அன்புள்ள ஜெயமோகனுக்கு,
மதங்கள் தொடர்பாக தளத்தில் எழுதப்பட்டிருந்த மூன்று கட்டுரைகளையும்
படித்தேன். முதல் கட்டுரை என்பது ஒருவகையான broad generalisation என்றே
எனக்குப்படுகிறது. ஒருவேளை அது சுருக்கமான கட்டுரையால ஏற்பட்ட
மனத்தோற்றமாக இருக்கலாம். என்றாலும் எனது பேசுபொருளுக்குள் அதில்
சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் வரவில்லை என்பதால் நான் அதைப் பற்றிக்
கவலைப்படத் தேவையில்லை. அதற்குப் பின் வந்த கடிதங்கள் (அரவிந்தன்
நீலகண்டன், சிறில் அலெக்ஸ) எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்கள், சொல்ல
வேண்டியதாகத் தோன்றிய சில விஷயங்கள் ஆகியவற்றையே நான் இம்மின்னஞ்சலில்
எழுதுகிறேன்.
(சிறு குறிப்பு: நான் இங்கே எடுத்தாளும் பைபிள் வசனங்கள்
புரொட்டெஸ்டென்ட் பிரிவினர் பின்பற்றும் பழைய மொழிபெயர்ப்பிலிருந்து
எடுக்கப்பட்டவையே. புதிய மொழிபெயர்ப்பு என்னிடம் இல்லாததால் பழைய
மொழிபெயர்ப்பை உபயோகப்படுத்தியுள்ளேன்)
சமாரியர்களின் தோற்றத்தைப் பற்றிய குறிப்பு 1 இராஜாக்கள் 16:23, 24ல்
வருகிறது. “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் உம்ரி
இஸ்ரவேல்மேல் ராஜாவாகி பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அவன்
திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு, பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா
மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின் மேல் ஒரு
பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய
பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்”
யூதாவும் இஸ்ரவேலின் பிற கோத்திரங்களும் சாலொமோனுடைய மகனான
ரெகோபெயாமின் காலத்தில் பிரிந்ததை அதற்கு முன்னிருக்கும் அதிகாரங்கள்
தெரிவிக்கின்றன. இந்த அதிகாரத்துக்கு அடுத்த அதிகாரங்களில் இருந்து
அவர்கள் இஸ்ரவேலின் ராஜாக்கள் என்று அழைக்கப்படாமல் சமாரியாவின்
ராஜாக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். 1 இராஜாக்கள், 2 இராஜாக்கள் ஆகிய
நூல்களின் பொதுவான போக்கு இதுதான்- சமாரியர்கள் தொடர்ந்து பிறமத
கடவுளர்களை வழிபடுகின்றனர். யூதாவில் அவ்வப்போது யாவேயை வழிபடும்
அரசர்கள் தோன்றுகின்றனர். அப்பொழுது யூதா வெற்றி பெறுகிறது. இல்லாத
சமயங்களில் வேற்று நாட்டரசர் யூதர்களைத் தோற்கடிக்கின்றனர்.
நிற்க, சமாரியர்களும் இஸ்ரவேலரே. ஆனால் யூதர்களுக்கு இருந்ததைப் போல்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டம் அவர்களுக்கு இல்லை. ஆகவே பிரிவுபட்ட
ஆட்சியின் கீழ் யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக்
கொண்டே போனது. ஆக இயேசு சொல்கிறார், “நீங்கள் புறஜாதியார்
நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்”. (மத்தேயு
10: 5,6)
இயேசுவின் இனத்தூய்மைவாதத்தின் மற்றொரு பகுதியாக மத்தேயு 15:22-28ல்
வரும் கானானியப் பெண்ணின் சம்பவத்தைக் காணலாம்.
“அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி
அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என்
மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து
கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு
அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே,
எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி:
பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது
நல்லதல்ல என்றார்.
அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள்
எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ
விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள்
ஆரோக்கியமானாள்.”
இப்பகுதி இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒரு பார்வை இதனை யூத
இனமேன்மைவாதமாகப் பார்க்கிறது. மற்றொரு பார்வை அந்தப் பெண்ணின்
நம்பிக்கையை இயேசு சோதிப்பதாக காண்கின்றது. கிறிஸ்தவத்துக்கு
உள்ளிருப்பவர்கள் இரண்டாம் பார்வையிலும், விமர்சிக்க விரும்புபவர்கள்
முதல் பார்வையிலும் பார்க்கின்றனர். எந்தப் பார்வை சரியென்பதை
பார்ப்பவர்களுக்கே நான் விட்டு விடுகிறேன்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் அளித்த தரிசனத்தில் அவர் “நீங்கள்
உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்”
என்கிறார். (மாற்கு 16:15) பவுலின் காலத்தில் (பவுலைத் தான் கிறிஸ்தவ மத
நிறுவனர் என்று சொல்ல வேண்டும் போன்ற கருத்துகளுக்குள் நான் இப்போது
போகவில்லை) வேற்றின மக்களிடையே சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது.
“முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு
இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே
நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும்
தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால்
வெளிப்படுத்தப்படுகிறது.” (ரோமர் 1:16) என்பது பவுலின் கூற்று.
அதற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பது யூதர்கள் மட்டும் அல்ல.
கிறிஸ்தவர்கள் அனைவருமே என்கிற கருத்தாக்கம் உருவானது.
சிறில் அலெக்ஸ் விவாதிக்கும் இயேசுவின் பிற தன்மைகளைப் பற்றியும்,
மோசேயின் சட்டம், பரிசேயர் சதுசேயர் ஆகியோரைப் பற்றியும் எழுத
ஆரம்பித்தால் இடங்காணாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
நவீனன் அநார்க்கீயன்
அன்புள்ள ஜெயமோகன்,
அ.நீ. சமாரியர்கள் பற்றி பைபிளில் இருப்பதாகச் சொல்பவை சரியே என்று உறுதி செய்கிறேன். சமாரியர்களை ஏசு கீழ்நிலை இனமாகவே கருதியதற்கான ஆதாரங்கள் சுவிசேஷங்களில் உள்ளவையே. ஒரு சமாரியப் பெண் தன் மகனை (மகளை?) பேய் பிடித்திருப்பதாகவும் அவளை ஏசு குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, அதற்கு ஏசு “குழந்தைகளின் உணவை நாய்களுக்கு அளிப்பதற்கில்லை” என்று பதில் அளிக்கிறார். அதாவது யூதர்களின் பிரச்சினகளை மட்டுமே தான் கவனிப்பேன் என்கிறார். அதற்கு அந்தப் பெண் குழந்தைகள் சாப்பிடும்போது கீழே விழும் உணவுத் துணுக்குகளை நாய்கள் சாப்பிடுவதில் பிழையில்லை என்று பதிலளிக்க ஏசு மனம் மகிழ்ந்து ‘உன் பெண் குணமாகிவிட்டாள் போ” என்கிறார்.
படித்து பல வருஷங்களாகிவிட்டதால் என் நினைவு 100 சதம் சரி என்று சொல்வதற்கில்லை. சமாரியப் பெண்ணுக்கு பதிலாக வேறு இனம் குறிப்பிடப்பட்டிருக்கலாம். (ஃபினீஷியப் பெண்?) பேய் பிடித்த பெண் என்பதற்கு பதிலாக ஏசுவின் உபதேசங்களைக் கேட்க வந்த பெண்ணிடம் ஏசு அவ்வாறு கூறி இருக்கலாம். பதின்ம வயதுகளில் படித்தது. வேறு இனப் பெண்ணை நாய் என்று குறிப்பிட்டதும், நான் யூதர்களுக்கு மட்டுமே உரித்தானவன் என்று சொன்னதும் தந்த அதிர்ச்சி இன்னும் நினைவிருக்கிறது. அன்றைய (யூத) சமூக மதிப்பீடுகளுக்கு உட்பட்டே ஏசு நடந்து கொண்டார், பகைவனுக்கருள்வாய் என்றால் பகைவன் யூதனாக இருந்தால் பகைவனுக்கருள்வாய் என்றே பொருள், ஏசு என்ற பிம்பம் வேறு, ஏசு என்று சரித்திர மனிதர் வேறு என்றெல்லாம் புரிந்து கொண்ட கணம் நன்றாக நினைவிருக்கிறது.
இது மார்க்கின் சுவிசேஷத்தில் வருகிறது என்று நினைவு.
புகழ் பெற்ற Good Samaritan கதையிலும் ஒரு சமாரியனே உதவி செய்யும்போது யூதர்கள் செய்யவில்லை என்பதில் சமாரியர்கள் கீழ்நிலையில் உள்ளவர்கள் என்பது பொதிந்திருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
அன்புடன்
ஆர்வி