விளையாடல்

இந்தியப்பயணம் முடிந்து திரும்பியபின் கொஞ்சநாள் நினைவுகளை மீட்டுவதுதான் இன்பமாக இருந்தது. என்னசெய்திருக்கலாம் என்ன செய்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள், போன இடங்களில் பிறர் கவனிக்கத்தவறி தாங்கள் கவனித்த விஷயங்கள் பற்றிய வருணனைகள் என்று அதற்கு பல தளங்கள். தொலைபேசியில் பேசும்போது சிவா சொன்னார் ”ஒரு மனக்கொறைதான் கெடந்து உறுத்துது. அந்த பூசாரிப்பையனுக்கு ஒரு அம்பதுரூபா கையிலே கொடுத்திருக்கலாம்”

சிவா சொன்னது பன்னஹல்க அஜய்குமாரைப் பற்றி. நல்கொண்டா அருகே பன்னகல் என்ற ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே ஆந்திர தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் இருந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. காகதீய பாணியில் அமைந்த கன்னங்கரிய கடப்பைக்கல் ஆலயம். இந்தவகைக் கோயில்களில் நுட்பமான சிற்பங்கள் செறிந்த முகமண்டபங்கள் பேரழகு கொண்டவை. மழைபெய்துகொண்டிருந்த காலைநேரத்தில் யாருமே இல்லாத கோயிலின் உள்ளே சுற்றி வந்தோம்.

அப்பகுதியெங்கும் மானுட சலனமே இல்லை. மண்டபங்கள் ஒழுகிக்கொண்டிருந்தன. தூண்கள் ஈரக்கருமையில் மின்னின. கைமுட்டி அளவுள்ள யானைச்சிலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவான மண்டப விளிம்பின் நுட்பத்தை பார்த்தபடி கோயிலைச் சுற்றி நடந்தோம். கருவறைக்குள் ஒற்றை விளக்கொளியில் கரும்பளிங்கு லிங்கம் மௌனத்தில் அமர்ந்திருந்தது. வெளியே மண்ணில் புதைந்த காது உடைந்த கரிய நந்தி.

பன்னகல்க அஜய்குமார். 

கோயிலுக்குப்பின்னால் ஒரு திறந்தவெளி சிற்பக் காட்சியகம். அங்கே சிற்பங்கள் மழையில் நனைந்து தங்கள் நிரந்தரமான முகபாவனைகளுடன் நின்றன. அருகே இருந்த அருங்காட்சியகத்தில் வாட்ச்மேன் மட்டும்தான் இருந்தார். அவருக்கு தெலுகு மட்டுமே தெரியும். அவரிடம் தமிழில் விசாரித்து இன்னொரு கோயில் இருக்கும் விஷயத்தை தெரிந்துகொண்டோம். கிட்டத்தட்ட புதையல் ரகசியம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சிரமப்பட்டோம்.

பார்ப்பவர்களிடமெல்லாம் அதை விசாரித்து விசாரித்துச் சென்றோம். எங்களுக்கு தெலுகு தெரியாதாகையால் வழிசொல்பவர் விரிவாக தெலுகுவில் சொல்வதையெல்லாம் தலையாட்டிக் கேட்போம். நன்றி சொல்லி பத்தடி முன்னால் சென்று அடுத்தவரிடம் விசாரிப்போம். முதலில் வழி சொன்னவர் புரியாமல் பின்பக்கம் பார்த்து நிற்பார்.

எல்லாரும் வயல் வெளியையே சொன்னார்கள். வழிதவறி விட்டது என்று பட்டது. சாரல் மழையில் நனைந்த கரும்புவயல்கள். சில இடங்களில் பசுமை அலையடித்த சோளவயல்கள். பல கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கண்ணில் படவில்லை. பின்னர் பசுமையின் அலைகளுக்கு அப்பால் கடலில் கப்பலின் முகடு அலைபாய்ந்து தெரிவது போல ஒரு புராதன ஆலயத்தின் கோபுரம் தெரிந்தது.”அதோ”என்றார் செந்தில்.

கோயிலருகே வண்டி சென்றது. செம்மண் சேறு குழைந்த சாலையில் ஒரு சைக்கிளின் தடம் மட்டும் தெரிந்தது. நெருஞ்சி மண்டிய முற்றத்தில் இறங்கி கற்பாளங்கள் சரிந்துகிடந்த கோயில் முகப்பபை நோக்கிச் சென்றோம். இடிந்த கோயில் முகடு. ஆனால் மண்டபம் முழுமையாக, காகதீயக் கட்டிடக்கலைக்குரிய கச்சிதமான வளைவுகள் கொண்ட தூண்களுடன் ஒரு ராட்சத மலர் போல் இருந்தது. கோயிலுக்கு அருகே ஒரு பழைய சைக்கிள்.

கோயிலுக்குள் ஒரே ஒரு மனித ஆத்மா. பத்து வயதுப்பையன் ஒருவன் மேல்மூக்கில் குங்குமப்பொட்டுடன் சட்டை போடாத மெலிந்த உடல். பூணூல் இல்லை. பிராமணப்பையன் அல்ல. கழுத்தில் உருத்திராட்சம். வீரசைவமாக இருக்க வேண்டும். நம்மூர் வைராவிகள் போல.யாரது இங்கே என்று ஆச்சரியமாக எங்களைப் பார்த்தான். உள்ளே சென்றோம். அவன் பின்னால் வந்தான். சத்துக்குறைவின் விளைவான தேமல் கொண்ட உடல். கூடுகட்டிய மார்பு. அவன்தான் கோயில் பூசாரி. ஒன்பதாம் வகுப்பு மாணவன். உடல் அப்படிச் சொல்லவில்லை.

”இது என்ன கோயில்?”என்றார் வசந்தகுமார், மொண்ணையான தெலுங்கில். ”சாயா சோமேஸ்வர் குடி…”என்றான் பையன். ”பன்னகல்லில் இருக்கிற கோயில் எது?” அங்கே இருந்த வாட்ச்மேனுக்குகூட அது தெரிந்திருக்கவில்லை. ”அது பச்சன சோமேஸ்வர் குடி.”என்றான் பையன் இரண்டும் இரட்டைக் கோயில்களாம்.

கோயிலுக்குள் ஆசாரம் ஏதும் இல்லை. ஏனென்றால் அது தொல்பொருள்துறையின் பொறுப்பில் உள்ள கோயில். அஜய்குமார் அங்கே பரம்பரை பூசாரி. ஊரார் கொடுக்கும் சிறு ஊதியம் மட்டும்தான். எங்களை கருவறைக்குள்ளேயே கொண்டு போனான். லிங்கம் கருவறைக்குள் நான்கு படிகள் இறங்கிச்செல்லும் ஆழத்தில் இருந்தது. செம்பருத்திப்பூக்கள் போட்டு பூசை செய்து சிறு அகல்விளக்கும் கொளுத்தி வைத்திருந்தான்.

திரும்பி வெளியே வந்ததும் அஜய்குமார் ”இது சாயா சோமேஸ்வர். இந்த நிழல்தான் சுவாமி” என்று சொல்லி சிறிய விளக்கொன்றை ஏற்றினான். அந்த ஒளியில் லிங்கத்தின் நிழல் எதிரே தெரிந்த சுவரில் எழுந்து மெல்ல ஆடியது. அங்கே லிங்கத்தை வெளியே நிற்கும் பக்தர்கள் பார்க்க முடியாது. பூசைவும் வழிபாடும் நிழலுக்குத்தான். விசித்திரமான தத்துவ எண்ணங்களை உருவாக்கியது அதிர்ந்துகொண்டிருந்த நிழல்.

அஜய்குமார் நிழல் லிங்கத்துக்கு ஆரத்தி காட்டினான். பூ எடுத்து விபூதி பெற்றுக்கொண்டோம். அடுத்து சந்திராப்பூர் செல்ல வேண்டும். ஆகவே வெளியே சென்றோம். அஜய்குமார் பின்னால் வந்து கூச்சம் தெரிந்த முகத்துடன் ”சாமிக்கு எண்ணை வாங்க ஏதாவது கொடுங்க”என்றான். சிவா சட்டென்று கறாராக, ”இல்லை…”என்றார். அஜய்குமார் பின்வாங்கிவிட்டான்.நாங்கள் காரில் ஏறி திரும்பும்போது அஜய்குமார் பின்னால் வந்து வழியனுப்பினான். கோயில் பசுமைக்குள் மூழ்கிச்சென்றது.

”சார் நெனைக்கவே கேவலமா இருக்கு…அந்தப்பையன் முகம் கண்ணிலேருந்து மாறவே இல்லை. அவன் பொய் சொல்ற ஆளே கெடையாது. பிஸினஸிலே நாம் எத்தனை ஆளைப்பாக்கிறோம். அந்த கோயிலுக்கு எவனுமே வாற மாதிரி தெரியல்லை. அவன் ஒரு கடமைன்னு அதைச்செய்றான்…அவன் கேட்டப்ப ஒரு அம்பது ரூபாவ குடுத்திட்டு வரத்தோணல்ல… தரித்திரம் பேசிப்பேசி அதுவே வாயில வந்திட்டுது சார்” என்றார் சிவா. ”நெனைச்சா ஆறவே இல்ல”

காரணம் நாங்கள் பயணம் போகும் பாதை அது. எனவே செலவு எவ்வளவு ஆகும் என்ற ஊகங்களும் சிக்கனம் பற்றிய திட்டங்களுமாக இருந்தோம். ”இருபத்தஞ்சாயிரம் வரை ஓக்கே சார்” என்றார் செந்தில் ”அதுக்கு மேலேயே ஆகும்”என்றார் கிருஷ்ணன். ஆகவே போகும் வழியெல்லாம் வாயையும் வயிற்றையும் கட்டினோம். சத்திரங்களிலேயே தங்கினோம். எங்குமே காணிக்கை அன்பளிப்பு எதுவுமே அளிப்பதில்லை என்றிருந்தோம்.

ஆனால் கடைசியில் கணக்கு பார்த்தபோது திட்டமிட்டதில் பாதிகூட செலவாகவில்லை. ” பயந்து பயந்து கேனத்தனம் பண்ணிட்டோம் சார்” சிவா சொன்னார். ”இனிமே என்ன பண்றது?” நான் ”பேசாம அந்தப்பையனுக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வையுங்க”என்றேன். சிவா ”அட்ரஸ் தெரியல்லியே சார்” என்றார். ”தெரிஞ்ச அட்ரசுக்கு அனுப்புவோமே”என்றேன், ”கெடைக்கல்லேண்ணா திரும்பிவரும்ல?”

”ஒண்ணு சொல்றேன் ஜெயன், போஸ்டல் டிபார்ட்மென்ட் மாதிரி ஒழுங்கா இருக்கிற டிபார்ட்மெண்டே நம்ம நாட்டிலே கம்மி. அம்பதுபைசா கார்டு போட்டா அஸாமுக்கு போய் சேந்திரும். நம்மாளுக லெட்டர் போடாத தப்பை போஸ்டில தொலைஞ்சிட்டுதுன்னு சொல்லிச் சொல்லியே போஸ்டாபீஸ் மேலே பலருக்கும் தப்பு அபிப்பிராயம் இருக்கு. போஸ்டில் ஒரு லெட்டர் தொலையறதுக்கு பத்தாயிரத்தில ஒரு வாய்ப்பு கூட கெடையாது” என்றாள் போஸ்ட்மாஸ்டர் அருண்மொழி.

”ஏன்?”என்றேன். அருண்மொழி ”இந்த டிபார்ட்மெண்டே கம்மியா சம்பளம் வாங்கிற கீழ்மட்ட ஊழியர்களினாலதான் ஓடிட்டிருக்கு. மொத்த ஊழியர்களிலே அவங்கதான் தொண்ணூறு சதவீதம். அவங்களுக்கு இந்தவேலை மேலே ரொம்ப மரியாதை இருக்கு. இந்த வேலையினாலே தங்களுக்கு கௌரவம் இருக்குன்னு நெனைக்கிறாங்க. எங்க போஸ்ட்மேன் ஒருநாளைக்கு இருபது கிலோமீட்டர் வரை அலையறார். அவருக்கு எக்ஸ்டிரா டிபார்ட்மெண்ட் ஆளுன்னு பேரு. அரை ஊழியரோட சம்பளம்தான். ஆனா அவருக்கு வேலையிலே பரம திருப்தி. இந்தவேலை இல்லேன்னா அவரு கூலிவேலைல்ல செய்யணும்? போஸ்ட்மேன்னா ஊரிலே தெரியாத ஆள் இல்லை. எவ்ளவு மரியாதை!” என்றாள்

நான் சிவாவிடம் ஒரு விலாசத்தை உருவாக்கிச் சொன்னேன்.

P. Ajaykumar,
Temple Priest,
Chaya Somesvar Temple,
Pannakal,
Via Nalkonda ,
Andhra Pradesh

சிவா ”மொதல்லே ஒரு நூறு ரூபா அனுப்புவோம் சார். கெடைக்குதான்னு பாப்போம்”என்றார். ரூபாய் அனுப்பியதாக நாலைந்து நாள் கழித்துச் சொன்னார்.

பின்பு சிவா ·போன்செய்தார். ”சார், பணம் கெடைச்சிட்டுது. ரசீது இப்பதான் வந்தது” நான் சற்று ஆச்சரியத்துடன் ”அப்டியா?”என்றேன். ”ஆமா சார். சீல் எல்லாம் செக் பண்ணிப்பாத்துட்டேன். நல்கொண்டா, பன்னகல் ரெண்டு சீலும் இருக்கு. சரிதான். தெலுங்கிலே தொகை எழுதியிருக்கு. அஜய்குமார் கையெழுத்து போட்டிருக்கான்…ஒண்ணும் பிரச்சினை கெடையாது” சிவா சொன்னார்”ஆறுதலா இருக்கு சார். ஒரு கடமை முடிஞ்சது. சொல்லப்போனா இப்பதான் நம்ம டிரிப்பே நிறைவா முடிஞ்சிருக்கு”

எனக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் பன்னகல்க அஜய்குமாருக்கு எங்கள் முகம், ஊர் எல்லாம் நினைவிருக்குமா என்று தெரியவில்லை. சாயா சோமேஸ்வரின் ஒரு திருவிளையாடலாக அதை எண்ணிக்கொண்டிருப்பான்

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 15, 2008

இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா

முந்தைய கட்டுரைஜெயமோகன் மின்னூல்கள்
அடுத்த கட்டுரைஎன்றுமுள கண்ணீர்