ஹொய்ச்சாள கலைவெளியில் – 4

8

பன்னிரண்டாம் தேதி உண்மையில் மிக செறிவான அனுபவங்களால் ஆனது ஒரே நாளில் ஆறு ஆலயங்களை பார்த்தோம் மாலையில் அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளும்போது ஒரே வளைவுக்குள் அமைந்த பெரிய ஆலய தொகுதி ஒன்றைபார்த்த பிரமிப்பும் குழப்பமும் தான் எஞ்சியது முதன்மையான காரணம் ஹொய்ச்சாள ஆலயங்களில் உள்ள பெரும்பாலும் ஒரே வகையான கட்டிட அமைப்பு தான் திரிகுடாச்சல கோபுர அமைப்பு, திராவிட- நாகர பாணி கட்டுமானம், சுவர்களில் அமைந்த சிற்பங்களில் திரும்பத்திரும்ப வரும் கருக்கள் ,தட்டுகளை அடுக்கியது போன்ற தூண்கள் ,கன்னங்கரிய கல்லால் ஆன மண்டபங்கள் அனைத்தும்.
7
இந்தத் தூண்கள் கல்யாணி சாளுக்கியர் காலத்திலிருந்து படிபடியாகி உருவாகி வந்த தனித்த அழகுடையவை. கர்நாடகத்திற்கு மட்டுமே உரிய சிற்ப கலைத்தன்மை என்று இவ்வாலயங்களின் உருண்டைத்தூண்களும் குவைமாடங்களும் கொண்ட மண்டபங்களைத்தான் சொல்லவேண்டும். கரும்பளிங்கு கற்கள் என்று இவை பிரமை கூட்டுகின்றன. இவற்றை பெரிய சகடைகளில் சுழலவிட்டு உளிகளால் நீவி இந்த்த் துல்லியமான வட்ட அடுக்குகளை உருவாக்குகிறார்கள். கல்லில் மலரை கொண்டுவர முடிகிறது. சுண்ணம் கலந்த மாக்கல் ஆகையால் சற்று அமிலம் கலந்த நீரில் ஊறவிட்டு மென்மையாக்கி களிமண் போல நெகிழ்ந்திருக்கும்போது கூரிய ஊசி போன்ற உளிகளால் சிற்பங்களை செதுக்கிவிடுகிறார்கள் அதன் பின்னர் இச்சிற்பங்களை மீண்டும் இறுக வைத்து கட்டுமான அமைப்பில் பொருத்துகிறார்கள்

ஹொய்ச்சாள கால கட்டிடக் கலையில் அதனுடைய எடை தாங்கும் அமைப்பு உறுதியான கற்களால் சுதையாலும் அமைக்கப்படுகிறது. அதன்மேல் இந்த சிற்பக்கற்கள் நெருக்கமாக பொருத்தப்பட்டு ஒட்டி மேலெழுப்ப்படுகிறது. சிற்பக்கற்கள் உதிர்ந்த இடங்களில் உள்ளிருக்கும் சுதை-கல் கட்டுமானத்தை பார்க்க முடிகிறது . மாக்கல் என்பது சுண்ணம் கலந்த கல் என்பதனால் சிற்பங்கள் காலம் செல்லச் செல்ல மேலும் கெட்டிப் படுகின்றன. ஆனால். கடுமையான அமிலம் கலந்த சமகாலத்து சூழலில் இவை பொலிவிழக்கத் தொடங்கியுள்ளன என்கிறார்கள்.
8
இந்திய சிற்பங்களில் வளைவுகளே அதிகம் சிற்பங்களின் தோள் வளைவுகள் இடைக்கரவுகள் கன்னக் கதுப்புகள் உதடுக்குமிழ்கள் ஆகியவற்றில் ஒளி விழும் அழகே சிற்பங்களை மனம் கவரும் தன்மை கொண்டதாக்குகிறது. ஹளபேடு பேலூர் சிற்பங்களில் உள்ள பெண்களின் முகங்கள் அளவுக்கு திருத்தமான அழகிய முகங்களை இந்தியாவில் எங்கும் சிற்பங்களில் காண முடியாது. ஒட்டுமொத்தமாக சாமுத்ரிகா லட்சணப்படி இவை அமைந்திருப்பதாகத் தோன்றினாலும் தேவியர் அல்லாத மோகினிகள் யக்ஷிகள் முகங்களை நோக்கும்போது மெல்லிய வேறுபாடுகளுடன் அச்சிற்பங்களுக்கு காட்சி மாதிரியாக நின்றிருந்த பெண்களின் தனித்தன்மைகளை காண முடிகிறது.
9
வேறு எங்கும் காண முடியாத பல சிலைகள் இங்குள்ளன மீண்டும் மீண்டும் என் கவனம் சென்று நின்றது நடனமிடும் சரஸ்வதி சிலையிடந்தான். பாசமும் அங்குசமும் ஏந்தி கையில், ஏடும் அக்ஷ மாலையுமாக நடமிடும் சரஸ்வதி ஒரு அற்புதமான காட்சி அமர்ந்திருக்கும் சரஸ்வதி ஞானத்தைக் குறிக்கிறது என்றால் நடனமிடும் சரஸ்வதி கவிதையைகுறிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நடனமிடும் கல்வியே கவிதை! ஒரு வேளை மனிதக் கற்பனையின் மிக அரிய தருணமொன்றால் உருவாக்கப்பட்டது இது என்று எண்ணிக்கொண்டேன்.

தொட்டஹடஹள்ளியில் அமைந்த லட்சுமி தேவி ஆலயத்தைப் பார்ப்பதற்காக சென்றோம் இருபக்கமும் வயல்களும் நெல் வயல்களும் தென்னைகளும் நிறைந்த வளமான மண். தொழில் சார்ந்த தடயங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. நெசவும் கூட. தமிழகத்தில் இன்று பெரும்பாலும் அருகிவிட்ட ஓட்டுக் கட்டிடங்கள். எங்கு நோக்கினாலும் அவற்றின் செந்நிற கூரைகள் பசுமையுடன் கலந்து ஓரழகைக் கொடுக்கின்றன. கர்நாடகத்துக்குரிய கொம்பு சிறுத்த மாடுகள். இளவெயில் விரிந்து கிடந்த நிலம் வளைந்து எழுந்து சிறிய குன்றுகளாகி மீண்டும் வளைந்து சென்று தொடுவானை தொட்டது. நாங்கள் பயணம் செய்த இந்நாட்கள் முழுக்க வானம் முகில் மூடி மெல்லிய ஒளி கொண்டிருந்தது
கர்நாடகத்தில் பயணம் செய்வதற்கு செப்டெம்பெர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் உகந்தவை. டிசம்பரில் மழை இருக்கக்கூடும் என்பதால் செப்டம்பரே மிகச்சிறந்தது. எங்கள் பயணங்கள் பெரும்பாலும் செப்டெம்பரில்தான் அமைந்திருந்தன. 2008ல் நாங்கள் செய்த இந்தியப் பயணமும் செப்டம்பர் 5-ம் தேதி தான் தொடங்கியது. அன்று எங்களுடன் வந்த நண்பர்களில் கல்பற்றா நாராயணன் மட்டுமே அந்த வண்டிக்குள் அப்போது இல்லை என்பதை கிருஷ்ணன் சொன்னார். ஈரோடு. சிவா ,சென்னை செந்தில் ,வசந்தகுமார், நான் மற்றும் சிருஷ்ணன் இருந்தோம்.
99
ஏழு வருடங்களாக சென்ற பயணங்கள் ஒவ்வொன்றையும் நினைவில் மீட்டெடுத்துக் கொண்டு சென்றோம். மீண்டும் மீண்டும் பார்த்தும் இந்தியா சலிக்கவில்லை. 2008ல் ஒரு புத்தகத்தை ஒரே வீச்சில் புரட்டி அனைத்து அத்தியாயங்களையும் பார்ப்பது போல 2008ல் முதலில் 14 நாட்களில் இந்தியாவைப் பார்த்தோம். அதன்பிறகு ஒவ்வொரு பகுதியாக பார்க்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு அத்தியாயத்தை படிப்பது போல ஆந்திரத்தில் செய்த குகைப்பயணங்கள்,. வடகிழக்கில் செய்த பயணங்கள்,. இமையமலைப் பயணங்கள் என. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பண்பாட்டுப்புலம் மீதான கவன குவிப்புகள். அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குறிப்பிட்ட பேரரசின் நிலப்பகுதியை மட்டுமே பார்க்க்கூடிய இப்பயணம். இவ்வாறு ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள் என தென்னிந்தியாவை ஆண்ட பெரும் பேரரசுகளின் கலைச்சின்னங்களை மட்டுமே சென்று பார்க்க்க்கூடிய குறுகிய பயணங்களை ஒன்றிணைத்தால் என்ன என்று பேசிக்கொண்டோம்.

ஹொய்ச்சாள மாதிரிகளில் பழமையான ஆலயங்களில் ஒன்றாகிய லட்சுமி தேவி ஆலயம் கல்கண ரஹுத்தா என்ற வைர வணிகராலும் அவருடைய மனைவியாகிய சகஜா தேவியாலும் கட்டப்பட்டது. இது நான்கு கருவறைகளைக் கொண்டது. சதுஷ்குடா அமைப்பு என்று பெயர், மூன்று ஆலயங்களுக்கு பொதுவாக ஹொய்ச்சாளர்களுக்கே உரிய துல்லிய வட்டமான உட்குடைவான கூரை போன்ற மண்டபம் நான்கு அலங்காரத்தூண்களால் தாங்கப்பட்டிருந்தது. இந்த ஆலயம் கடம்ப நாகர பாணி என்ற முறையில் அமைந்துள்ளது.. கடம்ப பாணி என்பது குடைவான மேற்கூரையும் துல்லிய வட்டங்களால் ஆன தூண்களும் கொண்டது இத்தூண்கள் மேல் உச்சியில் பலகம் என்னும் கற்பலகையால் இணைக்கப்பட்டிருக்கும். நமது ஊர்களில் உள்ளது போன்ற வாழைக்கூம்பு கவிந்த்து போன்ற வடிவம் இருக்காது. தூண்கள் சில சமயம் கலசங்களை அடுக்கி வைத்தது போன்ற அமைப்பு கொண்டிருக்கும்
33
இங்குள்ள மையக் கருவறையில் லக்ஷ்மியும் பிற கருவறைகளில் காளியும் விஷ்ணுவும் பூதநாதர் என்ற லிங்கமும் அமைந்துள்ளன ஒருவகையில் இது சைவ வைணவ சாக்த ஆலயங்களின் தொகுதி என்று சொல்லலாம் இந்தக் காலகட்டத்தில் இந்தத் தனிமதங்கள் அனைத்தும் ஒற்றைப் பெரு மதமாக ஆனதை இங்கு ஆலயத்தில் காண்கிறோம். எல்லா தெய்வங்களும் பூசையில் இருந்தன. ஆனால் அதிகமாக பக்தர்கள் வருவதாகத்தெரியவில்லை. இந்தப் புராதன நகரங்களெல்லாம் ஒருவகையில் கைவிடப்பட்டவைதான். சுற்றியிருக்கும் அக்ரஹாரங்கள் பெரும்பாலும் இடிந்த நிலையில் பழைமையான வீடுகளுடன் உள்ளன. புதிய, செல்வச்செழிப்பு தெரியும் வீடுகளே கண்ணில்படுவதில்லை.

Hoysala_Belavadi_Veera_Narayana_temple00003

மதிய உணவுக்கு பிறகு பெலவாடி வீர்நாராயண ஆலயத்தை பார்த்தோம். இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த மகத்தான ஆலயங்களில் ஒன்று என்று பெலவாடியை சொல்லமுடியும். இதுவும் மூன்று கருவறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஆலயம் கி.பி.1200ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளர் ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மைந்தனின் காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த ஆலயம் பேலூர் ஹளபேடுக்கு நிகரான நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது. இங்குள்ள சிற்பங்களை ஒவ்வொன்றாக தொட்டு விவரிப்பது என்பது எளிய வேலை அல்ல. உண்மையில் இத்தகைய ஆலயங்களுக்கு மிகப்பெரிய ஒரு புகைப்பட தொகுதியும் வரலாற்று விவரணைகளும் கொண்ட தனி நூல்தான் வெளியிட வேண்டும். ஒரு ஆலயமாக இதைப் பார்த்து முடிப்பதற்கே ஒரு வாரம் ஆகும் என்று ஐயம் திரிபறச் சொல்ல்லாம்.

பெலவாடி ஆலயத்தின் பிரமிக்க வைக்கும் அம்சம் அதன் முகப்பாக அமைந்த மகத்தான மண்டபம் தான். அற்புதமான தூண்கள் அமைந்தது. கடையப்பட்டு உலோகத்தை விட மின்னும் அளவுக்கு ஆக்கப்பட்ட இத்தூண்கள் நான்கு பக்கமும் சாளரங்களில் இருந்து வரும் ஒளியைப் பிரதிபலித்து கரிய சுடர்கள் போல நின்று கொண்டிருந்தன. எத்தனை. கருமையின் இருளின் ஒளி. ஒரு கணத்தில் அத்தனை கரிய வளைவுகளிலும் மண்டபத்தின் திறப்புகள் வெவ்வேறு சிறிய ஓவியங்களாக தெரிவதைக் கண்டேன். ஒரு மாபெரும் யாழ் என மனம் எழுச்சிகொண்டது. அம்மண்டபம் ஒரு தளிர் என்று மீணும் பொங்கியது.. ஒவ்வொரு தூணும் ஒரு பனித்துளியென ஒருகணம் தோன்றியது. ஒரு கருமுத்து என பிறிதொரு கணம் தோன்றியது.

விழி கொள்ளாமல் இதை அள்ளும் பொருட்டு மண்டபத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன் மண்டபத்தின் அடிப்பக்கங்களில் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி நிற்பது போல யானைகள் சரமாக கோர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் விளிம்புகள் எல்லாம் சாய்ந்து அமரும் இருக்கைகள் மூன்று அடுக்குகளாகச் செல்லும் அமைப்பு கொண்டது இவ்வாலயம் முதல் பகுதியில் கண்ணைப் பறிக்கும் கருங்கல் தூண்களின் மண்டபம். இரண்டாவது பகுதியில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களுடன் பூச்செண்டுகள் போல அமைந்த தூண்களால் ஆன இரண்டாவது மண்டபம். அதன்பின்னர். கருவறை.

உள்ளே வீர நாராயணர் சிலை நின்ற கோலத்தில் உள்ளது பெலவாடியின் வீரநாராயணர் கோபால கிருஷ்ணர் நரசிம்மர் மூன்று கருவறை சிலைகளும் தான் பயணத்தில் நாங்கள் பார்த்தவற்றிலேயே பேரழகு மிக்கவை என்று சொல்லலாம். கரிய கல்லில் வெளிபக்க ஒளி மின்னி சிறிய சுடர்களாகத் தெரியும் அளவுக்கு பளபளப்புடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் அகல்வதே எளிதல்ல

இங்கு உள்ள நரசிம்மர் யோகத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கல்யாணி சாளுக்கியர்களுக்கும் ராஷ்டிர கூடர்களுக்கும் போல நரசிம்மர் ஹொய்ச்சாளர்களுக்கும் முக்கியமான கடவுள். விஷ்ணுவின் மூன்று தோற்றங்கள் அதில் உள்ள ஒரு அழகிய கவித்துவம் சிந்திக்கும் தோறும் விரிகிறது. வலது பக்கம் இவ்வுலகை குழலால் மயக்கும் பேரழகு இடது பக்கம் உக்கிரமும் குரூரமும் அருளும் கலந்த பெருந்தோற்றமாகிய நரசிம்மர் இரண்டுக்கும் அப்பால் என நின்றிருக்கும் விண்வடிவ மாயை ஒரே பிரபஞ்ச தரிசனத்தின் மூன்று முகங்கள் உண்மையின் மூன்று விளக்கங்கள்.

பெலவாடி ஆலயம்

நண்பர்கள்

Hoysala_Somnathpur_Chennakesava_Temple


Hoysala_Basaralu_Mallikarjuna_temple

Hoysala_Nagamangala_Soumya_kesava_Temple


Hoysala_Nuggehalli_Lakshmi_Narasimha_Temple

Hoysala_Arsikere_Iswara_Temple


Hoysala_Harnahalli_LakshmiNarayana

Hoysala_Harnahalli_Kesava

Hoysala_Koravangala_Bucesvara_temple

Hoysala_Belavadi_Veera_Narayana_temple

Hoysala_Mosale_Nageshvara-Chennakeshava_temple

Hoysala_Govindanhalli_Panchalingeswara_temple


Hoysala_Javagal_Lakshmi_Narashimha_temple

Hoysala_hosaholalu_Lakshmi_Narayana_temple

Friends

முந்தைய கட்டுரைமண்ணாப்பேடி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2