ஜெ,
தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரது கவிதைகளை அவ்வப்போது வாசித்தாலும் முழுமையாக வாசித்ததில்லை. அவரைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரமும் என் மனதில் இல்லை. வாசித்தவரை கவிதைகள் நினைவில் நிற்கவில்லை என்றே சொல்லவேண்டும். அவரது கவிதைகளைப்புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டியாக நீங்கள் எழுதும் நூல் அமையும் என்று நினைக்கிறேன்.
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்
கவிதைக்கு பொழிப்புரை போடுவது வழக்கமில்லை. கவிதையைப்பற்றி எழுதுவது என்பது அதற்கு தான் அளித்த வாசிப்பைப் பற்றி எழுதுவதுதான். அது ஒரு கோணம். அது இன்னொருவாசகருக்கு அவர் காணாத ஒன்றைச் சொல்லக்கூடும். அவ்வாறு பலகோணங்கள் ஒன்றாகி ஒரு கவிதை முழுமையை நோக்கிச் செல்கிறது. வாசிப்பதன் வழியாகவே கவிதை நிகழ்கிறது. ஆகவே அதிகமான வாசிப்புகள் வழியாக அது மேலும் மேலும் நிகழ்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் தேவதச்சனின் கவிதைகள் சிலவற்றைக் கொடுத்திருக்கிறார். இது அவரது புகழ்மிக்க கவிதைகளில் ஒன்று
*
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.
*
இக்கவிதையை ஒரு நிகழ்ச்சியாக, ஒரு கூற்றாக வாசிக்கும்போதுதான் பெரும்பாலும் புரிதலின் இடர் ஏற்படுகிறது. வரிசையாக அடுக்கப்பட்டப் படிமங்களாகப் பாருங்கள். படிமங்கள் என்பவை ஆசிரியரால் மேலதிக செறிவு கொள்ளும்படி சொற்களில் தீட்டப்பட்ட காட்சிகள். உணர்வின் செறிவு, அர்த்தங்களின் செறிவு. அவற்றை வாசகன்தான் வாசித்து கற்பனையில் விரிவாக்கி எடுக்கவேண்டும்.
இங்கு மூன்று படிமங்கள் உள்ளன. காற்று ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை என்பது ஒரு படிமம். காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் காலில் மகரந்தத்துகளாக ,எதிர்காலத்தில் மலரில் விழுந்து, காயாகி, கனியாகி,விதையாகி ,முளைத்து செடியாகி, மரமாகி, காய்களாகி, விதைப்பெருக்காகி, காடாக மாறவிருக்கும் ஒரு சாத்தியக்கூறை சுமர்ந்து அலைகின்றன என்பது அடுத்த படிமம்.
இருபடிமங்களும் அலைக்கழிப்பை காட்டுகின்றன.காற்றில் தூலமாக நின்றிருக்கும் மரம் அலைக்கழிகிறது. நுண்வடிவக் காடும் அலைக்கழிகிறது. அனைத்தையும் அலைக்கழிகிறது கண்ணுக்குத்தெரியாத காற்று.
மூன்றாவது படிமம் நிலைத்தகாட்சியை, அசைவின்மையை காட்டுகிறது. ஆட்டிடையன் ஒருவன் அசையும், விரையும் முகில்களையும் வண்டிகளையும் ஆடுகளையும் அசைவின்ன்றி நின்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இக்கவிதையில் அசையாதது, அலையாதது ஒன்றே. அது என்ன என்று தொட்டுவிட்டால் நீங்கள் கவிஞர். கவிஞர்களே கவிதையை வாசிக்கமுடியும்
ஜெ