பகுதி ஒன்று : கனவுத்திரை – 4
மண் சாலையின் பள்ளங்களிலும் உருளைக் கற்களிலும் சகடங்கள் ஏறி இறங்க அதிர்ந்து சென்ற தேரில் சுஜயன் துயில் விழிக்காமலேயே சென்றான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனுள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. “பறவைகள்” என்றான். அவனுள் சூழ்ந்து பறக்கும் பெருங்கழுகுகளை சுபகை கற்பனையில் விரிப்பதற்குள்ளேயே “மலையில் யானைகள்” என்றான். அச்சொற்கள் அவளை எண்ணமாக வந்தடைவதற்குள்ளேயே “அருவி” என்றான்.
சுபகை முஷ்ணையை நோக்கி “உள்ளே பல இளவரசர்களாக பிரிந்து பல உலகங்களை சமைத்துக்கொள்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள். முஷ்ணை அதற்குள் தூங்கி வழியத்தொடங்கிவிட்டிருந்தாள். தேரின் குடத்தின் மீது அச்சு உரசும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. சுபகை குனிந்து மலர் சூடிய சுஜயனின் குழலை தன் கையால் வருடிக் கொண்டு பாதையோரத்து பந்தத்தூண்களின் ஒளி அவன் முகத்தை கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தாள்.
படித்துறையை அடைந்த போதும் அவன் விழித்துக் கொள்ளவில்லை. துறைமுற்றத்தில் தேர் திரும்பி நின்றபோது துறைக்காவலர் வந்து வணங்கினர். சுபகை முஷ்ணையின் தொடையைத் தட்டி “விழித்துக்கொள்ளடி, துறைமேடை” என்றாள். முஷ்ணை எழுந்து கைகளால் வாயைத்துடைத்தபடி “எங்கே?” என்றாள். “வந்துவிட்டோம். குழந்தையை எடுத்துக் கொள்” என்றாள் சுபகை. அவள் சோம்பல் முறித்தபடி “இவ்வளவு தொலைவா?” என்றபின் “இன்னும் விடியவில்லையா?” என்றாள். “ஆம். ஆனால் விடிவெள்ளி முளைத்துவிட்டது” என்றாள் சுபகை. “நாம் சென்று சேரும்போது இளவெயிலாகிவிட்டிருக்கும்.” முஷ்ணை தன் ஆடையை இடையில் நன்றாகச்செருகி இரு கைகளாலும் குழலை நீவி பின்னால் கொண்டு சென்று கொண்டைக்குள் செருகினாள். அவள் வளையல்கள் ஒலித்தன. இளவரசனை இடை சுற்றித்தூக்கி தன் தோளில் பொருத்திக் கொண்டு ஒரு கையால் தேரின் தூணைப்பற்றி எழுந்தாள்.
சுஜயனின் ஆடை சரிந்து கீழே தொங்க சுபகை அதை எடுத்து முஷ்ணையின் இடையில் செருகினாள். படிகளில் கால் வைத்து முஷ்ணை இறங்கி நின்றாள். காவலர் தலைவன் தலைவணங்கி “குருகுலத்தோன்றல் வாழ்க! சுபாகுவின் மைந்தர் வாழ்க!” என வாழ்த்தி “படகுகள் சித்தமாகியுள்ளன” என்றான். இரு கைகளாலும் தூண்களைப்பற்றி எடை மிக்க உடலை உந்தி சுபகை எழுந்தபோது தேர் அசைந்தது. அவள் காலெடுத்து வைத்தபோது வலப்பக்க சகடம் ஓசையுடன் அழுந்தியது. படிகளில் மெல்ல கால் வைத்து இறங்கி கீழே நின்று தேரைப்பற்றியபடி தன் உடலை நிலைப்படுத்திக் கொண்டாள். “சற்று ஓய்வெடுத்துவிட்டு கிளம்பலாமா?” என்றாள் சுபகை. காவலன் “படகிலேயே ஓய்வெடுக்க முடியும் செவிலியே. படுக்கை அமைந்த படகுதான் அது. நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்றாள் சுபகை.
அஸ்தினபுரியின் படகுத்துறையில் பொதிப்படகுகள் நிரைவகுத்து பந்த ஒளியில் ஆடிக் கொண்டிருந்தன. துலாக்கள் அவற்றிலிருந்து பொதிகளை எடுத்து வானில் சுழற்றி கரைக்கு கொண்டுவந்தன. துலாசுழற்றும் வினைவலரின் கூவல்கள் கங்கைக்காற்றில் அலையலையாக கேட்டன. மையப் படகுத்துறையிலிருந்து வலப்பக்கமாக சரிந்துசென்ற சிறு பாதையின் எல்லையிலிருந்தது பயணப்படகுகளின் சிறுதுறை. மறுபக்கம் அம்பாதேவியின் ஆலயத்தில் அகல் விளக்கு சிறு முத்தென ஒளிவிட்டது. அதன் செவ்வொளியில் அம்பையின் வெள்ளி விழி பதிக்கப்பட்ட கரிய முகம் தெரிந்தது.
துயிலற்றவள் என்று சுபகை எண்ணிக் கொண்டாள். அதையே அக்கணம் எண்ணிக் கொண்டவள் போல முஷ்ணையும் “பெருஞ்சினத்துடன் இப்படித்துறையை பார்த்து அமர்ந்திருக்கிறாள் அன்னை என்று தோன்றுகிறது இல்லையா?” என்றாள். சுபகை ஒன்றும் சொல்லவில்லை. அம்பாதேவியின் ஆலயத்தருகே நிருதனின் சிற்றாலயத்தில் அவன் குலத்தவர் வைத்த மூன்று கல் அகல்கள் சிறு சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன. உள்ளே கை கூப்பிய நிலையில் கரிய சிலை தெரிந்தது. துறைக்காவலன் வந்து “செல்வோம்” என்றான். வண்டிகளிலிருந்து அவர்களுடைய பொதிகள் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
காவலர்கள் ஐவர் படகில் ஏறி விற்களுடன் நிலை கொண்டனர். படகிலிருந்து கரைக்கு நீண்ட நடைபாலம் வழியாக முஷ்ணை சுஜயனுடன் உள்ளே சென்றாள். பாலத்தருகே வந்து சுபகை சற்று கால் அஞ்சி நின்றாள். படகிலிருந்து குகன் ஒருவன் ஒரு கழியை கரைக்கு நீட்ட கரையில் நின்ற வீரன் அதை பற்றிக்கொண்டான். அதை வலக்கையால் பற்றிக் கொண்டு மெல்ல காலெடுத்து வைத்து படகுக்குள் சென்றாள் சுபகை. ஆடும் படகுப் பரப்பை அவள் அடைந்தபோது உடல் சற்று நிலையழிய பதறி படகின் தூணை பற்றிக்கொண்டாள். “அமர்ந்து கொள்ளுங்கள் செவிலியே” என்றான் காவலன். அவள் கைகளால் இறுகப்பற்றியபடி மெல்ல காலெடுத்துச் சென்று படகில் போடப்படிருந்த மூங்கில் பீடத்தில் அமர்ந்து கொண்டாள். “இளவரசரை உள்ளே படுக்க வை” என்றாள்.
சுஜயன் முனகியபடி கால்களை நெளித்தான். கைகளைத்தூக்கி ஒன்று என்று சுட்டும்படி விரலை வைத்துக் கொண்டு வாயை சப்புக் கொட்டினான். அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று தோன்றியது. ஆனால் சுட்டிய விரல் மெல்ல தழைய மீண்டும் துயிலில் ஆழ்ந்தான். முஷ்ணை உள்ளே சென்று படகின் அறையில் குறுமஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த தோல் பரப்பில் அவனை படுக்க வைத்தாள். நீர்ப்பரப்பிலிருந்து குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. தோலாடையை எடுத்து அவன் உடலை போர்த்தினாள். அவன் உடலை சுருட்டியபடி முனகி மீண்டும் கால்களை அசைத்தான். “செல்வோம்” என்று துறைக்காவலன் சொல்ல அமரத்தில் அமர்ந்திருந்த குகன் கையசைத்தான்.
கயிறுகள் இழுபட்டு சுருண்டு கீழே விழுந்தன. பாய் மெல்ல சுருளவிழ்ந்து புடைத்து மேலெழுந்து படகு ஏதோ நினைவுக்கு வந்தது போல் அசைந்தது. கரையில் தரையில் சுற்றப்பட்டிருந்த வடங்களை எடுத்து சுழற்றி படகை நோக்கி வீசினான் துறை குகன். அவை பாம்புகள் சுருள்கொத்துகளாக வந்து விழுவது போல படகின் பரப்பில் வந்து விழுந்தன. கட்டவிழ்ந்ததும் நீரின் ஒழுக்கில் அசைந்து மிதந்த படகு பாயின் விசையை வாங்கி மெல்ல விரைவு கொண்டது. சிம்மம் நீரருந்தும் ஒலியுடன் அலைகள் படகின் விளிம்பை அறைந்தன. அலைகளில் ஏறி இறங்கி ஒழுக்கில் சென்று முழு விரைவைப் பெற்று முன் சென்றது படகு.
மாலினியின் குடில் அமைந்த காட்டில் படகுத் துறையாக அமைந்த பாறையில் கால் வைத்து ஏறுவதற்கான வெட்டுப் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தாவி ஏறிய குகன் மேலே நின்று கை நீட்டி முஷ்ணையை மேலேற்றிக் கொண்டான். தோளில் சுஜயனுடன் அவள் கூர்நோக்கி காலெடுத்து வைத்து மேலே சென்றாள். படிகளின் அருகே வந்த சுபகை மேலே நோக்கி புன்னகைத்தாள். அங்கு நின்றிருந்த இரு குகர்களும் சிரித்துவிட்டனர். இருவர் அவள் இரு கைகளையும் பற்ற இன்னொரு குகன் அவள் பின்பக்கத்தை உந்தி மேலே தூக்க ஒவ்வொரு படியிலும் நின்று நின்று அவள் பாறைகளில் ஏறினாள். முஷ்ணையின் தோளில் விழித்தெழுந்து திரும்பிய சுஜயன் “யானை” என்று அவளை நோக்கி கை சுட்டி சொன்னான். குகர்களும் முஷ்ணையும் உரக்கச் சிரிக்க முகம் சிவந்த சுபகை “யானை அல்ல இளவரசே, ஐராவதம்” என்றாள். காவலர்கள் மீண்டும் சிரித்தனர்.
பாறை மேல் ஏறியதும் மூச்சிரைக்க இரு கைகளையும் இடையில் வைத்து நின்று சுபகை திரும்பி கீழே கங்கையில் ஆடிய படகை நோக்கினாள். “இன்னும் எவ்வளவு தொலைவு?” என்றாள். “அரை நாழிகை நடக்க வேண்டும்” என்றான் காவலன். “படகு திரும்பிப் போகிறதா?” என்றாள். “இல்லை செவிலியன்னையே. படகு எப்போதும் இங்கே இருக்க வேண்டுமென்பது ஆணை. நாங்கள் ஒரு சிறு குடில் கட்டி படகுடன் இங்கிருப்போம். தேவையெனும்போது ஒரு சொல் அனுப்பினால் படகு சித்தமாக இருக்கும்” என்றான் குகன். “படகுகளில் முதலைகள் ஏறினால் என்ன செய்வீர்கள்?” என்றான் சுஜயன். “சமைத்து சாப்பிடுவார்கள்” என்றாள் சுபகை. “முதலைகளையா?” என்றான் சுஜயன். “செல்வோம்” என்று ஆணையிட்ட சுபகை வியர்வைத் துளிகள் பனித்த வெண்ணிற உடலை மெல்ல அசைத்து நடந்தாள்.
முழங்கால் அளவு உயரமுள்ள பூச்செடிகள் மண்டிய அரைச் சதுப்பு நிலத்தில் நடந்து செல்வதற்காக தடிகளை அடுக்கி பாதை போட்டிருந்தார்கள். சில இடங்களில் தடிகள் சேற்றில் அழுந்தி முதலைகள் சப்புக் கொட்டும் ஒலியை எழுப்பின. தவளைகள் எழுந்து துள்ளி இலைகளில் அமர்ந்து ஊசலாடின. சுஜயன் “நான் பெரிய முதலையை அப்படியே தின்பேன்” என்றான். பாதை நோக்கி நடந்ததால் எவரும் அவனுக்கு விடையளிக்கவில்லை. அவன் திரும்பி அருகே நின்ற மரத்தின் இலையில் அமர்ந்திருந்த மிகச்சிறிய தவளை ஒன்றைக் காட்டி “அரக்கன்” என்றான். “எங்கே?” என்றாள் முஷ்ணை சற்று அஞ்சி. அவன் விரல்சுட்டிய இடத்தில். தவளையைப்பார்த்ததும் அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். “அது பெரிய கண் உள்ள அரக்கன். அப்படியே தாவி…” என்று சுஜயன் தாவப்போக அவள் சற்று நிலை குலைந்தாள். காவலன் அவள் தோளை பற்றிக் கொண்டான்.
“அடியெண்ணி செல்ல வேண்டும் செவிலியே. இங்கு பாதை நிகர் நிலையற்றது” என்றான் காவலன். சுஜயன் “ஏன்?” என்றான். காவலன் ஒன்றும் சொல்லவில்லை. சுஜயன் “இங்கே அரக்கர்கள் வந்து பாதையை உடைக்கிறார்கள்” என்றான். “ஆரம்பித்துவிட்டார். இனி பகல் முழுக்க இதுதான்” என்றாள் முஷ்ணை. சுபகை “எல்லாவற்றுக்கும் அவரிடம் விளக்கம் உள்ளது” என்றாள். “எப்படித்தான் கண் விழித்த முதல் கணத்திலேயே அரக்கர்களும் தேவர்களும் கிளம்பி வருகிறார்களோ தெரியவில்லை” என்றாள் முஷ்ணை. “தேவர்கள் அரக்கர்களை வெட்டிக் கொல்வார்கள். குருதி…” என்று சொன்ன சுஜயன், தன் ஆடையை தொட்டுப்பார்த்து “குருதி இல்லை, புண் ஆறிவிட்டது” என்றான். பின்னால் ஒரு காவலனின் கை பற்றி மூச்சிரைக்க நடந்து வந்த சுபகை தன் ஆடையை முழங்கால் வரை தூக்கி மூச்சிரைக்க நின்று “குருதி நிறைந்த ஒரு தோலாடையையும் பட்டாடையையும் பைக்குள் வைத்திருக்கிறேன். காட்டுகிறேன்” என்றாள். “அது அரக்கனின் குருதி” என்று அவன் புருவத்தை தூக்கியபடி சொன்னான். சுட்டு விரலைக்காட்டி “ஏழு அரக்கர்கள்” என்றான்.
சற்று அடர்ந்த காட்டுக்குள் பாதை நுழைந்தது. இரு பக்க மரங்களும் மேலெழுந்து கிளை கோத்துக் கொண்டதால் தழையாலான குகை என அது தெரிந்தது. சுஜயனின் விழிகள் மாறுபட்டன. இரு கைகளாலும் அவன் முஷ்ணையின் ஆடையை அள்ளிப்பற்றிக் கொண்டான். “அது குகை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அதற்குள் யானை உண்டா?” என்றான். “இல்லை” என்றாள் அவள். “யானை உண்டு” என்று அவன் சொன்னான். “பறக்கும் யானை! அவன் பெயர் கஜமுக அரக்கன். அவன் அவ்வளவு பெரிய கதாயுதத்தைக் கொண்டு வந்து மண்டையில்…” என்று மேலும் சொல்லி அவளை கால்களாலும் கைகளாலும் இறுகப்பற்றிக் கொண்டு “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்று அவன் தழைந்த குரலில் சொன்னான். “இளவரசே, காவலர்கள் இருக்கிறார்களல்லவா. அஞ்சாது வாருங்கள்” என்றாள் முஷ்ணை.
“இல்லை” என்றான் சுஜயன். “தாங்கள் வீரராயிற்றே, அஞ்சலாமா?” என்றாள் முஷ்ணை. “அரண்மனைக்கு…” என்று சொல்லி சுஜயன் அழத்தொடங்கினான். பின்னால் வந்த சுபகை “அவ்வளவுதான். வீரமெல்லாம் வடிந்துவிட்டது” என்றாள். சுஜயன் உடல் நடுங்கத்தொடங்கிவிட்டது. அவன் முஷ்ணையை இறுகப்பற்றிக் கொண்டு “வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை அரண்மனைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றான். “ஏன்?” என்றாள் முஷ்ணை. “இங்கே அரக்கர்கள் இருக்கிறார்கள். நான் அரண்மனைக்கு செல்கிறேன்” என்றான். பிறகு கால்களை உதைத்தபடி உடல் வளைத்து திமிறி “அரண்மனைக்கு அரண்மனைக்கு” என்று கூவி அழத்தொடங்கினான்.
சுபகை பின்னால் வந்து “பேசாமல் வாருங்கள். ஓசையிட்டீர்களென்றால் இறக்கி விட்டு விடுவோம்” என்றாள். அவன் திகைத்து வாய் திறந்து சில கணங்கள் அமைந்துவிட்டு முகத்தை முஷ்ணையின் தோளில் புதைத்துக் கொண்டான். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை முஷ்ணை உணர்ந்தாள். மெல்ல விசும்பி அழுதபடி அவன் கண்களை மூடிக் கொண்டான். கண்ணீர் அவள் தோளில் வழிந்தது. “அழுகிறார்” என்றாள் முஷ்ணை. “அங்கு சென்றதும் சரியாகிவிடுவார்” என்றாள் சுபகை.
காட்டின் உள்ளே சென்றதும் முதலில் கண்கள் இருண்டன. அதுவரை இருந்த ஓசை மாறுபட்டது. கிளைகள் உரசிக்கொள்ளும் முனகலும் காற்றின் பெருக்கோசையும் மிகத்தொலைவில் எங்கோ காட்டுக்குரங்குகள் எழுப்பிய முழவோசையும் கலந்து எழுந்தன. காட்டுக்குள் மரத்தடிகள் போடப்பட்ட பாதை மீது முந்தைய நாள் மழையில் வழிந்து வந்த சேறு படிந்திருந்தமையால் நன்கு வழுக்கியது. “கைகளை பற்றிக் கொள்ளுங்கள் செவிலி அன்னையே” என்றான் காவலன். சுஜயன் தன் உடலை முற்றிலும் ஒடுக்கி முஷ்ணையின் உடலின் ஒரு பகுதியாக மாறியவன் போலிருந்தான். உதடுகளை அவள் தோளில் அழுத்தியிருந்ததனால் அவன் மூச்சு சூடாக அவள் தோளில் பட்டது.
மிக அருகே புதருக்குள் இருந்த மான் ஒன்று அவர்களை நோக்கி விழி உறைந்து செவி முன்கோட்டி அசையாது நின்றது. அவர்களின் காலடிகள் அதன் உடலில் அதிர்வுகளாக வெளிப்பட்டன. பின்பு அது காற்றில் எழுந்து தாவி புதர்களைக் கடந்து ஓட அதைச் சுற்றிலும் இருந்த புதர்களிலிருந்து மேலும் மான்கள் காற்றில் தாவி எழுந்து விழுந்து துள்ளி எழுந்து மறைந்தன. சுஜயன் அலறியபடி இரு கைகளால் அவள் கழுத்தை இறுகப்பற்றிக் கொண்டு துடித்தான். அந்த விசையில் அவள் விழப்போக காவலன் பற்றிக் கொண்டான். “செல்வோம்” என்றாள் சுபகை. முஷ்ணை சற்று காலெடுத்து வைத்ததும் எதிர்பாராதபடி சுஜயன் அவளை விட்டுவிட்டு உதறி கீழே இறங்கி திரும்பி ஓடத்தொடங்கினான். “பிடியுங்கள்” என்று சுபகை கூவத்தொடங்குவதற்குள் அவன் சேற்றில் வழுக்கி விழுந்தான். எழுவதற்குள் மீண்டும் வழுக்கினான்.
காவலன் பாய்ந்துசென்று அவன் கையைப்பற்றித் தூக்க “மெதுவாக… அவர் கைகள் மிக மெல்லியவை. உடைந்துவிடும்” என்றாள் சுபகை. காவலன் பட்டுமேலாடையை என அவனை சுழற்றித் தூக்கினான். ஆடையிலும் உடல் முழுக்கவும் சேறு படிந்திருக்க கைகால்கள் நீல நரம்பு புடைத்து விரைப்பு கொள்ள சுஜயன் காவலன் கையிலிருந்து கதறி அழுதான். “நீங்களே கொண்டு வாருங்கள். என்னால் அவரை சுமக்க முடியாது” என்றாள் முஷ்ணை. “இளவரசை சுமப்பது என் நல்லூழ் அல்லவா?” என்றான் காவலன்.
காவலனின் கரிய பெரிய கைகளில் கரிய பாறை இடுக்கில் முளைத்த சிறிய வெண்ணிற வேர் போலிருந்தான் சுஜயன். உடல் வளைத்து நெளித்து கால்களை உதைத்து அலறியபின் அந்தப் பிடியிலிருந்து சற்றும் நெகிழ முடியாது என்று உணர்ந்து தோள்களை வளைத்துக் கொண்டான். சற்று நேரத்தில் அவன் உடல் எளிதாகியது. தன் மெல்லிய கைகளால் காவலனின் கரிய பெரிய தோள்களை தொட்டான். “நீ அரக்கனா?” என்றான். “இல்லை இளவரசே, நான் பூதம்” என்றான் அவன். “பூதமா?” என்றான். “ஆம், தங்களுக்கு காவலாக வந்த பூதம்” என்றான் காவலன். “அரக்கர்கள் வந்தால் நீ என்ன செய்வாய்?” என்றான் சுஜயன். “அரக்கர்களை காலைப்பிடித்து சுழற்றி தரையில் ஓங்கி அறைந்து கொல்வேன்” என்றான் காவலன்.
சுஜயன் காவலனின் மிகப்பெரிய மீசையை தன் கையால் தொட்டான். “இது முடியா?” என்றான். “மீசை” என்றான் காவலன். சுஜயன் இரண்டு கைகளாலும் மீசையைப்பற்றி அசைத்து “வலிக்கிறதா?” என்றான். “இல்லை” என்றான் காவலன். அவனுடைய பெரிய வெண்பற்களை கையால் தொட்டு “நீ ஊன் தின்பாயா?” என்றான். “ஆம். எலும்புகளைக்கூட கடித்து தின்பேன்” என்றான் காவலன். “நான் சொல்லும் அரக்கரை கொன்று தின்பாயா?” என்றான் சுஜயன். “ஆம்” என்று சொன்னான் காவலன். “நீங்கள் சுட்டிக் காட்டுங்கள் இளவரசே, நான் உடனே கொன்று தின்றுவிடுகிறேன்” என்றான். சுஜயன் புன்னகைத்து நாணத்துடன் “நாளைக்கு சொல்கிறேன்” என்றான். பின்னர் “என்னை விடு. என் கால்கள் இறுகி இருக்கின்றன” என்றான். காவலன் அவனை எளிதாக தூக்கிக் கொண்டான். சுஜயன் பெருமூச்சு விட்டு “நானே யானைகளை கொல்வேன்” என்றான்.
சுஜயன் அவன் தோள்களைத் தொட்டு “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். “நீங்கள் யானை மத்தகத்தை பார்த்திருக்கிறீர்களா?” என்றான் காவலன். “நூறு முறை பார்த்திருக்கிறேன்” என்று சுஜயன் மூன்று விரல்களை காட்டினான். பிறகு “என்னை உன் தோளிலே நிற்கவை” என்று சொன்னான். “நிற்க வைக்க முடியாது இளவரசே. உட்கார வைத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இடை வளைத்து தூக்கி இரு கால்களையும் மார்பில் போட்டுக் கொண்டு தலைக்குப்பின்னால் சுஜயனை அமரவைத்தான். சுஜயன் அவன் தலைப்பாகையை பிடித்துக் கொண்டு “யானை… யானை மேல் செல்கிறேன்” என்று கூவினான். அவனைச் சூழ்ந்து வந்தவர்களெல்லாம் தலைகளாக தெரிந்தனர்.
“முன்னால் போ பூதமே! பறந்து போ… பறந்து” என்று கூவினான் சுஜயன். “இப்போது பறக்க முடியாது” என்றான் காவலன். “ஏன்?” என்றான் சுஜயன். “பகலில் எந்தப் பூதமாவது பறக்குமா?” என்றான் காவலன். “ஆமாம். பறக்காது. பகலில் பறந்தால்…” என்று சொல்லி சுட்டு விரலைக்காட்டிய சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “நிழல் வருமில்லையா? நிழலும் இன்னொரு பூதமாக ஆகிவிடும். ஆகவே பகலில் பறக்கக் கூடாது” என்று சொன்னான். “சரியாக சொன்னீர்கள்” என்றான் காவலன். “இரவில் நான் அழைப்பேன். நீ வந்து என்னை தூக்கிக் கொண்டு பறந்து செல்” என்றான் சுஜயன். காவலன் “ஆணை” என்றான். சுஜயன் தன்னுடைய காலால் காவலனின் விரிந்த பெரிய மார்பை மிதித்தான். “உள்ளே எலும்பு இருக்கிறதா?” என்றான். “என்னுடைய எலும்புகள் இரும்பாலானவை இளவரசே” என்றான் காவலன். “இரும்பா?” என்றான் சுஜயன். “ஆமாம்” என்றான் காவலன். சுஜயன் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “எப்படி இரும்பாலாயிற்று?” என்றான். “நான் எதற்குமே அஞ்சமாட்டேன். நிறைய ஊன் உணவு உண்பேன். ஆகவே எனக்கு இரும்பாலான எலும்புகள் வந்தன.” சுஜயன் சற்று நேரம் காட்டை நோக்கினான். பிறகு “நான் ஊன் உண்பேன். முதலைகள்… ஏழு முதலைகளை உண்பேன்” என்றான்.
காட்டுக்கு அப்பால் ஒளி தெரிந்தது. “அங்கே ஆறு ஓடுகிறது” என்றான் சுஜயன். “ஆறு அல்ல, சமவெளி” என்றான் காவலன். “சமவெளி என்றால்…?” என்றான் சுஜயன். “அங்கே மரங்கள் இல்லை. உயரமில்லாத புதர்கள்தான். அதன் நடுவேதான் குடில் இருக்கிறது.” “யாருடைய குடில்?” “மாலினிதேவியின் குடில்” என்றான் காவலன். “மாலினி யார்?” என்றான் சுஜயன் திரும்பி. “மாலினிதேவி என்னைப்போன்ற செவிலி. இளைய பாண்டவராகிய அர்ஜுனர் தங்களைப் போல் சிறிய குழந்தையாக இருக்கும்போது மாலினிதான் அந்தக் குழந்தையை தன் மார்பிலே போட்டு உணவு ஊட்டி கதையெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார்” என்றாள் சுபகை. “என்ன கதை?” என்று அவன் கேட்டான். “கார்த்தவீரியார்ஜுனன் கதை, பிறகு ராகவ ராமனின் கதை.”
தனக்குள் மெல்ல “ராகவ ராமன்…” என்று சொன்ன சுஜயன் “ராகவ ராமன் நல்லவனா?” என்று கேட்டான். “ஆம். நல்லவர். அவர்தான் பத்து தலை அரக்கனாகிய ராவணனை கொன்றவர்.” “ராவணன் கெட்டவன்” என்றான் சுஜயன். “ஆம்” என்றாள் சுபகை. “ராவணனை நான் கொல்வேன்” என்றான் சுஜயன். “அவரைத்தான் ஏற்கனவே ராகவ ராமன் கொன்றுவிட்டாரே” என்று முஷ்ணை சொன்னாள். முஷ்ணையை பொருள் விளங்காமல் நோக்கியபின் “பத்து தலை” என்றான் சுஜயன். “மாலினி தங்களுக்கு இளைய பாண்டவர் பார்த்தரின் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு தாங்கள் பெரிய வீரனாக ஆகிவிடுவீர்கள். மதயானையை மத்தகத்தைப் பிடித்து நிறுத்தி அதன்மேல் ஏறிவிடுவீர்கள்.” “நான் மத யானையை கொல்வேன்” என்றான் சுஜயன். “கொல்லவேண்டாம். அதன் மேல் அமர்ந்து கதாயுதத்துடன் போருக்கு செல்லுங்கள்.”
சுஜயன் ஆர்வத்துடன் “போருக்குச் சென்று நான் பத்து தலை… பத்து தலை ராவணனை…” என்றபின் “நூறு தலை ராவணனை நான் கொல்வேன்” என்றான். “ஆமாம். நூறு தலை ராவணனை நீங்கள் கொல்வீர்கள். அவனுக்கு இப்போதுதான் தலைகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அர்ஜுனரின் கதைகளைக் கேட்டு பெரிய வீரராக வளரும்போது நூறு தலை முளைத்து அரக்கன் சித்தமாக இருப்பான்” என்று சுபகை சொன்னாள். “எங்கே?” என்று சற்று உடலை ஒடுக்கியபடி சுஜயன் கேட்டான். “அஞ்சிவிட்டார்” என்றாள் முஷ்ணை. “சும்மா இரடி, அதெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் குருகுலத்து பெருவீரன்” என்றாள். சுஜயன் “எங்கே?” என்று மறுபடியும் கேட்டான். “நெடுந்தொலைவில் வானத்திற்கு அப்பால்” என்றாள் சுபகை. சுஜயன் சற்று எளிதாகி “நான் பறந்து போய் அவனை கொல்வேன்” என்றான்.