பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்

அன்புள்ள ஜெயமோகன்

அரவிந்தன் கண்ணையன் என்பவர் பாரதி தமிழ்ச் சங்கம் குறித்து தெரிவித்துள்ள அவதூறை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கும் அந்த கண்டனத்தில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்.

அரவிந்தன் கண்ணையன் யார் என்பது குறித்தோ அவரது இந்திய வெறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு குறித்தோ நான் இங்கு சொல்லப் போவதில்லை. அரவிந்தன் கண்ணையன் ஒரு கிறிஸ்துவர் என்பதினாலும் இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் கடுமையான காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழ்பவர் என்பதினாலும் இந்த மடலை வெளியிட்டுள்ளார். அதை நீங்களும் வெளியிட்டு அதற்கு அங்கீகாரம் அளித்திருப்பது எங்களுக்கு கடும் வருத்தங்களை அளிக்கிறது.

பாரதி தமிழ்ச் சங்கம் தன்னை ஒரு இந்து தர்மத்தின் அடிப்படையில் இயங்கி வரும் அமைப்பாகவே அறிவித்துக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்து நம்பிக்கையின் அடிப்படையிலேயே அதன் கலாசாரங்களையும் இந்து தர்மம் சார்ந்த விழுமியங்களையும் ஆதரிக்கும் என்று மிகத் தெளிவாக அதன் கொள்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது.

அதன் அடிப்படையில் இந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் வெறுப்பு இல்லாத எவரையும் அவரது ஜாதி, மத, அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டி அவர்களது திறமைகளின் அடிப்படையில் மேடை அளிக்கும். அளித்து வருகிறது. அந்த அடிப்படையிலேயே சுப்ரமணியம் சுவாமி போன்ற வலதுசாரிகளில் இருந்து பி.ஏ.கிருஷ்ணன் போன்ற இடதுசாரிகள் வரையிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் அளித்து வருகிறது.

நாளைக்கே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு நெல்லைக்கண்ணன் கம்பனைப் பற்றி பேச வந்தாலும் மேடை அளிக்கவே செய்யும். இதில் அந்த அமைப்பிற்கு எந்தவிதமான ஒளிவு மறைவுகளும் கிடையாது. அதன் அடிப்படையிலேயே தமிழ் திருமுறைகள் குறித்து நல்ல புலமையுடனும் அருமையான தமிழிலும் பேசக் கூடிய ஒரு நல்ல பேச்சாளர் என்ற வகையில் அர்ஜுன் சம்பத் இங்கு வருகை தந்திருந்த பொழுது அவருக்கும் மேடை அளித்தோம். இந்தியா மீதும், இந்து மதம் மீதும் வெறுப்பையும் காழ்ப்பையும் உமிழாத எவரையும் சங்கத்திற்கு நேரமும் வசதியும் இருக்கும் பட்சத்தில் அவர்களை அழைக்கவே செய்யும்.

மிகுந்த வருத்தங்களுடன்

ராஜன்

*

பாரதி தமிழ்ச்சங்கம்தான் உங்களையும் பிஏகேவையும் கௌரவிக்க விழா எடுத்தது என்பதை மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே?

சங்கத்தின் பல உறுப்பினர்களோடு உங்களுக்கு நேரடியாக பழக்கம் இருக்கிறது – தீவிர ஹிந்துத்துவர்கள் உண்டுதான் ஆனால் சங்கத்தின் அஜெண்டா ஹிந்த்துவம் என்று அரவிந்தன் கண்ணையன் கூறுவதோடு உங்களுக்கு உடன்பாடுதானா? நீங்கள் குறைந்த பட்சம் ஒரு disclaimer-ஆவது போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்…

அன்புடன்
ஆர்வி

*

Jeyamohan,

There was a noisy ‘Indology’ scholar named Steve Farmer with whom I used to have correspondence as I have had with you. At one time, he published a letter of mine entirely out of context as a voice of a ‘Hindutva’.

You don’t seem to be any different from him by publishing a perverse letter today. The irony being that it cynically makes fun of things that you should not be unaware of! If I were that person who sent you that letter, I would be chuckling myself as you should be chuckling for whatever your intentions were in publishing it! That you could publish something that slanders an organization and a person who, as I can see, you know nothing of, speaks a lot of things to me.

You are more and more of a disappointment to me. There was a time when I thought … Hmm.

Obla Vishvesh

*

அன்புள்ள நண்பர்களுக்கு,

பாரதி தமிழ்ச்சங்கம் இந்திய -இந்துப் பண்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்பு என்பது சரி. ஆனால் இந்துத்துவ அரசியல் கொண்டது, அதை பிரச்சாரம் செய்வது என்பதை இதுவரை அறிவித்ததில்லை. அவ்வறிவிப்பு முன்னரே இருந்திருந்தால் இச்சிக்கலே இருந்திருக்காது. என்னளவில் இரண்டுக்கும் இடையே தீர்க்கமான வேறுபாடு உண்டு. சரி தவறுகளை நான் விவாதிக்க விரும்பவில்லை, ஆனால் அந்த வேறுபாடு நிலைநிறுத்தப்படுவது பண்பாட்டு – ஆன்மீக விவாதங்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்பதே என் எண்ணம். எனவே தனிப்பட்ட முறையில் நான் அரசியல் அமைப்புகள் எதிலும் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. ஆகவே எனக்கு ஏமாற்றப்பட்ட உணர்வு ஏற்படாது தடுத்திருக்கமுடியும்.

இந்து மதத்தின் மீதும் இந்தியாவின் மீதும் வெறுப்பு இல்லாத எவரையும் என்னும் வரியும் மிகுத்ந ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாகவே வரிசையறியாது பரிசில் என்பதைப்போல எழுத்தாளர்களை ஏமாற்றம் அடையச்செய்வது பிறிதில்லை. திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் இலக்கியவாதியாகவோ இலக்கியச் சொற்பொழிவாளராகவோ அறியப்பட்டவர், நிரூபித்துக்கொண்டவர் அல்ல. நான் பங்குபெற்ற நிகழ்ச்சிக்குப்பின் அவரது நிகழ்ச்சி என்பது என்னை இலக்கியவாதியாக அவருக்குச் சமானமாக வைப்பதே. அது என்னை வருத்தமடையச்செய்கிறது என்பதை அந்த வேறுபாட்டை உண்மையிலேயே நீங்கள் உணராதபட்சம் என்னால் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. எந்தக்காரணத்தால் நான் ஃபெட்னாவை தவிர்க்கிறேனோ அதே காரணம்தான் இதுவும்.

என் வாசகர்கள் நண்பர்கள் அனைவருமே ஆழமாக வருத்தம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் நான் சொல்லவிருப்பது ஒன்றையே. ஓர் அமைப்பின் செயல்பாடுகள் மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நாம் தனிப்பட்ட முறையில் நண்பர்களையே நம்புகிறோம். நம்மை அவர்கள் எழுத்தாளர், சிந்திப்பவர் என நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறோம். நம்மை அவர்கள் ’ஒருவராக’ எண்ணுகிறார்கள், அதற்குமேல் நம் மதிப்பையோ கருத்துக்களின் மதிப்பையோ சற்றும் பொருட்படுத்தவில்லை என்பதை அறிந்து ஆழ்ந்த வருத்தம் மட்டுமே அடைய முடியும்.

அரவிந்தன் கண்ணையன் அவரது தரப்பில் கொண்டிருக்கும் உணர்ச்சி அவருடையது. கேட்டிருக்கும் கேள்வி மிகமிக நேரடியானது. அந்தக்கேள்வியை தன்னை எதிர்நிலையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் கேட்கத்தான் செய்வார், ‘உங்கள் தரம் என்ன, அளவுகோல்கள் என்ன ?’ என்று. என்னிடம் ‘அந்த அளவுகோல்களை ஏற்றுத்தான் நீங்களும் சென்றீர்களா?’ என்றுதான் கேட்கிறார். பிறரும் கேட்கிறார்கள். அனைவருக்கும் என் பதில், வருந்துகிறேன், கைவிடப்பட்டதாக, ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்பதே.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து