பகுதி ஒன்று : கனவுத்திரை – 2
குளியலறைச்செவிலி சுபகை அவனை உள்ளறைக்கு கொண்டு சென்று சிறு பீடத்தின்மேல் நிறுத்தினாள். கனவு படிந்த விழிகளுடன் சுஜயன் தோள்கள் தொய்ய உடல் குழைந்து நின்றான். அவள் பிடியை விட்டபோது கால் தளர்ந்து விழப்பார்த்தான். “நின்றுகொள்ளுங்கள் இளவரசே” என்று அவனை ஒரு கையால் பற்றியபடி அவன் இடையாடையை அவிழ்த்தாள். கூச்சத்துடன் கால்களை உதைத்தபடி அவன் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டான். அவன் ஆடையை கழற்றி வெற்றுடலுடன் தூக்கிச் சென்றாள். அவள் மார்பின் மேல் தன்னுடலை மறைத்து “ஆடை ஆடை” என்றான் சுஜயன்.
“எதற்கு ஆடை? நீராடத்தானே போகிறீர்கள்?” என்றாள் சுபகை. “நான் ஆடையுடன் நீராடுவேன்” என்றான் சுஜயன். “ஏன்?” என்றாள். “நீராடிக் கொண்டிருக்கும்போது இதோ இந்த வாயிலைத்திறந்து பெரிய யானை ஒன்று உள்ளே வந்தால் நான் அதை பெரிய கதாயுதத்தால் அடிப்பேன். அது பிளிறி அப்படியே சரிந்து விழுந்துவிடும். அதன் மேல் இருக்கும் கந்தர்வன் மிகப்பெரிய கதாயுதம் வைத்திருப்பான். இரும்பு கதாயுதம். அவனை அம்பு தொடுத்து வீழ்த்திவிட்டு அந்த கதாயுதத்தை எடுத்து நான் அவனை அறைவேன். மூன்று யானைகள்!” என்றபின் சுஜயன் தலையசைத்து “ஏழு யானைகள்” என்றான்.
“அம்மாடி, ஏழு யானைகள் இந்த நீராட்டறைக்குள் வருமா?” என்றாள் சுபகை. “ஆமாம், நீராட்டறைக்குள்…” என்று சொல்லி அந்த சிறு வாயிலை நோக்கியபின் கையைத்தூக்கி “இந்தக் கூரையை உடைத்துக்கொண்டு அவை உள்ளே இறங்கிவிடும்… ஏனென்றால் அவை சிறகுகள் உள்ள யானைகள்” என்றான். “யானைக்கு சிறகுகள் உண்டு என்று யார் சொன்னது?” என்றாள் சுபகை. “எனக்குத்தெரியும். நான் பார்த்திருக்கிறேன்” என்றான் சுஜயன். கைகளை விரித்து ஆட்டி “யானைகளுக்கு மூன்று சிறகுகள்…” என்றான்.
சுபகை சிரித்துவிட்டாள். அவனைத் தூக்கி சற்றே விலக்கி “மூன்று சிறகுகளா?” என்றாள். சுஜயன் “ஆம்” என்றான். “மூன்று சிறகுகள் உள்ள யானையா?” என்றாள். “ஆமாம். பறவைகளுக்கு மூன்று சிறகுகள் இருக்கின்றனவே?” என்றான். “பறவைகளுக்கு மூன்று சிறகுகளா, எங்கே பார்த்தீர்கள்?” என்றாள் சுபகை. “நான் பார்த்தேன்.” இரு கைகளையும் விரித்து ஆட்டி “இரு சிறகுகள் இப்படி இருக்கும். கை போல” என்ற சுஜயன் திரும்பி தன் பின்பக்கம் கையை வைத்து “இவ்வளவு பெரிய சிறகு பின்னால் இருக்கும்” என்றான்.
“அது சிறகல்ல இளவரசே, பறவையின் வால் அது” என்றாள் சுபகை. “வாலா?” என்றான் சுஜயன் தலையை அசைத்து. “வால் அல்ல. வாலென்றால் நீளமாக இருக்கும். குரங்குக்கு வால் உண்டு” என்றபின் உரக்க “குதிரைக்கு வால்…” என்றபின் சிந்தனை வயப்பட்டு “குதிரைக்கு சிறகு” என்றான். “குதிரைக்கு சிறகிருக்கிறதா?” என்று சுபகை கேட்டாள். “ஆமாம்” என்றபின் அவன் மீண்டும் கண்களை சரித்து “இங்கே நீர் நிறைந்திருக்கிறது. இதில் இதில் இதில் நான் நீராடும்போது தண்ணீருக்குள் பெரிய முதலைகள் இருக்கும்” என்றான்.
சுபகை “முதலைகளா? நீங்கள் எங்கு முதலைகளை பார்த்தீர்கள்?” என்றாள். “ஆம், நான் கங்கையில் படகில் போகும்போது பார்த்தேன். நூறு முதலைக் குட்டிகளை எடுத்து வந்து ஒரு சின்ன பேழைக்குள் போட்டு அங்கே வைத்திருக்கிறேன். அந்த முதலைக் குட்டிகள் இதோ இந்த குளத்தில் உள்ள நீருக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றன. அவை என்னை ஒன்றுமே செய்யா. ஏனென்றால் நான் அவற்றுக்கு தோழன். முதலையரக்கர்கள் அவர்கள். ஆகவே அரசகுமாரர்களை ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் கரிய அரக்கர்கள் இந்த அரண்மனைக்குள் வந்தால் பாய்ந்து கடித்து…” என்றபின் பற்களை நரநரவென்று கடிப்பது போல காட்டி “அப்படியே ஊனை கவ்வி குருதியை உறிஞ்சி…” என்றான்.
அவன் உடலில் பூசுவதற்கான நறுமணத்தைலத்துடன் வந்த முதியசேடி சபரி “பார்ப்பதற்குத்தான் இப்படி எலிக்குஞ்சு போலிருக்கிறார். எந்நேரமும் வாள் உதிரம் ஊன் இதுதான் நினைப்பு” என்றாள். “சிறு துளியாக இருந்தாலும் உலகையே உண்டுவிடவேண்டுமென்றுதான் நெருப்பு துடிக்கிறது என்பார்கள்” என்றாள் சுபகை. சுஜயன் அவளையே பார்த்து “இதோ இவள் அரக்கி! வடக்கே இமயமலையில் உள்ள அரக்கமலை என்ற மலையிலிருந்து வருபவள். குழந்தைகளை கொண்டு சென்று கொன்று குருதி குடிப்பாள். ஊனை தின்பாள். கடித்துக்கடித்து…” என்றபின் கையை தூக்கி “நான் வாளை உருவி இவள் தலையை வெட்டி…” என்றான்.
“வியப்பாக இருக்கிறதடி. இப்பருவத்தில் அன்பையோ அழகையோ உளம் கொண்ட ஒரு மைந்தரைக்கூட நான் பார்த்ததில்லை. அத்தனை பேர் மனத்திலும் வாள் மட்டுமே உள்ளது” என்றாள் முதியவள். “இந்த சிற்றுடலுக்குள் இருந்து உடல்அளிக்கும் எல்லைகளைக் கடந்து செல்ல துடிக்கிறது தொல் புகழ் கொண்ட குருகுலத்தின் குருதி” என்றபடி சுபகை நறு நெய்யை விரல்களால் குழைத்து சுஜயனின் தோள்களில் பூசினாள். “மெல்லிய தோள்கள். நேற்றுதான் என் கைகளில் பிறந்து வந்தார். அப்போதிருந்தபடியே இருப்பது போல் தோன்றுகிறது. புயங்களோ விரல்களோ எதுவுமே வளரவில்லை” என்றாள் சேடி. “நானும் அந்த மாயத்தைதான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுபகை. “முதற்பார்வையில் அய்யோ எவ்வளவு வளர்ந்துவிட்டார் என்றும், கையோடு எடுத்து அணைத்து கொண்டுவரும்போது வளரவேயில்லை அவ்வண்ணமே இருக்கிறாரே என்றும் மாறி மாறி தோன்றுவதுதான் என்ன!” என்றாள்.
சுஜயன் கைநீட்டி காட்டி “நான் வளர்ந்துவிட்டேன்” என்றான். “என்னால் புரவியில் ஏறமுடியும்… பெரிய வெண்புரவியில்…” சுபகை சிரித்து “ஆமாம். இப்போது போனால் ஏழு இளவரசிகளை கொய்து புரவியிலேற்றி கொண்டுவந்துவிடுவீர்கள்” என்றாள். “ஏழு இளவரசிகள்!” என்றபடி சுஜயன் பாய்ந்து சுபகையின் தோள்களை பிடித்தான். “ஏழு இளவரசிகள்! ஏழு ஏழு!” என்று திக்கினான். முதியவள் வெந்நீரில் கையை விட்டு பதம் பார்த்தபடி “இவர்களுக்கெல்லாம் புரவியும் பெண்களும் பிறப்பிலேயே உடன் அளிக்கப்பட்டுவிடுகின்றன” என்றாள். உதட்டில் கைவைத்து “பேசாதே” என்று சொல்லி திரும்பி அவள் தலையை கையால் அடித்துவிட்டு சுஜயன் சுபகையின் மேலாடையை பற்றி இழுத்தான். அது சரிய அவளுடைய பெரிய முலைகள் வெளித்தெரிந்தன. அவன் திகைத்து அதைப்பார்த்தபடி பின்னால் சென்றான். “அஞ்சிவிட்டார்” என்று கிழவி சிரித்தாள்.
சுபகை மேலாடையை எடுத்து நன்றாக சுற்றிக்கொண்டு சிரித்தபடி “அஞ்சிவிட்டீர்களா இளவரசே?” என்றாள். “அவ்வளவு பெரியது” என்றான் சுஜயன். பிறகு கைசுட்டி “அது குழந்தையா?” என்றான். “எது?” என்றாள் சுபகை. அவள் முலையை தன் கையால் தொட்டு “இது சின்னக்குழந்தையா?” என்றான். “அரிய கற்பனை” என்று சொல்லி கிழவி நகைத்தாள். சுபகை அவனை அள்ளி வெந்நீருக்குள் ஆழ்த்தி வைத்தபடி “காலை தோறும் படுக்கையை நனைக்கிறாரென்று இப்போதுதான் செவிலி புலம்பிவிட்டு சென்றாள்” என்றாள். “படுக்கையை நனைக்க நீங்கள் என்ன சிறுமியா?” என்றாள் முதியவள். “என் நெஞ்சில் அவ்வளவு பெரிய வாளை செருகி… நிறைய குருதி. சூடான குருதி. இதோ இந்தத் தண்ணீர் போல சூடான குருதி” என்றான் சுஜயன்.
“குருதியா?” என்று புருவம் சுளித்தாள் கிழவி. சுபகை “எத்தனை கதைகளை மாற்றி சொன்னாலும் இது போன்று ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டாரென்றால் அதிலிருந்து விலகுவதே இல்லை. எந்தத் துயிலில் எழுப்பிக் கேட்டாலும் அது குருதிதான், சிறுநீரில்லை என்று சொல்வார்” என்று சிரித்தாள். “அது அவர் சொல்வதல்லடி, அப்படியே உண்மையென்று நம்பிவிடுவது. அதன்பின் அவரே நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியாது” என்றாள் கிழவி. “இச்சிறுநீர் பழக்கம் குருகுலத்து இளைஞர்கள் வேறெவருக்காவது இருந்திருக்கிறதா?” என்றாள் சுபகை.
“குருகுலத்திலா? இருந்திருக்கும். யாரறிவார்? செவிலியர் சொல்லும் கதைகளை சூதர்கள் எழுதுகிறார்களா என்ன? இவர்கள் மகளிரறைவிட்டு வாளேந்தி போர்க்களம் கண்டபிறகுதான் சூதர்களின் கதைகளே தொடங்குகின்றன. அக்கதைகளும் ஒன்றுடனொன்று மாறுபடுவதில்லை. மண் வெல்லுதல் பெண் கொள்ளுதல் களம் நின்று போரிடுதல் குருதியாடி வெல்லுதல்… அவ்வளவுதான். ஷத்ரியர்கள் தங்களுக்கென வாழ்க்கையற்றவர்கள். அவர்களின் வாழ்க்கையை முன்னரே சூதர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை உரிய முறையில் நடித்துக் கொடுத்துவிட்டு விண்மீளும் பொறுப்பு மட்டுமே அவர்களுக்குள்ளது” என்றாள் கிழவி.
இளவெந்நீர்த் தொட்டியிலிருந்து சுஜயனைத் தூக்கி பீடத்தில் நிறுத்தினாள் சுபகை. அவன் உடலிலிருந்து வாழைத்தண்டில் மழைபோல் நீர் வழிந்தது. அவனது மெலிந்த இரு கைகளையும் சேர்த்து பற்றி சிறு பண்டியோடு சேர்த்து அழுத்தியபடி “துடைத்து நறுஞ்சுண்ணமிட்டு முடிப்பதுவரை வாய் அசையாமல் இருக்கவேண்டும். தெரிகிறதா?” என்றாள். “வாய் அசையாமல் எப்படி பேச முடியும்?” என்றான் சுஜயன். “பேசாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்” என்றாள். “பேசாமல் இருந்தால் இந்தப் பகுதியில் வரும் கழுகுகள் நான் இருப்பது தெரியாமல் கடந்து போய்விடும் அல்லவா?” என்றான் சுஜயன். “ஆரம்பித்துவிட்டார். இனி அவ்வளவுதான்” என்றாள் முதியவள்.
“கழுகுகளுக்கு நான் இருப்பது தெரிந்தால்தான் நாங்கள் போர் புரியமுடியும். நானும் கழுகுகளும் போர் புரியாவிட்டால் கழுகுகள் நேராகச் சென்று அரண்மனை மேல் இறங்கி அங்கிருக்கக்கூடிய வீரர்களை வாழைப்பழத்தை தின்பது போல் தின்றுவிடும்…” என்றான் சுஜயன். “இவரை பேசவைப்பதற்கு சிறந்தவழி பேசக்கூடாது என்று சொல்வதுதான்” என்று சிரித்தாள் முதியவள். “இளவரசே, நறுஞ்சுண்ணம் வாய்க்குள் போய்விடும்… வாயை மூடுங்கள்” என்றாள் சுபகை. “வாய்க்குள்… வாய்க்குள்… வாய்க்குள்…” என்று மூன்று முறை சொல்லி கையைத்தூக்கி வாயை சற்று நேரம் திறந்து வைத்துவிட்டபின் துப்பியபடி “வாய்க்குள் நறுஞ்சுண்ணம் போனால் என்ன?” என்றான் சுஜயன். “ஒன்றுமில்லை, வெண்ணைதின்ற கண்ணன் போலிருப்பீர்கள்.” “கண்ணன் ஏன் வெண்ணை தின்றான்?” “சுண்ணம் என்று நினைத்து தின்றிருப்பான்…” அவன் சித்தம் அச்சொற்களில் திகைத்து நின்றுவிட்டது. விழிகள் மட்டும் உருண்டன.
அவன் உடலை மெல்லிய பட்டுத்துணியால் துடைத்து ஈரம் போகச் செய்தபின் பொற்கிண்ணத்திலிருந்த சந்தனப் பொடி கலந்த நறுஞ்சுண்ணத்தை மென்பஞ்சால் தொட்டு அவன் அக்குள்களிலும் கால் இடுக்குகளிலும் ஒற்றினாள். அவன் கூச்சத்தில் சிரித்தபடி துள்ளி விலக அவள் அவனைப் பிடித்து இழுத்தாள். அவன் பாய்ந்து அவள் மேல் ஏறி கழுத்தை கைகளால் சுற்றிக்கொண்டு அவள் முலைகளை கால்களால் சுற்றிக் கொண்டான். “சுண்ணமிட்டுக்கொண்டது நீயா அவரா என்று கேட்கப்போகிறார்கள்” என்றாள் முதியவள். “கன்றுக்குட்டிக்கு மூக்குக் கயிறிடுவது போன்றது இவரை சுண்ணமிட்டு சீர் செய்வது…” என்றாள் சுபகை. சுஜயன் பிடியை மேலும் இறுக்கியபடி “இப்படித்தான் நான் மத யானையை அடக்குவேன்” என்றான். “அய்யோடி… விழுந்துவிடுவேன்…” என்றாள் சுபகை.
முதியவள் வந்து அவனை இடை பற்றி இழுத்தாள். அவன் இறுகப்பற்றியபடி “மதயானை! அது துதிக்கையைத் தூக்கி பிளிறும்… அதன் கொம்புகளை இப்படியே பிடித்து…” என்று திரும்பி கைகளை விரித்ததும் அவள் அவனை இழுத்து பிரித்து மீண்டும் பீடத்தில் நிறுத்தினாள். “மதயானையை அடக்குங்கள். ஆனால் விடியற்காலையில் ஏன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறீர்கள்?” என்றாள் கிழவி. “நான்… குருதி… என்னுடைய நெஞ்சிலிருந்து நிறைய குருதி…” என்று அவன் மறுபடியும் ஆரம்பித்தான். “எப்படி தூக்கிப் போட்டாலும் பூனை சரியாக நான்கு கால்களில்தான் விழும்” என்றாள் முதியவள் சிரித்தபடி.
“இவர் இப்படி படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?” என்று சுண்ணமிட்டபடியே சுபகை கேட்டாள். “வளர்வது ஒன்றுதான் வழி” என்றாள் கிழவி. “அதுதான் வளரமாட்டேன் என்கிறாரே. என் கையளவு கூட இல்லை” என்றாள் சுபகை. “உன் கையளவு ஆகும்போது இவர் நேராக வாளேந்தி களத்திற்கே சென்று விடலாம்” என்றாள் கிழவி. சுபகை வெடித்துச் சிரித்தபடி “உனக்கென்ன, என்னவேண்டுமென்றாலும் சொல்வாய். நான் இளவயதில் எப்படி இருந்தேன் தெரியுமா?” என்றாள். “எப்படி இருந்தாய்? நான்குமுலை வைத்திருந்தாயா?” என்றாள் கிழவி. “இருந்ததே போதும்… அதற்கே ஆண்கள் சுற்றிவந்தார்கள்.” “எத்தனை ஆண்கள்?” என்றாள் முதியவள். “எண்ணிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவர் வந்தார். அவர் வந்தால் பாரதவர்ஷத்தின் ஆண்மகன்கள் அனைவரும் வந்ததுபோல.”
“அப்படியாடி?” என்று கிழவி எழுந்து அருகே வந்தாள். “உண்மையா சொல்கிறாய்?” சுபகை “ஏன் பொய் சொல்லவேண்டும்? எவரிடம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பார்” என்றாள். “எப்போது?” என்றாள் கிழவி. “ஒரே ஒருமுறை…” கிழவி “உண்மையை சொல்” என்றாள். “உண்மைதான்… ஒரே ஒருமுறை…” என்றாள் சுபகை. “அன்று நான் அரண்மனை இடைநாழியில் நடந்து சென்றேன். என்னெதிரே இளைய பாண்டவர் வந்தார்” என்றாள். கிழவி சிரித்தபடி “இளைய பாண்டவரா? அவ்வளவுதான்! பிறகு?” என்றாள். “நீ சொன்னதுதான், அவ்வளவுதான்” என்று சுபகை சிரித்தாள். “உன்னை இடை வளைத்து தூக்கி புரவியில் ஏற்றிக் கொண்டாரா?” என்றாள் கிழவி.
“இல்லை. என் அருகே வந்து கண்களை நோக்கி என் பெயரென்ன என்று கேட்டார்” என்று சிறிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி சுபகை சொன்னாள். “எவ்வளவு ஆழமான வினா! நீ நாணம் கொண்டு சொல்மறந்திருப்பாயே” என்றாள் கிழவி. “உண்மையிலேயே எனக்கு என் பெயரே நினைவுக்கு வரவில்லை. குடீரை என்று என் குலப்பெயரை சொன்னேன். உடனே பதறி நாக்கை கடித்துக்கொண்டு அய்யய்யோ என்றேன். எனக்கு மட்டுமேயானதுபோன்ற புன்னகையுடன் என்னருகே குனிந்து என்ன என்றார். நான் தலைகுனிந்து நின்றேன். சொல் என்றார். என் பெயரை சொன்னேன். அதற்குள் எனக்கு முகம் சிவந்து உடல் வியர்த்துவிட்டது. அவரது பார்வை என் முகத்திலும் மார்புகளிலுமாக இருந்ததை கண்டேன்.”
“இப்போதும் பாதி ஆண்களின் பார்வை உன்மார்பில்தான் இருக்கிறது” என்றாள் முதியவள். “அன்றைக்கு நான் சிற்பம் போலிருப்பேன்” என்றாள் சுபகை. “பேரை சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். அவர் கடந்து சென்றுவிட்டார். எனக்கு கண்ணீர் வருமளவுக்கு ஏமாற்றம் வந்தது. என்னிடம் அவர் இனியன எவற்றையோ சொல்வாரென்று எண்ணியிருந்தேன். உண்மையில் அங்கே அவர் விழிமுன் நிற்பதற்காக பல்லாயிரம் முறை திட்டமிட்டிருந்தேன். அத்திட்டங்களை பல்லாயிரம் முறை நடித்திருந்தேன். ஒவ்வொரு நுணுக்கமாக எண்ணி எண்ணி கோத்து அதை அமைத்து அச்சத்தால் தவிர்த்துக் கொண்டிருந்தேன். அன்று ஏதோ ஒரு துணிவில் எதிரே சென்றுவிட்டேன்… அவர் எதிரே வருவதை அந்த இடைநாழியே அறிந்திருந்தது. யாழ்தந்திகள் போல தூண்கள் அதிர்ந்தன. முரசுத்தோல் போல தரை அதிர்ந்தது…”
“இங்குள்ள அத்தனை இளம்பெண்களையும் போல உடல் பூத்து முலை எழுந்த நாள் முதலே நானும் அவரைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் விழிகளுக்கு உகந்தவளாவேனா என்று என்னையே மதிப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் யாதவ அரசியை பார்த்துவிட்டு அவர் முதல்மாளிகை முற்றத்துக்குச் செல்லும்போது மான்கண் சாளரம் வழியாக நான் பார்ப்பேன். இந்த மகளிர்மாளிகையே பலநூறு விழிகளாக மாறி அவரை பார்த்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். பலநூறு நெஞ்சங்கள் ஏங்கி நீள்மூச்சிடும். பலநூறு முலைகள் விம்மும். ஆயினும் என் விழியும் என் மூச்சும் வேறுபட்டவை என்றே நான் எண்ணினேன். என்னை நேரில் அவர் காண்பாரென்றால் அக்கணமே அடையாளம் கண்டுகொள்வார். மூலிகை தேடி காடு புகுந்த மருத்துவன் போல கண்டடைதலின் உவகையுடன் என்னை எடுத்துக் கொள்வார். அருமலர் கொய்த ஆயன் போல தன் குழல் கற்றையில் என்னை சூடிக்கொள்வார் என்று கற்பனை செய்தேன்.”
“ஒன்றும் நிகழவில்லை. அவர் கடந்து செல்வதை நோக்கிக் கொண்டிருந்தேன். நாண் பூட்டப்பட்ட வில் போன்ற உடல். நீண்ட கருங்குழல் தோள்களில் அலையடித்தது. எத்தனை சிறிய இடை என்று நான் எண்ணினேன். எத்தனை மெல்லிய கைகள். இறுகிய சிறிய தோள்கள். அவர் உடலில் ஒரு தசைகூட மிகையாக இருக்காது என்று தோன்றியது. காற்றில் கை விரித்து பறவை போல் சென்றுவிடக்கூடும் அவர். முதியவளே, நீ பார்த்திருக்கிறாயா? விலங்குகளில் கொழுத்தவை உண்டு. வான்பறவைகள் எப்போதுமே சீருடல் கொண்டவை.”
“பிறகென்ன ஆயிற்று?” என்றாள் முதியவள். “அவர் சென்றதும் விழி நனைந்து ஏங்கி என் வாழ்க்கை அங்கே முடிந்துவிட்டது என்று நினைத்தேன். எண்ணி எண்ணி நான் வணங்கிய தெய்வம் என்னை ஏற்கவில்லை. எனக்கென நான் எண்ணியிருந்த தனித்தன்மைகள் எதுவும் அவர் விழிகளுக்கு தோன்றவில்லை. அவர் விழி வழியாகவே நான் என்னை சமைத்திருந்தேன் என்பதனால் நான் ஏந்தியிருந்தவை எல்லாம் வெறும் கனவே என்று தோன்றியது. முதியவளே, அத்தூணிலிருந்து இடைநாழியைக் கடந்து படிகளில் ஏறி என் அறைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் நான் பயணம் செய்தேன். என் ஒவ்வொரு காலடியும் ஒரு பெரும்சுமையென அழுத்தியது.”
“அறைக்குள் வந்தபோது அந்த மாளிகையையே சுமந்து கொண்டிருப்பதாக எண்ணினேன். படுக்கையில் விழுந்து சேக்கையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழுதேன். எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அழுகை ஒன்றுள்ளதல்லவா? காதல் ஏற்கப்படாத பெண்ணின் கண்ணீர் அது. ஆண்களுக்கு ஆயிரம் உலகங்கள். பெண்களுக்கு காதல்கொண்ட ஆணன்றி வேறுலகம் ஏது? அவர் ஏற்கவில்லை என்றால் பிறிதென ஒன்றுமில்லை” சுபகை சொன்னாள். “அன்றிரவெல்லாம் இல்லாமல் ஆவதைப் பற்றி எண்ணிக்கொண்டே என் அறையில் இருந்தேன். எழுந்து ஓடி அவ்விருளில் கலந்து மறைந்துவிட விரும்பினேன். கங்கையில் குதித்து ஒழுகி கடலை அடைந்துவிடவேண்டுமென்று எண்ணினேன். ஒருவர் நினைவிலும் எஞ்சாமல் முற்றிலும் மறைந்துவிடவேண்டுமென்று ஏங்கினேன்.”
“எத்தனை எண்ணங்கள்! ஓரிரவு துயில்நீப்பதென்றால் ஒரு முழுவாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து முடிப்பதென்றல்லவா பொருள்? ஒவ்வொரு கணமாக காலத்தை அறிந்தேன். அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன். அவை அறியும் காலத்தின் பெருஞ்சுமையை மானுடர் அறிவதில்லை. எவ்வண்ணமேனும் சில ஆண்டுகளை உந்தி உருட்டினால் இறந்து மண்ணில் மறைந்துவிட முடியும். மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப்படுமென்றால் அவை என்ன செய்யும்?” முதியவள் சிரித்து “இது உண்மையான காதல்தான், ஐயமே இல்லை” என்றாள். “உண்மையான காதல் மட்டுமே இத்தனை அரிய உளறல்களை நிகழ்த்தமுடியும்.”
“போ… நான் உன்னிடம் ஒன்றும் சொல்லப்போவதில்லை” என்றாள் சுபகை. “சொல்லடி, என் செல்லமல்லவா?” என்றாள் கிழவி. சுபகை சுஜயன் உடலில் சுண்ணமிட்டு முடித்தபின் வெண்பட்டால் மெல்ல ஒற்றி மிகைச்சுண்ணத்தை நீக்கினாள். அவன் கைகளைத் தூக்கி உடலை காட்டினான். சுபகை அவனை சிறிய பீடத்தில் கொண்டு சென்று அமர்த்தி அவன் குழலை நீட்டி குங்கிலியப்புகையை காட்டத்தொடங்கினாள். “சொல்! என்ன செய்தாய்?” என்றாள் கிழவி. அதை கேட்காமல் சுபகை தன்னுள் ஆழ்ந்திருந்தாள். அவள் முகத்தை ஏறிட்டு நோக்கி சுஜயன் நின்றான். “சொல்லடி” என்று அவள் தோளை உலுக்கினாள் முதியவள். சுபகை திகைத்து விழிதிருப்பி புன்னகைசெய்தாள்.
“மறுநாள் புலர்ந்தபோது மூடி வைத்த பால் தயிராகி பொங்கியிருப்பது போல அந்தக் காலையை உணர்ந்தேன். எனக்கு சுற்றும் பொழிந்து கொண்டிருந்த ஒளியைப்பார்த்து கண்கள் கூசின. என் முகம் வீங்கி இதழ்கள் தடித்திருந்தன. சுவையேதுமின்றி இருந்தது வாய்நீர். காய்ச்சல் கொண்டவள் போல் உடலெங்கும் களைப்பை உணர்ந்தபடி மெல்ல நடந்து முற்றத்திற்கு வந்தேன். இரவு முழுக்க அங்கெல்லாம் இருள் நிறைந்திருந்தது என்பதையே என்னால் எண்ணமுடியவில்லை. அவ்விருளெல்லாம் எப்படி வழிந்தோடி இத்தனை ஒளியாயிற்று என்று என் உள்ளம் வியந்தது. சூழ்ந்த பறவைகளின் ஒலிகளெல்லாம் நீருக்குள் கேட்பவை போல் அழுந்தி ஒலித்தன. என்னென்று தெரியாத எடைமிக்க எண்ணங்களால் ஆன நெஞ்சம். ஏனென்று அறியாமல் கண்கள் கசிய இளவிம்மலென அழுகை வந்து தொண்டையை முட்டிக் கொண்டிருந்தது. எங்கு செல்வேனென்று அறியாமல் முற்றத்தின் அருகே இடைநாழியில் நிரைவகுத்த பெருந்தூண்களின் அடியில் மறைந்தவளாக நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.”
“என்னைக் கடந்து சென்ற இளம்சேடி ஒருத்தி இயல்பாக என்னை நோக்கி சிரித்து என்னடி இளையவருக்காக காத்திருக்கிறாயா என்றாள். நெஞ்சில் ஓர் இரும்புக் குண்டு வந்து விழுந்தது போல் உணர்ந்தேன். என்னடி சொல்கிறாய் என்றேன். என்னிடம் ஒளிக்காதே, நேற்று இளையவர் உன்னிடம் பேசியதை இந்த அரண்மனையே அறியும் என்றாள். நெஞ்சு முரசறையும் ஒலியை அன்றி பிறிதெதையும் கேட்காமல் அவளை நோக்கி நின்றேன். இங்கே அத்தனை பேரும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இளையவர் உன்னை தேர்வு செய்துவிட்டாராமே என்றாள். இல்லையே என்றேன். என்னிடம் ஒளிக்காதே இங்கு அவர் அமரச்சொன்னாரா என்றாள். இல்லையடி நான் ஒளிந்து அமர்ந்திருக்கிறேன் என்றேன்.”
“எனக்குத்தெரியும். வாய் ஓயாமல் அவரைப்பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள் பெண்கள். அவரது விழிபட்டுவிட்டால் அனைத்தையும் உள்ளிழுத்து தங்களை ஒளித்துக் கொள்வார்கள். ஒரு போதும் பிறகு அவரைப்பற்றி பேச மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு அவள் திரும்பிச்சென்றாள். அவள் செல்வதை நோக்கி இருகைகளாலும் நெஞ்சை அழுத்தியபடி அங்கு நின்று ஏங்கி அழுதேன். எங்கும் கால் நிலைக்கவில்லை. எப்பொருளிலும் விழி பொருந்தவில்லை. படிகளில் ஏறினேன். எதற்கென்று வியந்து உடனே திரும்பி வந்தேன். இடைநாழிகள் தோறும் தூண்களைத் தொட்டபடி ஓடினேன். என்னை எங்காவது ஒளித்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. மூலைகளில் சென்று பதுங்கியதுமே ஏன் இங்கு ஒளிந்திருக்கிறேன், அத்தனை பேரும் என்னை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒவ்வொரு விழியாக நோக்கி அறிவீரா அறிவீரா என்று கேட்க வேண்டுமென்று எண்ணினேன்.”
“ஓடும்போதே நான் துள்ளுவதை அறிந்தேன். மகளிர் மாளிகைக்குள் சென்று சேடியர் பணியாற்றும் இடங்களுக்கெல்லாம் அலைந்தேன். என்னைப் பார்த்த ஒவ்வொருவரும் அதையே சொன்னார்கள். என்ன அம்புக்கு குறி வைத்துவிட்டாயா என்றார்கள். கோழிக்குஞ்சை பருந்து பார்த்துவிட்டதா என்றார்கள். கால்களற்ற நாகம் தேடிவந்துவிட்டதல்லவா என்றார்கள். எத்தனை சொற்களில் ஒரே வினா! அத்தனை கண்களிலும் இருந்தது பொறாமை என்றுணர்ந்தபோது ஒவ்வொரு கணமும் நான் மலர்ந்து கொண்டிருந்தேன். வெறும் சிரிப்பையே விடையென அளித்தேன். ஒவ்வொரு முறையும் அச்சிரிப்பு மாறுபட்டுக் கொண்டிருந்தது. பின்னர் தடையற்ற வெறும் உவகை மட்டுமென அது மாறியது.”
“அன்று இரவு நான் துயிலவில்லை. குளிர்ந்த கரிய மை போல என்னை சூழ்ந்திருந்தது இரவு. அரக்கில் சிக்கிய மின்மினிகள் போல விண்மீன்கள் அதில் ஒட்டியிருந்து துடித்தன. அறுபடாத ஒரு குழலோசை போல. உள்ளத்தை ஒற்றைச் சொல்லென ஓரிரவு முழுக்க உணர்வது பிறகெந்நாளும் எனக்கு வாய்த்ததில்லை. அது எனக்கு வீண் கற்பனை என்றிருக்கலாம், ஒரு போதும் நான் அவர் விழிகளால் மீண்டும் தொடப்படாது போகலாம், அதனாலென்ன? இவ்விரவினில் இங்கிருப்பவள் அவரது காதலி அல்லவா என்று எண்ணிக் கொண்டேன். அவ்வெண்ணத்தின் எழுச்சி தாளாது நெஞ்சைப் பற்றிக் கொண்டு இருளில் அழுதேன். முதியவளே, இருளுக்குள் எவருமே பார்க்கப்படாது விரியும் புன்னகைக்கும் உதிரும் கண்ணீருக்குமுள்ள பொருள் வேறெந்த மானுட உணர்வுகளுக்கும் உண்டா என்ன?”
“ஒரு கணமென கடந்து சென்றது அந்த இரவு. ஆம், இன்று நினைக்கும்போது ஒரு இமைப்புதான் அது என்று எண்ணுகிறேன். இமைப்பென்று சொல்வதே அதை உணரும் தருணத்துக்காகத்தான். உண்மையில் அதில் காலமே இல்லை. புலர்ந்தெழுந்தபோது தோலுரிக்கப்பட்ட கன்று போல குருதி வழிந்து வெளுத்துக் கிடந்தது காலை. அதைப்பார்க்க கண்கூசி திரும்ப என் அறைக்குள் புகுந்து கதவுகளை தாழிட்டுக் கொண்டேன். சாளரத் துளைகள் வழியாக வந்த ஒளி பகலை அறிவுறுத்தியது. கைக்கு சிக்கிய ஒவ்வொரு துணியையும் எடுத்து சாளரத்துளைகளை மூடிக் கொண்டேன். விரிசல்களை அடைத்தேன். முற்றிருளுக்குள் கண்களை மூடி அவ்விரவை திரும்ப நிகழ்த்த முயன்றேன். ஆனால் அது அவ்விரவாக இல்லை. அதற்கான பெருவிழைவொன்றே எஞ்சியது. அருகே வா என்று கை நீட்டி அழைக்கையில் அடம் பிடித்து விலகி நிற்கும் குழந்தை போன்று இருந்தது.”
“அப்போது என் கதவு தட்டப்பட்டது. கடும் சினத்துடன் என்னை அட்டை போல சுருட்டிக் கொண்டேன். என் ஆழத்திற்குள் நுழைய முயலும் அது யார்? அக்கணம் கதவைத் திறந்து ஒரு வாளை எடுத்து அவள் நெஞ்சில் பாய்ச்ச விழைந்தேன். பற்களை இறுகக் கடித்து கைகளை இறுக்கி என்னை அடக்கிக் கொண்டேன். சுபகை சுபகை என்று தோழி கதவை தட்டிக் கொண்டிருந்தாள். என் கழுத்தும் தோள்களும் அச்சம் கொண்டவைபோல புல்லரித்தன. இன்னும் சற்று நேரம், இன்னும் சற்று நேரம், இவள் கிளம்பி விடுவாளென்று எண்ணினேன். சுபகை உனக்கு இளைய பாண்டவரின் செய்தி வந்துள்ளதடி என்றாள் அவள்.”
“அச்சொல்லை நான் கேட்டேனா எண்ணிக் கொண்டேனா என்று அறியேன். மறுகணம் என் உடல் நடுங்கத்தொடங்கியது. முழங்காலில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினேன். அவ்வொலியை வெளியே நின்று கேட்ட தோழி கதவைத்திறடி உன்னை வசந்த மாளிகைக்கு அவர் அழைத்திருக்கிறார் என்றாள். அப்போதும் என்னால் எழ முடியவில்லை. என்னுள்ளிருந்து எழுந்து கதவைத் திறந்து காற்றென விரைந்து வசந்த மாளிகையை அடைந்த ஒருத்தியை அசைவற்ற உடலுடன் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சுபகை, நீ இன்றுமாலை அவரது வசந்தமாளிகைக்கு செல்லப்போகிறாய். மகளிர் மாளிகையே உன்னைப்பற்றி நகையாடிக் கொண்டிருக்கிறது. சேடியர் தலைவி உன்னை அழைத்து வரும்படி ஆணையிட்டாள். கிளம்பு என்றாள் தோழி.”
“என்னுடலை முழுச்சித்தத்தின் ஆற்றலாலும் உந்தி அசைத்து எழுந்து கைகளை சுவரில் ஊன்றி மெல்ல நடந்து சென்று தாழை விலக்கினேன். ஒளி என் முகத்தில் விழ கண்களை மூடிக்கொண்டு தலை குனிந்து தள்ளாடினேன். தோழி என் கைகளை பற்றிக்கொண்டு நீ வாழ்த்தப்பட்டவளானாய் என்றாள். நான் விழப்போனேன். இடைவளைத்து தன் தோளில் சேர்த்துக்கொண்டு இன்றிரவு உன்னை அவர் என்ன சொல்லி அழைத்தார் என்று மட்டும் என்னிடம் சொல் என்றாள். நான் தலையசைத்தேன். சேடியர்மாளிகையில் அத்தனை பெண்களும் அதையே கேட்டனர். தலைமைச்சேடி ஆணையிட்டே சொன்னாள். நான் நாணத்தால் கவிழ்ந்த தலையை தூக்கவேயில்லை.”
முதியவள் “சொல்! என்ன சொல்லி அழைத்தார்?” என்றாள். சுபகை சிரித்து “திரும்பி வந்ததும் அரண்மனையின் அத்தனை பெண்களும் என்னைச்சூழ்ந்து அதைத்தான் கேட்டார்கள். வசந்த மாளிகையில் இளையவர் இருந்தார். என் இடைவளைத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு வலக்கையால் கூந்தலைப்பற்றி இழுத்து முகத்தை மேலே தூக்கி விழிகளைப் பார்த்தபடி அப்பெயர் சொல்லி அழைத்தார். அதன் பின் என் இதழ்களில் முத்தமிட்டார்…” என்றாள். சிரித்தபடி அருகே வந்து “சொல்லடி, இனி என்ன? என்ன பெயர் அது?” என்றாள் முதியவள். “நான் எவரிடமும் சொல்லவேயில்லை. இம்மகளிர் மாளிகையின் ஒவ்வொரு பெண்ணும் அதை தனியாக என்னிடம் வந்து கேட்டாள். கெஞ்சியவர்கள் உண்டு. இன்றுவரை இன்னொருத்திக்கு நான் அதை உரைத்ததில்லை” என்றாள் சுபகை.
கிழவி சிரித்து “சிப்பிக்குள் முத்து” என்றாள். “ஆம். அதன் பிறகு பிறிதொரு ஆடவர் என்னை தொடக்கூடாது என்று எண்ணினேன். அந்த முத்தைச் சுற்றி வெறும் சிப்பியாக என்ன ஆக்கிக் கொண்டேன். ஓர் இரவுதான். அதன் பின் அவர் என்னை அழைக்கவில்லை, நான் செல்லவும் இல்லை” என்றாள் சுபகை. “வாழ்வெனப்படுவது வருடங்களா என்ன? ஓரிரவு என்று சொல்வதே மிகைதான். அப்பெயர் எழுந்து அவர் இதழில் திகழ்ந்த அந்த ஒரு கணம்தான் அது.” கிழவியின் கண்களில் இருந்த புன்னகை மறைந்தது. “ஆம்” என்றாள். “ஆண்களின் காமம் சென்று கொண்டே இருக்கிறதடி. பெண் எங்கோ ஓரிடத்தில் நிலைத்துவிடுகிறாள். அந்தக் கணத்திற்கு முன்னும் பின்னும் அவளுக்கு இல்லை” என்றாள்.
சுபகை பெருமூச்சுவிட்டாள். சுஜயன் “என்ன பெயர்?” என்றான். “அய்யோடி, இவர் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்றாள் கிழவி. “இது சிறு மகவு. இதற்கென்ன புரியப்போகிறது?” என்றாள் சுபகை. “புரியாதா என்ன? நீ அருகணையும்போதே உன் முலைகளை மட்டும்தான் அவர் பார்க்கிறார்” என்றாள் கிழவி. சுபகை “அது குழந்தையல்லவா?” என்றாள். “குழந்தையாயினும் ஆண்மகன் ஆண்மகன்தான். நீ சொல்வது அவருக்குப் புரிந்திராது. ஆனால் ஒவ்வொரு உணர்வும் உள்ளே சென்று பதிந்திருக்கும்” என்றாள் கிழவி. “அப்படியா? பதிந்ததா?” என்று சுஜயனின் விழிகளை நோக்கி சுபகை கேட்டாள். “என்ன பதிந்தது?” என்றாள். அவன் “நீ இளைய பாண்டவரை மணந்தாய்” என்றான். “அய்யோ! எவ்வளவு சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்!” என்று நெஞ்சில் கைவைத்தாள் சுபகை. முதியவள் “நான் சொன்னேனல்லவா?” என்றாள்.
சுஜயன் “நான் பெரிய வில் வைத்திருப்பேன். போர்க்களத்தில் அர்ஜுனரை தோற்கடிப்பேன்…” என்றான். சுபகை “ஆம். நீங்கள் தோற்கடிப்பீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் வளரவேண்டும்” என்றாள். “வளரவேண்டுமென்றால் இப்போது நீங்கள் சென்று நல்ல ஆடைகளை அணிய வேண்டும். அடம் பிடிக்காமல் சேடியர் தரும் அத்தனை பாலுணவையும் சற்றும் மிச்சம் வைக்காமல் அருந்த வேண்டும்.” சுஜயன் “நான் வாளால்… வாளால் அவரை வெட்டி… குருதி…” என்று கையை நீட்டினான். அவன் கைகள் இழுத்துக்கொள்வதை அவள் பார்த்தாள். வாய் ஒருபக்கமாக கோணலாகி நுரை எழுந்தது. “இளவரசே” என கூவியபடி அவள் அவனை பற்றுவதற்குள் அவன் விழிகள் மேலே செருக மல்லாந்து விழுந்தான். வலக்கையும் காலும் இழுபட்டு அதிர உடல் வலிப்புகொண்டது.