பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 9
கருக்கிருட்டிலேயே தோரணவாயிலைக் கடந்து விழிவெளிச்சமாகத் தெரிந்த பாலைவெளியை நோக்கி நின்றபோது எதற்காக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடிய கூந்தலை ஆற்ற நேரமில்லாததனால் தோளில் விரித்துப் பரப்பியிருந்தாள். விடிகாலைக் கடற்காற்றில் அது எழுந்து மழைக்குப்பின் காகம் என சிறகுதறி ஈரத்தை சிதறடித்துக்கொண்டிருந்தது. பாலையில் கடந்துசெல்லும் காற்று மென்மணலை வருடும் ஒலி கேட்டது. அந்த ஒலியை இருளில் கேட்க அகம் அமைதிகொண்டது. மிகமென்மையான ஒரு வருடல். துயிலும் மகவின் வயிற்றை அன்னை விரல் என. காற்று தன் அலைவடிவத்தை பாலையில் வரைந்துகொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டாள். காலையில் வெளிச்சமெழுகையில் இரவெல்லாம் நிகழ்ந்த மந்தண உரையாடலின் சான்றென விழிதொடும் வரை நீண்டிருக்கும் அலைவளைவுகள்.
அப்போது அவள் தான் பார்த்திராத பாலையை விரும்பினாள். முன்னரே வந்து அதை நோக்கியிருக்கலாமென எண்ணினாள். மூத்தவர் பன்னிப்பன்னி அழைத்தபின்னரும் பாலையாடலுக்குச் செல்லாத தன் தயக்கத்தை எண்ணி என்னாயிற்று எனக்கு என்று சொல்லிக்கொண்டாள். பாலையின் உயிர்களின் கண்களில் இருக்கும் தனிமையை எதிர்கொள்ளமுடியாதென்று தோன்றியது. காட்டில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் அரணையின் கண்களில் அதைச்சூழ்ந்துள்ள உயிர்க்குலத்தை அது அறிந்திருப்பது தெரியும். மறுகணம் பேசவிருப்பது போன்ற ஒரு பாவனை. பாலையில் செம்மணலில் ஓடிவந்து வண்டிச்சகடத்தின் ஓசைகேட்டு திகைத்து நிற்கும் உடும்பின் விழிகள் முதல்முறையாக மானுடக்கண் தொடும் கூழாங்கற்கள். தெய்வங்களால் கூட கண்டடையப்படாதவை. பாலையில் ஒருபோதும் என்னால் வாழமுடியாது. இந்த விடியற்காலையில் என் உள்ளம் உவகை கொண்டிருக்கிறது. இப்பாலைநிலம் அவ்வுவகையாக தன்னை விரித்துள்ளது.
தெய்வங்கள் அறிக, எந்தை என்னை ஒரு பணிக்கென அழைத்திருக்கிறார். என்னை தன் இணையென கூட்டியிருக்கிறார். அப்பணி எதுவானால் என்ன? அதில் புண்பட்டால் உயிர்துறந்தால் என்ன? அவருடன் இந்த நீண்ட பாலையை கடக்கவிருக்கிறேன். நில்லாமல் செல்லவிருக்கிறேன். அப்பாலை நான் செல்லச்செல்ல நீளுமென்றால் என் வாழ்க்கையின் முழுக்காலமும் அதுவென்றே ஆகுமென்றால் நான் வாழ்த்தப்பட்டவள். எத்தனை மென்மையானது பாலை! கனிந்த உள்ளங்கை. அன்னைச்செவிலியின் தழைந்த அடிவயிறு. சந்தனமோ செங்குழம்போ உலர்ந்த பொருக்கு. இந்த வெந்தமணம் கமழும் காற்றுக்கு நிகரான எதையும் நான் அறிந்திருக்கவில்லை. இனி என் வாழ்நாளெல்லாம் இதையே எண்ணிக்கொண்டிருப்பேன்.
இது அவர் மூச்சென மணக்கிறது. சிறுமியாக இருக்கையில் என்னை அள்ளி தன் முகத்தோடு அணைத்து கன்னங்களில் அவர் முத்தமிடுவதுண்டு. தன் மூக்கால் வயிற்றை உரசி சிரிக்கவைப்பதுண்டு. தந்தையும் மூத்தவரும் முத்தமிடுவதுண்டு என்றாலும் இளையவரின் முத்தத்தின் நறுமணம் தனித்தது என்றே அறிந்திருக்கிறேன். ஆண்களின் மூச்சின் மணம் வேறு. பெண்களின் மூச்சு பசுமைநிறைந்த மழைக்காட்டின் மணம். சேறும் இலைத்தழைப்பும் கலந்தது. தந்தையின் முத்தம் வெயில்பட்டு உலரும் சுதைச்சுவர்களின் முத்தம். சுண்ணமும் பாசியும் கலந்தது. மூத்தவரின் முத்தம் காட்டுப்பாறையின் மணம். காலையொளியில் காயும் வெம்மை கொண்டது. கல்மணம். மண் மணம். புல்மணம். உப்புமணம். இளையவரின் மணம் எது? இந்தப் பாலை விடியற்காலையில் அளிக்கும் இந்த மணம்தான். இது தன்னந்தனிமையின் மணம். மண் மணம். மண்ணில் எரிந்த விண்ணின் மணம். அதன்மேல் காற்றெனப்பரவிய கடலின் மணம். இதுதான் நீலத்தின் மணமாக இருக்கவேண்டும்.
புரவியொலிகள் கேட்டன. அரண்மனையிலிருந்து இருளுக்குள் கிளம்பிவந்த இளைய யாதவரின் சிறிய குழு தோரணவாயிலருகே வந்தது. வெண்ணிறமான சோனகப்புரவியில் இளையவர் அமர்ந்திருந்தார். தொடர்ந்து ஏழு வீரர்கள் கரும்புரவிகளில் வந்தனர். குடிநீர் நிறைந்த தோற்பைகளுடன் மூன்று புரவிகள் அவர்களை தொடர்ந்தன. அரண்மனையிலிருந்து கிளம்பும்போதுதான் அவந்திக்குச் செல்கிறோம் என்பதன்றி பிறிதெதையும் சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடி ஆடை மாற்றி அவள் வந்தபோது அவளுக்கான சோனகப்புரவி காத்து நின்றது. முதலில் அவள் பார்த்தது அதன் குளம்புகளில் லாடங்கள் இருமடங்கு அகன்று விரிந்திருந்ததைத்தான். அவள் மணம் கிடைத்ததும் சற்றே பொறுமை இழந்து அது முன் கால்களைத்தூக்கியபோது குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக வரிகொண்டிருப்பதை கண்டாள். மணல்மேல் புதையாமல் விரைவதற்கான லாடம் அது என்றார் அவளை அனுப்ப வந்திருந்த அமைச்சர் ஸ்ரீதமர்.
“இவள் பெயர் விலாசினி” என்றார் ஸ்ரீதமர். பக்கவாட்டில் நோக்குகையில் தலைக்கு மேல் எழுந்த பேருடலுடன் நின்ற புரவியின் கடிவாளத்தைப் பற்றி சேணத்தை மிதித்து கால் சுழற்றி ஏறிக் கொண்டபோது யவனப்புரவிகளின் பாதியளவுக்கே அதன் பருமன் இருப்பதை உணர்ந்தாள். அதை அணைத்த தொடைகளில் முதற்கணம் ஒரு குறையையே உணரமுடிந்தது. சிறகு இலாத வெண்பறவை போலிருந்தன அதன் நீள் கழுத்தும் முதுகும். பறவை அலகு போலவே நீண்டிருந்தது இரு நரம்புகள் புடைத்த நீளமுகம். அதன் மோவாயையும் கழுத்தையும் தட்டி ஆறுதல் படுத்தினாள். ஸ்ரீதமர் அவளிடம் “இளவரசி தங்களை நேரடியாக தோரணவாயிலுக்கே வரும்படி இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அவள் கிளம்பியதும் பிறிதொரு புரவியில் ஏறிக்கொண்டு அவளுக்கிணையாக வந்தபடி இளைய யாதவரின் எண்ணத்தை சொன்னார்.
முதலில் சற்று திகைத்தபின் சுபத்திரை சிரித்துவிட்டாள். “பெண்கவர தங்கையை அழைத்துச் செல்லும் முதல் வீரர் இவரென எண்ணுகிறேன் அமைச்சரே” என்றாள். அவரும் அத்தருணத்தின் பதற்றத்தை மறந்து வாய்விட்டு நகைத்து “ஆம், அவர் ஆணையிட்டபோது இதிலுள்ள விந்தையை நான் உணரவில்லை” என்றார். “பெண் கொண்டு வரவேண்டியவர் யார்? அவரா நானா?” என்றாள். ஸ்ரீதமர் இருளுக்குள் வந்த நகைப்போசையுடன் “அது அங்கு சென்றபிறகுதான் தெரியும்’’ என்றார். இருண்ட நகரத் தெருக்களில் விரைந்து தோரணவாயிலை அடைந்தபோது அங்கு முன்னரே இளைய யாதவரின் ஒற்றர்தலைவர் சுக்ரர் காத்திருந்தார். “இளவரசி, காலையில் முழுவெப்பம் எழுந்துவிடும். அதற்குப்பின் புரவி தாளாது. வெயில் எழுகையில் அவந்தியின் எல்லையில் இருந்தாகவேண்டும்…” என்றார். “இளையவர் அக்ரூரருடன் அரண்மனையிலிருந்து கிளம்பிவிட்டார்.”
இளையவர் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் புரவியைத் தட்டி பாலை நிலத்தை வரிந்து கட்டிய தோல் பட்டையெனச் சென்ற சாலையில் விரைந்தார். அக்ரூரர் “சென்றுவருக இளவரசி!” என்றார். அவள் தலைவணங்கினாள். ஸ்ரீதமர் தலையசைத்தார். அவள் புரவியை மரக்கிளையில் உந்தி எழுந்து சிறகடிக்கும் பறவையென விரைவடையச் செய்தாள். அதன் குளம்புகள் மண்ணை அள்ளி பின்னால் வீசி விரையும் ஒலி கேட்டது. அதன் கழுத்து முன்னால் நீண்டிருந்தது. சிலகணங்களிலேயே விழிகளின் மூடிய சாளரங்கள் ஒவ்வொன்றாகத் திறக்க பாலைவெளி மேலும் மேலுமென தெளிவடைந்துகொண்டு வந்தது. அதன் அலைவளைவுகள் மேல் விரல்கோதியது போன்ற வரிகளை காணமுடிந்தது. அதன் மேல் நின்றிருந்த முட்செடிகள் காற்றில் சுழன்று உருவாக்கிய அரைவட்டங்களை, சிற்றுயிர்கள் எழுப்பிய வளைகளுக்கு மேல் குவிந்த பன்றிமுலைகள் போன்ற மென்மணல் குவைகளை, சிறிய எறும்புத்துளைகளை. ஒரு சுள்ளி பட்டுத்திரை மூடிக்கிடக்கும் உடலென தன்னை முழுமையாகக் காட்டி மணல்மூடிக்கிடந்தது.
அவளுக்கு மிக அருகே இளைய யாதவர் புரவியில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கிணையாக புரவியில் சென்றபடி அவரது தோள்களையே அவள் நோக்கிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இளைய யாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளை பொருத்திக் கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம். அவரோ மிதந்து ஒழுகிச் செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது. அது கரும்புரவியாக இருந்திருந்தால் இருளுக்குள் ஒரு புரவி இருப்பதே தெரிந்திருக்காது. விரைவை கூட்டாமல் குறைக்காமல் வானிலிருந்து விழும் பொருள் என செங்குத்தாக வடதிசை நோக்கிச் சென்றார். அவள் அவருடன் செல்வதற்காக ஓரவிழியால் இடைவெளியை கணித்தபடி சென்றாள்.
தீட்டப்பட்ட இரும்பெனத் தெரிந்தது வானம். முகில் படிந்திருந்தமையால் ஓரிரு விண்மீன்களே தெரிந்தன. கீழே விண்ணின் மெல்லிய ஒளியில் தானும் ஒளி பெற்றிருந்தது பாலைப்பரப்பு. இரு மெல்லொளிப்பரப்புகளும் சென்று தொட்ட தொடுவான் கோடு கூர்வாள் ஒன்றின் தீட்டப்பட்ட நுனியென கூர்ந்திருந்தது. அந்த முனை நோக்கி அவர்களை கொண்டு சென்றன புரவிகள். துவாரகையின் முதல் காவல்சத்திரத்தில் புரவிகளை மாற்றிக்கொண்டு சற்று நீரருந்தி அடுத்த புரவியில் கிளம்பிச் சென்றனர். மூன்றாவது சத்திரத்தில் புரவி மாற்றியபோது அவருடன் வந்த படைவீரர்கள் முற்றிலும் களைத்திருந்தனர். அங்கு காத்து நின்ற பிற படைவீரர்களை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். அவள் சற்றும் களைப்புற்றிருக்கவில்லை. ஆனால் அவள் களைப்புற்றாளா என்று ஒரு சொல்கூட அவர் கேட்கவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு கேட்காதிருந்தது அவளுக்கு உவகையளித்தது.
இதோ என்னருகே சென்று கொண்டிருக்கும் என் தமையன் என்னை முழுதறிந்திருக்கிறார். என்னுடலை, உள்ளத்தை. ஆனால் என் ஆத்மா கொள்ளும் பெருந்தவிப்பை அறிந்திருக்கிறாரா? பிறிதொன்றிலாது என்னை இவர் கால்களில் வைக்க உன்னும் இவ்வெழுச்சியை இவர் அறிவாரா? ஒவ்வொரு புரவிக் காலடி ஓசையும் அவள் இதயத்தின் துடிப்புகளோடு இணைந்தது. அந்தத் தாளம் ஒரு சொல்லாகி நீலம் நீலம் நீலம் என்று அவள் இருளுக்குள் சென்று கொண்டிருந்தாள். அந்தத் தவம் பூத்ததென கிழக்கே முதல் ஒளிக் கசிவைக் கண்டாள். கருமுகத்திலெழுந்த கனிவு. முதற் புன்னகை. சிறகுகளை அசைத்தபடி பறவைக்கூட்டங்கள் வானிலிருந்து துளித்துச் சொட்டி சிதறிப் பரவின. தலைக்கு மேல் சென்ற வலசைப்பறவை ஒன்று நீலா என்று அழைத்துக் கடந்தது. விண்ணறிந்திருக்கிறது அச்சொல்லை.
முகில்கள் பொன் பூசிக் கொண்டன. கீழ்சரிவிலெங்கும் உருகும் செம்பொன் வழிந்தது. சொல் சொல்லென்று ததும்பிச்சென்ற உள்ளப்பெருக்கில் இருந்து ஹிரண்யகர்பன் என்றொரு சொல்லை அவள் கண்டெடுத்தாள். இளவயதில் கற்ற வேதாந்த நூல்கள் எதிலோ இருந்தது அது என உணர்ந்தாள். பொற்கருவினன். புடவி சமைக்கும் உலை ஒன்றில் உருகி எழுந்த துளி. ஹிரண்யன், பொன்னன். வெளியில் ஒளியானவன். விண்ணில் கதிரவனாக எழுபவன். இரவில் கனவுகளாக நிறையும் முழுநிலவு. கடலாழியில் விண்மீன்கள் சூடிய ஆழம். இவ்வெண்ணங்கள் வழியாக எங்கு சென்று கொண்டிருக்கிறேன்? என் புரவி இங்கு மண்ணிலில்லை. இது அறிந்துளது என்னுள்ளத்தை. அடித்துப் பரப்பப்பட்ட பொற்தகடு போலாயிற்று பாலை. மேலே பழுத்துச்சிவந்தது பொற்கூரை.
அவந்தியின் முதல் காவல் கோட்டத்தை அவர்கள் அடைந்தபோது புலரியொளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு காவல் தெய்வங்களென பேருருக்கொண்டு தொடர்ந்து வந்தன. காவல் கோட்டத்து நூற்றுவர்தலைவன் அவர்களை எவ்வகையிலும் எதிர்பார்க்கவில்லை. மணத்தன்னேற்புக்கு வரும் அரசன் புரவியில் நேரடியாக வருவானென்று அவனிடம் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டான். இளைய யாதவருடன் வந்த வீரன் அவனை அணுகி அவந்தியின் ஓலையைக்காட்டி மணத்தன்னேற்புக்கு யாதவபுரியிலிருந்து வந்திருப்பதாக சொன்னபோது அவன் படியிறங்கி வந்து புரவியிலமர்ந்திருந்த இளைய யாதவரையும் சுபத்திரையையும் நோக்கினான். அவர்களை அடையாளம் காண முடியாமல் மீண்டும் ஒரு முறை இலச்சினையை நுண்ணிதின் நோக்கிவிட்டு அதில் மந்தணக்குறிகளைக் கொண்டு அவ்வோலையின் எண்ணை உய்த்தறிந்து அங்கிருந்த ஆவண நாயகத்திடம் அதை பதிவு செய்யும்படி ஆணையிட்டான். ஐயத்துடன் தலைவணங்கி “தாங்கள் உள்ளே செல்லலாம் யாதவர்களே” என்றான்.
அவர்கள் தலை வணங்கி மாகிஷ்மதிக்குள் செல்லும் மண் பாதையில் புரவிக்குளம்படிகள் நனைந்த கிணை மேல் விரல்கள் தொடுவதுபோல ஒலித்தபடி சென்றதை நோக்கி ஐயம் நிறைந்து நின்றான். புரவிகளின் சுழலும் வால்கள் தன் விழி எல்லைக்கு அப்பால் மறைந்தவுடன் எழுந்து திரும்பி தன் காவல் மாடத்திற்குள் சென்றவன் எவரோ பின்னின்று அழைத்ததுபோல அவ்வெண்ணம் வந்து திரும்ப ஓடி சாலையை நோக்கினான். பின்னர் அவர்கள் வந்த வழியை நோக்கி தான் கண்ட காட்சியை உள்ளத்திலிருந்து விழிகளுக்கு கொண்டுவந்து தீட்டினான். “ஆம் அவரேதான்” என்று கூவியபடி உள்ளே சென்று ஆவண நாயகத்திடம் “மச்சரே, இப்போது சென்றவர் துவாரகையின் இளைய யாதவர்” என்று கூவினான்.
“நான் உறுதியாகச் சொல்வேன். புழுதி மூடியிருந்ததால் எவரோ என எண்ணினேன். தன் குழல் பீலியையும் பொற்பட்டாடையையும் அவர் அணிந்திருக்கவில்லை. உடலில் அணிகளேதும் இல்லை. ஆனால் ஒரு கணம் அவ்விழிகளை கண்டேன். பிறிதொரு மானுடனுக்கு அத்தகைய விழிகள் இருக்க வாய்ப்பில்லை. அவரேதான், ஐயமில்லை” என்றான். ஆவண நாயகம் எழுந்து “நானும் அவ்வண்ணம் எண்ணினேன். இவ்வாயில் கடந்து செல்லுகையில் அவரது தோளை மட்டுமே நான் கண்டேன். ஆனால் அக்கணம் நானறியாது அவர் புகழ்பாடும் சூதர் பாடலின் வரியெனக்குள் எழுந்தது. நீலம் கடைந்த மூங்கில் என்றுண்டா தோழி என்று முணுமுணுத்துக் கொண்டேன். தாங்கள் இப்போது சொல்லும்போது உணர்கிறேன், அது இளைய யாதவரேதான்” என்றார்.
“அவ்வண்ணமெனில் இப்போதே நாம் செய்தி அனுப்பவேண்டும்” என்றான் காவலன். “இங்கிருந்து பறவைத்தூது அனுப்ப வழியில்லை. புரவி வீரனொருவனை அரண்மனைக்கு அனுப்புவோம். குறுக்கு வழியில் அவன் இவர்கள் செல்வதற்குள் அரண்மனைக்கு சென்றுவிட வேண்டும்” என்றான். பின்பு “இதற்கு எளிய தூதனொருவனை அனுப்புவது உகந்ததல்ல. நானே கிளம்புகிறேன். இப்போதே” என்றபடி வெளியே ஓடி “என் புரவி… என் புரவி எழுக!” என்று கூவினான். புரவியில் ஏறியபடியே அதை விரையச்செய்தான். மரங்கள் செறிந்த ஒற்றையடிப்பாதை வழியாக தலையை நன்கு குனிந்து புரவி தலைக்கு கீழாக வைத்துக் கொண்டு அதை உச்ச விரைவில் செலுத்தினான்.
அவந்திக்கான சாலையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். திரும்பி அருகே தெரிந்த பாறையொன்றின்மேல் புரவியை ஏற்றினார். அவரைத்தொடர்ந்த வீரர்கள் திரும்பி அவளை நோக்கியபின் கீழேயே நின்றனர். அவள் அவர்களை நோக்கி புன்னகைத்துவிட்டு அவரை தொடர்ந்தாள். அங்கிருந்து நோக்கியபோது முழுகுளம்புப் பாய்ச்சலில் செல்லும் காவல்கோட்டத்தலைவனை காணமுடிந்தது. புதர்கள் நடுவே அவன் மின்னி மின்னித்தெரிந்தான். “அவன் சென்று சேர்வதற்குள் நீ அவந்தியின் மகளிர் மாளிகையை அடைந்து உள்நுழைந்துவிடவேண்டும்” என்றார் இளைய யாதவர். மறுபக்கம் அவந்தியின் கோட்டைமுகப்பு தெரிந்தது. மண்ணாலான அடித்தளம் மீது மரத்தாலான மாடம் கொண்ட உயரமற்ற கோட்டையின் வாயில் இரண்டு பெரிய தூண்கள் மேல் நின்றிருந்தது.
“அங்கே இளவரசி இருப்பாள். அவளிடம் கேள், துவாரகைக்கு வருகிறாளா என. அவள் ஒப்புக்கொண்டாளென்றால் அழைத்துக்கொண்டு களமுற்றத்துக்கு வா” என்றார் இளைய யாதவர். வியப்புடன் “களமுற்றத்துக்கா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. “ஆம், களம்வெல்லாது இளவரசியை கொண்டு செல்லக்கூடாது. ஷத்ரியப்பெண் அவள். பாரதவர்ஷத்தின் அவைகளில் அவளுடைய மங்கலத்தாலி ஏற்கப்படவேண்டும்.” சுபத்திரை “இன்னும் ஒரு நாழிகைக்குள் களத்திலிருப்பேன்” என்றாள். “அவள் என்னை ஏற்றாகவேண்டும். அவளிடம் கேள்” என்றார். “இளையவரே, எந்தப்பெண்ணிடமும் அவ்வினாவை கேட்கவேண்டியதில்லை. உன்னை இளையவர் தேர்ந்திருக்கிறார், கிளம்பு என்றுமட்டும் சொன்னால்போதும்” என்றாள் சுபத்திரை.
புன்னகையுடன் திரும்பிய இளையவர் “இளமையில் மூத்த அன்னையின் கன்னக்குழியை தொட்டு விளையாடுவேன் என்பார்கள். இன்று அதே புன்னகை உன்னில் எழுவதைப் பார்க்கிறேன். குழிவிழும் கன்னம் தானும் சிரிக்கிறது” என்றார். நாணி முகம் சிவந்த சுபத்திரை விழிவிலக்கி “நீங்கள் என்னை பார்ப்பதேயில்லை மூத்தவரே” என்றாள். “நான் உன்னைப்பார்க்கும் பார்வையை எவருக்கும் அளித்ததில்லை இளையவளே. அதனால் இப்புவியில் நீ மட்டுமே தனித்தவள்” என்றார். அவள் அங்கே மீண்டும் பிறந்தெழுந்தவள் போல் உணர்ந்தாள்.
“கிளம்புக!” என்றார் இளைய யாதவர். அவள் தலைவணங்கி தன்புரவியில் ஏறிக்கொண்டு பாறைச்சரிவில் பாய்ந்து செம்மண்பாதையை அடைந்து மையப்பாதையை தேர்ந்தாள். கோட்டைமுகப்பை அடைந்ததும்தான் தன்னிடம் ஆணையோலை என ஏதுமில்லை என்று உணர்ந்தாள். புரவியை சாலையோரத்துப் புதர் ஒன்றினுள் செலுத்திவிட்டு நடந்து சென்றாள். விழிகளால் துழாவிக்கொண்டிருந்தவள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஆய்ச்சியரை கண்டுவிட்டாள். அருகே சென்று அவர்களில் முதியவளை வணங்கி “நானும் நகருக்குள்தான் செல்கிறேன் ஆய்ச்சி” என்றாள். “நீ எந்த ஊர்?” என்றாள் அவள். “கிருவி குலத்தவள் நான். பார்வண பதத்தின் சப்தபாகுவின் மகள் பத்ரை” என்றாள். “தந்தை இன்று நகருக்குள் நெய்வணிகம் செய்ய வந்துள்ளார்.”
“நீ உஜ்ஜயினியிலிருந்து வருகிறாயா?” என்றாள் ஆய்ச்சி. “இப்போதெல்லாம் பெரிய வணிகர்கள் முழுக்க அங்கிருந்தே வருகிறார்கள். மாகிஷ்மதியே அவர்களின் நகரமென ஆகிவிட்டிருக்கிறது.” அவள் புன்னகை செய்து “ஆம், ஆனால் மாகிஷ்மதியைப்போல தொல்பெருமை உண்டா உஜ்ஜயினிக்கு? மாகிஷ்மதியின் அரசர்கள் புராணப்புகழ்கொண்டவர்கள் அல்லவா?” என்றாள். கிழவிக்கு அந்தச்சொற்கள் பிடித்திருந்தன. “அந்தக் கலத்தை கொடுங்கள் அன்னையே…” என உரிமையுடன் வாங்கி தன் தலையில் வைத்துக்கொண்டாள். இன்னொரு கிழவியிடமிருந்து பிறிதிரு கலங்களை வாங்கினாள். “நீ கலமேந்துவதைக் கண்டதும்தான் என் ஐயம் முழுமையாக விலகியது பெண்ணே. நீ இடையப்பெண்ணேதான். பிறர் இதுபோல நெய்க்கலம் ஏந்தமுடியாது” என்றாள் கிழவி.
“நெய்வழியாது கலமேந்தத் தெரிந்துகொள்வதுதானே ஆய்ச்சி அறியும் முதல் பாடம்” என்றாள் சுபத்திரை. “நான் ஏழடுக்குக் கலம் ஏந்துவேன் ஆய்ச்சி!” அவள் சிரித்து “உன் தோள்களை நோக்கினால் நீ பன்னிரு அடுக்கு ஏந்தினாலும் வியப்படையமாட்டேன்” என்றாள். அவர்கள் நடந்தபோது ஆய்ச்சி திரும்பி தன்னுடன் வந்தவர்களிடம் “பாருங்களடி, எப்படி நடக்கிறாள் என்று. நடனம்போன்றிருக்கிறது உடலசைவுகள். நல்ல இடையப்பெண் கலமேந்தி நடந்தால் அவள் உடலின் அசைவுகளில் ஒன்றுகூட வீணாகாது. ஆகவே அவளுக்கு களைப்பே இருக்காது.” சுபத்திரை சிரித்து “என் இல்லத்தில் நெய் உருகாத நாளே இல்லை ஆய்ச்சி” என்றாள்.
கிழவியைக் கண்டதுமே கோட்டைக்காவலர் விட்டுவிட்டனர். நகரத்தெருக்களில் நுழைந்ததும் சுபத்திரை அரண்மனையை கண்டுவிட்டாள். மூன்றடுக்கு மட்டுமே கொண்ட தொன்மையான மரக்கட்டட வளாகம் அது. அதன் உள்கோட்டை வாயிலில் வேல்களுடன் காவலர் நின்று நோக்கி உள்ளே அனுப்பினர். அதன் இடதுபக்கம் செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் உலைந்த இரண்டு அடுக்கு மரக்கட்டடம்தான் மகளிர்மாளிகை என அவள் உய்த்துக்கொண்டாள். கோட்டைக்காவலர் பெண்களை நோக்காமல் அனுப்பியதிலிருந்தே அங்குள்ள காவல் என்பது வெறும் தோற்றமே என அவள் உணர்ந்தாள். எப்போதும் காவல் என்பதே இயல்வது. அது ஒரு மாறாநெறியாக மாறி பழகிவிட்டிருக்கவேண்டும். இடர்வரும்போது மட்டும் காவல் என்பது சிலநாழிகைகள் மட்டுமே நீடிக்கும் ஒரு பதற்றநிலை. அந்த விரைவு வடிந்ததும் காவல் தளர்ந்துவிடும். தளர்ந்த காவல் என்பது இயல்பான காவலைவிடவும் குறைவானது.
“எந்தை அரண்மனைக்கு நான்கு கலம் நறுநெய்யுடன் போகச்சொன்னார். நான் அதை மறந்து கானாடி இருந்து விட்டேன். என் இருகலம் நெய்யும் இவ்விரு இளையோர் கொண்டுவரும் நெய்யும் எனக்குப் போதும். தாங்கள் ஒப்புக்கொண்டால் நேரடியாகவே அரண்மனைக்குச் செல்வேன்” என்றாள் சுபத்திரை. “இவற்றை நாங்கள் தெற்குவீதி வைதிகர்தெருவுக்கு வாக்களித்துள்ளோமே” என்றாள் கிழவி. “அன்னையே, இவை நறுநெய் என மணமே சொல்கிறது. அரண்மனைக்கு உகந்தவை இவை.” கிழவி எல்லா புகழ்மொழிகளையும் மிக இயல்பாக பெற்றுக்கொண்டு மகிழ்பவள். “ஆம், இவை என் நோக்கு முன் கடைந்து உருட்டப்பட்ட வெண்ணையை உருக்கி எடுத்தவை. வெண்ணையை உருக்குவதென்பது ஓர் மந்தணக்கலை. என் மூதன்னை எனக்கு கற்றுத்தந்தது. பிறருக்கு நான் இன்னமும் முழுமையாகச் சொல்லவில்லை” என்றாள்.
“அதை நான் முதல்மணம் பெற்றபோதே உணர்ந்தேன். இன்று அரண்மனையில் விழவு. இந்நறுநெய் அவர்களுக்கு உகந்தது. அருளவேண்டும். செல்லும் வழியில் வேறுநெய்யை நீங்கள் கொள்ளுங்கள். இந்த நான்கு கலங்களுக்கான விலையை இப்போதே அளித்துவிடுகிறேன்” என்றாள். கிழவி “வேறு வழியில்லை. அரண்மனைக்கு என்கிறாய்” என உடனே ஒப்புக்கொண்டாள். அவள் கிழவியிடம் வெள்ளிப்பணம் கொடுத்து இரு இளம் ஆய்ச்சியர் தொடர அரண்மனை நோக்கிச் சென்றபோது ஒருத்தி “நல்லவேளை, என்னை அழைத்தாய். நான் இதுவரை அரண்மனைக்குள் சென்றதில்லை” என்றாள். “நானும் சென்றதில்லை” என்றாள் மற்றவள். “அந்த மூதேவி சபரி என்னை அதற்காகத்தான் உறுத்து நோக்கினாள். அவளுக்கும் ஆசை.”
“நீங்கள் இருவரும்தான் உள்ளே செல்லுமளவுக்கு அழகான முகம் கொண்டிருந்தீர்கள்” என்றாள் சுபத்திரை. “அரண்மனைக்குள் அழகற்றவர்களை அவர்கள் விடுவதே இல்லை.” அவர்கள் இருவரும் முகம் மலர்ந்தனர். மூத்தவள் “ஆம், நான் அதை கண்டிருக்கிறேன்” என்றாள். இளையவள் உடனே சுபத்திரைக்கு அணுக்கமாக ஆகி “அக்கா, இன்று இளைய யாதவர் வந்து இளவரசியை கவர்ந்துசெல்வார் என்கிறார்களே, உண்மையா?” என்றாள். மூத்தவள் “போடி, எவ்வளவு காவல் பார்த்தாயல்லவா? எப்படி வரமுடியும்?” என்றாள்.
அவர்கள் இருவருமே ஒரே மறுமொழியை எதிர்பார்க்கிறார்கள் என உணர்ந்து “அவர் இந்நேரம் நகர் நுழைந்துவிட்டிருப்பார்“ என்றாள் சுபத்திரை. “அய்யோ, எப்படித் தெரியும்?” என்றாள் இளையவள். “எனக்குத் தோன்றுகிறது. இந்நேரம் நகருக்குள் வந்திருந்தால் மட்டுமே இளவரசியை கவரமுடியும். இன்னும் ஒருநாழிகை நேரத்தில் களம்கூடிவிடும் அல்லவா?” மூத்தவள் “நாம் களத்துக்கு போகப்போகிறோமா?” என்றாள். இளையவள் “இளவரசி களத்துக்கே வரப்போவதில்லை என்கிறார்கள்” என்றாள். “ஆம், ஆனால் அவளை நாம் மகளிர்மாளிகைக்குள் சென்று காணமுடியும்…” என்றாள் சுபத்திரை. “நான் உண்மையில் அதற்காகத்தான் செல்கிறேன். மகளிர்மாளிகைக்கு நம் மூவருக்கும் அழைப்பு இருப்பதாகவும் நெய்கொண்டு செல்வதாகவும் சொல்லப்போகிறேன்.”
மூத்தவள் “என்னை அரண்மனைக் காவலர்களுக்கு தெரியும். அமைச்சுமாளிகைக்கு நான்தான் நெய்கொண்டு செல்பவள்” என்றாள். “அப்படியென்றல் நீயே சொல், மகளிர்மாளிகைக்கு நம்மை வரச்சொல்லியிருப்பதாக. நேராகச் சென்று இளவரசியை பார்ப்போம். ஒருவேளை இளைய யாதவர் மாயம் செய்து அங்கே வந்து அவளைக் கவர்ந்தால் அதை நாம் நேரிலேயே பார்க்கலாம் அல்லவா?” இருவரும் உளஎழுச்சியில் உடல்மெய்ப்பு கொள்வதை காணமுடிந்தது. “அய்யோடி” என்றாள் மூத்தவள். இளையவள் “எனக்கு அச்சமாக இருக்கிறதடி” என்றாள். “என்ன செய்வார்கள்? பிழையாக வந்துவிட்டோம் என்போம். பிடித்து திரும்பக்கொண்டுவந்து விடுவார்கள். நாம் யாதவ குலம். இளைய அரசி யாதவப்பெண். இளவரசியும் யாதவப்பெண்ணே. மணம் காணவந்தோம் என்றால்கூட எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றாள் சுபத்திரை.
அவர்கள் மிக எளிதாக உள்ளே செல்லமுடிந்தது. காவல்கோட்டத்திலிருந்த வீரர்களில் இருவர் இருஆய்ச்சியரையும் அறிந்திருந்தனர். “என்ன கலிகை, அமைச்சுநிலைக்கா நெய்?” என்றான் ஒருவன். “இல்லை, இதை மகளிர் மாளிகைக்கு கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள்” என்று மூத்தவள் உடைந்த குரலில் சொல்வதற்குள் இளையவள் “உண்மையாகவே மகளிர்மாளிகைக்குத்தான் அண்ணா” என்றாள். சொல்லிவிட்டு சுபத்திரையை நோக்கி நாக்கை கடித்தாள். ஆனால் அவன் தலைப்பாகையை சீரமைத்தபடி “சரி, சென்று உடனே மீளுங்கள்” என்று சொல்லிவிட்டான்.
மகளிர்மாளிகை நோக்கிச்சென்ற முற்றத்தில் மரத்தடிகள் பதிக்கப்பட்டிருந்தன. மழையாலும் வெயிலாலும் கரும்பாறைபோல ஆகிவிட்டிருந்த தொன்மையான மரத்தில் குதிரைகளும் மனிதர்களும் செல்லும் வழி மட்டும் தேய்ந்து குழியாக நிறம்மாறி தெரிந்தது. நீர்வழிந்து பாசிபற்றி உலர்ந்த தடத்துடன் கருமையாக எழுந்திருந்த மகளிர்மாளிகையின் பழைய கருந்தூண்கள் பொன்னிறப்பட்டு சுற்றப்பட்டு சிற்றூர் வேளாண்குடி மணப்பெண்கள் போல் நின்றிருந்தன. அவை சூடிய பாவட்டாக்கள் சிறுபடகின் பாய்களென காற்றில் புடைத்திருந்தன.
மாளிகையின் முன்னால் இடைநாழியின் திண்ணையில் வேலும் வாளுமேந்திய காவலர் இருந்தனர். அவர்கள் படைக்கலங்களை பிடித்திருந்த முறையிலேயே உளமின்மை தெரிந்தது. சிலர் வாள்களை அருகே தரையில் வைத்துவிட்டு பிறருடன் நகையாடிக்கொண்டிருக்க சிலர் வாயிலடக்கிய பாக்கின் சுவையில் விழிசொக்கி அமர்ந்திருந்தனர். அவள் பிற ஆய்ச்சியரிடம் பேசிக்கொண்டே சென்றாள். அவர்கள் அணுகும்தோறும் நடுங்கத் தொடங்கினர். இளையவள் “என் கால்கள் நடுங்குகின்றன அக்கா, நான் நின்றுவிடுகிறேன்” என்றாள். “இனிமேல் நின்றால்தான் ஐயம் வரும்” என்றாள் சுபத்திரை.
அவர்களை காவலர் நோக்கினர். சுபத்திரை “அத்தனைபேரும் உன் இடைக்குமேல்தான் விழிநட்டிருக்கிறார்களடி” என்றாள். “அய்யோ” என்றாள் இளையவள். அவள் அச்சம் மாறி நாணம் எழுந்தது. “உங்கள் இருவரையும் இப்போது ஐம்பது பேரின் விழிகள் உண்கின்றன” என்றாள். “ஆம், என்னால் நடக்கவே முடியவில்லை” என்றாள் மூத்தவள். தன்னை இளையவளைவிட ஒரு படி மேலே நிறுத்த விழைந்தவளாக “கண்களாலேயே அளவெடுக்கிறார்கள். சூரிக்கத்தியால் நுங்குபோல தோண்டி எடுக்கவேண்டும்” என்றாள்.
“சூழ்ந்தெடுத்த காளையின் கண்ணை பார்த்திருக்கிறாயா? தவளை போல அதிர்ந்துகொண்டிருக்கும்” என்றாள் சுபத்திரை. “நூறு தவளைகள்” என்று சொல்லி சிரித்தாள். அறியாமலேயே இளையவள் சிரிக்க மூத்தவள் “சிரிக்காதே…” என்றாள். “அவள் சிரிப்பதை வீரர் விரும்புவார்கள். அவள் முகம் பொலிவுகொண்டிருக்கும் அப்போது” என்றாள் சுபத்திரை. மூத்தவள் “அந்த மீசைக்காரனின் கண்களைப் பார்த்தால் பெரிய சேற்றுத்தவளை போலிருக்கின்றன. கள்சேறு” என்று சொல்லி சிரித்தாள். சுபத்திரை அதை ஏற்று மேலும் சிரித்தபடி நடந்தாள். உடல் சுமையேந்தி உலைய அவர்கள் நடந்து இடைநாழியை அடைந்தனர்.
காவலர்தலைவன் “நெய்யா?” என்றான். சுபத்திரை “இல்லை, நெய்க்குடத்திற்குள் இளைய யாதவரை கொண்டுசெல்கிறோம்” என்றாள். “உன் வாயை பாதுகாத்துக்கொள் ஆய்ச்சி. அதன் பயன்கள் உனக்கே தெரியாது” என்ற காவலர்தலைவன் சிரிக்கும் கோரிக்கையுடன் பிறரை நோக்க அவர்கள் வெடித்துச்சிரித்தனர். சுபத்திரை “என் கைகளின் பயனும் எனக்குத்தெரியும்” என்றாள். “நெய்யை கொடுத்துவிட்டு வந்து என்னுடன் ஒருநாழிகைநேரம் இரு. உன் உடலின் முழுப்பயனையும் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். “வாடி” என்று மூத்த ஆய்ச்சி இளையவளை இழுத்தாள். “நான் திரும்பிவந்து உனக்கு சொல்லித்தருகிறேன் மாமனே” என்றாள் சுபத்திரை. “வாடி, என் செல்லம் அல்லவா?” என்று அவன் சொல்ல வீரர்கள் கூச்சலிட்டு நகைத்தனர்.
மகளிர் மாளிகையின் நீண்ட இடைநாழிக்குள் நுழைந்ததும் சுபத்திரை திரும்பி நோக்கிவிட்டு நெய்க்கலங்களை கீழே வைத்தாள். “என்னடி இது? நாம் இளவரசியை பார்க்கவேண்டாமா?” என்றாள் இளையவள். “எனக்கு ஒரு பணி உள்ளது. நீங்கள் சென்று உங்கள் கலங்களை வைத்துவிட்டு இதை கொண்டுசெல்லுங்கள்” என்றபின் அவள் திரும்பி இடைநாழியை நோக்கித்திறந்த கூடத்திற்குள் சென்று கதவைமூடினாள். திகைத்து அவளை நோக்கி ஓடிவந்த முதல் காவலனை ஒரே அடியில் பக்கவாட்டில் சரித்து மரத்தரையில் உடல் அறைய விழச்செய்தாள். மண்டை உடைந்து மூக்கிலும் காதிலும் குருதி வழிய அவன் துடித்து இழுத்துக்கொள்ள இரண்டாமவனின் இடைக்குக் கீழே எட்டி உதைத்தாள். அவன் மெல்லிய ஒலியுடன் மடங்கிச்சரிய அவன் தலைமயிரைப்பற்றி கழுத்தை முறித்தாள். கீழே விழுந்துகிடந்தவனின் வாளை கையில் எடுத்துக்கொண்டு இறுதித்துடிப்பிலிருந்த இரு உடல்களையும் தாண்டிக்கடந்து மாடிப்படிகளில் ஏறி ஓடினாள்.