மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை)

400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 ஆண்டுகளில் மலையாளம் என்ற மொழி தனக்கென உருவாக்கிக்கொண்ட ஒரு பாரம்பரியமும், மொழியில் செய்யப்பட்ட சாதனைகளும் பாராட்டத்தக்கவை. அப்படி உருவாக்கிக்கொண்ட விரைவு இன்னும் வியப்பானது.

em eS

எம் .எஸ் [எம்.சிவசுப்ரமணியம்]மொழிபெயர்ப்பாளர்.

இந்தியாவின் நவீன இலக்கியம் சற்றேறக்குறைய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து ஆரம்பமாவதாக சொல்லலாம். நவீன இலக்கியத்தின் அனைத்து கூறுகளையும் வெகு விரைவாக தம் மொழிக்குள் கொண்டுவந்த பெருமை வங்காளம், மலையாளம் , தமிழ் ஆகிய மொழிகளுக்கு உண்டு. உலக இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகள் அனைத்துமே இந்த மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்தன. அதிலும் முன்னணியில் இருந்த மொழிகள் வங்கமும், கேரளமும். நான் இங்கே இரு மொழிகளிலும் உள்ள வாசிப்பின் , வாசகர்களின் அடிப்படையிலேயே பேசுகிறேன்.

சி. ஏ பாலன்
சி. ஏ பாலன்

[மொழிபெயர்ப்பாளர் சி ஏ பாலன். தகழியின் ஏணிப்படிகள், கயிறு போன்ற நாவல்களை மொழியாக்கம் செய்தவர்]

தமிழில் மலையாள இலக்கியத்தின் பாதிப்புகள்

1960 களில் தொடங்கி 1990 களின் மத்தி வரையிலான 35 வருட காலம் தமிழில் மலையாள இலக்கியத்தின் பாதிப்பு மிக அதிகம். மலையாள இலக்கியத்தின் பிதாமகர்கள் என அறியப்படும் அனைவருமே தமிழில் கிடைத்தார்கள். தமிழ் இலக்கியத்தின் பிதாமகர்கள் வரிசையில் அவர்களுக்கும் முக்கிய இடம் இன்றளவும் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்வதென்றால், தமிழில் ஒருவர் இலக்கிய வாசகர் என்றால் அவருக்கு பஷீரும், எம்.டி. யும், பால்சக்கரியாவும், பி.கே.பாலக்ரிஷ்ணனும்,தகழியும், கேசவதேவும், பாலசந்திரனும் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயம். அவர்களைப் படிக்காமல் தமிழில் ஒருவன் தன்னை தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவான். ரஷ்ய இலக்கியங்கள் படிக்காத ஒருவனுக்கு தமிழில் இலக்கிய வாசகன் எனும் பதத்தை உச்சரிக்கக் கூட அனுமதி இல்லை.

இன்றளவும் தமிழில் மலையாளத்தின் சிறப்பான படைப்புகள் என்று கருதப்படும் பெரும்பான்மைப் படைப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இன்று எழுதிக்கொண்டிருக்கும் கல்பற்றா , மனோஜ் குரு , கெ .ஆர்.மீரா , ஷிகாபுதீன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்துகள் வரை தமிழ் இலக்கிய உலகம் தொடர்ந்து மலையாள இலக்கிய உலகை சுவிகரித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமான இலக்கியப் படைப்புகள் மட்டுமல்லாது வணிக எழுத்து வகையை சேர்ந்த கோட்டயம் புஷ்பநாத் ம் கூட தொடர்ச்சியாக தமிழின் வணிக எழுத்து வாசகனுக்குக் கிடைக்கிறார்.

நிர்மால்யா, மொழிபெயர்பபளர்.,

தமிழும், மலையாளமும் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் துடிப்புடன் செயல்பட்டு மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளை தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார்கள். தகழியை தமிழுக்குக் கொண்டுவந்த சுந்தரராமசாமி தமிழின் முக்கிய படைப்பாளி. அவரைத் தொடர்ந்து ஆ .மாதவன் என்று அந்த மரபு , மலையாளத்தின் இன்றைய இலக்கியப் போக்குகளை தமிழுக்கு அறியக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை இன்றும் விடாமல் தொடர்கிறது.

தேர்ந்த இலக்கிய வாசகர்களாக அறியப்பட்ட மூன்று தலைமுறையினர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியினை இடைவிடாமல் செய்து வருகிறார்கள். சி.ஏ.பாலன், நாகர்கோவிலின் எம்.எஸ்.(எம்.சுப்பிரமணியம் ) தொடக்கி குளச்சல் எம்.யூசுப் வழியாக கே.வி.ஷைலஜா வரையிலான தலைமுறைத் தொடர்ச்சி மலையாள தமிழ் மொழிபெயர்ப்புகளில் இடைவிடாமல் இயங்கிவருகிறார்கள். மலையாளத்தின் இலக்கியப் பிதாமகர்கள் தமிழ் இலக்கியத்திலும் அதே மரியாதையுடனும், மதிப்புடனும் வைத்து வாசிக்கப்படுகிறார்கள்.

index

[குறிஞ்சிவேலன். மொழியாக்கத்திற்காக திசை எட்டும் எனும் இதழை நடத்துகிறார். எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம்]

மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – வளர்ச்சிப் போக்கு :

மலையாள இலக்கியம் என்பது எழுத்தச்சன் தொடங்கி நவீன மலையாளம் வரும்வரை பெருமளவு பக்தி இயக்கம் சார்ந்துதான் இருந்துள்ளது எனலாம். ஆனால் நவீன காலக்கட்டத்தை மலையாளம் சுவிகரித்துக் கொண்டு வளர்ந்த வேகத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. தமிழைப் பொருத்தவரை மலையாளத்தின் தோற்றத்துக்கு முன்பே இலக்கணம் தொடக்கி பக்தி , காவியம் வரை நீண்ட பயணத்தை தமிழ் மேற்கொண்டுவிட்டது . ஆனால் நவீன இலக்கியக் காலக்கட்டம் என்று வரும்போது மலையாளத்தை தமிழ் துரத்திக் கொண்டுதான் செல்லமுடிந்தது. வாசிப்பின் முறைகள் , வாசக விரிவு ஆகிய இடங்களில் மலையாளம் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது . 20 ஆண்டுகள் முன்பு வரை தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மலையாள இலக்கியமே ஒப்பீட்டு அளவுகோல் .

மலையாளத்தில் இப்படி பாய்ச்சல் நிகழ அதன் அரசியல், சமூக காரணிகள் முக்கியப் பங்காற்றியிருப்பதாக நான் நினைக்கிறேன் . மலையாள மொழி தனது நவீன காலகட்டத்தை அடைந்த அதே காலத்தில் , கேரளத்தின் அரசியல், சமூக சூழலின் மாற்றங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். கேரளத்தின் சமூக மாற்றத்திலும், அரசியலிலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவித்த கம்யூனிச இயக்கங்கள் வாசிப்பினை தமது முக்கிய கருவிகளில் ஒன்றாகக் கொண்டிருந்ததன . அதன் சித்தாந்தங்கள் மட்டுமல்லாமல் அதனை ஒட்டிசெல்லும் அனைத்து இலக்கியப் படைப்புகளும் வாசிப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டன. பெருமளவு பேசப்பட்டன. ஆழமான முறைகளில் விவாதிக்கப்பட்டன.

elam

[இளம்பாரதி, மொழிபெயர்ப்பாளர்,

மலையாள நவீன இலக்கியம் இந்த மேடையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. கேரளத்தின் சமுக, அரசியல் இயக்கங்களின் வளர்ச்சி என்பதும், மலையாள நவீன இலக்கியத்தின் வளர்ச்சி என்பதும் ஒன்றோடொன்று பிணைந்தவை. ஒன்றை மறுத்து மற்றொன்றை பேசிவிட இயலாத அளவு நவீன மலையாள இயக்கமும், கேரள அரசியல்-சமூக இயக்கங்களும் இரண்டறக் கலந்தவை. அந்த வாசிப்புப் பழக்கத்தில் வந்த மலையாள தலைமுறைதான் இன்றும் மலையாள இலக்கிய உலகின் வாசகத் தலைமுறையாகத் தொடர்கிறது.

மாறாக தமிழுக்கு இப்படியான அரசியல், சமூக காரணிகள் எவையும் மேடை அமைத்துக் கொடுத்ததில்லை. சமூக இயக்கமாக உருவாகி வந்த காங்கிரஸ் இயக்கம் கூட விடுதலைப் போராட்ட காலத்தின் லட்சியவாதத்தை தமிழின் இலக்கியகர்த்தாக்களுக்குக் கொடுத்ததேயன்றி வாசிப்பின் பரவலுக்கு எதுவும் செய்ததில்லை. விடுதலை கிடைத்த கையோடு அதுவும் முடிந்தது. தமிழில் பெரும் செல்வாக்குடன் உருவாகி வந்த திராவிட இயக்கங்களும் பரப்பிலக்கியம் என்ற வகையில்தான் தமிழ் மொழியைக் கையில் எடுத்ததேயன்றி தமிழின் நவீன இலக்கியத்திற்கு எந்த பங்களிப்பையும் தரவில்லை. தமிழைப் பொறுத்தவரை அதன் இலக்கியம் என்பது இலக்கியத்தாலேயே வளர்ந்த ஒன்று.

தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாக்கள் தமது பொருள், உழைப்பு , நேரம் என தம்மிடமிருந்த அனைத்தையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்து எந்த பலனும் எதிர்பாராமல் உரமாகிப் போனார்கள். அந்த மரபு இன்று வரை தொடர்கிறது. சி.சு. செல்லப்பாவும், க.நா.சுப்ரமணியனும் தொடக்கி வளர்த்த தனிநபர் இலக்கிய இயக்கங்களே தமிழில் நவீன இலக்கிய வாசகனின் வாசல். சிறுபத்திரிக்கை மரபு வழியாக இதைத் தொடங்கிய முன்னோடி இலக்கியகர்த்தாக்களின் மரபு இன்றும் தமிழில் வெளிவரும் 15 சிறுபத்திரிக்கைகள் மூலம் தொடர்கிறது. இந்த பிடிவாதமான இலக்கிய வெறிதான் இன்று தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஆளுமைகளை உருவாக்கி எடுத்தது. தமிழின் நவீன இலக்கிய வாசகப் பரப்பு அளவில் குறைந்ததென்றாலும் ஆழமும், வீச்சும் நிரம்பப் பெற்றது .

index

[குளச்சல் மு யூசுப், மொழிபெயர்ப்பாளர். புனத்தில் குஞ்ஞ்சப்துல்லாவின் மீசான் கற்கள், திருடன் மணியன்பிள்ளையின் கதை ]


மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும் – இன்றைய யதார்த்தம்:

1990 கள் வரையிலும் கூட மலையாள இலக்கிய உலகத்தின் பாய்ச்சல் தமிழுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் 90களின் மத்தியில் இருந்து தமிழ் இலக்கியத்தின் போக்கு துரிதமாகத் தொடங்கியது. இன்டர்நெட்டின் வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் புதிய பரிணாமமாக மாற ஆரம்பித்தது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மிகத் துரிதமாகப் பயன்படுத்திக் கொண்டது தமிழ். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தமிழ் மொழி பேசும் மக்கள் பெருவாரியாக உலகின் பல பாகங்களுக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். தகவல் தொழில் நுட்பமும், ஸாப்ட்வேர் நிறுவனங்களின் வளர்ச்சியும் இமட்டும் இதற்கு காரணம் அல்ல. அதற்கும் முன்பே தலைமுறைகளாக உலகெங்கும் விரிந்திருந்த தமிழ் பேசும் மக்களின் கூட்டமும் தான். இதனுடன் இலங்கையிலிருந்து அயல்நாடுகளுக்கு சென்று தங்களது வருவாயை ஸ்திரப்படுத்தி மேலெழுந்து வந்த இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம். அதே வேளையில் தமிழில் சிறு பத்திரிகைகள் வாயிலாக பெருமளவு வாசகர்களை அடைந்த ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் 2000 களின் தொடக்கத்தில் இணையத்திற்கு வந்தனர். இன்று தமிழில் செயலுடன் இருக்கும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இணையத் தளம் உண்டு. அவற்றுக்கு கணிசமான வாசகர்களும் உண்டு. இந்த வாசகர்கள் உலக அளவில் இருப்பவர்கள்.

Jayashri-1

[கே வி ஜெயஸ்ரீ, மொழிபெயர்ப்பாளர்]

இன்று தமிழின் மிக முக்கிய படைப்பாளியாக இருக்கும் ஜெயமோகனுக்கு வியாசனின் பாரதத்தை தமிழில் மறு ஆக்கமாக உருவாக்கும் படைப்பூக்கம் இந்தத் தளத்திலிருந்துதான் கிடைக்கிறது. 10 வருடங்களுக்கும் மேலாக தினமும் நீடிக்கப் போகும் இத்தகைய முயற்சி எதுவும் அச்சு வடிவில் இன்று சாத்தியமே இல்லை. இணையம் தரும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் இன்றைய தமிழிலக்கியம் எடுத்துக் கொள்கிறது. இதன் வெகு முக்கிய பலன் இன்று தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிடைத்திருக்கும் புதிய வாசகர்களின் பரப்பு. 30 வயதிற்கு உட்பட்ட பெரும் இளைஞர் கூட்டம் உலகளாவிய அளவில் தமிழ் இலக்கியத்திற்கு இன்று கிடைத்திருக்கிறது. நவீன தமிழிலக்கிய உலகிற்கு இன்றிருப்பதைப் போன்ற இளைய வாசகர் கூட்டம் இதற்கு முன்பு இருந்ததில்லை. தமிழ் இலக்கியத்தின் முந்தைய தலைமுறை, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் கூட இன்று இந்த வாசகர்களால் ஒளியுடன் எழுந்து வருகிறார்கள்.

images

[கே வி ஷைலஜா, மொழிபெயர்ப்பாளர். கல்பற்றா நாராயணனின் சுமித்ரா போன்ற நூல்கள்]

ஒப்புநோக்க மலையாள இலக்கிய உலகம் இன்னும் அச்சுப் பதிப்புகளை விட்டு வெளியே வரவில்லையோ எனும் சந்தேகம் பலமாக எழுகிறது. சொல்லப்போனால் தமிழர் அளவுக்கே அல்லது தமிழரை விட அதிக நாடுகளில் பரந்திருப்பவர்கள் மலையாளிகளே . தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்கிக் கொண்டதில் மலையாளிகளுக்கும் பங்குண்டு. ஆனால் மலையாள இலக்கிய உலகத்தின் புதிய தலைமுறையினரை சந்திப்பதில் , புதிய தொழில்நுட்பமான இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் மலையாள இலக்கிய உலகம் சற்று பின்தங்கி இருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. இணையத்தின் வழியே வாசிப்பினைத் தொடக்கும் ஒரு தமிழனுக்கு இறக்கும் இலக்கிய வாசிப்பின் சாத்தியங்கள் , மலையாள இலக்கியங்களைத் இணையத்தில் தேடும் ஒரு மலையாளிக்கு குறைவே.

இன்னும் அடுத்த கட்டம் நோக்கி நிற்கும் தமிழும், மலையாளமும் இனி தொழில்நுட்பத்தால் ஒரே எழுத்துருவை சந்திக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அன்று தமிழிலக்கியம், மலையாள இலக்கியம் என்ற பிரிவிற்கு பொருளேதும் இருக்கப்போவதில்லை. அதுவரை காத்திருப்பதை விட நாம் இப்போதே சொல்லிக் கொள்வோம் – நாமெல்லாம் இலக்கிய வாசகர்கள் , இலக்கியம் தமிழில் ஆனாலும், மலையாளத்தில் ஆனாலும்.

எம்.எஸ் அவர்களுக்குப் பாராட்டுவிழா 2003

முந்தைய கட்டுரைமின் தமிழ் இதழ் 3
அடுத்த கட்டுரைமதங்கள்- கடிதம்