ஆலிவர் சாக்ஸை நான் நித்ய சைதன்ய யதியிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன், 1997ல். அப்போது அவர் பொதுவான அறிவுலகில் பரவலாக அறியப்படாத ஓர் ஆளுமை. அன்று இலக்கியச்சூழலில் ரோலான் பார்த்தின் அமைப்புவாதமும் தெரிதாவின் பின்அமைப்புவாதமும் பெரிதாகப்பேசப்பட்டன. படைப்பு, அறிதல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டடையப்பட்டது என்ற தொனி சில பேராசிரிய மட்டங்களில் நிலவியது. அதைப்பற்றி நான் நித்யாவிடம் உரையாடியபோது ஆலிவர் சாக்ஸை அறிமுகம் செய்தார்
சாக்ஸ் ஓர் நரம்பியலாளர். மூளை எப்படி அறிகிறது, அறிவைத் தொகுத்துக்கொள்கிறது, அந்த அறிவின் மூலம் புறவய உண்மை என ஒன்றை வகுத்துக்கொள்கிறது என்று சிந்தித்தவர். புறவய உலகம் என்பதே மூளையின் அறிதல் மட்டுமே என்னும் திசைநோக்கிச் செல்லும் ஆய்வுகள் அவை.
‘அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் அடிப்படையில் குறிகள், மொழி என்னும் செயல்பாடுகள் மேல் கட்டமைக்கப்பட்டவை. அவற்றை மொழியியல் குறுக்கல்வாதம் என்று சொல்லத்துணிவேன். மூளையே மொழியையும் குறிகளையும் உருவாக்குகிறது என்னும் கோணத்திலான நரம்பியல் ஆய்வுகள் வந்து இந்த குறுக்கல்வாதத்தை ஏற்கனவே மேலதிக கேள்விகள் மூலம் கடந்து சென்றுவிட்டன” என்றார் நித்யா
“இந்த பின்நவீனத்துவச் சிந்தனைகள் மொழி, குறியீடு என இலக்கியத்திற்கு அணுக்கமனா விஷயங்களைப்பேசுவதனால் நீங்கள் இவற்றை தேவைக்குமேல் பொருட்படுத்துகிறீர்கள். இவை நிரூபணவாதத்திற்கு எதிரானவை என்பதனால் வெறும் வாதங்களாகவே நின்றுவிடக்கூடியவை. கறாரான அறிவியல் தர்க்கமுறைகள் கொண்ட நரம்பியலின் வாதங்கள் இவற்றை மிக விரிவான தளத்தில் விவாதிக்கின்றன. அவைதான் இன்றைய சிந்தனையின் புதிய அலை” என்றார்
ஆலிவர் சாக்ஸின் மூன்று நூல்களை நான் அப்போது வாசித்தேன். உலகமெங்கும் அத்வைதிகளுக்கு மிக அணுக்கமான ஆய்வாளர் சாக்ஸ். உலகத்தோற்றத்தை மாயா என்றே சொல்லத்துணிபவர். இவையாவும் மூளையின் தோற்றங்களே என்று வாதிடும் அவரது நோய் ஆய்வுக்குறிப்புகள் ஆழமானவை. என் சிந்தனையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் சாக்ஸ்.
என் துறை நரம்பியல் அல்ல என்பதனால் நான் அவ்வபோது அவரைக்குறிப்பிட்டுள்ளேனே ஒழிய விவாதித்ததில்லை. அவரது ஒரு நீளமான கட்டுரை ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ என்றபேரில் மொழியாக்கம் செய்யவைத்து 1998ல் நாங்கள் நடத்திவந்த சொல்புதிது மும்மாத இதழில் வெளியிட்டேன். சாக்ஸ் எழுதி தமிழில் வந்த ஒரே கட்டுரை அதுதான் என நினைக்கிறேன்
ஆலிவர் சாக்ஸ் நேற்று தன் 82 ஆவது வயதில் மரணமடைந்தார். அவருக்கு என் அஞ்சலி
பழைய கட்டுரைகள்