சமீபத்தில் நண்பர்களுடன் சென்ற ஹொய்ச்சாள கலைப்பயணத்தில் நாள் முழுக்க தீவிரமான உரையாடல்கள் நடந்தபடியே இருந்தன. நண்பர்கள் ஜோதி மற்றும் திருப்பூர் கதிர் இருவரும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தனர். மிகையாகப்பேசி வெளிப்பக்கக் காட்சிகளை தவறவிடக்கூடாது என்பதனால் அவ்வப்போது பேச்சை நிறுத்தவேண்டியிருந்தது. அவ்விவாதத்தில் சிவாஜிகணேசனுக்கு சிலை வைப்பதைப்பற்றி பேச்சுவந்தது.
சிவாஜிக்குச் சிலை வைக்கலாமா கூடாதா என்ற விவாதத்தில் நான் இறங்க விரும்பவில்லை. ஆனால் சில ஒவ்வாமைகளை எப்போதும் முன்வைத்து வருகிறேன். அவை பெரும்பான்மையுடன் ஒத்துப்போகும் மனநிலை கொண்டவர்களிடம் எரிச்சலையும் கோபத்தையும் கிளப்புகின்றன. என்னை அன்னியனாக விலக்கி முத்திரையிடவும் வசைபாடவும் முயல்கிறார்கள்.
இது எனக்கு முப்பதாண்டுக்காலமாக பழக்கம் என்பதனால் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. என் கடமை என்பது இவற்றைச் சுட்டிக்காட்டுவதே என எண்ணுவதனால் மீளமீளச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மிகச்சிலரே இவற்றைச் செவிகொள்வார்கள் என எனக்கும்தெரியும். அவர்களின் எண்ணிக்கை பெருகுவதை முப்பதாண்டுகளில் கண்டது மட்டுமே எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
ஒருசமூகம் எவற்றை முன்னுதாரணமாகக் கொள்கிறது என்பது எப்போதுமே மிகமிக முக்கியமானது. ஏனென்றால் நாம் இளைய தலைமுறையினரிடம் அந்த முன்னுதாரணங்களை அளித்து அவர்களைப்போல ஆவதற்காக அழைக்கிறோம். ஆகவே சமூகத்தால், அரசால், ஊடகங்களால் எவர் முன்னிறுத்தப்படுகிறார்கள் என்பது எப்போதுமே கடுமையான விமர்சன நோக்குடன் மட்டுமே அணுகப்படவேண்டும்.
சரியான மனிதர்கள் முன்வைக்கப்படாவிட்டால் சுட்டிக்காட்டவேண்டும்.தவறான மனிதர்கள் சுட்டிக்காட்டப்பட்டால் கண்டிக்கவும் வேண்டும். இதை எந்த ஓர் அறிவுஜீவியும் செய்தாகவேண்டுமென நான் நினைக்கிறேன். இதில் எளிய மனிதாபிமானம், சாதாரணமான பொதுநாகரிகம் எதற்கும் இடமில்லை.
இவ்வாறு மதிப்பீடுகள் முன்வைக்கப்படும்போது அதற்கு எதிரான பாமரப் பொதுப்புத்தி சார்ந்த வெளிப்பாடு என்பது ‘ஏதோ அவங்களுக்குத் தோணுது சொல்றாங்க, உங்களுக்குத் தோணுறதை நீங்க சொல்லுங்க’ என்பது. இன்னொன்று இன்னும் கீழ்மை நிறைந்த வம்புமனங்களால் சொல்லப்படுவது. ‘இவரைச் சொல்லலை, அதனால இவருக்குப் பொறாமை’
’ஒருத்தன் பரிசு வாங்கியிருக்கிறான். மனமார வாழ்த்தாம இப்டி சொல்றது நாகரீகம் இல்லீங்க’ என்றுதான் தகுதியற்றவர்கள் சாகித்ய அக்காதமி விருது பெற்றதை நான் சுட்டிக்காட்டிய ஒவ்வொரு தருணத்திலும் என்னிடம் பாமர மனங்கள் சொல்கின்றன. என் நண்பர்களே ஆலோசனை சொல்லி கடிதங்கள் போடுவதுண்டு.விழுமியங்கள் அந்தப் பொதுநாகரிகத்தைவிட முக்கியமானவை என திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்த அற்பத்தனங்களை எதிர்கொள்வது இவ்விவாதத்தில் இறங்குவதற்கான தவிர்க்கமுடியாத பின்விளைவு. இவற்றைச் சுட்டிக்காட்ட எனக்கிருக்கும் தகுதி என்னவென்றால் முப்பதாண்டுகளாக தகுதியுடையவர்களைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன் என்பதுதான். இணைய உலகிலேயே இந்த ஒரு தளத்தில்தான் அந்தச்செயல்பாடு தொடர்ச்சியாக நிகழ்வதை காணமுடிகிறது.
மதிப்பீடு என்றாலே அது கறாரானது மட்டும்தான். எல்லாமே ஒண்ணுதான் என்பவன் மதிப்பீடுகள் அற்றவன். ஏற்பும் நிராகரிப்பும் மதிப்பீட்டின் இருபக்கங்கள். ஆகவே விமர்சனம் இல்லாது மதிப்பீடுகள் சார்ந்த செயல்பாடே இருக்கமுடியாது.
என் அளவுகோல்கள் என்ன? ஏதேனும் ஒரு துறையில் திட்டவட்டமான சாதனைகளைச் செய்திருப்பது என சுருக்கமாகச் சொல்லலாம். அதற்கு தனித்திறமை, அர்ப்பணிப்பு, நெடுங்கால நீடித்த செயல்பாடு, தியாகம் ஆகியவை தேவையாகின்றன. அந்தச்சாதனையை எப்படி மதிப்பிடுவது? தமிழின் நீண்ட மரபின் பின்னணியுடன் ஒப்பிடுகையில் அது முக்கியத்துவம் உடையதாக இருக்கவேண்டும். உலகளாவிய பின்னணியில் வைக்கப்படும்போதும் அதற்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும்.
இந்த அளவுகோல் இருப்பதனால்தான் ஒருவர் ஊடகங்களால் முன்வைக்கப்படும்போது ’இவர் செய்த சாதனை என்ன?’ என்று கேட்கிறேன். ‘எதன் பொருட்டு இவர் முன்வைக்கப்படுகிறார்? இவர் எப்படி முன்னுதாரணமாகிறார்?’ என்று கேட்கிறேன். ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளவேண்டிய வினா இது. அதற்கான விடை அவ்வாறு முன்வைப்பவர்களிடம் இருக்கவேண்டும்.
எங்கே கடும் சினம் எழுகிறது என்றால் உழைப்பு அர்ப்பணிப்பு வழியாக சாதனைகளைச் செய்தவர்கள் இருக்க சாதாரணமானவர்கள் எளிய தொடர்பு காரணமாக, வெறும்பரபரப்பு காரணமாக முன்வைக்கப்படும்போதுதான். பல்லாண்டுக்கால ஆய்வுக்குப்பின் ஒரு நூலை எழுதுபவரை கண்டுகொள்ளாத ஊடகம் சமூக ஊடகத்தில் வெட்டி அரட்டை அடிப்பவரை சமகாலச் சாதனையாளராக முன்னிறுத்தும் என்றால் அதன் மதிப்பீடு என்ன, அது அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்தி என்ன?
மிக எளிமையான விஷயம் இது. ஆனால் நான் நினைத்த அளவுக்கு இவ்விஷயத்தை என்னால் சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. என் வாசகர்களே பலர் எனக்கு நல்லுபதேசம் செய்து கடிதங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் நட்புசார்ந்த நோக்கு. ’எல்லாமே ஒண்ணுதானே’ என்னும் பார்வை. ‘அதுக்கு இப்ப என்ன?’ என்னும் உதாசீனம்.
மதிப்பீடு என்பது மனிதர்களைவிடப்பெரியது, ஏனென்றால் அது காலம் இடம் சூழல் கடந்தது என நானே எனக்குச் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு அவை உறுதியாக இருந்தால்போதும் என நினைத்துக்கொள்கிறேன்.
பொதுவாக பரப்புக் கலை, அரசியல் ஆகியவற்றைச் சேர்ந்த பிரபலங்களை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அவர்கள் ஊடகங்கள் வழியாக தங்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது நாம் அவர்களை அறிவதில்லை, பெரும்பொருட்செலவில் அவர்களால் நாம் அறியவைக்கப்பட்டிருக்கிறோம். அவர்களை மீண்டும் நினைவில் நிறுத்துவதெல்லாம் ஒரு சமூகச்செயல்பாடே அல்ல.
அத்துடன் அவர்கள் பெரும்பான்மையினரின் ரசனைக்காக செயல்பட்டவர்கள். பெரும்பான்மையினரால் புரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆகவே அவர்களை தனியாகச் சொல்லவேண்டியதில்லை. காற்றுமுழுக்க அவர்கள்தான் ஏற்கனவே இருக்கிறார்கள்.
ஆனால் கலை, இலக்கியம்,சிந்தனைத் துறைகளில் உண்மையான சாதனைகளைச் செய்தவர்கள் பெரும்பான்மையினரால் அறியப்படாமலே இருப்பார்கள். அவர்கள் தங்களை அறிவிக்க எதையும் செய்வதில்லை. அவர்களை நோக்கிச்சென்று சற்று முயற்சிசெய்யாமல் அவர்களின் சாதனைகள் என்ன என்று நமக்குத்தெரிவதே இல்லை.
ஆனால் அவர்கள்தான் நம் சமூகத்திற்கு முன்னுதாரணங்களாக அமையமுடியும். அவர்களே நம் இளையதலைமுறையை வழிகாட்டிச்செல்லமுடியும். அவர்களின் நினைவையே போற்றவேண்டும். அவர்களைப்பற்றிய செய்திகளையே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டும். சிலை வைப்பது அதற்காகத்தான்.
நான் சொன்னேன். நம் சூழலில் எவருக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். திராவிட இயக்க அரசியல், சாதி அரசியல்,சினிமா ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் பெரும்பாலும் சிலைகள். தெருத்தெருவாக அவைதான் கண்ணுக்குப்படுகின்றன. அதன்பின் நம் இளையதலைமுறை சினிமாவெறியும் சாதியரசியல்மோகமும் கொண்டு அலைகிறது என எப்படி நாம் குறைசொல்கிறோம்? அவர்களுக்கு நாம் என்ன அளித்தோம்?
இங்கே அறிவியலாளர் சி.வி.ராமனுக்குச் சிலை இல்லை. கணிதமேதை ராமானுஜத்திற்கு சிலை இல்லை. ஓர் நினைவகமோ அருங்காட்சியகமோ இல்லை. அவர்கள் செய்தது என்ன என நாம் நம் மைந்தருக்குக் காட்ட வழியே இல்லை. புதுமைப்பித்தனுக்கு சிலை இல்லை.எஸ்.வையாபுரிப்பிள்ளைக்குச் சிலை இல்லை. கோவையில் கூட பெரியசாமி தூரனுக்கு ஒரு சிலை இல்லை. அப்படியென்றால் நாம் யாரைத்தான் கொண்டாடுகிறோம்? நாம் தூக்கிப்பிடிக்கும் மதிப்பீடுகள் என்ன?