ஆத்மாவை நிரூபிக்க அரியவழி!

நகைச்சுவை

”ஆத்மாவுக்கு அறிவியல் விளக்கம்! அரிய சாதனை!! அறிஞர் சவால்!!!” என்ற நாளிதழ் விளம்பரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வெங்ஙானம்மூடு வாசுதேவன் பிள்ளை தேடிவந்தார். குடை, காலருக்குப் பின்னால் செருகப்பட்ட கைக்குட்டை, முழுக்கை சட்டை வேட்டி, எப்போதும் லேசாக அமிர்தாஞ்சன் வாசனை.

”பாத்தேளா, சொல்லிட்டே இருந்தேன்லா? எண்ணைக்காவது ஒருநாள் ஒரு ராட்சஸன் கெளம்பி இம்மாதிரி ஒரு குண்டைத்தூக்கிப் போடுவான்ன்னுட்டு? வே…பாரும்… பகிரங்கமா சவால் விட்டிருக்கான் ” என்றபடி காகிதத்தை என்னை நோக்கி வீசினார்.

நான் காகிதத்துண்டை எடுத்துப் படித்தேன். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸூர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் அதை வெளியிட்டிருந்தார். முதலில் பகவத்கீதை சுலோகம் ஒன்று. அதன் கீழே இருந்த விளம்பரத்தில் ”ஸ்ரீ பஹவதே நாறாயணாய நமஹா!” என்ற கட்டெறும்பு எழுத்துக்களுக்குக் கீழே மேலே கண்ட கொட்டைவண்டு எழுத்துக்கள். தலைப்பையும் அதில் உள்ள ஆச்சரியக்குறிகளையும் மட்டும் நாளிதழின் ஆசிரியரே போட்டிருப்பார் போல. மிச்சமெல்லாம் பழைய நிலவிற்பனைப் பத்திரங்களின் மொழி. சாஸ்திரிகள் உபதொழிலாக பத்திரப்பதிவு ஏதாவது செய்கிறார் போலும்.

சாராம்சம் இதுதான். அவர் ஆத்மாவின் இருப்பை நிரூபித்துவிட்டிருக்கிறார். அவரிடம் சவால்விட்டு மோதத் தயாராக வருபவர்களுக்கு அதை வெளிப்படுத்த தயார். ஆனால் பந்தயமாகப் பணம் கட்டிவைக்க வேண்டும். பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனையும் நிரூபணமும் நடந்துள்ளது. பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸூர்யநாறாயண ஸாஸ்த்ரிகள் அவர்கள் ’அஹம்சமர்ப்பித’ ஹனுமந்த உபாசனையும் பலவகையான கடுகடுமையான ‘வ்ருததபானுஷ்டானாதி’களும் கொண்டவராதலால் இது ஸாத்யமாயிற்று. அன்னாரை பார்ப்பதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தி காலை பத்துமணிமுதல் மதியம் ஒரு மணிக்குள் செல்ல வேண்டும்.

”எதுக்கெடுத்தாலும் பைசா பைசாங்கியானே?”என்று தயங்கினேன்.’

‘வே, அது அறிவுசார் சொத்துரிமையில்லா? சும்மாவா? பணம் மொடக்கி ஆராய்ச்சி செஞ்சிருப்பான்லவே?”

நான் மேலும் தயங்கி,”இல்ல, இப்ப எப்டியும் சாஸ்திரிகள் ஆறுமாசத்திலே ராஜ்டிவி, இமையம் டிவி, தமிழன் டிவி எதிலயாவது வந்து எல்லாத்தையும் காட்டிருவார். அப்ப நாம சும்மா பாக்கலாமே?”

”வே அது டிவி…இது நாம நேரில பாக்கப்போறம். நீரு பைசா குடுக்க வேண்டாம். நான் குடுக்கேன். போருமா? பாத்திருக்கேன் பாத்திருக்கேன், நானும் எளுத்தாளர்களிலே இம்மாதிரி ஒரு கஞ்சனைப்பாத்ததில்லை”

நான் சினந்து, ”நீரு எம்பிடு எளுத்தாளனை வே பாத்திருக்கேரு?”

”ஏன், நம்ம தோப்பிலு சாயிப்பை எனக்கு தெரியுமே?”

”அவரு செலவாளியோ?”.

”செலவாளியா, நல்ல கதை. அவரு லோஹ மஹா கஞ்சன்லா? கஞ்சப்பிசுக்கிலே உம்மை எடுத்து மூக்குப்பொடி மாதிரி இளுக்கப்பட்ட மநுஷனாக்குமே…?”

‘பின்ன?”

”இல்ல, நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்….”.

”என்ன பேச்சு? சும்மா ஒருமாதிரி மனுஷனை கடுப்பேத்திட்டு”

”செரிவே,விடும்”

”செரி வாரும், செலவு எனக்கு”என்றேன்.

”வேண்டாம்வே, பொறவு உம்ம போஸ்டுக்கார அம்மா வந்து எனக்க தலையில ரப்பர்ஸ்டாம்ப அடிக்கியதுக்கா? பணம் இருக்கு வாரும்” என்றார் பிள்ளைவாள்.

மார்த்தாண்டம் போய் அங்கிருந்து மஞ்சாலுமூடுக்குப் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்து சோற்றாலுமூடுக்குப் போனோம். அங்கே ஆலமரம் ஒன்றும் இல்லை. அந்தக்காலத்தில் கீழே அமர்ந்து சோற்றுப்பொட்டலத்தைப் பிரிப்பதற்கேற்ற ஆலமரம் ஏதோ நின்றிருக்கிறது.

பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகளை விசாரித்தோம். ஊரில் அப்படி ஒரு அறிஞர் இருப்பதை ‘றாபின்ஸன்’ பலசறக்குக் கடை ‘றாபின்சன்’ அறிந்திருக்கவில்லை.பெயரைச் சொன்னபோது ‘றியல் எஸ்டேட்’ பிஸினஸ் செய்வாரே, அவரா என்றான். இல்லை என்றோம். அப்படி ஒரு அய்யர் மட்டும்தான் இங்கே உண்டு. சாஸ்தா கோயில் பூசாரி. தாடிக்காரர் என்றான்

அவராகத்தான் இருக்க வேண்டும், பார்த்துவிடுவோம் என்றார் பிள்ளைவாள்.

”வே ரியல் எஸ்டேட்டு புரோக்கருங்கியானே?”

”அது பின்ன இந்நாட்டிலே ஜீவிக்க வேண்டாமா? வே, இந்த மாதிரி ஊருலே ஆளுகளுக்கு என்னவே ஆத்மாவும் பிராணனும் தெரியும்? எதுவா இருந்தாலும் பிளாஸ்டிக் கவர்லே பேக் பண்ணி வந்தாத்தான் இந்த றாபின்சன் கையால தொட்டுப் பாப்பான்… பிளாஸ்டிக் கவர்லே ஆத்மாவை அடைச்சுவைக்க முடியுமாவே?”

நான் அது முடியாது என்று ஒத்துக்கொண்டேன்.

டீக்கடையில் ஒரு டீ குடித்துக்கொண்டிருந்தபோது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒருவர் துருப்பிடித்த டிவிஎஸ் மொபெட்டில் வேகமாக வந்தார். பெரிய சந்தனக்கோடும் அதில் குங்குமத்தடமும் அணிந்திருந்தார். தூரத்திலேயே அதுதான் துலக்கமாகத் தெரிந்தது. நரை கலர்ந்த கறுப்புத்தாடி மார்புவரை கிடந்தது. முன் வழுக்கை. பின்கூந்தலை குடுமியாக கட்டியிருந்தார். பச்சைநிற சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. வெண்ணிறம். உயரமான தளதள உடம்பு.

உள்ளே வந்து ”நானாக்கும் சாஸ்திரிகள்…ஆரு தேடிவந்தது?”

நான் பேசாமலிருக்க, பிள்ளைவாள் ”…இந்த ஆத்மாவை நிரூபிச்சுக்காட்டினது?” என்றார்

”நாந்தான்…வாருங்க” என்றார் சந்தனகுங்குமர்.

போகும் வழியில் ”இங்க உள்ளவனுக முழுக்க நம்ம மேலே பொறாமை உள்ளவனுக…பலதும் சொல்லுவானுக…”என்றார்.

அவரது வீடு சாஸ்தா கோயிலை ஒட்டி இருந்தது. சாய்வான ஓட்டு வீடு. ஒரு பெண்குழந்தை தலையில் சிண்டு கட்டி, அதில் செம்பருத்திப்பூ வைத்து, படியில் உட்கார்ந்து சிலேட்டில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தது. அவரைக் கண்டதும் ”அப்பா நீயா? உன்னைய பெருவட்டரு தேடினா”என்றது.

”போடி உள்ள போடி” என்று துரத்திவிட்டு உள்ளே எங்களை அழைத்து புல்பாய்போட்டு அமரச்செய்து விட்டு ஃபேனைத் தட்டினார். ”ஒரு செக்கண்டு”என்று உள்ளே போனார்.

பாப்பா வந்து வாசலில் நின்று காலை ஆட்டியபடி எங்களை வேடிக்கை பார்த்தது. ஐஸ்வரியமான குட்டி. இங்கே வா என்று அழைத்தேன். போடா என்று தலையை அசைத்தது.

வெளிறிப்போன ஒரு மாமி உம்மென்ற முகத்துடன் இரு டம்ளர்களில் லெமன் ஜூஸ் கொண்டுவந்து வைத்துவிட்டு தரதரவென குழந்தையை இழுத்துக்கொண்டு சென்றாள். ”அந்தத் தாத்தா மூக்கைப்பாத்தியா?”என்று அது சொல்வது கேட்டது. பிள்ளைவாள் முன்பு பொடி போடும் பழக்கம் கொண்டிருந்தார்.

அப்போது சாஸ்திரிகள் வந்தார். வேட்டியைப் பஞ்சக்கச்சமாகக் கட்டி இடுப்பில் சிவப்புப்பட்டால் கச்சம் கட்டியிருந்தார். வெற்றுமார்பில் பெரிய பூணூல். அதில் சிறிய சாவிக்கொத்து. குளித்து வந்த மெருகு தெரிந்த பளபள சருமம். தாடியில் இருந்து நீர்த்துளிகள் சொட்டின. உடம்பெங்கும் பலவகையான விபூதிசந்தன களபகுங்கும செந்தூரப் பூச்சுகள். பல வண்ணங்களில் தாயத்துக்கள். கையில் ஒரு சிறிய தாம்பாளம். அதில் பலவகையான பொருட்கள். அவற்றை மெல்ல எங்கள் முன் வைத்தார். சிறிய கிண்ணம் விளக்கு. பூஜைப்பொருட்கள். மாமி கிண்டியில் தண்ணீரைக் கொண்டு வைத்துவிட்டு உம்மென்று திரும்பிச் சென்றாள்.

பிள்ளைவாள் எழுந்து நின்று கும்பிட்டபோது நானும் கும்பிடவேண்டியதாயிற்று. ஞானி எங்களை அமரும்படி சைகை காட்டித் தானும் அமர்ந்து கொண்டார்.

அமைதி. வெளியே நாய்கள் குரைத்தன. வேப்பமரத்தில் சில காக்காய்கள் சத்தம் போட்டன. எங்களைக் கூர்ந்து, மிகக் கூர்ந்து, மிகமிகக் கூர்ந்து பார்த்தார். சங்கடமாகப் பார்வையை விலக்கிக் கொண்டேன். அவரது முகம் உக்கிரமாக இருந்தது. அவர் ஒன்றும் பேசவில்லை. நாங்களும். கடிகாரம் உச் உச் உச் என்றது.

கொஞ்சநேரம் கழித்து பிள்ளைவாள் தொண்டையைக் கனைத்து, ”இப்ப இந்த ஆத்மாண்ணு சொன்னாக்க…”என்றார்.

சாஸ்திரிகள் தட்டைக் காட்டினார். நானும் பிள்ளைவாளும் அதை தொட்டுக் கும்பிட்டோம். அவர் மீண்டும் தட்டைக் காட்டினார். நான் தட்டைத் தூக்கப்போனேன். பிள்ளைவாள் லௌகீக புத்தி. சட்டென்று புரிந்துகொண்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை அந்தத் தட்டில் போட்டார்.

பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகளின் முகம் மாற்றமில்லாமல் போஸ்டர் முகம் போலிருந்தது. இன்னொரு நூறு ரூபாயைப் போட்டார் பிள்ளைவாள். மேலும் ஒரு நூறு ரூபாய் போட்டதும் மெய்ஞானியின் தலை மெல்ல அசைந்து என்னைப்பார்த்தது. நான் பிரமை பிடித்து அமர்ந்திருந்தேன். அவரது பார்வை என்னை மோசமான ஆயுர்வேத வைத்தியர் மாதிரி வழித்துத் தடவிப் பிசைந்தது. நானும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துப்போட்டேன். பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் புன்னகை செய்தார்.

”ஆத்மாவைப் பத்தியாக்குமே பேசினது…” என்றார் பிள்ளைவாள்.

பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் ”ஆமா”என்றார். ”நீங்க ஆத்மாவை அறிஞ்சுக்கிடணும் , அம்பிடுதானே?”

”ஆமா சாமி. ஆத்ம ஞானம்தான் ஞானங்களிலே உசந்ததுண்ணு சொல்லியிருக்கே. ஆத்மாவை அறிஞ்சவன் அனைத்தையும் அறிஞ்சவன். அண்டத்திலே உள்ளதாக்கும் பிண்டத்திலே. தன்னையறிஞ்சவனுக்கு தந்திரமேதுக்கடிண்ணுல்லா…உன்னையே நீ அறிவாய்ணு மத்தவரும் சொல்லியிருக்காரு…எதுக்குச் சொல்றேன்னா…”

பிள்ளைவாளுக்கு அப்படி ஆயிரத்துக்குப் பக்கத்தில் மேற்கோள் தெரியும். ஆகவே நான் திகில் அடைந்தேன். ஆனால்  பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் இடைமறித்து, ”ஆத்மாவைப் பாக்கணுமா?” என்றார்.

”ஆமாம் சாமி”.

அந்த பித்தளை டம்ளரைக் காட்டி ”உள்ள இருக்கு…” என்றார்.

”என்னது?”

”ஆத்மா…என் முதல் சம்ஸாரத்துக்க ஆத்மாவாக்கும்”

நான் திகில் மேலெழுந்து எழுந்து விலகப்பார்த்தேன்.

பிள்ளைவாள் உற்சாகமாகி ”எங்க காணல்லியெ?” என்றார்.

பிரும்ஹஸ்ரீ ஸ்ரீமத் சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் ”ஊனக்கண்ணாலே சும்மா பாக்கமுடியாது. கீதை சொல்லுத ஞானக்கண் வேணும். ஞானமார்க்கம் வழியாட்டு பாக்கணும்…”என்றார். ‘

‘ஆமா”என்று பிள்ளைவாள் ஒத்துக்கொண்டார்.

”இப்ப பாருங்க. ஆத்மாவை இல்லாம ஆக்கறதுக்கு எந்தக் கொம்பனாலேயும் முடியாது. ஐன்ஸ்டீனுக்க அப்பன் தேவேந்திரன் நெனைச்சாலும் முடியாது. இல்லாதது இருக்கப்பட்டதா ஆகாது. அதேமாதிரி இருக்கப்பட்டது இல்லாமலாவதும் கெடையாது. அதாக்கும் கீதையிலே பகவான் சொல்லியிருக்கது. ரண்டாம் அத்தியாயம் பதினாறாம் சுலோகம்.”பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள்  உரத்த குரலில் சுலோகத்தைச் சொன்னார். பிள்ளைவாள் கைகூப்பினார்.

”ஆத்மாவுக்குப் பிறப்பும் இறப்பும் கெடையாது. தோற்றமும் மறைவும் கெடையாது. ஆத்மா இருக்கான்னு கேக்கப்பட்டவன் மடையன். ஏன்னாக்க அது இல்லேன்னு சொல்ல முடியாதுல்ல. அப்ப இருக்குன்னும் சொல்ல முடியாதே. அதனாலே இதுக்குள்ள இருக்கான்னு கேக்காதீங்கோ.”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள்.

”இல்ல சாமி, ஆத்மான்னா…அதுக்கொரு மனுஷன் வேணுமே” என்று கூப்பிய கரங்களுடன் பிள்ளைவாள் இழுத்தார்.

”கீதையிலே என்ன ஓய் சொல்லியிருக்கு? ‘மனிதர்கள் எவ்வண்ணம் பழைய வஸ்த்ரங்களைக் களைந்து புது வஸ்த்ரங்கள் போடுகிறார்களோ அவ்வண்ணமே உடல் கொண்ட ஆத்மா மட்கிய உடல்களை உதறிப் புதியவற்றைக் கொள்கிறது’ – ண்ணாக்குமே. ரெண்டுலே இருபத்திரண்டாம் சுலோகம்லா. இப்ப எனக்க பார்யாள் கங்காலட்சுமி அவளோட பழைய வஸ்திரத்தைக் கழட்டிண்டாள். புதுசு மாத்தறதுக்கு உள்ளறைக்குள்ள போயிருக்காள். இன்னும் தீர்மானம் பண்ணல்லை. பொம்மனாட்டி பாருங்கோ….”

பிள்ளைவாள் சற்றே எட்டிப்பார்க்க ”சே, என்னோட பார்யாள் வஸ்த்ரம் மாத்துறதை நீரு எப்டிவே பாக்கலாம்…சிவசிவ”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள்  .

பிள்ளைவாள் பயந்து ”அய்யோ…இல்ல..தெரியாம” என்றார்.

சாஸ்திரிகள் புன்னகை செய்து ”பரவால்ல, நீங்கதானே ?”என்றார். ”மேக்கொண்டு புரூஃப் பாத்திருவோமா?”

பிள்ளைவாள் ”செரி”என்றார்.

பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் உற்சாகமாக ”கீதையிலே என்ன சொல்லியிருக்கு? ஆயுதங்கள் அதை வெட்டுவதில்லை.இப்ப பாருங்கோ” ஒரு சிறிய கத்தியை எடுத்து டம்ளருக்குள் விட்டு ஆட்டினார். ”பாத்தேளா? ஒண்ணுமே ஆகல்லை” என்றார்.

சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி ”தண்ணீர் அதை நனைப்பதில்லை, தீ அதை எரிப்பதில்லை” என்றபடியே மாயாஜால நிபுணரின் கைவண்ணத்துடன் சோதனைகளைச் செய்தார். அதற்குள் கொஞ்சம் நீரைவிட்டுத் திருப்பிக் கொட்டி காலிடம்ம்ளரைக் காட்டினார்.பின் ஒரு சிறு காகிதத்தைக் கொளுத்தி உள்ளே போட்டு எரியவிட்டு அதையும் கொட்டிவிட்டு காலி டம்ளரைக் காட்டினார்.

ஆச்சரியம்தான், அந்த காலி டம்ளருக்குள் எதுவுமே ஆகவில்லை.

‘அது பிளக்க முடியாதது”என்றபடி இன்னொரு டம்ளருக்குள் அதைக் கவிழ்த்துக்காட்டி பின் முதல் டம்ளரைக் காட்டினார். ”அது மட்காதது”என்று சொல்லிவிட்டு என்னிடம் ”பத்து வருஷமா இதுக்குள்ள இருக்கு…ஒண்ணுமே ஆகல்லை, வேணுமானா நீங்களே உங்க கண்ணாலே பாருங்கோ”என்றார்.

சற்றுநேரம் அமைதி. நான் மெல்ல ”இல்லே…சொல்லுறேன்னு நெனைக்கப்பிடாது… எனக்கு ஒண்ணும் தெரியல்லியே” என்றேன்.

‘அப்படிக்கேள்’ என்ற பாவனையில் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் புன்னகை புரிந்தார். புன்னகையுடனேயே பிள்ளைவாளைப் பார்க்க பிள்ளைவாளும் புன்னகை செய்தார். பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் தலையை அசைக்க பிள்ளைவாளும் தலையை அசைத்தார். அவர்கள் இருவரும் ஏதோ ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வது போல் இருந்தது.

”ஆத்மாவைப்பற்றி கீதை என்ன சொல்லுது?”என்றார் பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள்.

”என்ன சொல்லுது?”என்றேன் அஞ்சி.

”அது சிந்தனைக்கு எட்டாதது. ஆகவே உணரப்படமுடியாதது. அத்தகைய ஆத்மாவை அறிந்தபின் வருத்தம் கொள்ளலாகாது…” சுலோகத்தைக் கூவியபின் ”சிந்திச்சாலும் புரிஞ்சுகிடமுடியாது. சென்ஸ் பண்ணிப்பாக்கிறதும் நடக்காது…அதாக்கும் கீதா வாக்யம். நீரு என்னன்னா காங்கலேயேன்னு கேக்குகிறீரு…” பிள்ளைவாளிடம் ‘பார் இவனை’ என்று தலையசைத்து என்னைப்பற்றிப் பரிதாபமாகப் புன்னகைசெய்தார். பிள்ளைவாளும் என்னிடம் பரிதாபம் காட்டி சிரித்தார்.

”பின்ன எதுக்கு அதை அறியணும்னு சொல்லியிருக்கு?” என்றேன்.

பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸுர்யநாறாயண சாஸ்த்ரிகள் சலிப்புடன் ”அதான் ஸ்வாமி, அதை அறிஞ்சுக்கிட முடியாதுன்னு அறிஞ்சுக்கிடறது. உணர்ந்துகொள்ள முடியாதுன்னு உணர்ந்துக்கிடறது…அதைத்தான் பகவான் சொல்றான்…”

நான் பெருமூச்சு விட்டேன்

”வருத்தப்படாதேள்.அதையுமே பகவான் சொல்லிடறார்”என்றார் சாஸ்திரிகள்.

”இல்லை, வருத்தப்படலை” என்றேன்.

”இனி ஏதாவது சம்ஸயம் உண்டுமா?”என்றார் சாஸ்திரிகள்.

பிள்ளைவாள் பவ்யமாக வணங்கி ”எனக்கு தெளிஞ்சுட்டுது ஸ்வாமி…”என்றார்.

நான் திருதிருவென விழித்தேன். ”முழிக்காதீங்கோ…இங்க ஒருத்தரும் உங்களுக்கு பரீக்ஷ வைக்கல்லை.”என்று சாஸ்திரிகள் சொன்னார். ”கீதா மார்க்கத்திலே ஆத்மாவை இப்போ நிரூபிச்சுக் காட்டினேன் அவ்ளவுதான். இதுக்கே ப்ரமிச்சுப் போய்ட்டேளே கீதையிலே பகவான் என்ன சொல்றான் தெரியுமோ?”

”என்ன?”என்றேன் பயம் எகிற.

”நீங்க ரெண்டுபேரும் இங்க வாறதைப்பத்தியே சொல்லியிருக்கார்.”

”யாரு கிருஷ்ணபகவானா?”

”ஏன் நம்பிக்கை வரல்லியோ? அவர் மகா யோகி. அதனாலே அவனை யோகீஸ்வரன்னு கீதை சொல்லுது. முக்காலமும் அறிஞ்சவன் யோகி. நீரு என்னடான்னா நம்ப மாட்டேங்கிறீர்” என்று குற்றம்சாட்டும் பாவனையில் பார்த்தார்.

நான் ”நம்பாம இல்லே” என்று இழுத்தேன்

”ஒருவன் ஆத்மாவை விசித்ர வஸ்து என்று எண்ணுகிறான். பிறிதொருவனோ மகாவிசித்ரம் என்று கூறுகிறான். பிறிதும் ஒருவன் விசித்ரமோ என்று கேட்கிறான். யாருமே இதை அறிவதில்லை அப்டீன்னு கீதை. அந்த மூணுபேரும் நீங்கதான்”

“மூணா? இப்ப நாங்க ரெண்டுபேருதானே..”

“அப்ப அந்தா நிக்குத அந்த ஆளு யாரு?”

அவர் சுட்டிக்காட்டிய அங்கே வெற்றுக்காற்றிடம்தான் இருந்தது. என் முதுகெலும்பில் ஒரு குளிர்த்தொடுகையை உணர்தேன்.

“அவருக்கு விசித்திரமோங்கிய கொஸ்டின் இருக்கு…ஏன் சார்?” என்று காற்றிடம் கேட்டார்

அங்கே பதில் எழவில்லை. ஆனால் நான் மெய்சிலிர்ப்படைந்தேன்

“சம்சயம் இருந்தா சாங்கிய யோகம் எடுத்து இருபத்தொன்பது நம்பர் சுலோகத்தைப் பாருங்கோ. என்னமோ சொல்ல வாறேளே பெரிசா” என்றார் சாஸ்திரிகள் ”நம்ப மாட்டாராம் நம்ப…பேசாம போங்கோ”

”நான் இப்ப நம்பலைன்னு சொல்லலியே” என்றேன்.

சட்டென்று அருள்கொண்டு புன்னகைசெய்து, ”சரி…நீங்க நம்பாம இல்லை. நம்பிட்டீங்க. நேக்குப் புரியறது. ” என்ற சாஸ்திரிகள் என்னைச் சுட்டிக்காட்டி பிள்ளைவாளிடம் ”அப்ப இவாளுக்கு ஆத்மா பத்தி சம்ஸயம் நிவர்த்தி ஆயிடுத்து, உங்க விஷயம் என்ன?” என்று கேட்டார்.

”எனக்கு அப்பவே தெளிஞ்சுட்டுதே. எதுக்குச் சொல்றேன்னா ஆத்மா அக்னியிலே சூடு மாதிரியும் தண்ணியிலே குளுமை மாதிரியும் — ”

”சரி ,இதிலே ஒரு கையெழுத்து போடுங்கோ” என்றார் .

”எதுக்கு?” என்றேன்.

”த்ருஷ்டாந்தமாத்தான். பாருங்கோ பெரிய பெரிய ஆளுகள்லாம் கையெழுத்து போட்டிருக்காங்க. கீதா மார்க்கத்திலே ஆத்மாவைப் பத்தின நிரூபணம் என் திருஷ்டி சாக்ஷியாக நடந்ததுன்னு எழுதி ஒப்பு போடுங்கோ… பெரிய மனுஷா கையெழுத்தெல்லாம் மேலே இருக்கு. பாருங்கோ. ஹைக்கோர்ட் லாயர் அனந்த கிருஷ்ணய்யர்கூடக் கையெழுத்து போட்டுட்டார்.”

”இவர்கூட பெரிய மனுஷர்தான்…பெரீய எழுத்துகாரன்…நாவல் கதையெல்லாம் எழுதுவார்”

”அப்டியா? சந்தோஷம்….இங்க நெறைய ரைட்டர்ஸ் வந்திருக்கா. பணகுடி கணபதி, நவல்காடு உமையொருபாகம், அகரம் கிருஷ்ணப்பா, திருவட்டார் ராமலட்சுமி எல்லாருமே வந்திருக்காங்க…எழுதிட்டீங்களா?” என்றார் ”நமஸ்காரம் பண்ணுங்கோ. ஆசீர்வாதம் பண்றேன்.சட்டுன்னு பண்ணிடுக்கோ நேரமாறதுல்லியா? ”

என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. நானும் பிள்ளைவாளும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்று விடைபெற்று கிளம்பினோம். நான் பிரமை பிடித்து நடந்தேன்.

பஸ் பிடித்து மெல்ல மார்த்தாண்டம் வந்தபோது ஒரு டீ குடிக்கலாமென்று கடைக்குள் நுழைந்தோம். அப்போது நான் மெல்ல ”எனக்கு என்னமோ நம்பிக்கை வரல்லை”என்றேன்.

பிள்ளைவாள் டீயை ஐயத்துடன் ஊதியபடி ”ஒருமாதிரி டவுட்டாத்தான் இருக்கு” என்றார். ”ஆனா அவரு சொன்னதெல்லாம் கீதையில சொல்லியிருக்கப்பட்டதுதான். நம்ம கண் முன்னாடி வச்சு நிரூபிச்சும் காட்டினாருல்ல?”

”அது உள்ளதுதான்.ஆனா–”

பிள்ளைவாள் ”இப்ப என்ன? இன்னொரு வாட்டி போயி துல்லியமா பாத்திருவோம்”என்றார்.

அதற்குள் பல வேலைகள். பிள்ளைவாள் ஒரு வீடுகட்டினார். பையன் கூட பிலாயில் போய் ஒருமாசம் இருந்துவிட்டு வந்தார். அதன் பின் நாங்கள் போய்ப்பார்க்கலாமென விசாரித்தபோது சாஸ்திரிகள் மிகவும் பெரியவராக ஆகிவிட்டிருந்தார். நெடுமங்காட்டு மலையருகே நாநூறு ஏக்கரில் ஆசிரமம். ஆசிரம வேலைக்காக இருபது லெக்ஸஸ் கார்கள். சீடர்களாக மந்திரிகள், எம்.எல்.ஏக்கள். பத்திரிகை டிவியில் பேட்டிகள். தரிசனத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும். இரண்டு வருடம் கழித்துத்தான் வாய்ப்பு கிடைக்கும், அதுவும் ஐந்து நிமிடங்கள். கட்டுப்படியாகாது என்று விட்டுவிட்டோம்.

முதற்பிரசுரம் Apr 20, 2014 

முந்தைய கட்டுரைசுபமங்களா
அடுத்த கட்டுரைபெங்களூர் கட்டண உரை