ஏர்டெல் சேவையெனும் மோசடி

index

அன்புள்ள ஜெ,

இந்த ஒரு கட்டுரை உங்களிடம் இருந்து வரும் எனப் பல வருடம் காத்திருந்தேன். இன்று காலை இதைப் பார்த்தவுடன் ஒரு அளவிடமுடியாத சந்தோஷம்.. “வா.. மகனே வா..” BSNL லை எத்தனை வாட்டி திட்டியிருப்பீங்க?? அத்தனை பாவமும் சும்மா விடுமா? :)

jokes apart.. ரொம்ப வருடங்களுக்கு முன்பு, பிஸினெஸ் லைனில் ஒரு வியாபார ஆலோசகர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், சேவை என்னும் தேவைக்குப் பின் இருக்கும் முரணை. சேவை செய்கிறோம் எனப் பாவ்லா காட்டும் ritual வேறு. உண்மையிலேயே சேவை என்பது வேறு.

ஒரு நாள், அவர் ஒரு டிவிடி ப்ளேயர் வாங்கி வருகிறார். அது வேலை செய்ய வில்லை. அதைப் பற்றிய ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்க தொலை பேசுகிறார்.. அது ஒரு வெள்ளி மாலை.. தொலைபேசியில் வரும் பெண், அழகான ஆங்கிலத்தில், திங்கள் காலையில் தான் முடியும் – ஏனெனில், வெள்ளி மாலையோடு, சர்வீஸ் செண்டர் ஆட்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள்.. எனச் சொல்கிறார். வார இறுதியில், சினிமா பார்க்கும் கனவு தொலைந்து போய்க் கடுப்பாகிறார். அந்த வார ஞாயிறு காலையில், மின்சாரம் போகிறது.. மின் வாரியத்துக்குப் போன் செய்கிறார்.. அந்தப் பக்கம் போனை எடுக்கும் நபர், எரிச்சலான குரலில், “நெறய கம்ப்ளெயிண்ட் இப்போதான் வந்து, ஆட்கள் வெளியே போயிருக்கிறார்.. ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஆள் வருவார் எனச் சொல்கிறார்..” ஒரு மணி நேரத்துக்குள் ஆள் வரவில்லை. ஞாயிறு காலை ஒரு வேலையும் ஓடாத கடுப்பில், மீண்டும் போன் செய்ய, போனை எடுக்கும் நபர் குலைக்கிறார்.. பின்ன சற்று நேரம் கழித்து, ஒரு அழுக்கான நபர் வந்து மின்சார இணைப்பை சரி செய்து விட்டுத் தலை சொறிகிறார்.. காசு கிடையாது எனச் சொல்லி எரிச்சலில் விரட்டி விடுகிறார்.

அவரது டிவிடிக்காக திங்கள் காலை மீண்டும் போன் செய்ய – அந்தப் புறத்தில் இருக்கும் அம்மணி, அவரது பில் விவரங்களைக் கேட்டு விட்டு, இன்னொரு அலுவலகத்துக்குப் போன் செய்யச் சொல்கிறார். இப்படியாகப் பல அலுவலகங்களுக்குப் போன் செய்து, நான்கு வாரங்களுக்குப் பிறகு, அவரது டி.விடி உயிர் பெறுகிறது.

இதனால், அரசு அலுவலகங்கள் மேல் எனச் சொல்ல வில்லை. ஒரு நுகர்வோரின் பிரச்சினை, நிறுவனத்துக்குப் பெரும் பிரச்சினையைக் கிளப்பும் என்னும் போதுதான், அவரது பிரச்சினை கவனிக்கப் படுகிறது. வைக்கோல் கண்ணுக்குட்டியைக் காட்டிப் பால்கறக்கும் தொழில்நுட்பத்தைத் தான் இன்று துரதிருஷ்டவசமாக தொலைபேசி நிறுவனங்கள் செய்ய முயல்கின்றன. நீண்ட கால நோக்கில், இது அந்த நிறுவனத்தின் மரண சாசனம் எனினும், அவ்வளவு நீண்ட காலம், அதை நடத்துவோர் உயிருடன் இருப்பதில்லை என்னும் பெரும் நம்பிக்கையால், இது கோலாகலமாக நடை பெறுகிறது..

அந்தக் காலத்தில் BSNL தொடர்புகளில், மாலை 7 மணியானால், all lines in this route are busy என்னும் தாலாட்டுக் கேட்கும். இன்று தனியார் பேசிகளில் கேட்கத் துவங்கியிருக்கிறது.. call drops இன்று சாதாரணம்.. ஏனெனில், இத்தொழிலில் வெண்ணையெடுத்த காலம் போய், இன்று போட்டியினால், லாபம் குறைந்து விட, இத்தொழிலை நடத்தத் தேவையான கட்டமைப்புகளில் முதலீடுகள் நின்று போய் 4-5 வருடங்களாகின்றன..

இன்றைய நிலையில், தனியார் தொலைத் தொடர்பை விட, உங்கள் பழைய BSNL தேவலை என்றிருக்கும்..

மற்றபடி, காந்தி சொன்னார் என நுகர்வோர் பற்றி ஒரு போர்டை நிறுவனங்கள் மாட்டி வைத்திருப்பதெல்லாம், நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சார்த்தும் கதை தான்..

புன்னகையுடன்

பாலா

அன்புள்ள பாலா

உண்மைதான். நான் நெடுங்காலம் தனியார்மயம் என்பது இங்கு அரசுத்துறைகளில் உள்ள மெத்தனத்தை இல்லாமலாக்கும் என நினைத்திருந்தேன். போட்டி சேவையை செம்மையாக்கும் என்று நம்பினேன். முதலாளித்துவத்தின் அடிப்படை விதி அது.

ஆனால் நடைமுறையில் நேர்மாறாகவே நிகழ்கிறது. மிகச்சிறந்த உதராணம் இந்த ஏர்டெல் தான். மீண்டும் பி.எஸ்.என்.எல்லுக்கே செல்ல எண்ணியிருக்கிறேன்.

என்ன சிக்கல்? முதலாளித்துவத்தின் விதி என்பது தன்னிச்சையான விசைகளின் போட்டி என்பதுதான். அதில் நுகர்வோர் என்பது மேலான வலிமையுடன் இருக்கவேண்டும். அது இங்கே இல்லை. நுகர்வோருக்குக் குரலே இல்லை. ஏர்டெல் பணத்தை எடுத்துக்கொண்டது என்றால் நான் நடைமுறையில் ஒன்றுமே செய்யமுடியாது. ஒரு சட்டப்பாதுகாப்பும் கிடையாது.

இப்படி நிர்க்கதியாக விடப்பட்டிருக்கும் ஒருவரை முடிந்தவரை வேட்டையாடுவதென்பது முதலாளித்துவ நெறிக்கு உகந்ததுதானே? இந்நிலையில் விற்பனைசெய்பவர்களின் போட்டி இன்னும் மோசமான நிலையை உருவாக்குகிறது. போட்டி அவர்களின் லாபத்தைக் குறைக்கிறது. லாபத்தை அடைவதற்கு நுகர்வோரை அடித்துப்பிடுங்குவதே பரவலாகச் செய்யப்படும் வழிமுறை

சேவையை மேம்படுத்துவது நேர்வழி. அது கடினமான பாதை. அதைவிட எளியது ஒன்று சேவைக்குச் செலவிடும் பணத்தைக் குறைப்பது. ஆகவே தகுதியான ஊழியர்களை வேலைக்கு வைக்கமாட்டார்கள். எந்தத் தகுதியும் இல்லாத ஊழியர்கள் எந்தப்பொறுப்பும் திறனும் இல்லாமலிருப்பார்கள். மாதாமாதம் மாறிக்கொண்டும் இருப்பார்கள்.

அல்லது பிறரிடம் சேவையை ஒப்படைப்பார்கள். அவர்கள் மேலும் குறைந்த கூலிக்கு ஆள்வைத்திருப்பார்கள். சென்னையில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்குப் பணியாற்றும் ஊழியருக்கு மூவாயிரம் ரூபாயை ஆட்டையைப்போடாமல் அந்தமாதம் சாப்பிடவே முடியாத நிலை இருக்கலாம்.

ஒப்புக்குச் சேவையளிப்பது பொய்யான வாக்குறுதிகள் அளித்து பணம்பிடுங்குவது சில்லறை மோசடிகள் வழியாக லாபம் அடைவது போன்றவை தற்காலிகமானவை எறாலும் லாபகரமானவை. இதுவே இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களின் வழிமுறை. தனியார்ப்பேருந்துக்களையே பாருங்கள், மிகமிகக்குறைந்த செலவில் ஓட்டுநர் தேவை. அவர்கள் ஒருநாளில் 20 மணிநேரம் ஓட்டவேண்டும். சேவை ஒருபொருட்டே அல்ல.

பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு ஒரு கடையில் ஒரு வாக்வம் கிளீனர் வாங்கினேன். வீட்டுக்கு கொண்டுவந்து தந்தார்கள். பிரித்துப்பார்த்தால் பழைய வாக்வம் கிளீனர். புகார்செய்தேன், கொண்டுவாருங்கள் என்றார்கள். கொண்டுகொடுத்தால் பழுதுபார்த்துத்தருகிறேன், புதியது தரமுடியாது என்றார்கள். நான் உற்பத்தி நிறுவனத்திற்கு புகார்செய்தேன். அவர்கள் தங்களுக்கு அதில் சம்பந்தமில்லை என்றார்கள்.

கடைக்காரர் நான் கொடுத்த பழைய வாக்வம் கிளீனரை வாங்கி வைத்துக்கொண்டு அதையும் தரமாட்டேன் என்றார். வேண்டுமென்றால் நுகர்வோர் நீதிமன்றம் போ, அங்கே பார்த்துக்கொள்கிறேன், எனக்கு மாதம் ஐந்து கேஸ் அங்கே உள்ளது என்றார்.

நான் நுகர்வோர் நீதிமன்றம் செல்ல ஒரு வழக்கறிஞரை பார்த்தேன். நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதி எல்லாம் கிடைக்காது சார், அவர்கள் எப்போதும் வணிகர்களுக்கே சாதகமானவர்கள். வணிகர்கள் என்றும் இருப்பார்கள், நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்களா என்ன என்றார் வழக்கறிஞர். அவர் பேசிப்பார்த்துவிட்டு அவர்கள் 2000 ரூபாய் தருவதாகச் சொல்கிறார்கள் என்றார். வாக்வம் கிளீனரின் விலை 6000 ரூபாய் அன்று. தேவையில்லை என்று விட்டுவிட்டேன்.

ஏர்டெல்லுக்கு புகார்மேல் புகார் அனுப்பினேன். இந்தக் கட்டுரையை அனுப்பினேன். ஒருவழியாக நேற்று ஒரு கடிதம், அந்த ரசீதை ஸ்கேன் செய்து அனுப்பவும் என்னும் ஒற்றை வரி, அவ்வளவுதான். அவர்களுக்குத்தெரியும், இந்தியாவில் நுகர்வோர் ஒன்றுமே செய்யமுடியாது

ஏர்டெல் இணையதளத்திற்கு புகார் அளித்ததன் உடனடி பலன் ஒன்றே. ஐந்து நிமிடங்களுக்கு ஓரு குறுஞ்செய்தி. அவர்களின் நாட்டுநலன் திட்டங்கள் இன்ன பிற விளம்பரங்கள்…

ஜெ

முந்தைய கட்டுரைசுயபலி
அடுத்த கட்டுரைஏர்டெல் மோசடியின் தொடர்ச்சி…