
அன்புள்ள ஜெ
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி மகிழ்ச்சி அளித்தது. நான் எண்பதுகளில் ஓரளவு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் கவிதைகளுக்கான மனநிலை இல்லாமல் போய்விட்டது. கவிதைக்கான மனநிலை ஏன் இல்லாது போகிறது என்பதை யோசித்தபோது எனக்கு முக்கியமாகத் தோன்றிய விஷயம் ஒன்றுதான். கவிதை நம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றியதானாலும் அதன் சாராம்சம் நம் அன்றாட வாழ்க்கையில் இல்லை. அது ஆன்மிகமானது. தத்துவார்த்தகனமானது.
ஆகவேநாம் நம்முடைய சொந்த முயற்சியினால் அதை வைத்துக்கொண்டிருக்கவேண்டும். பென்சிலைக் கூர் சீவுகிற மாதிரி நம்முடைய கவித்துவத்தைச் சீவிக்கொண்டே இருக்கவேண்டும். அதெல்லாம் சாதாரண வாழ்க்கையிலே நடக்கக்கூடியது அல்ல
அந்நிலையில்தான் தேவதச்சன் போன்றவர்களின் ‘சபை’ எந்தளவுக்கு முக்கியம் என்று தெரிகிறது. நான் அதை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இலக்கியம் பற்றிப்பேசிக்கொண்டே இருக்கிறார். கவிதைகளைப்பற்றி பேசுகிறார். அந்தப்பேச்சுதான் கூர்தீட்டல். அவரது பங்களிப்பு கவிதைக்குச் சமானமாகவே இப்படி ஒரு இலக்கிய எழுச்சியை உருவாக்கியது என்று நீங்கள் சொல்லியிருந்தது மகிழ்ச்சி அளித்தது
ஸ்ரீதேவதச்சனுக்கு நமஸ்காரம்
பட்டாபிராமன்
*
அன்புள்ள ஜெ சார்
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் மிகவும் தாமதமாகக் கண்டுகொண்ட கவிஞர். சொல்லப்போனால் அவருக்கு விளக்கு விருது கிடைத்தபோது நான் ஊரில் இருந்திருந்தால் விழா எடுத்திருப்பேன் என நீங்கள் எழுதியதை வாசித்தேன். அப்போதுதான் அவரைப்பற்றி நான் முக்கியமாகக் கேள்விப்பட்டேன். அதன்பிறகுதான் அவரது கவிதைநூல்களை உயிர்மையில் தேடிப்போய் வாங்கி வாசித்தேன்.
அவை வாசிக்கும்போது அப்படி ஒன்றும் அற்புதமான அனுபவமாக இல்லை. ஆனால் எங்காவது அதற்குச் சமானமான ஒரு சம்பவத்தை அல்லது காட்சியை நாம் காணும்போது நம் மனதிலே அந்தக்கவிதை ஞாபகம் வந்துவிடுகிறது. அந்த அனுபவம் அப்படியே பல மடங்காக விரிந்துவிடுகிறது. உண்மையில் அதுதான் சிறந்த கவிதை வாசிப்பு என்று தோன்றுகிறது
உலகம் ஆரம்பிக்கும்
ஓசைகள் கேட்கின்றன
சிலபல
குரல்கள் மோதி
பாறை சிலையாகி
சிலபல
குரல்கள் மோதி
சிலை
பாறையாகி
என்ற வரியை நான் நூற்றுக்கணக்கான முறை நினைத்துக்கொண்டிருக்கிறேன்
சுவாமிநாதன்
================================================================================================
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்
தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது
======================================================================================
தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு
தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்
தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்
தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்