இந்தியாவில் நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறையை இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. என்னுடைய ஏர்டெல் செல்பேசி எண்ணை சர்வதேச அழைப்புக்குரியதாக ஆக்க விரும்பினேன். ஆகவே சென்னையில் உள்ள ஏர்டெல் முகவர் ஒருவரிடம் ரூ 3000 கட்டி அதை மாற்றும்படி விண்ணப்பித்தேன். 10- 6-2015 முதல் அவ்வாறு மாற்றப்பட்டது. குறுஞ்செய்தி வந்தது. எண் சர்வதேச அழைப்புக்குரியதாக ஆக்கப்பட்டு அதற்கான கட்டணங்களும் வசூலிக்கப்பட்டது
ஆனால் நான் கட்டிய 3000 ரூ வரவு வைக்கப்படவேயில்லை. சென்னையில் உள்ள ரோஷன் டெலிகாம் என்னும் ஏர்டெல் முகவரிடம் பணம் கட்டினேன் [89, கடை எண் 4,5 ஆர்காடு ரோடு கோடம்பாக்கம் சென்னை 24] நாகர்கோயிலில் நான் மீண்டும் 3000 கட்டவேண்டுமென்றார்கள். மொத்தமாக 6000 ரூபாய் கட்டிவிட்டேன். என் முன்பணம் வரவுவைக்கப்படவில்லை என அதன்பின் அறிந்தேன்
ரோஷன் நிறுவனத்தை கூப்பிட்டுக்கேட்டால் அங்கு ஒருகுரல் ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது சார். நீங்க ஏர்டெல்லுக்கே கேளுங்க’ என்று தீனமாக பலமுறை பதில் சொன்னது. ஏர்டெல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை. நாகர்கோயில் கிளையில் நீங்கள் சென்னையில்தான் கேட்கவேண்டும் என்றார்கள். ஓரிருமுறை நேரிலும் சென்றேன்
கடைசியில் குத்துமதிப்பாக பதில்சொல்லிவிட்டார்கள். பணத்தை முகவர்கள் ஏர்டெல்லுக்கு கட்ட விட்டுப்போயிருப்பார்கள். மறந்திருக்கலாம், அல்லது எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் போனபணம் போனதுதான். ரோஷன் அளிக்கும் ரசீதுக்கெல்லாம் ஏர்டெல் பொறுப்பு அல்ல. ரோஷனும் பொறுப்பல்ல. ஏனென்றால் அவர்கள் எனக்கு சர்வீஸ் தரவில்லை. ஒன்றுமே செய்யமுடியாது. நெருக்கினால் ஏர்டெல் ஏதாவது கணக்கு ஒன்றை அனுப்பும், பணம் வராது. மூவாயிரம்தானே, விட்டுவிடுங்கள். மாதம் மூவாயிரம்ரூபாய்க்குமேல் பில் கட்டும் உங்களுக்கு இது ஒரு தொகையா?
மூவாயிரம் ரூபாயை இப்படி நாட்கணக்கில் மனதளவில் சுமந்து அலைவது எனக்கும் கடினம். ஒன்றுசெய்யலாம், ஏர்டெல்லை மாற்றிவிடலாம். மீண்டும் அங்கே சென்று மிஞ்சியிருக்கும் பணத்தை முழுக்க கட்டினேன்.மீண்டும் இரண்டாயிரம் ரூபாய். வோடபோனுக்கு போகலாம் என்றார்கள். ‘அதுவும் ஒரு மனநிம்மதிக்காத்தான் சார். நாம மாத்துறோம்னு ஒரு சமாதானம். அங்கயும் இப்டித்தான்’ என்றார் நண்பர். இதுதான் இந்தியா. இங்கே சர்வீஸ் என்றால் மோசடி என்று பொருள். அரசியல் என்றால் ஊழல் என்பதுபோல