ரசனையும் பட்டியலும்

ஜெயமோகன்,

பிரமாதமான கட்டுரை.

இருபத்தைந்து, இருபத்தாறு வருஷங்களுக்கு முன்னால் படித்திருக்கிறீர்களா என்ற புத்தகத்தைப் படித்தேன். சாண்டில்யனும் சுஜாதாவும் கல்கியுமே தமிழ் வாசிப்பு என்று கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தவனுக்கு அது ஒரு பெரிய கண் திறப்பு. பின்னாளில் அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்கள் பல பில்டப் அளவுக்கு இல்லாமல் ஏமாற்றம் அளித்தன (இதயநாதம், நாகம்மாள், மு.வ.வின் ஏதோ ஒரு புத்தகம், எஸ்விவியின் உல்லாச வேளை) என்றாலும் இப்படி இலக்கியமும் நிறைய இருக்கிறது, தேடிப் பிடித்து படிக்காதது என் தவறு எனக்கு உணர்த்தியது அந்தப் புத்தகம்தான்.

க.நா.சு.வின் அணுகுமுறையும் எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. இலக்கியக் கோட்பாடு போன்றவற்றில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. ரசனையைச் சார்ந்து மட்டுமே இலக்கியம் படிக்கப்பட வேண்டும், வேறு வழியே கிடையாது என்று உறுதியாக நம்புகிறேன். (அதனால்தான் உங்கள் திறனாய்வாளர் பட்டியல் உங்கள் ரசனையின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது) வாசிப்பு அனுபவத்தை விளக்க முடியாது, இலக்கிய விமர்சனம் என்பது அடிப்படையில் சாரமற்றது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. காலப்போக்கில் பொது ரசனை (Wisdom of the Crowds) உருவாகி நல்ல இலக்கியத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது என்று நம்புகிறேன்.

அவரைப் போலவே எனக்கும் மிகவும் பிடித்த தீனி வறுக்கப்பட்ட வேர்க்கடலைதான். பேர் வேறு சுப்ரமணியன். என்ன, அவரைப் போல எழுதத்தான் இன்னும் வரவில்லை…

அன்புடன்
ஆர்வி

அன்புள்ள ஆர்வி

ஏற்கனவே இதை நான் உங்களிடம் தெளிவாக்கியிருக்கிறேன் என நினைக்கிறேன்

கநாசு முன்வைத்தது ஓர் இலக்கிய வரலாறு அல்ல. அது ரசனைப்பட்டியல் மட்டுமே. அவ்வகை ரசனைப்பட்டியலிலேயே கூட அவரது கறாரான ரசனை இல்லை, தமிழ் ரசிகனுக்கு பொதுவாக வாசிக்கவேண்டியவற்றையே அவர் சொல்கிறார். அவர் சுட்டிக்காட்டிய சில படைப்புகள் தமிழுக்கு முக்கியமானவை, தனக்கு அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார். பின்னாளில் இலக்கிய வரலாற்றுக்குறிப்புகளாக எழுதியபோது அவர் இலக்கியப்பங்களிப்பை பொதுவாகவே கருத்தில் கொண்டார், சிபாரிசுப் பட்டியலில் இல்லாத பலர் அவ்வரிசையில் இருந்தனர். இதை அன்று அவரது முரண்பாடாக சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்கள்

நான் என் ரசனை சார்ந்து விமர்சனம் எழுதும்போது, தேர்வுகள் செய்யும்போது அந்த அளவுகோல் ஒன்று. ஓர் இளம் வாசகனுக்காக தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்யும்போது இங்கு இலக்கியத்தளத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்று சொல்லமுற்படுகிறேன். அந்த அளவுகோல் இன்னொன்று. அந்நூலகளிலேயே அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முற்போக்கு இலக்கியம் என் ரசனைக்கு பொருந்துவதல்ல. ஆனால் அவர்களை விலக்கி ஓர் இலக்கியவரலாற்றை எழுதினால் அதன் மதிப்பென்ன?

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு- காண்டீபம்
அடுத்த கட்டுரைபேராசிரியரின் குரல்