பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் வலைப்பக்கத்தில் பாரதி தமிழ்ச்சங்கத்தின் மேல் அவதூறு பொழிந்திருக்கும் அரவிந்தன் கண்ணையன் என்பவரது வசைக்கடிதத்துக்கு பதில் அளிக்கும்பொருட்டு பாரதி தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள நான் இந்த மடலை எழுதுகிறேன்.

தமிழின் இலக்கிய வரலாறு தொடங்கிய நாள்முதலாக இன்றுவரை தமிழ் மொழியும் இந்து மரபும் பிரிக்கவியலாது ஒன்றுடனொன்று பிணைந்தே வளர்ந்திருக்கின்றன. சிவன் உடுக்கையில் ஒருபுற ஒலி சங்கதமாகவும் மறுபுற ஒலி தமிழாகவும் உயிர்த்தெழுந்து வந்தது என்பது பாரத அளவில் இந்து ஆன்மீகத்தை ஒன்றிணைத்து நோக்கும் நம்பிக்கையின் குறியீடு. சங்கத்தமிழ் மண்ணுக்கும் இலக்கியத்துக்கும் இந்திரனும், திருமாலும், வருணனும், முருகனும், காளியும் நாயகர்கள். நாயன்மார்களால் அரவணைக்கப்பட்டு ஆழ்வார்களால் ஆதரிக்கப்பட்டு சித்தர்களால் செம்மையுற்று வளர்ந்த மொழி தமிழ் மொழி. இந்து தர்மம் தமிழ் வளர்த்தது; தமிழ், இந்து தர்மத்தை வளர்த்தது. இது தமிழ் மொழியின், தமிழ் கலாசாரத்தின் தொல் வரலாறு. அரவிந்தன் கண்ணையன் என்பவர், அவருக்கே உரிய இந்துக்காழ்ப்பின் விளைவாக இந்து மரபார்ந்த அம்சங்கள் வடிகட்டப்பட்ட ஒரு மொழியை மட்டுமே தமிழென்று கருதலாம். நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை.

பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது. பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமாக தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை அது காண்கிறது. பாரதி தமிழ்ச்சங்கம் இந்து கலாசார அமைப்பு என்பதை தெளிவாகவே அறிவிக்கிறது. ”பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு” என்பது பாரதி தமிழ்ச்சங்க வலைத்தள முகப்பில் காணப்படும் வாசகம். இதை பெருமையுடன் அறிவித்தே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குகிறோம். எனவே பாரதி தமிழ்ச்சங்கம் இந்து அடையாளத்தை மறைத்து இயங்குவது போல் அரவிந்தன் எழுதியிருப்பது வெறுப்பின் அடிப்படையில் எழுந்த எழுத்து.

பாரதி தமிழ்ச்சங்கத்தின் நோக்கங்கள் வலைத்தளத்தில் http://www.bharatitamilsangam.org/About.html தெளிவாகப் பதியப்பட்டுள்ளன:

· பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.

· பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.

· உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.

· பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.

· இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.

· “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.

· மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.

இந்த அடிப்படையில் இந்து தர்மத்தையும் இந்திய தேசியத்தையும் மதிக்கும் எவருடனும் உரையாடவும் அவர்களை மேடையேற்றவும் பாரதி தமிழ்ச்சங்கம் தயங்கியதில்லை. அர்ஜூன் சம்பத் வருகையும் அவ்வாறான ஒன்றே. அவர் மேடையேறியது அரசியல் பேசுவதற்கல்ல. அவரது சொற்பொழிவு சைவ இலக்கியங்களில் ஆழ்ந்து தேர்ந்த ஒருவரது அருமையான ஆன்மீக சொற்பொழிவு (அது எங்கள் வலைத்தளத்தில் சில நாட்களில் தரவேற்றப்படும்). சில இந்து காழ்ப்பாளர்களுக்கு அது உவப்பில்லாமல் போனது எங்களுக்கு வியப்பளிக்கவில்லை.

2007-இல் தொடங்கிய நாள் முதல் பாரதி தமிழ்ச்சங்கம் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழர்களின் பேராதரவைப் பெற்று பெருவளர்ச்சி கண்டு வருகின்றது. இங்குள்ள தமிழர்களின் ஆதரவில் பற்பல நற்பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகின்றது. இந்தியாவில் நடந்த உத்தரகாண்ட் பேரிடர் துயர மீட்புக்காகவும், நேபாள நில நடுக்க இழப்பு மீட்பு உதவிகளுக்காகவும் கலை நிகழ்ச்சிகளின் மூலமும், நன்கொடைகள் மூலமும் நிதி திரட்டி பல்லாயிரம் டாலர்களை வழங்கியுள்ளது. மகாபாரதம் கும்பகோண பதிப்பு புத்தகங்களை மீண்டும் அச்சிட உறுதுணையாய் இருந்து நிதி உதவி அளித்துள்ளது. தசைச் சுருக்க நோய் உதவி ஆதவ் அமைப்பிற்காக நிதி வழங்கியுள்ளது. தமிழின் முக்கிய இலக்கியப்படைப்பாளிகளை மேடையேற்றி கௌரவித்து வருகிறது. கலிஃபோர்னியா பல்கலையில் தர்மிக் ஸ்டடிஸ் (Dharmic Studies) துறைக்காக நிதியுதவி வழங்கியுள்ளது. ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான தமிழ்க்குழந்தைகள், இளம் கலைஞர்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் மரபார்ந்த இந்தியக் கலைகளை, அவற்றில் அவர்களது தேர்ச்சியை, வெளிக்கொணரும் முகமாக இலவசமாக மேடைகளை அமைத்துத் தருகின்றது. வளைகுடாப்பகுதியில் உள்ள வீடிழந்த ஏழைகளுக்கு அன்னபூர்ணா என்ற திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் உணவு வழங்கி வருகிறது.

இது போன்ற நற்பணிகளுக்கு உதவ முடிவதையே மிகப்பெரும் தவப்பயன் என்று பாரதி தமிழ்ச்சங்கம் கருதுகின்றது. அரவிந்தன் கண்ணையன் என்பவரது எதிர்மறைக்கருத்து எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் தளத்தில் வந்ததால் மட்டுமே இந்த விளக்கம். மற்றபடி, இப்படிப்பட்ட காழ்ப்பு மனங்களின் வெறுப்பு வார்த்தைகளை பாரதி தமிழ்ச்சங்கம் நோய்க்கழிவென்று கொண்டு தாண்டிச்செல்லும்.

நன்றி.

வேணு ரங்கநாதன்

தலைவர்

பாரதி தமிழ்ச்சங்கம்

*

அன்புள்ள ஜெயமோகன்,

//”திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் இலக்கியவாதியாகவோ இலக்கியச் சொற்பொழிவாளராகவோ அறியப்பட்டவர், நிரூபித்துக்கொண்டவர் அல்ல. நான் பங்குபெற்ற நிகழ்ச்சிக்குப்பின் அவரது நிகழ்ச்சி என்பது என்னை இலக்கியவாதியாக அவருக்குச் சமானமாக வைப்பதே. அது என்னை வருத்தமடையச்செய்கிறது என்பதை அந்த வேறுபாட்டை உண்மையிலேயே நீங்கள் உணராதபட்சம் என்னால் சொல்லிப்புரியவைக்கவே முடியாது”//.

நீங்கள் எழுதி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாய் இருக்கிறது. பாரதி தமிழ்ச்சங்கம் விஷ்ணுபுரம் போன்ற இலக்கிய அமைப்பு கிடையாது. கலாசார சேவை அமைப்பு. அர்ஜுன் சம்பத் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். நீங்கள் இலக்கியவாதியாக உரை நிகழ்த்தினீர்கள். உங்களுக்கு முன்னால் பேராசிரியர் ஞானசம்பந்தன் நகைச்சுவைப்பட்டிமன்றம் நடத்தினார். இதில் எந்த நிகழ்ச்சியை எப்படி உங்களோடு ஒப்பீடு செய்வீர்கள்? நிற்க.

கோவி. மணிசேகரனுக்கு அளிக்கப்பட்ட இலக்கிய விருது என்பதற்காக அடுத்து உங்களுக்கும் அதே விருது வழங்கப்பட்டபோது அதை நிராகரித்ததாக முன்பு எழுதி இருக்கிறீர்கள். இயல் விருது ஜார்ஜ் ஹார்ட்டுக்கும், லஷ்மி ஹாம்ஸ்டாமுக்கும் வழங்கப்பட்டபோது இலக்கிய விருது என்ற முறையில் ”இயல் விருது செத்துவிட்டது” என்று அறிவித்து சில வருடங்கள் முன்பு கட்டுரை எழுதினீர்கள். அதே இயல் விருது இன்று உங்களுக்கு வழங்கப்பட்டபோது அதை ஏற்க நீங்கள் தயங்கவில்லைதானே. இலக்கிய விருது வழங்கும் அமைப்புக்கே ஒன்றுக்கே நீங்கள் இப்படிப்பட்ட தாராள இடம் தருகையில் (அதை வரவேற்கிறேன்), இலக்கியம் மட்டுமன்றி, வெகுஜன கலை நிகழ்ச்சிகள், செவ்வியல் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பட்டிமன்றம், ஆன்மீகம் என்று பல தளங்களில் இயங்கும் பொதுச்சேவை அமைப்பொன்று இந்து ஆன்மீக உரைக்கு மேடையேற்றிய ஒருவர் குறித்து – உரையாற்றுபவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர் என்ற அளவில் கூட அதனை ஆதரவுடன் நோக்காமல்- மனம் வருத்தமடைந்ததாக நீங்கள் எழுதுவது ஏன் என்பதுதான் உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை.

உங்களது முரண்கள் உங்களுக்கு எப்படியோ, எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கின்றன. இதை சொல்லிப்புரிய வைக்கவே முடியாது என்று வேறு கூறுகிறீர்கள். உங்களது காரணங்கள் புரியாமல் இருப்பதேகூட நல்லதுதான். அப்படியே இருக்கட்டும்.

அருணகிரி

*

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் பதில் கண்டேன். முதலில் பாரதி தமிழ்ச் சங்கம் இந்துத்வ பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது அவதூறு மட்டுமே . அப்படி எதுவும் நடைபெறவில்லை.

அர்ஜுன் சம்பத் எந்த அரசியலையும் அங்கு பேசவில்லை.
ஒரே மேடையில் உங்களுடன் பேசவில்லை
அவர் பேசியது பக்தி இலக்கியம் குறித்து மட்டுமே
அவருக்கு எந்த பரிசையும் பட்டத்தையும் தரவில்லை
தர வரிசை என்றால் உங்களுக்கு இணையாக எவரையும் கருத முடியாது என்பதினால் நிரந்தரமாக அந்த அமைப்பேயே மூட வேண்டி வரும் அல்லது நீங்கள் வரும் சமயம் மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டியிருக்கும்

உங்களுக்கு அடுத்ததாக அவரை நாங்கள் அழைத்ததை நீங்கள் அவமானமாகக் கருதுவதாகப் புரிகிறது. அது திட்டமிட்டு நடந்ததும் அல்ல. சென்ற முறை நீங்கள் வந்து சென்ற பிறகு சுப்ரமணியம் சுவாமியை அழைத்திருந்தோம். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிகள் அவை. திட்டமிட்டு எவரையும் அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப் படுவதில்லை. எந்தவொரு திறமையுள்ளவரும் இப்பகுதிக்கு அவர்களாக வரும் பட்சத்தில் அவர்களினால் ஏதேனும் சிறு பயன் இருக்கும் என்றாலும் அவர்களை அழைத்து பேசச் சொல்வது இயல்பான நாங்கள் வழக்கமாகச் செய்யும் ஒரு நிகழ்வு மட்டுமே.

பாரதி தமிழ்ச் சங்கம் விஷ்ணுபுரம் போன்ற ஒரு முழுமையான இலக்கிய அமைப்பு கிடையாது. இங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள், மெல்லிசைக் கச்சேரிகள், பக்தி இலக்கியச் சொற்பொழிவுகள், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பேச்சுக்கள், நாடகங்கள் என்று சகலவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நீங்கள் பேசிய இலக்கிய நிகழ்ச்சி வேறு சம்பத் ஆற்றிய பக்தி இலக்கியம் பற்றிய உரை வேறு, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை.

அதற்கு முன்பாக யார் என்ன பேசினார்கள் என்பதையோ அடுத்ததாக யார் பேசப் போகிறார்களோ என்பதைப் பார்த்து கணக்குப் போட்டு நாங்கள் எதையும் செய்வது கிடையாது. பாரதி தமிழ்ச் சங்கம் வெறும் இலக்கிய அமைப்பு மட்டும் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பேச்சு இருக்கலாம் அதற்கு அடுத்ததாக ஒரு ஜனரஞ்சக பட்டி மன்றம் இருக்கலாம் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு பக்தி இலக்கியச் சொற்பொழிவு இருக்கலாம் ஒரு நாடகம் இருக்கலாம் ஒரு எஸ் பி பி கச்சேரிக்குப் பிறகு ஒரு சாதாரண பாடகரின் கச்சேரி இருக்கலாம்.ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் யாவுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை அவை. அடுத்து யார் பேசுகிறார்கள் என்பதை வைத்து முன்னால் பேசியவர் அவமானப் படவோ ஏமாற்றப் படவோ நினைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி பார்த்தால் எந்தவொரு நிகழ்ச்சியையும் இந்த அமைப்பினால் நடத்த முடியாமல் போய் விடும். விஷ்ணுபுரம் போன்ற அமைப்புகள் மட்டுமே அவ்வாறு அமைத்துக் கொள்ள முடியும்

உங்களை அழைத்ததினாலேயே நாளைக்கு உங்கள் தகுதிக்குக் குறைவான எவரையும் மேடையேற்றக் கூடாது என்ற கட்டுப்பாட்டை நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. உங்களுடன் ஒரே மேடையில் அவரைப் பேசச் சொல்லியிருந்தால் உங்கள் குறைக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும். சம்பந்தேமேயில்லாத இன்னொரு நிகழ்ச்சியில் அவரைப் பேசச் சொன்னது எந்த விதத்திலும் உங்கள் தகுதியைக் குறைக்கும் ஒரு செயல்பாடு கிடையாது. அதை ஒரு பொது அமைப்பிடம் எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்த நிலை. ஒரு பொது அமைப்பு அவ்வாறு செயல் பட முடியாது.

எனக்கு அவருடன் அறிமுகமும் கிடையாது. அவர் ஒரு இந்த்துவா என்பதற்காக அழைக்கவில்லை. அவருக்குப் பதிலாக இன்னொருவர் இப்பகுதிக்கு வந்திருந்து எங்களுக்கு சிபாரிசு செய்யப் பட்டிருந்தாலும் நிச்சயமாக ஏற்பாடு செய்திருந்திருப்போம். இதற்கு முன்பாக அதிகம் அறிமுகமாயிராத இந்தியாவில் இருந்து வந்த பல தமிழ் அறிஞர்களையும், இங்கு வருகை தரும் பெற்றோர்களையும் நாங்கள் பேசச் சொல்லியுள்ளோம். உங்களுக்கு அடுத்ததாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்தாலும் நிச்சயமாக அவரை நாங்கள் தமிழ் நாட்டுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசச் சொல்லியிருந்திருப்போம். சத்தியமாக அப்படி செய்யும் ஏற்பாடு உங்களை அவமதிப்பாக எவரும் கனவில் கூட நினைக்கவில்லை. நான் மதிக்கும் தமிழ் அறிஞர்களான ஜடாயு, ஜாவா குமார் போன்ற நண்பர்களின் பரிந்துரையின் பேரில் அர்ஜுன் பேச்சாற்றலுக்கு மதிப்பளித்து ஒரு தலைப்பில் அவரைப் பேசச் சொன்னோம். நாங்கள் அவர்களிடம் நோக்குவது அவர்களுக்கு இந்து மதம் இந்தியா அமெரிக்கா சார்பான வெறுப்பு ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே. எந்த நிலையிலும் அதற்கு முன்பாக பேசியவரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் கனவிலும் எவருக்கும் கிடையாது.

இது எவரையும் அவமதிக்கும் நோக்கத்துடனோ ஏமாற்றும் நோக்கத்துடனோ செய்யப் பட்டது அல்ல. அவருக்குப் பதிலாக இன்னொரு பேச்சாளர் வந்திருந்தாலும் அவரையும் பேசச் சொல்லியிருந்திருப்போம். அவர் பிரபலமாகாத எந்தவொரு சாதாரண பேச்சாளராகக் கூட இருந்திருக்கலாம். ஒரு அமைப்பில் அதைப் போன்று கட்டுப் பாடுகள் வைத்துக் கொண்டு செயல் பட முடியாது. உங்கள் தகுதிக்குச் சமானமான ஒருவரை மட்டுமே அழைக்க வேண்டும் என்றால் அப்படியாகப் பட்டவர் எவருமே இருக்க முடியாது. எவரையும் அழைக்கவே முடியாது என்பது மட்டுமே உண்மை.

நாங்கள் அர்ஜுன் சம்பத்திற்கு இந்தக் காரணத்தைச் சொல்லி மறுப்புத் தெரிவித்திருந்தால் ஒரு தலித் என்பதினால் அவரை அவமானப் படுத்தி விட்டார்கள் உயர் ஜாதி இந்துக்களை மட்டுமே பாரதி தமிழ்ச் சங்கத்தில் மேடையெற்றுவார்கள் என்று இன்று எங்களை வசை பாடும் அதே ஆட்கள் எங்களை வசை பாடுவார்கள். நூறு நாற்காலிகள் அல்ல ஒரு நாற்காலி கொடுத்ததற்கே இந்த அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். அவர் அரசியல் பேசியிருந்தால் பேச வைத்திருந்தால் உங்கள் அவதூற்றில் ஒரு அர்த்தம் இருக்கும். உங்களுக்கு அடுத்ததாக சுப்ரமணியம் சுவாமி வந்து பேசிய பொழுது, ஜடாயு வந்து பேசிய பொழுது இன்னும் சில பேராசிரியர்கள் வந்து பேசிய பொழுது எழாத பிரச்சினை இப்பொழுது எழுப்பப்படுவதற்கு அர்ஜுன் சம்பத் ஒரு தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதினால்தானோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதற்கு முன்பாகப் பேசியவர்களின் தகுதி வரிசைப் படி அதற்கு இணையானவர்களையோ அல்லது மேலானவர்களையோ மட்டுமே அழைக்க வேண்டும் என்பது சாத்தியமானதல்ல. அர்ஜுன் சம்பத் போன்ற ஒருவரை நாங்கள் அழைத்ததை நூறு நாற்காலிகள் எழுதிய ஒரு எழுத்தாளர் பாராட்டுவார் என்றே நான் உண்மையில் நம்பினேன். இந்தப் பதில் எனக்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. நான் இந்தத் தாக்குதலை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

மற்றபடி உங்களை அவமதிக்க வேண்டும் என்ற நோகக்த்திலோ இந்த்துவ பிரசாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலோ நாங்கள் அவரை அழைக்கவில்லை. அப்படி எந்த பிரசாரமும் நடைபெறவும் இல்லை. இதுதான் சத்தியம். அதற்கு மேலாக நாங்கள் ஏமாற்றி விட்டதாக திட்டமிட்டு அவமதித்து விட்டதாக நீங்கள் கருதுவீர்கள் என்றால் அது தவறான நம்பிக்கையில்லாத ஒரு எண்ணம் என்பதை மட்டுமே என்னால் கூறிக் கொள்ள முடியும். இதற்கு முன்னால் பேசியவர்களின் தகுதிக்குக் குறைவானவர்கள் நீங்கள் என்று எவரையும் நாங்கள் மறுத்தால் அவர்கள் அவமானப் படுத்தப் பட்டதாகவே உணர்வார்கள் என்ற யதார்த்தை நீங்கள் எப்படி கருத்தில் எடுத்துக் கொள்ள மறுத்தீர்கள் என்பது புரியவில்லை.

நாங்கள் பத்தாண்டு காலமாக எங்கள் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்து கஷ்டப் பட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தை உங்களின் ஒரு பதில் நொறுக்கி விட்டது. இதைத்தான் கண்ணையன் போன்ற இன வெறுப்பாளர்கள் எதிர்பார்த்தார்கள். இன வெறுப்பு ஜாதிய வெறுப்புக்கு எதிராக செயல் பட்ட ஒரே ஒரு அமைப்பையும் இந்தப் பதில் முடக்கி விட்டது என்பதை மட்டும் ஆழமான வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
ராஜன்

ஆசிரியருக்கு,

வணக்கம். இங்கு அயல் பூமியில் தமிழ்ச்சங்கங்கள் என்பது தமிழ் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கோவில் போலவே இருக்கின்றது. இருக்கும் மக்கள் தொகையில்,இணைக்கும் நோக்கத்தில் சங்கத்துக்கு பல பயன்பாடுகள் வருகின்றன. பல வித மனிதர்கள் பயன்படுத்துவதால் இந்த பல வகை பயன்பாட்டை தவிர்க்க முடியாத சூழல். ஏதேனும் ஒரு சில நேரம் பிளவு உண்டாகி தனி கோவில்கள் அல்லது சங்கங்கள் உண்டாகிறது. அதனுள்ளும் பல நோக்கம் உள்ள பயனர்கள் உள்ளனர்.

சகாயம், மயில்சாமி, கலாம், ஞான சம்பந்தன், சிவகார்த்திகேயன், த்ரிசா, எஸ்.ரா , குட்டி ரேவதி, பி.ஏ.கே,அம்பை, பிரபஞ்சன், திருமாவளவன், நல்லகண்ணு, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் என வரும் தமிழகத்து விருந்தினர்கள் பலர். ஓவ்வொரு ஊரிலும் ஒன்றோ, இரண்டோதான் தமிழ் சங்கங்கள் இருக்கும். எல்லாருக்கு விதவிதமான கலவையில் யார் யாருக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பது மாறுபடுகிறது. எல்லாருக்கும் அவரவருக்கு பிரியமானவர் முக்கியம். தமிழ் சங்கம் என்னும் ஒரு குடையில் கவுரவிக்கும் விழாக்கள் நடைபெறுகின்றன. வெளியில் இருந்து பார்ப்பவருக்கு ஓரே மேடையில் ஒரே சங்கம் விழாவெடுப்பது போல் காட்சி வரும். இங்கு ஊரில் அனைவருக்கும் ஒரே சங்கம், ஒரே மேடைதான் உண்டு. ஆகவே இலக்கியவாதி ஏறும் மேடையில் அரசியல்வாதியா என்று நினைக்காதீர்கள் என்றே சொல்ல நினைத்தேன்.

அமெரிக்காவில் இருக்கிறோம், அதனால் இந்தியாவில் உள்ளவருக்கு மேடை கொடுத்தால் அது இந்தியாவில் உள்ளவருக்கு கவுரவம் என்ற எண்ணம் கொண்டவர் உண்டு. இந்தியாவில் இருந்து நல்ல சிந்தனையாளர் வந்துள்ளார், அவர் தனது அறிவை நம்முடன் பகிர்ந்து கொள்வார், அவர் நம்முடன் இருப்பது உலக தமிழர்களுக்கு கவுரவம் என நினைப்பவரும் உண்டு. அயல் சூழலில் இந்த இரு வேறு சிந்தனை உள்ளவர்கள் ஒருவர் மற்றவரை தவிர்ப்பதோ, மறுப்பதோ கடினம். இதுதான் இன்றைய சூழல்.மாறலாம்.

அன்புடன்
நிர்மல்

=====================================================================================================

அன்புள்ள நண்பர்களுக்கு

உங்கள் கடிதம் கண்டேன்.

தெளிவாகவே என் தரப்பைச் சொல்லிவிட்டிருக்கிறேன். ‘எனக்கு நிகராக’ என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால் பாரீஸுக்கு சீமான் சென்று சிலப்பதிகாரம் பற்றி பேசும்போதுவரும் அதே ஏமாற்றம்தான் இது. அவர்களும் அதையெல்லாம் நியாயப்படுத்த இதே வரிகளைத்தான் சொல்வார்கள்.

உங்கள் அளவுகோல்கள் உங்களுக்குச் சரி எனப்பட்டால் நான் எப்படி வாதிட முடியும். எனக்கு அந்த அளவுகோல் வருத்தமளிக்கிறது, அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன். என் வருத்தம் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

பாரதி தமிழ்ச்சங்கத்தின் மதிப்பு அல்லது அடையாளம் என்னால் அழிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அரசியல் மனிதர்களை அழைக்க இலக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சமநிலைகூட உங்களுக்கு இல்லை என்பதே உங்களுடைய பிரச்சினை.

அமெரிக்காவை விடுவோம், தமிழகத்திலேயே கூட ஓர் இலக்கிய அமைப்பு இவ்வாறு செயல்படுமென்றால் அதை சுட்டிக்காட்டி கண்டிக்கவே செய்வேன். உயிர்மை கூட்டத்திற்கு ஜவஹருல்லா அழைக்கப்பட்டபோது வந்த அதே ஏமாற்றமும் வருத்தமும்தான். அவரும் இலக்கியம்தான் பேசினார், அரசியல் பேசவில்லை என்றே அவர்களும் சொல்வார்கள்

நேரடியாகவே சொல்கிறேன், அர்ஜுன் சம்பத் அழைக்கப்பட்ட பின் என்னை அழைத்திருந்தால் நான் வந்திருப்பேனா? கண்டிப்பாகத் தவிர்த்திருப்பேன். ஆகவே நான் வந்தபின் அவரை அழைத்திருப்பதற்கு நான் மறுப்பு தெரிவித்தாகவேண்டும்.

என் இதுவரையிலான எழுத்துக்களில் எப்படியும் இரண்டாயிரம் பக்க அளவுக்கு மீளமீள எழுதி ஒரே விஷயத்தை தெளிவுபடுத்தியிருப்பேன். இந்துத்துவ அரசியல் வேறு இந்து ஞானமரபும், இந்துமதமும் வேறு. அரசியலின் தற்காலிகமான நிலைபாடுகள், உணர்ச்சிகளைக்கொண்டு ஞானமரபையும் மதத்தையும் அறியவோ மதிப்பிடவோ கூடாது. என் சிந்தனையின் அடித்தளம் என்பது இந்த கறாரான பிரிவினைதான்.

உண்மையில் இந்துஞானமரபையும் இந்துமதத்தையும் அழிக்க, அவமதிக்க எண்ணுபவர்கள்தான் இரண்டும் ஒன்றே என மூர்க்கமாக வாதிடுவார்கள். இந்துதுவ அரசியலின் ஒரு பகுதியாகவே வேதவேதாந்தங்களை ராமாயணத்தை மகாபாரதத்தை ஆழ்வார்களை நாயன்மார்களை அவர்கள் அடையாளப்படுத்துவரகள். இந்துத்துவ அரசியலின் அத்தனை குறைகளையும் கறைகளையும் இந்து ஞானமரபு மேல், இந்துமதம் மேல் ஏற்றுவார்கள்

மறுபக்கம் இந்துத்துவர்களும் அதை தாங்களும் ஏற்றுச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதைப்போல இந்து ஞானமரபுக்கு அழிவைக்கொண்டுவரும் பிறிதொரு செயல் இல்லை.நான் முழுமூச்சாக எதிர்ப்பதே இந்த ஒற்றைப்படையாக்கத்தைத்தான். ஒருபோதும் சமகால அதிகார அரசியலுடன் இந்து மெய்யியலும் மதமும் இணைக்கப்படக்கூடாது என்றே நான் சொல்லிவருகிறேன்.

இதைப் புரிந்துகொள்ளாத எவரும் என்னைப்புரிந்துகொண்டவர்கள் அல்ல. அவர்கள் என் வாசகர்கள்கூட அல்ல. இந்த அடிபப்டைப் பிரிவினையை அழிக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் நான் ஏற்கமுடியாது. அதை தெளிவாக மறுத்தபின்னரே நான் முன்னரக முடியும். இல்லையேல் நான் சொல்லிவரும் அனைத்தையும் நானே அழித்தவன் ஆவேன். ஆகவே அதை மீண்டும் தெளிவாக முன்வைக்கவேண்டிய இடம் என இதை உணகிறேன். அதற்கான கட்டாயத்தை உருவாக்கியவை உங்கள் கடிதங்கள்.

மன்னிக்கவும், மீண்டும் என் மனவருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நாம் இனி இதைப்பற்றிப் பேசநேராது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள், கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது தேவதச்சன்