நூல்களை பதிப்பித்தலிலும் கல்வித்துறையை ஈடுபடுத்திய முன்னோடி
இதழியல்,பொது எழுத்து
1. டி.எஸ்.சொக்கலிங்கம்
ஏனென்றால் தமிழின் ஆரம்பகால இதழாசிரியர்களில் முக்கியமானவர். நவீன இதழியலின் விழுமியங்களை உருவாக்கியவர். தினமணி, மணிக்கொடி வழியாக தனக்கென ஒரு மாணவர்தொடர்ச்சியையும் உருவாக்கினார்.
2. ஜி. சுப்பிரமணிய ஐயர்
ஏனென்றால் தமிழகத்தின் முன்னோடிகளான நாளிதழ்களை உருவாக்கினார்.
3 சி.பா.ஆதித்தனார்
ஏனென்றால் தமிழில் சாமானியர்களும் வாசிக்கத்தக்க நாளிதழை உருவாக்கினார். தினத்தந்திக்கு தமிழகத்தின் ஜனநாயகமயமாக்கலில் பெரும் பங்குண்டு
4. கோவை அய்யாமுத்து
ஏனென்றால் சர்வோதய இயக்கத்தலைவர் என்ற வகைக்கு மேலாக அரசியல் சார்ந்த இதழியலில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டவர்
5. வே.சாமிநாதசர்மா
ஏனென்றால் தமிழில் அறிவியல் சிந்தனைகளையும் நவீன ஜனநாயகக் கருத்தியல்களையும் அறிமுகப்படுத்த நீடித்த உழைப்பைச் செலுத்தியவர்
6. ஏ.கே.செட்டியார்
ஏனென்றால் தமிழ்ப்பயண இலக்கியத்தின் முன்னோடி. ஆவணப்பட இயக்கத்தின் முன்னோடி. ஜனநாயகசிந்தனைகளை சூழியல் சிந்தனைகளை அறிமுகம்செய்தவர்
தொழில்துறை
1.பகடாலு நரசிம்மலு நாயிடு
ஏனென்றால் தமிழகத்தின் முதன்மையான தொழில்களில் ஒன்றான மில் தொழிலை கோவையில் தொடங்கிய முன்னோடி.
2.ஜி.டி.நாயிடு
ஏனென்றால் தமிழகத்திற்குரிய மூலப்பொருட்களைக்கொண்டு நமக்குரிய தொழில்களை உருவாக்குவதற்கான தொழில்துறை ஆய்வுகளின் முன்னோடி
3 ராஜா அண்ணாமலைச்செட்டியார்
ஏனென்றால் வங்கித்தொழில் மற்றும் கல்வித்துறையின் முன்னோடிச் சாதனையாளர்
4. ஊ பு அ சௌந்தரபாண்டியன் நாடார்
ஏனென்றால் இன்று விருதுநகர்- சிவகாசியை மையமாகக் கொண்டு எழுந்துவந்துள்ள சிறுதொழில் இயக்கத்தைத் தொடங்கிவைத்தவர்
5 .நா.மகாலிங்கம்
ஏனென்றால் தமிழகத்தின் பெருந்தொழில்துறையை முன்னெடுத்தவர். தமிழகத்திற்குரிய நிர்வாகமுறைமையை உருவாக்கியவர்
6.டி.வி.சுந்தரம் அய்யங்கார்
தமிழகத்தின் சரக்குப்போக்குவரத்துத் துறையில் சாதனைபுரிந்த முன்னோடி. பெருந்தொழில்களிலும் முதல்வர்
அறிவியல்
1. சி.வி.ராமன்
ஏனென்றால் இந்தியா நவீன அறிவியல்துறையில் காலடி எடுத்துவைத்தபோது உருவான அறிவியலாளர். இந்திய அறிவியல்துறைக்கே முன்னுதாரணம். ராமன் விளைவு மூலம் பொருண்மை பற்றிய ஆய்வுகளில் புதிய திறப்பை உருவாக்கியவர்
2 ராமானுஜம்
ஏனென்றால் இந்தியா நவீனகாலகட்டத்தில் உருவாக்கிய முதன்மையான கணிதமேதை.
3 ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
ஏனென்றால் இந்திய அறிவியலை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கி வளர்க்கமுயன்றவர். அறிவியலை இளைஞர்களின் ஆதர்சமாக ஆக்க பாடுபட்டவர்.
பொதுவாழ்க்கை,சேவை
1 ஜே.சி.குமரப்பா
ஏனென்றால் காந்தியப்பொருளியலை வடிவமைத்தவர். ஷூமெக்கர், இவான் இல்யிச் போன்ற நவீனப்பொருளியலாளர்களின் வழிகாட்டியாகத்திகழ்ந்தவர்
2 திரு.வி.கல்யாணசுந்தரனார்
ஏனென்றால் தமிழகத்தின் தொழிற்சங்க இயக்கத்தின் முதல்புள்ளி
3 அழகப்பச்செட்டியார்
ஏனென்றால் தமிழ்நாட்டுக் கல்விவளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக முதன்மையானது
4 ஈ.வெ.ராமசாமி
ஏனென்றால் தமிழகத்தை மூடநம்பிக்கைகளிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட சமூகசீர்திருத்தவாதி
5 ஜகன்னாதன், [கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன்]
ஏனென்றால் சமகாலத்தில் காந்திய விழுமியங்களை சமூகப்போராட்டங்களில் முன்னெடுத்தவர்கள்
6 ராமச்சந்திரன், சௌந்தரம் ராமச்சந்திரன்
ஏனென்றால் காந்திய இயக்கத்தை முன்னெடுப்பதற்காக காந்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்கள்.
7 வி.பி.சிந்தன்
ஏனென்றால் தொழிற்சங்க இயக்கத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர். முறைசாரா தொழிலாளர் நடுவே அதைக்கொண்டுசெல்லமுடிந்தவர்
8 கே.டி.கே.தங்கமணி
ஏனென்றால் தமிழகத்தின் ஆலைத்தொழிற்சங்கத்தின் முதன்மையான ஆளுமை அவர்
9 நெ.து.சுந்தரவடிவேலு
ஏனென்றால் ஓர் அரசு அதிகாரியாக தமிழகத்தில் ஆரம்பக் கல்வி பரவுவதற்காக பெரும்பணியாற்றினார்.
வரலாற்றாய்வு
1 கே.என்.நீலகண்ட சாஸ்திரி
ஏனென்றால் தமிழக வரலாற்றை கறாரான தரவுகளின் அடிப்படையில் எழுதிய முன்னோடி வரலாற்றாசிரியர்
2 சதாசிவப்பண்டாரத்தார்
ஏனென்றால் தென்னிந்திய வரலாற்றின் பின்னணியில் தமிழ்வரலாற்றை எழுதிய முன்னோடியான வரலாற்றாய்வாளர்
3 சத்தியநாதஅய்யர்
ஏனென்றால் நாயக்கர் வரலாற்றைப்பற்றிய இவரது நூல் ஒரு பெரிய முன்னோடி முயற்சி
4 கே.கே.பிள்ளை
ஏனென்றால் வரலாற்றை ஒட்டுமொத்தமாக எழுதும் முழுமைவரலாற்றுக்கு நிகராக ஓரு அலகை மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக எழுதும் நுண்வரலாற்று எழுத்தில் தமிழ்முன்னோடி. சுசீந்திரம் ஆலயம் பற்றிய அவரது ஆய்வுநூல் ஒரு பெரும்படைப்பு
=====================================================
பிகு
இசை , ஓவியம் ஆகிய தளங்களில் எனக்குப்பிடித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கறாராக மதிப்பிட்டு தெரிவு செய்யும் அளவுக்கு எனக்கு அத்துறைகளில் அறிமுகம் இல்லை. நண்பர்கள் எழுதலாம்.