என் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம்.
சென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை உருவகம் செய்யலாம். முதல் காலகட்டம் ஓ.ஹென்றி, செகாவ் முதலிய முன்னோடிகளில் தொடங்கி அறுபதுகள் வரை வருகிறது. இக்காலகட்டத்துக் கதைகள் சிறுகதையை வாழ்க்கையை ‘ஒளிமிக்க, திருப்புமுனையான’ கணங்களைச் சொல்லும் ஒருவகை வடிவமாக எண்ணிக் கொண்டன. அவ்வகையில் ஏராளமான மகத்தான கதைகள் எழுதப்பட்டுள்ளன.
இவ்வடிவில் கதையின் உச்சம் ஒரு புள்ளியில் நிகழ்கிறது. அந்த உச்சமே கதையின் மையம். அதை ஒரு பின்புலத்தில் பொருத்தும் முகமாகவே கதை சூழல், கதைமாந்தர் மற்றும் காலச் சித்தரிப்பை அக்கதை அளிக்கிறது. கதையின் அனைத்துப் புள்ளிகளும் அம்மையம் நோக்கி செல்லும். அதன் ஒவ்வொரு துளியும் அம்மையத்தை வாசக மனத்தில் நிகழ்த்தும்பொருட்டே இயங்கும். மனிதன் என்ற இருப்பின் சாரம் வெளிப்படும் இடமாக அது அமையும்.
ஓர் உதாரணமாக ரேமாண்ட் கார்வரின் ‘த கதீட்ரல்’ என்ற கதையைப்பற்றி சொல்கிறேன். ஒர் எழுத்தாளன் வீட்டுக்கு அவனது மனைவின் தோழியும் கணவனும் வருகிறார்கள். அக்கணவன் பிறப்பிலேயே பார்வையிழந்த ஒருவர். மனைவிகள் வெளியே செல்ல எழுத்தாளனும் பார்வையிழந்தவரும் உரையாட நேர்கிறது. எழுத்தாளர் பேச்சுவாக்கில் கதீட்ரல் என்று சொல்ல ‘ கதீட்ரல் என்றால் என்ன?’என்று விழியிழந்தவர் கேட்கிறார்
எழுத்தாளர் அதை பலவகையில் விளக்க முயல்கிறார். அவை விழியிழந்தவர்க்குச் சொற்களாகவே எஞ்சுகின்றன. ஒரு கட்டத்தில் ஒரு பென்சிலை எடுத்து இருவரும் சேர்ந்து பிடித்துக் கொண்டு கதீட்ரலை வரைய முயல்கிறார்கள். அப்படி வரையும் ஒரு கணத்தில் ஒருவர் மனதில் உள்ள கதீட்ரல் லை இன்னொருவர் காணும் கணம் ஒன்று நிகழ்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு புதிய கதீட்ரலைக் காணும் கணம் அது.
மனைவிகள் திரும்புகிறார்கள். என்ன செய்தீர்கள் என்று கேட்கபடும்போது ”நாங்கள் ஒரு கதீட்ரலைக் கண்டோம்” என்கிறார்கள் இவர்கள்.
இரண்டாம் காலகட்டம் என இருத்தலியல் யுகத்தைச் சொல்லலாம். நாற்பதுகள் முதலே தொடங்கி எழுபதுகள் வரை இக்காலகட்டம் இருந்தது எனலாம். காலம் மற்றும் வெளியின் முன்னால் தனிமனிதனை நிறுத்தி அவன் இருப்பின் சாரமென்ன என ஆராய்ந்த இருத்தலியல் மனித இருப்பின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் கண்டடைந்தது. அந்த சூனியம் வெடித்து திறக்கும் ஒரு கணத்தை புனைவில் காட்ட முயன்றது. அதற்கான சிறந்த வடிவமாக அது கண்டடைந்தது சிறுகதையும் குறுநாவலுமே.
சுவர் [The Wall] என்ற சார்த்ரின் கதை ஓர் உதாரணம். புரட்சியாளன் சிறைப்பட்டு கடும் சித்திரவதையை அனுபவிக்கிறான். அவனிடம் தன் தலைவனைக் காட்டிக்கொடுக்கும்படிக் கோரப்படுகிறது. அவன் மறுக்கிறான். கடைசியாக ஒவ்வொருவரையாகக் கொல்கிறார்கள். இவன் முறை வரும்போது நீ உன் தலைவன் இருப்பிடத்தைச் சொன்னால் உயிர் கிடைக்கும் என்கிறார்கள்.
அக்கணத்தில் அவனுக்கு மரணத்தை சற்று ஒத்திப்போடத்தோன்றுகிறது. தலைவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன் என்கிறான். தலைவர் இருப்பது மலைகளில் பழங்குடிகள் நடுவே. வேண்டுமென்றே அவர் நகரின் சேரிப்பகுதியில் இருப்பதாகச் சொல்கிறான். சேரிபப்குதி வீடுகளை தேடிமுடிக்க விடிந்துவிடும். அதுவரை உயிர்பிழைக்கலாமே என்ற எண்ணம்
ஆனால் தலைவர் முந்தையநாள் இரவே அந்த சேரிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். மாட்டிக் கொள்கிறார். ”உன்னை என்னவோ என்று நினைத்தென். நீயும் துரோகிதானா?’என்று சொல்லி அவனை விடுவிக்கிறார் அடக்குமுறை காப்டன்.
புரட்சியாளன் அவனது அதுவரையிலான மொத்த வாழ்க்கைக்கும் பொருளில்லாமல் போய் ஒரு துரோகியாக வரலாற்றில் பதிவாகிறான். ”நான் அழுகை வரும்வரை சிரித்தேன்”என்று கதை முடிகிறது.
இவ்விரு கட்டங்களிலும் நாம் காணும் பொதுத்தன்மை மையக்கணம் ஒன்றை புனைவில் நிகழ்த்தும் இயல்பாகும். அம்மையக்கணத்தைச் சொல்ல ஆகச்சிறந்த வடிவம் சிறுகதையே. ஆகவே இவ்விரு கட்டங்களிலும் நாம் சாதனைச் சிறுகதைகளைக் காண்கிறோம்.
எழுபதுகளுக்குப் பின்னர் உருவான பின் நவீனத்துவச் சிந்தனைப் போக்குகள் பொதுவாக மையம் என்ற ஒன்றை உருவகிக்கும் மனநிலைக்கு எதிரானவையாக அமைந்தன. உச்சம் திருப்புமுனை ஆகியவற்றில் நம்பிக்கை இழக்கச் செய்தன. வாழ்க்கையை அறுபடாத ஒரு பெரும் உரையாடலாக காணும் போக்கு உருவாகியது. உண்மை என்று சொல்லபடும் ஒவ்வொன்றும் பற்பல அடுக்குகள் கொண்டது, வரலாற்றின் எண்ணற்ற ஊடுபாவுகளினால் பிணைக்கப்பட்டது என்ற போதம் உருவாகியது
அதைச்சொல்ல பலகுரல் தன்மை கொண்ட இலக்கியவடிவங்கள் தெவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பொருட்டு சிறுகதையை கையாள முயன்றபோது அவ்வடிவத்தில் பல வகையான சோதனைகள் நிகழ்ந்தன. கதையானது தான் எடுத்துக்கொண்டிருள்ள ஒரு சிறு வாழ்க்கைப் புள்ளியில் எப்படி வரலாற்றின் உள்ளுறைகளையும் கருத்தியலின் அடுக்குகளையும் சொல்ல முடியும்? அதன்பொருட்டு சிறுகதை கவிதையின் இடத்துக்குள் நுழைய தொடங்கியது. கதையை கவிதைபோல ஒவ்வொரு வரியிலும் குறிப்பமைதி மிக்கதாக ஆக்குவது எப்படி என்ற முயற்சிகள் உருவாயின
அதற்காக உருவகம், படிமம் போன்ற கவிதைக்குரிய உத்திகள் கதைக்குள் கொண்டுவரப்பட்டு நவீனச் சிறுகதை என்பது ஒருவகையான கவிதையே என்ற நிலை உருவாயிற்று. கவித்துவ உட்குறிப்புகளுக்கு உகந்த அழகியல் வடிவம் மிகைக் கற்பனையே. யதார்த்தவாதத்துக்கு தர்க்கத்தின் அழுத்தமான கட்டுபபடு உண்டு. ஆகவே இக்காலகட்டத்துக் கதைகளின் பொது இயல்பு மிகைக்கற்பனையே என்ற நிலை உருவாயிற்று. மாய யதார்த்தவாதம் போன்ற மிகைக் கற்பனை வடிவங்கள் ஐரோப்பாவிலும் இங்கும் புகழ்பெற்றன.
இந்த பதிவுகள் அரங்கில்தான் ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது ‘ என்னும் குரல் ஓங்கி ஒலித்தது. சென்ற பதிவுகள் அரங்குவரை இங்கே மிகைக் கற்பனையே இலக்கியத்தின் இன்றைய அழகியல் என்ற கருத்து பல குரல்களால் பேசப்பட்டது.
ஆனால் இன்று ஐரோப்பிய-அமெரிக்க எழுத்தின் பொதுப்போக்கைப் பார்க்கும்போது யதார்த்தவாதத்தின் கொடி மெலே எழுந்து மிகைக்கற்பனைகள் கரைந்து மூழ்கும் சித்திரத்தையே காண முடிகிறது. அறுபதுகளுக்கு முந்தைய யதார்த்தவாத படைப்பாளிகள் பலர் இப்போது புத்தார்வத்துடன் பேசப்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக அமெரிக்காவில் ரேமான்ட் கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்கள் மேல் மிக அதிகமான கவனம் விழுந்துள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்க நடுத்தரவர்க்க குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்த ஜான் ஓ ஹாரா போன்ற படைப்பாளிகள் கூட இன்று பெரிதும் பேசப்படுகிறார்கள்
இப்போது வரும் சிறுகதைகளை ஆர்வத்துடன் கவனித்துவருகிறேன். அவை நான் மேலே சொன்ன சிறுகதைகளைப்போல் உள்ளன. ஒரு உதாரணமாக நம் நாட்டுப் பின்புலம் உடைய ஜும்பா லஹிரியின் கதைகளைச் சொல்லலாம். அவை பலவகையிலும் ஜான் ஓ ஹாராவின் கதைகளைப் போன்றவை.
இது ஏன் நடக்கிறது? இக்கதைகளில் பெரும்பாலானவை இருமுனைகொண்ட பண்பாடுகளைப்பற்றியவை என்பதைக் காணலாம். ஜும்பா லஹிரியைப்போல இந்தைய-அமெரிக்க பண்பாடு. அல்லது ஜா ஜின் போல சீன-அமெரிக்கப் பண்பாடு. இன்றைய மேற்குக்கு கீழைநாடுகளை புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான அழகியலை அவர்கள் தேடுகிறார்கள்.
தமிழிலும் இதுவே நிகழ்கிறது. நாம் பேசிவந்த மிகைப்புனைவை உடைத்தது தலித் எழுத்து. அவர்களுக்கு தங்களின் ‘யதார்த்தத்தை’ சொல்லவேண்டிய வரலாற்றுத்தேவை இருந்தது. அதற்காக அவர்கள் தேர்வுசெய்தது யதார்த்தவாத- இயல்புவாத எழுத்தை. இன்றுவரை எழுதாத பரதவ சாதியிலிருந்து ஜோ டி குரூஸ் போன்ற ஒருவர் எழுதவரும்போது அவர் எழுதுவது இயல்புவாதத்தையே.
இன்று நம் முன் உள்ள வினா இதுதான். நாம் இனி சிறுகதையில் செய்யவேண்டியது என்ன? மிகைப்புனைவை கைவிடவேண்டுமென நான் சொல்லவில்லை. இந்தியச்சூழலில் அதன் எல்லைகள் கண்ணுக்கு தெரிகின்றன என்றுமட்டுமே சொல்கிறேன்.அது நம் வாழும் யதார்த்தத்தின் வன்முறையை சரிவர வெளிப்படுத்தவில்லை என்ற எண்ணம் இன்றைய எழுத்தாளர்களுக்கு உள்ளது. அந்நிலையில் அவர்கள் முதல்கட்ட எழுத்தை நோக்கிச் செல்லவேண்டுமா?
அது முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். இனிமேல் ஒற்றைப்புள்ளியில் உச்சம் கொள்ளும் ஒரு கதை முழுமையானதாக உணரப்படாது. இன்றைய கேள்வி பன்முகத்தன்மையையும் உரையாடல்தன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு யதார்த்தவாதச் சிறுகதை வடிவை அடைவது எப்படி என்பதாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது. அதைப்பற்றி நாம் விவாதிக்கலாம்
[2007 அக் 12,13 தேதிகளில் குற்றாலம் ‘பதிவுகள்’ கருத்தரங்கில் விவாத முன்னுரையாக பேசப்பட்டது]