இன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு

ஜெ,

இன்செப்ஷன் படத்தை நாலைந்துமுறை பார்த்துவிட்டு, மீண்டும் விஷ்ணுபுரத்தை ஆங்காங்கே நினைவில் நின்ற பகுதிகளைப் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். இன்செப்ஷனில் அடிப்படையாக உள்ள ’கனவுக்குள் நுழைதல்’ என்ற ஆட்டம் இன்னமும் சிக்கலாகவும் இன்னமும் விரிவாகவும் விஷ்ணுபுரம் நாவலில் உள்ளது என்று எனக்கு தோன்றியது. அந்த பிரமிப்புதான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான தூண்டுதல்.

இன்செப்ஷன் படத்தில் தகவல்களை திருடுவதற்காக பிறரது கனவுக்குள் கனவு கண்டு அதன் வழியாகவே நுழைகிறார்கள். விஷ்ணுபுரத்தில் பல முறைகளில் இந்த கனவுக்குள் நுழைதல் வந்துகொண்டே இருக்கின்றது. மகாகாசியபரும் அவரது மாணவர்களும் பிறரது கனவுக்குள் நுழையும் கலையில் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். பிரசேன சிற்பியின் கனவுக்குள் நுழைந்து அவர் வடித்த சிலையை தங்கள் திட்டப்படி அவரது கைகளாலேயே வடித்துக்கொள்கின்றார்கள்.

அதைவிட சில்லிட வைக்கும் இடம் என்பது பிரசேனர் காசியபரை சந்திக்கும் இடம்தான். காசியபர் ஐந்து நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்த வரலாற்று மனிதர். ஆனால் அவரது அன்கான்ஷியஸை அப்படியே ஒரு டப்ளரில் இருந்து இன்னொன்றுக்கு கொட்டுவதுமாதிரி இன்னொரு மனித மனத்துக்குள் கொட்டிவிடுகிறார்கள். ஆகவே தொடர்ச்சியாக பல்வேறு உடல்கள் வழியாக காசியபர் சாவே இல்லாத ஒருவராக இருந்துகொண்டே இருக்கிறார்.

‘நான் காசியபன்,உங்கள் புராணங்களில் எனக்கு அனேகம் பெயர்கள். உபகாலன்,சியாமன்,மகாவீரன்,ஜ்வாலாருத்ரன், அபராஜிதன்,அமிர்தன்..’ என்று காசியபர் சொல்கிறார். அந்தவரி எனக்கு ஒரு அதிர்ச்சி மாதிரி இருந்தது. ஒரு மனிதனின் மொத்த அன்கான்ஷியஸையே இன்னொரு மனத்திற்குள் கொட்டிவிடமுடிந்தால் மனிதனுக்கு சாவு ஏது? பர்சனாலிட்டி என்பதே அதுதானே?

நாவல் முழுக்க ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் கனவுக்குள் இருக்கின்றது என்பதுதான் விஷ்ணுபுரத்தில் உள்ள பெரிய அச்சரியம். முதல் வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பமாக இருப்பதுகூட அதுதான். மொத்தக் கதையும் வேறு யாரோ கண்ட கனவுதான். அந்தக் கனவுக்குள் வருகின்ற ஒரு கதாபாத்திரம் நூறு வருஷம் கழித்து இன்னொரு மனிதன் கனவுக்குள் வாழக்கூடியதாக இருக்கின்றது.

விஷ்ணுபுரம்நாவலின் முதல் தோற்றுவாய் ஒரு பயங்கரமான கனவு இல்லையா. அந்தக்கனவில் தற்கொலைசெய்துகொள்ளும் ஒருவன் வெண்ணிறமான பறவையாக ஆகின்றான். ‘காற்றில் மிதந்தபடி சிவப்பான உதயஒளிபடர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கி சென்றபோது எங்கோ ஒருவனின் கனவில் புகுந்து அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப்பட்டேன்’ என்று அந்த அத்தியாயம் முடிகின்றது. அந்த வெண்பறவைகள் பலநூறு வருடம் முன்னால் ஞானசபைக்குப் போய் அங்கே அமர்ந்திருக்கின்றன. இந்த சம்பவத்தை அங்கே அஜிதர் கனவாக காண்கின்றார். அதே சம்பவம் பலநூறு வருடம் தாண்டி பிரசேனசிற்பி தற்கொலை செய்துகொள்ளும்போது அவரது கனவுக்குள் நிகழ்கின்றது.

இப்படி கனவுகள் வழியாகவே விஷ்ணுபுரம் பின்னிப்பிணைந்து கிடக்கின்றது. இன்செப்ஷன் படத்தை இரண்டாம் தடவைபார்த்தால் சிக்கு எடுத்துவிடலாம். விஷ்ணுபுரம் நாவலோ மேலும் குழப்புகின்றது. காரணம் நிறைய கதாபாத்திரங்களும் நிறைய காலமும் இருப்பதனால்தான். மொத்த நாவலும் மகாபுராணம் என்ற ஒரு காவியம். அந்தகாவியம் வேறுவேறு கவிஞர்கள் எழுதிய 3 காவியங்களின் கலப்பு. அதில் ஒரு காவியத்தில் வரும் நான்கு பாணர்கள்தான் அந்தக்காவியத்தையே பாடுகின்றார்கள். அந்தபாணார்களின் கனவில்தான் அந்த காவியத்தின் எல்லா கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். அந்த கதாபாத்திரங்களில் மூன்றுபேர்தான் அந்த பாணர்களை கனவுகாண்கின்றார்கள். அந்த காவியத்தில் அல்லது கனவில் வரும் எல்லாருக்குமே அவர்கள் உண்மையில் வேறு யாரோ ஒருவரின் கனவுக்குள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்திருக்கின்றது.

இப்படியே போகின்றது நாவல்.கடைசியில் இருந்து சிக்கெடுத்து வந்தேன். முதலில் வந்த பிறகு மீண்டும் கடைசிக்குச் செல்லவேண்டியிருக்கின்றது. அதன்பின்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இன்னொருவரின் கனவுதான் தான் என்று உணர்கின்றது என்று பார்த்தேன். சிற்பி கனவுக்குள்தான் சாதாரணமாக இருக்கின்றார். ஷட்டர் ஐலண்ட் படத்தில் வருவது போல அவரது நிஜத்தில் கனவும் கலந்தே இருக்கின்றது. அஜிதன் ஒரு கனவுக்குள் அந்த பறவையை பார்க்கின்றான். விஷ்ணுபுரம் கனவுகளின் கேம்பிளே போலவேதான் இருக்கின்றது.

ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு வகை. எல்லா கனவுக்குள்ள்ளும் காலத்தின் அடையாளமாகிய கறுப்புநாய் வந்துகொண்டே இருக்கின்றது. அதுதான் கனவுகளை இணைக்கக்கூடியதாக இருக்கின்றது. விஷ்ணுபுரமே கிடையாது அது ஒரு கனவுதான் என்று பாண்டியநாட்டில் நம்புகின்றார்கள்.

இந்தமாதிரி வாசித்தபின்புதான் நாவலில் வரும் கவிதைகளை வாசித்தேன். முதல் இரு வாசிப்புகளில் கவிதைகளை நான் விட்டுவிட்டேன். இப்போது அதில் உள்ள வரிகள் தான் நாவலிலே உச்சகட்டமானவை என்ற நினைப்பு உருவாகியது.

என் மனப்பிரவாகமெங்கும்
அலையும் மேகங்களில் சிறகசைய
பறக்கும்மீன்களின் கனவின்
நிழல்படிந்த சேற்றுச்சதைப்பரப்பில்
சிலிர்த்த வரிகளில் உன்புரியாத காவியம்

*

சுழலுக்குள் சுழலுக்குள் சுழலுக்குள்
சுழலும் சுகந்த மணிநாதம்
உன் கூந்தல் மலர் என புலரி
உன் பாதத் தடமெனச் சொற்கள்

*

இந்தக் கவிதைகளில் நீங்கள் மொத்த நாவலிலும் சொல்லிக்கொண்டிருக்கும் கனவுக்குள் கனவுக்குள் கனவு என்ற அனுபவம் மிகவும் உக்ரமாக அனுபவமாகின்றது. அதேசமயம்

மழைக்கும் வெறிவானம் சிலிர்த்தெழும்
மழைரோமக்காடுகள்

என்பதுபோன்ற அற்புதமான உவமைகளும் மனதில் பதிகின்றன. நன்றிகள் ஜெ, விஷ்ணுபுரத்துக்காக

ஜெ, என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்த கனவுப்பரிமாற்றம் என்பது நம்முடைய பழைய மரபிலே இருந்ததா, இல்லை உங்களுடைய கற்பனைதானா?

ரவிச்சந்திரன்
நியூடெல்லி

*

அன்புள்ள ரவிச்சந்திரன்

நலம்தானே?

இன்செப்ஷன் பார்க்கவில்லை. என்னால் உரையெழுத்துக்கள் இல்லாமல் அதை புரிந்துகொள்ள முடியாதென நினைக்கிறேன். குறுவட்டு வந்ததும் வாங்கிப்பார்க்கவேண்டும்.

விஷ்ணுபுரத்தில் உள்ள கனவுகளில் இருந்து கனவுக்கு என்ற விஷயம் எளிமையாக காடு நாவலிலும் வருகிறது. அய்யர் சிவஞானபோதத்தில் இருந்து ஒரு பாடல் சொல்கிறார்

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற்
தாக்காது நின்றுளத்தில் கண்டு இறைவன் ஆக்கத்தே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவுணர
கண்டவனில் இன்றாம் கட்டு

மொத்த காடு நாவலுக்கும் சாரம் அது. ‘நனவுணர்வில் கண்ட கனவுணர’ க்கூடிய ஒரு சில மாதங்கள், அதுதான் காட்டின் பேசுபொருள்.

சமீபத்தில் என்னைபபர்க்கவந்த என் வாசகரான குமார்பாபு, முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் உளமருத்துவமனையில் மருத்துவப்பேராசிரியராக இருந்தவர், இந்த வரியைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.காடு நாவலை பலமுறை வாசித்த அவருக்கு அதன் தத்துவச் சாரமாகவே ’நனவுணர்வில் கண்ட கனவுணர’ என்றவரி தென்பட்டதாகச் சொன்னார்.

நனவுக்குள் கனவும் கனவுக்குள் நனவும் என்பது இந்திய சிந்தனை மரபில் வேதாந்தம், மகாயான பௌத்தம், சைவசித்தாந்தம் மூன்றுக்கும் பொதுவான அகத்தரிசனம். பலபல கோணங்களில் இந்திய நூல்கள் அதை விவாதித்திருக்கின்றன. இந்த வாழ்வெனும் கனவுக்குள் இருந்து நாம் இன்னொரு கனவுக்குள் விழித்தெழுகிறோம், கனவுகளுக்குள் கனவாகச் சென்று உள்ளே இருக்கும் இன்மை வடிவம் கொண்ட பிரம்மத்தை அறிகிறோம் என்பதே அத்வைதம்.

வேதாந்தநூல்கள் மேலைநாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் அறிமுகமாயின. குறிப்பாக தத்துவத்தின் விளைநிலமாகிய ஜெர்மனியில். அவை உருவாக்கிய அலையே ’மனம்’ என்பதையும் ’யதார்த்தம்’ என்பதையும் பற்பல அடுக்குகளாக காணும் பார்வைக்கோணத்தை மேலைநாடுகளுக்கு அளித்தது. காண்ட், குரோச்சே, ஃப்ராய்ட், யுங் அனைவருக்குமே கீழை ஞானமரபு ஆழமான தூண்டுதலை அளித்தது.

லங்காவதார சூத்ரம் என்ற பௌத்த நூல் யுங்கில் ஆழமான பாதிப்பை உருவாக்கியது. குறிப்பாக ஆலயவிக்ஞானம் என்ற கருத்து. மானுடப்பிரக்ஞைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஒரே பிரக்ஞையாகவே உள்ளன, அது அனைத்து உயிர்களின் பிரக்ஞையும் கலந்து உருவாகி நேற்று இன்று நாளை இல்லாது ஓடும் இன்னொரு பெரும்பிரவாகத்தின் துளி என்பது விக்ஞானவாத பௌத்தத்தின் தரிசனம். அதை அவர்கள் ஆலயவிக்ஞானம் என்றார்கள். அந்த தரிசனத்தின் ஒரு எளிய வடிவமே யுங் உருவாக்கிய கூடுநனவிலி [ Collective unconscious ] என்ற கருதுகோள்

அந்தக்கருதுகோள் காலப்போக்கில் மேலைச்சிந்தனையில் பலவகையான விளைவுகளை உருவாக்கியது. நடைமுறைச் சிகிழ்ச்சை சார்ந்த உளவியலில் அது பயனற்றதாக கருதப்பட்டாலும் இலக்கியத்தில் அது ஒரு அலையை உருவாக்கியது. ஆழ்படிம விமர்சனம் [Archetypal literary criticism ] என்ற விமர்சனமுறை உருவானது. உலக இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக மானுடப்பிரக்ஞையாக காணும் போக்குக்கு வழி கோலியது. இலக்கியம் என்பதே மானுடஇனம் சேர்ந்து காணும் ஒற்றைப்பெருங்கனவு என்றுகூட கொள்கைகள் உருவாயின.

படைப்புகளில் கூட்டுநனவிலி என்பது உருவாக்கிய பாதிப்பைப்பற்றி பலநூறு பக்கங்கள் எழுதமுடியும். ஒருசமூகத்தின் கூட்டுநனவிலியே இலக்கியமாக வெளிப்படுகிறது என போர்ஹெஸ் சொல்லியிருக்கிறார். அவர் மகத்தான உருவகங்களை [ Metaphor] அப்படி ’தானாக’ உருவாகி வந்தவை என்று நம்புகிறார். நவீன இலக்கிய ஆக்கத்தின் பல அழகியல் கொள்கைகளில் கூட்டுநனவிலியின் அடிப்படைப் பங்களிப்பு உண்டு. மனிதர்களின் கனவுகள் ஆழ்மனங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் சித்திரத்தை அற்புதமாக உருவாக்கிய பல மாய யதார்த்தப் படைப்புகளை சொல்லமுடியும் . மார்க்யூஸின் ‘நூறாண்டுத்தனிமை’ முதல் ராபர்ட்டோ பொலானோவின் ‘20666’ வரை

பொதுவாக திரைப்படங்கள் இலக்கியத்தின் அலைகளை ஒரு இருபத்தைந்து வருட இடைவெளி விட்டு பின்தொடர்கின்றன என்று படுகிறது. ஹாலிவுட் படங்களில் இன்று புகழ்பெற்றுள்ள நேர்கோடற்ற கதைசொல்லல், யதார்த்தங்களின் கலப்பு போன்ற பல விஷயங்கள் இலக்கியத்தில் பழையவை. ஓர் கதாசிரியனாக நான் இன்று அவற்றை அதிக ஆர்வத்துடன் பார்ப்பதில்லை. நான் மொழிதல் மற்றும் வரலாறு அமைதல் என்ற சிக்கலுக்குள் இன்று ஈடுபட்டிருக்கிறேன். அவற்றையே நான் எழுதுகிறேன். அசோகவனம் வரலாறு எப்படி அமைகிறது என்பதில் உள்ள சிக்கலான விளையாட்டை கவனிக்கும் ஆக்கம்

விஷ்ணுபுரம் பேசுவது வேதாந்தம் சொன்ன ‘நனவுணர்வில் கண்ட கனவு’ ‘’ அது தொன்மையான இந்திய தரிசனம், மேலைநாட்டுப் பின் நவீனத்துவ தரிசனம்

ஜெ

முந்தைய கட்டுரைமீண்டும் பிறப்பது…
அடுத்த கட்டுரைபுதுமைப்பித்தன் இன்று…