சில சைவப்பாடல்கள் – 2

திருவாசகம்

வான்வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.

[திருஅம்மானை]

சைவ, வைணவ பக்திபபடல்களில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இப்பாடலில் காணலாம். அவை ஒருமுனையில் இறைவனை அறியமுடியாத பெருவெளியாக, ஞானம் தியானம் அனைத்துக்கும் அப்பாற்பட்ட முடிவிலா ஒன்றாக உருவகிக்கின்றன. அதே சிவனை அதே மூச்சில் திட்டவட்டமான வடிவம் கொண்டு தனக்காக வந்து கனிந்தருளும் கருணைகொண்ட அப்பனாகவும் உருவகிக்கின்றன

அவை உணரும் சிவம் என்பது பிரபஞ்ச சாரமாகிய ஒரு அளவிறந்த ஆற்றல். அந்த ஆற்றலை நான் இப்படி அறிகிறேன். அது எனக்கு இவ்வாறு வருகிறது என்ற ஒரு முரணியக்கம் இப்பாடல்களில் எப்போதும் உண்டு

வானத்து தேவர்களும் திருமாலும் பிரம்மனும் காட்டில் இருந்து உடல் வற்றியும் உடல்மூடி புற்று எழுந்தும் தவம்செய்தபோதும்கூட காண்பதற்கு அரியவன். அவன் தானே வந்து எளியவனாகிய என்னை தாய்போல கருணைகொண்டு ஆட்கொண்டான். என் உடலுக்குள் என் ரோமங்களுக்குள் சென்று உள்ளே உயிர் பெய்தான். தேனாக இனிக்கும் ஆனந்தத்தை நிரப்பினான். அமுதமாகிய தெளிவை நிறைத்தான். ஒளியானன். வானமானான். அவவாறு என்னை ஆட்கொண்ட திருப்பாதங்களே உன்னைப் பாடுகிறேன்

இந்தப்பாடலில் உள்ள முரண் அதுதான். சிவனும் விண்ணவரும் அறியாத பெருவெளிச்சாரம் அவன். ஆனால் தாய் போல என்னை தேடி வந்து எனக்குள் உறைகிறான். இங்குள்ள வைப்பு முறை கவனிக்கத்தக்கது. எனக்குள் உயிராக,, உயிரின் இயல்பாகிய ஆனந்தமாக, அந்த ஆனந்தத்தின் சாரமாகிய அமுதமாக, அந்த அமுதத்தின் ஒளியாக, ஒளி உறையும் வானமாக அவன் இருக்கிறான்.

மனித உடலை ஒன்றுடன் ஒன்று என செல்லும் பல நிலைகள் கொண்டதாக உருவகித்தது சைவம். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஆனந்தமய கோசம் முதல் சின்மய கோசம் வரைச்செல்லும் படிநிலைகளே இங்கே சுட்டப்படுகின்றன.


தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்து எலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

[திருகோத்தும்பி]

இந்தப்பாடல் பிரமிளின் கடலும் வண்ணத்துப்பூச்சியும் என்ற கவிதையை நினைவூட்டுகிறது எனக்கு.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்
========================

சமுத்திரக் கூரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளைசரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

வண்ணத்துப்பூச்சி கடலோரத்தின் சாதாரண மலர்களில் தேன் குடிக்கச் சென்றது. அப்போது கடலில் மலர்ந்த எல்லையற்ற பூ ஒன்றை கண்டது. நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ. அதை நோக்கிச் சென்றது. அதில் அமர்ந்தது. உவர்த்த சமுத்திரம் தேன்கடலாக ஆகியது. எளிமையாகப்பொருள் கொண்டால் உலகியல் தேன்களை உதறி ஆன்மீகமான, எல்லையற்ற தேன் ஒன்றை அது கண்டுகொள்கிறது

இங்கே மாணிக்க வாசகர் வரியும் அதைத்தான் சொல்கிறது. தினையளவுள்ள மலர்களில் சிறு துளியாகத் தேன்குடிக்காமல் வேறு ஒரு மாபெரும் தேனை நோக்கிச் செல்ல தும்பியிடம் கோருகிறார். நினைக்கும் தோறும் காணும்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்து எலும்புகளும் நெகிழும்படி மனதில் ஆனந்த தேனச்சொரியும் கருணை கொண்டவனை தேடிச்செல் என்கிறார். எல்லையற்ற மலர் என பிரமிள் சொல்லுவது அதேதான். கரையற்ற தேன் வெளி!

தாயுமானவர்
========

கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே

’தாயுமானவர் காலகட்டத்தில் பக்தி இயக்கம் சைவசிதாந்தத்தை நன்றாகவே செரித்துக்கொண்டு விட்டது ஆகவே இரண்டும் பிரிக்கமுடியாதபடி இயல்பாக ஒன்றாக உள்ளன’ என்று ஜெயகாந்தன் ஒருமுறை உரையாடலில் சொன்னார். பெரும்பாலான தாயுமானவர் பாடல்கள் மிகமிக எளிமையானவை. ஆனால் எளிய கவிதைகளிடம் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்

இப்பாடலில் சிவனை வழிபடுபவரே நான் வணங்கும் தெய்வம் என்கிறார் தாயுமானவர். சிவனை இரு வர்ணனைகள் வழியாக குறிப்பிடுகிறார். கண்ணுள் நின்ற ஒளி. விண்ணுள் நின்று விளங்கிய மெய்

இரண்டும் இரு எல்லைகள் என யோசித்தால் புரியும். அறிதல் உருவாவது இரு முனைகள் சந்திக்கும்போது. ஒன்று அறிபவன். இன்னொன்று அறிபடு பொருள். அறிபவனின் கண்ணுள் நின்ற ஒளியாக இருப்பவன் சிவன். அறிபடுபொருள் எல்லாமே விண்ணகத்தில், பருவெளியில் உள்ளவை. அவற்றின் சாரமாக நிற்கும் மெய்யும் அவனே. அதாவது அறிபவனுக்குள்ளும் அறிபொருளுக்குள்ளும் அவனே இருக்கிறான்

ரஸ்ஸல் நியூட்ரல் மோனிஸம் என்ற தத்துவக்கருத்தைப்பற்றி விரிவாக பேசுகிறார். அதாவது பொருள் என்பதன் மெய்மை அறிபவன் தரப்பில் நின்று பார்த்தாலும் பொருளின் தரப்பில் நின்று பார்த்தாலும் ஒன்றாகவே இருக்கும் தன்மைதான் அது. இவ்வரிகளுடன் இணைத்துப் பேசவேண்டிய விஷயம் அது. இங்கே இறைச்சக்தியை அவ்வாறு இருதளத்திலும் மெய்மை கொண்டதாக தாயுமானவர் காட்டுகிறார்.

 

கண்ட கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்
பண்டும் இன்றும் என்பால் நின்று உணர்த்திடும்
அண்டனே உனக்கோர் பதினாயிரம்
தெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே

காட்சி கண்ணுக்குத்தெரிய இரு விஷயங்கள் தேவை. ஒன்று கண். இன்னொன்று ஒளி. அதேபோல என் அறிதலுக்கு அகஒளியாக நின்று அனைத்தையும் காட்டுபவன் நீ என்று சொல்கிறது இந்தப்பாடல்.

கண்ணுக்கு காட்சியைக் காட்டும் கதிர் போல என்ற வரியின் அழகே இதன் கவிதை. கண் பார்க்கிறது, ஆனால் அது பார்ப்பதெல்ல்லாம் ஒளியைத்தான். காட்சிகளாக ஆவது அந்த ஒளிதான். அதேபோல அறிவுதான் அறிகிறது. ஆனால் அறியச்செய்வது அகத்தில் உள்ள அகஒளி அல்லது பிரக்ஞை. அதுவாக நிற்பவன் சிவன்.

இன்னொரு நுட்பம், ’என்னுள் நின்று எனக்கு உணர்த்துபவன்’ என்று சிவனைச் சொல்லும் தாயுமானவர் அவனை ’அண்டன்’ என்கிறார். அண்டமெல்லாம் ஆனவனே அவ்வாறு எனக்குள் பிரக்ஞையாக நின்று எனக்கு அறிதலை அளிக்கிறான் என்று சொல்கிறது கவிதை

அந்த அண்டப்பிரக்ஞையிடம் என் பொய்ம்மை தீர்ந்திட வேண்டும் என இறைஞ்சுகிறது இக்கவிதை.

சிவவாக்கியர்
===========

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

’எல்லா உலோகத்தையும் குறைத்துக் குறைத்துக் கொண்டுவந்தால் அது சாம்பலாக ஆகும். அதுவே சித்தவைத்தியம் சொல்லும் பஸ்பம். மொத்த திருமுறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் பஸ்பமாக ஆக்கினால் அது சித்தர்பாடல்கள்’ – உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னது.

சித்தர் பாடல்களின் அழகே நெரடியான எளிமை. இங்கே உருவ வடிவமான சிவனை மீண்டும் அருவமாக காட்ட முயல்கிறார். மொத்த சைவ பக்தி இயக்கமும் இறைவனை உருவமாக காட்ட முயன்றது என்றால் இது அதற்கு நேர் எதிரான இயக்கம் என்பதைக் காணலாம்

விஷ்ணு அல்ல. பிரம்மன் அல்ல. அதற்கும் அப்புறத்திற்கும் அப்புறம். கருமையல்ல செம்மையும் அல்ல வெண்மை அல்ல. அனைத்தையும் கடந்து நின்ற மூல காரணம் அது. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல. அதை பற்றுங்கள். அது துரியத்தையும் கடந்து நின்ற தொலைவுக்கும் தொலைவு

துரியம் என்றால் என்ன? நம் அகம் நான்கு தளம் கொண்டது. ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம். அதாவது விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்நிலை, முழுமைநிலை. நவீன உளவியலின் சொல்லப்போனால் கான்ஸியஸ், அன்கான்ஸியஸ், கலெக்டிவ் அன்கான்ஸியஸ், காஸ்மிக்அன்கான்ஸியஸ் எனலாம்.

நித்ய சைதன்ய யதி சொன்ன உவமை, ஜாக்ரத் என்பது துமி ஸ்வப்னம் என்பது துளி சுஷுப்தி என்பது அலை. துரியம் என்பது கடல். உண்மையில் கடல் மட்டுமே உள்லது. பிற அதை நாம் உணரும் விதங்களே. துரியத்துக்கும் அப்பால் உள்லது அது என்கிறார் சிவவாக்கியர்

இப்பாடலிலும் வைப்புமுறை கச்சிதமாக உள்லது என்பதைக் காணலாம். கருமை செம்மை வெண்மை என்று சொல்கிறார். கருமை வெண்மையாக ஆவதன் நடுவே உள்ளதே செம்மை. இரவு பகல் ஆவதற்கு நடுவே காலை போல


ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

ஆட்டை காட்டி வேங்கையை பிடிப்பதைப்போல மாட்டைக் காட்டி நீ என்னை மதி மயக்கலாகுமா? மாடு என்றால் பசு. சைவ சித்தாந்தத்தில் பசு பதி பாசம் என மூன்றுண்டு. பசு என்பது பிரபஞ்சம், பதி என்பது சிவன். பாசம் என்பது பசுவை பதியிடம் போக முடியாது கட்டியிருக்கும் கயிறு அதாவது மாயை. ஆட்டைக்காட்டி புலியை பிடிப்பது போல உலகியலைக் காட்டி நீ என்னை பொறியில் வீழ்த்திவிடுவாயா என்கிறார் சிவ வாக்கியர்

யானை வடிவம் கொண்ட கயாசுரனை அவனுடைய கொம்பினாலேயே பிளந்து உரித்து போர்த்திய கொற்றவனே வீடுபேறைக் காட்டி நீ என்னை வெளியே கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார்

கயாசுரனின் புராணம் பிற்காலத்தையது. ஆனால் கஜசம்ஹாரமூர்த்தி என்று சொல்லப்படும் யானைத்தோல் போர்த்திய சிவன் சிலை பழங்காலத்திலேயே உள்ளது. யானைத்தோல் இங்கே இருளுக்கு உவமையாகவே முன்வைக்கப்படுகிறது. யானையின் வெண் தந்தத்தால் யானை உரிக்கப்படுவது என்பது அழகான ஒரு குறியிடு. இருளுக்குள் ஒளிரும் சிறு ஒளியால் இருளைப்பிளப்பது என்று அதைச் சொல்லலாம். இருளைப்பிளந்தவனே என்னை நீ வெளிப்படுத்து என்ற வரியின் பொருள் அப்போது மேலும் துலங்கும்.

முந்தைய கட்டுரைசில சைவப்பாடல்கள்
அடுத்த கட்டுரைபெரியார்-அறிவழகன் கடிதம்