சாதிபற்றி மீண்டும்…

அன்புக்குரிய ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், அளவற்ற உங்கள் எழுத்தின் மீதான காதலுக்கு வணக்கம், எழுத்து, கருத்துக்கள், உரையாடல்கள், பணிகள் இடையில் எப்போதும் முண்டியடிக்கும் புழுதித் தூற்றல்கள் இவற்றுக்கு இடையிலும் விடாமல் தொடர்ந்து எழுதுவது ஒரு வகையான தவம் என்று நினைக்கிறேன், அந்தத் தவம் உங்களுக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்……

முன்பொருமுறை “பெரியார் – ஒரு கடிதத்தில்” உங்களோடு உரையாடி இருக்கிறேன், ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாத சில கருத்துக்களோடு என்னுடையதை நானும், உங்களுடையதை நீங்களும் விடாமல் பிடித்தவாறே விவாதம் செய்தோம் என்று நினைவு, இன்று அதை விடவும் சற்று மேலான முதிர்ச்சியோடு உங்களின் சாதியோடு புழங்குதலில் காணக் கிடைத்த முரண்களைப் பேச வேண்டும் என்று தோன்றியது, அதற்காகவே இந்தக் கடிதம்.

சாதி குறித்த தன்னுணர்வின் எழுச்சியே சாதியை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே காரணி, சாதி குறித்த தன்னுணர்வு இச்சமூகத்தின் எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்திருக்கிறது, சமூகத்தில் வேரூன்றி இருக்கிற ஒரு நச்சுச் சிந்தனையை அறவே இல்லாதொழிப்பது அது பற்றிய தன்னுணர்வை இல்லாமல் ஒழிப்பதில் இருந்தே துவங்குகிறது, சாதி குறித்த தன்னுணர்வை ஒழிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கிற நவீன உலகின் தனி மனிதன் அப்படியான உணர்வு உற்பத்தி ஆகும் மூலத்தை அழிப்பதும், அதன் மீதான நம்பிக்கைகளை முற்றிலும் புறக்கணிப்பதுமே சாதிக் கட்டுக்குள் இருந்து அவனை விடுவிக்க உதவும். அந்த ஒற்றை அச்சில் இருந்து உங்கள் கட்டுரையில் நீங்கள் விலகி இருக்கிறீர்கள். சாதி ஒரு கற்பிதம், மதம் அதன் தாய், கடவுள் இவற்றை இயக்கும் உயிர், அறிவியல் உயிர்களின் புதிரைக் கண்டறிந்து கடவுளின் தேவையைக் குறைத்துக் கொண்டு வரும் ஒரு நவீன உலகின் எழுத்தாளர் நீங்கள், சாதியைப் புழங்குதலில் குறுகி விடுகிறீர்களோ என்று தோன்றுகிறது,

இந்திய சமூகத்தில் மதமே சாதியைக் கட்டமைக்கும் ஒற்றை மூலம், மதம் குறித்த நம்பிக்கைகளை, உணர்வுகளைக் கொண்ட மனிதனால், சாதி குறித்த தன்னுணர்வை அழிப்பது என்பது இயலாத ஒன்றாக மட்டுமன்றி, நகைப்புக்குரியதாகவும் நவீன உலகில் பொருள் கொள்ளப்படலாம். நீங்கள் இன்னும் மதங்களை உயர்த்திப் பிடிப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாகவும், கட்டுக்கடங்காத தனி மனித சுதந்திரமாகவும் இருக்கலாம், ஆயினும் உங்கள் எழுத்துக்கள் பொது வெளிகளில் உலவும் அளவுக்கு வலிமை பெற்றவை என்பதை நான் அறிவேன், பொது வெளியில் எல்லா மதத்தின் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள், பொது வெளியில் மதங்களற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்று நான் சொல்வேன். இந்திய சமூகத்தில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்று எல்லா மனிதர்களும் செலுத்தும் வரிகளில் உருவாகிற விண்கலங்களின் மாதிரிகள் கூட இந்துக் கடவுளர்களின் காலடியில் மட்டுமே ஆசிகளைப் பெற்றுப் பறந்து விடும் வல்லமை கொண்டவை. தொடர்ந்து இதைப் போல ஒரு மதச் சார்பற்ற நாடாகவே இருக்க எல்லா மதங்களின் கடவுளர்களையும் நான் உங்கள் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

இந்து மதம், இந்திய சமூகத்தில் வேறெந்த மதத்தையும் விட அதிகமான தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் சாதியக் கட்டமைப்பை வெகு சிரத்தையோடு கட்டி அமைத்திருக்கின்றன, வருணாசிரமக் கொள்கைகள், இன்றைய அனைத்து மாற்றுக் கருத்தியலுக்கும் ஒரு வலிமையான மாற்றாக இயங்கியதன் காரணமாகவே நான்கு அடுக்கிலான சாதிய அமைப்பு முறை வடிவம் பெற்றுப் பின் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்தது. நாகரீக மனிதன் இனக்குழு அடையாளங்களை மறப்பது எப்படி ஒரு மிக அடிப்படையான தேவையாக இருக்கிறதோ, அதைப் போலவே நேர்மையாக ஒரு மனிதன் மதத்தையும் அது குறித்த தன்னுணர்வையும் மறக்க வேண்டியது தேவைகளின் நீட்சியாகும். சாதி சமூகத்தில் உள்ளீடு செய்யப்படும் ஒரு புறக்காரணியாக இருந்து, பொது மனிதனின் உளவியலாக மாறுகிற அறிவியலை மறைமுகமாக இயக்குவது மதம். மதம் குறித்த புரிதலை வடிவமைக்கப்பட்ட கருத்தியலின் தாக்கமாக உணர முடியாதவர்களால் சாதியுடன் புழங்குதல் குறித்தும், வாழ்வது குறித்தும் சரியான பாதையில் சிந்திக்க இயலாது. அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புமிடத்தில் தான் இந்தக் கடிதத்தின் முதல் எழுத்துப் பிறந்தது.

நவீன உலகில் நிகழும் சாதி குறித்த சிந்தனைகள், விவாதங்கள், சாதி ஒழிப்பு அரசியல் ஆகிய அனைத்தும் சமநிலை என்கிற புள்ளியை நோக்கி விரையும் போது சாதியோடு புழங்கும் அவலநிலை மாறக் கூடும், ஆயினும், கீழ்நிலையாகக் கட்டமைக்கப்பட்டவர்களின் ஒரு காலத்தைய உயர்வையும், உயரிய வரம் பெற்றவர்களின் தொடர்ச்சியையும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்கிற, நாமம் போட்டுக் கொண்ட, குடும்பி வைத்துக் கொண்ட எந்த ஒரு மனிதரிடத்திலும் கண்டுபிடிக்க முடியும், அவர்கள் உங்கள் மொழியில் வைணவ அறிஞர்கள், எனக்கும் ஒரு குடும்பி வைத்துக் கொண்ட, நாமம் போட்டுக் கொண்ட மனிதரைத் தெரியும், அவரை நான் அண்ணன் என்றும், என்னை அவர் தம்பி என்றும் அன்போடு அழைப்போம். இருவரும் “ஹோமோ செப்பியன்ஸ்” குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்கிற அளவற்ற அறிவியல் நம்பிக்கை அது.

சாதியைப் பொது வெளியில் பேசிக் கொள்ளவும், பழகிக் கொள்ளவும் சில தகுதிகள் உண்டு, அவற்றில் ஏதேனும் ஒரு தகுதியை உங்கள் மதம் உங்களுக்கு வழங்கி இருக்கலாம், இது மனித உளவியல் குறித்த மென்மையான தளம், இதில் மேலிருப்பவர் எவரும் காயம் அடைவதில்லை, மதம் வழங்கி இருக்கும் பிறவிக் காப்புரைகள் அவர்களை பாதுகாக்கும் வல்லமை பெற்றவை, கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நிலை அப்படி இல்லை, அவர்களின் இன்றைய சமூகப் பொருளாதார வாழ்நிலை சார்ந்தது, அது, பெருநகரங்களில் கூட இன்னும் வீடுகள் உயர்குடியினருக்கு எனப் பலகை அடித்து வைத்திருக்கும் சமூகத்தில் சாதியைப் புழங்கி, அதை அன்றாட வாழ்வில் அதை ஆய்வு செய்து வீடு பேறு அடைவதெல்லாம் உங்களின் இன்னொரு புனைவு மாதிரித் தான் எனக்குத் தோன்றுகிறது, “நான் சாதி குறித்த சிந்தனை அற்றவன், பொது வெளியில் சாதியோடு நான் புழங்குவதில்லை” என்று குறைந்த பட்சம் சொல்பவர்களைத் தான் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக ஒரு நவீன மனித குலத்து தலித்துக்களின் மனநிலையால் ஏற்றுக் கொள்ளவும் அவனோடு வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அது, குற்ற உணர்வல்ல, திட்டமிட்டு அவன் மீது சுமத்தப்பட்ட வலி, அந்த வலியை மீண்டும் மீண்டும் உணரும் மனநிலையில் அவன் இல்லை. நீங்கள் அவன் வலியைச் சுமப்பதையே தீர்வென்று சொல்கிறீர்கள். சாதியைப் புழங்கும் இந்தத் தீர்வுகளும், ஆய்வுகளும் பிறவிக் கவசம் கொண்டவர்களுக்கு மிக எளிமையானவை, இழப்பதற்கு ஒன்றும் அற்றவை, வலி என்னவோ பிறவிக் கவசம் இல்லாத உங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான். சாதியைப் புழங்குவதின் வலி என்னவென்று இந்துப் பண்பாட்டின் நிலைச் சக்திகளுக்கு ஒருபோதும் தெரியாது. அந்த நிலைச் சக்திகளால் உருவாக்கப்பட்ட கடைச் சக்திகள் தான் இப்படியான ஆய்வு நிலைச் சாதிப் புழங்குதலையும் எதிர் கொள்ள வேண்டும் என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கிற சிக்கல்.

நகர்புறத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் பொதுவான வெளியில் தான் அடித்து விரட்டப்பட்டவன் பொருள் தேடுகிறான், தன்னுடைய புதிய பண்பாடுகளை அவன் இங்கு தான் தேடிக் கொண்டிருக்கிறான், அவன் தேடி வைத்திருந்த பழைய பண்பாட்டைப் பிடுங்கிக் கொண்ட மதம் அவனையே பண்பாடுகள் அற்றவன் என்றும், பண்பாடுகளில் இருந்து தொலைவில் இருப்பவன் என்றும் சொல்லி எள்ளி நகையாடியது. ஒரு தனி மனிதனால் அழிந்து போன எத்தனையோ குடும்பங்கள் உண்டு, ஒரு தனி மனிதனால் மட்டுமே உயர்ந்து செழித்து மிகப்பெரும் விருட்சமான குடும்பங்களும் உண்டு. குழுக்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, மாறாகத் தனி மனிதன் குழுக்களையும், பண்பாட்டையும் சேர்த்தே உருவாக்குகிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் பண்பாடு தனி மனிதர்களின் பங்களிப்பிலேயே வளர்ந்து வந்திருக்கிறது.

இந்திய சமூகத்தின் ஊழல் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் அவற்றில் உயர்குடி அடையாளங்களைச் சுமந்தவர்களின் பங்கு மகத்தானது என்பதை எளிமையாக அறிய முடியும், அப்படியென்றால் உயர் குடியினர் ஊழல் பண்பாட்டை வளர்த்தார்கள் என்று நீங்களும் நானும் சொல்ல முடியுமா?

பண்பாடு இனக் குழுக்கள் அல்லது சமூகக் குழுக்களால் அளவீடு செய்யப்படுவதைத் தான் காலம் காலமாக இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் திட்டமிட்டுக் கட்டி அமைத்தன, இந்த அளவீடுகளால் இயங்கிய உலகம் பொருளைக் களவாடுவதற்காகவும், களவாடிய பொருளால் பேரின்பப் பெருவாழ்வு வாழவும், கடவுளைக் கட்டி அமைத்து கடவுளின் கீழாகச் சாதியையும் கட்டி அமைத்தது, பண்பாட்டுக் கூறுகளை குழுக்களில் அடைத்து ஒன்று வேறொன்றைத் தொட்டு விடாமல் பாதுகாக்கும் பணியைச் செய்தது. உங்கள் வரையில் பண்பாடு என்கிற மனித வரலாற்றின் பக்கங்களை சாதிக் கண்ணாடியின் துணை கொண்டே அது ஆய்வு செய்ய நினைக்கிறது. மதங்களைச் சுமக்கிற யாருக்கும் நிகழ்கிற காட்சிப் பிழை உங்களுக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

தனி மனிதனின் உளவியல் கட்டமைக்கும் கருத்தியலே சமூகத்தின் உளவியல், சமூகத்தின் உளவியல் பழக்கமே வரலாறு, வரலாற்றை எந்தச் சாதியும் திருத்தி எழுதி இருப்பதாக நான் அறியவில்லை, வரலாறு மீண்டும் மீண்டும் தனி மனிதர்களின் உறுதியான தொடர்ச்சியான சிந்தனைகளின் வாயிலாகவே திருத்தி எழுதப்படுகிறது, சாதியை மறுத்தல் என்பது திருத்தி எழுதப்பட வேண்டிய வரலாறு, சாதியோடு புழங்குவதால் அது சாத்தியப்படும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும்.

இந்துச் சமூக மரபின் உயர்வாக ஒன்றைக் கோடிடும் போதே உங்கள் சமூகம் குறித்த தெளிதல் புலனாகி விடுகிறது, வேறெவரையும் விடவும் நீங்கள் தலைப்பிட்ட பின்னரான கட்டுரைகளை எழுதுகிறீர்கள், உங்கள் ஆழ்மனக் கட்டுமானத்தில் இறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்து மதம் குறித்த உயரிய சிந்தனைகள் ஏதேனும் ஒரு வரியிலாவது உங்களையும் அறியாமல் வெளியில் குதித்து விடுகிறது. அப்படி நிகழாமல் உங்களால் எழுதப்படுகிற சாதி குறித்த ஒரு கட்டுரையை, அடையாளங்களை வலுவாக மறுக்கிற மருத்துவ அறிவியலின் படி வெறும் மனிதனாக மட்டுமே உணர்கிற மருத்துவர்களுக்கும் நான் கண்டிப்பாகப் பரிந்துரைப்பேன்.

“ஒரு நாகரீக மனிதன் தன்னை எந்த ஒரு இனக்குழு அடையாளங்களுடனும் பொருத்திக்கொண்டு அதன் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்க மாட்டான்.”

ஒரு மிகப் பெரிய உண்மையைச் சொல்ல வந்திருப்பதற்கு முதல் பத்தியிலேயே நீங்கள் இப்படிச் சொல்லி இருப்பதை உங்களுக்கு நீங்களே குத்திய உள்குத்து என்று நான் புரிந்து கொள்ளலாமா???

“……………………………….. இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள். இந்துப் பண்பாடு அதன் அமைப்பையும் கட்டுக்கோப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்து என உணரும் எவரும் கடமைப்பட்டிருக்கிறார்.”

இறுதியாக இரண்டு கேள்விகள் மட்டுமே என்னிடம் மிஞ்சி இருக்கிறது, இதற்கான நேர்மையான பதிலில் தான் நான் உங்களைப் புரிந்து கொள்வது உள்ளடங்கி இருக்கிறது,

கேள்வி ஒன்று:
சாதியை ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்புகிறீர்களா?

கேள்வி இரண்டு:
மதம் குறித்த “கட்டமைக்கப்பட்ட உங்கள் மனநிலை” அதை உண்மையிலேயே அனுமதிக்குமா?

கை.அறிவழகன்

அன்புள்ள அறிவழகன்,

பெங்களூரில் உங்களை நேரில்சந்தித்து விவாதித்தமையால் அதற்கு முன்னர் வந்த உங்கள் கடிதத்துக்கு விரிவான பதில் போட முனையவில்லை. ஆனாலும் அக்கடிதம் பதிவாகவேண்டுமென இப்போது தோன்றியமையால் இக்கடிதம்.

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஈவேரா அவர்கள் முன்வைத்த நோக்கைச் சார்ந்தவை. அவற்றை பெரியாரியம் என்ற நாம் சொல்லலாம். சொல்லபப்ட்ட சில வருடங்களுக்குள்ளாகவே அவரது மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பு அது. அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலருக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழ் சிந்தனையில் அது இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி ஒரு சிந்தனைப்பள்ளியாகவே உள்ளது

அதன் முடிவுகளை நீங்கள் முழுமையாக நம்பி அதில் இருந்தே பேச ஆரம்பிக்கிறீர்கள். பெரியாரியக் கருத்துக்களை இவ்வாறு சுருக்கலாம் – உங்கள் கடிதத்தில் இருந்து:

1. சாதி என்பது ஒரு சமூகத் தீங்கு. அதன் ஒரே நோக்கம் அடிமைப்படுத்தல் சுரண்டல்.

2 சாதியை உருவாக்கியவர்கள் சமூக அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள். உயர்சாதியினராக அவர்கள் தங்களைச் சொல்லிக்கொண்டார்கள்

3 சமூகம் நால்வருணமாக அவர்களால் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது மேலும் பல்லாயிரம் சாதிகளாக பிரிந்தது. இந்த சாதியமைப்பு இந்தியாவுக்கு மட்டுமே உரியது

4 ஆகவே அது இந்துமதத்தின் சிருஷ்டி. அதை நியாயப்படுத்தவே இந்து நூல்கள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன.

5 அதன் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது.

6 சாதியை நிலைநாட்டவே மதம் உருவாக்கப்பட்டது. மதத்தின் மையம் கடவுள். நம்பிக்கை ஆன்மீகம். ஆகவே மதம் கடவுள் ஆன்மீகம் ஆகிய மூன்றும்தான் சாதிக்கு ஆதாரமாக அமைகின்றன.அவை மோசடியானவை.

7. இந்துமதத்தில் சாதியை வலியுறுத்தும் கருத்தியல் மட்டுமே உள்ளது

8 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் சாதி என்ற அமைப்பை துறக்கவேண்டும். அதற்கு சாதி என்ற தன்னிலையை அவர்கள் இழந்தாகவேண்டும். அதுவே அவர்களுக்கு விடுதலை.

9 அவ்வாறு துறப்பதற்கு அவர்கள் முதலில் மதம் கடவுள் ஆன்மீகம் மூன்றையும் துறந்தாகவேண்டும்.

இந்த அடிப்படைகளில் இருந்து ஆரம்பித்து நீங்கள் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதாவது இனக்குழு அடையாளங்களுடன் பொருத்திக்கொள்வது நாகரீக மனிதனின் இயல்பாக இருக்காது என்று நான் சொல்கிறேன். அதே சமயம் பிராமணர்கள் இந்துப்பண்பாட்டின் நிலைச்சக்திகள் என்றும் சொல்கிறேன்

ஆகவே ஒரு ஐயம் எழுகிறது உங்களுக்குள். நான் இந்துப்பண்பாட்டை தூக்கிப்பிடிக்கிறேன். ஆகவே அதனுடன் ’இணைபிரியாது’ கலந்துள்ள சாதியத்தை என்னால் விடமுடியாது

அவற்றில் இருந்தே நீங்கள் அந்த கடைசி வினாக்களை கேட்கிறீர்கள் இல்லையா?

நான் என் பதில்களைச் சொல்லி விடுகிறேன். ஒன்றை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் நான் எழுத்து ஒன்று வாழ்க்கையும் நம்பிக்கையும் பிறிதொன்று என இருப்பவனல்ல. நான் என்ன நம்புகிறேனோ அதைச் சொல்வேன். அது பிற்போக்கு என சொல்லப்பட்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை. எந்த முத்திரையையும் பயமும் இல்லை.

ஆகவே உங்கள் முதல் கேள்விக்குப் பதில் சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். அது சென்ற நிலப்பிரபுத்துவகாலத்து பண்பாட்டு அடையாளம். அதற்கு இன்று சமூகப் பண்பாட்டு பங்களிப்பேதும் இல்லை. ஆகவே அது இன்று ஒரு சுமை. ஆகவே அது அழிய வேண்டும். என்னைப்பொறுத்தவரை அந்த முடிவுக்கு நான் வந்தபின் என் தனிவாழ்க்கையிலும் உறவுகளிலும் என் குழந்தைகள் விஷயத்திலும் எங்கும் சாதிக்கு இடமில்லை. இன்றுவரை அப்படித்தான். சாதி என்றாலே சீறிப்பாயும் பெரும்பாலான பகுத்தறிவு முற்போக்கினர் அப்படி அல்ல என நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

இரண்டு மதம் சார்ந்து கட்டமைக்கப்பட்ட மனநிலை ஏதும் என்னிடம் இல்லை. ஆகவேதான் சம்பிரதாய மதவாதிகளுக்கு உவப்பற்றவனாக எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். நான் மதத்தின் அமைப்பை நிராகரிப்பவன், அதன் தத்துவ ஆன்மீக சாராம்சத்தை மட்டும் உள்வாங்கிக்கொள்ள முயல்பவன். இந்த வேறுபாட்டை எப்போதுமே நான் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். மதம் என்பது பதில்களால் ஆனது தத்துவமும் ஆன்மீகமும் கேள்விகளால் ஆனவை என்பதே என் அறிதலாகும்

உங்களுக்கும் எனக்குமான முக்கியமான கருத்துவேறுபாடுகள் எல்லாமே நீங்கள் கொண்டுள்ள எளிமையான கறுப்புவெள்ளை சித்திரத்தால் உருவாகக்கூடியவை. அவை ஈவேரா அவர்களால் எந்தவகையான வரலாற்று நோக்கும் தத்துவ நோக்கும் இல்லாமல் உருவாக்கப்பட்டவை. அவை சமூகம் மற்றும் கருத்தியலின் பிரம்மாண்டமான இயக்கத்தை மிக எளிமைப்படுத்திவிடுவதான் தவறான முன்முடிவுகளும் கசப்புகளும் உருவாகி விடுகின்றன என்பதே என் எண்ணம். இதை பல கட்டுரைகளில் முன்னரே சொல்லியிருக்கிறேன்.

என்னுடைய நோக்கு சமூகவியல் ஆய்வுகளுக்கு எம்.என்.ராய், அம்பேத்கர்,டி.டி.கோஸாம்பி,கே.தாமோதரன், இ.எம்.எஸ் போன்றவர்களின் ஆய்வுமுறையைச் சார்ந்தது. நான் எப்போதுமே இவர்களையே மேற்கோள் காட்டுகிறேன். மார்க்ஸியத்தின் தத்துவ கருவியான முரணியக்க பொருள்முதல்வாதமே எனக்கும் கருவி.

ஆனால் தத்துவ- ஆன்மீக தளத்தில் மார்க்ஸியத்தின் முன்முடிவுகளை நான் நிராகரிக்கிறேன். அதாவது தத்துவத்தையும் கலைகளையும் ஆன்மீகத்தையும் வெறும் பொருளியல் இயக்கத்தைக் கொண்டு விளக்கிவிட முடியாதென்பதே என் எண்ணமாகும். அவை பொருளியல்கட்டுமானத்தின் மீதுள்ள மேற்கட்டுமானங்கள் மட்டுமே என்ற மார்க்ஸிய கொள்கையை என்னால் ஏற்க முடியவில்லை. நான் அவற்றுக்குள் அவற்றுக்கான தர்க்கமுறை உண்டு என நினைக்கிறேன். அவற்றை அந்த தர்க்க முறையில் முடிந்தவரை புறவயமாக ஆராய முயல்கிறேன். இந்த நோக்கைப் பகிர்ந்துகொள்ளும் நவீன மார்க்ஸியர்களும் உண்டு. கீதையையே நான் முரணியக்க விதிகளின்படி ஆராய்வதை நீங்கள் காணலாம்.

ஆகவே என்னுடைய ஆய்வுமுறை என்பது கறுப்புவெள்ளையாக ஆக்குவது அல்ல. மாறுபட்ட சமூக அதிகாரங்களும் கருத்துக்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த விசையால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். எல்லா சமூக அமைப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் அவற்றுக்கான ஒரு பங்களிப்பு உள்ளது. எதுவுமே முழுமையாக கரியது எதிர்மறையானது அல்ல. ஒன்றை அதைவிட மேலான இன்னொன்று முரண்பட்டு வெல்கிறது. விளைவாக புதியது உருவாகிறது. இது முடிவிலாது நிகழ்கிறது.

நம்சூழலில் இந்த விஷயங்களை விவாதிப்பதற்கான இந்த மாபெரும் புரிதல்தடை நம் மார்க்ஸியர்களால் உருவானது. மார்க்ஸியத்தை முரணியக்க பொருள்முதல்வாதமாக தத்துவார்த்த நோக்கில் அவர்கள் இங்கே அறிமுகம் செய்யவில்லை. அதைக்கொண்டு சமூக ஆய்வுகளை பெருமளவில் செய்யவும் இல்லை. ஓரளவு விதிவிலக்குகள் கைலாசபதி சிவத்தம்பி ஆகிய இருவருமே. முழுக்க முழுக்க அன்றாட அரசியல் சார்ந்த நோக்கே இங்கே பெரிதாக இருந்தது.

ஆகவே இங்கே மார்க்ஸியம் அளித்த மாபெரும் ஆய்வுக்கருவியான முரணியக்க நோக்கு பயன்பாட்டுக்கு வரவில்லை. ஈவேரா அவர்களின் எளீய கறுப்புவெள்ளைவாதம் பரவலாகியது. அது மிக எளிமையானதென்பதனாலேயெ அதற்கு ஆதரவு அதிகம். அதை எதிர்ப்பவர்களை எளிதில் எதிரிகளாக முத்திரை குத்த அதில் இடமிருக்கிறது. ஆகவே அது எதனுடனும் விவாதிப்பதில்லை. மார்க்ஸியக் கல்வி இல்லாத நிலையில் இங்குள்ள மார்க்ஸியர்கள்கூட மெல்லமெல்ல பெரியாரியர்களின் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னுடைய ஆய்வு நோக்கில் பெரியாரியக் கருத்துக்களாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பவை எவையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியன அல்ல. அவை குத்துமதிப்பான சமூக நோக்குடன் மேலோட்டமான கோபதாபங்களுடன் முன்வைக்கப்பட்டவை. ஆகவே பயனற்றவை. நான் ஏற்கனவே சொன்னதுபோல, ‘அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரையை’ பயன்படுத்தியவை

1. சாதி என்பது ஒரு சமூக தீங்கு மட்டுமே என்ற கோணம் சமகாலத்தைய மனப்பதிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்தியாவின் மார்க்ஸிய வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் அந்த நிலைப்பாடு எடுத்ததில்லை. அது சென்ற நிலப்பிரபுத்துவ காலத்தைய ஒரு சமூக ஏற்பாடு. அதற்கு அக்காலத்தில் சமூக பங்களிப்பு இருந்தது. எந்த ஒரு சமூக அமைப்பும் அடிபப்டையில் உபரி வளங்களை சுரண்டி மைய அமைப்பை உருவாக்குவதற்காகவே உருவானது. சாதியும் அப்படித்தான். உற்பத்தி – வினியோகம் – உபரித்தொகுப்பு ஆகியவற்றில் பங்களிப்பு இல்லாத ஓர் அமைப்பு நீடிக்க முடியாது

2 சாதி உருவாக்கப்பட்டது அல்ல. எந்த சமூக அமைப்பும் உருவாக்கப்பட முடிவது அல்ல. அவை சமூகத்தின் பொருளியல் இயக்கத்தின் போக்கில் உருவாகின்றவை. அவற்றை அதிகாரம் திருத்தி அமைக்கிறது. தொகுக்கிறது. அதன் மூலம் அதிகாரத்தை அடைபவர்கள் மேலே அமர்கிறார்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலமே அதிகாரத்தையும் அதன் மூலம் சமூகப்படிநிலைகளையும் தீர்மானித்தது

3 இந்தியச் சமூகம் பல்லாயிரம் இனக்குழுக்கள் மற்றும் பழங்குடி இனங்களின் தொகுப்பாக பல ஆயிரம் வருடங்களில் மெல்லமெல்ல திரண்டு வந்த ஒன்று. அந்த பழங்குடி அடையாளங்களே சாதிகளாக தொகுக்கப்பட்டன. வர்ணங்கள் சாதிகளாக ஆகவில்லை. சாதிகள்தான் பின்னர் வர்ணங்களாக தொகுக்கப்பட்டன. இத்தகைய பிறப்பு அடிப்படையிலான இனக்குழுப்பிரிவினைகள் இல்லாத மானுட சமூகமே இல்லை. அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் அடிப்படையான ஒரு அமைப்பு

4 ஆகவே சாதி முறை இந்து மதத்தின் சிருஷ்டி அல்ல. பழங்குடிகள் திரண்டு இந்திய சமூகம் உருவானபோது கூடவே உருவாகி வந்ததே இந்து மதம். அதன் பன்மைத்தன்மை அவ்வாறுதான் உருவானது. அதற்கு மையமோ கட்டமைப்ப்போ அதிகாரக்கட்டுப்பாடோ என்றுமே இருந்ததில்லை. அதில் பழங்குடிச்சமூகத்தின் எல்லா நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் உள்ளன. அதில் உயர்பண்பாடும் உண்டு அடித்தளப்பண்பாடும் உண்டு.

5 இந்துமதத்தின் அதிகாரம் பிராமணர்களிடம் என்பது சரித்திர உண்மை அல்ல. நிலமும் அரசும் யாரிடம் இருந்தது என்று பார்த்தாலே உண்மை தெரியும். பலநூற்றாண்டுக்காலம் அது ஷத்ரியர்களின் கைகளில் இருந்தது. சிலநூற்றாண்டுக்காலம் வணிகர்களின் கைகளில் இருந்தது. பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில் சூத்திரர் கைக்கு வந்தது. பிராமணர்களை இந்த சக்திகள் பயன்படுத்திக்கொண்டன. பிராமணர்கள் இவர்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

6 மதம் என்பது சாதியை உருவாக்க உருவாக்கப்பட்டது அல்ல. அல்லது வேறு எந்த சமூக அதிகாரத்தை உருவாக்கவும் அது உருவாக்கப்படவில்லை. அது உருவாக்கபடவே இல்லை, உருவானது. அதற்கான தேவை இருந்தது. மதம் உருவாவதற்கு மிகச்சிக்கலான பல சமூக- பண்பாட்டு காரணங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, வாழ்க்கையின் பொருள் ஆகியவை சார்ந்த தனிமனிதனின் அந்தரங்கமான ஆன்மீகக் கேள்விகளுக்கு பதில் அளித்தலும் அற அடிப்படைகளை நிறுவுதலும், பண்பாட்டுக்கூறுகளை தொகுத்தலும் என மதத்துக்கு பல பணிகள் உண்டு.

மதம் சமூக அதிகாரத்தையும் அரச அதிகாரத்தையும் நிறுவும் கருவியாகவும் பயன்படும். அந்த அம்சம் இல்லா மதமே இல்லை. சமணமும் பௌத்தமும்கூட. ஆகவே மதத்தில் நமது சென்றகாலம் முழுக்க உள்ளது. சென்றகாலத்தின் பண்பாட்டுசெல்வமும் சென்ற கால அதிகாரக்கருத்துக்களும் அதில் உள்ளன. அது சென்றகாலகட்டத்தின் அறத்தை முன்வைக்கும் அமைபபகவும் இருந்hதது. ஆகவே மார்க்ஸ் ‘மதம் இதயமற்ற உலகின் இதயம்’ என்றார். மதத்தை பகுப்பாய்வுசெய்து அதன் சிறந்த தத்துவ பண்பாட்டுக்கூறுகளை ஏற்றுக்கொள்வதும் அதன் எதிர்மறை அம்சங்களை களைவதுமே இன்றைய தேவை. அதுவே உண்மையான பகுத்தறிவு.

7 இந்துமதத்தில் சாதியக் கருத்துக்கள் உள்ளன. ஆனால் கூடவே உயர்தத்துவம் உள்ளது. நுண்கலைகள் உள்ளன. பேரிலக்கியங்கள் உள்ளன. நாத்திக சிந்தனைகளும் இறையிலா சிந்தனைகளும் உள்ளன. பிராமண சிந்தனைகளுக்கு நிகராகவே பிராமண எதிர்ப்புச் சிந்தனைகளும் அதில் உள்ளன. நம் மொழியும் சிந்தனையும் அதற்குக் கடன்பட்டுள்ளது. எல்லா மதங்களும் அப்படியே. கிரேக்க மதம் அடிமைமுறையை நியாயப்படுத்தியது. ஆனால் அதுதான் மேலைச்சிந்தனைக்கே அடித்தளம்.

கடந்தகாலத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என்பது எந்த அறிவார்ந்த சமூகத்திலும் இல்லாத விஷயம். குளிப்பாட்டிய நீரோடு பிள்ளயையும் தூக்கி வீச என்னால் இயலாது. ஈவெரா மதத்தை மட்டுமல்ல தமிழ் மொழியையே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கத்தான் சொன்னார். அதை அவரது வாரிசுகள் என்ன காரணத்தால் ஏற்றுக்கொள்ளவில்லையோ அதே நியாயம்தான் எனக்கு இந்து மத விஷயத்திலும்.

8 ஒடுக்கப்பட்ட இந்திய சாதிகள் சாதி அடையாளத்தை துறப்பதில்லை. அவர்களே தங்கள் சாதி அடையாளத்தை மேலும் வலியுறுத்துகிறார்கள். அது ஏன் என்ற நோக்கே இன்று தேவை. காரணம் சாதியிலதான் அவர்களின் அதுவரையிலான பண்பாட்டு வேர்கள் உள்ளன. அவர்களின் மூதாதையரின் சிந்தனைகள் உள்ளன. அது அவ்ர்கள்மேல் திணிக்கப்பட்ட அடையாளம் அல்ல. அதன் படிநிலைதான் அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. அது அவர்களிiன் தொன்மையான பழங்குடி வேர்களின் வளaர்ச்சியடைந்த வடிவம்

ஆகவே சாதியை ஒட்டுமொத்தமாக துறக்கவேண்டும் என்ற அறைகூவல் பொருளற்றது. ஏன் ஒட்டுமொத்தமாகத் துறக்க முடியவில்லை , சாதி என்ற பல நூற்றாண்டுக்கால துறக்கவேண்டியவை எவை என்ற ஆராய்ச்சியே இன்று தேவை. இல்லையேல் சாதி எதிர்ப்புக் கூக்குரல் மட்டும் எங்கும் ஒலிக்கும், சாதி அபப்டியே இருக்கும்.

9 கடவுள் ஆன்மீகம் மதம் ஆகியவை சமூகச்சூழல்களினால் ஏற்கப்பட்டவை அல்ல. சமூகச்சூழல்களினால் துறக்கப்படக்கூடியவையும் அல்ல. அவற்றின் பங்களிப்பு முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. தனிமனிதனுக்கு தன் வாழ்க்கையின் சாராம்சம் பற்றிய கேள்விகள் இருக்கும் வரை அவையும் இருக்கும். அவை இருப்பதோ அழிவதோ தத்துவத்தளத்தின் நிகழும் வள்ர்ச்சி மாற்றங்களினால் மட்டுமே நிகழும்.

இதுவே என் கருத்து. பொதுவாக நான் பெரியாரியர்களிடம் விவாதிப்பதை தவிர்க்கிறேன். காரணம் அது ஒரு புறவயமான அறிவார்ந்த தன்மை கொண்ட அறிவியக்கம் அல்ல. அது தனிமனித மனம் சார்ந்த வெறுப்பில் கட்டமைக்கப்பட்டது. மேலும் நடைமுறையில் சாதிவெறியர்களான பிற்படுத்தப்பட்டோர் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு தங்களை ஒளித்துக்கொண்டு கையாளும் கருவியும்கூட

இனி உங்கள் ஐயம். இனக்குழு சார்ந்த அடையாளங்கள் நிலப்பிரபுத்துவகாலம் சார்ந்தவை. அவற்றை இன்றைய மனிதன் சுமந்தால் சிந்தனையில் முன்னகர்வே இருக்காது. இது என்கருத்து. அதற்கும் பிராமணர்கள் இந்து மதத்தின் நிலைச்சக்திகள் என்பதற்கும் என்ன முரண்? நிலைச்சக்தி [Static force] என்றால் மார்க்ஸிய நோக்கில் என்ன என்று நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு அமைப்பிலும் அதன் அமைப்பை நிலைநிறுத்தும் ஆற்றல் ஒன்று உண்டு. அது மாற்றங்களுக்கு எதிரானது. செயல் சக்தி அதை எதிர்த்தே முன்னகர முடியும். அவ்வாறே வளர்ச்சி சாத்தியம்

அதனால் நிலைச்சக்தியை தேவையற்றது என ஒரு மார்க்ஸிய ஆய்வாளன் சொல்லமாட்டான். அது இல்லையேல் செயல்சக்தியும் செயல்பட முடியாது. முரணியக்கத்தின் மறுமுனை அது. இது அந்த அடித்தளம் மீதே இயங்க முடியும். ஒரு அமைப்பின் வடிவத்தை நிலைநிறுத்துவதும் அதை அழியாமல் காப்பதும் நிலைச்சக்தியே. பிராமண சக்திக்கு எதிராகவே வேதாந்தம் அத்வைதம் முதல் பின்னாளைய பக்தி இயக்கங்கள் வரை இந்து மதத்தில் உதித்தன. அவற்றின் முரணியக்கமே அதை முன்னால் கொண்டுசென்றது. ஆனா அதுதான் இஸ்லாமிய தாக்குதல்களில் இருந்து இந்து மரபை காத்து நின்றது -சந்தேகமிருந்தால் அம்பேத்காரின் நூல்களை வாசித்துப்பாருங்கள்.

இந்து மரபில் இணைபிரியாது சாதியம் உள்ளது என நான் ஏற்கவில்லை. இந்துமரபு முழுக்க பிற்போக்கானது என நான் எண்ணவில்லை -ஏனென்றால் நான் அதை ஆராய்ந்து அறிவேன். அதன் உயர்தத்துவமும் கலைச்சிகரங்களும் மானுடத்துக்கு பெரும் சொத்து என்றே நினைக்கிறேன். எந்த கடந்தகால கருத்தமைவும்போலவே அதிலும் மானுடவிரோத அம்சங்கள் இருக்கின்றன. சாதியம் உள்ளிட்ட பல அம்சங்கள் கலந்துள்ளன. அவற்றை நீக்கி அதை அறிவதே இன்றைய சவால்

சாதியத்தை விலக்கி நான் இந்து மரபில் இருந்து அத்வைதத்தை பெறுகிறேன். எப்படி என்றால் ஸ்டாலினையும் மாவோவையும் போல்பாட்டையும் விலக்கிவிட்டு எப்படி மார்க்ஸியத்தில் இருந்து முரணியக்கப் பொருள்முதல்வாதத்தை பார்க்கிறேனோ அப்படி

ஜெ

பிகு :

உங்கள் மொழிநடையில் உள்ள தெளிவு ஆச்சரியமளிக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக எழுதலாம் – புனைகதைகளையும்.

இணைப்புகள்

http://www.jeyamohan.in/?p=274 அய்யா பெரியார் -கை.அறிவழகன்
http://www.jeyamohan.in/?p=5789 வைக்கமும் காந்தியும் 1
http://www.jeyamohan.in/?p=5792 வைக்கமும் காந்தியும் 2
http://www.jeyamohan.in/?p=271 பெரியார்-ஒருகடிதம்
http://www.jeyamohan.in/?p=368 அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

முந்தைய கட்டுரைகொற்றவை-கடிதம்
அடுத்த கட்டுரைசில சைவப்பாடல்கள்