மீண்டும் பிறப்பது…

அன்புள்ள ஜெ

நலமா? வீட்டில் அனைவரும் நலமா?

என் பெண் பிறந்த பிறகு உங்களது விரல் சிறுகதையை 2 – 3 முறை வாசித்துவிட்டேன். இதற்கு முன்னும் அது எனக்கு மிக நெருக்கமான கதை தான் என்றாலும் இப்போது அது கொடுக்கும் பரவசத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நேற்று அ. முத்துலிங்கம் எழுதிய “அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை” சிறுகதையை வாசித்த போதும் இதே உணர்வு. அதில் ஏதோ ஒரு பொருளை தொட எண்ணி முன்னால் தவழத் தெரியாமல் பின்னால் தவழ்ந்து சென்று, அந்த பொருள் இன்னும் தூரமாக போய்விட்டதை குழப்பத்துடம் பார்க்கும் குழந்தையின் சித்திரம் வருகிறது. அழலாமா அல்லது சடையை இன்னொரு முறை இழுத்துப்பார்க்கலாமா என்ற கந்தசாமிப்பிள்ளையின் குழந்தையின் குழப்பத்திற்கு நிகரானது இது. :)))

இப்போது ஜான் ஹோல்ட் எழுதிய “குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்” என்ற நூலினை வாசித்துக்கொண்டு இருக்கின்றேன். குழந்தைகளின் இயல்பான தேடலை நமது கல்வி முறை மழுங்கடித்து விடுவதை பற்றி நிறைய பேசுகிறார். ஒரு பக்கம் பயமாகவும் ஒரு பக்கம் கொஞ்சம் நம்பிக்கையாகவும் இருக்கின்றது. குழந்தையை மிகச்சரியாக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு இயல்புக்கு மீறி எதையும் செய்துவிடக்கூடாது என்ற பயமும் இருக்கிறது. இந்நூலில் குழந்தைகளின் இயல்பான கற்பனைத்திறனை பற்றி நிறைய பேசுகிறார் ஹோல்ட். சில இடங்களில் நீங்கள் எழுதிய “குதிரைவால் மரம்” கட்டுரை நினைவிற்கு வந்தது.

ஊட்டி சந்திப்பின் அமர்வுகள் பற்றி படித்ததும் தான் இந்த மடல் எழுதத் தொடங்கினேன். 2 நாட்கள் முழுக்க பழந்தமிழ் இலக்கியம் குறித்து பேசுவதை கேட்பது… ஆசை ஆசையாக இருக்கிறது. இதை வீடியோ எடுத்து வைக்கலாமே என்று கேட்க ஆசையாக உள்ளது. ஆனால் ஒரு வீடியோ கருவி அரங்கிற்குள் நுழைந்து விட்டால் அரங்கின் இயல்புத்தன்மை போய்விடும் என்று படுகிறது. நிகழ்ச்சிகள் யாவும் மிகச்சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு, என்னென்ன கவிதைகள் வாசிக்கப்பட்டன என்ற குறிப்பை அளிக்க இயலுமா?

நேற்று யூட்யூபில் எதையோ தேடிக்கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலியாவில் என்று நினைக்கிறேன்… நீங்கள் வானொலிக்காக பேசியது காணக்கிடைத்தது . விஷ்ணுபுரம் குறித்து பேசினீர்கள். நேற்றிரவு மீண்டும் விஷ்ணுபுரம் எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன். திசைகளின் நடுவேவிற்கு பிறகு விஷ்ணுபுரம் தான் வாசித்தேன். எனக்கு முற்றிலும் புதிய உலகம் அது. என்னால் அதன் முழுமையை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் பாதியில் மூடிவைக்கவும் முடியவில்லை. ஒரு மாதிரி அலைகழித்தது. விஷ்ணுபுரத்தை முடித்ததுமே பின் தொடரும் நிழலின் குரல் எடுத்து வாசித்தேன். அது நான் அடையாளம் காணக்கூடிய உலகமாக இருந்தது. மிக எளிதாக அந்த நாவலை முடிக்க முடிந்தது. அதனாலேயே அது எனக்கு மிகப் பிடித்தமான ஆக்கமாக ஆகிவிட்டது. ஆனாலும் விஷ்ணுபுரத்தின் அமைப்பு தந்த பிரம்மிப்பு மீண்டும் ஒரு முறை படித்த போதும் அகலவில்லை. உங்களின் ஆகச்சிறந்த ஆக்கம் இது. கொற்றவையை விடவும் சிறந்த ஆக்கம் இது…

சந்திப்பு மிகச்சிறப்பாக நிகழ மீண்டும் வாழ்த்துக்கள்.

சித்தார்த்.

அன்புள்ள சித்தார்த்

குட்டிக்கு என் வாழ்த்துக்கள்

என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணங்களில் அஜிதன் சைதன்யாவுடன் நான் செலவழித்த குழந்தைப்பருவம்தான். ஆம், எனக்கும்தான். நான் என்னை மீண்டும் குழந்தையாக கண்டடைந்த நாட்கள் அவை. மீண்டும் புதிதாக பிரபஞ்சத்தை கண்டுபிடித்தேன். அதன்பின்னர் நான் புதிதாகப் பிறந்து வந்தேன். இன்னும் கவித்துவம் கொண்டவனாக இன்னும் கனவுகள் கொண்டவனாக ஆனேன். உங்களுக்கும் அது நிகழட்டும்.

அருணாசலத்துக்கு கேகே.எம் எழுதும் கடிதம், நான் எப்போதும் ஒரு மன எழுச்சியுடன் மட்டுமே வாசிக்கும் பகுதி அது, நினைவுக்கு வருகிறது. உணர்ச்சிகளால் கொந்தளிக்கும் கேகேஎம்மின் முகத்தையும் ஈரம் கசிந்த கண்களையும் அவரது இறுக்கமான தாடையையும் தசைகள் தொய்ந்த கழுத்தையும் அவ்வரிகளை வாசிக்கும்போது காண்பேன். நாகம்மையின் சொற்களில் ‘தலைக்குள் அடுப்பு’ கொண்ட அனைவருக்கும் அவர் சொல்லும் மருந்து அது. பெறாது போன பல குழந்தைகளை கொண்ட தந்தையின் சொற்கள்

ஜெ

முந்தைய கட்டுரைக.நா.சு
அடுத்த கட்டுரைஇன்செப்ஷன், நனவுணர்வில் கண்ட கனவு