பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 2
கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள் அலை தழுவ தனித்து நின்றிருந்த ஆழத்து மலை ஒன்றின் கூரிய முகடு அது. அதனருகே இருந்த சிறிய கடற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கற்தூண்கள் நாட்டி கற்பாளங்கள் ஏற்றி கட்டப்பட்டிருந்த தேர்ப்பாதை கரையுடன் இணைந்து சுழன்று மேலேறி வந்து அரண்மனையின் பெருமுற்றத்தின் தென்மேற்கு எல்லையை அடைந்தது. அந்த ஒரு பாதையன்றி கடல் மாளிகைக்குச் செல்ல வேறு வழி ஏதும் இருக்கவில்லை. அரசருக்குரிய தனிப்பட்ட களியில்லம் அது என்பதால் பிற எவரும் அங்கு செல்ல ஒப்புதல் இல்லை.
சாத்யகி பல்லாயிரம் முறை முற்றத்தின் விளிம்பில் நின்று கடலுக்குள் வீசப்பட்ட தூண்டிலின் தக்கை என தெரியும் கடல் மாளிகையை பார்த்ததுண்டு என்றாலும் அங்கு செல்ல நேர்ந்ததில்லை. ஒரு முறையேனும் அங்கு செல்ல வாய்ப்புண்டு என்பதை எண்ணிப்பார்த்ததும் இல்லை. அமைச்சன் வழிகாட்ட சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் கடல் மாளிகைக்கான சுழற்பாதையின் தொடக்கத்தை சென்றடைந்தனர். அங்கிருந்த காவல் கோட்டத்துத் தலைவன் அமைச்சனிடம் “கடல் மாளிகைக்கான ஒப்புதல் ஓலையில் பொறிக்கப்பட்டு தங்களிடம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும் அமைச்சரே” என்றான். அமைச்சன் “என்னிடம் வாய்மொழி ஆணையே இடப்பட்டது. சற்று பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லி அலுவல் மாளிகை நோக்கி விரைந்தான்.
திருஷ்டத்யும்னன் புரவியில் அமர்ந்தபடி கீழே தெரிந்த கடல் மாளிகையையே நோக்கிக் கொண்டிருந்தான். மாபெரும் ஆடி போல் விண்ணொளியை எதிரொளித்த கடல் அவன் கண்களை சுருங்க வைத்திருந்தது. சாத்யகி மெல்லிய குமட்டல் ஒன்று எழ உடலை குலுக்கிக் கொண்டான். அவன் கண்களின் இமைகள் ஈரமான கடற்பஞ்சு போலாகி எடை கொண்டு தடித்து கீழிறங்கின. ஒவ்வொருமுறையும் அவற்றை உந்தி மேலே தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கண்களுக்குள் வெங்குருதி படர்ந்தது போல தொண்டை வறண்டு இருக்க நாவில் கொழுத்த எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. “கடலுக்குள் இத்தனை தொலைவில் ஒரு மாளிகை என்பது கட்டத்தொடங்குவதற்கு முன் நிகழவே முடியாத ஒரு கற்பனையாகவே இருந்திருக்க வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “என்ன?” என்றான் சாத்யகி. “இந்த மாளிகை! இங்கிருந்து நோக்குகையிலேயே கரைக்கும் அதற்குமான தொலைவு வியப்புறச்செய்கிறது” என்றான்.
“ஆம்” என்றான் சாத்யகி. “சாகரசிருங்கம் என்றும் கிருஷ்ணகிரி என்றும் அந்தப்பாறையை சொல்கிறார்கள். அதன் நான்கு பக்கமும் எழுநூறு கோல் ஆழத்திற்கு மேல் உள்ளது. உண்மையில் அது ஒரு பெரும் மலைமுடி. அங்கொரு மாளிகையை கட்டவேண்டும் என்பது இளைய யாதவரின் இலக்கு. ஆனால் அதைச் சுற்றி எப்போதும் அலைக் கொந்தளிப்பு இருப்பதால் அது இயல்வதல்ல என்று கலிங்கச் சிற்பிகள் சொல்லிவிட்டார்கள். பின்னர் கடற்பாறைகளில் கட்டும் திறன்மிக்க தென்னகத்துச் சிற்பிகளை இங்கு வரவழைத்தார். அவர்கள் அருகிலிருந்த பிற பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அச்சாலையை உருவாக்கினர். அடியில் உள்ள மூழ்கிய கடல்பாறைகளை முத்துக் குளிப்பவர்களை அனுப்பி கண்டுபிடித்து அவற்றின் மேலிருந்தே தூண்களை ஊன்றி எழுப்பி மேலே கொண்டு வந்து அந்த தேர்ப்பாதை அமைக்கப்பட்டது. பன்னிருமுறை கட்டப்படுகையிலேயே அது இடிந்து விழுந்தது என்கிறார்கள். தென்னகச் சிற்பியாகிய சாத்தன் என்பவன் கடலை ஆளும் சாகரை என்ற தேவதைக்கு தன் கழுத்தை தானே அறுத்து குருதி பலி கொடுத்தபின்னரே அக்கட்டுமானங்கள் உறுதியாகி நிலைத்தன என்பது துவாரகையின் கதைகளில் ஒன்று.”
வேறெங்கோ இருந்து வேறெவரிடமோ அதை சொல்லிக் கொண்டிருக்கையில் கனவிலும் அதை கண்டு கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஒன்றை சாத்யகி அடைந்தான். “நாம் எங்கு போகிறோம்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். திருஷ்டத்யும்னன் “கள் உங்களில் மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது யாதவரே. அங்கிருந்து கிளம்புகையில் ஒருவராக இருந்தீர். இங்கு மூவராக இருக்கிறீர் என்று நினைக்கிறேன். அங்கு மாளிகைக்குச் செல்வதற்குள் ஒரு சிறிய படையாகவே மாறிவிடுவீர்” என்றான். “யார்?” என்று கேட்ட சாத்யகி மிக மெல்ல அச்சொற்களை புரிந்துகொண்டு தலையைத்தூக்கி உரக்க நகைத்தான். காவல் கோட்டத்திலிருந்த இரு வீரர்கள் அவனை வியப்புடன் எட்டிப்பார்த்தனர்.
கோட்டத்தலைவன் “இளவரசே, கள்ளருந்திய நிலையில் அரசரின் கடல் மாளிகைக்கு தாங்கள் செல்வது…” என தொடங்கியதும் சாத்யகி “மூடா, நான்கு பக்கமும் அலை நுரைக்கும் மாளிகையில் அமர்ந்து அவர் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கப்போகிறார்? யவன மது அருந்தி அழகிய பெண்கள் சூழ களித்திருப்பார். நானே நேரில்போய் அவர் முகத்தைப்பார்த்து சொல்கிறேன்… என்ன சொல்வேன்? என்ன? டேய் நீலா எனக்கும் ஒரு கோப்பையை இப்படிக் கொடு என்று சொல்வேன். ஆமாம்! அவர்களில் ஒரு கன்னியை…” சாத்யகி நிறுத்தி தலையை ஆட்டி “இரண்டு கன்னியரை நானும் தூக்கிச் செல்வேன்” என்றான். வீரர்களின் முகங்களில் தெரிந்த திகைப்பைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி திருஷ்டத்யும்னன் திரும்பிக் கொண்டான்.
புரவியில் மாளிகையில் இருந்து ஸ்ரீதமரும் அமைச்சனும் விரைந்து வரும் ஓசை கேட்டது. “ஸ்ரீதமரே வருகிறார்” என்றான் சாத்யகி. “அப்படியென்றால் பெரும்பாலும் என்னை கடல் மாளிகையில் கழுவில் ஏற்ற வாய்ப்புள்ளது. நான்கு பக்கமும் கடல் சூழ கழுவில் அமர்ந்திருப்பது சிறந்ததே. அங்கு எனக்கு கழுவன் பீடம் அமைக்கப்படுமென்றால் காலமெல்லாம் கடலோசையைக் கேட்டு மகிழ்ந்திருப்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “கடலை மீறி வந்து எவரும் பலி கொடுக்க மாட்டார்களே, பசித்திருக்க வேண்டுமே!” என்றான். “நான் கடல் மீன்களை தின்பேன். அங்கு மிகச்சிறந்த நண்டுகள் கிடைக்கும்” என்றான் சாத்யகி. மீண்டும் ஏப்பம் விட்டு “எனது கள்ளில் நுரைபடிந்து கொண்டிருக்கிறது. கடல் மாளிகைக்குச் சென்றதும் மீண்டும் கள்ளருந்தாவிட்டால் என்னால் சிறப்பாக பேச முடியாது” என்றான்.
அருகே வந்து புரவியிலிருந்து இறங்கிய ஸ்ரீதமர் காவலனிடம் “இந்த ஓலைச் சாத்துடன் அவர்கள் இருவரும் உள்ளே செல்லட்டும்” என ஒப்புதல் ஓலையை அளித்தார். அவன் அதை இருமுறை வாசித்துவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒலை அடுக்குகளில் கோத்து வைத்தான். ஸ்ரீதமர் “தாங்கள் செல்லலாம் இளவரசே” என்றார். சாத்யகி “அமைச்சரே, நான் மது அருந்தியிருக்கிறேன். அங்கு சென்று அந்த இளைய மூடனிடம் நான் மது அருந்தியிருக்கிறேன், ஆகவே மது அருந்துபவர்களுக்கான சிறப்புக் கழுவிலேயே என்னை ஏற்ற வேண்டும் என்று கேட்கப்போகிறேன்” என்றான். ஸ்ரீதமர் கண்களில் எதுவும் தெரியவில்லை. இளம் அமைச்சன் பதற்றத்துடன் அவன் முகத்தையும் திருஷ்டத்யும்னன் முகத்தையும் நோக்கினான். திருஷ்டத்யும்னன் “காற்றில் பறந்து சென்றுவிடுவார் என்று அஞ்சுகிறார். உரியமுறையில் கழுமரம் அமைக்கப்பட்டால் நிலையாக பதிந்து இருக்கலாமே என்று விழைகிறார்” என்றான்.
ஸ்ரீதமர் புன்னகையுடன் “பாஞ்சாலரே, இப்பெரு நகரமே ஒரு நீலப்பெருங்கழுவில் குத்தி அமர வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். செல்க” என்றார். சாத்யகி “அஹ்ஹஹ்ஹா! இது கவிதை! கண்டிப்பாக இதை ஏதோ கள்ளறிந்த சூதன்தான் பாடியிருக்கவேண்டும். இதற்காக அந்த சூதனுக்கு…” என்று சொல்லி தன் இடையை தடவியபின் “என்னிடம் நாணயங்கள் இல்லை. நான் அரண்மனைக்குச் சென்று எடுத்து வருகிறேன்” என்று புரவியைத் திருப்பினான். “அது பிறகு. நாம் இப்போது கடல் மாளிகைக்கு செல்வோம். வருக யாதவரே!” என்றபடி திருஷ்டத்யும்னன் ஸ்ரீதமருக்கு தலைவணங்கி எல்லைக் காவல் மாடத்தைக் கடந்து கடற்பாறைகளை வெட்டி தளமிடப்பட்டிருந்த குறுகிய தேர்ப்பாதைச் சரிவில் புரவியில் இறங்கினான். சாத்யகி “சரிந்து செல்கிறது… பாதாள இருளுக்கான பாதை” என்று ஏப்பம் விட்டபடி தொடர்ந்தான்.
சரிவாகையால் புரவிகள் விரைந்தோட விழைந்து பொறுமை இழந்து தலையை அசைத்து கழுத்தை வளைத்தன. “நாம் பாய்ந்திறங்கிச் சென்றாலென்ன? பறக்கும் கடற்காக்கையின் இறகு போல சுழன்று இறங்க முடியுமென்று தோன்றுகிறது” என்றான் சாத்யகி. “இப்போதிருக்கும் நிலையில் தங்கள் புரவி மட்டுமே கீழே செல்லும். தாங்கள் இங்கு விழுந்து கிடப்பீர்” என்றான் திருஷ்டத்யும்னன். “யார் சொன்னது? நான் இந்தப்புரவியை எத்தனை நூறு முறை ஓட்டியிருக்கிறேன்! இந்தப் புரவியை எனக்குத் தெரியாது. இவளுக்கு என்னைத்தெரியும்” என்றான் சாத்யகி. “ஆகவேதான் சொல்கிறேன், அது உதிர்த்துவிட்டுச் சென்றுவிடும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தான்.
சீரான விரைவில் இரு புரவிகளும் சுழல் பாதையில் இறங்கிச் சென்றன. பாதையின் இருபக்கமும் பல்லாயிரக்கணக்கான சிறிய கல்பாத்திகளில் பாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்மணல் கொட்டப்பட்டு அதில் மலர்ச்செடிகள் நடப்பட்டிருந்தன. மேலிருந்து சிறிய ஓடைகள் வழியாக வந்த நீர் அந்த மண்ணில் கசிந்து பரவி செடிகளை பசுமை கொள்ளச்செய்திருந்தது. செந்நிற மலர்களைச் சுட்டி “குருதி போலிருக்கிறது” என்றான் சாத்யகி. “அந்த வெள்ளை மலர்களெல்லாம் குருதியில் மிதக்கும் கொழுப்புகள்.” ஒரு கணத்தில் குன்றின் சரிவு முழுக்க நிறைந்திருந்த பல்லாயிரம் பாறைப் பாத்திகளில் மலர்ந்த மலர்கள் அனைத்தும் குருதியலைகளாக மாறிய விந்தையை திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான்.
அதன் நடுவே எழுந்த நீல மலர்களைச்சுட்டி “அது அவன்தான். சுற்றிலும் குருதி அலையடிக்கையில் அங்கு நின்று குழலிசைத்துக் கொண்டிருக்கிறான்” என்ற சாத்யகி “அவனை…” என்று ஏதோ சொல்ல வந்து புரவியை இழுத்து நிறுத்தினான். பிறகு தலை வெட்டுப்பட்டது போல் வெடவெடவென்று ஆட, புரவி மேலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு சற்று திரும்பி “அவன் குழலிசைக்கவில்லை. வேதாந்த வகுப்பெடுக்கிறான்…” என்று சொன்னபின் உரக்க நகைத்து “குருதி படிந்த வேதாந்தம். கொலை வாளின் தத்துவம் அது” என்றான். “நீதிக்காக என்றால் கொலை வாளைவிட தூயது பிறிது ஏது? தன்னலம் அற்றவன் கையில் இருக்கும் கொலை வாளைவிட தெய்வங்களுக்கு உகந்தது வேறில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிவந்த கண்களால் நோக்கி “வெறும் சொற்கள். பொருளற்ற சொற்கள். இறப்பு, காமம், கண்ணீர்… இவை தவிர பிற அனைத்தும் வெறும் சொற்கள்” என்றான். “ஆம், மேலே எதைச் சொல்லும்போதும் வேதாந்தி இதையும் அறிந்திருப்பான்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி உடல் தளர்ந்து “ஆம். வேதாந்தம் என்றால் ஒவ்வொரு சொல்லுக்கும் தன்னை மறுத்தபடியே உரையாடும் ஒரு தரப்பு. எனவே அதனுடன் ஒருவரும் உரையாட முடிவதில்லை. வேதாந்தம் இம்மானுடம் அடைந்த ஞானத்தின் உச்சம். அதற்குப் பின்பு ஒரு ஞானமில்லை என்பதாலேயே அது ஞானமின்மையில் தன் பாதியை வைத்திருக்கிறது. எவனொருவன் வேதாந்தத்தை கற்கிறானோ அவன் வெறும் சொல்லளையும் மூடனாக ஆகிவிடுகிறான். வேதாந்தத்தை வைத்து விளையாடுபவனோ இப்புவியாளும் யோகியாகிறான். யோகத்தைக் கடந்து அலையலையென முடிவின்மை கொந்தளித்து ஓலமிடுகையில் தனித்து அமர்ந்து தன்னுள் நோக்கி தவமிருக்கிறான்” என்றான்.
சாத்யகி மீண்டும் சற்று குமட்டியபிறகு “இப்போது நான் என்ன சொன்னேன்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். சிரித்துக்கொண்டு “உயர் வேதாந்தம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அது சிறந்த கள் பாஞ்சாலரே. உண்மையிலேயே வேதாந்திகளுக்குரியது. அங்கிருந்த அவனை…” என்றபின் “அவன் பெயரென்ன?” என்றான். “குசலன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவன் உண்மையான வேதாந்தி. அவனை நான் வேதாந்தக் களிமகன் என்று அழைக்கிறேன்” என்றான். “நல்ல சொல். வேதாந்தக் களிமகன்! அப்படியென்றால் அதோ கடற்பாறைக்கு மேல் அமர்ந்திருக்கும் அவனை வேதாந்தப் பெருங்களிமகன் என்று அழைக்கலாமோ?” என்றான்.
“வேதாந்தம் இதோ துவாரகையின் இந்தக் கரை வரைக்கும்தான். கடலுக்குள் என்ன வேதாந்தம்? வெறும் களிகூர்ந்து அமர்ந்திருக்கிறான். பித்தன். பெரும்பேயன். அல்லது யோகி.” சாத்யகி தன் கையைத் தூக்கி “களியோகி!” என்றான். திருஷ்டத்யும்னன் அந்தச் சொல்லை ஓர் அலைவந்து உடலை அறைந்து தழுவிச் செல்வது போல் உணர்ந்தான். ஏதோ ஓரிடத்தில் இயல்பாகவே உரையாடல் நின்றுவிட உள்ளத்தின் வெறும் தாளமென ஒலித்த புரவிக் குளம்பொலிகள் தொடர இருவரும் இறங்கிச் சென்றனர்.
கடலை அணுகுந்தோறும் அலைப் பேரோசை வந்து அவர்களை சூழ்ந்துகொண்டது. சாத்யகி “கடலின் இப்பக்கம் அலைகள் மிகுதி. பாறைகள் இருப்பதனால் ஓசையும் நுரையும் எப்போதும் இருக்கும்” என்றான். முகத்தில் வீசப்பட்ட நீர்த்துமிகளால் அவன் சித்தம் கழுவப்பட்டு தெளிவடைந்துகொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் அவன் பேச்சை வாயசைவாக மட்டுமே அறிந்து “என்ன?” என்றான். “அலைகள்! ஓசை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். “ஓசை!” என்று மீண்டும் சொன்னான். திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். சாத்யகி ஒன்றுமில்லை என்று கையசைத்தான்.
கடலின் ஓசை பெருகி வந்து செவிகளை நிறைத்து சித்தத்தை மூடியது. காலடியில் கடல் என்பதன் கூச்சம் உடலெங்குமிருந்தது. கடலின் ஒற்றைச்சொல்லையே தன் உள்ளமென உணர்ந்தான். அதுவரை தன் அகம் பொருளற்ற சொற்களால் நிறைந்திருந்ததை அப்போது அறிந்தான். கலைந்த தேனீக்கூடு போன்ற சித்தம் அப்போது ஒளிரும் விழிகளுடன் கரிய சிறகுகளுடன் ஒற்றைப் பெரும்பறவை அமர்ந்திருக்கும் கடற்பாறை முகடாக இருந்தது. கடல் முகப்பில் அமைந்திருந்த காவல்மாடத்தின் தலைவனுக்கு கொடி அசைவு மூலம் செய்தி வந்திருந்தது. அவன் இறங்கி வந்து இருவரையும் தலைதாழ்த்தி வணங்கி அங்கிருந்த சாவடியைக் கடந்து போகும்படி கையசைத்தான். “இவன் உள்ளத்தில் சொல்லென்பதே இருக்காது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “என்ன?” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் இல்லையென்று தலையசைத்தான்.
துவாரகையின் அப்பகுதி முழுக்க யானைக் கூட்டங்களென, எருமை மந்தைகளென, பன்றி நிரைகளென கரிய பாறைகள் பெருகிக்கிடந்தன. நீலமுகில் வளைந்து ஒளிகொண்டு பெருகி வருவதைப்போல அணுகிய அலைகள் முதல் பெரும்பாறையில் முட்டியதுமே இரண்டாகப் பிரிந்தன. பின்பு பாறைக்குவை மேல் மோதி வெண்ணுரையாக மாறின. கரிய சீப்பு ஒன்று வெண்கூந்தலை சீவிச் செல்வது போலிருந்தது. வெண்சாமரம் என நுரைப்பெருக்கு வந்து பல்லாயிரம் பாறைகளை தழுவியது. பாலென நுரைத்து வழிந்தது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை நீராடும் அருள் கொண்ட பாறைகள். முடிவின்மையின் அறைபட்டு அறைபட்டு கரைந்தழியும் பேருருக் கொண்டவை.
“நீலம் நக்கியுண்ணும் இன்னமுது இவை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அச்சொற்களைக் கேட்காமல் திரும்பி அவனிடம் எதையோ சொன்னான். “என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி ஒரு கணம் என கையசைத்துவிட்டு அவனைச் சூழ்ந்து அறைந்து நுரைக்கொந்தளிப்பாக மாறி பாறைக் குடைவுகளையும் மடம்புகளையும் இடுக்குகளையும் நிறைத்து பொங்கி எழுந்து வெண்பளிங்குக் கற்களெனச் சிதறி நுரையென வழிந்து பின்பு பல்லாயிரம் வழிவுகளாக மாறித் திரண்டு எதிர் அலையென்றாகி பின் வாங்கிச் சென்ற கடலை நோக்கி காத்து நின்றான். அது சென்றபின் திரும்பி “நீலத்தின் முன் தருக்கி நின்றிருக்க இச்சிறு பாறைகளால் முடிகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான்.
அலைகள் பின்வாங்கிய வெளியில் ஒவ்வொரு கடல்பாறையும் காலடியில் கடல் கீழிறங்க ஒருகணம் பேருருவம் கொண்டன. வழிந்து சென்ற நுரையுடன் அடுத்த அலை வளைந்தெழுந்து சுருண்டு கரை நோக்கி வந்தது. அதன் பல்லாயிரம் நாக நாநுனிகள் வெள்ளியாலானவையாக இருந்தன. மீண்டும் அறைதல். மீண்டுமொரு பெரும் குமுறல். மீண்டுமொரு பால்பெருக்கு. மீண்டுமொரு வெண் சரிவு. “முடிவிலாது…” என்றான் சாத்யகி. “ஒன்று முடிவிலாது நிகழ்வதன் பொருளின்மைக்கு நிகரென இப்புவியில் வேறொன்றும் இல்லை. அதன் முன் மானுடம் உருவாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு சொல்லும் வெறும் ஒலியாகவே மாறிவிடுகிறது.”
அவர்களைச் சூழ்ந்திருந்த அனைத்தும் கடற்துமிகள் பட்டு உருகி வழிந்து கொண்டிருந்தன. பாறைப்பரப்புகள் அனைத்தும் குளிர்ந்து கறுத்து கனிந்து மறுகணம் நுரையென்றாகி விடும் என்பதைப்போல உளமயக்கு காட்டின. சில கணங்களுக்குள்ளே அவர்கள் உடலில் இருந்தும் உப்பு நீர் வழியத்தொடங்கியது. புரவிகள் கடல்துளிகள் சொட்டிய பிடரியைச் சிலிர்த்தபடி தலையை அசைத்து தும்மலோசை இட்டபடி அலைகளை வகுந்து சென்ற கற்பாதையில் நடந்தன. இருபக்கமிருந்தும் அலைகள் எழுந்து ஒரேசமயம் பாலத்தை அறைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். மேலே வானம் எந்த அளவுக்கு ஒளி கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு நீலம் செறிவு கொண்டது. வான் இருண்டிருக்கையில் கடல் சாம்பல்வெளியாகிறது. நீலமென்பது ஆழம் தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயம்.
எழும் பொருளற்ற எண்ணம் ஒவ்வொன்றையும் ஆம் ஆம் என ஆமோதித்தன அலைகள். அக்கணம் உடலெங்கும் எழுந்து ஒவ்வொரு விரல்நுனியையும் துடிக்க வைத்த விழைவென்பது புரவியிலிருந்து பாய்ந்து அவ்வலைகளால் அள்ளப்பட்டு பாறைகளில் அறைந்து சிதறடிக்கப்படவேண்டுமென்பதே. தலை உடைந்து மூளைச்சேறு வெண்ணைநுரை போல் கரும்பாறையில் வழிய வேண்டும். நெஞ்சுடைந்த குருதி அச்செம்மலர்கள் போல் சிதறி நின்றிருக்க வேண்டும். பசி கொண்ட நீல விலங்கு வெண்ணிற நா நீட்டி உண்டு உண்டு இப்புவியை ஒரு நாள் தன்னுள் எடுத்துக் கொள்ளப்போகும் பேருயிர். இச்சொற்கள் வெறும் கடற்பாறைகள். முடிவின்மையை அஞ்சி அதன் முன் நான் கொண்டு நிறுத்தும் உருவற்ற மொத்தைகள். பொருளற்ற சிதறல்கள். பேரலை வந்து பாறையின் பாதத்தை அறைந்தது. அதன் துமித்தெறிப்பு வளைந்து முல்லை மலர்க்கூடையை விசிறியது போல அவன் முன் ஒளிர்ந்து விழுந்தது. மறுபக்கமிருந்து பிறிதொரு அலை வந்து அறைந்து பளிங்கு மணிகளென பாறைமேல் சிதறி விழுந்தது.
கடல் மாளிகை தொலைவிலிருந்து பார்த்தபோது களிச்செப்பு போல் சிறிதாக இருந்தது. அணுகும் தோறும் அதன் பெரும் தோற்றம் தெளிந்து வந்தது. கடற்பாறையில் வெட்டி எடுக்கப்பட்ட ஆயிரத்து எட்டு தூண்களால் ஆன வட்ட வடிவ கல்மாளிகை அது. தூண்களுக்கு மேல் எழுந்த மேல் மாடத்தில் சாளரங்கள் கொண்ட வட்டமான உப்பரிகை அமைந்திருந்தது. அதற்கு மேல் கூம்புவடிவக் கோபுரத்தில் காவல் மாடங்கள். அதன் மேல் எழுந்த கல்குவடுக்கு நடுவே நாட்டப்பட்ட கற்தூணின் உச்சியில் இருபக்கமும் சங்கும் சக்கரமும் துலங்க நடுவே துவாரகையின் கருடன் தலை பொறிக்கப்பட்டிருந்தது. கடல்மாளிகையில் முதல்வாயில் அருகே இருபது வீரர்கள் படைக்கலன்களுடன் காவல் நின்றனர். அதன் வாயிலுக்கு மேலெழுந்த காவல் மாடத்தில் பன்னிரு வில்லவர் அமர்ந்திருந்தனர்.
தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் துமி வழிய ஒவ்வொரு கணமும் நடுங்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் பாதையின் இறுதி வளைவைக் கடந்ததுமே அது முற்றிலும் உலர்ந்து இருப்பதை அறிந்தான். அங்கு சென்றதுமே கடல் வெற்றோசை மட்டுமாக மாறி பின்னகர்ந்தது. காற்றில் எழுந்த பனிப்பிசிறு போன்ற துமி அல்லாமல் அங்கு நீரலைகளோ நுரைப்பிசிறுகளோ எட்டவில்லை. மேலும் சற்று முன்னால் சென்றபோது கடலோசையே சற்று அமிழ்ந்துவிட்டது போல் தோன்றியது. கற்பாளங்களின் மேல் படிந்த புரவிகளின் குளம்போசையை கேட்க முடிந்தது. அங்கிருந்த காவலன் அவர்களை அணுகி தலைவணங்கினான். அவர்களின் முத்திரைக் கணையாழிகளை வாங்கி மூவர் சீர்நோக்கினர். காவலன் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தான்.
குதிரையிலேயே அவ்வாயிலைக் கடந்து நிரைவகுத்த பெரும் தூண்களாலான மாளிகையின் கல்முற்றத்தில் சென்று நின்றனர். சாத்யகி புரவியில் அமர்ந்தபடியே திரும்பி துவாரகையை நோக்கி “சிரிக்கிறது அந்நகர்” என்றான். அச்சொல்லுடன் இணைந்து நோக்கியபோது அலை வளைவு ஒரு பெரும் பல்வரிசையாகத் தெரிய திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தான். சாத்யகி தலை தூக்கி இணைமலை மீது எழுந்த பெருவாயிலை பார்த்தான். “துவாரகையை வானில் தொங்க விட்டிருக்கும் ஒரு கொக்கி போல் தெரிகிறது. அந்தக் கொக்கி வலுவிழக்கையில் இந்நகரம் மண்ணில் விழும்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “மண்ணில் விழாது, நீரில் விழுந்து அமிழ்ந்து மறையும்” என்றான். அந்தப் பெருவாயிலின் தோற்றம் சற்றுநேரம் இருவரையும் சித்தம் அழியச்செய்தது. “வானுக்கொரு வாயில்” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
மேலும் சில கணங்கள். ஒப்புமைகளாக, உருவகங்களாக, அணிச்சொற்களாக, நினைவுகளாக அதன்மேல் பெய்த அனைத்து எண்ணங்களும் வடிய எதுவுமின்றி வெறுமொரு வளைவென எழுந்து மலைமேல் நின்றது பெருவாயில். மண்டபத்தின் உள்ளிருந்து வந்த வீரன் தலைவணங்கி “அரசர் மேலே தெற்கு உப்பரிகையில் தங்களுக்காக காத்திருக்கிறார் இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி திருஷ்டத்யும்னன் இறங்கினான். கால்கள் நெடுந்தூரப்புரவிப்பயணம் செய்து மரத்துவிட்டவை போலிருந்தன. சாத்யகி இறங்கி சில கணங்கள் தள்ளாடிவிட்டு புரவியை பற்றிக் கொண்டான். இருவரும் கால்களை உதறினர். சாத்யகி கடிவாளத்தை வீரன் கையில் கொடுத்துவிட்டு இடையில் கையூன்றி முதுகை நிமிர்த்திக் கொண்டான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
நடக்கும்போது “பாஞ்சலாரே, இத்தனை உள நிறைவுடன் கழுபீடத்திற்குச் சென்ற பிறிதொருவன் துவாரகையில் இருந்திருக்க மாட்டான்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் அந்த வேதாந்த மதுவை இன்னும் அருந்தியிருந்தால் நாமே சென்று ஏறி அமர்ந்திருப்போம்” என்றான். சாத்யகி மாளிகையின் தூண்கள் சூழ்ந்த இடைநாழி எதிரொலிக்க உரக்க நகைத்து “பாஞ்சாலரே, என்னுடன் அந்த மதுக்கடைக் களிமகனையும் அருகே கழுவிலமரவைக்க விழைகிறேன். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் கள்வேதாந்தத்தைக் கேட்டு களித்திருக்க முடியுமல்லவா?” என்றான். வட்டமாகச் சென்ற மாளிகையின் படிகளில் ஏறியபடி “குருதி வேதாந்தம் என்று அவன் சொன்னானே, அதை இவரிடம் கேட்டுக் கொள்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
சாத்யகி “அதை அவன் சொன்னானா இல்லை நான் சொன்னேனா?” என்றான். “யாரோ சொன்னார்கள் யாரோ கேட்டார்கள். இப்போது என்ன?” என்றபடி இடைநாழியில் இருவரும் நடந்தனர். அவர்களின் வலப்பக்கம் ஆற்றங்கரையின் மாபெரும் அடிமரங்களென எழுந்து மேலே சென்று எடைமிக்க கற்களாலான உத்தரங்களை சுமந்து நின்றன உருண்ட கற்தூண்கள். “சில சமயம் தூண்களை எண்ணி நான் இரக்கம் கொள்வதுண்டு” என்றான் சாத்யகி. “வாழ்நாள் முழுக்க எதையாவது சுமந்திருப்பது என்றால் எவ்வளவு கடினம்? அந்த எடையை விட கடினம் அப்பொருளின்மை.” உரக்க நகைத்தபடி “என் மீது நான் சுமந்திருந்த எடைகளை தூக்கி வீசிவிட்டேன். கல் பறந்து போய் காற்றை உணரும் சருகு போல் நிற்கிறேன். அது என்னை அள்ளிச் சென்று முள் மேல் அமர வைக்குமென்றால் அங்கிருந்து எஞ்சிய காலமெல்லாம் நடுங்குவேன்” என்றான்.
திருஷ்டத்யும்னன் “துவாரகையில் நீர் நிறைய சூதர்க் களியாட்டுகளை பார்த்திருக்கிறீர். நன்கு சொல்லெடுக்கக் கற்றுள்ளீர்” என்றான். “என்னால் உயர்ந்த கவிதையை சொல்லிவிட முடியும். ஆனால் அரசுசூழ் மன்று ஒன்றில் ஊமையென நின்றிருப்பேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இப்போது நாம் செல்வது?” என்றான். “இது கவிமன்றா? அரசுமன்றா?” சாத்யகி “துவாரகையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. சுண்டிவிட்டு அவற்றை முடிவு செய்பவர் இவர்” என்றான். “அரசுமன்று என்றால் எனக்கு தெற்கு நோக்கிய கழுபீடம் கொடுங்கள் என்பேன். முன்னோர்களை நோக்கி முறைத்தபடி அமர்ந்திருக்க விழைகிறேன்.”
சாத்யகியை நோக்கி சிரித்தபடி திருஷ்டத்யும்னன் “கவிமன்று என்றால் இங்கொரு அலைவேதாந்தம் எழும். அது கடல்கீதை என்று அழைக்கப்படும். அதை சொல்பவன் மது அருந்தி தன் தெய்வத்தைத் தூக்கிப் பந்தாடும் ஒரு களிமகன். கேட்பவனோ தன் அடியாரின் கையிலொரு பந்தெனக் களிக்கும் தெய்வம்! நன்று” என்றான்.