மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
////கிறிஸ்தவம் சமேரியரின் மேன்மையைச் சொல்வதாகவே எழுந்தது. பைபிளிலேயே அத்தகைய வரிகள் உண்டு. பின்னாளில் உலகமதமாக அது ஆனபின்னரும்கூட உலகமெங்கும் சென்று பழங்குடிகளை முற்றாக அழித்தொழித்தது. மிஷனரிகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடிகளை ‘ஆன்மா அற்ற’ மக்கள் என்று எண்ணி செய்த அழிவுகள்தான் மானுட வரலாற்றின் மிகப்பெரிய கொடுமைகள். அவற்றை இன்று அந்நாடுகள் முழுக்க ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்//
சமேரியர் என்பது சமாரியர்கள் எனில் இது தவறான தரவு. அவர்கள் கீழ்மக்களாக காணப்பட்டனர். யூதர்களல்ல என ஆச்சார வாத/சமாரியரல்லாத யூதர்கள் அவர்களை கருதினர். எனவேதான் ஏசு சமாரியர் பட்டணங்களுக்கு செல்லாமல் காணாமல் போனவராகிய இஸ்ரவேல் தேசத்தவரிடம் மட்டும் செல்லுங்கள் என கூறுகிறார். சமாரிய பெண்ணிடம் ஏசு பேசுவது அன்றைய சமாரியரல்லாத யூத பார்வையிலிருந்துதான். ஏசுவின் ‘நல்ல சமாரியன்’ (அந்த தலைப்பு ஏசுவுடையதில்லை என்ற போதிலும்…) கதை கூட அடிப்படையில் சமாரியனின் கீழ்மைநிலையினை axiomatic ஆக கொண்டுதான் சொல்லப்படுகிறது. இன்று பரிசேயர் என்பது மத அதிகாரத்தின் குறியீடாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் வரலாற்று காலகட்டத்தில் பரிசேயர் என்பவர்கள் நிறுவன மதத்தின் கலகக்குரல்கள். பிறப்படிப்படையிலான யூத மத குருமார்களை எதிர்த்தவர்கள். இவர்களை ஏசு எதிர்ப்பதாக காட்டுவதில் பொருள் உண்டு. ஏசுவின் மெசாயத்துவமே பிறப்படிப்படையில் -தாவிதின் வம்சத்தில்- முன்னறிவிக்கப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆக ஏசு எதிர்த்ததாக காட்டப்படுவது மத அதிகாரத்துக்கு எதிரான கலக குரலை. ஆனால் வரலாற்றின் போக்கில் சந்தைப்படுத்தலின் அவசியங்களில் ஏசு கலகக்குரலாகவும் பரிசேயர் இறுகிய மதபீடமாகவும் மாற்றப்பட்டது ஒரு முரண்நகை.
சமேரியர் என வேறெவரையும் குறிப்பிடும் பட்சத்தில் அப்படி ஒன்றை சொல்ல தரவுகள் அல்ல என்றே என் இந்துத்துவ சிற்றறிவுக்கு தெரிந்தவரை நினைக்கிறேன். யூத விவிலியத்தில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கான வாக்களிக்கப்பட்ட பூமி ஆகிய படிமங்கள் பின்னால் கிறிஸ்தவத்தில் தம் விரிவாதிக்கத்துக்கான இறையியல் நியாயங்களாக்கப்பட்டன. இன்றும். மண்டைக்காட்டு திருவிழாவில் ‘விக்கிரகவழிபாட்டை’ விபச்சாரத்துக்கு இணையான பாவமாக சொல்லும் பிரசுரத்தை அளிக்கும் ’ஊழியக்காரர்’ வாக்களிக்கப்பட்ட பூமியான விக்கிரக ஆராதனையாளனின் ஆத்மாவில் ‘கானான் தேச விக்கிரகங்களை’ அடித்துடைப்பதை தம் இறை உரிமையாகவே நினைக்கிறார். வலிமை சேரும் போது விக்கிரக ஆராதனையாளர்கள் அழிக்கப்படுவார்கள். திரிபுராவில் ஜமாத்தியாக்கள் கொல்லப்படுவதை போல. ஆனால் அவை குறித்து எவரும் பேசுவதில்லை. ஏனெனில் நம் பாவ்லாவிய எதிர்வினை கற்பிதங்கள் அப்படி.
//அவ்வாறு பெருமதங்கள் உருவாகாத நாடுகள் எப்படி இருக்கும் என்தற்கு நாம் நம் நாட்டின் வடகிழக்கை, அல்லது ஆப்ரிக்காவை உதாரணம் காட்டலாம். பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டு ஒவ்வொரு நாளும் என கொன்றுகொண்டிருப்பார்கள். சமூக உருவாக்கமே நிகழ்ந்திருக்காது. ஆகவே வேளாண்மை, வணிகம் எவையும் வளர்ந்திருக்காது. பஞ்சம் வந்து கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து அழிவார்கள்//
இதுவும் தவறான கருத்து என்றே நினைக்கிறேன். ஒருவரோடொருவர் பூசலிட்டு மடியும் ஆப்பிரிக்க பழங்குடிகள் என்பது ஒரு காலனிய சித்திரம். ஆப்பிரிக்க ஆன்மிக மரபுகள் திட்டமிட்டு காலம் காலமாக கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளன. வூடோ போன்ற செழுமையான ஆன்மிக மரபுகள் கொச்சைப்படுத்தப்பட்டன. அஷாந்தேக்கள் முதல் ஸூலுக்கள் வரை அவர்களின் பண்பாடும் ஆன்மிகமும் சிறப்பானது. ஏன் காலனிய மிஷனரி காலகட்டத்துக்கு முன்னால் அராபிய மேன்மைவாத இஸ்லாத்துக்கு முன்னால் இந்த இருமதங்களையும் கூட தம் பண்பாட்டுவயமாக்கியுள்ளன ஆப்பிரிக்க பண்பாடுகள். பெருமதங்களில்லாத ஆனால் ஆன்மிக மரபுகள் உள்ள ஆப்பிரிக்க சமுதாயங்களில் காலனியாதிக்கத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் உருவாகின. அவை அனைத்துமே காட்டுமிராண்டிகளின் ரத்தவெறியாட்டமாக காட்டப்பட்டன. உண்மையில் ஆப்பிரிக்காவின் மிக மோசமான இனப்படுகொலைகள் ஹுட்டு-டட்ஸிகள் பெரும் பேரழிவு கிறிஸ்தவ மிஷினரிகள் இனவாத கோட்பாடுகளை புகுத்திய பின்னரே -அதன் காரணமாகவே- நிகழ்ந்தன. ஆனால் பழி என்னவோ ஆப்பிரிக்க பழங்குடி சமுதாயங்களின் ‘பண்பாடற்ற’ தன்மை மீது சுமத்தப்படும்.
இந்தியாவின் வடகிழக்கிலும் விஷயம் அப்படி ஒன்றும் வேறுபட்டது அல்ல. மிஸோக்கள் ‘தலைவாங்கி‘ பண்பாட்டாளர்களாக இருந்த போது ரியாங்கு எனும் சிறுபான்மை வனவாசி சமுதாயம் ஒழிக்கப்படவில்லை. இன்று அவர்கள் மிஸோரமிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். தம் சமுதாயமே அழிந்து போகும் அழிவின் எல்லையில் உள்ளார்கள். (இவர்கள் பட்டியல் வகுப்பு வனவாசிகள் .செழுமையான பாரம்பரியமும் நுண் கலைவடிவங்களும் அவர்கள் சமுதாயத்தில் உள்ளன. என்றாலும் எந்த ஞானமரபாளர்களின் கருணையின் சிறுதுளியும் இவர்கள் மீது தெறித்திடவும் இல்லை. மாறாக ஞானமரபாளர்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் இந்துத்துவ மூர்க்க வெறுப்பு ஆசாமிகள்தான் தொடர்ந்து இவர்களுக்காக குரல் எழுப்புகிறார்கள்; நீதி மன்றங்களுக்கு சென்று இவர்களுக்காக அல்லாடுகிறார்கள் என்பது இன்றைய காந்திய முரணியக்கமாகக் கூட இருக்கக்கூடும்.)
நாக்டோக்கள், ஜமாத்தியாக்கள், நாகர்கள், மிஸோக்கள் இவர்கள் அனைவருமே பஞ்சம் என்பதை அறியாதவர்கள். பெருமதங்கள் இந்த பிரதேசங்களுக்கு நுழைவதற்கு முன்னர் அங்கிருந்த குழுப்பன்மை பண்பாட்டு மரபுப்பன்மை இன்று என்னவாயிற்றூ என்பதை பார்த்தாலே இது புரியும். பிரதேச சச்சரவுகளும் பகைமைகளும் இருந்தாலும் இன ரீதியிலான அழிப்பொழிப்பை சிந்திக்காதவர்கள். ஆனால் இன்று ஒவ்வொருவரும் தம்மை ஒரு தேசமாகவும் தனி இனமாகவும் கருதி அடுத்தவரை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த கருத்தியலை இவர்கள் வந்தடைவதில் வினையூக்கியாக இருந்த பெருமதவாதிகள் எவர் என கூறினால் இக்கடிதமே இந்துத்துவ வெறுப்பை கக்கும் ஒன்றாக முத்திரை குத்தப்பட்டுவிடும். (இல்லாவிட்டாலும் அந்த முத்திரை விழத்தான் செய்யும் என்பது வேறு விஷயம்.)
சுருக்கமாக பண்பாடு, வர்த்தகம், வேளாண்மை ஆகியவற்றுக்கும் பெருமதங்களுக்கும் உள்ள தொடர்பு அவசியம் என்பது ஆதாரமற்றது. அவ்வளவுதான். இன்னும் சொன்னால் முக்கியமான பெருமதங்களின் பரவலுக்கு முன்னரே சமுதாயங்கள் வேளாண்மை, அரசு நிர்வாகம், வர்த்தகம் , அறக்கோட்பாட்டு சிந்தனைகள் ஆகியவற்றில் முக்கிய இடங்களுக்கு வந்துவிட்டிருக்கின்றன.
//கிறிஸ்தவப் புனிதர்களான புனித தாமஸ் அக்வினாஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்ற பெரும்பாலானவர்கள் மானுடரின் ஏற்றத்தாழ்வைப்பற்றி மிகத்தீர்க்கமாகப் பேசியிருப்பதையும் அவர்களின் அக்கருத்துக்கள் பலநூறாண்டுக்காலம் நாவிதர், தச்சர் போன்ற பலவகையான மக்களை அடிமைவாழ்க்கைக்குத் தள்ளியதைப்பற்றியும் ஐரோப்பிய வரலாற்றை வாசித்தால் அறியலாம். கத்தோலிக்கத் திருச்சபை பலநூறாண்டுக்காலம் நிலஅடிமைமுறையைப்பேணி நிலைநிறுத்தியது.ஆனால் கிறிஸ்துவின் அடிப்படைச்செய்தி என்பது ஆன்மிகமானது என்பதையும் காணலாம்.///
தாமஸ் அக்வினாஸ் பொதுவாக அகஸ்டைனின் நிலைபாட்டையே ஏற்றுக்கொண்டார். அடிமைமுறையை ஆதிபாவத்துடன் தொடர்பு படுத்தி அதற்கான இறையியல் நியாயப்படுத்துதலை அளித்தவர் புனித அகஸ்டைன். மார்ட்டின் லூதர் கிங் காந்திய கிறிஸ்தவ கறுப்பின இறையியலாளர். போராளி. மார்ட்டின் லூதரே மிக மோசமான உழவர் எதிர்ப்பும் யூத எதிர்ப்பும் கொண்டவர். வேகத்தவறென நினைக்கிறேன்.
ஞானமரபு தவறுகளை இந்துத்துவ ’கீழ்மகன்’களின் (உங்கள் வார்த்தைதான்) குரல்கள் சுட்டிக்காட்டுவது தவறுதான். என்ன செய்ய கலிகாலம். ’வென்று கடந்துவிடு’ங்கள்.
மரியாதையுடன்
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,
இரு சொற்பிழைகளையும் சரிசெய்து விட்டேன்.நன்றி. யூத இனம், மார்ட்டின் லூதர்.
மற்றபடி நீங்கள் பழங்குடிச்சமூகங்களைப்பற்றிச் சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆப்ரிக்க, வடகிழக்குப் பழங்குடிகளின் பரஸ்பர ஒழிப்பு மனநிலையை அவர்களின் வரலாற்றை புறவயமாக அறியும் எவரும் உணரமுடியும். நேரிலேயே காணவும் முடியும். நிலம் அளவில்லாது இருந்து வாழ்க்கைத்தேவைகள் குறைவாக இருந்த காலத்தில் அப்போர்களின் அழிவுக்கு அப்பால் அவ்வினங்கள் நீடிக்கவும் பழங்குடிப் பண்பாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வளர விரிய அவை முயலவில்லை. அவற்றைவைத்து அவை உயர்பண்பாடுகளை கட்டி எழுப்பியிருந்தன என வாதாடுவதெல்லாம் மிகை.
நவீனயுகம் பழங்குடிகளின் தேவைகளை, தகவல்தொடர்புகளை, பயணங்களுக்கான வசதிகளைப் பெருக்கும்போது அம்மோதல்கள் மேலும் தீவிரமடைகின்றன. மேலும் அழிவுத்தன்மைகொள்கின்றன. அம்மனநிலை பழங்குடிகளின் பண்பாட்டிலேயே வேரூன்றியது. வலுவான பெருமதங்களால் தத்துவ அடிப்படையில் அவை தொகுக்கப்பட்டால் மட்டுமே பழங்குடிச்சமூகங்கள் தேசமென்ற அடுத்த கட்ட நிலையை அடைகின்றன. வடகிழக்கில் பௌத்தம் வேரூன்றிய மாநிலங்களுக்கும் வேரூன்றாத மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் இந்த மாபெரும்வேறுபாட்டை பலமுறை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். பொதுவாக என் கருத்துக்கள் நான் செய்யும் பயணங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. நூல்களைத் துணைகொள்கிறேன், அவ்வளவுதான்
ஜெ