அ.முத்துலிங்கம் நேர்காணல்

a.muttu2

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

April 27, 2003 – 4:43 am

 

“நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!”

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது. ‘திகட சக்கரம்.’ தொடர்ந்து ‘வடக்கு வீதி’ முதலிய தொகுதிகள் வெளிவந்தன. சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார்.

பேட்டி இணையம் மூலம் எடுக்கப்பட்டது.

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

ஜெயமோகன்: தங்கள் பிறந்து வளர்ந்த சூழல், எத்தகைய கல்வி, இலக்கிய பின்புலம் கொண்டது? உங்கள் குடும்பத்தில் பண்டிதர்கள், கவிஞர்கள் உண்டா?

அ.முத்துலிங்கம்: நான் வளர்ந்தது யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற கிராமத்தில். பெற்றோர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். ஆனால் பெரிய கல்வி அறிவு என்று சொல்வதற்கில்லை. குடும்பத்திலோ அல்லது சுற்றத்திலோ நான் அறிய படித்த பண்டிதர்களோ, புலவர்களோ கிடையாது. ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் இன்னொரு விதத்தில் வேலை செய்தது. என்னுடைய பதின்மூன்று வயது வரைக்கும் அம்மாவிடம் நிறையக் கற்றேன். அம்மாவுக்கு ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களில் போதிய பரிச்சயம் இருந்தது. மேலோட்டமாக என்று இல்லை. மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தார். அம்மா சமையல் வேலை செய்தபடி இவற்றை விபரமாக எனக்கு கூறுவார். ஒரு நாளாவது அலுத்துக்கொண்ட ஞாபகம் இல்லை. என் பதின்மூன்றாவது வயதில் அம்மா இறந்துவிட்டார். அதற்கிடையில் இந்த இரண்டையையும் அவற்றின் உப கதைகளுடன் அம்மா பல தடவை கூறி நான் கேட்டுவிட்டேன். அத்துடன் நின்றுவிடவில்லை. நான் என் வயதுப் பிள்ளைகளை எல்லாம் சேர்த்து வைத்து அவர்களுக்கு இந்தக் கதைகளை திரும்பவும் சொல்வேன்.

ஜெயமோகன்: உங்கள் கதைகளில் இப்புராணங்களின் பாதிப்பை எப்படி உணர்கிறீர்கள்?[பூமாதேவி போன்ற கதைகளில் குறியீட்டுதளத்திலும், குங்கிலிய கலய நாயனார் போன்ற கதைகளில் அங்கதமாகவும் புராணமரபின் தாக்கம் உள்ளது என்பது என் கணிப்பு]

அ.முத்துலிங்கம்: நாங்கள் எங்கே ஓடினாலும் எங்கள் புராணங்கள் எங்களைத் தொடரும். எங்கள் எழுத்து அதைப் பிரதிபலிக்கும். ராமாயணமும், பாரதமும் எங்கள் மகத்தான சொத்து. அவற்றில் இல்லாததையா நாங்கள் புதிதாகச் சொல்லப்போகிறோம். கர்ணனின் தோல்வியில் வெற்றி இருந்தது. பீமனின் வெற்றியில் தோல்வி இருந்தது.

சமீபத்தில் என் கணிப்பொறியில் ஒரு வைரஸ் விழுந்தபோது அதைத் திருத்த வந்தவர் ‘வைரஸை அழிக்க முடியாது, திசைக் காவல் போடலாம் ‘ என்றார். சூரனைக் கொல்ல முடியாது; சேவல், மயில் என்று மாற்றி அடக்கலாம் என்று புராணம் சொல்வதுபோல.

muthulingam

அம்புப் படுக்கையில் கிடந்தபடி பீஷ்மர் தருமருக்கு உபதேசம் செய்யும்போது ‘அரசனுடைய வெற்றி தகுதியான உத்தியோகத்தர்களை தேர்ந்து எடுத்து நியமிப்பதில்தான் இருக்கிறது ‘ என்கிறார். இன்றும் மிகப் பெரிய உலக நிறுவனங்களின் வெற்றி அதன் முதல்வர், அதிகாரிகளை நியமிப்பதில்தான் தங்கி இருப்பதாக மேலாண்மை நிபுணர்கள் சொல்கிறார்கள். என் கதைகளில் புராணக்களை நவீன கோணத்தில் அணுகும் பல இடங்கள் உள்ளன. குங்கிலிய கலயநாயனார் அப்படிப்பட்டதுதான்.

ஜெயமோகன்: அம்மாவின் இழப்பை ஆழமான அனுபவமாக உணர்ந்தீர்களா? அதை எழுதியுள்ளீர்களா? [கதைகளில் அம்மா அழுத்தமான கதாபாத்திரமாக வரவேயில்லை.]

அ.முத்துலிங்கம்: அம்மாவை உணராத எழுத்தாளர்கள் அரிது. என்னுடைய ‘எலுமிச்சை’, ‘அம்மாவின் பாவாடை’, ‘தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில்’ போன்ற கதைகளிலும், இன்னும் சிலவற்றிலும் அம்மா வருகிறார். ஆனால் ஒரு சிறு கூறாகத்தான்.

ஒரு நாள் சாயங்காலம் ஆறுமணிக்கு அம்மா முன்னால் நான் நின்றேன். பத்து சதம் வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டு. எனக்கு மிக அவசரம். அம்மா அதைத் தருவதாயில்லை. கூரையிலே ஒரு கயிறு கட்டி அதைப்பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தார். ஆஸ்துமா வியாதி. ஒவ்வொரு மூச்சுக்கும் தலை ஒரு சாண் மேலே போனது; பிறகு கீழே விழுந்தது. நான் அசையவில்லை.

அம்மா பார்த்தார். கடைசியில் வெறுப்போடு ஒரு பத்து சதக் குத்தியை முடிச்சுப் பிரித்து எடுத்து தந்தார். ‘முன்னாலே நிக்காதே, போ’ என்றார். அடுத்த பத்து மணித்தியாலத்துக்குள் அவர் இறந்துபோனார். கயிற்றை பிடித்த கை முன்னாலே விழுந்துபோய் கிடந்தது.

அம்மா என்னிடம் அளவற்ற அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். எங்கள் ஏழுபேரில் என்னிடம்தான் கூடிய பாசம். அப்படி பாசம் இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தார். அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை ‘போ ‘ என்பதுதான்.

ஜெயமோகன்: சிறுவயதில் இலக்கியம் போன்ற விஷயத்தில் உங்களுக்கு முன்னுதாரணமாக யாராவது இருந்திருக்கிறார்களா?

அ.முத்துலிங்கம்: அம்மாவைத் தவிர வேறு முன்னுதாரணம் என்று இரண்டு பேரைச் சொல்லலாம். துரதிர்ஷ்டவசமாக எனக்கு வாய்த்த ஆசிரியர்களில் ஒருவராவது இலக்கியப் பாதையில் வழிகாட்டுபவராக அமையவில்லை.

மாத்தளை என்ற ஊரில் இருந்து ஒரு புலவர் எங்கள் கிராமத்துக்கு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்தார். அவர் கதைகளும் பாடல்களுமாக ஒரு கதாப்பிரசங்கம் போல செய்வார். மணிக்கணக்காக அதைக் கேட்பேன். அவர் இருந்த ஒரு மாத காலமும் அவரிடம் இருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக சாண்டோ செல்லர் என்று ஒருவர். நாடகத்தில் பபூன் நடிகர். ராகத்துடன் பாடுவார். அவர் கதைகள் சொல்லத் தொடங்கினால் மிகையான ஆலாபனைகளுடன் நீண்ட நேரம் சொல்வார். நாங்கள் எல்லோரும் ஆடாமல் அசையாமல் இருந்து கேட்போம். இவர்களுடைய தாக்கம் எனக்குள் வெகு காலமாக இருந்தது.

ஜெயமோகன்: இவரைத்தான் திகட சக்கரம் தொகுப்பின் செல்லரம்மான் என்ற கதையில் சித்தரித்துள்ளீர்களா?

அ.முத்துலிங்கம்: அவரேதான்.

mutthu me

ஜெயமோகன்: எழுதவேண்டும் என்ற தூண்டுதல் எப்படி ஏற்பட்டது? முதல் படைப்பை எப்போது எழுதினீர்கள்?

அ.முத்துலிங்கம்: எங்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு படிப்பித்தார். அவர் பள்ளிக்கூடத்தை விட்டு விலகியபோது அவருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்தார்கள். அப்பொழுது ஒரு வெண்பா எழுதினேன். எனக்கு வயது எட்டு இருக்கும். என்ன தூண்டுதல்? ஆசிரியர்களுடைய எண்ணிக்கை ஒரு தானம் [இலக்கம்] குறையும் என்ற உற்சாகமாக இருக்கலாம். அப்படி பல கவிதைகள். பதினாறாவது வயதில் எங்கள் கல்லூரியில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்தார்கள். ஆங்கிலச் சிறுகதைப் போட்டி. தமிழிலேயே யோசித்து ஆங்கிலத்தில் எழுதினேன். முதல் பரிசு கிடைத்தது. மற்றவர்கள் பாராட்டியபோது உற்சாகமாக இருந்தது.

முதல் கதை சுதந்திரன் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. எனக்கு அப்போது வயது பதினெட்டு. பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் வீட்டில் சுதந்திரன் பத்திரிகை எடுப்பதில்லை. ஆனபடியால் கதை வருமா, வராதா என்பது தெரியாது. ஒரு நாள் தலை முடி வெட்ட சலூனுக்கு போனபோது அங்கே இருந்த பழைய சுதந்திரனில் என் கதை இருந்தது. ஒரு பக்கம் முழுக்க நிறைந்த கதை. என் பெயர் பெரிய எழுத்தில். அப்படியே பரவசமானேன்.

அதற்கு பிறகு பல்கலைக்கழகத்தில் நடந்த சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. தினகரன் பத்திரிகை விழா நடத்தியபோது ஒரு போட்டி வைத்தது. அதற்கும் முதல் பரிசு கிடைத்தது. கல்கிப் பத்திரிகை இலங்கை எழுத்தாளர்களுக்கு வைத்த போட்டியில் இரண்டாவது பரிசு. இது எல்லாம் மாணவப் பருவத்தில். இவை எல்லாம் ஒருவிதத்தில் எழுதுவதற்கு ஊக்கமாக இருந்தன என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஜெயமோகன்: முதல் தொகுப்பு ‘அக்கா ‘ வெளிவந்தபோது பரவலான கவனிப்பு இருந்தது. ஏன் தொடர்ந்து எழுதவில்லை.

‘அக்கா’ தொகுப்பு மாணவ காலத்தில் வெளிவந்தது. என்னுடைய பட்டதாரிப் படிப்பு சயன்ஸ் பாடங்களைக் கொண்டது. அதற்குப் பிறகு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் கணக்காளர் பரீட்சை எழுதினேன். இதற்கு கடுமையான உழைப்பும், பயிற்சியும் தேவை. இது நிறைவேறியதும் சாட்டர்ட் இங்கிலாந்து பரீட்சைக்கு தயார் செய்தேன். அதற்கு இரண்டு வருடங்கள். இப்படி படிப்பு, பரீட்சை என்று நெருக்கல்கள். இந்த சமயத்தில் இலக்கிய வாசிப்போ, இலக்கிய நண்பர்களின் சகவாசமோ தள்ளிப் போய்விட்டது.

பிறகு வேலை கிடைத்தது. முதல் பணி. முற்றிலும் சிங்களப்பகுதியான காலி என்ற இடத்தில். ஆயிரம் பேருக்கு மேற்பட்ட அந்த நிர்வாகத்தில் நான் ஒருவன் மட்டுமே தமிழ் பேசுபவன். இனக்கலவரம் ஒரு சுற்று முடிந்திருந்த சமயம். வேலைத்திறமை ஒன்றை மட்டும் நம்பி அங்கே சிறிது காலம் வேலை பார்த்தேன்.

இந்தக் காலத்தில் நான் கொடூரமான தனிமையில் இருந்தேன். ஃபிரன்ஸ் காஃப்கா ஆயுள் காப்பீட்டு கம்பனியில் நெடு நேரம் வேலை செய்த அதே சமயம் இலக்கியப் பணியிலும் ஈடுபட்டிருந்தார். ஒரே இரவில் ‘The Trial ‘ என்ற நீண்ட கதையை எழுதி முடித்ததாக சொல்வார்கள். அதேபோல அவேசமான சில இரவுகளில் பக்கம் பக்கமாக சில இலக்கியப் படைப்புகளை செய்து முடித்தேன். அவை ஒன்றும் அதிர்ஷ்டவசமாக அச்சில் ஏறவில்லை.

A_Muttulingam_a

ஜெயமோகன்: ஏதாவது ஒரு கால கட்டத்தில் இலக்கியம் ஒன்றும் முக்கியமில்லை என்ற எண்ணம் இருந்ததா? வேறு விஷயங்கள் மனதின் முன்னுரிமை பெற்றிருந்தனவா?

இந்தக் காலகட்டத்தில்தான் நான் வெளிநாடு சென்றேன். அதுவும் ஆப்பிரிக்காவுக்கு. அங்கே ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தில் வேலை. என்னுடன் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்தார்கள், ஸ்வீடன், இங்கிலாந்து, சீனா, கயானா என்று. இவர்கள் எல்லாம் தொழில் நுட்ப பகுதிகளில் பணி செய்தார்கள். நான்மட்டுமே நிர்வாகத்தில்.

முப்பது வருடங்களுக்கு முன்பு இப்போது போல இல்லை. அந்தக் காலங்களில் எனக்குள் இருந்த வேகம் எல்லாம் வேலை வேலை என்பதே. 16 மணி நேரம் வேலை செய்வேன். வேலையை தக்கவைக்க வேண்டும்; மேலதிகாரிகள் பாராட்ட வேண்டும்; உயர்வு கிடைக்க வேண்டும். இப்படியே சிந்தனை.

அதுதான் நடந்தது. அங்கிருந்து எனக்கு உலக வங்கியில் வேலை. அதைத் தொடர்ந்து ஐ. நாவில் பணி. வேலை நிமித்தமாக பயணங்கள். இந்தக் காலங்களில் இலக்கிய வாசிப்புக்கோ, எழுத்துக்கோ இடமே இல்லாமல் போய்விட்டது.

அப்படி அப்போது நினைத்தேன். உண்மையில் நேரம் இழுபடும் தன்மை கொண்டது. ஒரு நாளில் 26 மணி நேரத்தை அடைக்கக்கூடியவரும் உண்டு. ஓர் இரவில் நாவல் எழுதியவர்கள் இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற House of the Sleeping Beauties என்ற நாவல் நூறு பக்கத்துக்கும் குறைவானதுதான்.

A_Muttulingam_Bala_Pics_2

ஜெயமோகன்: இலக்கியத்திலிருந்து ஒரு படைப்பாளியின் கவனம் திசை திரும்புவது என்பது வெறுமே புறச்சூழல் சார்ந்த விஷயம் அல்ல. அவனது நம்பிக்கைகளில், நுண்ணுணர்வில் ஏற்பட்ட மாற்றம் அல்லவா?

ஜெயமோகன்: எல்லா எழுத்தாளர்களும் ஏதோ ஒரு புறச்சூழல் சார்ந்த விஷயமே தங்கள் எழுத்துக்கு குந்தகமாக இருந்தது என்று சொல்வதுண்டு. ஒரு ஆங்கில எழுத்தாளர் பதினாலு வருடங்களாக எழுதவில்லை. உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும் அதை சூழ்நிலை மேலே போட்டு தப்பித்துவிடுவார்கள். என் விஷயத்திலும் அப்படி நடந்திருக்கலாம்.

ஜெயமோகன்: மரபிலக்கிய பயிற்சி உண்டா?

அ.முத்துலிங்கம்: எங்கள் நாட்டு கல்விமுறை தெரிந்ததுதான். எட்டாம் வகுப்பு வரைக்குமே படிப்பு தமிழில் இருந்தது. அதற்குப் பிறகு முற்றிலும் ஆங்கிலத்தில். தமிழ் ஒரு பாடம் மட்டுமே. அதிலும் எல்லாம் விஞ்ஞானப் பாடங்கள். பல்கலைக் கழகத்திலும், அதற்குப் பின் வந்த படிப்புகளிலும் ஆங்கிலமே தொடர்ந்தது. ஆனபடியால் படிப்பு முடிந்தபோது ஆங்கில அறிவும், தமிழ் அறிவும் கிட்டத்தட்ட ஒரு லெவலிலேயே இருந்தது. இரண்டுமே மோசமான கீழ் நிலையில். எங்கள் பாடத்திட்டம் அப்படி. அதற்குப் பிறகு நானாக தேடிப் படித்த இலக்கியங்கள் தான் என்னிடம் எஞ்சின.

இதில் வேறொன்றை கவனிக்கவேண்டும். சேக்ஸ்பியர் பிறந்தது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவர் காலத்தில் இருந்த ஆங்கிலம் தற்காலத்து ஆங்கிலத்தில் இருந்து சிறிதளவே மாறுபட்டு இருந்தது. இருந்தாலும் என்னுடைய ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு சேக்ஸ்பியரை என்னால் ஓரளவுக்கு படித்து விளங்கிக்கொள்ள முடிந்தது.

ஆனால் தமிழ் அப்படியில்லை. இருக்கும் தமிழறிவை வைத்துக்கொண்டு எங்கள் பழம் இலக்கியங்களைப் படித்து முற்றிலும் விளங்கிக்கொள்ள முடியாது. முறையாகப் பாடம் கேட்க வேண்டும். இதனாலேயே பல தமிழ் படைப்பாளிகள் தங்கள் பாரம்பரிய இலக்கியங்களை கற்க முடியவில்லை. அதற்கு வேண்டிய நேரமும் முயற்சியும் வாய்ப்பது அபூர்வம். நான் என் தனி முயற்சியில் சிலதைக் கற்றிருக்கிறேன். உரைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இயன்ற அளவில் படித்ததுதான். அனால் அது முறையான படிப்பாகாது.

சமீபத்தில் படித்த சில இலக்கிய ஆய்வுகளையும், நயங்களையும் பார்த்த பொழுது எவ்வளவோ விஷயங்களை நான் தவறவிட்டது தெரிகிறது.

நான் அறிந்த மட்டில் பல நவீன இலக்கியக்காரர்கள் மரபு இலக்கியமே தேவை இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அவற்றை படிப்பது நவீன இலக்கியத்துக்குள் புக பெரும் தடையாக இருக்கும் என்றுகூட சொல்வதுண்டு.

நியூட்டனுடைய அசைவு பற்றிய மூன்று விதிகளையும் படித்த ஒரு மாணவன் சொன்னான். ‘ஐயா, 300 வருடங்களாக இந்த மூன்று விதிகளையுமே திருப்பி திருப்பி சொல்லிக் கொடுக்கிறீர்கள். மாணவர்களுக்கு போர் அடிக்கிறது. இனிமேல் ஏதாவது புது விதிகள் சொல்லித் தாருங்கள். ‘ இப்படித்தான் இருக்கிறது. பின் வந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் ஆதாரம் நியூட்டனின் விதிகள்தான். அது போலத்தான் இலக்கியமும். நவீன இலக்கியத்தை அறிவதற்கு மரபு இலக்கியம் மிகவும் முக்கியமானதென்றே நான் நினைக்கிறேன்.

ar04270322

ஜெயமோகன்: மரபில் யார் பிடித்த கவிஞர்?

அ.முத்துலிங்கம்:பாரதியாரை எனக்கு பிடிக்கும். அவருடைய மேதையை அறிவதற்கு அவர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சாம்பிளைப் படித்தாலும் அதை உணரமுடியும். எல்லோரும் உதாரணம் காட்டும் வரிகள் ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் ‘ அல்லது ‘காக்கை குருவி எங்கள் ஜாதி ‘ தான். ஆனால் எனக்குப் பிடித்த வரிகள் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ பாடலில் வரும் ‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் ‘ என்ற வரிகள்தான். இந்த வரிகள் சொல்லும் தத்துவத்தை யாரால் மறக்கமுடியும். வறுமையின் காரணம் தெரியாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை.

ஜெயமோகன்: நவீன இலக்கியத்துடன் எப்படி அறிமுகம்? பிடித்த படைப்பாளிகள் யார்?

அ.முத்துலிங்கம்:பதினேழாவது வயதுவரை நான் படித்தது கல்கி, மு.வரதராசன், காண்டேகர் போன்றவர்களைத்தான். எங்கள் ஊரில் வாசிகசாலை என்பதே இல்லை. பள்ளிக்கூடத்திலும் சொல்லக்கூடியதாக நூல்கள் இருக்கவில்லை. காசுக்கு புத்தகம் வாங்கலாம் என்ற விஷயமே தெரியாது. படித்தது முழுக்க இரவல் புத்தகங்கள்தான். அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் எவ்வளவு கைகள் மாறும் என்று இப்பொழுது நினைத்தாலும் பயங்கரமாக இருக்கிறது. முன் அட்டை கிழிந்தும், பின் அட்டை இல்லாமலும், கடைசிப் பக்கங்களை ஊகித்து அறிய வேண்டிய நிர்ப்பந்தம் தந்தபடியும் காட்சி அளிக்கும். ஒரு முறை நான் பல நாட்கள் செலவழித்து, பாடப் புத்தகத்தில் ஒழித்து வைத்து படித்த ஒரு நாவலின் முடிவை அறிவதற்காக பல மைல் தூரம் நடந்துபோய் ஒரு நண்பனிடம் கெஞ்சி முடிவை தெரிந்துகொண்டேன். அந்தக் காலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஒரு புத்தகம் 40, 50 பேர்களால் படிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான் முதன்முதல் புதுமைப்பித்தனைப் பற்றி கேள்விப்பட்டேன். அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் கைலாசபதி. அப்பொழுது அவர் தினகரன் ஆசிரியராக இருந்தார். நான் அவரிடம் இரவல் வாங்கி புதுமைப்பித்தனின் படைப்புகள் எல்லாவற்றையும் படித்தேன். கு.பா.ரா, ரகுநாதன், மெளனி, பி.எஸ். ராமையா, பிச்சமூர்த்தி என்று ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார். இப்படி ஒரு உலகம் இருப்பதே அப்போது எனக்கு தெரியாது. பேராசிரியர் கா.சிவத்தம்பியும் ( அப்பொழுது அவர் கல்லூரி ஆசிரியர்) கைலாசபதியும் நல்ல நண்பர்கள். அவர்களுடைய தீவிரமான உரையாடல்களில் நானும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவேன். அப்பொழுதுதான் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இருவருமே ஊக்குவித்தார்கள்.

இப்பொழுது தமிழில் பெரிய மறுமலர்ச்சி ஒன்று நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் இணைய தளங்களும், மின்னஞ்சல் வசதிகளும். நிறைய புது எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அருமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. அவர்களுடைய தமிழும், எழுத்தும், புதுமையும் என்னை ஈர்க்கிறது. ஒருவரையாவது உதாசீனம் செய்யமுடியாது. எல்லோரிடமும் ஏதாவது ஒரு புது விஷயம் கற்றுக்கொள்ள இருக்கிறது. சமகாலத்து தீவிர எழுத்தாளர்கள் எல்லோரையுமே பிடிக்கும். கி.ரா, அசோகமித்திரன், சு.ரா, ஜெயமோகன், அம்பை என்று சொல்லிக்கொண்டு போகலாம். அவர்களுடைய பெயர்களை சொல்வதானால் பல பக்கங்கள் பிடிக்கும்.

பாரபட்சமின்றி நான் எல்லாவிதமான புத்தகங்களையும் படிப்பேன், நிலக்கடலை சாப்பிடுவதுபோல. பிரித்து உள்ளே இருக்கும் இனிப்பான சமாச்சாரத்தை உண்டுவிட்டு தோலை வீசிவிடுவேன். புத்தகங்களும் அப்படியே. உள்ளுக்கு இருக்கும் சாரமும், அதன் சொல்முறை, உத்தி போன்றவையும் நினைவிலிருக்கும். புத்தகத்தின் பெயரோ, ஆசிரியரின் பெயரோ ஞாபகத்தில் நிற்காது.

இன்னொரு பழக்கம் உண்டு. ரயில் வண்டியில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குவதுபோல புத்தகம் படிப்பேன். ஒரு ஆசிரியரைப் பிடித்துவிட்டால் அவர் புத்தகங்களை மட்டும் தேடி வாங்கி வாசிப்பேன். கொஞ்ச நாளைக்கு அவர் பற்றிய ஞாபகம்தான். பிறகு வேறொரு எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிடுவேன். அப்பொழுது அவரை மிஞ்சிய எழுத்தாளர் இல்லை என்று எனக்குப் படும். இன்னொருவருடைய புத்தகத்தை படிக்கும் வரைக்கும்.

Toni Morrison ஐப் படித்தபோது அவரை மிஞ்ச ஒருவரும் இல்லை என்று நினைதேன். பிறகு Norman Mailer; அதற்கு பிறகு Tom Wolfe. இப்பொழுது Raymond Carver என்று ஒரு எழுத்தாளர். அற்புதமாக எழுதுகிறார். மிகச் சாதாரணமான எழுத்து; சாதாரணமான சம்பவங்கள். ஆனால் அவரைப் படிக்கும்போது ஒரு அசெளகரியம் ஏற்படுகிறது. ஏதோ மன உளைச்சல். என்ன என்று தொட்டு சொல்லமுடியாது. ஆனால் மறக்கவும் முடியாது. அது அவருடைய ரகஸ்யம். ஒரு கதையை Rain threatens என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறார். இரண்டு சொற்களில் ஒரு பக்கத்தில் சொல்லவேண்டியதை அவர் சொல்லிவிடுகிறார்.

am

ஜெயமோகன்: முற்றாகவே இலக்கிய அரசியலுடன் தொடர்பற்றிருக்கிறீர்கள்? ஏன்? அது ஒரு நிலைபாடா? உங்களுக்கு கருத்துக்கள் இல்லையா? கோபதாபங்கள் இல்லையா?

அ.முத்துலிங்கம்:இலக்கிய அரசியல் என்று வரும்போது நீங்கள் ஒரு கூடாரத்தில் அடைக்கப்பட்டு விடுகிறீர்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன எழுதினாலும் உங்களைப் புகழ்ந்து பாராட்ட ஒரு குழு இருக்கும். பாராட்டிக்கொண்டே இருப்பார்கள். அதே சமயம் எவ்வளவு உன்னதமான படைப்பாக இருந்தாலும் உங்கள் எதிர் கூடாரத்தினர் உங்கள் படைப்பை கொடுமையாக விமர்சிக்கவேண்டும். செய்வார்கள். இது விதி.

கூடாரங்கள் இருக்கலாம். அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் இலக்கியம் கூடாரத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தரமான இலக்கியத்தை நிர்ணயிக்கும்போது கூடாரம் இடையிலே வரக்கூடாது.

எனக்குத் தெரிந்த ஒரு இலக்கியக்காரர் ‘இவருடையதைப் படித்து என்ன பிரயோசனம். மோசமான பேர்வழி’ என்றார். இதுவும் அதேமாதிரிதான். ஒழுக்க சீலர் எழுதியது எல்லாம் சிறந்த இலக்கியம் ஆகிவிடுமா?

பாரதியார் கஞ்சா பழக்கம் உடையவர். ஆனால் அவர் படைப்புகள் தமிழ் நாட்டை நிமிர்ந்து உட்கார வைத்தது. ஜெவ்ரி ஆர்ச்சர் என்ற ஆங்கில எழுத்தாளர் பொய்ச் சத்தியம் செய்ததற்காக நாலு வருடம் சிறையில் தள்ளப்பட்டார். அவருடைய எழுத்துக்களை மறக்கலாமா? ஜீன் ஜெனே என்ற பிரஞ்சு எழுத்தாளர் ஒரு குடிகாரன். திருடன். சிறையில் இருந்தவன். இன்னும் எத்தனையோ கெட்ட பழக்கங்கள். ஆனால் அவனுடைய உலகத்தரமான படைப்புகளை நாங்கள் அதை வைத்து தீர்மானிக்க முடியுமா?

ஜெயமோகன்: இலக்கிய விமரிசனக் கருத்துக்கள், கொள்கைகள் ஆகியவற்றை கவனிப்பீர்களா? அவற்றால் பயனுண்டு என எண்ணுகிறீர்களா?

அ.முத்துலிங்கம்:இப்பொழுது, முன்பு எப்பொழுது இருந்ததிலும் விட, இணைய இதழ்களில் விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெறுகின்றன. உலகம் முழுவதிலும் இருந்து இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் பங்கெடுக்கிறார்கள். மின்காந்த வேகத்தில் இவை உலகத்தின் நாலா பக்கமும் போய் சேருகின்றன. உடனேயே எதிர்வினைகளும் பறக்கின்றன. அதற்கு பதில்கள் என்று இணைய தளங்கள் சூடு பிடிக்கின்றன. எவ்வளவு சுவாரஸ்யம். இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப்போக இந்த விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் அவசியம்.

சில வருடங்களுக்கு முன் ஒரு புத்தக விமரிசனம் படித்தேன். அது கிட்டத்தட்ட இப்படி இருந்தது. ‘இந்த அம்மா ஐந்து வருட காலமாக ஆராய்ச்சி செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார் என்று தெரிய வருகிறது. இந்த அம்மாவின் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழில் இருந்து பொருளை பிய்த்து எடுப்பதற்கும் எனக்கு கிட்டத்தட்ட அதே அளவு காலம் தேவைப்படலாம். மேலும் ஒரு ஐந்து வருட காலம் அவகாசம் எடுத்து இந்த நூலை அவர் எளிமையாக எழுதியிருக்கலாம். சிறப்பாக வரும். எழுதாமலே விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ‘

இந்த மாதிரி ஓர் அலசல். ஐந்து வருட காலம் ஆராய்ச்சி செய்து, லாப நோக்கம் இல்லாமல் ஒருவர் ஒரு நூலை எழுதினால் அதற்கு என்ன அர்த்தம். அவருடைய இலக்கிய ஈடுபாடுதான். இவ்வளவு கொடுமையான விமர்சனம் தேவையா? அந்த புத்தகத்தில் இருந்து பெறுவதற்கு ஒரே ஒரு நல்ல அம்சம்கூட இல்லையா. புத்தகத்தில் உள்ள நல்லவற்றையும், தள்ளவேண்டியவற்றையும் எழுத்தாளர் மனம் புண்படாமல் சொல்லியிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன்.

புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் இடையில் நடந்த ‘பத்தாயிரம் அடி வேண்டுமா? ‘ விவாதங்களை இன்றுவரைக்கும் நாங்கள் பாதுகாத்து வைத்து அனுபவிக்கிறோம். அதன் இலக்கியத்தரம் எங்களை அசரவைக்கிறது. ஆனால் இங்கேயும் அவர்கள் சில இடங்களில் சமநிலை இழந்து சொந்த முறையில் தாக்குதல்கள் ஆரம்பிப்பதை பார்க்க முடிகிறது.

விவாதங்கள் தேவை. விமர்சனங்கள் தேவை. அவையே இலக்கியத்தை வளர்ப்பன. ஆனால் அதுவே தனி மனித வசைபாடல் என்று இறங்கும்போது இலக்கிய தரத்தை இழந்துவிடுகிறது.

kesavamani_amuttu (1)

ஜெயமோகன்: எப்போது வெளிநாட்டு வாழ்வு தொடங்கியது? ஆப்பிரிக்க அனுபவங்கள் உங்கள் மன அமைப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமென எண்ணுகிறீர்கள்?

அ.முத்துலிங்கம்:1972ம் ஆண்டிலேயே என் வெளிநாட்டு பயணம் தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு நான் இலங்கைக்கு போன சந்தர்ப்பங்கள் வெகு குறைவுதான். மிஞ்சிப்போனால் இந்த முப்பது வருடங்களில் ஒரு ஆறு தடவை போயிருக்கலாம்.

முதலில் போனது ஆப்பிரிக்காவுக்குத்தான். ஓர் அரசாங்க தொடர்பான நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை. வேலையில் எனக்கு பல அனுபவங்கள். இலங்கையில் பத்து வருட காலத்தில் ஒருவர் பெறக்கூடிய அனுபவத்தை சில வருடங்களிலேயே இங்கே அடையக்கூடியதாக இருந்தது.

ஆனால் எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சியானது சொல்லி மாளாது. மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அவ்வளவு சொல்லும்படியாக இருந்திருக்காது. புத்தகங்கள் வாயிலாகவும், சினிமா மூலமும் நாம் நிறைய அறிந்துவைக்க முடிந்திருந்தது. ஆனால் ஆப்பிரிக்கா அப்படியல்ல. நான் நேரில் பார்த்து அதிசயித்த இரண்டு சம்பவங்களை சொல்கிறேன். இது நடந்தது மேற்கு ஆப்பிரிக்காவில்.

ஒரு கடையில் வேலைபார்த்த இந்தியர் இறந்துவிட்டார். இங்கு இறந்தவர்களை சில நாட்கள் வைத்துவிட்டு பிறகுதான் புதைப்பார்கள். இந்தியரின் பிணத்தை இறந்த அன்றே மயானத்தில் அவசர அவசரமாக விறகு வாங்கி அடுக்கி எரித்துவிட்டார்கள். இதைப் பார்த்து ஆப்பிரிக்கர்கள் மிரண்டு போனார்கள். எட்டத்தில் நின்று பார்த்தார்கள். அவர்கள் கண்கள் குத்திக்கொண்டு நின்றன.

ஒரு ஆப்பிரிக்கர் பிறகு என்னிடம் பேசினார். இந்த இந்தியர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள். விறகு கட்டை எரிப்பதுபோல எரித்து தள்ளிவிட்டார்கள். எங்கள் கிராமத்தில் மூன்று, நாலு நாட்களாவது வைத்து மரியாதை செய்வோம். பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இருதயத்தையோ, ஈரலையோ ஒரு சிறு பகுதி எடுத்து உட்கொள்வோம். அப்போது அவர்கள் என்றென்றும் எங்களுடன் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லவா. இந்த சிறு மரியாதை கூடவா மரணித்தவருக்கு செய்ய முடியாது என்றார். நான் என்னத்தை சொல்வது.

இன்னொரு சம்பவம். நான் அங்கு இறங்கி சில மாதங்களில் நடந்தது. நான் வசித்த இடத்தில் இருந்து ஒரு நூறு மைல் தொலைவில் வைரங்கள் விளைந்தன. ஆற்றுப் படுகையில் இவை விளைந்ததால் கிராமத்தவர்கள் சிறு சிறு கும்பலாக கூடி அரித்து எடுப்பதை பார்க்கலாம். ஒரு முறை காரில் செல்லும்போது இப்படி மூன்று இளம் பெண்கள் ஆற்றின் கரையில் அரித்தபடி நின்றார்கள். மேலே ரீசேர்ட்டும் கீழே லுங்கிபோல ஒரு லப்பாவை அணிந்துகொண்டு. அது அழகான காட்சியாக இருந்தது. மொழிபெயர்ப்பதற்காக சாரதியையும் அழைத்துக்கொண்டு படம் எடுக்கும் நோக்கத்துடன் அவர்களிடம் போனேன். அவர்கள் வெட்கப்பட்டு நெளிந்தார்கள். இது பெரிய ஆச்சரியம். ஏனென்றால் அப்படி வெட்கப்படுவது அங்கே வழக்கமில்லை.

பிறகு விஷயம் புரிந்தது. மரத்தின் பின்னே சென்று ரீசேர்ட்டை கழற்றிவிட்டு, இயற்கையான பிறந்த அழகுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார்கள். அவர்களுக்கு வெட்கமே இருக்கவில்லை. வேலை செய்வதற்காக அவர்கள் அணிந்தது ரீசேர்ட். அசிங்கமாக அதை அணிந்தபடி படத்தில் காட்சிதர அவர்கள் விரும்பவில்லையாம்.

இப்படி பல அதிர்ச்சிகள். பெண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையில் இருந்தார்கள். சந்தையில் வியாபாரம், வயல் வேலை, மாடு வளர்ப்பது இப்படி ஒன்று. ஆண்களைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு தாய்வழிச் சமூக அமைப்புத்தான். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அளவுக்கு மணம் முடிப்பதில் ஆர்வமில்லை. இங்கே நிறையப் பாடங்களைப் படித்தேன். கண்களைத் திறந்து வைக்கவும் பழகினேன்.

A_Muttulingam_Amuttu_Muthulingam_DSC_0291

ஜெயமோகன்: எழுத வேண்டுமென தூண்டுதலை இந்த வாழ்பனுபவங்கள் ஏற்படுத்தவில்லையா?

அ.முத்துலிங்கம்:ஆப்பிரிக்க அனுபவங்கள் உண்மையிலேயே என்னிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவர்கள் சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு முன் 3, 4 தரம் நலம் விசாரிப்பார்கள். அவசரம் காட்டாமல் ஆற அமர உங்களை உபசரிப்பார்கள்.

பெரிய உள்ளம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய குற்றத்தையும் மன்னிக்க தயாராக இருப்பார்கள். வர்க்க வேறுபாடு கிடையாது. மிகப் பெரிய அதிகாரியும், கடைநிலை ஊழியரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சிரித்து பேசுவார்கள். கீழ் ஊழியர்கள் வணக்கம் சொல்லும்போது பெரியவர்கள் தலையை விறைப்பாக வைக்க மாட்டார்கள்; ஒரு இன்ச் தூரத்துக்கு குனியமாட்டார்கள். அதிசயமாக முழு வாயை திறந்து பதில் வணக்கம் தெரிவிப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய உபசரிப்பு குணம். ஏழையிலும் ஏழையாக இருந்தாலும் இருப்பதை விருந்தாளிகளுடன் பங்குபோட தயங்க மாட்டார்கள். இப்படி பல உதார குணங்கள்.

இந்த பின்புலங்களை வைத்து எத்தனையோ படைப்புகளை உருவாக்கும் ஆசை இருந்தது. ஆனால் நிறைவேறவே இல்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது எழுதி இருக்கலாம் என்று படுகிறது.

வாழ்க்கை என்னை மீறிப் போவதை பார்த்து நின்று, மீண்டும் மீண்டும் அதைப் பிடித்தபடி இருக்கிறேன். கொஞ்சம் அசந்தாலும் அது தாண்டிப் போய்விடுகிறது. கழிவறையில் பாவிக்கும் காகிதச் சுருள் ஆரம்பத்தில் மெதுவாக உருளும், காகிதம் முடியும் தறுவாயில் வேகமாக உருளும். இதுவே மனிதனுடைய நியதிபோலும்.

ஜெயமோகன்: எளிமையாகவும் நேரடியாகவும் எழுதுகிறீர்கள். அப்படி ஒரு கொள்கை கொண்டிருக்கிறீர்களா? அல்லது உங்கள் இயல்பா? எளிமையற்ற சிக்கலான அகம் கொண்ட ஆக்கங்கள் ( உதா: மெளனி, தாஸ்தயேவ்ஸ்கி ) உங்களை கவர்வதில்லையா?

அ.முத்துலிங்கம்:சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். அதிலே ஒரு கோமாளி மேசையை தாண்டி பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்கு பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்கு தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், தண்ணீர் ஆற்றில் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.

சமீபத்தில் இங்கே ‘கான்கான் ‘ நடனம் ஒன்றைப் பார்க்கப் போயிருந்தேன். இளம் பெண்கள் எல்லாம் காலை நெற்றிக்கு மேலே துக்கி ஆடும் நடனம். இதிலே ஒரு முதியவரும் அடக்கம். அவரால் காலை இடுப்புக்குமேல் தூக்க முடியவில்லை. ஆனாலும் எல்லோரும் அவரைத்தான் பார்த்தார்கள். அவருடைய அசைவுகள் எளிமையாகவும், ரசிக்கத்தக்கவையாகவும் இருந்தன. காரணம் அந்த நடனத்தில் வாழ்நாள் முழுக்க அவர் செய்த அப்பியாசம் என்று தெரிந்தது.

J.D.Salinger என்று ஒரு எழுத்தாளர். அவர் இளவயதில் எழுதிய ஒரேயொரு நாவல்தான் ‘The Catcher in the Rye ‘. இன்றும் அவர் எழுதினால் மில்லியன் டொலர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பேசும் இந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது. எளிமையான எழுத்துதான். ஒரு பதின்பருவத்து பையனைப் பற்றியது. அந்த எழுத்தின் எளிமையும், ஆழமும் அபூர்வமாக அமைந்தவை.

பாரதியார் கவிதை, கட்டுரை என்று எழுதிய பிறகு அவற்றை உரக்க வாசித்து காட்டுவார். கேட்போரின் முகக்குறிப்பை பார்த்துக்கொண்டே படிப்பார். புரியாத சில வார்த்தைகள் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு வேறு வார்த்தை போடுவாராம். பாரதியாருக்கு அவர் எழுதுவது வாசகருக்கு நேரடியாக போய் சேரவேண்டுமென்பது மிக முக்கியம்.

நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

ஆனால் மெளனி, Dostoevsky போன்றவர்களின் சிக்கலான எழுத்துக்களில் கூட அழகுண்டு. அது வேறு விதமான அழகு. இவர்களை நான் படித்து மிகவும் அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு கை வந்தது அது. எனக்கு இது சரிவருகிறது. நான் என் பாதையில் போகிறேன்.

palanivel

ஜெயமோகன்: கி.ராஜநாராயணனின் கதை சொல்லி போக்கு உங்களிலும் காணப்படுகிறதே? அதன் ஈழவேர் என்ன? அங்கேயுள்ள நாட்டார் மரபு குறித்து இங்கு ஒன்றும் தெரியாது.

அ.முத்துலிங்கம்:கி.ராவை நான் முதன்முதலில் படித்தது ஒரு பத்து வருடம் முன்புதான். ஒரு மாபெரும் உலகத்தின் கதவு எனக்கு அப்போது திறந்தது. நேராகக் கதை சொல்லும் போக்கு ஒரு தோழமையை உண்டாக்கிவிடுகிறது. இந்த முறையில் ஒரு நம்பகத்தன்மையை ஸ்தாபிப்பது பெரிய காரியமல்ல. எதைச்சொன்னாலும் வாசகர் நம்பிவிட வேண்டும். அப்படி வசீகரமான எழுத்து.

வட்டார வழக்கில் சொல்வது புதுமையாக இருந்தது. பல சொற்களுக்கு அர்த்தம் தெரியவே இல்லை. போகப் போக புரிந்துகொண்டு படிக்க முடிந்தது. சொல்லப்பட்ட விஷயம் அவ்வளவு காத்திரமாக இருந்ததால் இந்த வட்டார வழக்கு உதவி செய்ததே அன்றி கதையின் போக்கை தடை செய்யவில்லை.

அந்தக் காலத்தில் இருந்து என் கதைகளில் யாழ்ப்பாண வழக்கு இருக்கும். சம்பாஷணைகளில் அது ஒரு நிஜத்தன்மையை கொடுக்கும். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று முழு வட்டார வழக்கில் நான் கதை சொன்னதில்லை.

இதைப் பற்றி யோசிக்க நிறைய இருக்கிறது. வட்டார மொழிக்கதைகளை அந்நிய மொழியில் மாற்றம் செய்யும்போது என்ன நடக்கிறது. தானாக நிற்பதற்கு வேர் இல்லாமல் வட்டார வழக்கில் மட்டுமே நிற்குமாகில் கதை அடித்துக்கொண்டு போய்விடும். மாறாக காத்திரமான கதையாக இருந்தால் வட்டார வழக்கையும் மீறி கதையின் உயிர் துடிப்பு மாற்று மொழியில் வந்துவிடும்.

இது தவிர இன்னொரு ஆபத்தும் உண்டு. வட்டார வழக்கு என்பது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது. ஏன் கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடுகூட மாறுகிறது என்று சொல்லலாம். எங்கள் பக்கத்து வீட்டு பழக்கச் சொல்கூட எங்களுக்கு புதியதாக இருக்கலாம்.

இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு மொழியில் எழுதினால் தமிழின் கதி என்னாகும்? உலகத்தில் இருக்கும் தமிழர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிவதற்கு பதில் சிதறிப்போவதற்கு வழியாகிவிடும். இன்னும் எங்கள் கிராமத்தில் கடிகாரத்தை ‘உருளோஸ் ‘ என்று சொல்கிறவர்கள் ஒரு பத்துப் பேராவது இருக்கிறார்கள். அதற்காக ‘உருளோஸ் ‘ என்று எழுதினால் எத்தனை பேர் புரிந்துகொள்வார்கள்.

சமீபத்தில், அதாவது கனடாவில், ஒரு சம்பவம் நடந்தது. என் நினைப்பு என்னவென்றால் எங்கள் ஊர் வழக்கு மொழியில் எனக்கு நல்ல பாண்டித்தியம் என்று. எனக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர் அடிக்கடி ‘உடன் மீன் “உடன் மீன் ‘ என்று சொல்வார். அதை வாங்குவதற்கு சந்தைக்கும் போவார். நான் நினைத்தேன் அப்படி ஒரு பேர் கொண்ட மீன் கனடாவில் விற்கிறதென்று. பிறகுதான் தெரிந்தது Fresh Fish ஐத்தான் நண்பர் உடன் மீன் என்று சொல்கிறார் என்று. அவர்கள் கிராம வழக்கம் அப்படி. இதற்கு என்ன சொல்வது?

ஜெயமோகன்: ஈழத்து நாட்டார் வழக்கு/ நாடார் பண்பாடு[ folk culture] உங்கள் படைப்புலகில் உண்டா?.நாட்டார் பாடல்கள் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டா? உங்கள் இளமை நினைவுகளில் அவை இடம் பெற்றுள்ளனவா?

அ.முத்துலிங்கம்: சிறுவயதில் எனக்கு கிடைத்த exposure குறைவு. நாட்டார் பாடல்கள், சடங்கு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கிட்டவில்லை.

ஜெயமோகன்: கதையை ஒரு கதைசொல்லியாக “சொல்லும்போது ‘ சில புனைவு சிக்கல்கள் வருகின்றன. எப்போதுமே அக்கதைசொல்லி எல்லாவற்றிலும் இருந்த்ஹுகொண்டிருக்கிறான்.அவனுக்கு தெரியாத எதுவுமெ நடப்பதில்லை. மேலும் மன ஓட்டங்களின் நுட்பங்களை சொல்ல முடிவதில்லை. இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?

அ.முத்துலிங்கம்: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பல இடங்களில் புனைவு சிக்கல்கள் வந்து கதையை மேல நகர்த்துவதற்கு இடைஞ்சலாக அமைந்துவிடுவது உண்டு. அதற்குத்தான் முதலிலேயே தீர்க்கமாக சிந்தித்து சொல்லும் முறையை தீர்மானித்துவிடவேண்டும்.

இது ஒரு வித trade off தான். அதாவது ஒன்று கிடைக்கும்போது இன்னொன்றை இழந்து விடுகிறோம். உதாரணமாக கதைசொல்லி நேராகச் சொல்லும் கதையில் வாசகனின் மனதை முதல் இரண்டு வசனங்கள் முடிவதற்கிடையில் தொட்டுவிடலாம். வெளியே நின்று கதை சொல்லும்போது உங்கள் சாமர்த்தியத்தால் வாசகர்களை உணரவைப்பது சிரமமான காரியம்தான். ஆனால் முடியும்.

மன ஓட்டத்தின் நுட்பங்களை சித்தரிக்க வேண்டியது அவசியமாகப் பட்டால் நேரடியான பாணியை விடுத்து அதற்கேற்ப வேறு ஒரு பாதையை எழுத்தாளன் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எல்லாம் ஒருவித trade off தான். ஒரே கதையில் எல்லாவித வசதிகளையும் செய்துவைக்க முடியாது. ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது. இருப்பதை வைத்துத்தான் உங்கள் திறமையைக் காட்டவேண்டும்.

நேரடிக் கதைக்கு அருமையான உதாரணம் ஐஸக் பாஸீவிஸ் சிங்கர்தான். நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர். ‘அழுகை ‘ என்ற சொல் வராமலேயே அழவைத்து விடுவார். ‘சிரிப்பு ‘ என்ற சொல் வராமலேயே சிரிக்க வைப்பார். நேராகச் சொல்லும்போதே எப்படியோ நுட்பமான உணர்வுகளை கொண்டுவந்துவிடுவார். எளிமையிலும் எளிமையான எழுத்து. எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி.

A_Muttulingam

ஜெயமோகன்: எனக்கும் சிங்கர் மிகவும் பிடிக்கும்.அவர் ஒரு வகையான தல்ஸ்தோய். சொல் புதிதில் அவரது இரு கதைகளை பிரசுரித்துள்ளோம்.[ டெய்பலும் அவள் பிசாசும், சாவி] தமிழில் புதுவகை உத்திகளைப் பயன்படுத்துகிறவர்கள் மீதுதான் கவனம் விழுகிறது. சிங்கர் தன் சிறுகதை தொகுதியின் முன்னுரையில் உத்திகள்[ குறிப்பாக மாஜிக்கல் ரியலிசம் போன்றவை எழுத்தாளனின் ஆத்மார்த்தமான தன்மை அல்லது தார்மீக வேகம் குறைவாக இருப்பதன் தடையங்கள் என்று சொல்கிறார் என வாசித்த நினைவு. உங்கள் கருத்து என்ன?

அ.முத்துலிங்கம்: சிங்கர் அப்படிச் சொல்லியிருப்பதை நான் படிக்கவில்லை. உங்கள் ஞாபகசக்தியில் எனக்கு மதிப்பிருக்கிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. சில அருமையான magical realism கதைகளை நான் படித்திருக்கிறேன். அப்படியான உணர்வு எனக்கு ஏற்பட்டதே இல்லை.

மாயா யதார்த்தம் என்று சொன்னவுடன் ஞாபகத்துக்கு வருவது காப்ரியல் மார்க்வெஸ் எழுதிய ‘செவ்வாய் பிற்பகல் தூக்கம் ‘ என்ற கதைதான். தமிழிலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கதை என்று இதைச் சொல்லலாம். இதிலே இல்லாத தார்மீக வீச்சா? எனக்கு என்னவோ அவ்வளவு சம்மதமாக இல்லை.

ஜெயமோகன்: அவரது முழுக்கதைகள் தொகுப்பில் சொல்லியிருக்கிறார். மாந்திரீக யதார்த்தம் என பெயர் சொல்லவில்லை.ஆனால் அவர் சொன்ன காலகட்டம் மாந்திரிக யதார்த்த அலை எழுந்த காலகட்டம். சிங்கரில் ஒரு ராபி [rabbi] ஒளிந்திருக்கிறார். தல்ஸ்தோயில் ஒரு பாதிரி இருப்பதுபோல. உங்களுக்கு அறம் / ஒழுக்கம் சார்ந்த கவலைகள் உண்டா? அவற்றை உங்கள் கதைகள் வெளிப்படுத்தவேண்டுமென எண்ணுவீர்களா? இக்கவலைகள் இன்று out of fashion என்று கருதப்படுகின்றன.

அ.முத்துலிங்கம்: சிங்கருடைய தகப்பன் ஒரு ராபி மாத்திரமல்ல, கிராமத்து சண்டைகளை தீர்த்து வைக்கும் நீதிபதிகூட. ஆகவே அவர் கதைகளில் நீதி, ஒழுக்கம் சார்ந்த கவலைகள் வெளிப்பட்டிருக்கலாம். என் கதைகள் ஒழுக்கம், அறம் இவற்றிற்கு எதிரானவை அல்ல. என் கதைகளின் நோக்கம் உண்மை. பொருளிலும், சொல்லும் விதத்திலும் உண்மை இருக்கவேண்டும். வாசகனின் சிந்தனையை ஓர் உண்மையின் பக்கம் திருப்ப வேண்டும்.

சோமர்ஸெட் மோம் ( என்று நினைக்கிறேன்) எழுதுவதற்கு முன் வெகு நேரம் பென்சிலைக் கூராக்குவாராம். எழுத்து கூராக இருக்கவேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்ல. நேராக இருக்கவேண்டும் என்ற நோக்கமும்தான். இலக்கியம் என்பது வாழ்க்கை சார்ந்தது. விடுபட்டதை நிரப்பி முழுமையாக்குவது. மனித உயிரின் சிந்தனையை தூண்டி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அதை நகர்த்துவது. உண்மையை சொல்லும்போது மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

ஜெயமோகன்: நீங்கள் மாறுபட்ட கூறுமுறைகளை பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம் கொண்டவரா? (அது இலக்கியத்துக்கு அவசியம் ஒன்றுமில்லை.)

அ.முத்துலிங்கம்: ஒரே கூறு முறையை நான் பின்பற்றவில்லை. மாறுபட்ட முறைகளை பல கதைகளில் பரீட்சித்துப் பார்த்தபடியே இருக்கிறேன். ‘செங்கல் ‘, ‘நாளை ‘, ஏவாள் ‘, ஆயுள் ‘, ‘கொழுத்தாடு பிடிப்பேன் ‘ என்று பலவிதமான உத்திகளையும், கூறு முறைகளையும் என் கதைகளில் காணலாம். இன்னும் பல முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆசையிருக்கிறது.

அதற்காக முதலிலேயே உத்தியை தீர்மானித்துவிட்டு பிறகு நான் கதையை தேடுவதில்லை. சொல்லப்போகும் பொருள்தான் வடிவத்தையும் உத்தியையும் தீர்மானிக்கிறது. புதுமையை தேடுவதே இலக்கியம்.

A_Muttulingam_Bala_Pics_3

ஜெயமோகன்: உங்கள் ஆக்கங்களில் எள்ளல், அங்கதம் ( ஐரனி) ஒரு பொது தொனியாக உள்ளது. மனிதர்களை, வாழ்க்கை சந்தர்ப்பங்களை வேடிக்கை பார்க்கிறீர்களா? இம்மன நிலைக்கு உங்கள் ஆளுமை சார்ந்து என்ன காரணம்? ஆனால் உங்கள் முக்கியமான பல கதைகளில் அதை தாண்டி கவித்துவம் சாத்தியமாகி உள்ளது. (உதா: கறுப்பு அணில், பூமாதேவி ) எது உங்கள் அசலான தேடல்?

அ.முத்துலிங்கம்: புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் ‘க.நா.சு என்பவர் ஏழடுக்கு மாடியில் உட்கார்ந்துகொண்டு உலகத்தை உய்விக்கும் பொருட்டு சில அபூர்வக் கருத்துக்களை சொல்கிறார்’ என்ற மாதிரியாக ஆரம்பிக்கிறார். இதை யோசித்துப் பாருங்கள். க.நா.சு மூன்றடுக்கு மாடியில் உட்கார்ந்துகொண்டு தன் கருத்துக்களை சொல்லியிருந்தால் புதுமைப்பித்தன் ஏற்றுக்கொண்டிருப்பாரா. அல்லது க. நா.சு ரோட்டோரத்தில் நின்று தன் அபிப்பிராயத்தை சொல்லியிருந்தால் புதுமைப்பித்தன் சம்மதமாகி இருப்பாரா? கேள்வி என்னவென்றால் ‘ஏழடுக்கு மாடிக்கும்’ அவர் சொல்ல வந்ததற்கும் என்ன சம்பந்தம். இதுதான் புதுமைப்பித்தனுடைய கிண்டல் குணம். அவருடனேயே பிறந்தது. அவருடைய கட்டுரைகளிலும், கதைகளிலும் அது பரவியிருப்பதை காணலாம்.

என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் சில அங்கதச் சுவை கொண்டு இருக்கின்றன. அது கதைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும், அவசியமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் கால, நேரம், இடம் தெரியாமல் எல்லா கதைகளிலும் புகுந்து விட்டால் அது சரியென்று எனக்கு படவில்லை. கதையை ஒட்டி இயல்பாக அமைவதுதான் நல்லாக இருக்கும்.

என்னுடைய கதைகள் பலவற்றில் கிண்டல் என்பது கிட்டவும் வரவில்லை. கதையின் திசையை அவை மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

ஜெயமோகன்: ஆனால் உங்களுக்கு சொல்லும் முறை [expression] சார்ந்து ஒரு ஆர்வம் உள்ளது என்று படுகிறது. குறிப்பாக வேடிக்கையான சொற்றொடரமைப்புகளில். அதன் தனிப்பட்ட காரணம் என்ன?

அ.முத்துலிங்கம்: Lynne Mc Taggart என்பவர் எழுத்தாளருடைய திறமை எல்லாம் அவர் தன் எண்ணத்தை எப்படி வார்த்தைகளில் கொண்டுவருகிறார் என்பதில்தான் தங்கி இருக்கிறது; அதற்காக அவர் இரவு பகலாக தன் தலைமுடியை பிய்த்துக்கொண்டு ஒரு புதுச் சொல்லையோ, வார்த்தைக் கோர்வையையோ, அலங்காரத்தையோ உண்டாக்குகிறார் என்று சொல்கிறார். இது எனக்கு மிகவும் உடன்பாடான ஒரு கருத்து. சேக்ஸ்பியரை ‘வார்த்தைகளின் மிகச் சிறந்த மந்திரவாதி ‘ என்று ஏன் சொன்னார்கள்?

ஒரு எழுத்தாளருக்கு வார்த்தை அடுக்கு மிகவும் முக்கியம். ‘அவன் மரத்தின் உச்சிக்கு ஏறினான் ‘ என்று எழுதுகிறோம். அதையே ஒரு எழுத்தாளர் ‘He climbed and climbed till there was no more tree’ என்று எழுதுகிறார். அதே வார்த்தைகளை வைத்து என்ன ஜாலம் செய்திருக்கிறார். அவர் சொல்ல வந்ததும் எங்களுக்கு தலையிலடித்ததுபோல புரிந்துவிடுகிறது.

ஜெயமோகன்: உத்தி சோதனைகளில் எது உங்கள் தேவையாக பொதுவாக அறியப்படுகிறது உங்களால்? [உதாரணமாக எனக்கு ஒரே உண்மையின் மாறுபட்ட தரப்புகளை ஒரே சமயம் சொல்லும் உத்தியே தேவை என உணர்கிறேன்]

அ.முத்துலிங்கம்: உத்தி சோதனைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொருள்தான் உத்தியையும் தீர்மானித்து விடுகிறது.

சமீப காலங்களில் எனக்கு anti-hero வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் சாத்தியப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கதையை நகர்த்திக்கொண்டு போகும்போது வாசகர் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது நான் மெள்ள நழுவிவிடுவேன். வாசகர் எப்படியான முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அவருடைய திண்டாட்டமே என் திருப்தி.

muthulingam-912x480

ஜெயமோகன்: புதுக்கவிதை படிப்பீர்களா? (என் பார்வையில் இது நவீன எழுத்தாளரின் மொழிப்பிரக்ஞையை அளக்கும் அளவுகோல்.) எந்த வகை கவிதைகள் பிடிக்கும்? உதாரணமான பெயர்கள்.

அ.முத்துலிங்கம்: புதுக்கவிதை படிப்பேன். நிறைய என்று சொல்ல முடியாது. யார் எழுதியது என்று பார்த்து வைக்கும் பழக்கமும் இல்லை. படித்தவுடன் பிடிக்கவேண்டும். அல்லாவிட்டால் மூளையை கசக்கி அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.

நான் படிக்கின்ற காலத்தில் எங்களுக்கு asrtronomy ஒரு பாடமாக இருந்தது. என்னை சுட்டுப் போட்டாலும் எனக்கு அது வரவில்லை. மூளையின் எல்லா பாகத்தையும் உபயோகிக்க வேண்டும். அப்படி வருந்திப் படிக்கும்போது சிலவேளைகளில் அது புரிவதுண்டு. அப்போது ஒரு அபூர்வமான சந்தோசம் கிடைக்கும்.

அப்படியான ஒரு சந்தோசத்தை நான் கவிதையில் எதிர்பார்ப்பதில்லை. கவிதை சந்தோசம் அகம் சார்ந்தது. மூளையை கசக்கி பிரயோகிக்க தேவையில்லை. கவிஞருடைய மனதுக்கும் உங்களுடைய மனதுக்கும் இடையில் படிக்கும்போதே ஒரு பாலம் ஏற்பட்டுவிடவேண்டும்.

எங்கள் ஊரில் நீச்சல் கற்பதற்கு குளத்துக்கு கூட்டிக்கொண்டு போவார்கள். இரண்டு ஒல்லித் தேங்காய்களை இரண்டு பக்கமும் கட்டிக்கொண்டு பயிற்சி நடக்கும். சில நாட்கள் சென்ற பிறகு தேங்காய் இல்லாமலே மிதக்கப் பழகிவிடுவோம். கால்களையும், கைகளையும் எப்படி அடிப்பது, பிரதானமாக எப்படி அடிக்கக் கூடாது என்பது தெரிந்துவிடும்.

அது போலத்தான் கவிதை வாசிப்பும். சில பயிற்சிகள் ஆரம்பத்தில் தேவை. சில தடைகளை தாண்ட இந்த அப்பியாசம் அவசியம். அதற்குப் பிறகும் நீங்கள் படிக்கும் கவிதை உங்களை தொடவில்லை என்றால் அதை என்ன சொல்வது. அரசனின் பட்டு அங்கிபோல எல்லோரும் ஒரு கவிதையை பிரமாதம் என்று சொன்னால் அதற்காக நீங்களும் சேர்ந்து தலையை ஆட்ட முடியாது. சில கவிதைகள் அப்படித்தான். உங்களை வேலை வாங்கிக்கொண்டு இருக்கும். அவற்றை நான் வெகு சீக்கிரத்தில் இனம் கண்டுபிடித்து தள்ளி சென்றுவிடுவேன்.

இதைப் பாருங்கள். சல்மாவின் கவிதை.

நீ பெற்றுக்கொள்ளாமல் விட்டுச்சென்ற
எஞ்சிய பிரியங்களினால்
உருவாக்குவேன்
இன்னும் சில கவிதைகளை.

அல்லது இதைப் பாருங்கள். ஓர் ஈழத்துக் கவிஞர். பெயர் அகிலன்.

கடைசி நாள்
கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பிப் போயிற்று.

இந்தக் கவிதை எழுப்பிய ஓசை இன்னும் திரும்பிப் போகவில்லை.

அப்பாஸின் ஒரு பாடல். எப்பவோ படித்தது. அடிக்கடி நண்பர்களுக்கு சொல்லிக் காட்டுவேன். தன் மகளைப் பிரிந்து இருக்கும் தகப்பனைப் பற்றியது.

என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்துவிடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதியவேளையில்
வெளியேறும் பொழுதும்
என்னிடத்தில்
சொல்லிக்கொள்வதில்லை.
கேட்காமலும், சொல்லிக்கொள்ளாமலும்
வரும்,போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒருமுறை
வா
எனது மகளே.

இந்தப் பாடலில் ‘தகப்பன்’ என்ற வார்த்தை வரவே இல்லை. ஆனாலும் இது தகப்பனுக்கும் மகளுக்குமான உறவு என்று எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என் மனதை இது உலுக்கியது. பிரிவை இவ்வளவு அற்புதமாக கவிதையில் படிப்பது ஒரு தனி அனுபவம்.

சுப்பர் மார்க்கட்டில் போய் வேண்டியதை எடுத்து கூடையில் நிரப்புவதுபோல நானும் வேண்டிய கவிதைகளை எடுத்துக்கொண்டு மீதியை quantum mechanics தெரிந்த விஞ்ஞான மூளைக்காரரின் பாவனைக்காக விட்டுவிடுவேன்.

ஜெயமோகன்: பெரும்பாலும் நுட்பமான காட்சி சித்தரிப்பை நீங்கள் அளிக்கிறீர்கள். அக்காட்சி சித்தரிப்பில் படிம அம்சம் குறைவு. அது ஏன்? காட்சி என்பது ஒரு மனநிலை என நீங்கள் கருதுவதில்லையா?

அ.முத்துலிங்கம்: அவதானிப்பு வேறு; நுட்பம் வேறு. ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதுகிறார்.

கதைசொல்லி ஒரு வரவேற்பறைக்குள் வருகிறார். வரவேற்பாளினி உதாசீனமாக இருக்கிறாள். அவரைப் பார்க்கவில்லை. கை நகத்தை சிறு கைபைக்குள் இருந்து எடுத்த அரத்தினால் ராவுகிறாள். இவர் விசாரிக்கிறார். அப்பவும் அசிரத்தையான பதில்கள். இவ்வளவும் அவதானம். பின் அந்த வரவேற்பாளினி ‘வாயைக் குவித்து நகத்தில் ஊதுகிறாள் ‘ என்கிறார். இது நுட்பம்.

இன்னும் ஒன்று கேளுங்கள். ஒரு குழந்தை நாயுடன் விளையாடுகிறது. பந்தை குழந்தை எறிகிறது. நாய் போய் எடுத்து வருகிறது. குழந்தை இன்னொருமுறை எறிகிறது. நாய் குழந்தையையே பார்த்துக்கொண்டு நிற்கிறது. குழந்தை சுட்டு விரலை நீட்டிக் காட்டுகிறது. நாய் சுட்டு விரலை நக்குகிறது. இது நுட்பம்.

அவதானிப்புகளை நீட்டி எழுதிக்கொண்டே போகலாம். வாசகரை ஏமாற்றமுடியாது. நுட்பமான சித்திரங்களே கதைக்கு ஒரு நம்பகத் தன்மையையும், யோக்கியத்தன்மையையும் கொடுக்கும். ஒரு எழுத்தாளர் முக்கியமாக காட்சி சித்தரிப்பில் கவனம் செலுத்தவேண்டும். ஒரு பஸ் நூறு மைல் துரத்தை ஓடிக் கடந்தது என்று சொல்வதற்கு நூறு மைல் தூரத்தையும் வர்ணிக்கத் தேவை இல்லை. எது ஆணி வேரோ அதைப் பிடித்து ஒரு கோடி காட்டினாலே போதுமானது. வாசகர் புரிந்துகொள்வார்.

கதைகளில் படிம அம்சம் அமைவது தற்செயலானதுதான். படிமம் தான் தேவையென்றால் கவிதைக்கு போய்விடவேண்டும். சரியான வகையில் காட்சி பொருந்தும்போது அபூர்வமாக படிம அம்சமும் தானாகவே அமைந்துவிடும்.

 

Amuttu

ஜெயமோகன்: உங்கள் வாழ்க்கை முழுக்க தொடர்ந்து வரும், அமைதி இழக்கச் செய்யும் அகவினாக்கள் ஏதாவது உண்டா?

அ.முத்துலிங்கம்:அகவினா என்று சொல்கிறீர்கள். வாழ்க்கை முழுக்க தொடர்ந்து வருவது என்கிறீர்கள். எனக்கு அப்படியான பல வருத்தங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று எங்கள் எழுத்தைப்பற்றியது; எழுத்தாளர்களைப் பற்றியது. இந்தச் சிந்தனை சமீப காலங்களில் எனக்குள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வறுமைக்கும் தமிழ் எழுத்தாளருக்கும் இடையில் பெரும் பிணைப்பு இருக்கிறது. தீவிர எழுத்தில் கிடைக்கும் ஊதியத்தை நம்பி வாழ்கிறவர்கள் இங்கு வெகு குறைவு. வேறு எங்காவது வயிற்றுப்பாட்டுக்கு வேலை செய்துகொண்டு பொழுது போக்காக எழுதுபவர்களே அதிகம்.

இந்தப் போக்கு பாரதி காலத்தில் இருந்தே இருக்கிறது. பாரதியாருக்கு வாழ்க்கை முழுக்க வறுமை. பார்த்தசாரதி கோயில் யானை இடறி சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட அவர் பெரிய பட்ஜட் போட்டுக்கொண்டிருந்தார். குயில் பாட்டு பத்தாயிரம் பிரதிகள், பாஞ்சாலி சபதம் பத்தாயிரம் பிரதிகள், இப்படி. எல்லாம் வெறும் கனவு.

புதுமைப்பித்தனுடைய வரலாறு எல்லோருக்கும் தெரியும். அவருடைய கடைசிக் கடிதம் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சிதம்பரத்துக்கு எழுதியது, அதில்கூட 100 ரூபா கடன் கேட்டுத்தான் எழுதியிருந்தார். இந்த தரித்திரம் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை. புலிட்ஸர் பரிசு பெற்ற ஓர் ஆங்கில எழுத்தாளர், அவர் தன் கதையை சொல்லும்போது (அதாவது அவருடைய புத்தகம் பரிசு பெறுவதற்கு முன்பு) தன் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டதை விவரிக்கிறார்.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஒருவர் இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஆனால் அதை வெளியிடுவதற்கு வழியில்லை. பண உதவி கேட்டு அலைகிறார். அதே சமயம் இப்பொழுதெல்லாம் புத்தகப் பதிப்பு கம்புயூட்டர் வருகைக்கு பின் சுலபமாக்கப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர்களும், வசதி படைத்தவர்களும் புத்தகங்களை வெளியிட்டபடியே இருக்கிறார்கள். ஒரு நண்பர் சொன்னார் அளவுக்கு அதிகமான புத்தகங்கள் நாளாந்தம் வருகிறபடியால் தரமான புத்தகத்தை வாசகர் தேடி வாங்குவது பிரச்சனையாகி விட்டது என்று. எதை வாசிப்பது எதை விடுவது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் அரும் படைப்புகள் பொருளுதவி இல்லாத காரணத்தினால் பிரசுரமாக முடியாத நிலையில் இருக்கின்றன. ஏற்கனவே பிரசுரமான பொக்கிஷம் போன்ற புத்தகங்கள் இரண்டாவது பதிப்பு வெளிவராத நிலை. அழிந்துவிட்ட பழைய பதிப்புகளை புதிய தலைமுறையினர் தேடுகின்றனர். அவற்றை திருப்பி பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இல்லை.

இப்படியான நிலைமை மாற ஏதாவது செய்யவேண்டும். கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் மூலம் இது தொடர்பாக உதவி செய்யும் முயற்சியில் இருக்கிறோம். இதே அமைப்புத்தான் வருடா வருடம் இயல் விருது வழங்குவதற்கான பின்னணியில் செயல்படுகிறது. எவ்வளவு தூரத்துக்கு இந்த முயற்சி பலனளிக்கும் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

ஜெயமோகன்: அகவினா என்ற சொல்லில் அந்தரங்கமானது உங்களுக்கே உரியது என்ற ஒரு தொனியும் உள்ளது… உங்கள் படைப்புக்களை நிர்ணயிக்கும் கூறாக உள்ள அகவினா என்ன?

அ.முத்துலிங்கம்: நண்பர் ஒருவரை ஹைபர் கணவாய் பார்க்க அழைத்துப் போனேன். இரு மலைத்தொடர்களுக்கு நடுவில் நூல்போல வளைந்துபோன முடிவில்லாத பாதையின் இரு மருங்குகளிலும் காணப்பட்ட அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசித்தபடியே வந்தார். இறுதியில் ‘எங்கே கணவாய்?’ என்றார். நான் ‘நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ‘ என்றேன்.

இலக்கியம் ஒரு பயணம்தான். அது ஒரு குறிப்பிட்ட உச்சமான இடம் அல்ல. நீங்கள் ஒரு திறமான படைப்பை செய்து பேனையை மூடியவுடன் அது சாதாரணமாகிவிடுகிறது. ஒரு எழுத்தாளரும் உன்னதத்தை படைப்பதில்லை. அதைத் தேடுவதே படைப்பு. உன்னதத்தை படைத்தவர் ஏன் திரும்பவும் எழுதப் போகிறார்? சாகும் பரியந்தம் எழுத்தாளர்கள் எழுதுவதன் நோக்கம் உன்னதத்தை தேடும் முயற்சிதான்.

ஜெயமோகன்: உங்கள் எழுத்துக்கும் [அல்லது இலட்சிய வாதத்துக்கும்] லெளகீகத்துக்கும் இடையேயான இடைவெளி குறித்த கவலையா அது?

அ.முத்துலிங்கம்: ஒருவகையில் அந்த இடைவெளி இருப்பது கவலையல்ல; சந்தோசம். ஏனெனில் அந்த இடைவெளி இருக்கும் வரைக்கும்தான் படைப்பு. அது முடியும்போது படைப்பும் முடிந்துவிடும்.

சொல்புதிது மும்மாத இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி 2002/ 2003 ல் திண்ணையில் வெளியானது /Apr 27, 2003

அ முத்துலிங்கம் புகைப்படங்கள் சொல்வனம்

கதையெல்லாம் தித்திப்பு

அ .முத்துலிங்கம் படைப்புகள்

அடுத்த-தலைமுறை-தமிழ்-இலக்கியம்-படைக்குமா-அமுத்துலிங்கம்-நேர்காணல்

முந்தைய கட்டுரைகண்டராதித்தன் கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2