பதிமூன்றாம் தேதி காலை பேலூரில் கண்விழித்தோம். விடிகாலையில் அந்த புராதனநகரின் தெருவில் சென்று டீ குடித்தது ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. அன்றைய திட்டம் மிகச்செறிவானது. மதியம் இரண்டுமணிக்கெல்லாம் கிளம்பிவிடவேனும். நான் ஈரோட்டில் இருந்து பத்துமணிக்கு நாகர்கோயில் ரயிலைப்பிடிக்கவேண்டும். ஊருக்குச் சென்று அன்றே ஒருமணி நேரம் கழித்து திருவனந்தபுரத்திற்கு சினிமாவேலையாகச் செல்லவேண்டும்
முதலில் மொசாலே நாகேஸ்வரர் ஆலயம் மற்றும் சென்னகேசவர் ஆலயத்திற்கு மாலையில் சென்றோம்.கிபி 1200 ல் ஹொய்ச்சல மன்னர் இரண்டாம் வீர வல்லாளரால் கட்டப்பட்டது இந்த இரட்டை ஆலயம். சைவ வைண ஒற்றுமையை நிலைநாட்டுவது ஹொய்ச்சாள மன்னர்களுக்குத் தேவையாக இருந்திருக்கிறது. அப்பேரரசின் அடித்தளமே இவ்விரு மதங்களுக்கிடையேயான இணைவாக இருக்கலாம். தமிழகத்தில் சைவ வைணவப்போர்கள் உச்சத்தில் இருந்த காலகட்டம் இது என்பதை நினைவுகூரவேண்டும்.
அருகருகே கண்ணுக்குத்தெரியாத முகத்தில் தொங்கும் இரு காதணிகள்போல அமைந்திருந்தன ஆலயங்கள். ஒரே ஆலயத்தை வெவ்வேறு பொழுதில் வெவ்வேறு ஒளியில் காண்பதுபோன்ற உணர்வை அடைந்தேன். மௌனமாக விழித்து அமர்ந்திருந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு சொல்லைச் சொல்லிக்கொண்டிருந்தன. விலகிச்சென்று நோக்குகையில் அவை ஒற்றைப்படலமாகக் கரைந்து ஒரே சொல்லில் அமைந்திருந்தன
மொசாலே ஆலயத்திற்கு அப்பால் ஏரிக்குச்செல்லும் வழியில் ஓர் ஆஞ்சநேயர் ஆலயம் இருந்தது. பன்னிரண்டடி அகலமுள்ள மிகப்பெரிய அனுமார்சிலை. புடைப்பாக ஒரு வட்டக்கல்லில் செதுக்கப்பட்டு கருவறைக்குள் தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. மொசாலே ஆலயத்தைவிடத் தொன்மையானது அந்த அனுமார்சிலை என்று தோன்றியது. ஒரு பழங்குடித்தன்மை அதற்கிருந்தது.
கோவிந்த ஹள்ளியில் அமைந்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் அடுத்து. ஐந்துகருவறைகள் நிரையாக அமைந்த ஆலயம் இது. பஞ்சகுடா என்னும் கோபுர அமைப்புள்ள அரிய கோயில் இது என ஜெராட் புக்கேமா எண்ணுகிறார்.பெரும்பாலும் சிதைந்து கிடந்த இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். கர்நாடக தொல்லியல்துறை செய்கிறது. ஹம்பியில் இருந்து வந்த கட்டுமானத் தொழிலாளர்கள். அவர்களில் சுப்ரமணியம் தமிழ் பேசுபவர். எங்களிடம் தங்கள் வேலையை விவரித்தார்
சரிந்து நின்ற கோயிலை ஒவ்வொரு கல்லுக்கும் எண்கள் போட்டபின் மெல்ல பிரித்து உடைந்த பகுதிகளுக்கு வேறுகற்களை வைத்து திரும்ப அடுக்குகிறார்கள். இடுக்குகளில் சுண்ணாம்பு மணல் கலவையைக் கொட்டி இறுக்கி அமைக்கிறார்கள். பெரும்பாலும் கோயில் திரும்ப அமைந்துவிடுகிறது என்றாலும் உடைந்த சிற்பங்கள் அங்கே கிடைக்கும் சாதாரணமான கற்களால் ஈடுவைக்கப்படுகின்றன. ஆகவே முன்பிருந்த அழகிய கோயில் வருவதில்லை, ஓரளவு அதன் வடிவம் மீள்கிறது அவ்வளவுதான்
செல்லும் வழியிலேயே கிக்காரே பிரம்மேஸ்வரர் ஆலயம் ஏரிக்கரையில் இருப்பதை கண்டுபிடித்தோம். எங்கள் திட்டத்தில் இந்த ஆலயம் இல்லை. சின்னஞ்சிறிய ஊரின் தெருவழியாகச் சென்று ஆலயத்தை அடைந்தபோது அது பூட்டப்பட்டிருந்தது. அர்ச்சகர் வருவதாகச் சொன்னார். சற்றுத்தாமதமாகியது. சரி கிளம்பலாம் என்று வண்டியில் ஏறியபோதுதான் அவர் வந்தார். நேரமாகிறது, தவிர்த்துவிடலாம் என்றார் கிருஷ்ணன். வந்துவிட்டோமே பார்த்துவிட்டுப்போவோம் என்றார்கள் நண்பர்கள்
நாங்கள் இப்பயணத்தில் பார்த்த மிக அழகிய சிலைகள் சில இங்கிருந்தன. ஹொய்சாளக் கலையின் பிற்காலகட்டத்தைச்சேர்ந்தவை. வழக்கமாக மண்டபத்தூண்களின் மேல் சிலைகள் இருப்பதில்லை. இங்குள்ள நான்கு தூண்களிலாக 16 சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. எஞ்சியிருப்பவை 7 சிலைகள். அவை ஒவ்வொன்றும் ஒரு கலை அற்புதம். ஒரு நடனமணியின் சிலையின் முகவசீகரமும் நடனபாவமும் நெஞ்சை விம்மச்செய்தன
நாங்கள் நுழைகையில் மின்சாரம் சென்றுவிட்டது. ஆகவே கைவிளக்கொளியில்தான் சிற்பங்களைப்பார்த்தோம். அங்கிருந்த ஆறு சிற்பங்கள் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருட்டுப்போய்விட்டன. பிஎச்டி ஆய்வுக்காக என சொல்லிக்கொண்டு வந்த ஒரு கும்பல் கோயிலுக்குள் புகுந்து சிலைகளைக் கொண்டுசென்றுவிட்டது. பூசாரியும் உடந்தை. சிலைகள் இன்னும் கிடைக்கவில்லை.கிடைக்க வாய்ப்பும் இல்லை. ‘சரி உடைக்கப்படவில்லையே, எங்கோ இருக்கத்தானே செய்கின்றன. இங்கிருந்தால் உடைந்து அழியக்கூட வாய்ப்புள்ளது’ என்றேன்
இப்பயணத்தில் நாங்கள் பார்த்தவற்றிலேயே முக்கியமான ஆலயம் என ஹொசஹலலுவில் உள்ள லட்சுமிநாராயணர் ஆலயத்தைச் சொல்லலாம். பேலூர் ஹளபீடு ஆலயங்களுக்குப்பின் அழகிய ஆலயம் இதுவே. பெலவாடி ஆலயத்தில் உள்ள அழகிய ஒளிவிடும் தூண்கள் மட்டுமே இதைவிட மேல் எனச்சொல்லவேண்டும். பேலூர் ஹளபேடு ஆலயங்களுக்கு நிகரான நுண்ணிய சிற்பங்கள் செறிந்த சுற்றுச்சுவரை பித்துகொண்ட கண்களுடன் திரும்பத்திரும்ப நோக்கிக்கொண்டிருந்தோம்
1250ல் ஹொய்ச்சால மன்னர் வீரசோமேஸ்வரரால் கட்டப்பட்டது இது. திரிகுடாச்சல அமைப்பு கொண்டது. ஹொய்ச்சாள கட்டிடக்கலையின் கடைசிக்காலகட்டத்தின் சிற்பவெற்றிகளில் ஒன்று இந்த ஆலயம் என கலைவிமர்சகர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆலயத்தின் நுழைவாயிலில் இருந்த மாபெரும் நந்தியே ஒரு பெரிய முன்னறிவிப்பு. கர்நாடகத்தின் சிற்பக்கலையில் நந்திசிலை ஓர் உச்சம், நமக்கு நடராஜர் போல. கரியகல்லில் நுட்பமாகச் செதுக்கப்பட்ட பேரழகுகொண்ட காளைகளை நாம் பெரும்பாலான ஆலயங்களில் காணமுடியும் . ஆனால் இங்குள்ள நந்திசிலை ஒரு கலைச்சாதனை. அதன் மீது கட்டப்பட்டிருந்த கயிற்றின் புரிகளைக்கூட கல்லில் வடித்திருந்தனர். கரிய ஒளியுடன் அதன் முகம். குளம்புகளுக்குமேலே உள்ள முடியின் துல்லியம்.
இங்குள்ள மூன்று கருவறைச்சிலைகளுமே மிகமிக அழகியவை. வேணுகோபாலர் சிலை ஒருபக்கம். லட்சுமிநரசிம்மர் மறுபக்கம். நடுவே வீரநாராயணர் சிலை. கரியகல்மேனியில் உயிரின் மெருகை காணமுடிகிறது. நோக்க நோக்க கனவிலா நனவிலா என திகைக்கவைக்கின்றன இச்சிலைகள். சிலைக்கு மிக அருகே சென்று நோக்கமுடிவது ஒரு காரணம்
ஹொசஹலலுவை மட்டும் பார்க்கவே ஓரிருநாட்கள் ஆகும். எங்கள் நோக்கம் ஓர் ஒட்டுமொத்த பார்வைதான். ஆகவே விரைந்து பார்த்துவிட்டு கிளம்பினோம். நல்லவேளையாக எல்லா இடங்களிலும் காவலர்களும் அர்ச்சகர்களும் எந்நேரமாயினும் வந்து கதவைத்திறந்து காட்டி உதவினார்கள்.
மதியம் ஹசனில் உணவருந்திவிட்டு கிளம்பி அந்தியூர் வழியாக ஈரோடு வந்தேன். 10 மணி ரயிலைப்பிடித்தேன். படுத்தபோதுதான் முதுகெலும்பின் வலியை உணர்ந்தேன். தொடர்பயணங்கள் தொடர்ச்சியான வெண்முரசு வேலை. முதுகெலும்புதான் முதலில் பாதிப்படைகிறது. ஆனாலும் உள்ளம் நிறைந்திருந்தது
முந்தைய பயணங்களிலெல்லாம் நான் பயணத்தில் முழுமையாக கரைந்துவிடுவேன். ஒவ்வொரு சிறுதகவல்களையும் பதிவுசெய்வேன். சொல்லப்போனால் ஓர் இடத்தை முழுமையாக அறியாமல் நான் கிளம்புவதேயில்லை. இப்போதுதான் முதல்முறையாக இப்படி வேறெங்கோ அலையும் உள்ளத்துடன் சென்றேன். நான் இருந்தது கர்நாடகத்திலா வெண்முரசிலா என்றே அவ்வப்போது உள்ளம் மயங்கியது.