தமிழ்ப்பண்பாட்டில் கல்லூரிப்பேராசிரியர்களின் பங்களிப்பென்ன என்று ஒரு பொதுவினாவை எழுப்பிக்கொள்ள வாய்ப்பளித்தது அ.ராமசாமியின் இந்தக் கட்டுரைத்தொகுதி. பேராசிரியர்கள் பலவகை. இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது பெரும்பாலும் வழக்கறிஞர்களாலும் கல்லூரிப்பேராசிரியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அக்காலத்தில் பேராசிரியர்கள் காந்தியவாதிகளாக, தேசியவாதிகளாக இருப்பது வழக்கம். க.சந்தானம், தி.செ.சௌரிராஜன், சுத்தானந்தபாரதியார் போன்றவர்களின் சுயசரிதைகளில் அன்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பல்வேறு பேராசிரியர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன.
மரபிலக்கிய மீட்பில் பேராசிரியர்களின் பங்களிப்பு அதிகம். ஏட்டுப்பிரதிகளைப் பதிப்பிப்பது, உரை எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் ஒரு பட்டியலை அளிக்கமுடியும். பெயர்களைச் சொல்வது நீளும் என்றாலும் அபிதானசிந்தாமணியை ஆக்கிய சிங்காரவேலுமுதலியார், தமிழ்ப்பேரகராதியைத் தொகுத்த எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களை குறிப்பிடாமல் மேலே செல்லமுடியாது.அதன்பின்பு உருவான திராவிட அரசியல் அலையிலும் பேராசிரியர்களின் பங்களிப்பு மிகுதி.
இன்றைய நவீன சிந்தனைக்களத்தில் நேரடியாகப் பாதிப்பு செலுத்திய முதன்மையான சிலபெயர்களை குறிப்பிடவிரும்புகிறேன். பேராசிரியர் ரா.ஸ்ரீ.தேசிகன் நவீனத்தமிழிலக்கியம் உருவான காலகட்டத்தில் இலக்கியவிமர்சனக் கருத்துக்களை கட்டமைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒருவகையில் தமிழின் ரசனைவிமர்சனத்தின் பிதா அவரே.பேரா. அ.ஸ்ரீனிவாசராகவன் மரபிலக்கியம் மீதான நவீன நோக்கை உருவாக்கிய முன்னோடி ரசனைவிமர்சகர். அவர். பேராசிரியர் நா.வானமாமலை இன்றைய பண்பாட்டுவிமர்சன மரபின் முன்னோடி. மார்க்ஸிய சிந்தனைகளை தமிழில் உருவாக்கிய முன்னோடிகள் கைலாசபதியும் சிவத்தம்பியும்.
சமகாலத்தில் தமிழவன், ராஜ்கௌதமன், க.பூரணசந்திரன்,எம்.வேதசகாயகுமார், அ..மார்க்ஸ் போன்றவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இலக்கியத்திலும் அரசியல்சிந்தனைத் தளத்திலும் இருந்துவந்துள்ளது. ஒப்புநோக்க புதியதலைமுறையில் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவு என்ற ஒரு மனப்பிம்பம் எழுகிறது. விதிவிலக்குகளாகவே டி.தருமராஜ்,ஆ.இரா வெங்கடாசலபதி, ப.சரவணன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
அ.ராமசாமி அடிப்படையில் தமிழாசிரியர். ஆனால் அவரது புலம் விரிவானது. ஊடகவியல் மற்றும் நாடகவியலில் ஆய்வு செய்திருக்கிறார். ஆகவே வழக்கமாகத் தமிழாசிரியர்கள் கொண்டுள்ள அரசியல், இலக்கிய நோக்குகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றன இவரது அணுகுமுறைகள்.
மிகச்சுருக்கமாக இப்படி வரையறுக்கலாமென இக்கட்டுரைகளை ஒட்டிச் சொல்லத்தோன்றுகிறது. தமிழாசிரியர்களின் சிந்தனை என்பது ‘பண்பாட்டுமீட்பு அரசியல்’ சார்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கும். அ.ராமசாமியின் பார்வை ‘பண்பாட்டு விமர்சன நோக்கு’ கொண்டதாக இருக்கிறது.
[ 2 ]
கல்வித்துறை சார்ந்த பயிற்சி என்பது ஒருவரின் சிந்தனைகளில் என்னவகையான மாற்றத்தை உருவாக்குகிறது, அல்லது உருவாக்கவேண்டும்? பொதுவாகச் சொன்னால் கல்வித்துறைச் சிந்தனைகள் சககல்வியாளர்களின் கூர்நோக்குக்கு எப்போதும் ஆட்பட்டிருப்பவை எனலாம். அவை peer reviewed thoughts ஆக இருந்தாகவேண்டும்.
ஆனால் தமிழில் சமகாலச் சிந்தனைகளுடன் உரையாடலில் உள்ள கல்வியாளர்கள் மிகமிக அபூர்வம் என்பதனால் அவ்வாறு சிந்தனைத்தளத்திற்கு வரும் கல்வியாளர்கள் பிற பொதுச்சிந்தனையாளர்களுடன்தான் விவாதிக்கநேர்கிறது. ஆகவே கல்வியாளார்களுக்கு இருக்கவேண்டிய முறைமை, புறவயத்தன்மை, சமநிலை ஆகியவற்றை அவர்கள் காலப்போக்கில் இழக்கிறார்கள்.
உதாரணமாக அ.மார்க்ஸ் எழுத்துக்களில் அவர் ஒரு கல்வித்துறையாளர் என்ற தடையமே இருக்காது. எப்போதுமே அவை முச்சந்தி அரசியலின் உணர்ச்சிகரமும் சமநிலையின்மையும் தகவல்செறிவின்மையும் கொண்டவை. மாறாக ராஜ்கௌதமனின் பண்பாட்டு விமர்சனநூல்களில் கல்வித்துறை சார்ந்த ஆய்வு ஒழுங்கும் தர்க்கமுறைமையும் அபாரமான விளைவுகளை உருவாக்குவதைக் காணலாம் அவரது ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்’, ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’ எனும் இரு நூல்களும் தமிழ்ப்பன்பாட்டு ஆய்வுத்தளத்தின் செவ்வியல் ஆக்கங்கள் என்றே சொல்வேன்.
இத்தொகுதியின் கட்டுரைகள் அ.ரா தொடர்ந்து ஈடுபட்டுவரும் மூன்று தளங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒன்று பொதுவான அரசியல் விமர்சனம். இரண்டு கல்வித்துறை சார்ந்த விமர்சனம். மூன்று இலக்கிய அரசியல் சார்ந்த விமர்சனம். இம்மூன்று தளங்களிலும் அ.ராவிடம் கல்வித்துறைக்குரிய சமநிலைகொண்ட நோக்கும் புறவயத்தன்மையும் இருப்பதைக் காண்கிறேன். ஏற்பதும் மறுப்பதும் வேறுவிஷயம். உரையாடுவதற்கான தளம் உள்ளது என்பதே முக்கியமானது.
நமதே நமது- பின்காலனியத்தின் நான்காவது இயல் என்னும் முதல்கட்டுரையில் அ.ரா இந்தியாவின் வரலாற்றுப்பரிணாமத்தின் கோட்டுச்சித்திரம் ஒன்றை முன்வைக்கிறார். அவரது அரசியல் –வரலாற்று நோக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது அக்கட்டுரை. அதன்படி அவரது அரசியல்கோணம் என்பது மார்க்ஸிய அடிப்படை கொண்டது. நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து காலனியாதிக்கம் வழியாக இன்றைய காலம் நோக்கிய நகர்வை காலனியாதிக்கத்தில் இருந்து நவீன பொருளியல் மேலாதிக்கம் நோக்கிய நகர்வாகவே அக்கட்டுரை அடையாளம் காண்கிறது.
கலப்புப் பொருளியல் சோஷலிசம் என்னும் இலக்குகளைக் கொண்ட நேருவின் காலகட்டம், மையத்திட்டமிடலும் மைய ஆதிக்கமும் கொண்ட இந்திராகாந்தியின் காலகட்டம், தாராளமயமாக்கம் உலகமயமாக்கம் ஆகியவற்றை கொண்ட மன்மோகன் சிங் வரையிலான காலகட்டம் ஆகியவற்றைக் கடந்து இன்று நான்காவது இயலாக முழுமையான முதலாளித்துவ பொருளியலை நோக்கி மோதியின் அரசு செல்வதாக அ.ரா எண்ணுகிறார்.
மோதியின் இந்த அரசியலின் மையச்சிக்கலாக அ.ரா எண்ணுவது ஒரு முக்கியமான முரண்பாட்டைத்தான் என்பதே இக்கட்டுரையை ஆழமானதாக ஆக்குகிறது. மோதியின் பொருளியல் நோக்கு என்பது முழுமையாகவே பண்பாட்டுவெளியில் இருந்து துண்டித்துக்கொண்டு லாபம் மட்டுமே குறியாகச் செயல்படும் முதலாளித்துவம். அவரது பண்பாட்டு நோக்கு என்பது பழமைவாத மீட்பு. இவ்விரு இலக்குகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படுபவை. ஒருவர் ஒரேசமயம் இருதிசைகளில் போகமுடியுமா என அ.ரா ஐயம்கொள்கிறார்.
“ஒரு தேசம் – அதன் பொருளாதார அடித்தளத்தை ஒன்றாகவும், அவற்றால் உண்டாக்கப்படும் கல்வி, கலை, பண்பாடு போன்ற மேல்தள நடவடிக்கைகளை நேரெதிர்த் திசையிலும் அமைத்துக்கொள்ளல் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வி” என்று சொல்லும் அ.ரா “சாத்தியமாகாததைச் சாத்தியமாக்குவதற்காகத்தான் சக்திமான்கள் தேவைப்படுகிறார்கள்” என தொடர்கிறார்.
ஆனால் அ.ராவின் நோக்கு நம் வழக்கமான மார்க்ஸிய அரசியல் சொல்லாடல்களுக்குள் நின்றுவிடுவதாகவும் இல்லை. அவரது மார்க்ஸிய அணுகுமுறை என்பது வரலாற்றையும் பொருளியலையும் பகுப்பாய்வுசெய்வதற்கான கருவி மட்டுமாகவே உள்ளது. மார்க்ஸியத்தின் எளிய வாய்மொழிகளுக்கு எதிரான யதார்த்தத்தின் தரிசனம் அவருக்கு அவர் போலந்தில் பணியாற்றியபோது கிடைத்ததை பிறிதொரு கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார்.
முதலாளித்துவ அமைப்புக்கு அதற்கே உரிய வல்லமைகளும் ஒழுங்கும் உண்டு என்றும் இந்தியா அந்த அமைப்பையும் முற்றாக ஏற்காமல் அரைவேக்காட்டு நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ”முதலாளித்துவ அரசியல்வாதி தனிநபர்களின் உரிமைகளையும் நாட்டின் சட்டங்களையும் ஓரளவு மதிக்க நினைப்பான். சட்டத்திற்குக் கிடைக்கும் மரியாதை அரசு அமைப்புகளின் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும்” என்று அவர் சொல்லும் வரிகள் முக்கியமானவை.
இக்கட்டுரைகள் காட்டும் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. அவருக்கு ஐரோப்பாவில் உள்ள தாராளவாத- சுதந்திரவாத முதலாளித்துவம் உவப்பாக இருக்கிறது. அமெரிக்கபாணி ஏகாதிபத்திய முதலாளித்துவமே கசப்பை அளிக்கிறது ”ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் வருகைக்கு அனுமதி அளித்துள்ள போலந்து இன்னும் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட்டின் பேரங்காடிகள் இல்லை என்பதையும் இந்தியர்கள் கவனிக்க வேண்டும்” என்ற வரி எனக்கு அவ்வாறான மனச்சித்திரத்தையே அளித்தது
அ.ரா அரசியல் குறித்து எழுதினாலும் அவரது அடிப்படை என்பது இலக்கியம் என்பதை இந்நூலின் எல்லா கட்டுரைகளும் காட்டுகின்றன. பொருளியல் கொள்கைகளை விமர்சிக்கும் கட்டுரைகளில்கூட அவர் சமூக மாற்றங்களின் சித்திரங்களை புதுமைப்பித்தன் முதல் இன்றுவரையிலான இலக்கியவாதிகளின் நூல்களில் இருந்தே எடுத்துக்கொள்கிறார். இந்நூலின் முக்கியமான கவர்ச்சி என்பது இலக்கியப்பிரதிகளை அவர் இந்தக்கோணத்தில் வாசிக்கும் முறை. க.நாசுவின் நாவல்கள் முதல் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை வரை ஆராய்ந்து தமிழ்ச்சமூகத்தின் இடப்பெயர்வின் சித்திரத்தை அவர் அளிக்கும் விதத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
வெவ்வேறு இலக்கியச் சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்யவேண்டுமென எழுந்த கோரிக்கையை புதுமைப்பித்தனின் நாசகாரகும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலை தடைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். இலக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிப்பாடு மற்றும் பண்பாட்டுவிவாதத்திற்கான குரலாகவே உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன்வைக்கப்படுகிறது
இந்நூலில் அ.ரா விரிவாக விவாதிப்பவை தமிழ்க்கல்விச்சூழலின் சவால்களும் சரிவுகளும். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் என்னும் கனவுத்திட்டம் தமிழ்நாட்டுக் கல்விச்சூழலின் பல்வேறு சிக்கல்களில் சிக்கில் மெல்லமெல்லச் சரியும் சித்திரம் பல யதார்த்தங்களை நோக்கித் திறக்கக்கூடியது. அ.ரா தமிழ்ப்பற்று தேசப்பற்று போன்ற தீவிர உணர்ச்சிநிலைகள் கல்விப்புலத்தை சீரழிக்கக்கூடியவை என நினைக்கிறார். புறவயமான தர்க்கத்தை முன்னிறுத்தும் போக்குகளுக்காக வாதாடுகிறார்.
தமிழ்க் கல்விப்புலம் பற்றிய கூர்மையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைக்கும் இக்கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தெரிவதையும் கண்டுகொண்டேன்.
[ 3 ]
இது இணையக் காலகட்டம். கருத்துக்கள் பதினைந்து நிமிடங்களுக்குள் எதிர்வினைகளை உருவாக்கி ஓரிருநாட்களில் காணாமலாகும் சூழல். அ.ராமசாமி நிதானமாகவும் தர்க்கபூர்வமாகவும் வரைந்துகாட்டும் கருத்துக்களம் என்பது பொறுமையான விவாதத்திற்குரியது. நூல்வடிவில் இக்கட்டுரைகளை வாசிக்கையில் உருவாகும் முதன்மையான எண்ணம் இதுவே, கல்விப்புலத்தின் நெறியொருமை கொண்ட மேலும் பலகுரல்கள் தமிழில் ஒலித்தாகவேண்டும்
அ.ராமசாமி எழுதிய ’மறதிகளும் நினைவுகளும் (காலனியம் – மக்களாட்சி – பின்காலனியம்) நூலுக்கான முன்னுரை